ஸியாரத்தின் அமைவிடமும் சிறப்பும்
எமது இலங்கைத் திருநாட்டில் ஆத்மீக ஒளிபரப்பிய அவ்லியாக்கள் பலர் ஆங்காங்கே சமாதியுற்றிருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் கிரீடமாக திகழ்பவர்கள், கொழும்பு மாநகரில் மாண்புடன் இலங்கும், அல்-குத்புஸ்ஸெய்லான், ஹழ்ரத் அஸ்ஷெய்கு-உஸ்மான் வலியுல்லாஹ் ஆவார்கள். இவர்களது புனித ஸியாரம் கொழும்பு-07 கறுவாக்காடு என்னுமிடத்தில் அமைந்துள்ளது.இங்கே தினமும் சாதி,மத பேதமின்றி மூவின மக்களும் ஒன்று கூடுகின்றனர். இன ஒற்றுமையின் சின்னமாகத்திகழும் இந்த தர்ஹா ஷரீபில் ஆன்மிகத்தலைவர்கள், அரசியல் தலைவர்கள், உட்பட அனைவரும் வந்து ஆசி பெற்றுச் செல்கின்றனர் இவர்களது கறாமத் என்னும் அற்புதம் நாட்டின் எல்லாப் பாகங்களிலும் இருந்து மக்கள் சமுத்திரம் இங்கு வந்து கூடுவதற்கு காரணமாக அமைகின்றது.
ஸியாரத் தோன்றிய வரலாறு.
1820 ஆம் ஆண்டு பம்பலபிட்டியை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்ட ஒரு சிங்களப் பெண்மணி கறுவாக்காடு வழியாக மருதானைக்கு முட்டியில் எண்ணெய் கொண்டு சென்று வியாபாரம் செய்யும் வழக்கத்தைக் கொண்டிருந்தாள். ஒரு நாள் அப்பெண்மணி வியாபாரத்திற்காக சென்று கொண்டிருக்கும் போது கஜுக் கொட்டை மரத்தின் அடியில் தடுக்கி விழுந்ததால் அவள் கொண்டு சென்ற எண்ணெய் முட்டி நொறுங்கி விட்டது. இதனால் கதறி அழுத அப்பெண்மணி அவ்விடத்திலேயே உறங்கி விட்டாள்.
அப்போது “வருத்தப்பட வேண்டாம், துக்கமடைய வேண்டாம், எல்லாம் நன்மையாக நடக்கும்” என ஒரு சத்தம் கேட்டது. இதனைக் கேட்ட அப்பெண்மணி கண் விழித்துப் பார்த்தாள். அப்போது அங்கு ஒருவரும் இல்லாத படியால் மீண்டும் அவள் கதறி அழுதாள். அப்பொது மீண்டும் அதே சத்தம் கேட்டது. அத்துடன் பச்சை உடையணிந்த ஒரு வயதான மனிதர் அங்கே தோன்றினார்கள். அவர்கள் அந்தப் பெண்மணியைப்பார்த்து “நீ ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம், உனது எண்ணெய்யை நான் தருகிறேன். அதற்கு ஒரு முட்டியைத் தேடிப் பெற்றுக் கொண்டு வா” எனக் கூறினார்கள். உடனே அந்தப் பெண்மணி தான் வழக்கமாக எண்ணெய் வாங்கி வரும் மருதானையில் உள்ள மாமுனா லெவ்வை என்பவரின் விட்டுக்குச் சென்று அவரின் தாயாரிடம் ஒரு முட்டியை வாங்கிக்கொண்டு வந்தாள் . இங்கு வந்து பார்த்த .போது அந்த மனிதர் தெவிட்ட மரம் ஒன்றில் சாய்ந்து கொண்டு நிற்கின்றார்கள். இந்தப் பெண்மனியைக்கண்டதும் உடைந்து போன முட்டியின் இடத்தில் புதிய முட்டியை வைக்கச் செய்து நிலத்தை காலால் மிதித்தார்கள் .உடனே அவ்விடத்தில் இருந்து எண்ணெய் ஊற்றெடுக்க ஆரம்பித்தது. உடனே கஜா மரத்தில் இருந்து சில இலைகளை எடுத்து அப்பெண்மனியிடம் கொடுத்த பெரியார் அவர்கள் அவ்விலைகளினால் முட்டியில் எண்ணெயை ஊற்றிக்கொள்ளுமாறு கூறினார்கள். அத்துடன் அவளது வியாபாரத்தை தொடர்ந்து செய்யுமாறும், இவ்விடயத்தை முஸ்லிம்களுக்கு அறிவித்து விடுமாறும் கூறி விட்டு மறைந்து விட்டார்கள். உடனே எண்ணெய் முட்டியுடன் ஓடோடிச் சென்ற அப்பெண்மணி மாமுனா லைவ்வையின் தாயாரிடம் இவ்விடயத்தைக் கூறினாள். இதனைக்கேட்ட மாமுனா லெவ்வையும் இன்னும் சில முஸ்லீம்களும், குறிப்பிட்ட இடத்தை அடைந்த போது அங்கே உடைந்த முட்டியையும் சிந்திய,எண்ணெயையும்,கஜூ மரத்தையும் கண்டு ஆச்சரியம்அடைந்தனர்.உடனே சூரா யாஸின், சூரா பாத்திஹா ஆகியவைகளை ஒதி இந்த வலியுல்லாஹ் யார்? என்பதைக் காட்டித்தருமாறு இறைவனிடத்தில் துஆப்பிராத்தனை செய்தார்கள். பின்னர் குறிப்பிட்ட இடத்தில் ஸியாரம் அமைத்து அதற்கு தலைமை நிருவாகியாக மாமுனா லெவ்வயை அப்பகுதி முஸ்ஸிம்கள் நியமித்தனர். எனினும் யார் இந்த வலியுல்லாஹ் என்பதை யாரும் கண்டு பிடிக்கவில்லை.
மேற்படி சம்பவம் நடந்து 27 வருடங்களுக்குப் பின்னர் அதாவது 1847. ஆம் ஆண்டு மஃரிப் தேசத்தைச்சேர்ந்த அஷ்ஷெய்கு அலி ஜபருத்மெளலானா என்னும் மார்க்கப்பெரியார் கொழும்புக்கு வந்து மருதானைப் பள்ளிவாயலில் தங்கியிருந்தார்கள். இந்தப் பெரியாரிடம் மேற்படி சம்பவத்தைப்பற்றி அறிவிக்கப்பட்டது. இதனைக்கேள்வியுற்ற சங்கைக்குரிய பெரியார் அவர்கள் ஒரு வௌ்ளிக்கிழமை தினத்தன்று கதீப் ஹஸன் லெப்பை, ஷெய்கு அப்துல் காதிர், மற்றும் சிலருடன் ஸயாரத்திற்கு நேரடியாக விஜயம் செய்து பாத்திஹா ஒதினார்கள். பின்னர் பெரியார் ஐபரூத் மௌலானா அவர்கள் அந்த வலியுல்லாஹ் சமாதியுற்றிருக்கும் ஸியாரத்தில் தன்னை ஒரு ஜுப்பாவால் போர்த்திக் கொண்டு அந்த இறைநேசருடன் அந்தரங்கமாக உரையாடினார்கள். பின்னர் ஜுப்பாவை அகற்றிய போது அவர்களின் முகம் தௌஹீதின் ஒளியால் பிரகாசித்தது. அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் பின்வருமாறு உபதேசித்தார்கள்.
வல்லமையுள்ள இறைவன் கண்ணியமும், மேன்மையும், பொருந்திய ஒரு வலியுல்லாஹ்வை நமக்கு தந்திருக்கிறான். இவர்களது பெயர் ‘‘ஸெய்யித் உஸ்மான் ஸித்தீக் இப்னு அப்துர் ரஹ்மான் (றழி) என்பதாகும். இவர்கள் அரேபியாவில் உள்ள அறபா மைதானத்திலிருந்து இலங்கைக்கு வந்தவர்கள்இங்கு பாவா ஆதம் (அலை) அவர்களின் மலையில் சில காலம் தங்கி விட்டு அங்கிருந்து தப்தர் ஜெய்லானிக்கு புனித யாத்திரை சென்று இறுதியாக கொழும்பில் வபாத்தாகி விட்டார்கள். எனக்கூறிய பெரியார் மௌலானா அவர்கள், தமக்குப்பக்கத்தில் நின்ற கதீப் தம்பி லெவ்வையிடம் இது என்ன மாதம் என்று கேட்டபோது அவர்கள் “துல்கஃதா-மாதம் பிறை 4’’ என்றார்கள். இதுவே அவர்கள் இறையடி சேர்ந்த மாதமாகும். எனக்கூறி தமது உபதேசத்தை முடித்தார்கள்.
சேர் சார்ல்ஸ் டி ஸெய்ஸா, சேர் பொன்னம்பலம் ராம நாதன், அரபி பாஷா ஆகியோர் அக்காலத்தில் ஸெய்யித் உஸ்மான் வலியுல்லாஹ் அவர்களின் சிஷ்யர்களாக இருந்ததாக ஒரு வரலாறு கூறுகிறது.
தெமட்டகஹ ஜும்ஆஹ் பள்ளிவாயல்
எமது இலங்கைதிருநாட்டில் காணப்படும் தர்ஹாக்களில் “தெமட்ட மரத்தடி தர்ஹா” மிகவும் பிரபல்யமானதாகும். இந்த தர்ஹா ஷரீபுக்குப் பக்கத்தில், அழகிய மனாராக்கருடன் கூடிய மூன்று மாடிகளைக்கொண்ட பள்ளிவாயல் காணப்படிகிறது. இது “தெவட்டகஹ ஜும்ஆஹ் பள்ளிவாயல்” என அழைக்கப்படுகிறது. இது இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலங்களின் தலைமையகமாகவும் திகழ்கின்றது. கொழும்பு மாநகரில், இப்பள்ளியானது “ஸுன்னத் வல் ஜமாஅத்கொள்கையின் கோட்டையாகத்திகழ்கின்றது. என்றால் அது மிகையாகாது. கடந்த 04-08-1983 ஆம் ஆண்டு இப்பள்ளிவாயல் இலங்கை வக்பு சபையால் அங்கீகரிக்கப்பட்டதைத்தொடர்ந்து 28-10-1983 ஆம் ஆண்டு ஜும்ஆஹ் பள்ளிவாயலாக பிரகடனம் செய்யப்பட்டதோடு “ஜும்அஹ்” தொழுகையும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்தோடு, ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையின் கிரியைகளான, புனித மௌலித் நிகழ்வுகள், புனித ஸலவாத் மஜ்லிஸ், கந்துரிகள் போன்றவை நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கதாகும். அத்தோடு எமது மறைந்த மார்க்க அறிஞர் மர்ஹும் MSM. பாறுக் (காதீரீ) அவர்களும் இப்பள்ளிவாயலில் தனது மார்க்கப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.இப்பள்ளிவாயல் இவ்வளவு சிறப்புக்களைக் கொண்டு இயங்குவதற்குக்காரணம் இங்கு சமாதியுற்றிருக்கும் “அஸ்ஸெய்யித்- உஸ்மான் வலீயுல்லாஹ்” அவர்களேயாகும்.
எனவே நாமும் தெமட்ட மரத்தடி தர்ஹாவிற்குச் சென்று அல்லாஹ்வினதும், உஸ்மான் வலிய்யுல்லாஹ் அன்னவர்களினதும் நல்லருளையும் நல்லாசியையும் பெறுவோமாக!
ஆமீன்!
MIM அன்ஸார் (ஆசிரியர்)