ஷரீஅத் வேண்டாம் என்று நாம் சொல்லவில்லை.

April 9, 2016
ஆக்கம் – மௌலவி MT. பஹ்றுத்தீன் ஸுஹ்தி 
றப்பானி, மிஸ்பாஹீ

இனியோரே!

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு

மஃரிபத் என்ற இறைஞானத்திற்கு முரணானவர்களான கர்னிகள் என்ற ஷிர்க் சிப்பாய்கள் பொய்யாக கற்பனை செய்து சித்தரிக்கக் கூடிய விடயங்களில் ஒன்று என்னவெனில் :- மஃரிபத் எனப்படுகின்ற இறைஞான வழியைப் பின்பற்றுவோர் ஷரீஅத் என்கின்ற வணக்க வழிபாடு அம்சங்களான தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் மற்றும் இது போன்ற கிரியைகளில் அதிக கவனம் செலுத்துவதில்லை. இன்னும் அவர்கள் பின்பற்றும் அவர்களின் இறைஞான அறிஞர்களும் அவ்வாறே இருந்துள்ளார்கள் என்பதாகும்.

இப்படிக் கூறுவது இவர்களின் மாபெரும் அறியாமையாகும். இவர்கள் இப்படிக் கூறுவதற்கு இவர்களிடத்திலே எவ்வித ஆதாரங்களுமே கிடையாது. எல்லாம் வெறும் கற்பனை செய்திகள் என்பதே வெளிச்சமான உண்மையாகும்.

ஷரீஅத் – வணக்க வழிபாடு அம்சங்கள் என்பது இஸ்லாத்தின் அடிப்படையாகும். அவை இல்லையெனில் இஸ்லாம் என்பது வெளிப்படையாக இருக்காது. 
எவர் ஷரீஅத் – வணக்க வழிபாடு அம்சங்களை மறுக்கின்றாரோ, வெறுக்கின்றாரோ நிச்சயமாக அவர் இறை நிராகரிப்பாளர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இதுவே மஃரிபத் – இறைஞான வழி நடக்கக்கூடிய எமது கோட்பாடாகும்.
அறிந்து கொள்ளுங்கள்!
இஸ்லாம் என்பது ஓர் விரிந்த மரமாகும். அம்மரத்தை நிலைநாட்டச் செய்யும் வேர்கள்தான் ஷரீஅத் எனப்படும் வணக்க வழிபாடு அம்சங்களாகும். அம்மரத்தில் காய்க்கின்ற பூக்களும், கனிகளும்தான் மஃரிபத் எனப்படுகின்ற இறைஞானம் ஆகும்.
ஒருவருக்கு பூக்களும், கனிகளும் கிடைக்க வேண்டுமானால் அம்மரத்தில் வேர்களை நிலையானதாக, அசையாததாக வைத்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமன்றி மரத்தின் வேர்களுக்கு தினமும் நீர் பாய்ச்சி அதை கவனித்தும் வர வேண்டும். அப்போதுதான் அவருக்கு பூக்களும், கனிகளும் கிடைக்கும்.
இதுபோன்றே ஒருவர் மஃரிபத் என்ற இறைஞான கனிகளையும், பூக்களையும் சுவைக்க நாடினால் அவர் ஷரீஅத் என்கின்ற வேரை நிலையானதாக வைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் சேர்த்து அவ்வேருக்கு அனுதினமும் தொழுகை, நோன்பு மற்றும் ஏனைய வணக்க வழிபாடுகள் என்ற தண்ணீர்களை ஊற்றி வர வேண்டும். அப்போதுதான் அவருக்கு மஃரிபத் எனப்படுகின்ற பூக்களும், கனிகளும் சுவைப்பதற்குக் கிடைக்கும்.
இதற்கு மாற்றமாக ஒருவர் “நான் தொழாமல் இருந்து கொண்டு இறைஞானம் அடைந்தேன்” என்றாலோ அல்லது “நோன்பு நோற்காமல் இருந்து கொண்டு இறைஞானத்தின் உச்சத்தை அடைந்தேன்” என்று கூறினாலோ அது பொய்யாகும்.
அப்படிக் கூறுபவரை நாம் வழிகெட்டவராகவும், வழிகெடுப்பவராகுமே கணிக்க வேண்டும்.
எனவே, ஷரீஅத் இல்லாத மஃரிபத் வீணானதாகும். ஷரீஅத்துடன் சேர்ந்த மஃரிபத்தே சரியானதாகும்.
இனி, இறைஞானக் கடலில் மூழ்கிப்போன நாம் பின்பற்றக்கூடிய எமது இறைஞான அறிஞர்கள் ஷரீஅத்தை – வணக்க வழிபாடுகளைப் பற்றிப் பிடிக்கும்படி தங்களது நூல்களில் கூறியுள்ள பல கருத்துக்களிலிருந்து சில கருத்துக்களைப் பார்ப்போம். இக்கருத்துக்களில் இருந்து சில நபர்கள் இறைஞான வழியில் செல்லக் கூடியவர்கள் மீது அபாண்டமாகச் சித்தரிக்கும் பொய் நீங்குகின்றது. ஏனெனில் இவற்றைக் கூறியிருப்பது இறைஞான வழியில் சென்ற எமது முன்னோடிகளாகும்.
அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்…
كلّ من ترك ميزان الشريعة من يده لحظة هلك
பொருள் : தனது கையிலிருந்து ஒரு வினாடியேனும் ஷரீஅத் என்ற தராசை விட்ட ஒவ்வொருவரும் அழிந்துவிடுவார்கள்.
நூள் : தத்பீறாதுல் இலாஹிய்யா
பக்கம் : 127
மேலும் கூறுகிறார்கள்…
إعلم وفّقك الله أنّ الشريعة هي المحجّة البيضاء محجّة السعداء وطريق السعادة من مشى عليها نجا. ومن تركها هلك
பொருள் : நீ அறிந்து கொள்! அல்லாஹ் உனக்கு உதவியுடன் சேர்த்து அருள் புரிவானாக! நிச்சயமாக ஷரீஅத் என்பது வெண்மையான நேரான பாதையாகும். அது நற்பாக்கியமான பாதையும், நற்பாக்கியம் பெற்றவர்களின் பாதையாகும்.
எவன் அப்பாதையில் நடந்து செல்கின்றானோ அவன் வெற்றி பெறுவான். எவன் அப்பாதையை விட்டும் விலகிச் செல்கின்றானோ அவன் தோல்வி கண்டு அழிந்துவிடுவான்.
நூல் : புதூஹாதுல் மக்கிய்யா
பாகம் : 02
பக்கம் : 69
மேலும் அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தாங்கள் இயற்றிய பிறிதொரு பாடலில் பின்வருமாறு கூறுகிறார்கள்.
لا تقد بالذي زالت شريعته *** عنه ولو جاء بالإنبا عن الله
பொருள் : ஏய் மனிதா! ஷரீஅத் இல்லாதவனை நீ பின்பற்றாதே! அவன் அல்லாஹ்தஆலாவிடம் இருந்து நேரடியாக செய்திகளைக் கொண்டு வந்தாலும் சரியே!
நூல் : புதூஹாத்துல் மக்கிய்யா
பாகம் : 02
பக்கம் : 364
02) இன்னும் குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் அல்ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஷரீஅத்தைப் பற்றிப் பிடிக்கும்படி பின்வருமாறு மொழிந்துள்ளார்கள்.
ترك العبادات المفروضة زندقة. لا تسقط الفرائض عن أحد في حال من الأحوال
பொருள் : கடமையாக்கப்பட்ட வணக்க வழிபாடுகளை விடுவது ஈமானை வெளிக்காட்டி இறை நிராகரிப்பை உள்ளத்தினுள் மறைத்து விடுகின்ற செயலாகும்.
கடமையாக்கப்பட்ட வணக்க வழிபாடுகள் எந்த நிலையிலும் எவரை விட்டும் நீங்காது. அவற்றை செய்தே ஆக வேண்டும்.
நூல் : பத்ஹுர் றப்பானீ
பக்கம் : 27
03) ஸெய்யிதுத் தாயிபா ஜுனைத் அல் பக்தாதீ றழியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்

إذا رأيتم شخصا متربعا فى الهواء فلا تلتفتوا إليه إلا أن رأيتموه مقيدا بالكتاب والسنة
பொருள் : ஆகாயத்தில் ஒரு மனிதர் கால்களை மடித்து அமர்ந்திருக்கக் கண்டாலும் அவரை நீங்கள் திரும்பிக் கூட பார்க்காதீர்கள். அவரை நீங்கள் அல்குர்ஆனையும், அல்ஹதீஸையும் பின்பற்றக் கூடியவராக கண்டாலே தவிர.
நூல் : யவாகீத் வல் ஜவாஹிர்
பாகம் : 02
பக்கம் : 37
04) மேலும் சுல்தானுல் ஆரிபீன் ஸெய்யித் அஹ்மத் கபீர் அர்ரிபாயீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள்ஷரீஅத்தைப் பற்றிக் கூறும்போது

كل طريقة خالفة الشريعة فهي زندقة

பொருள் : ஷரீஅத்துக்குப் புரம்பான ஒவ்வொரு பாதையும் ஈமானை வெளிப்படுத்தி இறை நிராகரிப்பை உள்ளத்தினுள் மறைத்து விடக் கூடியதாகும் என்று கூறியுள்ளார்கள்.
நூல் : அவாரிபுல் மஆரிப்
பக்கம் : 57
எனவே, நாம் மேற்கூறிய அனைத்து இறைஞான அறிஞர்களின் கூற்றுக்களும் இறைஞான வழியில் செல்லக்கூடியவர்கள் மீது கர்னிகள் என்ற ஷிர்க் சிப்பாய்கள் பொய்யாக சித்தரிக்கும் கருத்துக்களை மெய்யாக உடைத்தெறியப்படுவதை நீங்கள் நன்கு விளங்கியிருப்பீர்கள்.

ஆகவே, உண்மையை அறிந்து கொள்ளுங்கள்! பொய்மையைத் தவிர்ந்து கொள்ளுங்கள்! நன்மையை அள்ளிக் கொள்ளுங்கள்! சத்தியத்தை நிலை நாட்ட எழுந்து வாருங்கள்! அசத்தியத்தை தவிடுபொடியாக்க கைகோருங்கள்! அல்லாஹுதஆலா உங்கள்மீது ஈருலகிலும் அவனது அருள் மழையெனும் அடைமழையைக் கொட்டுவானாக!
– ஆமீன் –

You may also like

Leave a Comment