Saturday, April 20, 2024
Homeஎழுத்தாக்கங்கள்அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றான்!? இரவின் பிற்பகுதியில் முன்வானத்திற்கு இறங்குகின்றான்!?

அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றான்!? இரவின் பிற்பகுதியில் முன்வானத்திற்கு இறங்குகின்றான்!?

மீலாதுன் நபீ ஆன்மீகப் பரிசு

தொகுப்பு
மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப்
மிஸ்பாஹீ, பஹ்ஜீ

“அல்லாஹ் “அர்ஷில்” சரிசமமாக அமர்ந்துள்ளான்” என்று சிலரும், அவன் தூண் துரும்பு உள்ளிட்ட அனைத்து சிருஷ்டிகளிலும் இருக்கின்றான் என்று வேறு சிலரும், அவன் எல்லாமாயும் இருக்கின்றான் என்று இன்னும் பலரும் கூறி வருகின்றார்கள்.
மேற்கண்ட மூன்று வகை நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் “லாயிலாஹ இல்லல்லாஹ்” என்ற திருக்கலிமாவை சொன்னவர்களேயாவர்.

வாதம் 1 : 
அல்லாஹ் “அர்ஷ்” என்ற (சிம்மாசனத்தில், கதிரையில்) அமர்ந்துள்ளான்.
வாதம் 2 : 
அல்லாஹ் தூண் துரும்பு உள்ளிட்ட எல்லாப் படைப்புக்களிலும் இருக்கின்றான்.
வாதம் 3 :
அல்லாஹ் தூண் துரும்பு உள்ளிட்ட எல்லாப் படைப்புக்களாகவும் உள்ளான்.
வாதம் 4 : 
அவன் தினமும் இரவின் பிற்பகுதியில் முன்வானத்திற்கு இறங்குகின்றான்.
வாதம் 1 
“அல்லாஹ் “அர்ஷில்” சரிசமமாக அமர்ந்துள்ளான்” என்ற கருத்தை தருகின்ற திருவசனங்கள் திருக்குர்ஆனின் ஏழு இடங்களில் வந்துள்ளன.
1) அஃறாப் – 54
2) யூனுஸ் – 03
3) றஃது – 02
4) புர்கான் – 59
5) ஸஜதா – 04
6) ஹதீத் – 04
7) தாஹா – 05
இவற்றில் “தாஹா” அத்தியாயத்தில் மட்டுமே الرحمن على العرش استوى என்று வந்துள்ளது. ஏனைய அத்தியாயங்களில் ثم استوى على العرش  என்று “றஹ்மான்” என்ற சொல் இல்லாமல் வந்துள்ளது.
அல்லாஹ் அர்ஷ் என்ற இடத்தில் – சிம்மாசனத்தில் அல்லது கதிரையில் சரி சமமாக அமர்ந்துள்ளான். இவ்வாறு வாதிடுவோர் இப்னு தைமிய்யா, இப்னு அப்தில் வஹ்ஹாப் ஆகியோரை “அகீதா” கொள்கையில் பின்பற்றினவர்களேயாவர். உலகில் வாழும் “ஸுன்னீ”கள் இவர்களை வஹ்ஹாபிகள் என்று அழைப்பர். அதோடு இவர்களைச் சரிகாணவும் மாட்டார்கள்.
இவ்விருவரின் கொள்கைவழி வந்த அனைவரும், மற்றும் இவர்களிடம் வளர்ந்த தம்பிமார்களும் “அல்லாஹ் அர்ஷில் அமர்ந்துள்ளான்” என்ற கொள்கையுடையவர்களேயாவர்.
இவர்கள் தலை நீட்டிய பிறகுதான் பொது மக்களிற் பலரினதும், உலமாஉகளிற் சிலரினதும் “ஈமான்” விசுவாசம் கெட்டுப் போனதென்று கூறலாம்.
அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றான் என்று இது காலவரை அடித்துச் சொல்லி வந்த தம்பிமார் அண்மைக் காலம் முதல் “அல்லாஹ் அர்ஷுக்கு அப்பால் உள்ளான்” என்று சொல்லி வருகின்றார்கள். சொல்லத் துடங்கியுள்ளார்கள். இதற்கான காரணம் எதுவென்று நான் கூறாமலேயே வாசகர்கள் விளங்கிக் கொள்வார்கள்.
இந்தத் தம்பிமார் அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றான் என்ற தமது வாதத்தை சரியென்று நிறுவ பல ஆதாரங்கள் கூறுகின்றார்கள். அவற்றில் மிகப் பிரதான ஆதாரத்தை மட்டும் இங்கு கூறி அதற்கான ஆட்சேபனைகளையும், விளக்கங்களையும் எழுதுகின்றேன். அவர்கள் கூறும் ஏனைய ஆதாரங்களையும் தேவைக்கேற்ப எழுதி மறுப்பும் எழுதுவோம். இன்ஷா அல்லாஹ்.
அவர்களின் பிரதான ஆதாரம் பின்வருமாறு :
الرحمن على العرش استوى “அல்லாஹ் அர்ஷில் அமர்ந்துள்ளான்” – இருக்கின்றான் என்பதாகும். 
இவர்களின் இக்கூற்று சரியானதா? இல்லையா? என்பதையும், இக்கூற்றின் பின்னணியிலுள்ள ஆட்சேபனைகளையும் ஆய்வு செய்வோம்.
“அல்லாஹ் அர்ஷில் அமர்ந்துள்ளான்” என்ற கருத்தைக் கருவாகக் கொண்டு செய்த ஆய்வில் ஏற்பட்ட ஆறு ஆட்சேபனைகளையும், அவற்றுக்கான விளக்கத்தையும் இங்கு கவனிப்போம்.
ஒன்று – அல்லாஹ் அர்ஷில் அமர்ந்துள்ளான் என்போர் அல்லாஹ்வுக்கு குறித்த ஓர் இடத்தை தரிபடுத்துகின்றார்கள். அவனுக்கு குறித்த ஓர் இடம் உண்டு என்று நம்புகின்றார்கள். இது தவறான கொள்கை. ஏனெனில் அல்லாஹ் சிருஷ்டிக்கு – படைப்புக்கு எல்லா வகையிலும் மாறானவன் என்பதே இஸ்லாமின் “அகீதா” கொள்கை. مخالفة للحوادث சிருஷ்டிகளுக்கு மாறானவன் என்பது அவனின் “வாஜிப்” ஆன அவனில் கட்டாயம் இருக்க வேண்டிய “ஸிபத்” பண்பாகும். இது “வாஜிப்” ஆன “ஸிபத்” களில் ஒன்றாகும்.
அல்லாஹ் இடம், திசை என்பவற்றை விட்டும் துய்யவன். அவன் இன்ன இடத்தில் உள்ளான், இன்ன திசையில் உள்ளான் என்று கூறுவது பிழை. 
அல்லாஹ் அர்ஷில் அமர்ந்துள்ளான் என்று சொல்வோர் அவனுக்கு இடம், திசை உண்டு என்று நம்புகின்றார்கள். இதன் மூலம் அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்தவர்களாகி விடுகின்றார்கள்.
இரண்டு – சிம்மாசனத்திலோ, கதிரையிலோ இருக்கும் ஒருவனுக்கு “ஜிஸ்ம்” சடம் இருக்க வேண்டும். சடமில்லாத ஒன்று ஓர் இடத்தில் இருக்கின்றதென்பது புத்திக்குப் புலப்படாத ஒன்றாகும். ஆகையால் சடமற்ற அல்லாஹ் குறித்த ஓர் இடத்தில் இருக்கின்றான் என்று சொல்வோர் அல்லாஹ்வுக்கு சடம் உண்டு என்று நம்புகின்றார்கள். இந்த நம்பிக்கை கொண்டு அவர்கள் இணை வைத்தவர்களாகி விடுகின்றார்கள்.
மூன்று – ஒரு வஸ்த்து ஓர் இடத்தில் இருப்பதாயின் அந்த இடம் அந்த வஸ்த்துவை விடப் பெரியதாக இருக்க வேண்டும். அல்லாஹ் அர்ஷை விடச் சிறியவன் அது அவனை விடப் பெரியதென்பதற்கும் தம்பிமார் என்ன ஆதாரம் சொல்வார்கள். சிறிய ஓர் இடத்தில் அதை விடப் பெரிய ஒன்று இருப்பது அசாத்தியமானதாகும். “அல்லாஹு அக்பர்” அல்லாஹ் மிகப் பெரியவன். 
நான்கு – அல்லாஹ் திருக்குர்ஆனில் ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية  “உங்களின் றப்பு – இரட்சகனின் அர்ஷ் அந்நாளில் எட்டுப்பேர் தமக்குமேல் சுமப்பார்கள்” என்று கூறியுள்ளான். 
(திருக்குர்ஆன் – அல்ஹாக்கா, 17)
அல்லாஹ் “அர்ஷில்” அமர்ந்துள்ளான் என்ற கூற்றின்படி எட்டு மலக்குகள் சேர்ந்து அல்லாஹ்வை சுமக்கின்றார்கள் என்று கருத்து வரும். இது “ஷிர்க்” இணைவைத்தலாகிவிடும். அல்லாஹ்வை எட்டுப் பேர்கள் என்ன? எட்டுக் கோடிப் பேர் சேர்ந்தாற் கூட தூக்க முடியுமா?
ஐந்து – “அர்ஷ்” என்பது படைப்புக்களில் ஒன்று. படைப்பு என்பது “ஹாதிது” என்று சொல்லப்படும். “ஹாதிது” என்பதற்கு புதியது என்று பொருள் வரும். அதாவது “கதீம்” என்ற பூர்வீகத்திற்கு இது எதிரானதாகும். புதிதான ஒன்று பூர்வீகமானவனைச் சுமக்கமாட்டாது. இது அசாத்தியம்.
ஆறு – “அர்ஷ்” என்பதைப் படைக்கு முன் அல்லாஹ் இருந்தான் என்பது மறுக்க முடியாத ஒன்று. அந்நேரம் அவன் எங்கே இருந்தான்? இருக்க இடமின்றி அலைந்தானா? அல்லது ஆகாயத்தில் தொங்கிக் கொண்டிருந்தானா?
ஏழு – அல்லாஹ் எதன் பாலும் தேவையில்லாதவனாவான். அவன் “அர்ஷில்” இருக்கின்றான் என்றால் தானிருப்பதற்கு “அர்ஷ்” தேவைப்படுவதால் அவன் அதன்பால் தேவையாகின்றான் என்ற கருத்து வரும். இது பிழையானதாகும்.
மேற்கண்ட ஏழு காரணங்களாலும், இங்கு கூறப்படாத வேறு காரணங்களாலும் “அல்லாஹ் அர்ஷில் அமர்ந்துள்ளான்” என்ற கொள்கை இஸ்லாமிய மூலாதாரங்களுக்கு முரணானதென்றும், பொய்யானதென்றும் தெளிவாகிவிட்டது.
(அல்லாஹ் – அர்றஹ்மான்)

திருக்குர்ஆனின் எந்த ஓர் இடத்திலாவது الله على العرش استوى “அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றான்” என்று “அல்லாஹ்” என்ற திருப் பெயருடன் இணைந்து வரவில்லை. மாறாக “அர்றஹ்மான்” என்ற திருப்பெயருடன் இணைந்து الرحمن على العرش استوى என்றே வந்துள்ளது. 
அல்லாஹ் என்பவனும், றஹ்மான் என்பவனும் ஒருவனாக இருந்தாலும் கூட இரு திருப்பெயர்களுக்குமிடையில் வேறுபாடு உண்டு. இல்லையெனில் இரண்டு விதமாகவும் வசனம் வந்திருக்கும்.
“அல்லாஹ்” என்பது அவனுடைய “தாத்”தின் பெயர். இயற்பெயர். “அர்றஹ்மான்” என்பது அவனுடைய “ஸிபத்”தின் பெயர். தொழிற்பெயர். இயற்பெயருக்கும், தொழிற்பெயருக்கும் வித்தியாசம் உண்டு. இது பற்றி இங்கு விரிவாக ஆய்வு செய்தால் இப்பிரசுரம் நூலாக மாறிவிடும். இதை இலவசமாக வினியோகிக்க முடியாமல் போய்விடும். விளக்கம் தேவையானோர் அறிஞர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.
அல்லாஹ் “அர்ஷில்”தான் அமர்ந்துள்ளான் என்பதை நிறுவுவதற்கு இரும்பைத் துரும்பாக வைத்துக் கொண்டு கொக்கரித்து வருகின்ற இத்திருவசனத்தில் “அல்லாஹ்” என்ற திருப்பெயர் வராததேன்? என்று தம்பிமாரிடம் கேட்டால் இஞ்சி திண்ட குரங்குபோல் மேலும் கீழும் பார்ப்பார்களேயன்றி விளக்கம் சொல்லமாட்டார்கள். ஏனெனில் இதற்கு விளக்கம் சொல்வதாயின் அவர்கள் “தஸவ்வுப்” என்ற ஸூபிஸ கோட்டைக்குள் பிரவேசிக்க வேண்டும். அக்கோட்டைக் கதவு தம்பிமார்களென்றால் திறக்கப்படாது. ஏனெனில் தம்பிமார் அனைவரும் ஸூபிஸத்தின் எதிரிகளாவர்.
قال الشيخ صفي الدين بن أبي المنصور في رسالته ”يجب اعتقاد أن الله تعالى ما استوى على عرشه إلا بصفته الرحمانية كما يليق بجلاله كما قال تعالى الرحمان على العرش استوى ، ولا يجوز أن يطلق على الذات العلى أنه استوى على العرش . وإن كانت الصفة لا تفارق الموصوف في جانب الحق تعالى ، لأن ذلك لم يردلنا التصريح به في كتاب ولا سنة ، فلا يجوز لنا  أن نقول على الله مالا نعلم، فكما أنه تعالى استوى على العرش بالصفته الرحمانية ، كذلك العرش وما حواه به استوى، واعلم أن غاية العقل في تنزيه الباري عن كيفية الإستواء ان يجعل ذلك استواء تدبير كما استوى الملك من البشـر على مملكته، كما قالوا في استشهادهم بقولهم ”قد استوى بشر على العراق “

(اليواقيت والجواهر – الجزء الأول – ص – 89 للإمام عبد الوهاب الشعراني)
அல்லாஹ் திருக்குர்ஆனில் الرحمن على العرش استوى “றஹ்மான் அர்ஷில் அமர்ந்தான்” என்று கூறியதுபோல் அவனுடைய பரிசுத்த தன்மைக் கேற்றவாறு தனது “றஹ்மானிய்யத்” என்ற “ஸிபத்” தன்மை கொண்டேயன்றி அதில் அவன் அமரவில்லை என்று நம்புவது கடமை. பரிசுத்தமான அந்த “தாத்” – மெய்ப்பொருள் – அர்ஷில் அமர்ந்துள்ளதென்று பொதுவாகச் சொல்வது கூடாது. அல்லாஹ்வின் “ஸிபத்” தன்மை என்பது அவனின் “தாத்”தை விட்டும் பிரியாதென்பது உண்மையாயினும் அவ்வாறு கூறுவது கூடாது. ஏனெனில் அவன் அதில்தான் அமர்ந்துள்ளான் என்பதற்கு திருக்குர்ஆனிலோ, திரு நபியின் அருள் மொழியிலோ தெளிவான வசனம் ஒன்றும் வரவில்லை. ஆகையால் அவன் விடயத்தில் தெளிவான ஆதாரமின்றி நாம் ஒன்றும் சொல்ல முடியாது. இது தொடர்பாக நாம் நம்ப வேண்டிய சுருக்கம் என்னவெனில் அமர்தல் என்பது استواء التدبير நிர்வாக, ஆட்சியதிகார அமர்வென்று கொள்ள வேண்டுமே தவிர ஒருவன் கதிரையில் அமர்வது போன்ற அமர்வல்ல என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
மேற்கண்டவாறு விளக்கம் கூறும் நல்லடியார்கள் தமது கூற்றுக்கு ஆதாரமாக قد اســـتــوى بشـر على العراق  என்ற கவியை ஆதாரமாகக் கூறியுள்ளார்கள். கவியின் கருத்து – “பிஷ்ர் என்பவர் இறாக் நாட்டில் அமர்ந்தார்”  என்பதாகும்.
இக்கவிக்கு (“பிஷ்ர்” என்பவர் இறாக் நாட்டின்மீது ஆட்சி அதிகாரம் பெற்றார்) என்றுதான் விளக்கம் கொள்ள வேண்டுமே அன்றி “அவர் இறாக் நாட்டில் அமர்ந்தார்” என்று விளக்கம் கொள்ளக் கூடாது. 
மேற்கண்டவாறு அஷ்ஷெய்கு ஸபிய்யுத்தீன் இப்னு அபில் மன்ஸூர் றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் நூலில் கூறியுள்ளார்கள்.
அல்யவாகீத் வல் ஜவாஹிர்
பாகம் -01 பக்கம் – 89
இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஅறானீ
இறாக் என்பது ஒரு நாடு. இது 437072 சதுர கிலோ மீட்டர் – 168753 சதுர மைல் பரப்பளவைக் கொண்டது. இதில் “பிஷ்ர்” என்ற ஐந்தடி உயரமும், இரண்டடி அகலமும் உள்ள ஒரு மனிதன் அமர்ந்திருப்பது அசாத்தியமான ஒன்றாகும். அவ்வாறு அமர்வதற்கு அவரும் அந்த அளவு பரப்பளவு உள்ளவராக இருக்க வேண்டும். ஏனெனில்  الرحمن على العرش استوى “றஹ்மான் அர்ஷில் அமர்ந்துள்ளான்” என்ற திருவசனத்தில் வந்துள்ள “இஸ்தவா” என்ற சொல்தான் மேற்சொன்ன  قد استوى بشـر على العراق “பிஷ்ர் என்பவர் இறாக் நாட்டில் அமர்ந்தார்” என்ற கவியிலும் வந்துள்ளது. 
“இஸ்தவா” என்ற இச்சொல் “ஜலஸ” என்ற சொல்போன்று அமர்ந்தான் என்ற பொருளுக்கு மட்டும் பாவிக்கப்படும் சொல் அல்ல. மாறாக சரி சமமாக அமர்ந்தான் என்ற பொருளுக்கே இச்சொல் பாவிக்கப்படும்.
உதாரணமாக استوى سكران على الكرسي “ஸக்றான் என்பவன் கதிரையில் சரி சமமாக அமர்ந்தான்” என்று சொல்வது போன்று. இவ்வாறு சொல்வதாயின் – “இஸ்தவா” என்ற சொல்லைப் பயன்படுத்துவதாயின் – கதிரையும், ஸக்றான் என்பவனும் சரி சமமாக இருக்க வேண்டும். கதிரையில் ஓர் அங்குலம் கூட காலியாக இருக்கவும் கூடாது. ஸக்றானின் உடலில் ஓர் அங்குலம் கூட கதிரையை விட்டும் வெளியே இருக்கவும் கூடாது. அதாவது அச்சில் போட்டாற்போல் இருக்க வேண்டும். நிறைந்திருக்க வேண்டும். இவ்வாறு இல்லாவிட்டால் “இஸ்தவா” என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் “ஜலஸ” அமர்ந்தான் என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். இச்சொல்லுக்கு குறித்த நிபந்தனை தேவையில்லை. 
الرحمن على العرش استوى என்ற திருவசனத்திலும், قد استوى بـشـر على  العراق என்ற  கவியிலும் “இஸ்தவா” என்ற சொல்தான் பாவிக்கப்பட்டுள்ளது. இந்த விபரத்தின்படி “றஹ்மான் அர்ஷில் சரி சமமாக அமர்ந்தான்” என்றும், பிஷ்ர் என்பவன் இறாக்கில் சரி சமமாக அமர்ந்தான் என்றும் பொருள் கொள்ள வேண்டும். மேற்கண்ட பரப்பளவைக் கொண்ட இறாக் நாட்டில் “பிஷ்ர்” என்பவர் சமமாக அமர்வது எந்த வகையிலும் சாத்தியமானதல்ல.  
ஆகையால் இவ்வாறான இடங்களில் “இஸ்தவா” என்ற சொல்லுக்கு “சரி சமமாக அமர்ந்தான்” என்று பொருள் கொள்ளாமல் இச்சொல்லுக்குரிய மற்றப் பொருளான  استولى  “ஆட்சி அதிகாரம் பெற்றான்” என்றே கொள்ள வேண்டும். 
இதன்படி “றஹ்மான் அர்ஷின் மீது ஆட்சி அதிகாரம் உள்ளவனாகிவிட்டான்” என்றும் பிஷ்ர் என்பவர் இறாக் நாட்டின்மீது ஆட்சி அதிகாரம் உள்ளவராகி விட்டார் என்றும் “ஸக்றான் கதிரையின் மீது ஆட்சி அதிகாரம் உள்ளவனாகி விட்டான்” என்றும் பொருள் கொள்ள வேண்டும். இதுவே உண்மை.
திருக்குர்ஆன் வசனத்தில் “அர்றஹ்மான்” என்ற சொல் தெளிவாகக் கூறப்பட்டிருந்தும் கூட “அல்லாஹ் அர்ஷில் அமர்ந்துள்ளான்” என்றுதான் ஸுன்னிகளும், மற்றவர்களும் சொல்லி வருகின்றார்களேயன்றி “றஹ்மான்” என்பதை விட்டு விடுகின்றார்கள்.
மேற்கண்ட விபரங்கள், ஆதாரங்கள் மூலம் “அல்லாஹ் அர்ஷில் சரி சமமாக அமர்ந்துள்ளான்” என்ற தம்பிமாரின் முரட்டுவாதம் முற்றுப்பெற்று விட்டது. هباءا منثورا “ஹபாஅன் மன்தூறா” பரத்தப்பட்ட புழுதியாகியும் விட்டது.  
வாதம் – 02
(அல்லாஹ் எதிலும் இருக்கின்றான்)
“அல்லாஹ் தூண் துரும்பு உள்ளிட்ட எல்லா வஸ்த்துக்களிலும் இருக்கின்றான்” என்ற இக்கொள்கையும் மேற்சொன்ன தம்பிமாரின் கொள்கைபோல் திருக்குர்ஆனுக்கும், நபீமொழிகளுக்கும் முரணான கொள்கையாகும். இக்கொள்கைதான் “ஹுலூல்” என்றும், “இத்திஹாத்” என்றும் சொல்லப்படுகிறது.
حلول “ஹுலூல்” என்றால் ஒன்று இன்னொன்றில் இறங்குதல் என்றும், اتحاد “இத்திஹாத்” என்றால் ஒன்று இன்னொன்ருடன் கலத்தல் என்றும் சொல்லப்படும்.
முந்தினதிற்கு உதாரணம் حل الماء فى القارورة “நீர் போத்தலில் இறங்கியது” என்பது போன்றும், பின்தினதிற்கு உதாரணம் اتحد السكر بالماء  “சீனி நீருடன் கலந்து இரண்டும் ஒன்றாகிவிட்டது” என்பது போன்றுமாகும்.
நீர் போத்தலில் இறங்கியது போல் அல்லாஹ் சிருஷ்டியில் இறங்கினான் என்று நம்புவதும், சீனி நீருடன் கலந்து கரைந்து இரண்டும் ஒன்றாகி விட்டதுபோல் அல்லாஹ் சிருஷ்டியுடன் கலந்து ஒன்றாகி விட்டான் என்று நம்புவதும் இஸ்லாமிய  “அகீதா” கொள்கைக்கு முரணானதாகும். இவ்வாறு நம்புதல்தான் “ஹுலூல் – இத்திஹாத்” என்று சொல்லப்படுகிறது.
இந்த விபரம் தெரியாமலேயே அல்லாஹ் தூணிலும் உள்ளான் துரும்பிலும் உள்ளான் என்று ஒரு சில ஆலிம்கள் உள்ளிட்ட அனைவரும் தொன்றுதொட்டுச் சொல்லி வந்துள்ளார்கள். இன்றும் பலர் சொல்லிக் கொண்டும் இருக்கின்றார்கள். 
மேலே சொல்லப்பட்ட “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கை இரண்டையும் “ஸுன்னத் ஜமாஅத்” கொள்கை வாதிகளான நாங்கள் மறுக்கின்றோம். விடயம் தெரிந்த உலமாஉகளும் மறுக்கின்றார்கள்.
வாதம் – 03 
(அல்லாஹ் எல்லாமாயும் உள்ளான்)
“அல்லாஹ் எல்லா வஸ்த்துக்களாயும் “தஜல்லீ” வெளியாகியுள்ளான்” என்ற கொள்கை “தவ்ஹீத்” ஏகத்துவம் என்றும், “வஹ்ததுல் வுஜூத்” மெய்ப் பொருள் ஒன்று என்றும் சொல்லப்படுகின்றது.
இக்கொள்கை எந்த வகையிலும் திருக்குர்ஆனுக்கோ, திரு நபியின் நிறைமொழிகளுக்கோ ஒரு மண்ணளவும் முரணானதல்ல.   
அதேபோல் “ஸுன்னீ”கள் கொள்கையில் பின்பற்றுகின்ற அல் இமாம் அபுல் ஹஸன் அல் அஷ்அரீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் “அகீதா” கொள்கைக்கும் முரணானதல்ல. இக்கொள்கையே روح الإسلام இஸ்லாமின்  உயிர் என்று அறிஞர்களால் சொல்லப்படுகிறது.
இக்கொள்கையே றஸூல்மார், நபீமார், வலீமார், மஷாயிகுமார் சொன்ன கொள்கை. இக்கொள்கையே சரியான கொள்கை என்பதற்கு திருக்குர்ஆனிலும், நபீமொழிகளிலும் இறை ஞானிகளான ஆரிபீன்களின் நூல்களிலும் பரந்து விரிந்த ஆதாரங்கள் உள்ளன. அவற்றை இப்பிரசுரத்தில் கூறி “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் சரியென்று நிறுவுவது எனது நோக்கமல்ல. 
இப்பிரசுரத்தின் மூலம் எனது நோக்கம் என்னவெனில் அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றான், அவன் தினமும் இரவின் பிற்பகுதியில் முன்வானத்திற்கு இறங்குகின்றான் என்ற தம்பிமாரின் கொள்கையை மறுப்பதும், மற்றும் “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கையை மறுப்பதுமேயாகும்.
சரியான கொள்கை என்று நான் இப்பிரசுரத்தில் குறிப்பிடும் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் இஸ்லாமிய, வடித்தெடுக்கப்பட்ட இறைஞானம்தான் என்பதை சுருதிப் பிரமாணங்கள், யுக்திப் பிரமாணங்கள் கொண்டு நிறுவி அறபுமொழியில் நான் எழுதியுள்ள அல்கிப்ரீதுல் அஹ்மர் என்ற நூல் இன்ஷா அல்லாஹ் “ஷஃபான்” மாத நடுப்பகுதியில் அச்சிட்டு வெளியிடப்படவுள்ளது. அதில் இந்த ஞானம் தொடர்பான முழுவிபரமும் எழுதியுள்ளேன். விரிவான விளக்கம் தேவையானோர், குறிப்பாக உலமாஉகள் முன்கூட்டிப் பதிவு செய்து பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
வாதம் – 04
(அல்லாஹ் இறங்குகின்றான்)

حدثنا عبد الله بن مسلمة عن مالك عن إبن شهاب عن أبي سلمة وأبي عبد الله الأغر عن أبي هريرة رضي الله عنهم أن رسول الله صلى الله عليه وسلم قال : ينزل ربنا تبارك وتعالى كلَّ ليلةٍ إلى السماء الدنيا حينَ يَبْقَى ثُلثُ الليلِ الآخِرُ يقول من يدعوني فأستَجيب له من يسئلني فأعطيَه من يستغفر لي فأغفرَ له،

(بخاري 1145 – 7494، مسلم 168 – 758، 
سنن ابن ماجه 1366، سنن أبي داؤود 1315، 
سنن الترمذي 404ஃ5)
ஒவ்வொரு இரவும் பிந்தின மூன்றாம் பகுதியில் எங்களுடைய “றப்பு” – அல்லாஹ் – முன்வானத்திற்கு இறங்கி எவர் என்னை அழைக்கின்றாரோ அவருக்கு நான் பதில் சொல்வேன். எவர் என்னிடம் கேட்கின்றாரோ அவருக்கு நான் கொடுப்பேன். எவர் என்னிடம் பாவ மன்னிப்புக் கேட்கின்றாரோ அவரின் பாவத்தை மன்னிப்பேன் என்று கூறுவதாக நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள். 
அறிவிப்பு : அபூஹுறைறா றழியல்லாஹு அன்ஹு அவர்கள். 
(புகாரீ – 1145 – 7494, முஸ்லிம் – 168 – 758, 
ஸுனன் இப்னுமாஜா – 1366, 
ஸுனன் அபீ தாவூத் – 1315, 
ஸுனனுத் துர்முதீ – 05ஃ404
இந்த நபீமொழியில் ஆய்வு செய்யப்பட வேண்டிய பல விடயங்கள் உள்ளன. அவற்றில் இத்தலைப்புக்குப் பொருத்தமான விடயத்தை மட்டும் இங்கு எழுதுகின்றேன்.
ينزل ربنا إلى السماء الدنيا   “எங்களுடைய “றப்பு” இரட்சகன் முன்வானத்திற்கு இறங்குகின்றான்” 
இந்த வசனத்தில் ينزل “யன்ஸிலு” என்று ஒரு சொல் வந்துள்ளது. இதற்கு இறங்குகின்றான் என்று பொருள் கொண்டு ஒருவன் மேல் மாடியில் இருந்து கீழ் மாடிக்கு இறங்குவது போலும், மலையில் இருந்து பூமிக்கு இறங்குவது போலும் அல்லாஹ் “அர்ஷில்” இருந்து முன்வானத்திற்கு இறங்குகின்றான் என்று தம்பிமார் விளக்கம் கூறுகின்றார்கள். 
الرحمن على العرش استوى  என்ற திருவசனத்தில் “அல்லாஹ்” என்ற சொல் பாவிக்கப்படாமல் “றஹ்மான்” என்ற சொல் பாவிக்கப்பட்டது போல் இந்த நபிமொழியிலும் “அல்லாஹ்” என்ற திருநாமம் பாவிக்கப்படாமல் ينزل ربنا “றப்பு” என்ற திருநாமம் பாவிக்கப்பட்டுள்ளது. இது ஆய்வுக்கெடுத்து அலச வேண்டிய ஒன்றாயினும் அதுபற்றி இங்கு எழுதாமல் இறங்குதல் என்றால் என்ன? தம்பிமார் சொல்வது போன்ற இறங்குதலா? அல்லது வேறு வகை இறங்குதலா? என்று ஆய்வு செய்வோம்.  
தம்பிமார் சொல்வது போன்ற இறங்குதல் என்றுதான் இவர்களின் குருமார்களும் சொல்லியுள்ளார்கள். ஒரு சமயம் சிரியா நாட்டுப் பள்ளிவாயல் ஒன்றில் வெள்ளிக்கிழமை மிம்பரில் இந்த நபீமொழிக்கு விளக்கம் நிகழ்த்திக் கொண்டிருந்த இப்னுத் தைமிய்யஹ் இவ்வாறுதான் அல்லாஹ் இறங்குகிறான் என்று சொன்னவராக தான் நின்றிருந்த மிம்பர் படிகளில் இறங்கியும் காட்டினார். பள்ளிவாயலில் கூச்சல் எழும்பியது. இறுதியில் இப்னுத் தைமிய்யஹ் சிறையில் அடைக்கப்பட்டார். நமது நாட்டைப் பொறுத்தவரை தம்பிமார்களில் எவரும் மிம்பரில் இருந்து இதுவரை இறங்கிக் காட்டவில்லை. அப்படியொருவர் இறங்கிக் காட்டுவாராயின் அவர் “றைன்” ஆகவே இருப்பார். بإبدال الياء ألفا

(இடத்தில் இறங்குதலும் கருத்தில் இறங்குதலும்)
கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் சண்டை. காழீ நீதிமன்றத்தில் வழக்கு. காழீ – நீதிவானின் – நீதிமன்றம் அவரின் வீட்டு மாடியில் இருந்தது. நீதிபதி முன்னிலையில் கணவனும் மனைவியும் நிறுத்தப்பட்டு விசாரணை நடைபெறுகின்றது. நீதிபதி இருவரையும் இணைத்து வைக்க கடும் முயற்சி செய்தார். அவ்விருவரில் ஒவ்வொருவரும் தனது பிடியிலிருந்து மாறவில்லை. நீதிவான் “நீங்கள் கொஞ்சம் இறங்குங்கள் என்று கணவனுக்கும், அதேபோல் நீங்களும் கொஞ்சம் இறங்குங்கள் என்று மனைவிக்கும் சொன்னார். அக்கணமே அவ்விருவரும் மாடியில் இருந்து கீழே இறங்கிவிட்டார்கள்.  
சலம் கழிக்கப் போய் விட்டார்கள் போலும் என்றெண்ணி சற்று நேரம் பொறுமை செய்து எதிர் பார்த்திருந்தார் நீதிவான். எவரும் வரவில்லை. ஆத்திரமடைந்த நீதிவான் இருவரையும் கூட்டுக்குள் தள்ளி கம்பி எண்ணச் சொன்னார். 
நீதிவான் அவ்விருவருக்கும் இறங்குமாறு சொன்னது அவர்கள் தமது பிடியிலேயே நிற்காமல் ஒவ்வொருவரும் சற்று விட்டுக் கொடுக்க வேண்டும் என்பதைக் கருத்திற் கொண்டேயாகும். 
நீதிவானின் இறங்குதல் என்ற சொல்லுக்கான உரிய பொருளை உரிய முறைப்படி விளங்கத் தவறியதால் இருவரும் சிறை வாசம் செய்ய நேரிட்டது.
இவ்வாறுதான் இறங்குதல் என்ற சொல்லுக்குரிய சரியான பொருளை விளங்காமல் தடுமாறும் தம்பிமார்களுமாவர்.
அல்லாஹ் ஒருவனின் “தவ்பா” பாவமன்னிப்புக் கோருவதை ஏற்றுக் கொள்வதாயின் அதற்குப் பல நிபந்தனைகள் உள்ளன. அவற்றில் சில,
அவன் “ஹலால்” உணவு உட்கொள்ள வேண்டும். செய்த பாவத்தை நினைத்து வருந்த வேண்டும். அந்தப் பாவத்தை மீண்டும் செய்வதில்லை என்று உறுதி கொள்ள வேண்டும். இவை பொதுவான விதிகளாகும்.
அல்லாஹ் குறித்த விதிகள் எதுவுமின்றி பொது மன்னிப்பு வழங்கும்போது அவன் இறங்கிவிட்டான் என்று சொல்லும் பாணியில் நபிகளாரின் ينزل ربنا எங்கள் “றப்பு” இறங்குகின்றான் என்ற வசனம் அமைந்துள்ளதை அறியாத தம்பிமார் அல்லாஹ்வுக்கு கால் உண்டு என்றும், மனிதன் படிகளில் இறங்குவதுபோல் அவனும் இறங்குகிறான் என்றும் கற்பனை செய்து கொண்டார்கள். இதனால் இவர்கள் நரகம் என்ற சிறையில் கம்பி எண்ணுவதற்கு தம்மை தயார் செய்து கொண்டார்கள்.
கணவனும், மனைவியும் தமது பிடியில் இருந்து இறங்கி சமாதானமாக வேண்டும் என்பதை கருத்திற் கொண்டே இறங்குங்கள் என்று இருவருக்கும் நீதிவான் சொன்னார். இது கருத்தில் இறங்குவதையே குறிக்கும்.
அன்புக்குரிய உலமாஉகளே!
இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஅறானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் அல் யவாகீத் வல் ஜவாஹிர் என்ற ஞான நூலில் இப்பிரசுரத்தில் எழுதப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக அறபுமொழியில் கூறியுள்ள கருத்துக்களை எந்தவொரு மாற்றமும் செய்யாமல் எழுதியுள்ளேன்.
படித்துப் பயன் பெறுங்கள்!
பிறரையும் பயன் பெறச் செய்யுங்கள்!

فإن قلت فما الحكمة في إعلامه تعالى بأنه استوى  على العرش بناء على أن المراد بالعرش مكان مخصوص في جهة العلو لا جميع الأكوان،

فالجواب كما ذكره الشيخ في الباب السبعين وثلاثمأة أن الحكمة في ذلك تقريب الطريق على عباده، ذلك أنه تعالى لما كان هو الملكَ العظيم ولا بد للملك من مكان يقصده فيه عبادُه لحوائجهم، وإن كانت ذاته تعالى لا تقبل المكان قطعا، اقتضت المرتبة له أن يخلق عرشا وأن يذكر لعباده أنه استوى عليه ليقصدوه بالدعاء وطلب الحوائج لا يدري أين يتوجه بقلبه، فإن الله تعالى خلق العبد ذا جهة من أصله، فلا يقبل إلا ما كان في جهة مادام عقله حاكما عليه، فإذا من الله تعالى عليه بالكمال واندراج نور عقله في نور إيمانه تكافَئَت عنده الجهاتُ في جانب الحق تعالى ، وعلم وتحقق أن الحق تعالى لا يقبل الجهة ولا التحيّز ، وأن العلويات كالسفليات في القرب منه تعالى ، قال تعالى ونحن أقرب إليه من حبل الوريد ، وقال صلى الله عليه وسلم أقرب ما يكون العبد من ربه وهو ساجد ، فعلم أن الشـرع ما تبع العرف إلا في حق ضعفاء العقول رحمة بهم،

(منقول من اليواقيت والجواهر 
للإمام عبد الوهاب الشعراني ، ص – 90 الجزء الأول )

فإن قلت وما الحكمة في إخباره تعالى لنابأنه تعالى ينزل كل ليلة إلى السماء الدنيا مع أنه تعالى لا يقبل ذاته النزول ولا الصعود ، 

فالجواب الحكمة في ذلك فتح باب تعليم التواضع لنا بالنزول إلى مرتبة من هو تحت حكمنا و تصريفنا وإعلامنا بأنه كما لا يلزم من الإستواء إثبات المكان كذلك لا يلزم من إثبات الفوقية إثبات الجهة. وأيضا فإن في إعلامه تعالى لنا بأنه ينزل إلى سماء الدنيا فيقول هل من سائل هل من مريض هل من مستغفر ونحو ذلك الإذنُ لعباده في مسامرته بالسؤال وطلب النوال ومناجاته بالأذكار والإستغفار، كما أنه تعالى يسامر كذلك بقوله هل من سائل إلى آخر النسق، فيقول لهم ويقولون له ويسمعهم ويسمعونه من طريق الإلهام كأنهم في مجلس الخطاب. ولله المثل الأعلى. هذا معنى النزول عند أهل العقول اهـ،

واعلم يا أخي أن صفة الإستواء على العرش والنزول إلى سماء الدنيا والفوقية للخلق ونحو ذلك كله قديم، والعرش وما حواه مخلوق محدث بالإجماع ، وقد كان تعالى موصوفا بالإستواء والنزول قبل خلق جميع المخلوقات، كما أنه لم يزل بأنه خالق ورازق ولا مخلوق ولا مرزوق فكان قبل العرش يستوي على ماذا؟ وقبل خلق السماء ينزل إلى ماذا؟

فانظر يا أخي بعقلك فما تَتَعَقَّلَهُ؟ في معنى الإستواء والنزول قبل خلق العرش والسماء فاعتقده بعد خلقها، وأنا اضرب لك مثلا في الخلق تعجز عن تعقله فضلا عن الخالق، وذلك أن كل عرش تصورت ورائه خلاء أو ملأ من جهاته الست فليس هو عرش الرحمن الذي وقع الإستواء عليه، فلا يزال عقلك كلما تقف على شيئ يقول لك فما ورائه ، فإذا قلت له خلاء يقول لك فما وراء الخلاء؟ وهكذا أبد العابدين ودهر الداهرين،  فلا يتعقل العقل كيفية إحاطة الحق تعالى للوجود أبدا، فقد عجز العقل وَاللهِ في تعقُّل مخلوق فكيف بالخالق؟ وكل من إدعى العلم بالله تعالى على وجه الإحاطة كذَّبناه وقلناله إن كنت صادقا فتعقل لنا شيئا لم يخلقه الله تعالى، فإن الله تعالى خالق غير مخلوق بإجماع جميع الملل،

அன்புக்குரிய உலமாஉகளே! அறிஞர்களே!
படிக்கின்ற மாணவர் மாணவியர்களே! 
முஸ்லிம் மக்களிடம் தம்பிமார் முன்வைத்து வருகின்ற புதிய சட்டங்கள் பற்றியும், கொள்கைகள் பற்றியும், அண்மையில் காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர் அல்லாஹ்வுக்கு இரண்டு உருவங்கள் இருப்பதாகக் கூறிய கருத்து பற்றியும், மத்ஹபுகள் தொடர்பாக தம்பிமார் சொல்வது பற்றியும் இன்னும் பல விடயங்கள் குறித்தும் அகில இலங்கை உலமா சபைக்கு கொழும்பு மஜ்லிஸுல் உலமாஉ சபையாலும் அகில இலங்கை ஸூபிஸ ஜம்இய்யதுல் உலமா சபையாலும் பல கடிதங்கள் அனுப்பி விளக்கம் கேட்டிருந்தோம். சுமார் ஒரு வருடமாகியும் கூட இதுவரை அவர்கள் எமக்கு எவ்வித பதிலும் தரவில்லை. விரிவான பத்வா எழுதிக் கொண்டிருப்பதால் பதில் அனுப்புவதற்கு தாமதம் ஏற்பட்டிருக்கலாம். இன்னும் ஒரு மாதம் பொருத்திருந்து பார்ப்போம்.
அவர்களின் நேர்மையான இந் நடவடிக்கையை பொது மக்கள் புரிந்து அவர்களை வாழ்த்த வேண்டுமென்பதற்காகவே இவ்வுண்மையை எழுதினேன். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் வஹ்ததுல் வுஜூத் கொள்கை தொடர்பாக குறிப்பிடுகையில் அது வழிகேடு என்றும், குப்ர் என்றும் குறிப்பிட்டிருந்தார்கள். ஆயினும் அவர்கள் வஹ்ஹாபிஸம் பற்றி ஒரு வார்த்தைகூட எழுதவில்லை. இதன் மூலம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வஹ்ஹாபிஸக் கொள்கைக்கு ஆதாரவானதென்று எண்ணத் தோணுகிறது. உலமாஉகள் விலாங்கு மீன் போலன்றி சுறாமீன் போல் செயல்படுவதே அவர்களின் கண்ணியத்தை தக்க வைக்கும் இது குறித்து இன்னும் அவர்களுடன் தொடர்பு கொள்ள உள்ளோம். உலமா சபையின் இந் நடவடிக்கை எனக்கு மட்டுமன்றி இலங்கையில் வாழும் ஸுன்னிகளுக்கும் தரீக்கா வாதிகளுக்கும் ஞானவழி நடப்பவர்களுக்கும் நீங்காத மனவேதனையை ஏற்படுத்தியுள்ளதென்பதை அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
பத்வா குழுவுக்கு பகிரங்க வஸிய்யத்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பத்வா குழுவுக்கு,
கௌரவ தலைமை முப்தீ அவர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும்
இமாம்களுக்கிடையில் கருத்து வேறுபாடுள்ள விடயங்களில் (அவை சட்டங்களாக இருக்கட்டும் அல்லது தத்துவங்களாக இருக்கட்டும்) நீங்கள் ஒருசிலரின் கருத்தை மட்டும் சரிகண்டு ஏற்றுச் செயற்படாமல் – தீர்ப்புக் கூறாமல் – மற்றவர்களின் கருத்துக்களையும் அலசி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டுமென்றும் குறைந்த பட்சம் மற்றவர்கள் சொன்ன கருத்துக்களையும் மக்களுக்கு எட்டி வைக்க வேண்டுமென்றும் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை வாதிகள் அகீதா – கொள்கையில் பின்பற்றி வருகின்ற இமாம் அபுல்ஹஸன் அல் அஷ்அரீ றஹிமஹுல்லாஹ் அவர்கள்
  الوجود عين الموجود ؟ أو غير الموجود؟  சிருஷ்டி கர்த்தா சிருஷ்டி தானானவனா? அல்லது அதற்கு வேறானவனா? என்பது தொடர்பாக என்ன விளக்கம் சொல்லியுள்ளார்கள் என்பதையும் இவர்கள் தவிர இமாம்கள், அவ்லியாஉகள், ஷெய்குமார்கள் இது தொடர்பாக என்ன சொல்லியுள்ளார்கள் என்பதையும் பெயர், ஆதார நூல்கள் விபரத்துடன் பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டுமென்று உங்களுக்கு எனது பணிவான ஆலோசனையை முன் வைக்கின்றேன்.
                 காதிமுல் கவ்மி
             மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப்
                 மிஸ்பாஹீ, பஹ்ஜீ
காத்தான்குடி.
24.12.2015

இந்த நூலின் PDF file இனை தறவிறக்கம் செய்து கொள்ள இந்த Link கை அழுத்தவும்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments