Friday, March 29, 2024
Homeஎழுத்தாக்கங்கள்இறைவனுக்காக தன்னைத் தியாகம் செய்த இறை நபீ இப்றாஹீம் (அலை) அவர்கள்!

இறைவனுக்காக தன்னைத் தியாகம் செய்த இறை நபீ இப்றாஹீம் (அலை) அவர்கள்!

-மௌலவீ ,சாமஶ்ரீ,தேசகீர்த்தி. 
HMM. இப்றாஹீம்(நத்வீ)(JP)- 
இவ்வுலகில் நடைபெறும் செயல்கள் யாவும் அல்லாஹ்வைக் கொண்டே நடைபெறுகின்றன. என்று நாம் நம்பியுள்ளோம். நிகழும் செயல்களில் இன்பமாயினும், துன்பமாயினும் அனைத்தின் மூலமாகவும் அல்லாஹ் தனது அடியார்களைச் சோதிக்கின்றான் என்பதும், அதில்பொறுமையைக் கடைப்பிடித்து பொருந்திக் கொள்பவரே வெற்றி பெறுகிறார் என்பதும் திருக்குர்ஆன் ஹதீஸின் முடிவாகும். 
அல்லாஹ்வை அறியாதவரும் அவனது செயற்பாடுகளே உலகில் நடக்கின்றன என்பதைப் புரியாதவர்களும் இறைவனின் சோதனைகளைப் பொருந்திக் கொள்வதில்லை. 
அல்லாஹ்வை அறிந்தவர்களும் அவனது செயற்பாடுகளே உலகில் நடக்கின்றன என்பதைப் புரிந்தவர்களுமே அவனது சோதனைகளைப் பொருந்திக் கொள்கின்றனர். அவர்களே பரீட்சையில் சித்தியடைகின்றனர். தன்னை அறிந்தவர் களையே இறைவன் பெரிதும் சோதிப்பதுண்டு. மற்றோர் அது இறைசோதனை என்று புரிந்து கொள்வதில்லை. இவ்வடிப்படையில் கடுமையான கஷ்டங்களையும், பலாய் மூஸீபத்துக்களையும் அனுபவித்து பொறுமை கொண்டவர்கள் நபீமார்களும், றஸுல்மார்களுமேயாவர். 
அவர்களையடுத்தவர் “உலமாஉபில்லாஹ்” அல்லாஹ்வை அறிந்த உலமாக்களும் “அவ்லியாஉல்லாஹ்” எனப்படும் இறைநேசர்களும் ஸாலிஹீன்களான நல்லடியார்களுமேயாவர் 
இவர்களில் எங்கள் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் கலிமாவுக்காக உறவைத்துறந்தார்கள் உறவினர்களால் வெறுக்கப்பட்டார்கள் தான் பிறந்த நாட்டை, நண்பர்களைத் துறந்தார்கள். அவர்களைக் கொல்வதற்கு மக்கத்துக் காபிர்கள் துணிந்தார்கள். 
இதேபோன்றுதான் இஸ்லாம் மார்க்கத்தை நிலைநாட்ட வந்த ஏனைய நபீமார்கள். றஸுல்மார்களுமாவர். இங்கு எல்லா நபீமார்களையும், றஸுல் மார்களையும் அவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகளையும் விளக்கமுடியாது இது தியாகத் திருநாள் ஹஜ்ஜுப் பெருநாளாக இருப்பதால் அதனோடு சம்பந்தப்பட்ட நபீ இப்றாஹீம் (அலை) அவர்களையும், அவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகளையும் சுருக்கமாக வடிப்பது பொருத்தம் என்று கருதுகின்றேன். 
நபீ இப்றாஹீம் (அலை) அவர்கள் 
இவர்களே முதலில் மிஸ்வாக் செய்தவர்கள். சிறுநீர் கழித்தபின் தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்தவர்களில் இவர்களே முந்தியவர்கள். 
மேலும் நபீ இப்றாஹீம் அவர்களே முதலில் “கத்னா” செய்தவரும். முதலில் மீசையைக் கத்தரித்தவரும், முதலில் நரையைக் கண்டவர்களும், முதலில் சிர்வாலை அணிந்தவரும், முதலில் விருந்தளித்தவர்களும் அவர்களேயாவர். 
சோதனைகள். நபீ இப்றாஹீம் (அலை) அவர்களை இறைவன் பலவாறு சோதித்தான். அத்தனைசோதனைகளையும் அவர்கள் பொருந்திக் கொண்டார்கள். இறுதியில் வெற்றியும் கண்டார்கள். அவர்களைச் சூழ்ந்த சோதனைகளில் நான்கு முக்கியமானவை. 
1) தனது மனைவியை யாருமற்ற இடத்தில் விட்டு வரும்படி ஏவப்பட்டமை. 
2) தனது மகன் இஸ்மாயீல் நபீயை அறுத்துக் குர்பான் கொடுக்க ஏவப்பட்டமை.  
3) நிம்றூத் அரசனால் தீக்கிடங்கில் தான் எறியப்பட்டமை. 
4) கோடிக்கணக்கான தனது பொருளாதாரத்தை இறை திக்ருக்காகக் கொடுத்தமை. 
முதலாவது சோதனை. 
நபீ இப்றாஹீம் (அலை) அவர்கள் “கலீலுல்லாஹ்” அல்லாஹ்வின் நண்பன் என்று பட்டம் பெற்றவர்கள். 
இவர்களது வெளியமைப்பு மற்றவரின் பார்வைக்கு வித்தியாசமான கருத்தை ஏற்படுத்தியது, மற்றோர் வித்தியாசமான நோக்கினும் அவர்கள் அல்லாஹ்வின் மெய்யடிமையாகவும், நண்பனாகவுமே திகழ்ந்தார்கள். 
இவர்கள் “ஹாஜர்”, “சாறஹ்” என்ற இருமங்கையரை மணந்திருந்தார்கள். சிலர் இவர்களது வெளியமைப்பைக் கண்டு பெண்ணாசை கொண்டவர் என்று கருதினார்கள். ஆனால் அவர்களது உள்ளத்தில் தன்மனைவியரை விட அல்லாஹ்வின் ஆசை நிறைந்திருப்பதை அல்லாஹ் கண்டான். அதை வெளிப்படுத்திக்காட்ட அல்லாஹ் விரும்பினான் அதனால் மனைவி ஹாஐர் அவர்களை அந்நேரம் யாருமற்ற தற்போதைய கஃபஹ் அருகில் விட்டு வரும்படி அல்லாஹ் கட்டளையிட்டான். 
இப்றாஹீம் இக்கட்டளையை எப்படி நிறைவேற்றப் போகிறார் என்று மலக்குகள் கூட எதிர்பார்தனர். ஆனால் இப்றாஹீம் நபீ அவர்கள் தனக்குத் தனது மனைவி மேல் இருக்கும் பாசத்தைவிட அல்லாஹ்வின் கட்டளையே மேலானது எனக்கருதி இறை கட்டளையை நிறைவேற்றினார்கள். அவர்களது உள்ளத்தில் இறைபாசமே மேலோங்கியது. 
இரண்டாவது சோதனை 
அவர்களுக்கு ஏற்பட்ட இச்சோதனை மிகக்கடினமானது. அன்று இப்றாஹீம் நபீ நித்திரை செய்கிறார்கள். அதில் ஒரு கனவுதெரிகிறது. அதில் “இப்றாஹீமே! இது எனது கட்டளை எனக்காக நீ உனது மகன் இஸ்மாயீலை அறுத்து குர்பான்கொடுக்வேண்டுமென்று” இறைஆணை கிடைக்கிறது.விழிக்கிறார்கள் இப்றாஹீம் நபீ மகன் மீதிருந்த பாசத்தை விட இறைமேல்கொண்டிருந்த பாசம் உயர்ந்ததாகையால்நேரடியாக மனைவியிடமே தான் கண்ட கனவை எடுத்தோதுகிறார்கள். மகன் இஸ்மாயீல் அவர்களும் எந்த வித சலனமுமின்றி “தந்தையே நீங்கள் இறை கட்டளையை நிறைவேற்றுங்கள் நான் பூரண சம்மதம் தெரிவிக்கின்றேன்” என்று பதிலளிக்கின்றார்கள். 
தான் கண்ட கனவை நிறைவேற்றுவதற்கு மைந்தன் இஸ்மாயீல் நபீயை அழைத்துச்செல்கிறார்கள். அறுப்பதற்கு. 
இப்லீஸ் இடையில்தோன்றி இஸ்மாயீல் நபீயைநோக்கி உன்னை அறுப்பதற்காக உனது தந்தை உன்னை அழைத்துச்செல்கிறார்கள் நீபோகவேண்டாம் என்று கூறினான்.அதைக்கேட்ட இஸ்மாயீல் கீழே கிடந்த கல்லை எடுத்து அவனுக்கு எறிந்து துரத்தினார்கள். 
எனது தநதை “கலீலுல்லாஹ்”இறைவனின் நண்பர், இறை கட்டளையை நிறைவேற்றவே என்னை அழைத்துச்செல்கிறார்.நீ இப்லீஸ் ஓடிவிடு என்று மீண்டும் எறிந்து விரட்டினார்கள். 
தன் மகனை அழைத்துச் சென்ற இப்றாஹீம் நபீ உரிய இடம் வந்ததும் மகனை வழத்தி அறுப்பதற்கு தயாரானார்கள். 
அவர்களை நோக்கிய மைந்தன் இஸ்மாயீல், தந்தையே நான் உங்கள் மகன், என்மீதுள்ள உங்கள் இரக்கம் இறை கட்டளையை தாமதிக்கச்செய்து விடலாம் என்று நான் அஞ்சுகிறேன். தயவுசெய்து என்முகத்தை மூடி அறுங்கள் என்று கூறினார்கள். ஆனால் இப்றாஹீம் நபீயின் நெஞ்சில் இறை பாசமே மேலோங்கியிருந்தது. 
அதனால் தக்பீர் முழக்கத்துடன் தன் மகனின் கழுத்தில் கத்தியை வைத்து அறுத்தார்கள், அறுத்தார்கள் அறுத்துக் கொண்டேயிருந்தார்கள்.எவ்வளவு அறுத்தும் மைந்தனின் கழுத்து அறுபட்டதாக தெரியவில்லை.அப்போது இறைகட்டளைக்கு நான் மாறுசெய்துவிட்டேனே என்று பயந்து அறுத்துக்கொண்டேயிருந்தார்கள்.அறுபடவில்லை. அவர்களுக்கு காபம் கூடுதலாக ஏற்பட்டது தாங்க முடியாத காபத்தால் கத்தியை கல்லின் மீது எறிந்தார்கள் கல் இரண்டாகப்பிளந்து தெறித்தது. 
இதனைக்கண்டு வானம் அழுதது,பூமியழுத்து. மலக்குகள் அழுதார்கள். அனைத்திற்கும் மேலாக இப்றாஹீம் நபீயின் இறை கட்டளையை நிறைவேற்றும் உறுதியையும் மனாதிடத்தையும் மலக்குகள் கண்டு அதிர்ந்தார்கள். 
அல்லாஹ்விடம் பிராத்தித்து அழுதார்கள் இஸ்மாயீல் அறுபடக்கூடாது என்று “துஆ” செய்தார்கள். அவர்களின் துஆவை அல்லாஹ் ஏற்றான். ஆட்டை அறுத்து குர்பான் கொடுக்ம்படி ஜிப்ரீல் (அலை) அவர்களை நபீ இப்றாஹீமிடம் அனுப்பிவைத்தான். இதன் நிமித்தம் இன்று குர்பான் கொடுக்கப்படுகின்றது. 
கத்தி அறுக்காததேன்? 
எதையும் அறுக்கும், வெட்டும் வல்லமை பெற்ற கத்தி நபீ இஸ்மாயீலை அறுக்காததேன்? நபீ இப்றாஹீம் (அலை) அவர்கள் மீண்டும் மீண்டும் மைந்தன் இஸ்மாயீலை அறுத்த போது அது அறுக்காததேன் ? இதற்குரிய காரணம் என்ன ? கல்லைப் பிளந்த கத்தி களுத்தை அறுக்க மறுத்ததேன் ? 
மனிதர்கள் நினைத்தார்கள் கத்தி மற்றும் அவை போன்றவை சுயமாக அறுக்கும் தன்மை கொண்டவை என்று! ஆனால் இஸ்மாயீல் நபீயின் கழுத்தை அது அறுக்க முடியாத போதுதான் கத்திக்குச் சுயமாக அறுக்கும் தன்மை கிடையாது. அல்லாஹ்வின் சக்தி – உத்தரவு கொண்டுதான் அது அறுக்கும் வல்லமை பெறுகிறது என்ற “ லாபாயில இல்லல்லாஹ்” செய்பவன் அல்லாஹ்தான் – அவனைத் தவிர வேறுயாருமில்லை என்ற ஏகத்துவ தத்துவம் உலகுக்கு விளங்கியது. 
மட்டுமன்றி அல்லாஹ்வின் சக்தியின்றி உலகம் இயங்கமுடியாது என்பதும், எப்பொருளுக்கும் சுயமாகச் செய்யும் சக்தி கிடையாது என்பதும் அனைத்தும் அல்லாஹ்வின் சக்திகொண்டே இயங்குகின்றன என்பதும் இந்தச் சம்பவத்தின் மூலம் தெளிவாகின்றது. 
எனவே நபீ இப்றாஹீம் அலை அவர்கள் இச்சோதனையிலும் சித்தியடைந்து இறை நெருக்கத்தைப் பொற்றார்கள். இறைவனின் உண்மை நண்பரானார்கள். 
பிள்ளைப் பாசத்தைவிட இறைபாசமே உயர்ந்த்து என்பதை உலகுக்கு உணர்த்தினார்கள். 
மூன்றாவது சோதனை 
நபீ இப்றாஹீம் தன்னுயிரைவிட இறைவனை நேசித்தார்கள் 
என்பதற்கு அவர்களுக்கு ஏற்பட்ட பின்வரும் சோதனை எடுத்துக்காட்டாகிறது. 
ஒவ்வொரு நபீயையும் அவரவர் காலத்தில் வாழ்ந்த கொடிய தலைவர்கள் எதிர்த்ததுபோல் இப்றாஹீம் நபீயையும் நிம்றூத் எனும் கொடியோன் எதிர்த்தான். அவன் பல கொடுமைகள் செய்தான். 
ஒரு நாள் மந்திரிசபையைக் கூட்டி இப்றாஹீம் நபீயை எரிக்கப்போவதாகச் சொன்னான். அதனால் மலைகள் சூழ்ந்த ஒரு பாரிய கிடங்கில் பல மாதங்களாக விறகைக் குவித்து, அதனுள்ளே நபீ இப்றாஹீமைத் தூக்கிப் போடுமாறு கட்டளையிட்டான். 
மலைகளின் இடையே நெருப்பு பயங்கரமாக எரிந்தது. நிம்றூதின் கட்டளைப்படி நபீ இப்றாஹீம் (அலை) அவர்கள் நெருப்புக் கிடங்கில் எறியப்பட்டார்கள். இப்றாஹீம் ஒழிந்தார். இனிமேல் அவரது போதம் ஒழிந்தது என்று நிம்றூதும் அவனது வால்களும் கனவு கண்டனர். 
அது பலநாள்கள் எரிந்துமுடிந்த போதுதான் தெரிந்தது உள்ளே இப்றாஹீம் நபீ உயிருடன் இருப்பது! நும்றூத் மட்டுமல்ல அங்கிருந்தோர் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். பலர் இஸ்லாத்தை ஏற்றனர். பலமாதங்கள் விறகுபோடப்பட்டு எரிக்கப்பட்ட கிடங்கில் எறியப்பட்டவர் எப்படித் தப்பினார் என்ற வினா எல்லோர் நெஞ்சங்களிலும் எழுந்தது. 
நெருப்பு எரிக்காததேன்? 
இப்றாஹீம் நபீயவர்கள் தனது மைந்தர் இஸ்மாயீலை அறுத்தபோது கத்தி அறுக்கமறுத்தது அறுக்கும் சக்தி கத்திக்கன்று, இறைவனுக்கே உண்டு என்ற தத்துவத்தை நிலை நாட்டியதுபோல நிம்றூதின் நெருப்பு இப்றாஹீம் நபீயை எரிக்க மறுத்ததன் மூலமும் எரிக்கும் சக்தியும் நெருப்புக்குச் சுயமாக இல்லை. இறைவன் நாடினாற்றான் நெருப்பு எரிக்குமேயன்றி அதற்கு சுயமாக எரிக்கும் சக்தி கிடையாது என்பதையும் இந்நிகழ்வு உலகுக்கு எடுத்தோதிவிட்டது. 
அன்று இஸ்மாயீலை நபீயை கத்தி அறுத்திருந்தால், இப்றாஹீம் நபீயை நெருப்பு எரித்திருந்தால் உலகோர்க்கு இறைதத்துவம் புரிந்திருக்காது. சிருஷ்டிகளுக்கு எல்லாச் சக்தியும் உண்டு என்று உலகம் புரிந்திருக்கும். 
கத்தி அறுக்க மறுத்ததும், நெருப்பு எரிக்க மறுத்ததும் சிருஷ்டி எதற்கும் சுயசக்திகிடையாது சுயசக்தி அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு. இறைவன் நாடினாற்றான் கத்தி வெட்டுகிறது. நெருப்பு எரிக்கிறது. இறைவன் நாடவில்லையானால் எதுவுமே நடக்காது என்ற ஏகத்துவ இறைதத்துவத்தை இந்நிகழ்வு உலகுக்கு உணர்த்திவிட்டது. 
சுடுகின்ற வல்லமைகொண்ட நெருப்பு நபீ இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு கடும் சூடுமின்றி கடும் குளிருமின்றி பூஞ்சோலையாக மாறியது. 
எனவே, நபீ இப்றாஹீம் அவர்கள் இறைவனுக்காகத் தன்னையே அர்ப்பணித்து இறை சோதனையில் வெற்றி பெற்றார்கள். 
இவர்களின் இச்சோதனை உலகில் வாழ் முஃமீன்களுக்கு மாபெரும் எடுத்துக்காட்டாகும். உயிர்போகும் நிலையிலும் அல்லாஹ்வில் நம்பிக்கை வைத்தால் அவன் கைவிடுவதில்லை என்பது உறுதி! 
நான்காவது சோதனை 
நபீ இப்றாஹீம் (அலை) அவர்கள் பெரும்செல்வம் படைத்த கோடீஸ்வரராகத் திகழ்ந்தார்கள். ஐயாயிரத்துக்கு மேற்பட்ட ஆட்டுப்பட்டிகள் அவர்களுக்கிருந்தன. ஒவ்வொரு பட்டியிலும் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட ஆட்டு மந்தைகள் இருந்தன. எங்கு பார்த்தாலும் அவர்களின் ஆடுகளே காணப்பட்டன. 
அவர்களின் செல்வ நிலையைக் கண்ட மலக்குகள் அல்லாஹ்விடம் சென்று “இறைவா! இப்றாஹீம் நபீ பெரும் செல்வந்தராக இருக்கிறார். பணத்தில் பேராசை கெண்டவராக இருக்கிறார் என்று முறையிட்டனர். 
நீங்கள் வெளிப்படையைப் பார்க்கின்றீர் நான் அவரின் அக நிலையைப் பார்கின்றேன். நீங்கள் சொல்வது போல் அவரில்லை. அவர் அனைத்தைவிடவும் என் மீதே ஆசைகொண்டுள்ளார். நீங்கள் விரும்பின் அவரண்மை சென்று 
பரீட்சித்துப் பாருங்கள் என்றான். மலக்குகள் அதற்குச் சம்மந்தம் தெரிவித்தனர். ஹழ்றத் ஜிப்ரீல் (அலை), ஹழ்றத் மீகாயீல் (அலை), ஹழ்றத் இஸ்றாபீல் (அலை) ஆகியோர் மனித உருவெடுத்து நபீ இப்றாஹீம் அவர்களிடம் வந்து சலாம் கூறி நின்றனர். 
பதிலுரைத்த இப்றாஹீம் நபீ ஏதுவந்தீர்கள் என்று வினவினார்கள். 
ஹழ்றத் ஜிப்ரீல் (அலை) அவர்கள் நான் “திக்ர்” ஒன்றைத் தெரிந்துள்ளேன். 
தாங்கள் விரும்பினால் சொல்வேன் என்றார்கள்.சொல்லுங்கள் என்றார் இப்றாஹீம் நபீ. சொன்னால் என்ன தருவீர்கள் என்று கேட்டார்கள் ஜிப்ரீல் ! எனது சொத்தை மூன்றாகப் பிரித்து ஒரு பங்கைத் தருவேன் என்றார்கள் நபீ இப்றாஹீம் ! உடன் ஜிப்ரீல் அவர்கள் “சுப்பூஹீன் குத்தூஸுன் றப்புல் மலாயிகதி வர்றூஹ்” என்று ஒரு முறை சொன்னார்கள் அப்போது இப்றாஹீம் நபீ இதோ உங்கள் பங்கை எடுத்துக் கொள்ளுங்கள் என்று மூன்றில் ஒரு பங்கைக் கொடுத்தார்கள். 
அதன்பின் மனித உருவில் நின்ற மீகாயில் (அலை) நானும் ஒரு தரம் சொல்லட்டுமா? சொன்னால் என்ன தருவீர்கள்? என்று கேட்டார்கள். 
சொல்லுங்கள் என்னிடமுள்ள மூன்றில் இரண்டில் ஒரு பங்கைத் தருகின்றேன் என்றார்கள் நபீ இப்றாஹீம் அவர்கள் ! 
உடன் மீக்காயீல் அவர்களும் ஒரு முறை அதே திக்ரை மொழிந்தார்கள். அதுகேட்டு மகிழ்ந்த நபீ இப்றாஹீம் தாம் சொன்னது போல் மூன்றில் ஒரு பங்கை அவருக்குக் கொடுத்தார்கள். 
அப்போது அங்கு நின்ற இஸ்றாபீல் (அலை) அவர்களும் நானும் ஒருமுறை சொல்லட்டுமா என்றார்கள். 
நபீ ஆம் என்றதும் அவர்களும் ஒருதரம் சொல்லி முடிந்தார்கள். அப்போது தன்னிமுள்ள மூன்றில் ஒரு பங்கையும் இஸ்றாபீலுக்கு கொடுத்து முடித்தார்கள். 
தற்போது நபீ இப்றாஹீம் பரம ஏழையானார்கள் அவருக்குச் சொந்தமான எதுவுமே இருக்கவில்லை. 
இதைக் கண்ட மூன்று மலக்குகளுக்கும் இப்றாஹீம் நபீயின் துறவற நிலை, எதிலும் பற்றற்ற நிலை, அவர்கள் பற்றி இறைவன் சொன்ன வார்தை புரிந்தது. 
வெளியமைப்பைப் பார்த்துத் தாம் தப்பாகக் கருதியதை நினைத்து வருந்தினார்கள். இப்றாஹீம் நபீயிடம் மன்னிப்பும் கேட்டார்கள். தாம் மலக்குகள் . சோதிக்கவே வந்தோம். 
நீங்கள் வெற்றிபெற்று விட்டீர்கள். நாம் தோல்வியடைந்து விட்டோம். 
இதோ உங்கள் செத்துக்களை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள் என்று நபீயை கேட்டுக் கொண்டார்கள். 
அதற்கு நபீயவர்கள்‘ இந்த இப்றாஹீம் சொன்னதுதான் சொல். அவர் உங்களுக்குக் கொடுத்து விட்டார். உங்களுக்குத் தேவையில்லா விடின் பைதுல் மாலுக்குக் கொடுத்து விடுங்கள் என்று சொன்னார்கள். 
மலக்குகள் மூவரும் திகைத்துப் போனார்கள். எனவே ஒரு திக்றுக்காக இப்றாஹீம் நபீ கோடிக்கணக்கான சொத்துக்களையே கெடுத்தார்கள் என்றால் அல்லாஹ்வின் மீது அவர்களுக்குள்ள பாசம் எத்தகையது என்பதை நாங்கள் புரிய வேண்டும். 
எனவே, அவர்கள் செய்த தியாகங்கள் எங்கள் வாழ்விலும் நாங்கள் செய்ய வெண்டும். ஏழைகளுக்கு வாரி வழங்க வேண்டும். 
உலக ஆசைகள் எம்மை விட்டகன்று, இறைபாசமே ஒங்க வேண்டும். அவனுக்காக அகிம்சை வழியில் சென்று எதையும் செய்யும் தியாக மனம் கொண்டோராக நாம் திகழவேண்டும். 
உலக இன்பத்தைத் துறந்து பேரின்பத்திற்காக நாம் தியாகங்கள் செய்து வாழவேண்டுமென்று, தியாகத் திருநாளின் குணம் கொள்ள வேண்டுமென்றும் இக்கட்டுரை மூலம் கேட்டுக் கொள்கின்றேன். 
முற்றும்…
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments