மௌலவீ K.R.M. ஸஹ்லான் றப்பானி BBA (Hons)
நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவனால் படைக்கப்பட்ட ஆதி மனிதர், முதல் நபி, மானிடவர்க்கத்தின் மூலப்பிதா என சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களை களிமண்ணிலிருந்து படைத்தான். அவனின் பிரதிநிதியாக பூலோகத்திற்கு அனுப்பியும் வைத்தான். இறைவன் தனது திருமறையில் முதல் மனித படைப்பினமான ஆதம்( அலை) அவர்களை படைத்தது பற்றி தெளிவாக கூறுகிறான்.
(அதற்கு) முன்னர் ஜின்னை (ஜின்களின் மூல பிதாவை) கடிய சூடுள்ள நெருப்பிலிருந்து நாம் படைத்தோம். (திருக்குர்ஆன் 15:28)
மலக்குகள் நூர் எனும் ஒளியால் படைக்கப்பட்டார்கள். ஜின்கள் நெருப்பின் ஜுவாலையால் படைக்கப்பட்டார்கள். ஆதம்( அலை)உங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ள பொருளால் (மண்ணால்) படைக்கப்பட்டார்கள். (நூல்: முஸ்லிம் – அறிவிப்பாளர்: ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா)
அல்லாஹ் ஆதமை பூமி முழுவதும் திரட்டப்பட்ட மண்ணின் ஒரு கை அளவிலிருந்து படைத்தான். எனவே ஆதமின் மக்கள் பூமியின் நிறம் மற்றும் தன்மைக்கு ஏற்றவாறு அமைகின்றனர். அவர்களில் சிலர் வெள்ளையாகவும், சிலர் சிவப்பாகவும், சிலர் கறுப்பாகவும், சிலர் இரண்டும் கலந்துமுள்ளனர். அவர்களில் சிலர் கெட்ட குணமுடையோராகவும், சிலர் மென்மையான குணமுடையோராகவும், சிலர் கடின சித்தமுடையோராகவும், சிலர் நடுநிலையிலும் உள்ளனர். (நூல்: அஹ்மத் – அறிவிப்பாளர்: ஆபூமூஸா றழியல்லாஹு அன்ஹு)
மனித குலத்தின் முதல்வராக நபீ ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் தஆலா படைக்க நாடிய போது பூமியின் பல பாகங்களிலுமிருந்து 10 நாட்கள் மண் சேகரிக்கப்பட்டது. 20 நாட்கள் மண் குழைக்கப்பட்டது. பின்னர் 40 நாற்பது நாட்கள் அல்லாஹ் தஆலா நபீ ஆதம் (அலை) அவர்களை அழகிய உருவமாக அமைத்தான். பின்னர் 20 நாட்கள் மண்ணின் இயல்பிலிருந்து மனித உடலின் இயல்பாக மாறும் வரை அந்த உருவத்தை விட்டு வைத்தான். மொத்தம் 3 மாதங்கள் ( ரஜப், ஷஃபான், றமழான்) கழிந்தன.
பின்னர் அல்லாஹ் தஆலா உயிரை (றூஹ்) அவர்களுக்கு கொடுத்தான். மலக்குகள் அனைவரையும் அவர்களுக்கு சுஜூத் செய்ய வைத்தான். பின்னர் அவர்களை சுவர்க்கத்து ஸூன்துஸ் எனும் விரிப்பு விரிக்கப்பட்ட சிவந்த மாணிக்கங்களால் உருவான 700 தூண்கள் கொண்டமைந்த மேடையில் வைத்து மலக்குகள் எல்லா வானங்களிலும் வலம் வந்து சுவர்க்கத்தில் நுழைவித்தனர். அவர்களுக்கு சுவர்க்கத்து பட்டாடைகளும், மரகதத்தினால் உருவான கிரீடமும் அணிவிக்கப்பட்டது. அந்தக் கிரீடம் ஒளிவீசிக் கொண்டிருந்தது. இவற்றுக்கு எல்லாம் மகுடமாக பெருமானார் (ஸல்) அவர்களின் ஒளி ஆதம் (அலை) அவர்களின் நெற்றியில் ஒளிர்ந்தது.
நபீ ஆதம் (அலை) அவர்கள் ஒருநாள் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவர்களின் இடது பக்க விலா எழும்பை எடுத்து அதிலிருந்து ஹவ்வா (அலை) அவர்களை அல்லாஹ் தஆலா படைத்தான். இதனால்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் வலப்பக்க விலா எழும்புகள் 18 ஆகவும் இடப்பக்க விலா எழும்புகள் 17 ஆகவும் காணப்படுகிறது. . இதையே திருக்குர்ஆன் தெளிவாக எடுத்துரைக்கிறது.
மனிதர்களே! உங்கள் இறைவனுக்கு பயந்துக் கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்: பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும், பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்துக் கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள். மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) – நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (திருக்குர்ஆன் 4:1)
ஆதம் (அலை) அவர்கள் கண்விழித்து பார்த்த போது தங்களின் தலைப்பக்கமாக ஹவ்வா (அலை) நிற்கின்றார்கள். யார் நீங்கள் ? என்று கேட்டார்கள் ஆதம் (அலை) அவர்கள். நான் உமது மனைவி ஆயினும் எனக்கு நீங்கள் மஹர் தரவேண்டும் என்று சொன்னார்கள் ஹவ்வா (அலை) அவர்கள். இறைவா நான் என்ன மஹர் கொடுக்க வேண்டும் என்று இறைவனிடம் கேட்டார்கள் ஆதம் (அலை) அவர்கள். அதற்கு இறைவன் உமது பிள்ளை நபீ முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது 20 முறை ஸலவாத் சொல்லுங்கள். அதுதான் மஹர் என்று அல்லாஹ் தஆலா சொன்னான். இது வௌ்ளிக்கிழமை சூரியன் மத்தியில் இருந்து சாய்ந்தபின் நடை பெற்றது. இதனால்தான் வௌ்ளிக்கிழமை நிகாஹ் செய்வது சுன்னத்தாக்கப்பட்டது.
ஹவ்வா (அலை) அவர்கள் உலகத்து மாதர்களில் மிக அழகானவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு சுவர்க்கத்து ஆடைகள் அணிவிக்கப்பட்டு சுவனத்து மாதர்கள்-ஹூர்களும் சுவனத்து வாலிபர்களும் ஆதம்(அலை) , ஹவ்வா(அலை) தம்பதியினரை பின் தொடர விண்ணகம் முழுவதும் மலக்குகளுடன் அவர்கள் வலம்வந்தார்கள். பின்னர் 1000 ஆண்டுகள் சுவனத்து பூஞ்சோலையில் வாழ்ந்தார்கள். பின்னர் அவ்விருவரையும் அல்லாஹ் தஆலா பூமிக்கு அனுப்பிவைத்தான். இதையே திருக்குர்ஆன் பின்வருமாறு எடுத்துரைக்கிறது.
(அதற்கு) இறைவன், “இதிலிருந்து நீங்கள் இறங்குங்கள் – உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவராயிருப்பீர்கள். உங்களுக்கு பூமியில் தங்குமிடம் இருக்கிறது அதில் ஒரு (குறிப்பிட்ட) காலம் வரை நீங்கள் சுகம் அனுபவித்தலும் உண்டு” (திருக்குர்ஆன் 7:24)
“அங்கேயே நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள் அங்கேயே நீங்கள் மரணமடைவீர்கள் (இறுதியாக) நீங்கள் அங்கிருந்தே எழுப்பப்படுவீர்கள்”. (திருக்குர்ஆன் 7:25)
நபீ ஆதம் (அலை) அவர்கள் இலங்கையில் நூத் அல்லது றாஹூன் என்று அக்காலத்திலும் தற்காலத்தில் பாவா ஆதம் மலை எனவும் அழைக்கப்படும் மலையில் இறங்கினார்கள். இந்த மலையின் சூழலில் 100 நீர் ஊற்றுக்கள் உள்ளன. மாணிக்கங்களும் மரகதங்களும் வாசனைத் திரவியங்களும் அழகிய மரங்களும் பூக்களும் அதனை சூழ அமைந்துள்ளன. வௌ்ளம் ஏற்படும் காலங்களில் மலையில் மறைந்துள்ள மாணிக்கங்கள் நீரில் அரிக்கப்பட்டு நீரோடைகளை வந்தடைகின்றன. அதை மனிதர்கள் எடுத்துக் கொள்வார்கள். இந்த மலையின் உச்சியில் நபீ ஆதம் (அலை) அவர்களின் கால் அடிச்சுவடு காணப்படுகிறது.
ஹவ்வா (அலை) அவர்கள் சவூதி அரேபியாவின் ஜித்தாவில் இறங்கினார்கள். பின்னர் 300 அல்லது 500 ஆண்டுகளின் பின்னர் அறபாத்திடலிலே நபீ ஆதம் (அலை) அவர்களும் ஹவ்வா (அலை) அவர்களும் சந்தித்தார்கள்.
ஆதம் (அலை) அவர்கள் 1000 ஆண்டுகள் வாழ்ந்தார்கள். அல்லாஹ் தஆலா அவர்களுக்கு 10 ஸூஹூபுகளை அருளி முதலாவது றஸூலாகவும் அவர்களை தேர்ந்தெடுத்தான். அவர்களும் மனைவியும் சேர்ந்து 40 அல்லது 70 ஹஜ்ஜூகள் செய்தார்கள். அவர்களின் ஷரீஅத்தில் கூட செத்த பிராணி , பன்றியின் மாமிசம் இரத்தம் என்பன ஹறாமாக்கப்பட்டிருந்தது.
நபீ ஆதம் (அலை) அவர்களுக்கு மரணம் நெருங்கிய போது மலக்குகள் வந்து சூழ்ந்து நின்றனர். அவர்கள் மரணித்ததும் மலக்குகளே அவர்களை குளிப்பாட்டி, கபனிட்டு தொழுவித்து இலங்கையில் றாஹூன் மலையில் அடக்கம் செய்தனர். இதிலிருந்து ஒரு வருடத்தின் பின்னர் ஹவ்வா (அலை) அவர்கள் மரணித்தார்கள். அவர்கள் ஜித்தாவில் அடக்கம் செய்யப்பட்டார்கள். இவ்விருவரும் வௌ்ளிக்கிழமை மரணித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.