Thursday, April 18, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஆன்மீக ஒளி அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலீ

ஆன்மீக ஒளி அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலீ

(தொடர் – 04) 
சங்கைக்குரிய மௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ 
(அதிபர், அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம்) 
ஸபரும் றபீஉனில் அவ்வலும் : 
அதிசங்கைக்குரிய உஸ்தாத் அப்துல் ஜவாத் நாயகம் அவர்கள் ஸபர், றபீஉனில் அவ்வல் மாதங்களில் மாநபீ முஹம்மது (ஸல்) அவர்களின் புகழ்பாடும் இரு மஜ்லிஸ்களை ஏற்படுத்தினார்கள். புனித ”ஸபர்” தலைப் பிறையிலிருந்து மாதம் முடியும் வரை நபீபுகழ் பாவலர்களான இமாம்சதகதுல்லாஹ் அல்காஹிரீ (றஹ்), இமாம் முஹம்மத்பின் அபூபக்ர்பக்தாதீ (றஹ்) ஆகியோரால் யாக்கப்பட்ட மாநபீபுகழ் காப்பியம் ”அல்வித்ரிய்யதுஷ் ஷரீபஹ்” பாமாலையை ஒரு இரவுக்கு ஒருஹர்புவீதம் மஃறிப் தொழுகையின்பின் ஓதிவந்தார்கள். 
அதேபோல் றபீஉனில் அவ்வல் தலைப்பிறையிலிருந்து நபீபுகழ் பாவலர் இமாம் பர்ஸன்ஜீ (றஹ்) அவர்களால் எழுதப்பட்ட ”பர்ஸன்ஜீ” மவ்லிதை பதினொருதினங்கள் ஓதிநபீகள் பிறந்தகாலை கந்தூரி வழங்கி கொண்டாடினார்கள். அவர்களின் காலத்தில் இவ்விரு மஜ்லிஸ்களும் காத்தான்குடியிலேயே புகழின் உச்சஎல்லையை அடைந்நிருந்தன. 
மஜ்லிஸ் கண்ணியமும் கட்டுப்பாடும் : 
அதிசங்கைமிகு உஸ்தாதுநாயகம் அவர்கள் நடாத்தும் எந்தமஜ்லிஸையும் மிககண்ணியமாகவே நடாத்தினார்கள். மஜ்லிஸ் ஆரம்பம்முதல் இறுதிவரை கால்மடித்தே இருப்பார்கள். சபையில் இருப்போரையும் கால்மடித்தே இருக்கும்படி பணிப்பார்கள். 
சபையில் கால்மடித்து இருக்கமுடியாதவர்களை சபையில் இருக்காமல் பின்னால் இருக்கும் படிபணிப்பார்கள். அவர்கள் மஜ்லிஸ் வந்தமர்ந்தால் மஜ்லிஸ் அமைதியைத் தழுவிவிடும். 
நபிகள் முஹம்மது (ஸல்) அவர்களின் ”பர்ஸன்ஜீ” ஷரீபை ஓதுகையில் ஒவ்வொரு வசனம் முடியும்போதும் நபீ (ஸல்) அவர்கள் மீது ”ஸல்லல்லாஹுவஸல்லமஅலைஹ்” என்றுதான் ஸலவாத், ஸலாம் சொல்லுவதுடன் சபையோரையும் ஸலவாத், ஸலாம் சொல்லும்படி பணிப்பார்கள். 
ஒரு முறை ”பர்ஸன்ஜீ” மவ்லித் ஓதும்சபை மிகச்சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. அப்போது அதிசங்கைக்குரிய உஸ்தாதுநாயகம் அவர்கள் திடீரென்று அழுதார்கள். அவர்களது கண்களால் கண்ணீர் சொரிந்தது. யாறஸூலல்லாஹ், யாஹபீபல்லாஹ் என்று கண்ணீர் பொங்க சப்தமிட்டு அழைத்தார்கள். சபைநிசப்தமாகியது. சிறிது நேரத்தின்பின் பழைய நிலைக்குத்திரும்பிய அவர்கள் மஜ்லிஸை நடாத்தி முடித்தார்கள். 
மறுநாள் பாடம் ஓதிக்கொண்டிருந்த எங்களுக்கு ”அவர்கள் மஜ்லிஸில் றஸூலுல்லாஹ் அவர்களுடைய புனிதறவ்ழஹ் ஷரீபஹ்வை நேரில் கண்டுதான் ஆனந்தக்கண்ணீர் சொரிந்துள்ளார்கள் என்பது எமக்கு தெரியவந்தது. 
”என்னே மகானவர்களின் அகமியநிலை, யார் புரிந்தார் அவர்களின் மனோன்னதநிலை?” 
பத்ரிய்யஹ் தைக்கிய்யஹ்வின் உதயம் 1960 : 
சங்கைக்குரிய உஸ்தாதுநாயம் அவர்கள் சிந்தனையில் தோன்றிய குர்ஆன் மத்றஸஹ் சிறப்புற்று ஓங்குவதையும், மாணவ, மாணவியர் காத்தான்குடியின் பல தெருக்களிலுமிருந்து வந்து பயில்வதையும், குர்ஆனை முடித்தமாணவர்கள் ஆர்வத்துடன் கிதாபு ஓதிக்கொண்டிருப்பதையும், நிர்வாகத்தினர் தமது சொல்லுக்கு இயைந்து நடப்பதையும் கண்டு அல்லாஹ்வை புகழ்ந்தார்கள். அத்துடன் மத்றஸஹ்வின் அருகிலுள்ள நிலத்தை விலைக்குவாங்கி அதில் ஐவேளை தொழுவதற்கு ஒருபள்ளிவாயலைக் கட்டிமக்களை தொழுகையில் ஈடுபடுத்தலாம் என்றும் விரும்பினார்கள். 
நிர்வாகத் தோழர்களை அழைத்து விடயத்தை விளக்கினார்கள். உஸ்தாதுநாயகம் அவர்களின் இறை அர்ப்பணிப்பையும், உயர் மார்க்கப்பற்றையும் கலப்பற்ற இக்லாஸையும் நடைமுறைவாழ்வில் கண்டு அதிசயித்த நிர்வாகத்தினர் உடன்முன்வந்து தாமும் பங்களித்து, தங்களது கடைகளுக்குச் சாமான் எடுக்கும் கொழும்பிலுள்ள பாய்மார், பொருங்கடை வர்தகரிடம் சென்று அவர்களது பங்களிப்புடன் அந்நிலத்தை பள்ளிவாயலுக்கு வாங்கினார்கள். 
அதில் 1960ம்ஆண்டு, ”மஸ்ஜிதுர் றப்பாயிய்யஹ் அல்மத்உவ்வுபிதைகிய்யதில் பத்ரிய்யஹ்” (பத்ரிய்யஹ் தைக்கிய்யஹ் என்று அழைக்கப்படும் மஸ்ஜிதுர் றப்பானிய்யஹ்) எனும் அழகிய பள்ளிவாயலை இறைஅருளால் கட்டிமுடித்தார்கள். பள்ளியின் திறப்புவிழாவுக்கு மான்கறிவிருந்து அளிக்கப்பட்டது. 
நிர்வாகிகள்: 
தீனின் பணிக்காக உஸ்தாதுநாயகம் தேர்ந்தெடுத்த இவர்கள் அனைவரும் ஹாஜிகளாகவும், பதுளை, பண்டாரவளை, வெலிமடை போன்ற மாநகரங்களில் சொந்தமாக புடைவைக் கடைகள் வைத்து வர்த்தகம்செய்யும் முதலாளிகளாகவும் திகழ்ந்தனர். 
அவர்கள் தொழுகை, இறைபக்தியுடையவர்கள். 
அவ்லியாஉகளின் வழிநடப்பவர்கள். 
சுன்னத்வல்ஜமாஅத் கொள்கைவாதிகள். 
பிறரால் மதிக்கப்பட்டவர்கள். 
வருடாந்தம் பகிரங்கமாக ஸகாத் கொடுப்பவர்கள். 
சிலருக்கு சொந்தமாக கார்களும்இருந்தன. 
எல்லாவற்றுக்கும் மேலாக உஸ்தாதுநாயகம் அவர்களின் ”துஆ” பறகத்தும் வேலைசெய்தது. 
அதனாற்றான் அவர்களால் நிலங்களை வாங்கி அவற்றில் மத்றஸஹ்வையும் பள்ளிவாயலையும் விரைவாகக் கட்டி எழுப்பமுடிந்தது. 
தொழுகைக்காக வேறுபள்ளிகளுக்குச் சென்று வந்த ”கிதாபு” ஓதும் மாணவரும் ஜமாஅத்தவரும் அன்றுமுதல்ப த்ரிய்யஹ்வில் சங்கமித்தனர். 
ஊரின் உள்ளே அழகிய தோற்றங்களைக் கொண்ட பத்ர்சஹாபிகளின் சின்னம் பத்ரிய்ஹ் தைக்கிய்யஹ்வும், அல்மத்றஸதுர்றப்பானிய்யஹ்வும் இறையொளியூட்டிக் கொண்டிருந்தன. 
உஸ்தாதுநாயகம் அவர்களின் இருகண்களாகவே அவ்விரு இறை இஸ்தாபனங்களும் திகழ்ந்தன. 
ஹத்தாத் றாத்திப்மஸ்லிஸ் உதயம் : 
ஐவேளைத் தொழுகையுடன் பிரதி வாரமும் வெள்ளியிரவு மஃரிப் தொழுமையின்பின் நடைபெறுவதற்காக புனித ஹத்தாத்றாதிப் மஜ்லிஸ் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அவர்களே தலைமை தாங்கிநடத்தினார்கள். 
இறை திக்ரில் நிதம் வாழ்ந்த உஸ்தாத்நாயகம் அவர்களின் திக்ர் மஜ்லிஸில் எப்படியிருந்திருப்பார்கள்? 
கணீர் என்ற குரல் 
கம்பீரமான தோற்றம் 
கூர்மையான பார்வை 
இறை பரவசநிலை 
ஜல்ஸதுல் இஸ்திறாஹத் இருப்பு! 
அனைவரையும் கட்டிதன்கைக்குள் வைத்திருக்கும் ஸுபிஸ நிலை. 
நாளடைவில் திக்ர்மஜ்லிஸுக்கு மக்கள் வரத் தொடங்கினர். திக்ர் மஜ்லிஸின் மாண்பால் ஷாத்தான் எனும் இருள் அப்பகுதியிலிருந்து நீங்கிப்போயிற்று. மக்கள் மனங்களில் படிந்திருந்த பாவக்கறைகளும் புனிததிக்ரால் சுத்திகரிக்கப்பட்டது. 
றமழான் நிகழ்வுகள் : 
புனித ஜவேளைத் தொழுகையுடன் விஷேடமாக புனித தறாவீஹ், வித்று தொழுகைகள் றமழானில் நிகழ்ந்தன. இருபத்தேழாம் இரவு விஷேடமாக தஸ்பீஹ் தொழுகையுடன் திக்ர், பிக்ர், பாயன் நிகழ்வுகள் நிகழ்ந்துவந்தன. இருபெருநாள் தொழுகைகளும் சிறப்பாக நடந்தேறிவந்தன. 
(தொடரும்..)
==***==***==***==***==





தொடர் – 03

சங்கைக்குரிய மௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ
அதிபர், அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம்
தந்தையின்மரணம்
தனது மைந்தன் அப்துல் ஜவாத் ஆறாவது பரம்பரைத் தலைமுறை ஆலிமாக ஒளிர்ந்ததைக் கண்ட அலியார் ஆலிம் அவர்கள் அல்லாஹ்வின் கொடையை நினைந்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார்கள். தன் மைந்தருக்காகப் பிராத்தித்தார்கள். 
அலியார் ஆலிம் அவர்களும் அக்காலை ஒரு சிறந்த மார்க்க அறிஞராகவும், சிறந்த மார்க்கப் பிரசங்கியாகவுமே திகழ்ந்துள்ளார்கள். 
றமழான் காலத்திலும் ஏனைய காலங்களிலும் ஊரை விட்டும் வெளியேறி பிற ஊர்களுக்குச் சென்று, அங்குள்ள பள்ளிவாயல்களில் மார்க்கப் பிரசங்கம் செய்து மக்களை நேர்வழி பால் அழைத்து தனக்குக் கிடைக்கின்ற நன்கொடையுடன் தாயகம் திரும்புவார்களாம்.
இவர்களது பிரசங்கம் இறை வரம்
இவர்களது பிரசங்கம் கேட்போர்க்கு ரசம்.
தனது மைந்தரின் திருமணத்தின் முன்னே மனைவி மூஸா உம்மாவை இழந்த கவலையில் வாழ்ந்த அவர்கள் தனது முதிர்வாலும், பலவீனத்தாலும் நோயுற்றார்கள். முடிவில் இவ்வுலகை விட்டும் இறையடி சேர்ந்தார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.
இரும்புத்தைக்கிய்யஹ்வில் நல்லடக்கம்
தந்தையின் “சக்றாத்” வேளையில் மைந்தர் அப்துல் ஜவாத் அவர்கள் முன்னே இருந்தும் நின்றும் திக்றுகளிலும், ஓதல்களிலும் ஈடுபட்டிருந்தார்கள் என்று அன்னை ஸுஹறா உம்மா சொன்னார்கள். 
அவர்களது புனித உடல் இரும்புத்தைக்கிய்யஹ் (மஸ்ஜிதுல்ஹஸனாத்) பள்ளியில்நல்லடக்கம்செய்யப்பட்டது.
அந்த ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தற்போதுள்ள பள்ளிவாயலில் “வுழூ” செய்யப்படும் “ஹவ்ழு” தடாகம் அமைந்துள்ளது.
இறையில்லமாம் இரும்புத்தைக்கிய்யஹ்வை புதிதாககட்டும் பணியில் தன்னை அர்ப்பணித்த அல்ஹாஜ் MCM. இஸ்மாயில் (லங்காஹாட்வெயார்) அவர்கள் அப்துல்ஜவாத்ஆலிம் வலியவர்களிடம் நேரில் வந்து, பெரியஆலிம் நாயகமே, நான் பள்ளிகட்டும் பணியில் ஈடுபட்டுள்ளேன். அதில் “ஹவ்ழு” அமைக்கப்படும் இடம் தங்களது தந்தை நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தை உள்ளடக்குகிறது. 
என்செய்வது?
தங்களிடம் சொல்லவே வந்தேன்.
தங்களது சொற்படி செயற்படுகின்றேன் என்றார்?
அது கேட்ட அப்துல்ஜவாத்வலீ அவர்கள் நீங்கள் “ஹவ்ழை”க் கட்டுங்கள். 
எனது தந்தை அங்கே இப்போது இல்லை!
என்று சொன்னார்களாம். அதன் பின்னே தற்போதுள்ள “ஹவ்ழு” கட்டப்பட்டது.
சிந்தனைக்கு!
எனது தந்தை அங்கே இப்போது இல்லை!
என்று அப்துல்ஜவாத்ஆலிம்வலீ அவர்கள் சொன்னது சிந்தையை விரிக்கின்றது.
அன்பியாக்கள், அவ்லியாக்கள் என்போர் சாதாரண மனிதர்களைப்போல் மரணிப்பதுமில்லை, அவர்கள் போல் கப்றில் அழிந்து மண்ணோடு மண்ணாவதுமில்லை.
அவர்களது உடல் மண்ணுக்கு ஹறாமாகக்கப்பட்டுள்ளது. அவர்களது உடலை மண்சாப்பிடாது ஆனால் சாதாரண மனிதனின் உடலை மண்சாப்பிடும்.
விமானம் அழிந்தாலும் அதனுனிடனிருக்கும் கருப்புப்பெட்டி அழியாததுபோல் சாதாரண மனிதனின் உடல் அழிந்தாலும் அவனது முதுகிலுள்ள “சுல்பு” எனும் கருப்புப்பெட்டி அழிவதில்லை. அதன் மூலமே இறைவன் றூஹைக்கொடுத்து அவனை எழுப்புகின்றான். 
இதுவே அன்பியாஉகள், அவ்லியாஉகளுக்கும் நம் போன்ற சாதாரண மனிதர்களுக்கும் இடையில் உள்ள மாபெரும் வேறுபாடாகும். 
கப்று என்பது எமக்குத்தான் கட்டுப்பாடேயன்றி இறைநேசர்களுக்கு அது அகண்டப்பொருள்கட்டுப்பாடற்றது. அவர்கள் அங்கிருந்து எங்கும் போவார்கள், வருவார்கள். சிலர்தாம் அடக்கம் செய்யப்பட்ட கப்றுக்குவராமலும் இருப்பார்கள். உதாரணம் சொன்னால்.
மக்களிடையே ஒருவர் வாழ்ந்தார்.
யாரும் அவரது வீட்டுக்குப் போவதில்லை.
அவருடன் யாரும் பேசுவதுமில்லை.
அவருடன் எவருக்கும் எந்தத் தொடர்புமேயில்லை.
சிலவேளை அவரது வீட்டுக்கு கல்லெறிகளும் வருவதுண்டு.
சில சந்தர்ப்பத்தில் அவரது வீட்டுக்குதீயும் வைக்கப்படுவதுண்டு.
இந்நிலையில் அம்மனிதனால் அங்குவாழ முடியுமா? முடியாது. அவர் பிறஊருக்குச் சென்றுவிடுவான். இதேபோன்றுதான் ஒரு இறைநேசர் நல்லடக்கம் செய்யப்பட்ட புனித கப்றுமாகும்.
அது கண்ணியப்படுத்தப்படாவிடினும், அது பராமரிக்கப்பட்டு ஸியாறத் செய்யப்படாவிடினும் அது உடைக்கப்பட்டு, எரிக்கப்படினும் அங்கு அடக்கம் செய்யப்பட்ட இறைநேசர் இருக்கமாட்டார்.
ஒரு இறைநேசர் பல இடங்களில் “ஸியாறத்” செய்யப்படுவதும் அவ்லியாஉகளின் சரிதைகளில் காணப்படுகின்றன.
எனவே பூமியில் அடக்கம் செய்யப்பட்ட நபீமார்கள் பலரை நபிகள் (ஸல்) மிஃறாஜ் பயணத்தில் கண்டு உரையாடியதும் நபீமார்கள் வானங்களில் வாழ்ந்து கொண்டிருப்பதாக ஹதீஸ்கள் கூறுவதும் “எனது தந்தை அங்கே இப்போது இல்லை.” என்று அப்துல் ஜவாத்வலீ சொன்னதற்கு ஆதாரங்களாகும்.
தூய சிந்தனை
ஓதிக்கொடுப்பதற்கு அவர்கள் மத்றஸஹ்வுக்குச்செல்லும் பாதை நமது பத்ரிய்யஹ் பாதையாகத்தான் இருந்தது.
இன்று அதுகொங்ரீட்றோட், அன்று அது மணற்றெருவௌளம் ஏற்படின் ஒரு மனிதனின் தொடைக்கு மேல் தண்ணீர் காணப்படும்.
நமது பத்ரிய்யஹ் தளம் அமைந்துள்ள இடம் பாழ் பூமியாகவும் பேய் பசாசுகள் நிற்கும் சந்தியாகவும் மக்களால் காணப்பட்டிருந்தது.
வழமை போல் ஒரு நாள் அவ்வழியால் சென்ற அப்துல் ஜவாத் நாயகம் அவர்களது பார்வை காடாய்க்கிடந்த இடத்தில் பதிந்தது. உடன் தூய சிந்தனையொன்று அவர்களுக்குப் பிறந்தது.
இவ்விடத்தை விலைக்கு வாங்கினால் இதில் ஒரு குர்ஆன் மத்ஸஹ் அமைக்கலாம். சிறுவர்களுக்கு திருக்குர்ஆன் ஷரீபை திறன்படக் கற்பிக்கலாம். ​எதிர்காலத்தில் இவ்விடத்தில் ஒரு பள்ளிவாயலையும் அமைத்து மக்களை இறைபக்தர்களாக்கலாம்.
இதுவே அவர்களது தூய சிந​னை
அது ஒரு தூரநோக்கு சிந்தனை
செயற்பாடு
இந்த தூய சிந்தனை அவர்களது உதிரத்தில் கலந்து விட்டதால் அப்பகுதியில் வாழ்ந்த சில தனவந்தர்களை அணுகினார்கள்.
அவர்களிடம் குறித்த இடத்தை விலைக்கு வாங்கி இப்பகுதியில் வதியும் சிறுவர்கள் திருக்குர்ஆனைக் கற்றுக் கொள்வதற்காக ஒரு குர்ஆன் மத்றஸஹ்வை அவசியம் அமைக்க வேண்டும் என்று முதலில் வேண்டினார்கள்.
மத்றஸஹ்வை இவ்விடத்தில் அமைக்கும் காரணங்களையும் அதை அமைப்பவர்களுக்கு இறைவன் கொடுக்கும் மாண்பையும் விளக்கினார்கள்.
அவர்களது கருத்துக்கள் அனைவருக்கும் திருவாசகங்களாகவே இதயத்தில் பதிந்தது. இறுதியில் குர்ஆன் மத்றஸஹ் அவசியம் என்ற முடிவுக்கு வந்தனர். அதன் படி தற்போதுள்ள பத்ரிய்யஹ் நிலத்தில் 1/10 ஒரு பகுதி விலைக்கு வாங்கப்பட்டது.
குர்ஆன் குடிசை
வாங்கிய நிலத்தை துப்புரவு செய்து “அல்மத்றஸதுர் றப்பானிய்யஹ்” எனும் பெயரில் ஒரு குர்ஆன் மத்றஸஹ்வை குடிசையில் அமைத்தனர் அந்த கொடை வள்ளல்கள். அப்துல் ஜவாத் நாயகம் அவர்களே அதற்கு “உஸ்தாத்” ஆகவும் செயற்பட்டார்கள்.
அவ்விடத்தில் குர்ஆன் மத்றஸஹ் அமைந்தது அப்பகுதி மக்களுக்கு மகிழ்வைக் கொடுத்தது.
“பாழ் பூமி பசுமை பெற்றது.”
என்று பேசிக் கொண்டனர்.
சிறுவர்கள் சேர்ந்தனர்,
சிறப்பாகப் பயின்றனர்.
திருக்குர்ஆன் ஓதலில் சிறந்தன்று திகழ்ந்தனர்.
தெருவெல்லாம் இச்செய்தி தென்றல் போல் தவழ்ந்ததனால் திருக்குர்ஆன் குடிசையதும் கோபுரமாய் ஆனதுவே!
கட்டிடம்
அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலீயவர்களின் வழிகாட்டலில் மத்றஸஹ்வை அமைக்க உதவியோரில்
அல்ஹாஜ் மர்ஹும்ALM. இப்றாஹீம் (றஹ்மானிய்யாஸ்) (தலைவர்)
அல்ஹாஜ் மர்ஹும் SM. முஹம்மது காஸிம் (சமதிஸ்டோர்)
அல்ஹாஜ் மர்ஹும் ML. மஹ்மூது லெப்பை (றப்பானிய்யஹ்)
அல்ஹாஜ் மர்ஹும் நூகு லெப்பை (முபாறக்ஸ்)
அல்ஹாஜ் மர்ஹும் யூசுப் லெப்பை
ஆகியோர் முக்கிய நிர்வாகிகளாக செயற்பட்டனர். மாணவர்களின் அதிகரிப்பு அவர்களது சிந்தனையைத் தொட்டது. அதனால் 1950ம் ஆண்டு குர்ஆன் குடிசையாயிருந்த இடத்தில் 80×20 பரப்பைக் கொண்ட உறுதி மிகு கற்கட்டிடம் உதயம் பெற்றது.
புர்தஹ் மஜ்லிஸ்
மாணவர்கள் குர்ஆன் ஓதுவதை மட்டுமல்லாது மௌலிதுகளையும் மார்க்க சட்டங்களையும் திறன்படக் கற்றனர். நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் தொடர்ந்து பயின்று வந்தனர்.
இக்காலை ஒவ்வொரு சனி காலையிலும் இமாம் ஷறபுத்தீன் பூஸிரீ (றஹ்) அவர்களின் “புர்தஹ் ஷரீபஹ்” ஓதப்படும் மஜ்லிஸை ஏற்படுத்தி சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு அத்திவாரமிட்டார்கள். அவர்களே தலைமை தாங்கி மாணவர்களைக் கொண்டு மஜ்லிஸை கௌரவமாக நடத்தினார்கள். மஜ்லிஸ் முடிந்ததும் தபர்றுக், தேநீர் வழங்கினார்கள்.
ஒவ்வொரு சனி காலை மஜ்லிஸுக்கு வரும் மாணவர் ஒவ்வொருவரும் ஐந்து சதம் கொணர்ந்து “புர்தஹ் ஷரீபஹ்” உண்டியலில் போடவேண்டும். இப்பணம் புர்தஹ் ஷரீபஹ் கந்தூரிக்காக செலவிடப்பட ஆவன செய்தார்கள்.
அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ்
திருக்குர்ஆன் ஓதுவதிலும் மௌலித் மற்றும் மார்க்க சட்டம் படிப்பதிலும் ஆர்வத்துடன் மிளிர்ந்த மாணவர்களைக் கண்ட உஸ்தாது நாயகம் அவர்களுக்கு குர்ஆன் கற்று முடித்த மாணவர்களை “கிதாபு” ஓதவைத்து உலமாஉகளாக ஆக்க வேண்டுமென்ற ஆவல் தோன்றியது.
அதனால் ஓதலில் திறன்பெற்ற மாணவர்களை கிதாபு ஓதுவதற்கு தெரிவு செய்தார்கள். மத்றஸஹ்வில் ஒரு பிரிவாக அவர்களை வைத்து காலை, மாலை இரவு வேளையில் கிதாபு ஓதிக் கொடுத்தார்கள். அவர்களிடம் அன்று ஓதிய மாணவர்களே பிற்காலத்தில் சிறந்த உலமாஉகளாகத் திகழ்ந்தார்கள்.
அவர்களில் சங்கைக்குரிய….
மர்ஹும் தாஹிர் ஆலிம்
மர்ஹும் ஷம்சுத்தீன் ஆலிம்
அவர்களின் தவ மைந்தர் ஆரிப்பில்லாஹ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ ஆலிம்
மௌலவீMIM முஸ்தபா பஹ்ஜீ
மௌலவீ MCK முஹம்மத் பஹ்ஜீ
மௌலவீ ILமீரா முஹ்யித்தீன்
மர்ஹும் ஹஸன் மௌலவீ
மௌலவீ  MI அப்துல் கையூம் ஷர்கீ
மௌலவீ  MI அப்துர் றஸ்ஸாக் ஷர்கீ
மர்ஹும் மௌலவீ  அஷ்ஷஹீத் MSMபாறூக் காதிரீ
மௌலவீ ABM முஸ்தபா (சுல்தான்) ஜிப்ரீ
மௌலவீ  MIA ஜப்பார்
மௌலவீ ACA றஊப் பலாஹீ
மௌலவீ அப்துல் அஸீஸ்
ஆகியோரும் வேறு சிலரும் அடங்குவர்.
அவர்களிடம் குர்ஆன் கல்வியை முடித்தபோது எனது தந்தைக்கு ஒரு கடிதம் தந்தார்கள். அதில் என்னை கிதாபு ஓதுவதற்கு தன்னிடம் அனுப்புமாறு என்தந்தை மர்ஹும் அல்ஹாஜ் A. ஹபீபு முஹம்மதை பணித்திருந்தார்கள்.
அதன்படி தந்தையின் விருப்பப்படி கிதாபு ஓதும் பிரிவில் நானும் மாணவனாகச் சேர்ந்தேன். அல்ஹம்துலில்லாஹ். இது என்வாழ்வில் கிடைத்த மாபெரும் பாக்கியம் என்றே இன்று நான் உணர்கின்றேன்.
அன்று அவர்கள் தாபித்துவைத்த அல்மத்றஸதுர் றப்பானிய்யஹ் கிதாபு ஓதும்பிரிவே இன்று அவர்களது தவமைந்தர் ஆரிப்பில்லாஹ் அப்துர்றஊப்மிஸ்பாஹீ அவர்களினால் “அல்ஜாமிஅதுர்றப்பானிய்யஹ்” றப்பானிய்யஹ் வளாகமாக தரமுயர்ந்துள்ளது. அதிலிருந்து இதுவரை 40க்கும் மேற்பட்ட உலமாஉகள் “மௌலவீ பாஸில் றப்பானீ” றப்பானீபட்டம் பெற்ற உலமாஉகளாக உதயமாகி மார்க்கப்பணி செய்துவருகின்றனர்.
( உதிக்கும்……….)
==***==***==***==***==

(தொடர் – 02)

சங்கைக்குரிய மௌலவீ  HMM. இப்றாஹீம் நத்வீ
அதிபர், அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம்
திருப்பத்தூர் நாயகம்
மகான் அவர்கள் நேரடியாகத் தரிசித்த வலீமார்களில் ஒருவர்தான் அதிசங்கைக்குரிய திருப்பத்தூர் வலிய்யுல்லாஹ் அவர்களாகும். இவர்களை தரிசித்த வரலாறு அதிசயமிக்கதாகும். வலீமார்களைத் தரிசிக்க நாடிய அப்துல் ஜவாத் ஆலிம் வலீ அவர்கள் முதலில் மிகப் பிரபல்யம் பெற்றுத் திகழ்ந்த “பல்லாக் வலிய்யுல்லாஹ்” அவர்களின் தரிசனத்தை நாடியே பயணத்தை ஆரம்பித்தார்கள். தனது பயணத்திடையே ஒரு நாள் திருப்பத்தூர் எனும் ஊரில் தங்கிச் செல்ல வேண்டி ஏற்பட்டது.
அன்றிரவு ஒரு பள்ளிவாயலில் தரித்தார்கள். ஒரு கனவு கண்டார்கள். கனவில் ஒரு பெரியார் தோன்றினார். கூர்மையான அமைப்பில் ஒரு தொப்பி அணிந்திருந்தார். வலது கையில் அஸா (கோல்) வைத்திருந்தார். இவர்களைப் பார்த்து….
“யாரைப் பார்க்க வந்தாய்? ஏன் என்னைப் பார்க்க வரவில்லை.”
என்று கோபத்துடன் தனது கையிலிருந்த அஸாவால் அடித்தார்களாம். உடன் அப்துல் ஜவாத் வலீ அவர்களின் கனவு கலைந்தது. பயத்துடன் எழுந்து இருந்தார்கள். 
தான் ஒரு வலிய்யுல்லாஹ்வையே கண்டுள்ளேன். என்று நினைந்தார்கள். அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள்.
சுப்ஹுக்கு முன் குளித்து, தஹஜ்ஜுத் தொழுது, சுப்ஹ் தொழுகைக்காக தயாராகி இருந்தவர்களைக் கண்ட பள்ளிவாயல் முஅத்தின் ஸாஹிப் 
என்னே ஆலிம் சாஹிப்……!
சுப்ஹுக்கு முன் எழுந்துள்ளீர் போல் தெரிகிறது.?
எங்கே செல்லப் போகிறீர்?
என்றுகேட்டார்.
கனவு மழையில் நனைந்திருந்த நமது வலீயவர்கள் முஅத்தினிடம் கண்ட கனவை நவின்றார்கள். 
அதனைக் கேட்ட முஅத்தின் ஸாஹிப், தம்பி, நிச்சயம் நீங்கள் பெரியாரைத்தான் கண்டுள்ளீர். கனவு நல்ல கனவுதான்.
ஆனால், நீங்கள் இங்கிருந்து புறப்படமுன் இங்கு ஒரு இறைநேசர் இருக்கிறார் அவரை தரிசித்த பின் எங்காயினும் செல்லுங்கள் என்றார்.
அப்படியா! இங்கொரு இறைநேசர் வாழ்கின்றார்களா? நீங்கள் சொல்வது போல் நான் அவர்களைத் தரிசித்து செல்கின்றேன். நீங்கள் சொல்வது எனக்கு சரியாகவே தோன்றுகிறது.
அவர்கள் எங்கே இருக்கிறார்கள்.? எவ்வழி சென்று அவர்களை தரிசிக்கலாம்.? என்று வினவார்கள்.
முஅத்தின் சாஹிப் இருக்கும் இடத்தை தெளிவாகவே விளக்கினார். எங்கள் மகான் அவர்களும் அதை சரியாகப் புரிந்து கொண்டார்கள்.
நிஜமான கனவு
பள்ளிவாயலின்முஅத்தின்விபரப்படிஉரியஇடத்தைஅடைந்தார்கள்அப்துல்ஜவாத்வலிய்யுல்லாஹ்.
ஆம், அதுஒருபெரியமாடிவீடு. அவ்வீட்டின் முன்னே பல வாகனங்க ள்நிறுத்தப்பட்டிருந்தன. உள்ளே மக்கள் பக்தியுடன் நுழைந்த வண்ணம் இருந்தனர். அவர்களில் ஒருவராக அப்துல் ஜவாத்நாயகமும் உள்ளே நுழைந்து தாமும் ஓர் இடத்தில் அமர்ந்தார்கள்.
அந்தஹோலில்…..  படித்தவர்களே கூடுதாகக் காணப்பட்டனர்.
நீதிபதிகள், கல்விமான்கள், உலமாஉகள்,செல்வந்தர்கள், பெரியார்கள், பொதுசனங்கள் அனைவரும் கீழே கால் மடித்திருந்தனர். அத்தனைபேரும் மாடியில் இருந்து வருகைதரும் வலிய்யுல்லாஹ் அவர்களையே எதிர்பார்த்திருந்தனர்.
அப்போது வலிய்யுல்லாஹ் அவர்கள் கீழே இறங்கினார்கள். இருந்தவர்கள் எழுந்து நின்று சலாம் சொன்னார்கள். பதில் சொன்னவர்களாக தமது நாற்காலியில் அமர்ந்தார்கள். அனைவரும் அமர்ந்தனர்.
அங்கு வந்திருந்தோரின்எ ண்ணங்களையும், தேவைகளையும் கஷ்பின் மூலம் கண்டு அவை நிறைவேற அல்லாஹ்விடம் “துஆ” பிராத்தனை செய்தார்கள்.
அல்லாஹ்வைப்பற்றிய அறிவு ஞானங்க ளைவழங்கி பேச்சை நிறுத்தினார்கள். பின்னர் சபையோரை விழித்து அவர்கள் அங்கு அமர்ந்திருந்த அப்துல் ஜவாத்நாயகம் அவர்களைச் சுட்டி “தஆல” வாருங்கள் என்று தன்முன்னே அழைத்தார்கள்.
“அமா அறப்தனீ ” என்னை அறிந்தீரா? என்றார்கள்.
“மாஅறப்து” நான் அறியவில்லை. என்றார்கள்.
“அமா அறப்தனீ பீஅய்யில் அவாலிம்” எந்த உலகத்திலாவது என்னை அறிந்தீரா?இந்த வினாவுக்கு அப்துல் ஜவாத்நாயகம் அவர்களால் “இல்லை” என்று சொல்ல முடியவில்லை.
முகத்தைப் பார்த்தார்கள். மீண்டும் பார்த்தார்கள்.
அப்போதுதான் கனவில் கண் டகாட்சி நிஜமாகியது. அதே முகம், அதே தொப்பி, அதே பார்வை, அதே அஸா, அதே குரல், அதே தோற்றம்.
மகான் அப்துல்ஜவாத் அவர்கள் பயத்துடனும் மரியாதையுடனும்
“நஅம் அறப்து.”ஆம், நான் அறிந்தேன். என்று நவின்றார்கள். அப்படியா?
“இஜ்லிஸ்”அமர்க. என்றார்கள். அமர்ந்தார்கள் அப்துல் ஜவாத் நாயகம்.!
வந்தவர்கள் தங்கள் ஹாஜத் நிறைவேறி மரியாதையுடன் விடைபெற்றனர். சிலர் அங்கிருந்தனர்.
அப்துல்ஜவாத் அவர்களுடன் உரையாடிய இறைநேசர், அவர்களை அழைத்து ஒரு குளக்கரையை அடைந்தார்கள். இருவரும் குளித்து முடித்தபோது இருள்மேகம் சூழ்ந்து மழை விரைவில் கொட்டும் போல் இருந்தது.
இருஅற்புதங்கள்.
மழை பொழிவதை அனைவரும் எதிர்பார்த்த போது, குளத்தில் இருந்து வெளியேறிய இறைநேசர்,
மழையே, மறைந்துவிடு.
எங்கள் உடைகள் உலரவேண்டும்.
வெயிலே வெளியாகு,
என்று தமது நனைந்த உடையை உதறிப் போட்டார்கள். என்னே அதிசயம்! திடீரென்று வெயில் வெளித்தது. 
மழைமேகம் எங்கு போனதோ தெரியாது. 
அற்புதத்தைக் கண்டு வாயடைத்து நின்ற எமது மகானை நோக்கி,
அப்துல் ஜவாத், இங்கே வாரும். உடைகள் காயும் வரை இங்கே இருப்போம் என்று இருவரும் ஒரு கற்பாறையில் அமர்ந்தார்கள்.
அப்துல் ஜவாதே, நாம் இருக்கும் இக்கற்பாறையை மேலே உயர்த்துவதற்கும் அல்லாஹ்வுக்கு வல்லமை உண்டு என்று சொன்னவர்கள் கல்லைப் பார்த்து, அல்லாஹ்வின்  குத்றத்தால்
”கல்லே மேலே கிளம்பு” என்றார்களாம்.
உடனே அக்கல் இருவரும் இருக்கமேலே கிளம்பியது. 
அப்துல் ஜவாத் அதிர்ந்தார்கள். வலீ அவர்களின் அற்புதத்தை நேரில் கண்டு பேரின்ப வெள்ளத்தில் துவண்டார்கள்.
மீண்டும் பேசினார்கள்.
அப்துல் ஜவாதே, இக்கல்லை மேலே உயர்த்தியது போல் இதைக்கீழே இறக்கவும் அவனுக்கு வல்லமை உண்டு.
”கல்லே! கீழே இறங்கு”
என்றார்கள்.
உடனே கல்கீழே இறங்கி அது கிடந்த இடத்தில் பஞ்சு மெத்தைபோல் அமர்ந்ததாம்.
எமது மகான் அவர்கள் மாவலீயின் கறாமத் கண்டு இதய ஆனந்தம் கொண்டதுடன் இவ்வரிய பாக்கியம் தமக்கு கிடைத்ததை நினைத்து அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள்.
அத்துடன் இறைவனில் முழுமையாக ”பனா” வாகியிருந்த வலீ அவர்களின் உயர் மகாமையும் கண்டறிந்தார்கள்.
இவர்கள்தான் நேரடி சந்திப்பின்முன், கனவில் காட்சியளித்த கறாமத் கடல் திருப்பத்தூர் வலிய்யுல்லாஹ் ஆவார்கள்.
புனித மஸார்கள் தரிசனம்.
அதே போல் அன்றும் இன்றும் பிரசித்தம் பெற்று விளங்கும் ஆயிரமாயிரம் அற்புதங்களை நிகழ்த்தும் ”அவ்லியாஉல்லாஹ்” இறைநேசர்களான நாஹுர் ஷரீபில் கொழுவீற்றிருந்து ஆட்சிபுரியும் காரணக் கடல் மகான் குத்புல் மஜீத் ஷாஹுல் ஹமீது பாதுஷாஹ் நாயகம், முத்துப்பேட்டை ஷெய்குத் தவாஹகீம் ஷெய்குதாஊத் வலீநாயகம், திருச்சி தப்லேஆல ம்நத்ஹர் வலீநாயகம், ஏர்வாடி ஏந்தல் இப்றாஹீம் ஷஹீத் நாயகம், பாப்பாவூர் ஷெய்கு அலாஉத்தீன் நாயகம், பாசிப்பட்டணம் நெய்னார் முஹம்மது வலீநாயகம் போன்ற நாதாக்கள் வாசம் செய்யும் உயர் மஸார்களையும் (தர்காக்கள்) தரிசித்து பேரருள் பெற்றார்கள்.
ஆன்மீக ஆசை.
இறைநேசர்களின் நேரடி சந்திப்பும் அவர்களிடம்தான் பெற்ற உபதேசங்களும் அவ்லியாஉகளில் தான் கண்ட அற்புதங்களும் அவர்களது இதயத்தில் ஆன்மீக ஆசையை அதிகரிக்கச் செய்தது.
அதனால் ஒரு ஆலிமுக்குத் தேவையான கலைகளை கற்று முடித்தபின் ஆன்மீக வெளிச்சத்தைத் தேடி ”தஸவ்வுப்” எனும் ஸுபிஸக்கலையைக்  கற்க ஆவல் கொண்டார்கள்.
அக்கலையை தமது மத்றஸஹ் உஸ்தாதுமார்களிடமும் குறிப்பாக அதிசங்கைமிகு மாவலீ அப்துல் கரீம் ஹழ்றத் உஸ்தாத் அவர்களிடமும் அக்கலையில் திறன்மிக்க இறை ஞானிகளிடமும் சென்று உரிய முறையில் பயின்றார்கள்.
”அல்இன்சானுல் காமில், புதூஹாதுல் மக்கிய்யஹ், புஸுஸுல் ஹிகம், போன்ற நூல்களை பல சிரமங்களிடயே கற்றுத் தேர்ந்தார்கள். அதில் தமக்கு விளங்காத பாபுகளை உஸ்தாது மார்களின் மூலம் புரிந்தார்கள். தொடரான ”முதாலஅஹ்” மீட்டல் மூலம் சிக்கல்களை தவிர்த்தார்கள்.
தான் மத்ரஸாக்களில் கற்ற அறிவும், உஸ்தாதுமார்களின் வழிகாட்டலும் அவ்லியாஉகளின் தரிசனமும் உபதேசங்களும், நிறைவில் கற்ற ஆன்மீக நூற்களின் ஞான ரத்தினங்களும் அவர்களை ஆன்மீகத் துறையிலும் அறிவுத்துறையிலும் இமயமாக ஆக்கியது. இறைவனின் கொடையால் தமக்குக் கிடைத்து பேரருளைநினைந்து அவனைப் புகழ்ந்தார்கள்.
தாயகம் திரும்புதல்.
‘கற்றது கையளவு, கல்லாதது உலகளவு‘ என்பதை அறிந்திருந்தும் தற்போதய சூழலில் இறைவன் தனக்குத் தந்தது போதும் என்பதாலும் இந்தியா வந்து பல வருடங்கள் ஆகிவிட்டதாலும் தனது இருபதாவது வயதில் உஸ்தாதுமார்களிடம் விடைபெற்று தாயகம் திரும்பினார்கள்.
அப்துல் ஜவாதாகச் சென்ற தம்மைந்தர் அப்துல் ஜவாத் ஆலிமாக மலர்ந்தது கண்டு தந்தை அலியார் ஆலிம் அவர்களும் அன்னை மூஸா உம்மாவும் இதயம் மகிழ்ந்து தம்மைந்தரின் நல்வாழ்வுக்கு துஆ செய்தார்கள்.
குடும்பங்கள் சூழ்ந்தன. நண்பர்கள் சந்தித்தனர்.உலமாஉகள் வந்தனர். அவர்களுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.
தமது மைந்தன் ‘ஆலிம்‘ பட்டம் பெற்று வந்ததை முன்னிட்டு தந்தைஅலியார்ஆலிம் அவர்கள் அனைவருக்கும் விருந்தளித்து கௌரவித்தார்கள். சில பள்ளிவாயல்களில் ஹதீஸ் பேருரைகளும் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.
அன்னையின் வபாத்.
அல்லாஹ்வின் அருளால்தான் வயிற்றில் சுமந்து பாதுகாத்துப் பெற்றெடுத்த விலைமதிப்பற்ற முத்தின் அறிவுப் பிரகாசத்தைக் கண்டு நிம்மதி அடைந்தார். தான் சுகயீனமாகும் போதெல்லாம் தன்பிள்ளை வரமாட்டாரா? எப்போது வருவார் என்று எதிர்பார்த்திருந்த அன்னைமூஸாஉம்மாவுக்கு தன்பிள்ளையைக் கண்டது, அதை ஆலிமாகக் கண்டது இனி மௌத்தாயினும் பராவாயில்லை என்றாகிவிட்டது. அதேபோல் அல்லாஹ்வின் நாட்டப்படி மகனைக் கண்டு மூன்று மாதத்துள் அன்னை மூஸாஉம்மா இவ்வுலகை விட்டும் மெய்யுலகையடைந்து சொர்க்கம் சேர்ந்தார்கள்.
திருமணம்.
சங்கைக்குரிய அப்துல்ஜவாத் ஆலிம் அவர்கள் திருமண வயதையடைந்த இளைஞனாக இருந்தார்கள். பலர் அவர்களைத் திருமணம் கேட்டுவந்தனர்.
இறுதியாக தந்தையின் விருப்பப்படி
அல்ஹாஜ் அலியார் ஆலிம் மர்ஹுமத் மூஸாஉம்மா இருவரின்
ஆன்மீக வள்ளல்
A. அப்துல் ஜவாத்ஆலிம் மணவரசருக்கும்,
வாப்புலெப்பை கதீஜாஉம்மாவின் அருட்செல்வி
V. ஸுஹறா உம்மா மணவரசிக்கும்
இறையருளால் இனிதே திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது
இளவல் அப்துல்ஜவாத் ஆலிம் 21 வயதையும் இறையருட் செல்வி ஸுஹறா உம்மா 09 வயதையும் அடைந்திருந்தனர்.
குடும்பவாழ்க்கை.
இருவரின் இல்லறவாழ்வும் இனிது சுகந்தது. மனைவி பெரிதாக மார்க்கம் கற்காதவராயினும் மார்க்க ஞானம் கற்ற தனது கணவரின் இறைபக்தியும் மார்க்கப்பற்றும் நடைமுறை வாழ்வும் அவர்களைக் கவர்ந்தன. அவர்களது இதயத்தில் மார்க்க ஒளி தோன்றியது. கணவனின் சொல்லே மேலென காலடியில் கிடந்தார்கள்.
மனமொருமித்து வாழ்க்கை ஓடியதாயினும் வறுமைப்பிடி அவர்களை ஆட்கொண்டது.
அல்லாஹ்வின் நாட்டப்படியே எல்லாம் நடக்கும் என்பதில் திடவுறுதிகொண்டிருந்த அப்துல்ஜவாத் வலிகள் தம்மில் சூழ்ந்துள்ள வறுமையை அல்லாஹ்வின் பரீட்சை என்றே கருதினார்கள். பொறுமையுடன் இன்பம் கண்டார்கள். 
”அல்பக்றுபக்ரீ” ‘வறுமை எனது பெருமை‘ என்ற நபி மொழிக்கொப்ப ஆன்மீகவானில் நீந்தினார்கள்.
கற்பித்தல்.
தான்கற்ற கல்வியை பிறருக்குப் போதிப்பதே தன்கடன் எனகருதி இலௌகிக தொழிலில் ஈடுபடாமல் குர்ஆன், மற்றும் மார்க்கக் கல்வியைக் கற்பிப்பதில் கவனம் செலுத்தினார்கள். அதற்கேற்ப காத்தான்குடி -04ல் அமைந்திருந்த (இன்று, ”அல்மவ்ஹிபதுஸ் ஸமதானிய்யா என்று அழைக்கப்படுகின்ற) குர்ஆன் மத்றஸஹ்வில் குர்ஆன்ஓதிக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டார்கள்.
(தொடரும்……)
==***==***==***==***==





தொடர்- 01…

சங்கைக்குரிய மௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ
அதிபர் –  அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக்கலாபீடம்
நான்,
அலிபெனும் அட்சரம் அறியாப்பருவம்
அன்னையோயென்னையழைத்தே வந்து
புலியெனக்கல்வியில் பெயர்தனைப் பெற்ற
பேரொளி உஸ்தாத் முன்னிலைநின்றாள்!
யார்?
அலியார் பேரனா….. ஹபீபின் மகனா…..
அழைத்தெனையனைத்து அறிவொளி தந்த
ஆலிமுல் இர்பான் ஆன்மீக ஜோதியை
அடியேன் வாழ்வில் என்றுதான் மறப்பேனோ!
நத்வீ
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்ரஹீம்
அதிசங்கைக்குரிய ஆரிபுபில்லாஹ் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் அவர்களின் ஆன்மீக சுகந்தத்தை சுவாசிக்குமுன் அவர்கள் பிறந்துமறைந்துள்ள “காத்தான்குடி” நகர் பற்றி சில தகவல்களை வரைகின்றேன்.
காத்தான்குடி
இலங்கையின் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்கே ஐந்து கிலோமீற்றர் துரத்தில் அமைந்துள்ள கண்கவர் நகர்தான் காத்தான்குடி! இதன் பரப்பளவு 06.503 ச.கி.மீற்றராகும்.
அதன் பிரதான வீதி அறபு மண்ணை நினைவூட்டுகிறது. வீதியின் நடுவே ஈச்ச மரங்கள் நடப்பட்டுள்ளன. மின்விளக்குகள் இரவில் நகரை இலங்கச் செய்கின்றன. பகலில் பிரயாணம் செய்வோர் நகரை கண்டு வியப்பதைப் போல் இரவில் செல்வோர் அதன் அழகில் சொக்கி விடுகின்றனர். 
அதனிரு வாயல்களும் இஸ்லாமிய வரலாற்றை அடிப்படையாகக் கொண்டும் முஸ்லிம்களின் தனித்துவத்தை பிரதிபலிக்கும் அமைப்பிலும் அமைந்துள்ளன. உள்ளே நுழையும் ஒரு பிரயாணி எல்லையை தாண்டும் வரை அறபு நாடொன்றில் பயணிக்கும் உணர்வையே பெறுகிறார்.
(இப்பாரிய மெயின் வீதி சேவை பிரதி அமைச்சர் அல்ஹாஜ் MLAM ஹிஸ்புல்லாஹ் (MA MP) அவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டது.) செயற்கை அழகூட்டலால் மிளிரும் இந்நகர் இயற்கை வளங்களும் அழகும் கொண்டது. 
(கிழக்கே சமுத்திரமும் மேற்கே மாநதியும் இந்நகரைச் சூழ்ந்திருப்பது இந்நகரின் தனிச்சிறப்புக்கு சீர்சான்றாகும்.. 2011 சனத்தொகை கணிப்பின்படி 47602மக்கள் வாழ்கின்றனர் .
முஸ்லிம்கள் என்றால் காத்தான்குடி, காத்தான்குடி என்றால் முஸ்லிம்கள் என்று சொல்லுமளவு ஆதிகாலத்திலிருந்து முஸ்லிம்கள் மட்டுமே இங்கு வாழ்ந்து வருகின்றனர். 
நில ஆய்வாளர்கள் ஆழியும் நதியும் சுழ்ந்த இந்நகரை “முஸ்லிம் தீவு” என்றும் சொல்கின்றனர். இதன் அரு எல்லையிலும் தமிழ் சகோதரர்களே நிறைந்து வாழ்கின்றனர். தினமும் ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் சகோதரர்கள் காத்தான்குடிக்குள் கூலி வேலைகள் செய்து வருவதுடன், சந்தை மற்றும் தெருக்களில் வியாபாரமும் செய்து வருகின்றனர். 
பயங்கரவாத காலத்தில் தமிழ், முஸ்லிம் கலவரம் ஏற்பட்டது உண்மையாயினும் ஆதி காலம் முதல் இரு சமூகத்தினரும் பிட்டும் தேங்காய்ப்பூ போன்றுமே வாழ்ந்து வருகின்றனர். 
காலையில் வேலைக்கு வரும் தொழிலாளர்கள் மாலைக்குள்தங்கள் ஊர்களுக்கு போய்விடுவர். ஆதி காலத்திலிருந்தே எம்மூர் வர்த்தகத்துறையில் பெயர் பெற்றே வந்துள்ளது. சீமை என்றும் அழைக்கப்பட்டுள்ளது. இதனையே பின்வரும் நாட்டார் பாடல் மெய்ப்பிக்கின்றது. 
சீமைக்குப் போறமச்சான்,
அங்க சீத்தரெண்டு முழம் வாங்கிவாங்க!
என்று!
இன்று கூட இங்கு கொழும்பு விலைக்குப் பொருட்களைப் பெற்று கொள்ள முடியும் என்று கருதப்படுகிறது. இலங்கையிலுள்ள நகரங்களுக்கு எம் நகர் ஒரு முன்மாதிரி என்று பேசப்படுகின்றது. 
மார்க்க, பொது விடயங்களில் எம்மூரை இன்று வரை பின்பற்றும் முஸ்லிம் ஊர்கள் இலங்கையிலெத்தனையோ! ஜும்அஹ் பள்ளிகள், சிறு பள்ளிகள், அரச, தனியார் பாடசாலைகள், தேசிய பாடசாலைகள், அறபுக்கலாபீடங்கள், குர்ஆன் மத்ரசாக்கள், தபாலகங்கள், அரச, தனியார் வைத்தியசாலைகள், அரச, தனியார் வங்கிகள், பிரதேச செயலகம், நகரசபை, பெரும் கடைகள், வியாபாரத் தளங்கள், நூலகங்கள், இயற்கை வளங்கள் போன்ற ஒரு மாநகரத்தில் உள்வாங்கப்படும் அத்தனையும் இங்குள்ளன. பெயரில் நகர சபையாயினும் ஒரு மாநகரில் காணப்படாத அம்சங்களும் இங்குள்ளன.
சுருங்கச் சொன்னால் அதிபர், ஆசிரியர், பட்டதாரிகள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள், வைத்தியர், சட்டதரணிகள், நீதிபதிகள், பொறியியலாலர்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், படித்தவர், பாமரர், ஹாஜிமார்கள், ஹாபிழ்கள், கல்விமான்கள், போனறோரைக்கொண்டு இவ்வூர் சிறந்தாலும் சன்மார்க்க அறிவைக் கற்ற சங்கைக்குரிய உலமாஉகளைக் கொண்டே இவ் ஊர் பெயரும் பிரபல்யமும் பெற்று வந்துள்ளது. 
இலங்கையில் அன்று முதல் இன்று வரை உலமாஉகள் கூடிய ஒரே நகர் காத்த நகரேயாகும். “வஹ்த்துல் வுஜுத்” கொள்கையை பேசியதற்காக மௌலவீ, அல்ஹாஜ் A அப்துர் ரஊப் மிஸ்பாஹீ அவர்களுக்கும் அவர்களது கருத்தை ஏற்ற பல்லாயிரம் முஸ்லிம்களுக்கும் “முர்தத்” பத்வா வழங்கப்பட்டதும், பின்பு ஒரு உடன் பாட்டின் படி அது மீளப்பெறப்பட்டதும் இந்நகரிலேயாகும்.
.சங்கை உலமாஉகளும் சுன்னத் வல்ஜமாஅத் கொள்கை கொண்ட இந் நகரில் ஆதிகாலம் முதல் இறைநேசர்களான வலீமார்களும், கிதாபுகள், மவாலித்களை அறபு மொழியில் ஆய்ந்தெழுதிய தகுதி வாய்ந்த உலமாஉகளும் வாழ்ந்துள்ளனர்.
வெளிஊர், வெளிநாடுகளிலிருந்து “அஹ்லு பைதின் நபீ” நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் பரம்பரை வந்த சாதாத்மார்களான மௌலானாமார்களும், ஷெய்குமார்களும் இங்கு வந்து வாழ்ந்தும் இங்கேயே சிலர் இறையடி சேந்துமுள்ளனர். அவர்களின் அருள் பறக்கத்தையும் எம் நகர் பெற்றுள்ளது. 
அவர்களின் புனித கப்றுகளில் பல இன்றுமுள்ளன சில 2004ல் நடந்த மார்க்க அனர்தத்தின் போது உடைக்கப்பட்டு எரிக்கப்பட்டன. அவற்றுள் மிக முக்கியமானதே காத்தான்குடி 02ல் அமைந்திருந்த மௌலானா கபுறடி, குழந்தம்மா கபுறடி என்று ஆதிமுதல் பல்லூர் மக்களாலும் அழைக்கப்பட்டு ஸியாறத் செய்யப்பட்டும் வந்த அதிசங்கைக்குரிய அப்துல் காதிர் மௌலானா வாப்பா அவர்களும், குடும்பமும் நல்லடக்கம் செய்யப்பட்டிருந்த புனித மௌலானா கபுறடி தர்கா ஷரீப் ஆகும். 
அதேபோல் காத்தான்குடி 06ல் அமைந்துள்ள ஒரு நுறு ஆண்டைக் கடந்த அதிசங்கைக்குரிய அஸ்ஸெய்யித் முஹ்ஸின் மௌலானா அவர்களின் புனித தர்கா ஷரீபுமாகும். 
மார்க்க நிலை
பொதுவாக நோக்குமிடத்து காத்தான்குடியில் அன்று முதல் இன்று வரை அதிக உலமாஉகள் சுன்னத்வல் ஜமாஅத் கொள்கையுடையோராகவும், பொது மக்களில் தொண்ணுரு வீதமானோர் சுன்னிகளான உலமாஉகளைப் பின்பற்றியே மார்கக் கடமைகளைச் செய்தும் வருகின்றனர். 
இப்னு அப்தில் வஹ்ஹாப், இப்னு தைமிய்யஹ் போன்றாரின் வஹ்ஹாபியக் கொள்கையில் செல்வோர் இங்கு உள்ளனராயினும் எமது ஊரைப் பொறுத்து அவர்கள் சிறு கூட்டமேயாவர் இவர்கள் 2000 ஆண்டின் பின்னே இங்கு தோன்றினர்.
99 வருடங்களுக்கு மேலாக ஜும்அஹ் பள்ளிவாயல்களில் ஒவ்வொரு றஜப் மாதமும் புனித ஸஹீஹுல் புஹாரி ஷரீப், புனித முஸ்லிம் ஹதீஸ் கிதாபுகள் ஓதப்படும் ஊரும் எமது மாண்பு மிகுநகரேயாகும்.
அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலீ அவர்களின் அவதாரம்
காத்தன்குடியில் அது பொற்காலம். சன்மார்க்கத்தை கற்றறிந்த உலமாஉகளே நிறைந்த காலம் அவர்களின் வழிகாட்டலிலேயே ஊர்மக்கள் வாழ்ந்து வந்தனர். 
“வஹ்ஹாபிஸம்” என்பதை என்னவென்றே அறியாத மக்கள் இருந்தனர். உலமாஉகளும் பாமரர்களும் படித்தவரும் சுன்னத் வல்ஜமாஅத் நெறியிலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்தும் வந்தனர். 
பாத்திஹா, மௌலித், புர்தஹ், மீலாதுன் நபீ கொண்டாட்டம், அவ்லியாக்களின் நினைவு தின மஜ்லிஸ்கள், இருபது றக் அத் தறாவீஹ் தொழுகை, மரணித்தவர்களுக்கு தல்கீன், கத்ம், குர்ஆன் ஓதுதல், கந்தூரிகள் கொடுத்தல், ஜும்அஹ் பள்ளிகளில் புனித புஹாரி ஷரீப், முஸ்லிம் ஷரீப் ஓதுதல் போன்ற இஸ்லாத்தின் அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத்கொள்கையிலும், கிரியைகளிலும் மக்கள் சன்மார்க்க வழி நடந்தனர். அவ்லியாஉகளையும் ஸாதாத்மார்கள், ஷெய்ஹு மார்களையும் மக்கள் ஏகமாக கண்ணியப்படுத்தி கௌரவித்தும் வாழ்ந்தனர்.
கண்ணியமிக்க உலமாக்களே ஊரின் முக்கியஸ்தர்களாகவும் வழிகாட்டிகளாகவும் கருதப்பட்டு அவர்கள் மீது மக்கள் நம்பிக்கையும் பெரும் மதிப்பும் கொண்டிருந்தனர். இக்காலைதான் 05.02.1908ம் ஆண்டு காத்தான்குடி 06ம் குறிச்சியில் அல்ஹாஜ் அலியார் ஆலிம் அவர்களுக்கும் மூஸா உம்மா இருவருக்கும் இடையே ஆண் குழந்தை ஒன்று அவதரித்தது. அது ஆன்மீக ரோஜாவாகி மணம் கமழ்ந்தது.
அவர்களின் அன்புச் செல்வத்துக்கு “அப்துல் ஜவாத்” “வள்ளலின் அடிமை” என்று பெயரிட்டனர். இவ்வருட்கொடையே பிற்காலத்தில் “ஆரிப் பில்லாஹ்” அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் அவர்களாக திகழ்ந்தது.
பெற்றோர்
அப்துல் ஜவாத் வலீ அவர்களின் அன்னை மூஸா உம்மா அவர்கள் காத்தான்குடியை பிறப்பிடமாக கொண்டவராயினும் அவர்களின் தந்தை அல்ஹாஜ் அலியார் ஆலிம் அவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் “நாகூர்ஆலிம்” என்றும் மக்களால் அழைக்கப்பட்டனர். இவர்களது குடும்பப் பரம்பரை துருக்கியிலிருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் என்றும் அதனாற்தான் அவர்களது குடும்பத்தவர்களுடைய மூக்குசற்று பெரியதாக இருப்பதாகவும், அப்துல்ஜவாத்வலீ அவர்கள் தந்தை வழியில் ஆறாவது தலைமுறை ஆலிமாக வந்தவர்கள் என்றும் அவர்களின் அருந்தவப்புதல்வர், கிழக்கில் உதித்தஞான ஒளி, ஈழத்தின் சொற்கொண்டல், ஷம்சுல் உலமா அல்ஹாஜ் அப்துர்ரஊப் மிஸ்பாஹீ அவர்கள் ஏழாவது தலைமுறையில் ஆலிமாக தோன்றியவர்கள் என்றும் எழுவரும் ஆலிம்கள் என்றும் அவர்களது வரலாறு ஓதப்படுகின்றது.
சேய்கள்
சங்கை அலியார் ஆலிம் அவர்களுக்கு மூன்று ஆண் குழவிகளும் இரு பெண்களும் மலர்ந்தனர். அனைவரும் தற்போது இறையடி சேர்ந்து விட்டனர். 
முதலாமவர்- காத்தான்குடி பரீனாஸ் ஹாஜியின் மாமனார் முஹம்மது ஹனீபா அவர்கள்
இரண்டாமவர்- இந்நூல்லின் நாயகர் ஆரிப்பில்லாஹ் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் அவர்கள் 
மூன்றாமவர்- சின்னத்தம்பி என்று அழைக்கப்பட்ட அப்துல் குத்தூஸ் அவர்கள். இவர் SSE வரை படித்தவர்.
நான்காமவர்- அவ்வாபிள்ளை 
ஐந்தாமவர்- நபீஸா உம்மா
ஆரம்பக் கல்வி
நாளொரு வண்ணம் ஆன்மீக மணம் கமழ வளர்ந்த அப்துல் ஜவாத் மகான் அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை தந்தை அலியார் ஆலிம் அவர்களிடமே கற்றார்கள். 
சிறு வயதிலேயே அல்குர்ஆனை ஓதி முடித்த அவர்களின் கல்வி நிலையையும், ஒழுக்க நெறியையும் இறை பக்தியையும் கண்ட தந்தை, அவர்களை சன்மார்க்க நெறியை கற்ற ஒரு ஆலிமாக ஆக்க வேண்டுமென்று பேராவல் கொண்டார்கள்.
அதன்படி அக்காலை இலங்கையின் காலியிலுள்ள அறபுக் கல்லூரி ஒன்றில் அவர்களை சேர்த்து வைத்தார்கள். அங்கே சில வருடங்கள் அறபு மொழியில் சன்மார்க்க அறிவை கற்ற மைந்தரை இந்தியாவுக்கு அனுப்பி அங்குள்ள அறபு மத்றசாக்களில் கல்வி கற்பிக்க தந்தை அலியார் ஆலிம் அவர்கள் ஆவல் கொண்டார்கள்.
உயர் கல்வி 
அல்லாஹ்வின் நாட்டப் படியும், தந்தையின் விருப்பப் படியும் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் வலீ அவர்கள் இந்தியாவின் தமிழ் நாட்டிலுள்ள காயல் பட்டணத்து அறபுக் கல்லூரி ஒன்றில் மாணவனாக மலர்ந்தார்கள்.
வறுமையும், பொறுமையும் 
ஏழ்மைக் குடும்பத்தில் மலர்ந்த வலீ அவர்கள் காயல் நகரில் கல்வி கற்கையில் வறுமை அவர்களை ஆட்கொண்டது. மற்ற மாணவர்களைப் போல் இவர்களிடம் பணமோ, உடைகளோ இருக்கவில்லை. வேளைக்கு உணவு கிடைப்பதே அரிதானது. வறுமையின் உச்ச நிலையில் வாழ்ந்த மகான் அவர்கள் பொறுமையின் இமயத்தில் நின்று மறுமைக்கான மார்க்க அறிவை கற்றார்கள். 
கடை வர்த்தகரின் காருண்யப் பார்வை 
ஒரு நாள் மகான் அவர்கள் கடை வீதியில் செல்கையில் அங்கிருந்த ஒரு வர்த்தகர் மகான் அவர்களை அழைத்து, 
கிழிந்து நூல் தொங்கும் சாரத்தை அணிந்துள்ளீரே, உம்மிடம் வேறு சாரம் இல்லையா? நீ எந்த ஊர்? என்று கேட்டார். 
அதற்கு மகான், 
என்னிடம் வேறு சாரம் இல்லை. நான் இலங்கையைச் சேர்ந்தவன். இல்மு படிப்பதற்காக இங்கு வந்துள்ளேன். என்று நவின்றார்கள்.
அதைக்கேட்ட வர்த்தகனுக்கு இதயம் நெகிழ்ந்தது. அவர்களுக்கு மூன்று சாரம்களைக் கொடுத்தான். 
புதக்குடியும் அப்துல்கரீம் ஹழ்றத்தும்
அங்கு மார்க்கக் கல்வியை பயின்ற மகானுக்கு தமிழ் நாட்டிலுள்ள அதிசங்கைக்குரிய ஷெய்ஹுல்காமில் அப்துல்கரீம் வலிய்யுல்லாஹ் பற்றியும் அவர்களின் புதக்குடி அந்நூறுல் முஹம்மதீ மத்றஸா பற்றியும் சொல்லப்பட்டது.
அங்ஙனம் மகான் அவர்களுக்கு புதக்குடி சென்று இறைநேசர் அப்துல்கரீம் ஹழ்றத்திடம் ஓதும் ஆசையும் ஏற்பட்டது.
அதனால் காயல்பட்டணத்தை விட்டும் புதக்குடியை நோக்கி பயணம் செய்து அப்துல்கரீம் ஹழ்றத்தின் மத்றஸாவை அடைந்தார்கள்.
அங்குமார்க்க அறிவை பெருவிருப்புடன் கற்றுத் தேர்ந்து அறபுமொழியிலான கலைகளில் பாண்டித்தியம் பெற்றார்கள்.
அப்துல்கரீம் ஹழ்றத் அவர்கள் அக்காலை இந்தியா எங்கும் புகழ்பெற்றமார்க்க அறிஞராக திகழ்ந்ததுடன் ஸுபிஸகலையில் சிறந்தும் விளங்கினார்கள்.
அவர்களிடம் ஜின்களும் வந்து கல்வி கற்றுச் சென்றனர். அவர்கள் ஜின்களுக்கும் உஸ்தாதாகத் திகழ்தார்கள்.
இவர்களிடமே காதிரிய்யஹ் தரீகாஹ்வின் சங்கைமிகு ஷெய்ஹுமார்களான அல்ஹாஜ் மௌலானா மௌலவீ அல்வலிய்யுல்காமில் அஷ்ஷெய்ஹ் அப்துல்காதிர் ஸுபிஹழ்றத் நாயகம் அவர்களும், அல்ஹாஜ் மௌலானா மௌலவீ அல்வலிய்யுல்வாஸில் அஹ்மத்மீரான் வெள்ளி ஆலிம் நாயகம் அவர்களும் கல்விகற்றனர்.
இவ்விரு ஞான மேதைகளும் அப்துல்கரீம் ஹழ்றத் அவர்களிடம் கல்விகற்கும் போதே ஹைதறாபாதைச் சேர்ந்த காதிரிய்யஹ்திருச்சபையின் சற்குருவும் சுல்தானுல்வாயிழீனும் றயீஸுல்மஜாதீபுமான அஷ்ஷெய்ஹுல் காமில் அப்துல்காதிர் அஸ்ஸுபி, ஹைதறாபாதீ நாயகம் அவர்கள் வந்து இவ்விருவரும் ஓதிமுடித்தபின் அவர்களி ன்பணிப்பின்படி ஹைதறாபாத் சென்றுஅவர்களிடம் அல்லாஹ்வைப்பற்றிஇல்மைச் சம்பூரணமாகக்கற்று இருவரும் அவர்களிடம் ”பைஅத்” ஞானதீட்சையும்பெற்று அவர்களின் கலீபாக்களாக இருவரும் நாடு திரும்பியதும். இங்கு குறிப்பிடத்தக்கததாகும்.
ஆரிப்பில்லாஹ் அப்துல்ஜவாத்ஆலிம் அவர்கள் ஹழ்றத் அப்துல்கரீம் நாயகம் அவர்களிடம் கல்வி பயின்றகாலத்தில் இந்தியாவில் ஹயாத்துடன் வாழ்ந்து அற்புதங்கள் நிகழ்த்திய அவ்லியாஉகளிடம் சென்று அவர்களின் தரிசனங்களையும் நல்லாசிகளையும் பெற்றார்கள்.
(ஜொலிக்கும்……)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments