Friday, April 19, 2024
Homeஎழுத்தாக்கங்கள்“பனா” அழிதலின் நிலை

“பனா” அழிதலின் நிலை

يقول
الامام النّووي رحمه الله : روينا في صحيحي البخاري ومسلم ، عن ابي قتادة رضي الله
عنه في حديثه الطّويل العظيم المشتمل على معجزات متعدّدات لرسول الله صلّى الله عليه
وسلّم قال : فبينا رسول الله صلّى الله عليه وسلّم يسير حتّى ابهارَّ اللّيلُ  وأنا إلى جنبه، فَنَعَسَ رسول الله صلّى الله عليه
وسلّم فمال عن راحلته، فأتيتُه فدَعَّمتُه من غير أن أوقظه حتّى اعتدل على راحلته،
ثمّ سار حتّى تهوَّر اللّيلُ مال عن راحلته، فدعَّمتُه من غير ان أوقظه حتّى اعتدل
على راحلته،ثمّ سار حتّى إذا كان آخر السّحر مال ميلة هي أشدّ من المَيْلَتَيْنِ الأولتين
حتّى كاد ينفجل، فأتيته فدعَّمتُه، فرفع رأسه فقال : من هذا ؟ قلت أبو قتادة، قال
‘متى كان هذا مسيرك منّي؟ قلت ما زال هذا مسيري منذ الليلة، قال حفظك الله بما حفظت
به نبيّه ‘
)اِبْهَارَّ  بوصل الهمزة وإسكان الباء الموحّدة وتشديد الرّاء
ومعناه إنتصف، وقوله تهوَّرَ أي ذهب معظمه، وانفجل بالجيم: سقط، ودعّمتُه أسندته (
அபூ கதாதஹ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ள
நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பல அற்புதங்களை உள்ளடக்கிய நீண்ட ஹதீதில் பின்வருமாறு
கூறியுள்ளார்கள்.
(நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பயணம் செய்தார்கள்.
நான் அவர்களுக்குப் பக்கத்தில் இருந்தேன். நள்ளிரவு வரை பயணம் தொடர்ந்தது. நபீ அவர்கள்
சிறிது தூங்கி ஒட்டகத்திலிருந்து சாய்ந்தார்கள். அப்போது நான் அவர்களிடம் சென்று அவர்களின்
தூக்கம் கலைந்து விடாமல் அவர்களை ஒட்டகத்தில் நிமிர்த்தி சாய்த்து வைத்தேன். இரவின்
பெரும் பகுதி செல்லும் வரை பயணித்தார்கள். அப்போதும் ஒட்டகத்திலிருந்து சாய்ந்தார்கள்.
அவர்களின் தூக்கம் கலைந்து விடாத வகையில் அவர்களை நிமிர்த்தி வைத்தேன்.  அவர்கள் இரவின் கடைசி (விடியும்) வரை பயணத்தைத்
தொடர்ந்தார்கள். அப்போதும் முதல் இரு தரம் சாய்ந்ததை விட அதிகமாகச் சாய்ந்தார்கள்.
அதாவது தரையில் விழுமளவு சாய்ந்தார்கள். முன்னர் செய்தது போல் நான் அவர்களை நிமிர்த்தி
வைத்தேன். அப்போது தலையை உயர்த்திய நபீ அவர்கள், இது யார்? (நீ யார்?) என்று கேட்டார்கள். நான் அபூ கதாதஹ் என்றேன். நீ
எப்போதிருந்து என்னுடன் பயணிக்கின்றாய்? என்று கேட்டார்கள். நான் இரவெல்லாம் உங்களுடனேயே இருக்கின்றேன்
என்றேன். எது கொண்டு அல்லாஹ்வின் நபீயை நீ பாதுகாத்தாயோ அது கொண்டு உன்னையும் அல்லாஹ்
பாதுகாப்பானாக! என்று கூறினார்கள்.)
(புகாரீ, முஸ்லிம், அத்காருன் நவவீ பக்கம்- 252)

மேற்கண்ட “ஹதீது”  மிக ஆழமாக ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். இதில் ஆன்மிக மணம் கமழ்வது ஆன்மிக வாதிகளுக்கு
மறைவானதல்ல. இதை சற்று ஆய்வு செய்து பார்ப்போம்.
நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்கிருந்து
எங்கு பயணித்தார்கள் என்ற விபரம் இந்த அறிவிப்பில் கூறப்படவில்லை.
நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும்,
தோழர் அபூ கதாதஹ் றழியல்லாஹு
அன்ஹு அவர்களும் ஒரே ஒட்டகத்தில் பயணித்தார்களா? அல்லது தனித்தனியாக இரண்டு ஒட்டகங்களில் பயணித்தார்களா?
என்பது “ஹதீதில்” தெளிவாகக் கூறப்படாது போனாலும் அவர்கள் தனித்தனியாக
இரண்டு ஒட்டகங்களிலேயே பயணித்தார்கள். என்பதை இந்த ஹதீதிலுள்ள சில சொற்கள் தெளிவாகக்
காட்டுகின்றன.
“ஹதீதில்” வந்துள்ள “அபூ கதாதஹ்” அவர்கள் கூறிய فأتيته “நான் அவர்களிடம் வந்தேன்” என்ற சொல் இருவரும் தனித்தனி ஒட்டகங்களிலேயே பயணித்துள்ளார்கள்
என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது. இதே சொல் “ஹதீதில்” இரண்டு இடங்களில் வந்துள்ளது. முறைப்படி இது மூன்று
இடங்களில் வர வேண்டும். ஆயினும் இச்சொல் உரிய இடத்தில் வெளிப்படையாகச் சொல்லப்படாமலேயே
பொருத்தமான கருத்து விளங்கப்படுவது ஆய்வாளர்களுக்கு மறைவானதல்ல.
இருவரும் ஒரே ஒட்டகத்தில் பயணித்திருந்தால் இச்
சொல் (நான் அவர்களிடம் வந்தேன்) அர்த்தமற்றதாகிவிடும். அர்த்தமற்ற சொல் உள்ள வசனம்
நாகரீகமற்றதாகும்.
மேற்கண்ட ஹதீதில்  وانا الى جنبه  “நான் அவர்களுக்குப் பக்கத்தில் இருந்தேன்”
என்று அபூ கதாதஹ் அவர்கள்
சொல்லியிருப்பது அவர்கள் இருவரும் ஒரே ஒட்டகத்திலேயே பயணித்தார்கள் என்ற கருத்தைக்
காட்டுவது போலிருந்தாலும் பின்வரும் விளக்கத்தின் மூலம் அந்தக்கருத்துக்கு இடமில்லாமற்
போய் விடுகிறது.
“ஜன்பு” என்ற சொல்லுக்கு தமிழில் பக்கம், அருகாமை என்ற பொருள் கூறப்பட்டாலும் இச்சொல் அண்மையில்
என்ற கருத்தைக் கொண்டது என்றும் கொள்ளலாம். உதாரணமாக جلستُ الى جنب مزمّل
நான் முஸம்மிலுக்குப் பக்கத்தில்
அமர்ந்தேன். என்று அப்துல்லாஹ் சொல்வது போன்று.
அப்துல்லாஹ் இவ்வாறு சொல்வதால் அவனின் உடலும்,
முஸம்மிலின் உடலும் (ஓர் உடல்
மற்ற உடலோடு பட்டாற் போல்) சேர்ந்தாற் போல் இருந்ததென்றும் கருத்துக் கொள்ளலாம். அல்லது
அப்துல்லாஹ் முஸம்மிலுடன் சாதாரணமாகப் பேசும் தூரத்தில் இருந்தான் என்றும் கருத்துக்
கொள்ளலாம். 
மேற்கண்ட இந்த விளக்கத்தின் படி “அபூ கதாதஹ்”
அவர்கள் وأنا الى جنبه
நான் அவர்களுக்குப் பக்கத்தில்
இருந்தேன் என்று சொன்னது அவர்களுக்கு அண்மையில் இருந்தார்கள் என்ற கருத்தையே குறிக்கும்.
இருவரும் ஒரே ஒட்டகத்தில் பயணித்திருந்தால் அபூ
கதாதஹ் அவர்கள் ஒட்டகத்தில் இருந்தவாறே நபீகளாரை நிமிர்த்திச் சாய்த்து வைத்திருப்பார்களேயன்றி
“நான் அவர்களிடம் வந்தேன்” என்று சொல்லியிருக்கமாட்டார்கள்.
இருவரும் பயணித்துக் கொண்டிருந்த சமயம் நடு நிசியானது.
நபீ அவர்களுக்கு சிறு தூக்கம் ஏற்பட்டு அவர்கள் ஒட்டகத்திலிருந்து கீழே விழுபவர்கள்
போல் சாய்ந்தார்கள். நான் அவர்களிடம் சென்று அவர்களின் தூக்கம் கலைந்து விடாமல் அவர்களை
நிமிர்த்தி நேராக்கி வைத்தேன்.
பின்னர் தொடர்ந்து பயணித்தார்கள். இரவின் பெரும்பகுதி
நேரம் கழிந்த பிறகு மீண்டும் ஒட்டகத்திலிந்து முதலில் சாய்ந்தது போல் சாய்ந்தார்கள்.
நானும் முதலில் செய்தது போல் செய்தேன். (மீண்டும் அவர்களை நிமிர்த்தி நேராக்கி வைத்தேன்)
இரவின் கடைசி நேரமான போது “ஸுப்ஹ்” நேரத்திற்கு சற்று முன் மீண்டும் – மூன்றாம் முறையாகவும் சாய்ந்தார்கள்.
மூன்றாம் முறை முதலில் இரண்டு தரம் சாய்ந்ததை விட
கடுமையாகச் சாய்ந்தார்கள். அப்போதும் அவர்களிடம் சென்று அவர்களை நிமிர்த்தினேன். அவ்வேளை
தலையை உயர்த்திய நபீ அவர்கள் “மன் ஹாதா” இவர் யார் என்று கேட்டார்கள். நான் அபூ கதாதஹ் என்றேன். நீ என்னுடன்
எப்போது வந்தாய்? என்று கேட்டார்கள்.
இரவெல்லாம் உங்களுடன்தான் இருந்தேன் என்று கூறினேன். நீ அல்லாஹ்வின் நபீயைப் பாதுகாத்தது
போல் அவன் உன்னைப் பாதுகாத்து விட்டான் -பாதுகாப்பானாக – என்று கூறினார்கள்.
இதுவே வரலாற்றின் சுருக்கம்.
இந்த உண்மை வரலாறு பல தத்துவங்களை உள்ளடக்கியுள்ளது.
அவற்றை மிகச்சுருக்கமாக ஆய்வு செய்து பார்ப்போம்.
நபீ அவர்கள் ஏனைய மனிதர்களின் சுவாபங்கள்,
பண்பாடுகளிலிருந்து வேறுபட்டவர்கள்.
அவர்கள் தங்களைப் பற்றிச் சொன்ன போது لست مثلكم நான் உங்களைப் போன்றவன் அல்லன் என்றும், لست كهيئتكم நான் உங்கள் அமைப்பில் உள்ளவன் அல்லன் என்றும்,
لست كأحد منكم
நான் உங்களில் எவர் போன்றவனும்
அல்லன் என்றும் கூறியுள்ளார்கள்.
மேற்கண்ட வரலாறின் மூலம் அவர்கள் ஒட்டகத்திலிருந்தவாறே
தூங்கித் தரையில் விழுவதற்கு சாய்ந்ததாகவும், அபூ கதாதஹ் மூன்று தரம் அவர்களைப் பிடித்து நிமிர்த்தி
வைத்ததாகவும் அவ்வாறு இரண்டு தரம் நிமிர்த்தி வைத்த போது கூட அவர்கள் அதை அறியவில்லை,
கண் திறக்கவுமில்லை என்றும்,
மூன்றாம் தரம் செய்த போதுதான்
கண் விழித்தார்கள் என்றும், கண் விழித்தாலும் மயக்கத்தில் உள்ளவர்கள் போல் காணப்பட்டார்கள் என்றும் பொருத்தமற்ற
வார்த்தைகள் பேசினார்கள் என்றும் தெரிய வருகின்றன.
கண் உறங்கினால் கூட “கல்பு” உள்ளம் உறங்காத நபிய்யுல்லாஹ் என்று வர்ணிக்கப்பட்டவர்களின்
மேற்கண்ட நடவடிக்கைகள் நம் போன்ற சாதாரண மனிதர்களின் நடவடிக்கைகளை விட மிகத் தரம் குறைந்த
நடவடிக்கைகளாக இருப்பது தெரிய வருகின்றது.
இவ்வாறான நடவடிக்கைகளை ஆதாரமாக வைத்துக் கொண்டே
வழி தவறிய கூட்டத்தினர் அவர்களை நம் போன்ற சாதாரண மனிதன் என்று அவர்களின் எதார்த்தமான
தரத்தைக் குறைத்துப் பேசி வருகின்றார்கள்.
 மேற்கண்ட விடயங்களை ஆதாரங்களாக வைத்துக் கொண்டு நபீகளாரை நம் போன்ற சாதாரண மனிதனாக
நோக்காமல் அவ்விடயங்களையே ஆதாரங்களாகக் கொண்டு அவர்களின் தரத்தை உயர்ந்த இடத்தில் வைத்து
அவர்களை விளங்குவதாயின் “தஸவ்வுப்” என்ற ஸூபிஸ ஞானம் ஒன்றைக் கொண்டு மட்டுமே விளங்க முடியும்.
இதன் விபரமாவது ஸூபிஸத்தில் “பனா” என்று ஓர் ஆன்மிக நிலை உண்டு. “பனா” என்ற சொல்லுக்கு அகராதியில் அழிதல் என்று பொருள்
வரும்.
“ஸூபிஸம்” பேசும் இறை ஞானிகள் இச்சொல்லுக்கு ஒரு வரைவிலக்கணம்
கூறுவார்கள். அதாவது زوال الصّفات البشريّة عنه وظهور صفاته تعالى عليه 
அவனை விட்டும் மனித
இயல்புகள் – சுபாவங்கள் – நீங்கி அவனில் இறை இயல்புகளும், சுபாவங்களும் வெளியாவதாகும். ஸூபிகளில் அனேகர் “பனா”
என்பதற்கு மேற்கண்டவாறே வரைவிலக்கணம்
கூறியுள்ளார்கள். இன்னும் சிலர் இதே கருத்தை வேறு வசனங்களிலும் கூறியுள்ளார்கள்.
இதன் முழு விபரங்களையும் அறிய விரும்பும் ஒருவர்
முஹம்மத் இப்னு பழ்லுல்லாஹ் அவர்கள் எழுதிய “அத்துஹ்பதுல் முர்ஸலஹ்” என்ற நூலையும், அப்துர் றஹ்மான் லக்னவீ அவர்கள் எழுதிய “கலிமதுல்
ஹக்” என்ற நூலையும், அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ அவர்களின்
“அல் புதூஹாதுல் மக்கிய்யஹ்”
, “புஸூஸுல் ஹிகம்” முதலான நூல்களையும், அஷ்ஷெய்கு அப்துல் கரீம் அல்ஜீலீ அவர்கள் எழுதிய
“அல் இன்ஸானுல் காமில்”
என்ற நூலையும் வாசித்துப்
பார்க்க வேண்டும்.
அத்துடன் ஸூபிஸ ஞானத்தில் வேரூன்றிப் போன,
இறை ஞானக் கடலான மகான்களைத்
தேடிக் கண்டு பிடித்து அவர்களிடம் “பைஅத்” ஞான தீட்சை பெற்று
அவர்கள் மூலம் இறையியலைக் கற்றுக் கொள்ளவும் வேண்டும்.
“அஸ்ஸிபாதுல் பஷரிய்யஹ்” என்றால் மனிதனின் தன்மைகள் – இயல்புகள் – (மனித
இயல்புகள்) என்று விளக்கம் வரும். அதாவது கண் கொண்டு பார்த்தல், காது கொண்டு கேட்டல், கை கொண்டு பிடித்தல், கால் கொண்டு நடத்தல், வாய் கொண்டு பேசுதல் என்பன
போன்று.
இவை போல் கண்ணுக்கு எதிரில் உள்ளதைப் பார்த்தல்
, குறிப்பிட்ட தூரத்திலுள்ளதைப்
பார்த்தல், கை கொண்டு தூக்க முடிந்ததை
தூக்குதல், கால் கொண்டு நடக்க
முடிந்த அளவு நடத்தல், காது கொண்டு சமீபத்திலுள்ள
சத்தத்தை கேட்டல் என்பன போன்று.
ஒரு மனிதனிலுள்ள “அஸ்ஸிபாதுல் பஷரிய்யஹ்” மனித இயல்புகள் – தன்மைகள் – அழிந்து போனால் அவன்
கண் கொண்டு மட்டும் பார்க்காமல் உடல் முழுவதைக் கொண்டும் பார்ப்பான். காது கொண்டு மட்டும்
கேட்காமல் உடல் முழுவதைக் கொண்டும் கேட்பான். காலைக் கொண்டு மட்டும் நடக்காமல் உடல்
முழுவதைக் கொண்டும் தான் நாடிய இடத்திற்குச் செல்வான்.
இவ்வாறு கண்ணுக்கு எதிரில் உள்ளதையும் பார்ப்பான்.
அதற்கு மறைவானதையும் பார்ப்பான். தூரத்தில் உள்ளதையும் பார்ப்பான். பக்கத்தில் உள்ளதையும்
பார்ப்பான். கை கொண்டு எதையும் தூக்குவான். மலையையும் தூக்குவான். மாளிகையையும் தூக்குவான்.
இவ்வாறுதான் ஏனைய விடயங்களுமாகும்.
மனித இயல்பு – சுவாபம் – அழிந்து இறை இயல்புகள்
– சுவாபங்கள் – செய்லபடும் ஒருவன் எதையும் செய்வான். சுருங்கக் கூறின் அல்லாஹ்வால்
எதையெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் அவனும் செய்வான். ஏனெனில் அவன் பெயரிலும்,
பார்வையிலும் மட்டுமே மனிதனாயிருப்பான்.
அவனின் “ஹகீகத்” எதார்த்தம் அல்லாஹ்
தான்.
மனித இயல்புகள் – சுவாபங்கள் – அழிந்து அல்லாஹ்வின்
தன்மைகள் வெளியான ஒருவன் தன்னை அல்லாஹ் என்று சொன்னால் அது வியப்பானதுமல்ல. “ஷரீஅஹ்”வுக்கு முரணானதுமல்ல. ஏனெனில் எதார்த்தத்தில் அவ்வாறு சொன்னவன்
பிறர் பார்வையில்தான் மனிதனேயன்றி அவன் தன்னைப் பொறுத்து மனிதனல்ல. அவன் என்ன சொன்னான்
என்பது அவனுக்கே தெரியாமற் போய்விடும்.
மனித இயல்புகள் அழியாமலும் , அல்லாஹ்வின் தன்மைகள் வெளியாகாமலும் உள்ள ஒருவன்
தன்னை அல்லாஹ் என்று சொன்னால் அவனிடம் விளக்கம் கேட்டு அவன் விடயத்தில் முடிவு செய்ய
வேண்டும். கண்ணை மூடிக் கொண்டு அவனுக்கு “முர்தத்” என்று “பத்வா” வழங்குதல் கூடாது. அது வடிகட்டிய முட்டாள் தனமாகும்.
மேற்கண்ட ஹதீதில் நபீ அவர்கள் من هذا؟  இவர் யார்? என்றும், متى كان هذا مسيرَك منّي؟ 
நீ எப்போதிருந்து
என்னுடன் பயணிக்கின்றாய்? என்றும் கேட்டது அவர்களின் “பனா” என்ற நிலையையே குறிக்கும்.
“தஸவ்வுப்” ஸூபிஸக் கலையில் கூறப்படும் “பனா” பற்றிய விபரம் தெரியாதவர்கள் இந்த ஹதீதையோ இது போன்ற
ஏனைய ஹதீதுகளையோ பார்த்துவிட்டுத்தான் நபீகளாரை நம் போன்ற சாதாரண மனிதன் என்று அவர்களின்
தரத்தைக் குறைத்துப் பேசி வருகின்றார்கள். இவர்களில் வஹ்ஹாபிகளும் அடங்குவர்.

(முற்றும்)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments