Friday, March 29, 2024
Homeஎழுத்தாக்கங்கள்மச்சான், மச்சினன் உரையாடல்

மச்சான், மச்சினன் உரையாடல்

ஆக்கம் – ஷெய்குனா மிஸ்பாஹீ
மச்சான் – என்னடா மச்சினன்! நீ முதலில் “ஸுன்னத் வல் ஜமாஅத்” வாதியாகத்தானே இருந்தாய். அவர்களின் பள்ளிவாயலில் – நீ தொழுததையும், அங்கு மௌலித் மஜ்லிஸில் நீ ஓதியதையும் நான் பலதரம் கண்டிருக்கிறேன். நீ எப்போது “கர்னீ”களுடன் சேர்ந்தாய்? ஏன் சேர்ந்தாய்.
மச்சினன் – என்ன மச்சான் இவ்வாறு கேட்டு விட்டாய்! நான் அவர்களுடன் இணைந்து நாலு மாதம் மட்டும்தான். எனக்கு எது சரி? எது பிழை? என்பது தெரியாது. ஆய்வு செய்து சரி பிழை கண்டறிய என்னிடம் திறமையும் இல்லை. நான் படிக்காதவன், அன்றாடம் கூலித் தொழில் செய்து வாழ்பவன் என்பது உனக்குத் தெரியும். எனக்கு “கர்னீ”களின் வழி – போக்கு – தான் இலகுவானதாக – இலேசானதாகத் தெரிந்தது. அவர்களின் வழியில் கடினமோ, கஷ்டமோ இல்லை. இதனால்தான் அவர்களுடன் இணைந்தேன்.

மச்சான் – நீ சொல்கின்ற விடயத்தை சற்று விளக்கமாகச் சொல்ல முடியுமா?
மச்சினன் – ஆம். சொல்கிறேன். மச்சான்! அவர்களின் வழியில் “தறாவீஹ்” தொழுகை எட்டு “றக்அத்” மட்டும்தான். இரண்டு “றக்அத்” தொழுவதற்கு நாலு நிமிடம் தேவை என்றால் 32 நிமிடங்களிள் “தறாவீஹ்” தொழுது விடலாம். எட்டு மணிக்கு பள்ளிவாயலுக்குச் சென்றால் 8-35 மணிக்கு வீட்டுக்கு வந்து விடலாம். இது இலகுவான விடயமா? இல்லையா?
“ஸுன்னீ”களின் பள்ளிவாயலுக்குச் சென்றால் இஷா, தறாவீஹ், வித்று, திக்ர், பிக்ர், முறாகபா, முஷாஹதா, தவ்பா, துஆ இவற்றை முடித்து விட்டு வீட்டுக்கு வந்து சேர மூன்று மணி நேரம் தேவைப்படும். மனைவி கூட குறட்டையில் இருப்பாள். “கர்னீ”கள் மார்க்கத்தில் இது ஓர் இலகுவழி.
இன்னொன்று “வுழூ” என்ற சுத்தமின்றி “முஸ்ஹப்” திருக்குர்ஆன் பிரதியை தொடலாம் என்று “கர்னீஸம்” சொல்கிறது. தொடக் கூடாதென்று “ஸுன்னீஸம்” சொல்கிறது.
என்னைப் பொறுத்தவரை மட்டுமன்றி பொதுவாக மனிதனுக்கு “கர்னீஸம்” சொல்லும் வழிதான் இலகுவான ஒன்றாகும். தேவையான நேரம் எந்த ஒரு தடையும், சிரமமும் இல்லாமல் திருக்குர்ஆன் பிரதிகளைத் தொட முடியும்.
இன்னுமொன்று. மாதத்தீட்டுள்ள பெண் திருக்குர்ஆன் ஓதுவதற்கு தடை ஒன்றுமில்லை என்று “கர்னீஸம்”
சொல்கின்றது. “ஸுன்னீஸம்” கூடாது என்கிறது. “ஸுன்னீஸம்” கூறுகின்ற படி ஒரு பெண் ஒரு மாதத்தில் சுமார் ஐந்தாறு நாட்கள் திருக்குர்ஆன் ஓத முடியாது. இது மனித சுதந்திரத்தைப் பாதிக்கின்றது.
இன்னுமொன்று. ஒரு மனிதன் தனது வாழ்வில் ஒரு தரம் மட்டும் “சகாத்” கொடுத்தால் போதும், ஒவ்வொரு வருடமும் கொடுக்கத் தேவையில்லை என்று “கர்னீஸம்” கூறுகின்றது. இதற்கு மாறாக “ஸுன்னிஸம்” சொல்கின்றது.
என்னைப் பொறுத்த மட்டிலும், பொதுவாக மனிதனைப் பொறுத்த மட்டிலும் “கர்னீஸம்” கூறுகின்ற வழியே இலேசானது. இவை போன்று இன்னும் பல விடயங்கள் உள்ளன.
மேற்கண்ட காரணங்களுக்காகவும், இங்கு நான் குறிப்பிடாத இன்னும் பல காரணங்களுக்காகவும்தான் நான் “கர்னீ”களுடன் இணைந்தேன்.
மச்சான் – உன் விளக்கத்தைக் கேட்ட எனக்கு உன்னைத் துண்டு துண்டாக அரிந்து குவிக்க வேண்டும் போல் தோணியது. இருந்தாலும் பொறுமையுடன் செவியேற்றிருந்தேன்.
எது சரியாக இருந்தாலும் சரியானதைக் கண்டு அதை செய்வது உனது நோக்கமில்லை, எது இலேசானதோ அதைச் செய்வதே உனது இலட்சியம் என்றும் நீ சொன்னாய். “கர்னீ”களுடன் இணைந்ததற்கு நீ கூறிய இக்காரணங்கள் உனது அறியாமையின் சிகரத்தை தெளிவாகக் காட்டி விட்டன.
எது சரியோ பிழையோ அதைக் கருத்திற் கொள்ளாமல் உனக்கு இலேசானதை – கஷ்டமில்லாததை – செய்வதே உனக்கு இலட்சியம் என்றால் உனக்கு உடை எதற்கு? திருமணம் எதற்கு? பணம் செலவு செய்து உடை வாங்குவதும் அதை உடுப்பதற்கு நேரத்தை செலவிடுவதும் உனக்கு கஷ்டமான காரியமில்லையா? ஏன்? நீயும், உனது மனைவியும் நிர்வாணமாக வாழலாமல்லவா? அவ்வாறு வாழ்ந்தால் பணம் நேரம் இரண்டையும் நீ மிச்சம் பிடிக்க முடியும்தானே!
உனக்கு திருமணம் எதற்கு? நீ திருமணம் செய்வதாயின் பல இலட்சம் ரூபாய்கள் செலவிட வேண்டும். அதற்காக பகலிரவு பாராமல் உழைக்க வேண்டும். நோய் ஏற்படாமல் செலவு செய்து கவனிக்க வேண்டும். திருமணம் செய்வதால் இவ்வாறு பல செலவுகள் ஏற்படும். பல சிரமங்களும் ஏற்படும். அவளின் தாலி உனக்கு வேலியாக அமைந்து கசந்து போய் விடும்.
ஆகையால் இவ்வாறான கஷ்டங்களை தவிர்ப்பதற்கு இலகுவான வழி நீ திருமணம் செய்யாமல் வேறுவழியில் உனது காம உணர்வை தீர்த்துக் கொள்வதே சிறந்த வழியாகும்.
சரியோ, பிழையோ
இலகுவான வழிதான் உனது மார்க்கம் என்று வாதிடும் நீ உடையின்றியும், திருமணமின்றியும் வாழ்வதுதானே உனக்கு இலகுவானதும், இலேசானதுமாகும். இவ்விடயம் இரண்டிலும் இலகுவான வழியை கவனத்திற் கொள்ளாமல் மேற்கண்ட மற்றக் காரியங்களில் மட்டும் இலகுவான வழியை கவனத்திற் கொண்டு “கர்னீ”களுடன் இணைந்ததற்கான காரணம் என்ன?
மச்சினன் –
என்ன மச்சான் சிக்கலான கேள்விகள் எழுப்பி என்னை மடக்க நினைக்கிறாயா? நான் அவர்களோடு இணைவதற்கு மேற்கண்ட காரணங்கள் இருந்தாலும் கூட இன்னும் சில இரகசியங்கள் உள்ளன. அவற்றை நான் தெளிவாகச் சொன்னால் நான் அவர்களுடன் இணைந்ததை சரியென்றே நீ சொல்வாய்.
மச்சான் –
நீ சொன்னால்தானே தெரியும். சொல் பார்ப்போம்.
மச்சினன் – நான் சொல்வதை நீ பகிரங்கமாக்கி விடக் கூடாது. நீ பகிரங்க மாக்கினால் நான் பட்டினி கிடந்து சாக வேண்டித்தான் வரும்.
எனக்கு மூன்று இலட்சம் ரூபாய் கடன் இருந்தது. அதை முடித்து வைத்தவர்கள் “கர்னீ”கள்தான்.  அத்துடன்
எனக்கு மாதாந்தம் 15 ஆயிரம் அன்பளிப்பாகத் தந்து பட்டினி பசியின்றி என்னை வாழவைப்பதும் அவர்கள்தான். இவ்வாறு அவர்கள் செய்வது நான் அவர்களுடன் இணைந்து இயங்க வேண்டும் என்பதற்காகத்தான். உப்பிட்டவனை உள்ளளவும் நினைக்க வேண்டும் என்று தத்துவம் கூறுகிறதே! நான் என் செய்வேன்.
மச்சான் – உனது கதையின் சுருக்கம் என்ன வெனில் எதிலும் சரி பிழை காணாமல் ஒருவன் தனக்கு இலகுவானதும், இலேசானதும் எதுவே அதையே அவன் செய்ய வேண்டும் என்பதாகும். இதற்கு நான் பதில் தந்து விட்டேன்.
இரண்டாவதாக கடன் தொல்லையில் இருந்து உன்னைக் காப்பாற்றியவர்கள், மாதாந்தம் 15 ஆயிரம் அன்பளிப்பாகத் தந்து உதவுபவர்களும் “கர்னீ”கள்தான் என்று கூறினாய்.
மச்சினன்! நீ மனக்கண் குருடானவன் இறைவன் மீது “ஈமான்” நம்பிக்கை இல்லாதவன். அவர்கள் செய்த உதவியைப் பெரிதாக எண்ணி உப்பிட்டவனை உள்ளளவும் நினை என்று தத்துவம் கூறுகின்றவன்.

 

நீ இல்லாமல் இருந்தாய். உன்னை வெளியாக்க வேண்டும் என்று விரும்பிய அல்லாஹ் உன் தாயின் வயிற்றில் உன்னை உருவாக்கி, அங்கத்தில் எந்த ஒரு குறையுமில்லாமல் அழகிய உருவத்தில் படைத்து இன்று வரை பல்வேறு அருள்களும், உதவி உபகாரங்களும் செய்த, செய்தும் வருகின்ற அல்லாஹ்வை நீ மறந்து விட்டாயே! உப்பிட்டவனை உள்ளளவும் நினைக்க வேண்டும் என்ற “கர்னீ”களுடன் இணைந்ததற்கு காரணம் கூறும் நீ அல்லாஹ்வை ஏன் மறந்தாய்? அவன் உனக்கு உப்பிட்டவன் மட்டுமல்ல. உன்னை உருவாக்கியவனும் அவன்தான். நீயாருடன் இணைய வேண்டும். சிந்தி. ஹக்கைச் சந்தி.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments