அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்கு அப்துர் றஷீத் கோயாத் தங்கள் மௌலானா வாப்பா அவர்கள்

October 18, 2019
மௌலவீ KRM. ஸஹ்லான் (றப்பானீ BBA (Hons)
காதிரிய்யஹ் வர்ரிபாஇய்யஹ் தரீக்காக்களின் ஷெய்குமார்களின் தொடரில் நபி(ஸல்) அவர்களின் 33வது தலைமுறையில் தோன்றிய “ஷெய்குல் ஹிந்த், குத்புஸ்ஸமான், ஆஷிகுல் அவ்லியா அஸ்ஸெய்யித் அப்துர் றஷீத் தங்கள் மௌலானா வாப்பா வலிய்யுல்லாஹ் (கத்தஸல்லாஹூ ஸிர்றஹூல் அஸீஸ்) அவர்கள் பிரசித்தி பெற்றவர்கள்.
மலர்வு

இவர்கள் ஹிஜ்ரி 1357ம் ஆண்டு அஸ்ஸெய்யிது முஹம்மதுர் ரிபாயீ அவர்களின் மகனாக அந்தரோ தீவில் பிறந்தார்கள்.

காத்தான்குடி வருகை

1841ம் ஆண்டு தங்கள் நாயகம் அவர்களின் 5வது பாட்டனார் அஸ்ஸெய்யித் பரீதுத்தீன் வலிய்யுல்லாஹ் அவர்கள் காத்தான்குடிக்கு வருகை தந்து முஹ்யித்தீன் தைக்காவை ஓலைக் குடிசையாக ஆரம்பித்து தரீக்கஹ் நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்தார்கள். 1947ம் ஆண்டு தங்கள் நாயகம் அவர்கள் தமது 13வது வயதில் அவர்களின் பெரிய மாமா அஸ்ஸெய்யித் யூஸூப் தங்கள் அவர்களுடன் காத்தான்குடிக்கு வருகை தந்தார்கள். 1980ம் ஆண்டு முஹ்யித்தின் தைக்காவை கல்லால் கட்டி புணர் நிர்மானம் செய்தார்கள். (1947-1980) காலப் பகுதியில் காத்தான்குடியில் தீன் பணி செய்தார்கள்.

அற்புதங்கள்
☼ தங்கள் நாயகம் அவர்கள் தமது சிறுவயதில் முஹ்யித்தீன் தைக்காவில் றாதிப் மஜ்லிஸ் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அணையும் நிலையில் இருந்த விளக்கில் ‘ஹவ்ழ்’ நீரை ஊற்றி எரிய வைத்தார்கள்.
☼ தெல்லங்கை எனும் ஊரில் ஜிப்ரி என்பவரின் வீட்டில் இஷாத் தொழுதுவிட்டு தங்கியிருந்த நாயகம் அவர்கள் திடீரென ‘யாகுத்பா மஜ்லிஸ் நடாத்தினார்கள்’ மஜ்லிஸின் இறுதியில் சோதனைகள், கஷ்டங்களில் இருந்து பாதுகாப்பு வேண்டி பிராத்தித்தார்கள். அன்றிரவு நடுநிசியில் தெல்லங்கையில் நில நடுக்கம் ஏற்பட்டது. அழிவுகள் எதுவும் ஏற்படவில்லை. அப்போதுதான் நாயகம் அவர்கள் நில நடுக்கம் ஏற்படவிருப்பதை தனது உள்ளுணர்வின் மூலம் அறிந்த காரணத்தினால்தான் திடீரென யா குத்பா மஜ்லிஸை நடாத்தினார் என்பது தெளிவானது.
☼ கஸ்டம் பிட்டியில் ஒரு ஹஜ்ரத் இருந்தார். அவர் ஒரு நாள் தங்கள் நாயகம் அவர்களிடம் வந்து நான் இறைவனைக் கனவில் கண்டேன் என்று சொன்னார். இதைக்கேட்ட நாயகம் அவர்கள் இவர் இன்னும் மூன்று நாட்கள் தான் உயிருடன் இருப்பார் என்று கூறினார்கள். அது போல் மூன்றாம் நாள் அவர் மரணித்தார்.
☼ மழை இல்லாத காலங்களில் பிராத்தனை மூலம் பல தடவைகளில் மழை பொழியச் செய்துள்ளார்கள்.
☼ ஒரு நாள் தங்கள் நாயகம் அவர்கள் அந்தரோத்தீவில் பாதையால் சென்று கொண்டிருக்கும் போது வேகமாக ஒருவர் ஓடி வருகின்றார். அவரைத் தடுத்த நாயகம் அவர்கள் என்ன விடயம் என வினவினார்கள். ஊரில் ஒரு சிறுவனுக்கு ‘கத்னஹ்’ செய்யப்பட்டது. கத்னஹ் செய்யப்பட்டது முதல் அச்சிறுவனுக்கு இரத்தம் ஓடிக்கொண்டே இருக்கிறது. வைத்தியங்கள் எதுவும் பலனளிக்கவில்லை. விஷேட வைத்திய நிபுணரை அழைத்துவர சென்று கொண்டிருக்கின்றேன் என அந்த மனிதர் கூறினார். இதைக் கேட்ட நாயகம் அவர்கள் அவரையும் அழைத்துக் கொண்டு சிறுவனின் வீட்டுக்கு விரைந்தார்கள். அங்கே அப்போதும் இரத்தம் அதிகமாக ஓடிக் கொண்டே இருந்தது. தங்கள் நாயகம் அவர்கள் அச்சிறுவனுக்குப் பக்கத்தில் சென்று “யாரிபாயி” எனக் கூறியவர்களாக அவனது தொடையில் அடித்தார்கள். என்ன அதிசயம்! அதுவரை பீரிட்டுப் பாய்ந்தோடிய இரத்தம் அந்த நிமிடமே கட்டுப்பாட்டுக்கு வந்து நின்று விட்டது. அனைவரும் அதிசயிக்க தங்கள் நாயகம் அவர்கள் புன்முறுவல் செய்தார்கள்.
தங்கள் நாயகம் அவர்கள் விஷ முறிஞ்சும் கற்களை பல இடங்களில் வைத்துள்ளார்கள். குறிப்பாக 1958ம் ஆண்டில் காங்கேயனோடையிலும் 1968ம் ஆண்டு காத்தான்குடி முஹ்யித்தீன் தைக்காவிலும், கண்டி பட்டுப்பிட்டி மஸ்ஜிதுர் ரிபாஈ பள்ளிவாயலிலும் காத்தான்குடி05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் சமாதி கொண்டுள்ள அபுல் இர்பான் அப்துல் ஜவாத் வலிய்யுல்லாஹ் அவர்களின் புனித தர்ஹாவிலும் விஷக் கற்கள் வைத்துள்ளார்கள். இப்புனித கற்கள் நாய், பாம்பு, தேள் போன்றவற்றால் தீண்டப்பட்ட விஷத்தை உறிஞ்சிக் கொள்வதுடன் வாத நோய்க்கும் மருந்தாக காணப்படுகின்றன.
மறைவு
தமது மறு உலகப் பயணத்தை முன்னரே அறிந்த நாயகம் அவர்கள் தாம் முன்னரே குறிப்பிட்டது போல் ஹிஜ்ரி 1418 ஸபர் பிறை22 (30/06/1997) வௌ்ளியிரவு 9.40 மணிக்கு கண்ணூரில் வைத்து வபாத்தானார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.

You may also like

Leave a Comment