மாதிஹுர் றஸூல் அஷ்ஷெய்கு ஸதகதுல்லாஹ் அப்பா றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்!

October 31, 2016
அல் ஆழிமுல் பாழில், வல் குத்புல் வாஸில், மாதிஹுர் றஸூல் அஷ்ஷெய்கு ஸதகதுல்லாஹ் அப்பா றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்!
மௌலவீ HMM. .இப்றாஹீம் நத்வீ அவர்கள் எழுதிய
வித்ரிய்யஹ் ஷரீபஹ் நபீபுகழ் காப்பியம் எனும் நூலிலிருந்து
இம் மகானவர்கள் ஹிஜ்ரி 1042 இல் இந்தியாவிலுள்ள காயல்பட்டணத்தில் மலர்ந்தார்கள். இவர்களின் தந்தை அற்புதங்கள் பல நிகழ்த்திய அஷ்ஷெய்கு சுலைமான் வலியுல்லாஹ் அவர்களாகும்.
ஹழ்றத் சுலைமான் றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்களுக்கு ஐந்து புதல்வர்கள். முறையே,
01- அஷ்ஷெய்கு ஷம்சுத்தீன் வலீ றஹ்மதுல்லாஹ் அலைஹி
02- அஷ்ஷெய்கு ஷிஹாபுத்தீன் வலீ றஹ்மதுல்லாஹ் அலைஹி
03- அஷ்ஷெய்கு சதகதுல்லாஹ் வலீ றஹ்மதுல்லாஹ் அலைஹி
04- அஷ்ஷெய்கு அஹ்மத் வலீ றஹ்மதுல்லாஹ் அலைஹி
05- அஷ்ஷெய்கு சலாஹுத்தீன் வலீ றஹ்மதுல்லாஹ் அலைஹி ஆகியோராவர்கள்.

இவர்கள் அனைவரும் வலீமார்களேயாவர். அவர்களில் மூன்றாமவரே நமது ஞானக் கடல், ஆஷிகுர் றஸூல், குதுபுஸ்ஸமான் அஷ்ஷெய்கு சதகதுல்லாஹ் அப்பா றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்களாகும். தந்தை சுலைமான் வலீ, இவர்களுக்கு “சதகத்” என்று தமது தந்தையின் பெயரையே சூட்டினார்கள்.
கல்வி
தங்களது ஏழு வயதில் தன் தந்தையிடம் திருக்குர்ஆனை ஓதி முடித்து, அதை மனனம் செய்து மார்க்க அடிப்படைச் சட்டங்களைக் கற்ற சதகத் (றஹ்) அவர்கள் உயர் கல்விக்காக தன் தந்தையின் பள்ளித் தோழரும் கீழக்கரை தாறுல் உலூம் அறபுக் கல்லூரியின் அதிபருமான மக்தூம் சின்னீனா லெப்பை ஆலிம் அவர்களிடம் சென்று மார்க்கக் கல்வியையும் அறபு மொழியையும் திறன் படக்கற்று தலை சிறந்த ஆலிமாகத் திகழ்ந்தார்கள்.
திருமணம்
திருமண வயதையடைந்த மகான் அவர்களுக்கு பெற்றோர் மேலைப்பாளயத்தைச் சேர்ந்த இறை நேசர் பரம்பரையில் தோன்றிய மர்யம் எனும் மங்கையைத் திருமணம் செய்து வைத்தனர்.
மனைவியுடன் காயல்பட்டணம் வந்த மாதிஹுர் ரஸூல் இமாம் சதகதுல்லாஹ் றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்கள் அங்கு வாழ்ந்து, ஒரு ஆண் பிள்ளையையும் ஐந்து பெண் மக்களையும் பெற்றார்கள். அவர்கள் முறையே, அஷ்ஷெய்கு முஹம்மது லெப்பை றஹ்மதுல்லாஹ் அலைஹி, கதீஜா, ஆமினா, ஸைனப், உம்மு ஹானீ, ஸாறா ஆகியோராவர்.
இப்படியும் ஓர் அற்புதம்
ஷெய்குனா சதகதுல்லாஹில் காஹிரீ றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்கள் அதிக காலங்களில் மக்காவுக்குச் சென்றே ஐந்து வக்துக்களையும் தொழுது வந்தார்கள்.
ஒரு நாள் வீட்டில் ஒரு குழந்தையைத் தூக்கியவர்களாக இருக்கும் நிலையில் கஃபாவுக்குச் செல்லும் நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. (இந் நிலை அவ்லியாஉகளுக்கும், நபீமார்களுக்கும் ஏற்படும் நிலையாகும்.)
குழந்தையுடன் சென்ற அவர்கள் கஃபாவில் ஒரு இடத்தில் குழந்தையை வைத்து விட்டு இறை முனாஜாத்தில் இருந்து அவர்கள் அந்த ஆன்மீக நிலையிலேயே ஊர் வந்து விட்டார்கள். ஊர் வந்த போதுதான் அவர்களுக்கு ஆன்மிக நிலை தணிந்து தான் தூக்கிச் சென்ற குழந்தையின் நினைவு வந்தது. அதை அங்கிருந்த முஹிப்பீன்களிடம் சொல்லும் போது அவர்களுக்கு பணிவிடை செய்யும் “காதிமஹ்” பணிப்பெண் அதைக் கேட்டு உடன் அவர் மக்கா சென்று குழந்தையைத் தூக்கி வந்தார்.
இது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தவே அப்பணிப் பெண்ணிடம் இந்த உயர் நிலை உமக்கு எப்படி ஏற்பட்டது? என்று இருந்தவர்கள் கேட்டனர். அதற்கு அப்பணிப் பெண் “எமது சங்கைமிகு ஷெய்கு நாயகத்திற்கு நான் இக்லாஸுடன் பணி செய்து வந்துள்ளேன்.”
அவர்கள் அணிந்து கழட்டிய உடைகளை நான் கழுவுவது வழக்கம். அவர்களது உடையைக் கழுவும் போதெல்லாம் கழுகிய தண்ணீரில் பறக்கத்தை நாடி நான் குடித்து வந்தேன். அதன் காரணத்தால்தான் அல்லாஹ் எனக்கு இந்த நிலையைத் தந்தான். எனது தறஜஹ்வை உயர்த்தினான் என்று சொன்னார்கள்.
பணிவிடை செய்த பெண்ணுக்கே இந்நிலையென்றால், அவ்லியாஉகள் குத்புமார்களுடைய மாண்பு எப்படி இருக்கும்.
மீக்காயீல் (அலை) அவர்களும் சதகதுல்லாஹ் அப்பாவும்!
ஒரு நாள் அவர்கள் காயல் நகரிலுள்ள இரட்டைக் குளம் பள்ளியில் அமர்ந்து மார்க்க ஞான போதம் செய்து கொண்டிருக்கும் போது அந்தமான் தீவில் மழையை இறக்குவதற்காகச் சென்று கொண்டிருந்த மீக்காயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சதகதுல்லாஹ் அப்பாவிடம் வந்திறங்கி உரையாடினார்கள். அப்போது அவர்களிடம் இந்தவூரில் மழையின்றி பஞ்சத்தால் மக்கள் நலிகின்றனர். இங்கும் மழையை இறக்கிச் செல்லுங்கள் என்று வேண்டினார்கள். அதன்படி மீக்காயீல் மழையை இறக்கிச் சென்றார்கள். மக்களின் பஞ்சம் சதகதுல்லாஹ் அப்பா அவர்களால் மறைந்தது.
மேலும் அவர்கள் அப்பள்ளியில் வைத்து மக்களுக்கு உபதேசம் செய்த போது பள்ளியின் தூண் அழுததாகவும் அதில் நீர் சுரந்ததை மக்கள் கண்டதாகவும் சான்றுகள் சொல்கின்றன.
மாண்பும் மகத்துவமும்
இமாம் மாதிஹுர் ரஸூல் சதகதுல்லாஹ் அல் காஹிரீ றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்கள் சாதாரண அறிவுடையவர்களல்லர். காயல் நகர் மற்றுமுள்ள உலமாஉகளிடமும் உங்களில் அறிவால் சம்பூரணத்துவம் பெற்றவர் யார்? என்று கேட்பின் அனைவரும் ஒரே குரலில் சதகதுல்லாஹ் என்றே சொல்வார்கள்.
தர்க்கலைப் பீர் முஹம்மது வலியுல்லாஹ்விடம் மார்க்க விவாதம் செய்ய உலமாஉகளால் அனுப்பப்பட்ட அறிவுப் புலி. ஷரீஅத் மேதை. பதினான்கு வகை ஞானங்களையும் அறபு மொழிக்கலைகளையும் கற்றறிந்த மாமேதை. இந்திய தேசத்தின் மாண்புக்குரிய காழி நீதிபதியாக இருந்தவர்கள்.
மக்காவிலும் மதீனாவிலும் உள்ள மாமேதைகளுக்குக் கிதாபு ஓதிக் கொடுத்தவர்கள். கொடை வள்ளல் சீதக்காதி மரைக்காயர் (ஷெய்கப்துல் காதர்) அவர்களின் மெய்ஞ்ஞான குரு. உமறுப்புலவர் அவர்களின் ஸீறாவுக்கு உரை கொடுத்த பெருந்தகை. அண்ணல் நபீ (ஸல்) அவர்களில் அன்பு கொண்டு “பனா” தன்னை மறந்தவர்கள். அல்லாஹ்வை அறிந்த ஆரிபீன்களில் ஒருவர். மலக்குகளுக்கும் ஜின்களுக்கும் ஓதிக் கொடுத்தவர்கள். அவர்களின் மகத்துவம் அனந்தம், மாண்புகள் அதிகம்!
“வித்ரிய்யஹ்” தந்த பரிசு!
அகிலத்தின் பேரொளி அண்ணல் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது அதிக அன்பு கொண்டு வாழ்ந்த அப்பா அவர்களுக்கு பக்தாதைச் சேர்ந்த முஹம்மத் பின் அபீ பக்ரில் பக்தாதீ றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்களால் அறபியில் எழுதப்பட்ட வித்ரிய்யஹ் ஷரீபஹ்வை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. அதில் அறபு அட்சரங்கள் 29 எழுத்துக்களுக்கும் 21 இரண்டடிப்பாக்கள் வீதம் எழுதியிருந்தார்கள். அதை சதகதுல்லாஹ் அப்பா அவர்கள் மிகவும் விரும்பிப் படித்தார்கள்.
கனவில் நபிகள் கோமான்!
மாதிஹுர் ரஸூல் இமாம் முஹம்மத் பின் அபீ பக்ர் பக்தாதீ றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்கள் 1218 கவிதையடிகளைக் கொண்ட வித்ரிய்யஹ் ஷரீபஹ்வைப் பூர்த்தி செய்த அன்றிரவு ஹிஜ்ரி 652 “உந்துலிஸ்” (ஸ்பெய்ன்) தேசத்தில் “குர்னாத்தா” எனும் ஊரில் இருந்தார்கள்.
அவர்கள் சொல்கிறார்கள்- அன்றிரவு கனவில் நபி (ஸல்) எனது கிதாபைக் கையில் வைத்து பக்கம் பக்கமாகப் பார்த்து மகிழ்ந்து எவ்வளவு அழகாக எனது மத்ஹை எழுதியுள்ளீர். மிக அழகாக இருக்கின்றதென்று அருகில் நின்ற தோழர்களிடமும் அதைப் பார்க்கும்படி கொடுத்து என்னை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். சஹாபாக்களில் ஹழ்றத் அபூபக்ர் றழியல்லாஹு அன்ஹு அவர்களை மட்டுமே கனவில் இன்னார் என்று தெரிய வந்தது. மற்றவர்கள் யாரென்பது புரியவில்லை. கண்விழித்து விட்டேன். எனது மத்ஹை றஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஏற்றுக் கொண்டார்கள் என்பதை அறிந்து பேரானந்தம் கொண்டேன். என்று!
சதகதுல்லாஹ் அப்பாவின் ஆசை!
அண்ணல் நபீ மீது காதல் கொண்டு மகான் முஹம்மத் பின் அபீ பக்ர் றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்களால் எழுதப்பட்டிருந்த (29 x 21 = 609 x 2 = 1218 அடிகள்) வித்ரிய்யஹ் ஷரீபஹ்வை மீண்டும் மீண்டும் ஓதிய எங்கள் மகான் சதகதுல்லாஹ் அவர்களுக்கு நபிகள் மேல் காதல் அதிகரித்தது.
அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியிருந்த அறபு மொழி ஆற்றல் அவர்களையும் எழுதும் படி சொன்னது. “நபீகளின் புகழ்” எனும் காதலால் உந்தப்பட்ட மாதிஹுர் ரஸூல் இமாம் சதகதுல்லாஹ் றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்கள் இப்னு அபீ பக்ர் றஹ்மதுல்லாஹ் அலைஹி எழுதிய இரண்டிப் பதத்துக்கும் மூன்றடிப் பாக்களைச் சேர்த்து ஐந்தடிப் பதமாக அமைத்ததுடன் 21 பைத்துக்களுடன் மேலும் ஐந்தடிப் பதங்கள் கொண்ட எட்டு பைத்துக்களும் சேர்த்து எழுதினார்கள்.
அத்துடன் “மீம்” என்ற எழுத்துக்கு மட்டும் ஏனைய எழுத்துக்களுக்குப் போல் 29 பைத்துக்களை எழுதாமல் ஐயடிகள் கொண்ட ஒரு பைத்தைக் கூடுதலாக எழுதி முப்பது பைத்தாக்கினார்கள். மொத்தமாக அவர்கள் எழுதிய பைத்துக்கள் 1496 ஆகும். இவை 2992 கவிதை அடிகளாகும்.
எனவே, முஹம்மத் பின் அபீ பக்ர் றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்களின் கவிதை அடிகள் 1218 இமாம் சதகதுல்லாஹ் அவர்கள் எழுதிய 2992 அடிகளும் சேர்ந்து மொத்தம் 4210 கவிதையடிகளாகும்.
அறபு மொழியில் 29 எழுத்துக்களுக்கும் பைத்துக்கள் எழுதப்பட்டிருப்பதாலும் 29 என்பது ஒற்றைப்பட உள்ள எண்ணாகையாலும் “ஒற்றைப்படையானது” என்ற பொருளில் இதற்கு “வித்ரிய்யஹ்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நூல் கவிதை நயமும் பொருட் செறிவும் கொண்டுள்ளது. கவிதைகளில் நபீ புகழ் ஓதும் இக்காப்பியம் போல் நீண்டதோர் காப்பியம் இதுவரை தோன்றவில்லை என்பது அறிஞர்களின் முடிவாகும். இக்காப்பியத்தில் நபிகளின் “முஃஜிஸாத்” அற்புதங்கள், நபிகளின் அகமியங்கள், நடந்த யுத்தங்கள், சஹாபாக்களின் மாண்புகள், நபிகள் தமதும்மத்தின் மீது கொண்டிருந்த கருணைகள், நபியன்பின்
முக்கியத்துவங்கள், சஹாபாக்களின் வீரச் செயல்கள் நிறைந்துள்ளன.
அத்துடன் அவர்கள் அல்லாஹ்வுடன் செய்த முனாஜாத்துக்களும் உள்ளன. இதில் மகானவர்கள் தன்னை ஒரு பெரும் பாவிபோல் கருதி தான் பெரும் குற்றமிழைத்தவனென்றும் தன்னை மன்னித்து நபிகளுடன் சேர்த்து வைக்க வேண்டுமென்று அல்லாஹ்விடம் கேட்கிறார்கள். குற்றவாளிகளின் இழி நிலையை தமதாக்கிக் கொள்கிறார்கள்.
பாவிகளுக்கு கைகொடுக்கும் நாயகமே இந்தப் பாவிக்கும் கைகொடுங்களென்று நபிகளிடம் கேட்கிறார்கள். அந்த உத்தமர் தன்னை தாழ்வாக்க் கருதி தன்னை இழிமைப்படுத்திக் கொள்வதை என்னென்று சொல்வேன். மாணிக்கம் மலத்தில் கிடந்தாலும் அது மாணிக்கம்தான். மகான் சதகதுல்லாஹ் அப்பா அவர்கள் பாவிகளையும் அவர்களது பாவங்களையும் தாமாகவும் தாம் செய்ததாகவும் சொல்லியிருப்பது தன்னை, தனது நப்ஸை இழிவுபடுத்துதற்கேயாகும்.
அத்துடன் பெரும் பாவிகளுக்கும் அல்லாஹ்வின் மன்னிப்பும் நபிகள் நாயகத்தின் அன்பும் உண்டென்று காட்டுவதற்காகவுமேயாகும். இதை விளங்காத சிலர், இறை ஞான வழியைப் புரியாத பலர் அவர்களைக் கீழ்த்தரமானவர் என்பதும் புனித வித்ரிய்யஹ்வைத் தரம் குறைத்துப் பேசுவதும் அவமதிப்பதும் ஆன்மிக குற்றங்களாகும். இதனால் தண்டனை கிடைக்கும். இதற்குத் தண்டனை மௌத்தாகும் போது கலிமா இல்லாமல் மரணிக்கும் நிலை ஏற்படுவதாகும். இத்தகையவர் “ஸூஉல் காதிமஹ்” கெட்ட முடிவைக் கொண்டு சோதிக்கப்படுவார்.
நஊதுபில்லாஹ்!
மக்பூல்
வித்ரிய்யஹ் ஷரீபஹ்வை எழுதிய இமாம்கள் இருவரும் நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பல முறை கண்டுள்ளார்கள். கனவிலும் நனவிலும் அது நிகழ்ந்துள்ளது. ஒரு நாள் மக்காவில் சதகதுல்லாஹ் அப்பா நிற்கும்போது ஒரு கனவு கண்டார்கள்.
மதீனாவில் இருந்து சிலர் ஒரு “சுன்தூக்” (சன்தூக்)கில் ஒரு ஜனாஸாவை வைத்து மக்காவுக்குக் கொண்டு வந்து ஜனாஸா பெட்டியுடன் கஃபாவைத் தவாபு செய்கின்றனர். அப்போது அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் ஜனாஸாப் பெட்டியிலிருந்து வெளிவருகின்றார்கள். அவர்களுக்கு வுழூச் செய்வதற்கு ஒருவர் தண்ணீர் கொணர்ந்து கொடுக்கிறார். இதைப் பார்த்த சதகதுல்லாஹ் அப்பா அவர்களும் ஒரு கேத்தலில் “ஸம்ஸம்” நீர் கொண்டு அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வுழு எடுக்கக் கொடுக்கிறார்கள். கனவு களைந்துவிட்டது.
இக்கனவில் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வுழூச் செய்வதற்கு முதலில் நீர் கொடுத்தது மாதிஹுர் றஸூல் முஹம்மத் இப்னு அபீபக்ர் பஃதாதீ றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்களென்றும், இரண்டாவது நீர் கொடுத்தது மாதிஹுர் றஸூல் சதகதுல்லாஹ் றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்களென்றும் அவ்விருவரும் கொடுத்த நீரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏற்றுக் கொண்டார்களென்றும் அதேபோல் நாம் வெளிப்படுத்திய வித்ரிய்யஹ் ஷரீபஹ்வை நபிகள் ஏற்றுக் கொண்டார்களென்றும் சதகதுல்லாஹ் அப்பா அவர்களே விளக்கம் சொன்னார்களாம்.
அவர்களது வித்ரிய்யஹ் ஷரீபஹ்வில் சொல்லப்பட்டுள்ளபடி நபீகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பல முறைகள் சதகதுல்லாஹ் அப்பா அவர்கள் கண்டுள்ளார்கள். எனவே, மகான் சதகதுல்லாஹ் அப்பா றஹ்மதுல்லாஹ் அலைஹி  அவர்களின் கறாமத்துக்களும், அறிவு ஞானங்களும் அனந்தம். அவர்களது புகழ் இன்றும் உலகெங்கும் நிறைந்துள்ளது.
இறுதியில் மகானவர்கள் ஹிஜ்ரி 1115ம் ஆண்டு ஸபர் பிறை 5 வியாழன் இரவு தங்களின் 73ம் வயதில் தாறுல் பனாவை விட்டும் தாறுல் பகாவை அடைந்தார்கள்.
இவர்களது ஜனாஸா கீழக்கரை ஜாமிஆ மஸ்ஜிதின் முன்னுள்ளது. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

You may also like

Leave a Comment