ஞான ஜோதி அஸ்ஸெய்யித் யாஸீன் மௌலானா

March 6, 2016
– ஷெய்குனா மிஸ்பாஹீ –
1964ம் ஆண்டு நானும், அட்டாளைச்சேனை அஸ்ஸெய்யித் மௌலவீ 
அஸ்ஸெய்யித் மௌலானா அவர்களும் பாணந்துறை தீனிய்யா அறபுக்கல்லூரியில் சங்கைக்குரிய மர்ஹும் அப்துஸ்ஸமத் ஹஸ்றத் முப்தி பலகீ றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் ஓதிக்கொண்டிருந்தோம்.
ஒரு நாள் நாங்கள் இருவரும் வெளிகாமம் அல்லாமா ஞான ஜோதி அஸ்ஸெய்யித் யாஸீன் மௌலானா றஹிமஹுல்லாஹ்
அவர்களைச் சந்திப்பதற்காக வெளிகாமம் சென்றோம்.
ஞான ஜோதி அவர்கள் எங்களை விசாரித்த பின்
இருவரையும் அமரச்செய்து தேனீர் தந்து உபசரித்து விட்டு எதற்காக என்னைச் சந்திக்க வந்தீர்கள்
என்று வினவினார்கள்.

தாங்கள் மிஃறாஜ் சென்றதாகவும், அது
தொடர்பாக உலமாக்கள் தங்களை எதிர்த்துக் கொண்டிருப்பதாகவும் கேள்விப்பட்ட போது தங்களை
சந்திக்க விரும்பினோம் என்று சொன்னோம்.
ஆம். நான் மிஃறாஜ் சென்றது
உண்மைதான். எனினும் உலமாக்கள் விடயம் புரியாமல் நான் பொய் சொல்வதாக
தவறான செய்தியை பறப்பிக் கொண்டிருக்கின்றார்கள். நான்
“மிஃறாஜ்” சென்றது பெருமானார் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அன்னவர்கள் சென்ற “மிஃறாஜ்” போன்றல்ல. அவர்கள் “றூஹ்”
உயிர், “ஜிஸ்ம்” உடல் இரண்டோடும்
சென்றார்கள். அவ்வாறு செல்வது அவர்களுக்கு மட்டுமே சொந்தம்.
வேறெவரும் அவ்வாறு போக முடியாது. எனது
“றூஹ்” மட்டும்தான் சென்றெதேயன்றி அவர்கள் போனது
போல் நான் போகவில்லை.
நான் இது தொடர்பாக அறபியில் ஒரு “கிதாப்”
நூல் எழுதியுள்ளேன். அதை நீங்கள் படித்துப் பாருங்கள்
என்று கூறியவர்களாக இருவருக்கும் இரு கிதாபுகள் தந்தார்கள்.
எங்களுடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த
சங்கைமிகு ஞானஜோதி அவர்கள்
(إِنْ تَغَيَّبْتُ بَدَا وَإِنْ بَدَا غَيَّبَنِيْ)
என்றால் விளக்கம் தெரியுமா? என்றுகேட்டார்கள். இல்லை. நாங்கள்
ஓதிக்கொண்டிருக்கும் மாணவர்கள் என்று சொன்னோம்.
“நான்
மறைந்தால் அவன்
– அல்லாஹ்
– வெளியாகுவான். அவன் வெளியானால் என்னை மறைத்து விடுவான்”
என்று பொருள் கூறிய ஜோதி அவர்கள் “வஹ்ததுல் வஜூத்”
தொடர்பாக நீண்ட நேரம் விளக்கம் கூறினார்கள்.
நாங்கள் இருவரும் சிறு
வயதினர்களாகவும், ஓதிக்கொண்டிருந்த மாணவர்களாகவும் இருந்ததால் அவர்கள் கூறிய விளக்கத்தை
எங்களால் புரிந்து கொள்ள முடியாமற் போய்விட்டது. இறுதியில் அவர்களுக்கு
“ஸலாம்” கூறி “முஸாபஹா”
செய்து “துஆ” செய்யுமாறும்
கேட்டுக் கொண்டு திரும்பி விட்டோம்.
இவர்களை எதிர்த்த உலமாக்களில்
காலி “இப்றாஹீமிய்யா” அறபுக் கல்லூரியில் எனக்கு
“உஸ்தாத்” ஆசிரியராக இருந்த ஒருவரும் அடங்குவார்.
இவர் ஞானஜோதி அவர்களைக் குறிப்பிடும் போதெல்லாம்       “தமவ்லானா” என்றுதான் சொல்வார். நான் இவருடன் பல சந்தர்ப்பங்களில்
இது தொடர்பாக தர்க்கம் செய்துள்ளேன். இவர் “பிக்ஹ்” என்ற சட்டக்கலையில் நிகரற்றவராயிருந்தாலும் கூட
இவரிடம் “தஸவ்வுப்” என்ற “ஸூபிஸம்” மண்ணளவும் இருக்கவில்லை. இதனால் இவருக்கு “வலீ”மாரின் மகிமை
மறைந்து விட்டது. அவர்களின் “துஆ”வும் தவறிவிட்டது.
ஞானஜோதி அவர்களைச்
சந்திக்கச் செல்லுமுன் எனது மதிப்பிற்குரிய தந்தை மர்ஹூம் அப்துல் ஜவாத் ஆலிம் “வலீ”
றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதியிருந்தேன்.
அவர்கள் எனக்கு எழுதிய பதிலில் “அவர் பெரிய மனிதர்.
அவரைச் சந்திப்பது நல்லது” என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
அதன் பிறகுதான் சந்திக்கச் சென்றிருந்தேன்.
யாஸீன் மௌலானா றஹிமஹுல்லாஹ்
அவர்கள் அன்று கூறிய

(إِنْ تَغَيَّبْتُ بَدَا وَإِنْ بَدَا غَيَّبَنِيْ) 

“நான் மறைந்தால்
அவன் வெளியாகுவான் அவன் வெளியானால் என்னை மறைத்து விடுவான்” என்ற
தத்துவத்திற்கான விளக்கத்தை காலம் கடந்தே பிறகுதான் தெளிவாக விளங்க முடிந்தது.

“ஸுபீ”களிடம் “பனா” என்றும் “பகா” என்றும் இரு நிலைகள் உண்டு. அதாவது அவர்கள் இவ்விரு நிலைகள் பற்றியும் பேசுவார்கள். தமது நூல்களில் எழுதுவார்கள். துறை தெரியாமல் தோணி தொடுப்பவர்களுக்கு
இவ்வுண்மை விளங்காது.
“ஆரிபீன்”
இறைஞானிகள் கூறிய கருத்துக்களை விளங்குவதற்கு அறபு மொழித் திறமை மட்டும்
இருந்தால் போதாது. நக்குத் தின்பதற்கும் “நஸீப்” வேண்டும் என்று முன்னோர் சொன்னது போல் அவர்களின்
பேச்சை விளங்கிக் கொள்வதற்கும் “நஸீப்” அவசியம்தான்.
மேலே நான் எழுதிய தத்துவம்
ஸெய்யித் யாஸின் மௌலானா றஹிமஹுல்லாஹ் அவர்கள் சொல்ல நாங்கள் கேட்டிருந்தாலும் அது அஷ்
ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்ன தத்துவமாக
இருக்கலாம் என்று நான் கருதுகின்றேன்.

அஸ்ஸெய்யித் யாஸீன் மௌலானா றஹிமஹுல்லாஹ்
அவர்கள் போல் இலைமறை காய்களாக பல இறை ஞானிகள் நமது இலங்கை நாட்டில் வாழ்ந்துள்ளார்கள். அவர்களை
சமூகத்திற்குத் தெரிய விடாமல் மறைத்த இலைகள் பொறாமை கொண்ட உலமாக்களேயாவர்.

You may also like

Leave a Comment