Wednesday, April 24, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஆன்மிக ஒளி அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலீ

ஆன்மிக ஒளி அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலீ

எழுதியவர் : மாதிஹுர் றஸூல், கவித்திலகம் மௌலவீ HMM.இப்றாஹீம் நத்வீ

தொடர் – 01

ஆன்மிக ஒளி, அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலீ அவர்களின் ஆன்மிக நிழல்

மறைந்த மாமேதை (கவிதை)
(தினகரன் தேசிய நாளிதழ் 29,  செப்டம்பர், 1978இல் வெள்ளியன்று பிரசுரமான கவிதை)
எனது உள்ளம் எத்தனையோ தடவைகள்
உனது உஸ்தாத் வரலாற்றை எழுது என்றது.
மனதில் எழுதிய பின்
மையெழுத்து எதற்கென்று, என் –
கை சும்மாயிருந்து விட்டது.
உள்ளத்தில் எழுதினாய் உனக்காக!
புறத்தில் எழுதி விடு பிறர்க்காக!
உள்ளத்தில் எழுதியது உயிர் போனால்
மறைந்த விடும்.
புறத்தில் எழுதியதே புவியோர்க்குப்
பயனளிக்கும்.
உன்னுஸ்தாத் வரலாற்றை நீ எழுதாது விடின்
இன்னொருவர் எழுதுவரோ? என்
சொல்வாயென்று
மீண்டுமென்னுள்ளம் என்னைத் தூண்டியது.
வரலாறு படைத்தவரின் வரலாற்றை வடிப்பது
“வணக்கம்” என்பது அப்போதே புரிந்தது.
இணங்கியே எடுத்தது என் கரம் பேனையை
எழுதியே முடித்தது இச்சிறு நூலை!
இறைவன் நாட்டம் வெளியிற்கொணர்ந்த
இறைநேசரப்துல் ஜவாத் வலீ வாழ்வை
இகத்தோர்க் கீந்தேன் இதயம் மகிழ்தேன்!
இறைவா ஏற்பாய் என் சிறு பணியை!
இகத்திலென் பவங்கள் இதனாலழிப்பாய்!
அகத்திலுன்னருளை இனிதே சொரிவாய்.
இந்நூல் நுகரும் நேயர்களுடலை
மண்ணுண்ணாது கப்றினில் காப்பாய்.
இந்நந்நூல் வெளிவர உதவியவர்க்கு
இன்றும் என்றும் “பறகத்” புரிவாய்!
ஆமீன்!
– நூலன் –

 ஆன்மிக ஒளி அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலீ

                                                                நான்,
                                                               அலிபெனும் அட்சரம் அறியாப் பருவம்
                                                               அன்னையோ யென்னை யழைத்தே வந்து
                                                               புலியெனக் கல்வியில் பெயர்தனைப் பெற்ற
                                                               பேரொளி உஸ்தாத் முன்னிலை நின்றாள்!
                                                               யார்?
                                                               அலியார் பேரனா… ஹபீபின் மகனா…
                                                               அழைத்தெனையணைத்து அறிவொளி தந்த
                                                               ஆலிமுல் இர்பான் ஆன்மிக ஜோதியை
                                                               அடியேன் வாழ்வில் என்றுதான் மறப்பனோ!
நத்வீ
பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம்

காத்தான்குடி :

அதி சங்கைக்குரிய ஆரிபு பில்லாஹ் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அவர்களின் ஆன்மிக சுகந்தத்தை சுவாசிக்கு முன் அவர்கள் பிறந்து மறைந்துள்ள காத்தான்குடி நகர் பற்றி சில தகல்களை வரைகின்றேன்.

இலங்கையின் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டடத்தின் தெற்கே ஐந்து கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள கண்கவர் நகர்தான் காத்தான்குடி! இதன் பரப்பளவு 06.503 ச.கீ மீற்றராகும். அதன் பிரதான வீதி அறபு மண்ணை நினைவூட்டுகிறது. வீதியின் நடுவே ஈச்ச மரங்கள் நடப்பட்டுள்ளன. மின் விளக்குகள் இரவில் நகரை இரவில் இலங்கச் செய்கின்றன. பகலில் பிரயாணம் செய்வோர் நகரைக் கண்டு வியப்பதைப் போல் இரவில் செல்வோர் அதன் அழகில் சொக்கிவிடுகின்றனர். அதனிரு வாயல்களும் இஸ்லாமிய வரலாற்றை அடிப்படையாகக் கொண்டும் முஸ்லிம்களின் தனித்துவத்தைப் பிரதிபலிக்கும் அமைப்பிலும் அமைந்துள்ளன. உள்ளே நுழையும் ஒரு பிரயாணி எல்லையை தாண்டும் வரை அறபு நாடொன்றில் பயணிக்கும் உணர்வையே பெறுகிறார். (இப்பாரிய மெயின் வீதி சேவை பிரதி அமைச்சர் அல்ஹாஜ் ஹிஸ்புல்லாஹ் (MA. MP) அவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டது.)

செயற்கை அழகூட்டலால் மிளிறும் இந்நகர் இயற்கை வளங்களும் அழகும் கொண்டது. கிழக்கே சமுத்திரமும் மேற்கே மாநதியும் இந்நரைச் சூழ்ந்திருப்பது இந்நகரின் தனிச்சிறப்புக்கு சீர்சான்றாகும். 2011 சனத்தொகை கணிப்பின் படி 47602 மக்கள் வாழ்கின்றனர்.

முஸ்லிம்கள் என்றால் காத்தான்குடி, காத்தான்குடி என்றால் முஸ்லிம்கள் என்று சொல்லுமளவு ஆதிகாலத்திலிருந்து முஸ்லிம்கள் மட்டுமே இங்கு வாழ்ந்து வருகின்றனர்.

நில ஆய்வாளர்கள் ஆழியும் நதியும் சு10ழந்த இந்நகரை ஒரு ‘முஸ்லிம் தீவு’ என்றும் சொல்கின்றனர். இதன் இரு எல்லையிலும் தமிழ் சகோதரர்களே நிறைந்து வாழ்கின்றனர். தினமும் ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் சகோதரர்கள் காத்தான்குடிக்குள் கூலி வேலைகள் செய்து வருவதுடன், சந்தை மற்றும் தெருக்களில் வியாபாரமும் செய்து வருகின்றனர். பயங்கரவாத காலத்தில் தமிழ், முஸ்லிம் கலவரம் ஏற்பட்டது உண்மையாயினும் ஆதி காலம் முதல் இரு சமூகத்தினரும் பிட்டும் தேங்காய்ப்பூ போன்றுமே வாழ்ந்து வருகின்றனர்.
காலையில் வேலைக்கு வரும் தொழிலாளர்கள் மாலைக்குள் தங்கள்  ஊர்களுக்குப் போய்விடுவர். ஆதிகாலத்திலிருந்தே எம்மூர் வர்த்தகத்துறையில் பெயர்பெற்றே வந்துள்ளது. சீமை என்றும் அழைக்கப்பட்டுள்ளது. இதனையே பின்வரும் நாட்டார் பாடல் மெய்ப்பிக்கின்றது.

சீமைக்குப் போற மச்சான், அங்கே
சீத்த ரெண்டு முழம் வாங்கி வாங்க! என்று!

இன்று கூட இங்கு கொழும்பு விலைக்குப் பொருட்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று கருதப்படுகின்றது. இலங்கையிலுள்ள நகரங்களுக்கு எம் நகர் ஒரு முன்மாதிரி என்று பேசப்படுகிறது. மார்க்க, பொது விடயங்களில் எம்மூரை இன்றுவரை பின்பற்றும் முஸ்லிம் ஊர்கள் இலங்கையிலெத்தனையோ!

ஜும்அஹ் பள்ளிகள், சிறு பள்ளிகள், அரச, தனியார்,  பாடசாலைகள், தனியார் பாடசாலைகள், அறபுக்கலாபீடங்கள், குர்ஆன் மத்றஸாக்கள், தபாலகங்கள், அரச, தனியார் வைத்தியசாலைகள், அரச, தனியார் வங்கிகள், பிரதேச செயலகம், நகரசபை, பெரும்கடைகள், வியாபாரத்தளங்கள், நூலகங்கள், இயற்கை வளங்கள் போன்ற ஒரு மாநகரத்தில் உள்வாங்கப்படும் அத்தனையும் இங்குள்ளன. பெயரில் நகரசபையாயினும் ஒரு மாநகரில் காணப்படாத அம்சங்களும் இங்குள்ளன.

சுருங்கச் சொன்னால் அதிபர், ஆசிரியர், பட்டதாரிகள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள், டொக்டர், சட்டத்தரணிகள், நீதிபதிகள், பொறியியலாளர்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், படித்தவர், பாமரர், ஹாஜிமார்கள், ஹாபிழ்கள், கல்விமான்கள் போன்றோரைக் கொண்டு இவ்வூர் சிறந்ததாலும் சன்மார்க்க அறிவைக் கற்ற சங்கைக்குரிய உலமாஉகளைக் கொண்டே இவ்வூர் பெயரும் பிரபல்யமும் பெற்று வந்துள்ளது.

இலங்கையில்அன்று முதல் இன்று வரை உலமாஉகள் கூடிய ஒரே நகர் காத்த நகரேயாகும். “வஹ்ததுல் வுஜுத்” கொள்கையைப் பேசியதற்காக மௌலவீ, அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ அவர்களுக்கும் அவர்களது கருத்தை ஏற்ற பல்லாயிரம் முஸ்லிம்களுக்கும் “முர்த்தத்” பத்வா வழங்கப்பட்டதும், பின்பு ஒரு உடன்பாட்டின் படி அது மீளப்பெறப்பட்டதும் இந்நகரிலேயாகும்.

சங்கை உலமாஉகளும் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை கொண்ட இந்நகரில் ஆதிகாலம் முதல் இறைநேசர்களான வலீமார்களும், கிதாபுகள், மவாலித்களை அறபு மொழியில் ஆய்ந்தெழுதிய தகுதி வாய்ந்த உலமாஉகளும் வாழ்ந்துள்ளனர்.

வெளியூர், வெளிநாடுகளிலிருந்து “அஹ்லு பைதின் நபீ” நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரம்பரை வந்த சாதாத்மார்களான மௌலானாமார்களும்

ஷெய்குமார்களும் இங்கு வந்து வாழ்ந்தும் இங்கேயே சிலர் இறையடி சேர்ந்துமுள்ளனர். அவர்களின் அருள் பறகத்தையும் எம் நகர் பெற்றுள்ளது. அவர்களில் புனித கப்றுகளில் பல இன்றுமுள்ளன. சில 2004இல் நடந்த மார்க்க அனர்த்தத்தின் போது உடைக்கப்பட்டு எரிக்கப்பட்டன. அவற்றுள் மிக முக்கியமானதே காத்தான்குடி 02ல் அமைந்திருந்த மௌலானா கபுறடி, குழந்தம்மா கபுறடி என்று ஆதிமுதல் பல்லூர் மக்களாலும் அழைக்கப்பட்டு ஸியாறத் செய்யப்பட்டும் வந்த அதிசங்கைக்குரிய அப்துல் காதிர் மௌலானா வாப்பா அவர்களும், குடும்பமும் நல்லடக்கம் செய்யப்பட்டிருந்த புனித மௌலானா கபுறடி தர்கா ஷரீப்ஆகும்.

அதேபோல் காத்தான்குடி 06ல் அமைந்துள்ள ஒரு நூறு ஆண்டைக் கடந்த அதிசங்கைக்குரிய அஸ்ஸெய்யித் முஹ்ஸின் மவ்லானா அவர்களின் புனித தர்கா ஷரீபுமாகும்.

மாரக்க நிலை :

பொதுவாக நோக்குமிடத்து காத்தான்குடியில் அன்று முதல் இன்று வரை அதிக உலமாஉகள் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையுடையோராகவும், பொதுமக்களில் தொண்ணூறு வீதமானோர் சுன்னிகளான உலமாஉகளைப் பின்பற்றியே மார்க்கக் கடமைகளைச் செய்தும் வருகின்றனர்.

இப்னு அப்தில் வஹ்ஹாப், இப்னு தைமிய்யஹ் போன்றோரின் வஹ்ஹாபியக் கொள்கையில் செல்வோர் இங்கு உள்ளனராயினும் எமதூரைப் பொறுத்து அவர்கள் சிறு கூட்டமேயாவர். இவர்கள் 2000 ஆண்டின் பின்னே இங்கு தோன்றினர். 99 வருடங்களாக மேலாக ஜும்அஹ் பள்ளிவாயல்களில் ஒவ்வொரு றஜப் மாதமும் புனித ஸஹீஹுல் புஹாரீ ஷரீப், புனித முஸ்லிம் ஹதீஸ் கிதாபுகள் ஓதப்படும் ஊரும் எமது மாண்புமிகு நகரேயாகும்.

அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலீ அவர்களின் அவதாரம் :

காத்தான்குடியில்அது பொற்காலம். சன்மார்க்கத்தை கற்றறிந்த உலாமாஉகளே நிறைந்த காலம். அவர்களின்
வழிகாட்டலிலேயே ஊர்மக்கள் வாழ்ந்து வந்தனர். ‘வஹ்ஹாபிஸம்’ என்பதை என்னவென்றே அறியாத மக்களே இருந்தனர். உலமாஉகளும் பாமரர்களும் படித்தவரும் சுன்னத் வல் ஜமாஅத் நெறியிலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்தும் வந்தனர். பாத்திஹா, மௌலித், புர்தஹ், மீலாதுன் நபீ கொண்டாட்டம், அவ்லியாக்களின் நினைவு தின மஜ்லிஸ்கள், தலைபாத்திஹா, திருக்கொடியேற்றம், ஹதீஸ் மஜ்லிஸ், இருபது றக்அத் தராவீஹ் தொழுகை, மரணித்தவர்களுக்கு தல்கீன், கத்ம், குர்ஆன் ஓதுதல், கந்தூரிகள் கொடுத்தல்,ஜும்அஹ் பள்ளிகளில் புனித புஹாரீ ஷரீப், முஸ்லிம் ஷரீப் ஓதுதல் போன்ற இஸ்லாத்தின் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையிலும், கிரியைகளிலும் மக்கள் சன்மார்க்க வழி நடந்தனர். அவ்லியாஉகளையும் ஸாதாத்மார்கள், ஷெய்ஹுமார்களையும் மக்கள் ஏகமாக கண்ணியப்படுத்தி கௌரவித்தும் வாழ்ந்தனர்.

கண்ணியமிக்க  உலமாஉகளே ஊ ரின் முக்கியஸ்தர்களாகவும் வழிகாட்டிகளாகவும் கருதப்பட்டு அவர்கள் மீது மக்கள் நம்பிக்கையும் பெரும் மதிப்பும் கொண்டிருந்தனர்.

இக்காலைதான் 05.02.1908ம் ஆண்டு காத்தான்குடி 06ம் குறிச்சியில் அல்ஹாஜ் அலியார் ஆலிம் அவர்களுக்கும் மூஸா உம்மா இருவருக்கும் இடையே ஆண் குழந்தை ஒன்று அவதரித்தது. அது ஆன்மீக ரோஜாவாகி மணம் கமழ்ந்தது. அவர்களின் அன்புச் செல்வத்துக்கு “அப்துல் ஜவாத்” “வள்ளலின் அடிமை” என்று பெயரிட்டனர். இவ்வருட்கொடையே பிற்காலத்தில் “ஆரிப் பில்லாஹ்” அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் அவர்களாக திகழ்ந்தது.

பெற்றோர் :

அப்துல் ஜவாத் வலீ அவர்களின் அன்னை மூஸா உம்மா அவர்கள் காத்தான்குடியை பிறப்பிடமாகக் கொண்டவராயினும் அவர்களின் தந்தை அல்ஹாஜ் அலியார் ஆலிம் அவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் “நாகூர் ஆலிம்” என்றும் மக்களால் அழைக்கப்பட்டனர். இவர்களது குடும்ப பரம்பரை துருக்கியிலிருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் என்றும் அதனாற்றான் அவர்களது குடும்பத்தவர்களுடைய மூக்கு சற்று பெரியதாக இருப்பதாகவும், அப்துல் ஜவாத் வலீ அவர்கள் தந்தை வழியில் ஆறாவது தலைமுறை ஆலிமாக வந்தவர்கள் என்றும் அவர்களின் அருந்தவப் புதல்வர், கிழக்கில் உதித்த ஞான ஒளி, ஈழத்தின் சொற்கொண்டல், ஷம்சுல் உலமா அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ அவர்கள் ஏழாவது தலைமுறையில் ஆலிமாக தோன்றியவர்கள் என்றும் எழுவரும் ஆலிம்கள் என்றும் அவர்களது வரலாறு ஓதப்படுகிறது.

சங்கை அலியார் ஆலிம் அவர்களுக்கு மூன்று ஆண் குழவிகளும் இரு பெண்களும் மலர்ந்தனர். அனைவரும் தற்போது இறையடி சேர்ந்துவிட்டனர்.

சேய்கள் : 

முதலாமவர் – காத்தான்குடி பரீனாஸ் ஹாஜியின் மாமனார் முஹம்மது ஹனீபா அவர்கள்
இரண்டாமவர் – இந்நூலின் நாயகர் ஆரிப் பில்லாஹ்அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலீ அவர்கள்.
மூன்றாமவர் – சின்னத்தம்பி என்று அழைக்கப்பட்ட அப்துல் குத்தூஸ் அவர்கள். இவர் SSE வரை படித்தவர்.
நான்காமவர் – அவ்வாப்பிள்ளை
ஐந்தாமவர் – நபீஸா உம்மா.

மலரும்….

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments