அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்

September 28, 2015
மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள்
சிரேஷ்ட விரிவுரையாளர் – 
அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம்
தொடர் – 09

அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அன்னவர்களின் உமிழ் நீர் கொண்டு அருள் பெறுதல்.
அகிலத்தின் பேரொளி அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் திருமுடியில் மாத்திரமல்ல அவர்களுடன்
தொடர்புடைய அனைத்திலும் பறகத் – அருள் உண்டு என்பதே ஸுன்னத் வல் ஜமாஅத்தினரின்
ஏகோபித்த கருத்தாகும். இதனாற்றான் கண்ணியமிக்க ஸஹாபஹ்
– தோழர்கள் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அன்னவர்களுடன் தொடர்புடைய அனைத்தைக் கொண்டும் பறகத் – அருள் பெற்றார்கள்.
நோய் நிவாரணம் பெற்றார்கள். அண்ணலின் தோழர்கள்
பாக்கியம் பெற்றவர்கள்.

அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் புனித உடலிலிருந்து வெளியாகிய பல வஸ்துக்களைக் கொண்டு ஸஹாபஹ் – தோழர்கள் அருள் பெற்றார்கள். அவற்றில் முக்கிய இடத்தை வகிப்பது அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அன்னவர்களின் அருள் நிறைந்த வாயிலிருந்து வெளியேறிய அருள் நிறைந்த உமிழ் நீர்
ஆகும். அருள் நிறைந்த இந்த உமிழ் நீரைக் கொண்டு ஸஹாபஹ் – தோழர்கள் பல சந்தர்ப்பங்களில் அருள் பெற்றிருக்கிறார்கள். நோய் நிவாரணம் பெற்றிருக்கிறார்கள்.
தங்களின் குழந்தைகளுக்கு அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் உமிழ் நீரின் அருள் கிடைக்க வேண்டுமென்பதற்காக. அவர்களை
அண்ணலின் சமூகத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அவர்களின் வாயினுள்
உமிழும் படி வேண்டிக் கொண்டார்கள்.
தங்களுக்கு ஒரு நோய் ஏற்பட்டு விட்டால் அந்த நோய்க்கு நிவாரணமாக அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அன்னவர்களின் அருள் நிறைந்த உமிழ் நீரை மருந்தாகப் பெற்றிருக்கின்றார்கள்.
அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் உமிழ் நீர் எங்களைப் போன்றோரின் உமிழ் நீர் போன்றதல்ல. அண்ணலின் உமிழ் நீர் இறையருள் நிறைந்ததாகும். தெய்வீக சக்தி மிக்கதாகும். எந்த ஒரு நோயையும் குணப்படுத்தும் சக்தி கொண்டதாகும். ஆன்மீக மணம் நிறைந்ததாகும். இதனாற்றான் தங்களின் தோழர்களுக்கு நோய், கஷ்டங்கள் ஏற்பட்ட போது தங்களின் அருள் நிறைந்த உமிழ் நீரை அவற்றுக்கு நிவாரணமாக வழங்கினார்கள் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அன்னவர்கள்.
பல ஸஹாபஹ் – தோழர்களின் வீடுகளுக்குச் சென்று வீடுகளிலுள்ள கிணறுகளில் உமிழ்ந்தார்கள்
அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள். அந்தக் கிணறுகள் அருள்
பெற்றன. மணம் பெற்றன. மக்கள் அந்தக் கிணறுகளில்
நீர் அருந்துவதை அருளாகக் கருதினார்கள்.
அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் உமிழ் நீர் கொண்டு அருள் பெற்ற, நோய் நிவாரணம் பெற்ற பல ஸஹாபஹ் – தோழர்களில் சிலரை நாம் இங்கு தொகுத்து வழங்குகின்றோம்.
அமீறுல் முஃமினீன் ஸெய்யிதுனா அபூபக்ர் அஸ்ஸித்தீக் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்வர்கள்
இவர்களின் பெயர் அப்துல்லாஹ் ஆகும். இஸ்லாத்திற்கு முன் இவர்களின் பெயர் அப்துல் கஃபா என்றிருந்தது. அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அன்னவர்கள் அப்துல்லாஹ் என்று இவர்களுக்கப் பெயரிட்டார்கள். இவர்களின்
தந்தையின் பெயர் அபூகுஹாபா. தாயின் பெயர் உம்முல் ஹைர்.
இப்னு அபீ குஹாபா என்றும் இவர்கள் அழைக்கப்பட்டார்கள். இவர்களைப் பற்றி பல ஸஹாபஹ் – தோழர்கள் ரிவாயத் செய்திருக்கிறார்கள்.
அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கலிமஹ் தையிபாவைப் பகிரங்கப்படுத்திய
வேளை முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களும், முதன்
முதலில் தொழுதவர்களும் ஸெய்யிதுனா அபூபக்ர் ஸித்தீக் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களேயாகும்.
அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை இவர்கள் முதன் முதலில் உண்மைப்படுத்திய
காரணத்தினாலும், அவர்களின் அனைத்து விடயங்களையும் உண்மைப்படுத்திய காரணத்தினாலும்
இவர்கள் “ஸித்தீக்” (அதிகம் உண்மை பேசுபவர்) என்று அழைக்கப்பட்டார்கள்.
இவர்களின் சிறப்புக்கள் அனந்தம் அவற்றை எல்லையிட முடியாது. பல
சந்தர்ப்பங்களில் இவர்களை அதிகம் கண்ணியம் செய்திருக்கிறார்கள் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அன்னவர்கள்.
அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் ஒரு நாள் ஸெய்யிதுனா
அபூபக்ர் ஸித்தீக் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களை நோக்கி “எனது
உம்மத்தில் முதன் முதலாக சுவர்க்கத்தில் நுழைபவர் நீர்தான் என்று கூறினார்கள்”.
அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் பின் அந்தஸ்தில் இவர்களை விட மிக
உயர்ந்தவர்கள் இவ்வுலகில் யாரும் கிடையாது.
அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் காபிரீன்களின் பார்வையிலிருந்து மறைந்து
மூன்று தினங்கள் தவ்ர் குகையில் இருந்தார்கள். இவர்களுடன் மூன்று தினங்களும்
ஒன்றாக இருந்தவர்கள் ஸெய்யிதுனா அபூபக்ர் ஸித்தீக் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள்.
இந்த சம்பவத்தை அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் சூறதுத் தவ்பஹ்வில் சுட்டிக் காட்டுகின்றான். இந்த
சந்தர்ப்பத்தில் ஸெய்யிதுனா அபூபக்ர் ஸித்தீக் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களைப்
பாம்பு தீண்டியது. அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அன்னவர்கள் பாம்பு தீண்டிய இடத்தில் தங்களின் அருள் நிறைந்த உமிழ் நீரை உமிழ்ந்து சுகம்
வழங்கினார்கள். இந்த சம்பவத்தை சுருக்கமாக கூறுகின்றோம்.
அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களும், ஸெய்யிதுனா அபூபக்ர் ஸித்தீக்
றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களும் காபிரீன்களின் பார்வையிலிருந்து மறைந்து
“தவ்ர்” குகையை நோக்கி வருகின்றார்கள். அங்கே அவர்கள் வரும் போது இருளாகி விட்டது.
“தவ்ர்” குகையை நெருங்கியவுடன் ஸெய்யிதுனா அபூபக்ர் ஸித்தீக் றழியல்லாஹு தஆலா
அன்ஹு அன்னவர்கள் அண்ணலை நோக்கி நாயகமே! குகையினுள்ளே நான் முதலில் சென்று
பார்த்து வருகிறேன் உள்ளே ஏதாவது இருந்தால் அதன் தாக்கம் எனக்கு ஏற்படட்டும் என்று
கூறி உள்ளே நுழைந்தார்கள். உள்ளே சென்று கூட்டினார்கள். குகையினுள்ளே பல
துவாரங்கள் இருப்பதை அவதானித்த ஸெய்யிதுனா அபூபக்ர் ஸித்தீக் றழியல்லாஹு தஆலா
அன்ஹு அன்னவர்கள், அத்துவாரங்களினூடாக விஷ ஜந்துக்கள் நுழைந்து அண்ணலை தீண்டி
விடும் என பயந்தார்கள். உடனே தான் அணிந்திருந்த ஆடையை களைந்து அதை பலதாக கிழித்து
அத்துவாரங்களை அடைத்தார்கள். ஆயினும் இரண்டு துவாரங்கள் மாத்திரம் எஞ்சின.
அவ்விரண்டையும் தங்களின் இரண்டு குதிகால்களைக் கொண்டும் அடைத்த ஸெய்யிதுனா
அபூபக்ர் சித்தீக் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் அண்ணலை நோக்கி உள்ளே வருமாறு
கூறினார்கள். உள்ளே நுழைந்த அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் அபூபக்ர் நாயகத்தின் மடியில் தலையை
வைத்து சற்று உறங்கினார்கள்.
இந்த சந்தர்ப்பத்தில் உள்ளே நுழைய முயன்ற பாம்பு அபூபக்ர் நாயகத்தின் ஒரு
காலைத் தீண்டியது. விஷம் ஏறத் துவங்கியது. வேதனை கடுமையாகுவதை உணர்ந்தார்கள்
அபூபக்ர் நாயகம் அன்னவர்கள். தனது மடியில் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அன்னவர்கள் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். தான் அசைந்தால் அவர்கள் எழுந்து விடுவார்கள்.
அவர்கள் தூக்கம் கலைந்து விடும் என பயந்தார்கள். எனவே அசையாமல் இருந்தார்கள்.
வேதனை கடுமையாகி அவர்களின் கண்களிலிருந்து நீர் வழிந்தது. அது அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அன்னவர்களின் அருள் நிறைந்த முகத்தில் விழுந்தது. உடனே கண் விழித்த அவர்கள்
அபூபக்ரே! உமக்கு என்ன நடந்தது? என்று கேட்டார்கள்.
நாயகமே! தாயும், தந்தையும் உங்களுக்கு அர்ப்பணம். என்னைப் பாம்பு தீண்டி
விட்டது என்றார்கள் அபூபக்ர் நாயகம் அன்னவர்கள். உடனே அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அன்னவர்கள் தங்களின் அருள் நிறைந்த வாயினால் பாம்பு தீண்டிய இடத்தில்
உமிழ்ந்தார்கள். அவர்கள் பெற்ற வேதனை நீங்கியது.
காலையான போது அபூபக்ர் நாயகத்திடம் உமது ஆடை எங்கே? என வினவினார்கள் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அன்னவர்கள் தான் செய்ததை அவர்களுக்கு கூறினார்கள். உடனே தங்களின் அருள் நிறைந்த இரண்டு
கைகளையும் உயர்த்தி “இறைவா! மறுமை நாளில் எனது படித்தரத்தில் என்னுடன் அபூபக்ரையும்
ஆக்கி வைப்பாயாக” என பிரார்த்தித்தார்கள். அல்லாஹு தஆலா உமது பிரார்த்தனையை
அங்கீகரித்து விட்டான் என்று அல்லாஹு தஆலா அவர்களுக்கு வஹீ அறிவித்தான்.
இந்த சம்பவம் அல்மவாஹிபுல்லதுன்னிய்யஹ், அஸ்ஸீறதுல் ஹலபிய்யஹ் மற்றும் பல
கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாம் இங்கு கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில், ஸெய்யிதுனா அபூபக்ர் ஸித்தீக்
றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களுக்கு பாம்பு தீண்டிவிட்டது என்பதை அறிந்தவுடன் அதற்கு
வைத்தியம் செய்ய வேண்டுமல்லவா!!
அண்ணல் எம் பெருமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் என்ன செய்தார்கள்? பாம்பு
தீண்டிய இடத்தில் உமிழ்ந்தார்கள். அப்படியாயின் அவர்களின் அருள்
நிறைந்த உமிழ் நீர் மருந்தானது. நோய் நிவாரணியானது. அண்ணலின் உமிழ் நீரல்லவா! அது சாதரணமானவர்களின் உமிழ்
நீர் போன்றதல்ல. இறை சக்தி மிக்க, அருள்
மிக்க அண்ணலின் உமிழ் நீர் கொண்டு ஸஹாபஹ் – தோழர்கள் அருள் பெற்றது
போல் எந்தவொரு உம்மத்தின் நபீயின் சமூகத்தினரும் அருள் பெறமாட்டார்கள்.
தங்களின் உமிழ் நீரில் எந்தவொரு பிரயோசனமும் இல்லையெனில், நோய்
நிவாரணம் இல்லையெனில் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் பாம்பு தீண்டிய இடத்தில் உமிழ்ந்திருக்கமாட்டார்கள். ஸெய்யிதுனா
அபூபக்ர் ஸித்தீக் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் சுகம் பெற்றிருக்கமாட்டார்கள்.
தொடரும்….

You may also like

Leave a Comment