Thursday, April 25, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஸலவாத்தைச் சுருக்க வேண்டாம்

ஸலவாத்தைச் சுருக்க வேண்டாம்

எழுதியவர்: மௌலவீ  MT. பஹ்றுத்தீன் ஸுஹ்தீ றப்பானீ
13.11.2015 அன்று ஜும்அஹ் தொழுகையின் பின் ஷம்ஸ் மீடியா யுனிட் நிறுவனத்தினரால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்

அன்பினிய ஏகத்துவ சகோதர சகோதரிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு

 

மங்காத முழுமதி, மண்ணாளும் இறைபதி, எம் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அருள் மிகு திருநாமத்தை எழுத்து வடிவில் எழுதும் போது பெரும்பான்மையான மக்கள் அத்திருநாமத்துடன் ஸலவாத்தைச் சுருக்கியே எழுதுகின்றனர். இது மனவேதனை தரக்கூடிய ஓர் செயலாகும்.
அறபு மொழியில் எழுதும் போது (ص، صلعم) என்றும், தமிழ் மொழியில் எழுதும் போது (ஸ, ஸல்) என்றும், ஆங்கில மொழியில் எழுதும் போது (SAL, SAWS) என்றும் ஸலவாத்தை சுருக்கியே குறிப்பிடுகின்றனர்.
இப்படி ஸலவாத்தைச் சுருக்கி எழுதுவது முழு ஸலவாத்தைக் கூறியது போல் ஆகாது. அது மட்டுமன்றி ஸலவாத் சொன்ன நன்மையும் சுருக்கி எழுதுவோர்க்கு இதன் மூலம் கிடைக்காது.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருப்பெயரைக் கேட்டவுடன் அல்லது அத்திருப்பெயரை காகிதங்களில் எழுதும் போது ஸலவாத்தைக் கூறுவது அவசியமா?
பதில் : இந்த விடயத்தில் இமாம்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ஒரு சிலர் “சுன்னத்” என்கிறார்கள். இன்னும் சிலர் “வாஜிப்” என்கிறார்கள்.
இதில் சரியான சொல் வாஜிப் என்பதேயாகும். ஏனெனில் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்
 
اَلْبَخِيلُ مَنْ ذُكِرْتُ عِنْدَهُ، فَلَمْ يُصَلِّ عَلَيَّ
எவனிடத்தில் நான் நினைவு கூறப்பட்டு, அவன் என் மீது ஸலவாத்
சொல்லவில்லையோ அவன்தான் கஞ்சன் ஆவான்
(முஸ்னத் அஹ்மத் : 1736)
என்று கடிந்து கூறியிருக்கிறார்கள். எனவே, நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருப்பெயரைக் கேட்டவுடன் அல்லது அதை காகிதங்களில் எழுதும் போது ஸலவாத்தையும் குறிப்பிடுவது அவசியம் என்பது தெளிவாகின்றது.

பாரிய விளைவுகள்:

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருநாமத்துடன் ஸலவாத்தை சுருக்கி எழுதுவதன் காரணமாக பாரிய இரண்டு விளைவுகள் ஏற்படுகின்றன.
அவ்விரு விளைவுகளையும் நாம் எடுத்து ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் அவ்விரண்டும் (குப்ர்) இறை நிராகரிப்பின் பக்கம் மெல்ல மெல்ல இழுத்துச் செல்லக் கூடியவைகளாகும். அவ்விரு விளைவுகள் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.
விளைவு 1 : இறைவனின் கட்டளைக்கு மாறு செய்தல்.
அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில்,
إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا 
நிச்சயமாக அல்லாஹ்வும், அவனது மலக்குகளும் அந்த நபிகள் நாதர் மீது ஸலவாத் சொல்கிறார்கள்.
ஈமான் கொண்டோரே! நீங்களும் அவர்கள் மீது ஸலவாத்தும் சொல்லி ஸலாமும் சொல்லுங்கள்.
(சூறதுல் அஹ்ஸாப் – 56)
மேற்கூறப்பட்ட வசனத்தின் மூலமாக அல்லாஹுத்தஆலா உலக முஃமின்கள் அனைவரையும் அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது ஸலவாத், ஸலாம் சொல்லுமாறு கட்டளையிடுகின்றான்.
கவனிக்க :  அல்லாஹ்வின் கட்டளை ஸலவாத் சொல்லுங்கள் என்றுதானே ஒழிய சுருக்கிச் சொல்லுங்கள் என்பது கிடையாது.
எனவே, ஸலவாத்தைச் சுருக்கி குறிப்பிடுவதன் மூலமாக அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறுசெய்கின்ற நிலை ஸலவாத்தை சுருக்கி குறிப்பிடுவோர்க்கு ஏற்படுகின்றது.
அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்தல் என்பது எவ்வித சந்தேகமுமின்றி இறை நிராகரிப்பாகும். அல்லாஹ் பாதுகாப்பானாக!
விளைவு 2 : பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் கண்ணியத்திற்கு குறை ஏற்படுத்துதல்.
அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருநாமத்துடன் ஸலவாத்தை சுருக்கி எழுதுவதென்பது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் கண்ணியத்தில் குறையை ஏற்படுத்துகின்ற ஒரு விடயமாகும்.
அவர்கள் மீது கூறப்பட வேண்டிய முழு ஸலவாத்தை இரண்டு சொற்களால் அல்லது நான்கு சொற்களால் குறைத்துக் கூறுவது அவர்களை அவமரியாதை செய்வதைப் போன்ற அமைப்பில் உள்ள ஒன்றாகும்.
அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் அநேகமான இடங்களில் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை கண்ணியப்படுத்துமாறும், அவமரியாதைகள், நோவினைகள் செய்ய வேண்டாம் என்றும் பல விதமான வசனங்களை இறக்கிக் கூறியுள்ளான்.
எனவே, எவர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்கு கொடுக்க வேண்டிய கண்ணியத்தை கொடுக்காமல் அவர்களை அவ மரியாதை செய்கிறாரோ அவர் திருமறையின் கூற்றின் படியும், சர்வ இமாம்களின் ஏகோபித்த முடிவின் படியும் இஸ்லாம் மார்க்கத்தை விட்டும் நீங்கியவராவார். அவரின் இரத்தத்தை ஓட்டச் செய்வதற்கும் இஸ்லாம் அனுமதியளிக்கின்றது.
ஸலவாத்தை எழுதுவதன் சிறப்பில் இடம்பெற்ற ஹதீஸ்
 
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ صَلَّى عَلَيَّ فِي كِتَابٍ لَمْ تَزَلِ الْمَلَائِكَةُ تَسْتَغْفِرُ لَهُ مَا دَامَ اسْمِي فِي ذَلِكَ الْكِتَاب
(رواه الطبراني فى الأوسط : 1835)
“எவர் ஒரு காகிதத்தில் (என் பெயரை எழுதி) ஸலவாத்தைக் குறிப்பிடுகிறாரோ என் பெயர் அக்காகிதத்தில் இருக்கும் காலமெல்லாம் மலக்குமார்கள் அவருக்காகப் பாவமன்னிப்புத் தேடுகிறார்கள்.”
ஸலவாத்தைச் சுருக்கி எழுதுவது சம்பந்தமாக அல்லாமா ஜலாலுத்தீன் ஸுயூத்தீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்களின் கூற்று :
 
يُكْرَهُ الرَّمْزُ إِلَيْهِمَا فِي الْكِتَابَةِ بِحَرْفٍ أَوْ حَرْفَيْنِ، كَمَنْ يَكْتُبُ صَلْعَمْ بَلْ يَكْتُبُهُمَا بِكَمَالِهِمَا وَيُقَالُ إِنَّ أَوَّلَ مَنْ رَمَزَهُمَا بِصَلْعَمْ قُطِعَتْ يَدُهُ.
(تدريب الراوي :جزء 2، ص 45)
“இமாம் அல்லாமா ஜலாலுத்தீன் ஸுயூத்தீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள். صَلْعَمْ என்று எழுதுவது போன்று ஒரு எழுத்தைக் கொண்டு அல்லது இரு எழுத்தைக் கொண்டு ஸலவாத், ஸலாமைச் சுட்டிக்காட்டி சுருக்கி எழுதுவது வெறுக்கப்பட்டதாகும்.
அவ்விரண்டையும் சம்பூரணமாகவே எழுத வேண்டும்.
ஸலவாத்தையும், ஸலாமையும் صَلْعَمْ என்று சுருக்கி முதன் முதலாக கூறியவனின் கை வெட்டப்பட்டது என்று சொல்லப்படுகின்றது.
ஆகவே அன்புக்குரியவர்களே!
நாம் மேற்குறிப்பிட்ட இமாம் ஸுயூத்தீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்களின் கருத்துப் படி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் மீது சொல்லப்படுகின்ற ஸலவாத்தை சுருக்காமல், குறைக்காமல் முழுமையாகவே குறிப்பிட வேண்டுமென்பதை மிகத் தெளிவாக வலியுறுத்தி காட்டுகின்றது.
அது மட்டுமல்ல ஏனைய நபீமார்களின் நாமங்களை எழுதும் போது (அலை) என்றும், ஸஹாபாக்களின் நாமங்களை எழுதும் (றழீ) என்றும், தாபியீன்கள், இமாம்களின் நாமங்களை எழுதும் போது (றஹ்) என்றும், ஸூபியாக்கள், வலீமார்களின் நாமங்களை எழுதும் போது (கத்தஸ) என்றும், அவர்களுக்கு செய்ய வேண்டிய துஆவைக் குறைத்து, சுருக்கி கூறுவது பிழையானதே ஆகும்.
மாறாக, நபீமார்களின் நாமங்களை எழுதும் போது (அலைஹிஸ்ஸலாம்) என்றும், ஸஹாபாக்களின் நாமங்களை எழுதும் போது (றழியல்லாஹு அன்ஹு) என்றும், தாபியீன்கள், இமாம்களின் நாமங்களை எழுதும் போது (றஹிமஹுல்லாஹ்) என்றும், ஸூபியாக்கள், வலீமார்களின் நாமங்களை எழுதும் போது (கத்தஸல்லாஹு ஸிர்றஹுல் அஸீஸ்) என்றும் துஆவைச் சேர்த்துக் குறிப்பிடுவது மிகவும் ஈடேற்றமானதாகும்.
எனவே அன்புக்குரியவர்களே! உண்மையை அறிந்து கொள்ளுங்கள்! பொய்மையைத் தவிர்ந்து கொள்ளுங்கள். நன்மையை அள்ளிக் கொள்ளுங்கள்! சத்தியத்தை நிலை நாட்ட எழுந்து வாருங்கள். அசத்தியத்தை தவிடு பொடியாக்க கைகோருங்கள்.! அல்லாஹ் ஈருலகிலும் அவனது அருள்மழை எனும் விடா மழையை உங்கள் மீது கொட்டுவானாக!

ஆமீன்! யா றப்பல் ஆலமீன்

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments