முஹர்றம் தின சிறப்பு கட்டுரை

September 20, 2017
முஹர்றம் மாதம் நினைவு கூரப்படவேண்டிய 
“ ஸிப்துர் றஸூல் ” இமாம் ஹூஸைன் (றழி) அவர்கள். 
– ​மௌலவீ M.M.A. மஜீத் றப்பானீ –


நபீ ஸல் – அம் அவர்களின் பேரர்களில் ஒருவரும். இஸ்லாத்தின் நான்காவது ஹலீபஹ் அலீ இப்னு அபீ தாலிப் கர்றமல்லாஹூ வஜ்ஹஹூ, அன்னை பாதிமஹ் (றழி) அவர்களின் அன்புப் புதல்வரும், இமாம் ஹஸன் (றழி) அவர்களின் அருமைச் சகோதரருமாகிய இமாம் ஹூஸைன் இப்னு அலீ இப்னு அபீ தாலிப் (றழி) அவர்கள் புனித முஹர்ரம் மாதத்தில் நினைவு கூரப்பட வேண்டியவர்களில் அதிவிஷேடமானவர்கள்.

இவர்கள் ஹிஜ்ரீ 4ம் ஆண்டு ஷஃபான் மாதம் பிறை 5ல் மதீனஹ் முனவ்வறஹ்வில் பிறந்தார்கள்.
இவர்கள் பிறந்த போது நபீ ஸல் – அம் அவர்கள் தங்களின் அருள் நிறைந்த உமிழ்நீரை ஹூஸைன் றழி அவர்களின் வாயில் வைத்து சுவைக்கச்செய்தார்கள். அவர்களின் காதில் பாங்கு சொன்னார்கள். அவர்களின் வாயில் உமிழ்ந்தார்கள். அவர்களுக்காக “ துஆ ” பிரார்த்தனை செய்தார்கள். அவர்கள் பிறந்து ஏழாவது நாளில் அவர்களுக்கு “ ஹூஸைன் – சின்ன அழகர் ” என்று பெயரிட்டார்கள். அதேநாளில் அவர்களுக்காக ஓர் ஆட்டை அறுத்து “ அகீகஹ் ” கொடுத்தார்கள். தங்களின் அன்புப் புதல்வி பாதிமஹ்வை அழைத்து “ஹூஸைனுடைய தலைமுடியை சிரைத்து அதை நிறுத்து, அதன் நிறைக்கேற்ப வௌ்ளியை “ஸதகஹ்”வாக கொடுங்கள் என்று கூறினார்கள்.

ஹூஸைன் (றழி) அவர்கள் மீது நபீ ஸல் – அம் அவர்கள் அதிக அன்பு, இரக்கம் கொண்டவர்களாக இருந்தார்கள். அதேபோன்று அவர்களின் சகோதரர் ஹஸன் (றழி) அவர்கள் மீதும், அதிக அன்பு , இரக்கம் கொண்டவர்களாக இருந்தார்கள். இவ்விருவரைப் பற்றியும் நபீ ஸல் – அம் அவர்கள் பல சந்தர்ப்பங்களில் புகழ்ந்து கூறியுள்ளார்கள்.
ஒருமுறை இவ்விருவரைப் பற்றியும் நபீ ஸல் – அம் அவர்கள் புகழ்ந்து கூறுகையில்,
أَلْحَسَنُ وَالْحُسَيْنُ سَيِّدَا شَبَابِ أَهْلِ الْجَنَّةِ
“ ஹஸனும் ஹூஸைனும் சுவர்க்கத்திலுள்ள வாலிபர்களின் தலைவர்கள் ” என்று கூறினார்கள்.
இன்னும் ஒரு சந்தர்ப்பத்தில் நபீ ஸல் – அம் அவர்களிடம் , “ உங்களுடைய குடும்பத்தினரில் உங்களுக்கு மிக விருப்பமானவர்கள் யார் ? ” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ஹஸனும் , ஹூஸைனும் என்று கூறினார்கள்.
ஆதாரம் – துர்முதீ
இவ்வாறு அவ்விரு சகோதரர்கள் பற்றியும் நபீ ஸல் – அம் அவர்கள் பல சந்தர்ப்பங்களில் புகழ்ந்து கூறியுள்ளார்கள்.
ஆயினும் அவ்விருவரில் இமாம் ஹூஸைன் (றழி) அவர்கள் முஹர்றம் மாதத்தில் நினைவு கூரப்படுவது விஷேட அம்சமாகும். இம்மாதத்தில் உலகெங்கிலுமுள்ள ஸூன்னத் வல் ஜமாஅத் அடிப்படையில் வாழும் மக்கள் அவர்கள் மீது விழா எடுப்பார்கள். அவர்கள் பேரில் மவ்லித் ஓதுவார்கள். அவர்கள் பேரில் அன்னதானம் வழங்குவார்கள். அவர்களைக் கொண்டு தங்களின் தேவைகள் நிறைவேற இறைவனிடம் “ வஸீலஹ் ” தேடுவார்கள்.
இவ்வாறு இவர்கள் முஹர்றம் மாதத்தில் நினைவு கூரப்படுவதற்குக் காரணம், இம்மாதம் 10ம் நாள் அன்றுதான் ஹூஸைன் (றழி) அவர்கள் எதிரிகளால் கொலை செய்யப்பட்டு ஷஹீதானார்கள். எனவேதான் இந்தநாளை மக்கள் நினைவு கூருகின்றார்கள்.
இமாம் ஹூஸைன் (றழி) அவர்கள் “ அபூஅப்தில்லாஹ் ” என்ற புனைப்பெயர் கொண்டு அழைக்கப்பட்டார்கள். அதேபோல் அர்றஷீது – நேர்வழி பெற்றவர். அத்தையிப் – மணம் நிறைந்தவர் , அஸ்ஸகிய்யு – தூய்மையானவர், அல்வபிய்யு – நிறைவேற்றி வைக்கக் கூடியவர், அஸ்ஸெய்யித் – தலைவர், அல்முபாறக் – அருள்செய்யப்பட்டவர், அஸ்ஸிப்து – பேரர் போன்ற இன்னும் பல பட்டப் பெயர் கொண்டும் அழைக்கப்பட்டார்கள். இவற்றில் “ அஸ்ஸகிய்யு ” என்ற பட்டப் பெயர் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இமாம் ஹூஸைன் (றழி) அவர்கள் தனது சகோதரர் ஹஸனைப் போன்று அழகானவர்களாகவும், பெரியோரை மதிக்கக் கூடியவர்களாகவும், மார்க்கப்பற்று நிறைந்தவர்களாகவும் காணப்பட்டார்கள்.
கலிமாவின் தத்துவத்தை மக்கள் மத்தியில் பரப்புவதில் மிகவும் தீவிரமாக செயற்பட்டார்கள்.
நபீ ஸல் – அம் அவர்களின் வபாத்தின் பின் ஸஹாபாக்களில் பெரும்பான்மையினர் உலகின் பல நாடுகளுக்கும் சென்று இஸ்லாத்தின் தத்துவத்தைப் பரப்புவதில் ஈடுபட்டனர் – இமாம் ஹூஸைன் (றழி) அவர்கள் மக்கஹ்வில் தங்கி இறைஞானத்தைப் பரப்புவதில் ஈடுபட்டார்கள்.
இந்நிலையில் இராக் நாட்டின் கூபஹ் நகரில் மார்க்கப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முஆவியா (றழி) அவர்கள் மரணமானார்கள். இதனால் கூபா நகர மக்கள் தங்களுக்கு ஒரு மார்க்க வழிகாட்டி வேண்டும் என்று கருதி, அங்குள்ள ஓரிடத்தில் ஒன்று சேர்ந்தார்கள். தங்களுக்கிடையில் ஆலோசனை நடாத்தினார்கள். இறுதியில் மக்கஹ் நகரில் வாழ்ந்து கொண்டிருந்த நபீ பேரர் ஹூ​ஸைன் (றழி) அவர்களுக்கு ஓர் கடிதம் எழுதி, அவர்களை கூபா நகருக்கு வரவழைப்பதாக முடிவு செய்தார்கள்.
கூபா நகர மக்கள் ஒன்று சேர்ந்து இமாம் ஹூஸைன் (றழி) அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள். அதில் “ அல்லாஹ்வுடைய தூதரின் பேரரே ! கூபா நகர மக்கள் உங்கள் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ் தஆலா உங்களைக் கொண்டு எங்கள் அனைவரையும் சத்தியத்தின் மீது ஒன்று சேர்ப்பானாக. உங்களைக் கொண்டு இஸ்லாத்தைப் பலப்படுத்துவானாக. எனவே நீங்கள் விரைந்து வாருங்கள் ” என்று குறிப்பிட்டார்கள்.
கூபஹ் நகர மக்களிடமிருந்து கடிதத்தைப் பெற்றுக் கொண்ட இமாம் ஹூஸைன் (றழி) அவர்கள் அதற்கு பதில் எழுதினார்கள். அதில் அவர்கள் “ உங்கள் கடிதம் எனக்குக் கிடைத்தது. உங்கள் நோக்கத்தைப் புரிந்து கொண்டேன். இப்பொழுதுள்ள சூழலில் என்னால் அங்கு வரமுடியாது. எனவே, எனக்கு பதிலாக எனது நம்பிக்கைக்குரியவரும், எனது சாச்சாவின் மகனுமாகிய முஸ்லிம் இப்னு அகீலை உங்கள் மத்தியில் அனுப்பி வைக்கிறேன். அவரைக் கொன்டு நீங்கள் நேர்வழி பெற்றுக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டார்கள்.
எனவே, இமாம் ஹுஸைன் (றழி) அவர்கள் முஸ்லிம் இப்னு அகீல் றழி அவர்களை கூபஹ் நகருக்கு அனுப்பி வைத்தார்கள்.
முஸ்லிம் இப்னு அகீல் (றழி) அவர்கள் இறாக் நாட்டின் கூபஹ் தேசத்துக்குச் சென்று அங்குள்ள மக்களுக்கு பைஅத் வழங்கினார்கள். அந்த மக்கள் இமாம் ஹூஸைன் (றழி) அவர்களை முன்னிலைப்படுத்தி, முஸ்லிம் இப்னு அகீல் (றழி) அவர்களிடம் பைஅத் பெற்றுக் கொண்டார்கள்.
முஸ்லிம் இப்னு அகீல் (றழி) அவர்களை கூபஹ் நகருக்கு அனுப்பி வைத்த இமாம் ஹூஸைன் (றழி) அவர்கள் மக்கஹ் நகரில் சிறிது காலம் தங்கினார்கள். பின்னர் கூபஹ் நகருக்குச் சென்று தனது சாச்சாவின் மகன் முஸ்லிம் இப்னு அகீல் (றழி) அவர்களுடன் இணைந்து கொள்ள முடிவு செய்தார்கள்.
எனவே, மக்கஹ்விலிருந்து ஹிஜ்ரி 60ம் ஆண்டு துல்ஹஜ் மாதம் பிறை 8ல் செவ்வாய்க்கிழமை அன்று கூபஹ் நகரை நோக்கிப் புறப்பட்டார்கள். அவர்களுடன் அவர்களின் குடும்பத்தினர், முரீதீன்கள், அடிமைகள் உட்பட மொத்தம் 82 பேர் சென்றதாக அவர்களின் வரலாற்றில் கூறப்படுகின்றது.
மக்கஹ்விலிருந்து புறப்பட்ட இமாம் ஹுஸைன் (றழீ) அவர்களும் அவர்களின் முஹிப்பீன்களும் ‘தஃலிபிய்யஹ்’ என்ற இடத்தை அடைந்த போது அங்கு சற்று ஓய்வு எடுத்தார்கள்.
அங்கே தனது சாச்சாவின் மகன் முஸ்லிம் இப்னு அகீல் (றழீ) அவர்கள் கூபஹ் நகரில் எதிரிகளால் கொலை செய்யப்பட்டு விட்டார்கள். என்ற துயர்மிக்க செய்தி இமாம் ஹுஸைன் (றழீ) அவர்களுக்கு எட்டியது. மிகவும் கவலை அடைந்தார்கள்.
இந்த செய்தியை கேள்வியுற்ற அவர்களின் முஹிப்பீன்களில் சிலர் கூபஹ் நகருக்குச் செல்ல வேண்டாமென்று இமாம் ஹுஸைன் (றழீ) அவர்களை தடுத்தார்கள். ஆனால் அதை அவர்கள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. கூபஹ் நகரை நோக்கி தனது பிரயாணத்தை தொடர்ந்தார்கள். வழியில் பல கஷ்டங்களை அனுபவித்தார்கள். இறுதியில் ஈராக் நாட்டின் கர்பலா என்ற இடத்தை வந்தடைந்தார்கள். இவர்களின் வருகையை அறிந்த எதிரிகள் அவர்களை கொலை செய்ய திட்டமிட்டார்கள்.
இறுதியில் ஹிஜ்ரி 61ம் ஆண்டு முஹர்றம் மாதம் 10ம் நாள் வௌ்ளிக் கிழமை இமாம் ஹுஸைன் (றழீ) அவர்கள் இராக் நாட்டின் கர்பலா என்ற இடத்தில் எதிரிகளால் கொலை செய்யப்பட்டார்கள். இவர்களை ஸினான் இப்னு அனஸ் என்பவன் கொலை செய்ததாக இவர்களின் வரலாற்றில் கூறப்படுகின்றது.
இவர்களை எதிரிகள் கடுமையாகத் தாக்கினார்கள். இவர்கள் கொலை செய்யப்பட்ட போது இவர்களின் புனித உடலில் 33 இடங்களில் ஈட்டியினால் எய்யப்பட்ட காயங்களும் 33 இடங்களில் வாளினால் வெட்டப்பட்ட காயங்களும் காணப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றார்கள்.
இமாம் ஹுஸைன் (றழீ) அவர்கள் கொலை செய்யப்பட்ட போது அவர்களின் உடல் வேறாகவும் தலை வேறாகவும் ஆக்கப்பட்டது.
இவர்களின் புனித உடல் ஈராக் நாட்டின் கர்பலா என்ற இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கின்ற புனித றவ்ழஹ் ஷரீபை உலகெங்கும் வாழும் சுன்னத் வல் ஜமாஅத் மக்கள் தினம் ஸியாறத் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இவர்களின் தலையை வேறாக்கிய எதிரிகள் அதைக் கொண்டு உலகெங்கும் சுற்றினர். இவர்களின் அருள் நிறைந்த தலை எங்கு நல்லடக்கம் செய்யப்பட்டது என்பதில் இமாம்களுக்கிடையில் கருத்து வேறுபாடு உண்டு.
இவர்களின் தலை பலஸ்தீன் நாட்டின் “ அஸ்கலான் ” என்ற இடத்துக்கு கொண்டு வரப்பட்டபோது அவ்விடத்தை ஆட்சி செய்து கொண்டிருந்த அரசன், அங்கேயே ஹுஸைன் றழி அவர்களின் தலையை நல்லடக்கம் செய்ததாக இமாம்களில் சிலர் கூறுகின்றனர்.
இப்னு பகார், அல்அல்லாமஹ் ஹமதானீ போன்ற இன்னும் சில இமாம்கள், அவர்களின் அருள் நிறைந்த தலை, அவர்களின் தாய் அன்னை பாதிமஹ் (றழி) சகோதரர் ஹஸன் றழி அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கின்ற ஜன்னதுல் பகீஇல் நல்லடக்கம் செய்யப்பட்டதாக கூறுகின்றார்கள்.
இமாம்களில் இன்னும் சிலர், இமாம் ஹுஸைன் றழி அவர்கள் கொலை செய்யப்பட்டு 40 நாட்களின் பின் மீண்டும் கர்பலா நகருக்கு கொண்டு வரப்பட்டு அவர்களின் புனித உடலுடன் சேர்த்து நல்லடக்கம் செய்யப்பட்டதாக கூறுகின்றார்கள்.
இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஅறானீ அவர்கள் தங்களின் “ தபாகதுல் அவ்லியா ” என்ற அறபு நூலில் ஹுஸைன் றழி அவர்கள் பற்றிக் கூறும்போது அவர்களின் புனித தலை கிழக்குத் தேசத்திலுள்ள ஓர் ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டதாக கூறுகின்றார்கள்.
இவ்வாறு இமாம் ஹுஸைன் றழி அவர்களின் தலை எங்கு நல்லடக்கம் செய்யப்பட்டது என்பதில் இமாம்களுக்கிடையில் கருத்து வேறுபாடு உண்டு.
இவ்வாறு இஸ்லாத்தின் பாதையிலே கொலை செய்யப்பட்ட இமாம் ஹுஸைன் றழி அவர்கள் புனித முஹர்றம் மாதத்தில் நினைவு கூரப்பட வேண்டியது விஷேட அம்சமாகும்.
புனித முஹர்றம் மாதத்தில் அவர்கள் கொலை செய்யப்பட்ட காரணத்தினால் தான் ஸுன்னத் வல் ஜமாஅத் அடிப்படையில் வாழும் மக்கள் அவர்களை நினைவு கூருகின்றார்கள். அவர்கள் பேரில் மவ்லித் ஓதுகின்றார்கள். அவர்கள் பேரில் அன்னதானம் வழங்குகின்றார்கள். இமாம் ஹுஸைன் றழி அவர்களை முன்வைத்து செய்யப்படுகின்ற ஒவ்வொரு காரியமும் சிறப்பாக முடியும். அவர்களை ஒவ்வொருவரும் நேசிக்க வேண்டும். காரணம் அவர்கள் நபீ ஸல் – அம் அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
இமாம் ஹுஸைன் றழி அவர்களை ஒவ்வொரு முஃமினும் நேசிக்க வேண்டும். அவர்களின் நேசம் நிச்சயம் பிரயோசனமளிக்கும்.
ஒருமுறை நபீ ஸல் – அம் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
حُسَيْنٌ مِنِّيْ وَأَنَا مِنْ حُسَيْنٍ أَللّهُمَّ أَحِبَّ مَنْ أَحَبَّ حُسَيْنًا حُسَيْنٌ سِبْطٌ مِنَ الاَسْبَاطِ
(رَوَاهُ التُّرْمُذِيْ.)
ஹுஸைன் என்னில் நின்றும் உள்ளவர். நான் ஹுஸைனில் நின்றும் உள்ளவர். இறைவா ! ஹுஸைனை நேசிக்கக் கூடியவர்களை நீ நேசிப்பாயாக. ஹுஸைன் பேரர்களில் நின்றும் ஒரு பேரர்.
ஆதாரம் – துர்முதீ
பறாஉப்னு ஆஸிப் றழி அவர்கள் கூறுகின்றார்கள்.
நபீ ஸல் – அம் அவர்கள் தங்களின் தோளில் ஹுஸைன் (றழி) அவர்களை சுமந்தவண்ணம் வருவதைக் கண்டேன். அப்பொழுது அவர்கள் “ இறைவா ! நான் ஹுஸைனை நேசிக்கின்​றேன். நீயும் அவரை நேசிப்பாயாக ” என்று கூறினார்கள்.
மேற்கூறப்பட்ட ஹதீஸ்களில் இருந்து ஹுஸைன் றழி அவர்கள் மீது மஹப்பத் – நேசம் வைப்பதன் அவசியம் தெளிவாகின்றது.

You may also like

Leave a Comment