Saturday, April 20, 2024
Homeஎழுத்தாக்கங்கள்நோன்பு மூன்று வகை

நோன்பு மூன்று வகை

ஆக்கம் – ஷெய்குனா மிஸ்பாஹீ
நோன்பை ஆன்மீக வாதிகள் மூன்று வகைகளாகப் பிரித்துள்ளார்கள்.
ஒன்று – “ஸவ்முல்
அவாம்” பொது மக்களின் நோன்பு. இது “ஸவ்முஷ் ஷரீஆ” ஷரீஆவின் நோன்பு எனப்படும். இந்த வகை நோன்பு “நோன்பை முறிக்கும் காரியங்கள்” என்ற மார்க்கத்தில் சொல்லப்பட்ட – “ஷரீஆ”வில் கூறப்பட்ட – காரியங்களில் ஏதேனும் ஒன்றைச் செய்வதன் மூலம் முறிந்து விடும். வீணாகி விடும். இந்த நோன்பு “களா” மீண்டும் நோற்கப்பட வேண்டும்.

உதாரணமாக உண்ணுதல், பருகுதல் போன்று.

இரண்டு – “ஸவ்முல்
கவாஸ்” விஷேடமானவர்களின் நோன்பு. இது “ஸவ்முத் தரீகா” “தரீகா”வின் நோன்பு எனப்படும். இந்த வகை நோன்பு நோன்பை முறிக்கும் காரியங்கள் என்று “ஷரீஆ”வில் கூறப்பட்டவற்றில் ஒன்றைச் செய்வதன் மூலம் முறிந்து விடுவதுடன் பின்வரும் ஐந்து காரியங்களில் ஒன்றைச் செய்வதன் மூலம் முறிந்து விடும். முந்தின வகை நோன்பை விட இவ்வகை நோன்பு ஒருபடியோ, பல படிகளோ மேலானதாகும்.
ஐந்து விடயங்கள் நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்து விடும். (நோன்பை முறித்து விடும்) அவை புறம் பேசுதல், கோள் சொல்லுதல், பொய் சொல்லுதல், பொய் சத்தியம் செய்தல், பொய் சாட்சி சொல்லுதல் என்பன.
இந்த வகை நோன்பு நோற்ற ஒருவனின் நோன்பு மேற்கண்ட ஐந்து காரியங்களில் ஒன்றைச் செய்வது கொண்டு “பாதில்” முறிந்து விடும்.
ஒரு தாய் தனது பிள்ளை செய்த குற்றத்திற்காக அதைக் கண்டிக்கும் போது “உனக்கு ஆயிரம் சொல்லி இருக்கிறேன்” என்று சொல்வாள். உண்மையில் அவள் சொன்னது பத்து தரம் மட்டும்தான். இந்நிலையில் இவளின் பேச்சு பொய்யாகுமா?
ஒருவனுக்கு வயிற்றுவலி. இடையிடையே இலேசாக ஏற்படுவதுண்டு. அவன் டாக்டரிடம் சென்று “எனக்கு வயிற்று வலி. இரவில் கண் மூடிப் படுக்கவே முடியவில்லை. விடியும் வரை அதோடு போராட வேண்டியுள்ளது” என்று சொல்கிறான். அவனின் நோக்கம் டாக்டர் கவனம் எடுத்து நல்ல மருந்து கொடுக்க வேண்டுமென்பதேயன்றி அவரை ஏமாற்ற வேண்டும் என்பதல்ல. இவனின் பேச்சு பொய்யாகுமா?
மேலே குறிப்பிட்ட காரியங்கள் தொடர்பாக இது போன்ற விபரங்கள் உள்ளன. சந்தர்ப்பம் கிடைத்தால் “ஷம்ஸ்” விளக்கம் தரும்.
மேற்கண்ட ஐந்து காரியங்களில் எதைச் செய்தாலும் அதற்கேற்ப தண்டனை கிடைக்கலாமே தவிர “ஷரீஆ”வின் பார்வையில் அவற்றில் ஒன்றைச் செய்வது கொண்டு நோன்பு முறிந்து விடாது. இதுவே “புகஹாஉ” சட்ட மேதைகளின் தீர்க்கமான முடிவு.
خمس يفطرن الصائم
எனவே மேற்கண்ட நபீ மொழியில் கூறப்பட்ட ஐந்து காரியங்களும் நோன்பை முறிக்கும் என்று நபீ பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னது “ஷரீஆ”வின் சட்டத்திற்கு முரணாகிவிடும் என்று பயந்த அறிஞர்கள் يفطرن الصائم நோன்பாளியை
நோன்பு திறக்கச் செய்து விடும் என்ற வசனத்துக்கு يبطلن ثواب الصائم குறித்த ஐந்து காரியங்களும் நோன்பாளிக்கு நன்மையை இல்லாமற் செய்து விடும் என்று வலிந்துரை கூறியுள்ளார்கள். இவர்கள் இவ்வாறு கூறியிருப்பது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குச் சொல்லத் தெரியாத ஒன்றை இவர்கள் சொல்லிக் கொடுப்பது போல் அமைந்துள்ளது.
மேற்கண்ட “ஹதீது” “ஸவ்முத் தரீகா” “ஸவ்முல் கவாஸ்” அடிப்படையில் சொல்லப்பட்டதென்று விளங்கிக் கொண்டால் எந்த ஒரு வலிந்துரைக்கும் இடமில்லாமற் போவதுடன் குறித்த ஐந்தும் நோன்பையே முறித்து விடும் என்பதையும் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.
மூன்று – “ஸவ்மு
கவாஸில் கவாஸ்” அதிவிஷேடமானவர்களின் நோன்பு. இது “ஸவ்முல் ஹகீகா” எனப்படும். இந்த வகை நோன்பு நோன்பை முறிக்கும் காரியங்கள் என்று “ஷரீஆ”வில் கூறப்பட்டவற்றில் ஒன்றைச் செய்வதன் மூலம் முறிந்து விடுவதுடனும், “ஸவ்முத் தரீகா” “தரீகா”வின்  நோன்பை
முறிப்பவைகளைச்
செய்வதன் மூலம் முறிந்து விடுவதுடனும் இன்னுமொன்றைக் கொண்டும் முறிந்து விடும்.
அதாவது மூன்றாம் வகை நோன்பு நோற்றவன் பகல் முழுவதும் (“ஸுப்ஹ்” நேரம் முதல் “மக்ரிப்” நேரம் வரை) அல்லாஹ்வின் நினைவுடனேயே இருக்க வேண்டும். ஒரு நொடி நேரமாவது அல்லாஹ்வின் நினைவு இல்லாமற் போனால் அது கொண்டும். அவனின் நோன்பு முறிந்து விடும்.
இந்த வகை நோன்பு நபீமார், வலீமார் போன்ற மகான்களால் மட்டுமே நோர்க்க முடியும்.
நோன்பை மூன்று வகைகளாகப் பிரித்து இவ்வாறு விளக்கம் சொன்னவர் “ஹுஜ்ஜதுல் இஸ்லாம்” இமாம் முஹம்மத் அல்கஸ்ஸாலீ றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்கள்தான்.

 

வஹ்ஹாபிகள் என்போர் இமாம் கஸ்ஸாலீ றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்களை “காபிர்” என்று கூறுவது இங்கு குறிப்பிடத்தக்கது.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments