தொடர் – 04 ……..
அதி சங்கைக்குரிய ஷெய்குனா ஞானபிதா
மௌலவி அல்ஹாஜ் A.அப்துர் றஊப் மிஸ்பாஹீ
(அ.இ. சமாதான நீதிவான்) அவர்கள்
தினமும் காலையும், மாலையும் பீரங்கி வேட்டுக்களுடனும் மேள தாளத்துடனும் திறக்கப்படும் பாதுஷா அவர்களின் சமாதிக்கு முன்னால் கொடை வள்ளலும், அரசனும், ஆண்டியும், உயர் குலத்தோனும், இழி குலத்தோனும், படித்தவனும், பாமரனும், பைத்தியக்காரனும், புத்திமானும், அவ்லியாக்களும், அப்தால்களும் தலை குனிந்து நிற்கும் காட்சி கல்பையும், கண்ணையும் கவர்ந்துவிடும்.
இங்கு வருகின்ற பக்தர்கள் மகான் பாதுஷா அவர்களைக் கொண்டு பல வழிகளில் பறகத்பெற்று வருகிறார்கள்.
பாதுஷா அவர்களின் சமாதியில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கிலிருந்து எண்ணெய் எடுத்து தலையிலும் உடலிலும் பூசி பறகத் பெற்று வருகிறார்கள்.
இன்னும் எஜமான் அவர்களின் அற்புத பாதரட்சை வைக்கப்பட்டுள்ள வெள்ளிப் பெட்டியை தலையில்வைத்து அதைக் கொண்டும் பறகத்பெற்று வருகின்றனர்.
இவ்வாறு செய்தல் பாதுஷா அவர்களைக் கொண்டு பறகத் பெறுவதைச் சேர்ந்ததேயன்றி இது ஷிர்க்கும் இல்லை, பித்அத்துமில்லை
“ஷிர்க்” என்பதற்கு வரைவிலக்கணம் தெரியாத மூடர்கள்தான் இது “ஷிர்க்” என்று கூறி ஊரைக் குழப்பிக் கொண்டிருக்கின்றனர்.
ஒரு பக்தன் தனது பக்தி மேலீட்டால் ஒரு நபியின் அல்லது வலீயின் சமாதிக்குச் சென்று அவரின் கப்றை முத்தமிடுவதினாலும், அங்கு எரிந்து கொண்டிருக்கும் விளக்கிலிருந்து எண்ணெய் எடுத்து தலையிலும், உடலிலும், பூசிக்கொள்வதினாலும், அந்த நாதாக்கள் அடங்கியுள்ள சமாதியின் வாசற்படியை முத்தமிடுவதினாலும் அவன் முஷ்ரிக்காகவோ, காபிராகவோ ஆகிவிடமாட்டான்.
ஒரு நபீயின் அல்லது வலீயின் கப்ரை முத்தமிடுவதும் அவர்களின் சமாதியின் வாசற்படியை முத்தமிடுவதும், அவர்களின் சமாதியின் சுவரை முத்தமிடுவதும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டவையேயாகும்.
நபீ (ஸல்) அவர்கள் அடங்கியிருக்கும் இடத்திலுள்ள மண்ணை முத்தமிட்டவனுக்கு சுபசோபனமென்றும், நல்வாழ்த்துக்கள் என்றும் முத்தமிடுபவனை வாழ்தி இருக்கிறார்கள். “கஸீததுல் புர்தா ” காப்பியத்தின் தந்தை “மாதிகுர்றஸூல்” இமாம் பூசீரி (றஹ்) அவர்கள்
“ லாதீப யஃதிலு துர்பன்ளம்ம அஃளுமஹூ தூபா லிமுன்தஷிகின் மின்ஹூ வமுல்ததிமி” என்று பாடியுள்ளார்கள்.
ஒருவன் தனது மனைவியை முத்தமிடுவதும், மக்களை முத்தமிடுவதும் ஆசிரியரை முத்தமிடுவதும், நண்பனை முத்தமிடுவதும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டிருக்க ஒரு நபீயின் அல்லது வலீயின் கப்ரை முத்தமிடுவது மட்டும் ஏன் ஆகாது ?
இது கூடாதொன்பதற்கு திருக்குர்ஆனிலோ, திரு நபீயின் நிறைமொழியிலோ, இமாம்களால் எழுதப்பட்ட கிதாபுகளிலோ ஆதாரம் இல்லை.
காம இச்சைக்கு அடிமையாகி தனது மனைவியின் உச்சி முதல் உள்ளங் கால்வரையும் முத்தமிடும் வஹ்ஹாபி, ஆன்மீகத்திற்கு அடிமையாகி அவ்லியாக்களின் கப்ரை முத்தமிடுதல் “ஷிர்க்” என்று சொல்வது நியாயமா?
அவ்லியாக்கள் மீது கொண்ட அன்பினாலும், பாசத்தினாலும் அவர்களின் கப்றை முத்தமிடுதல் “ஷிர்க்” என்றால் மனைவி, மக்கள், நண்பர்கள் மீதுகொண்ட பாசத்தினால் அவர்களை முத்தமிடுவதும் “ஷிர்க்” ஆகிவிடுமல்லவா ?
அவ்லியாக்களின் அடக்கஸ்தலங்களை முத்தமிடுவது “ஷிர்க்” என்று கூறும் வஹ்ஹாபிகள் தமது மனைவியர்களையும், மக்களையும், நண்பர்களையும், மலர்களையும், திருக்குர்ஆன் பிரதிகளையும் முத்தமிடுவதில்லையா? அல்லது கப்ருகள் – சமாதிகள் மட்டும்தான் அல்லாஹ்வின் சிருஷ்டி மனைவி, மக்கள் அவ்வாறில்லை என்று நினைக்கின்றார்களா ?
சமாதிகளை முத்தமிடுவது “ஷிர்க்” என்றால் , மனைவி, மக்களை முத்தமுடுவதும் “ஷிர்க்” கேயாகும்.
‘’இத்பான் பின் மாலிக்” (றழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் ஸஹாபாக்களில் ஒருவர் ‘’அன்ஸாரீன்” மதீனாவாசிகளில் பத்ருப்போரில் கலந்து கொண்டவர்.
ஒரு நாள் நபீ (ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் றசூலே! எனது கண்பார்வை மங்கிவிட்டது. நான் எனது கூட்டத்தவர்களுக்காக அவர்களின் பள்ளிவாயலில் தொழுகை நடத்திக் கொண்டிருக்கின்றேன்’’.
‘’மழைபெய்து எனக்கும் அவர்களுக்குமிடையில் உள்ள நீரோடை ஓடத்தொடங்கிவிட்டால் அவர்களுக்குத் தொழுகை நடத்துவதற்காக அவர்களின்’ பள்ளிவாயலுக்கு என்னால் போக முடியவில்லை”
எனவே நாயகமே! தாங்கள் எனது வீட்டுக்கு வந்து ஓர் இடத்தில் தொழுது விட்டீர்களானால் நான் அவ்விடத்தை வழமையாகத் தொழுமிடமாக ஆக்கிக் கொள்வேன்” என்று கூறினார். நபீ (ஸல்) அவர்கள் “இன்ஷா அல்லாஹ்” நான் அவ்வாறு செய்கிறேன். என பதில் கூறினார்கள்.
மறுநாள் மதியநேரம் நபீ (ஸல்) அவர்கள் கலீபா அபூபக்கர் (றழி) அவர்கள் சகிதம் எனது வீட்டுக்கு வந்தார்கள். நபீ (ஸல்) அவர்கள் உள்ளே நுழைவதற்கு அனுமதி கேட்டார்கள். நான் அனுமதி வழங்கினேன். உள்ளே நுழைந்த நபீ பெருமான் (ஸல்) அவர்கள். “உன்னுடைய வீட்டில் எவ்விடத்தில் நான் தொழ வேண்டும்” என்று கேட்டார்கள். நான் வீட்டில் ஒரு பக்கம் சுட்டிக்காட்டினேன். நபீ (ஸல்) அவர்கள் அவ்விடத்தில் இரண்டு ரக்அத் தொழுதார்கள். அவர்களுக்குப் பின்னால் வரிசையாக நாங்கள் நின்றோம். நபீ (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தபின் அவர்களுக்கு விருந்து வழங்கினோம்.
ஆதாரம் ;-புஹாரி
அறிவிப்பு ;- இத்பான் பின் மாலிக்
இந்த ஹதீஸில் இருந்து நாம் பெறவேண்டிய கருத்துக்கள் பற்றி இங்கு எழுதுகிறேன்.
நபித்தோழர்களில் இத்பான் (றழி) அவர்கள் வழமையாக தொழுகை நடத்திவந்த பள்ளிக்குப் போவதற்கு வசதியில்லாதவராயிருந்ததால் அவர் தனது வீட்டில் தான் விரும்பிய இடத்தில் தொழுதிருக்கலாம்.
நபீ (ஸல்) அவர்களிடம் இதுபற்றிக் கேட்டிருக்க வேண்டிய அவசியமோ நபீ (ஸல்) அவர்கள் அவருடைய வீட்டிற்குச் சென்று தொழுதிருக்க வேண்டிய அவசிமோ இல்லை. எனினுமந்த ஸஹாபி நபீ (ஸல்) அவர்களை தனது வீட்டிற்கு அழைத்து அங்கு அவர்களைத் தொழச் செய்து பிறகு அந்த இடத்தை தான் வழமையாக தொழுமிடமாக ஆக்கிக் கொள்ள விரும்பினார்.
நபித்தோழர் இவ்வாறு விரும்பியதற்குக் காரணம் முதலில் நபீ (ஸல்) அவர்களை தொழச் செய்துவிட்டுத்தான் அவ்விடத்தில் தொழுவதில் “பறகத்” அருள் உண்டு என அவர் நம்பினதேயாகும்.
என்ன காரணத்துக்காக தனது ஸஹாபி அவரின் வீட்டுக்கு அழைக்கின்றார் என்பதை நபீ (ஸல்) அவர்கள் அறிந்து தனது தோழரின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு அங்கு சென்று அவர் கேட்டுக் கொண்டவாறு செய்தார்கள்.
தனது ஸஹாபியின் நோக்கம் அதாவது தான் அங்கு தொழுவது கொண்டு பறகத்தை நாடுகிறார் என்ற அவரின் நோக்கம் இஸ்லாத்திற்கு விரோதமான தாயிருந்தால் நபீ (ஸல்) அவர்கள் ஒருபோதும் அதற்கு உடன்பட்டிருக்க மாட்டார்கள் .
எனவே இந்த வரலாற்றிலிருந்து ஒருவன் ஒரு நபீயை, அல்லது ஒரு மகானைத் தனது வீட்டுக்கு அழைத்துச் செல்வதிலும், அவரைத் தனது வீட்டில் தொழச்செய்து அவ்விடத்தைத் தான் தொழுமிடமாக ஆக்கிக் கொள்வதிலும், ஒரு பெரியார் தொழுத இடத்தில் நின்று தொழுவதிலும் “பறகத்’’ அருள் இருக்கின்றதென்று வெள்ளிடை மலை போல் விளங்குகிறது.
அல்லாஹ்வை அறிந்தும் அவனை அஞ்சியும் வாழ்கின்ற ஓர் ஆலிமை அல்லது “பைஅத்” கொடுக்கும் ஒரு தரீக்காவுடை ஷெய்குவை “பறகத்” அருள்பெறும் நோக்கத்தில் ஒருவன் தனது, வீட்டுக்கு அழைத்து உணவைச் சாப்பிடுவதும், அவர்கள் குடித்து மிஞ்சிய நீரைக் குடிப்பதும் அவர்கள் இருந்த இடத்தில் இருப்பதும், அவர்கள் சாப்பிட்ட, குடித்த பாத்திரங்களைத் தான் வழமையாக சாப்பிடுவதற்கென்றும், குடிப்பதற்கென்றும் எடுத்துக்கொள்வதும் மேலே கூறிய நபீமொழியில் சொன்ன நல்லகாரியம் போன்றவையே
இதுதான் உண்மை ! இதுதான் சத்தியம்! எனினும் தலைக்கண்ணும் மனக்கண்ணும் குருடானவர்கள் இவை கூடாதென எவ்வளவுதான் கூச்சலிட்டாலும் நடக்கப்போவது ஒன்றுமில்லை. பெட்டைக் கோழி கூவி விடிவதில்லையாம் .
நபீமார்களினதும், அவ்லியாக்களினதும், ஷெய்குமார்களினதும் அருள்பெற வேண்டுமென்ற நன்நோக்குடன் மேலே கூறப்பட்ட காரியங்களைச் செய்பவர்களுக்கு அந்த நாதாக்களின் அருள் நிச்சயமாகவே கிடைக்கும் , இதை மறுப்பவர்களுக்கு அது ஹராமாக்கப்பட்டதாகும்.
மார்க்கப் பெரியோர்களைக் கொண்டு ஒரு வீட்டுக்கு அல்லது கடைக்கு அல்லது ஒரு பள்ளிவாயலுக்கு அடிக்கல் நாட்டுவதும், அவர்களைக் கொண்டு அவற்றைத் திறந்து வைப்பதும் , அவர்களைக் கொண்டு அங்கு நடைபெறவுள்ள முதல் நிகழ்ச்சியை நடத்துவதும் மேலே சொல்லப்பட்ட அருள்பெறும் அம்சத்தைச் சேர்ந்ததேயாகும்.
நபீமார்கள் மீதும், அவ்லியாக்கள் மீதும் ஷெய்குமார்கள் மீதும் நல்லெண்ணம் கொண்டவர்கள் அவர்களைக் கொண்டு அருள்பெறும் நோக்கத்துடன் அவர்களையணுகினால் அந்த நாதாக்கள் அவர்களின் நாட்டத்தை நிறைவேற்றியும் , அவர்களின் நல்லெண்ணத்திற்கு உதவியும் வருவார்கள் என இமாம் இப்னுல் ஜவ்ஸி (றஹ்) அவர்கள் தங்களின் நூலில் எழுதியுள்ளார்கள்.
இதனால்தான் அவ்லியாக்கள், ஷெய்குமார்கள் மீது அன்பு கொண்ட அவர்களின் பக்தர்கள், அந்த நாதாக்களிடம் அவர்கள் பாவித்த ஷேர்ட், சாறன், அஸா, தலைப்பாகை, முஸல்லா, தஸ்பீஹ் ,செருப்பு, மோதிரம் போன்ற பொருட்களைப் பெற்று பக்குவமாகப் பேணிப் பாதுகாத்து அருள் பெற்று வருகின்றனர்.
நபீ (ஸல்) அவர்களின் பாவனைப் பொருட்களும், உடைகளும் அவர்களின் வபாத்துக்குப்பிறகு ஸஹாபாக்கள் எடுத்துக்கொண்டனர்.
ஸஹாபாக்களுக்குப் பிறகு அவர்களின் வழித்தோன்றல்களிடம் அவை மாறி மாறி வந்து கொண்டிருந்தன.
சவூதி அரேபியாவை விட்டும் துருக்கியர் வெளியேறிய நேரம் ஸஹாபாக்களின் சந்ததிகளிடம் இருந்து வந்த நபீ (ஸல்) அவர்கள் பாவித்த அநேகப் பொருட்களைத் துருக்கி நாட்டுக்கு எடுத்துச் சென்றனர். அவற்றில் சில அந்நாட்டின் பல பகுதிகளிலும் குறிப்பாக தலைநகர் இஸ்தான் பூலிலும் இன்றுவரை இருந்து வருகின்றது.
வலீகட்கரசர் குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (றழி) அவர்கள் பாவித்த பொருட்களையும் , உடைகளையும் அவர்களின் சிஷ்யர்கள் எடுத்துக்கொண்டனர். அவற்றில் சில அவர்களின் திருச்சமாதியையடுத்துள்ள அவர்களின் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்நூலகத்தில் அவர்களின் காலத்தில் தங்கத்தால் எழுதப்பட்ட திருக்குர்ஆன் பிரதிகளும், இலைவகைகளின் சாறு கொண்டு எழுதப்பட்ட திருக்குர்ஆன் பிரதியும் இருக்கின்றன. குத்பு நாயகமவர்கள் “அல்பாசுல் அஷ்ஹப்” என அழைக்கப்பட்டார்கள் “ராஜாளிப் பட்சி “ என்பது இதன் பொருள்.
இப்படியொரு சிறப்புப் பட்டம் அவர்களுக்கு வரக்காரண மென்னவெனில், அவர்களின் காலத்தில் வாழ்ந்த ஒருவர் பறவைகளின் அரசனாகத்திகழும் ராஜாளிப் பட்சியைக் கண்ட பொழுது இது பறவைகளுக்கு அரசனாக இருப்பதுபோல் குத்பு நாயகமவர்கள் அவ்லியாக்களுக்கு இராசாவாக இருப்பதால் அவர்களுக்கு “அல்பாசுல் அஸ்ஹப்” என்று பட்டம் சூட்டினால் பொருத்தமாக இருக்குமென்று கருதினார்.
அவருக்கு மரத்தில் சிற்பம் செய்யும் திறமை இருந்ததால் “அல்பாசுல் அஷ்ஹப்” என்ற எழுத்தைக் கொண்ட இராஜாளிப் பட்சியின் தோற்றத்தைச் செதுக்கி குத்பு நாயகமவர்களுக்கு அனுப்பிவைத்தார் மரத்தில் செதுக்கப்பட்ட அந்த எழுத்தணிச் சிற்பமும் அவர்களின் நூலகத்தில் இருக்கிறது.
இதேபோல் அவ்லியாக்கள் பாவித்த பொருட்கள் அவர்களின் வழித்தோன்றல்களிடமும், அவர்களின் சமாதிகளிலும் இருக்கின்றன. பக்தர்கள் அவைகளைக் கொண்டு பறகத் பெறுவதில் எவ்விதப் பிழையுமில்லை.
பனூ இஸ்ராயீல்களின் காலத்தில் நபீ இஷ்மவீல் (அலை)அவர்கள் நபீயாக அனுப்பப்பட்டிருந்த சமயம் அவர்களின் நாட்டை ஆட்சி செய்வதற்கு ஒரு அரசன் தேவைப்பட்டான். நபீயவர்களும் அல்லாஹ்விடம் நாட்டையாள ஒரு அரசனை தந்துதவுமாறு பிரார்த்தித்து வந்தார்கள்.
அப்பொழுது அல்லாஹ் நபீயவர்களுக்கு ஒரு தடியும், எண்ணெயுள்ள ஒரு கொம்பும் கொடுத்து இந்த நாட்டின் அரசனாக வருபவன் இத்தடியின் நீளத்தை யுடையவனாக இருப்பான். அவன் எப்போதாவது உங்களிடம் வந்தால் இந்தக் கொம்பிலுள்ள எண்ணெய் சப்தமிடும் என்று அவர்களுக்கு அறிவித்தான்.
அவ்வூரில் “தாலூத்” என்ற பெயரில் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு ஏழை மகன். ஏழை மனிதர்கள் கீழ்த்தரமான தொழில் எனக்கருதும் தொழில்களைச் செய்துவந்தார். கூலிவாங்கிக் கொண்டு தோட்டங்களுக்குத் தண்ணீர் ஊற்றுவார். குதிரை வண்டியோட்டுவார். தோல் பதனிடும் வேலையும் செய்வார். இதனால் அக்காலத்தவரிடையே கீழ்த்தரமானவராக இவர் கணிக்கப்பட்டு வந்தார்.
ஒரு நாள் இவரது தந்தையின் கழுதைகள் சில காணாமல் போய்விட்டன. தந்தை இவரையும் இன்னொருவரையும் சேர்த்து காணாமற்போன கழுதைகளைக் கண்டுபிடித்துக் கொண்டு வருமாறு அனுப்பி வைத்தார்.
அவர்களிருவரும் கழுதையைத் தேடி ஊரூராய்ச் சுற்றினார்கள்.
இவ்விருவரும் போய்க் கொண்டிருந்த வழியில் நபீ இஷ்மவீல் (அலை) அவர்களின் இல்லம் வந்தது. தாலூத்துடன் வந்த மனிதர் இது நபீ இஷ்மவீல் (அலை) அவர்களின் வீடு.நாம் உட்சென்று காணாமல் போன கழுதைகள் பற்றி அவரிடம் கேட்போம். அவர் ஒரு நபீயாக இருப்பதால் கழுதைகள் இருக்கும் இடத்தை சரியாகச் சொல்லிவிடுவார். நாம் அலையத் தேவையில்லை எனக் கூறினார்.
இருவரும் நபீயவர்களின் வீட்டினுள் பிரவேசித்து விஷயத்தைக் கூறிக் கொண்டிருக்கையில் நபீயவர்களிடமிருந்த கொம்பிலுள்ள எண்ணெய் சப்தமிடத் தொடங்கியது .
அல்லாஹ் அறிவித்தபடி வந்திருப்பவர்களிலொருவர்தான் இந்நாட்டு அரசனாக இருக்க வேண்டுமென உணர்ந்து கொண்ட நபீயவர்கள், இருவரில் யார் அரசனாக இருக்கமுடியும் என்பதை தங்களிடமிருந்த தடிகொண்டு அளந்து தாலூத்தைத் தான் அல்லாஹ் அரசனாக அனுப்பி யுள்ளான் எனக் கண்டறிந்தார்.
தாலுத் என்பவர்தான் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட மன்னன் என்பதை நன்கு ஊர்ஜிதம் செய்து கொண்ட நபீயவர்கள் பனூ இஸ்ராயீல்கள் மத்தியில் விடயத்தை எடுத்துரைத்தார். நபீயவர்களின் செய்தியைக் கேட்ட மக்கள் கோபத்தால் கொந்தளித்தனர்.
ஒருவரை அரசனாக ஆக்குவதென்றால் அதற்கான தகுதி தராதரம் இருக்கவேண்டுமல்லவா? இவரோ ஒரு கூலிக்காரன் கீழ்த்தரமான தொழில்கள் செய்பவர். எங்களில் எவ்வளவோ உயர்ந்த தரத்தையுடையவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரை அரசனாக ஆக்காமல் போயும் போயும் இவரைத் தெரிவு செய்யப்பட்ட விஷயத்தைப் பெரிய பிரச்சினைக்குரிய விஷயமாக ஆக்கிவிட்டனர்.
நபீ இஷ்மவீல் (அலை) அவர்கள் அந்த மக்களிடம் எவ்வளவோ விரிவாகவும், பக்குவமாகவும் எடுத்துக் கூறிப்பார்த்தார்கள். அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவரை அரசனாக ஏற்பதாயின் அதற்குரிய ஆதாரம் வேண்டும் எனக் கேட்டனர். ‘’நபீ மூஸா ” (அலை) அவர்களிடம் ஒரு ‘’தாபூத்’’ பெட்டி இருந்தது. அந்தப்பெட்டி உங்களிடம் வரும். அதுதான் ‘’தாலூத்’’ அல்லாஹ் வினால் நியமிக்கப்பட்ட அரசர் என்பதற்குரிய ஆதாரமாகும் என்று நபீ இஷ்மவீல் (அலை) அவர்கள் அந்த மக்களுக்குக் கூறினார்கள்.
இந்தப் பெட்டியின் வரலாறு என்னவெனில். நபீ ஆதம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் சுவர்க்கத்திலிருந்து மரத்தினாலான ஒரு ‘’தாபூத்’’ பெட்டியை இறக்கிவைத்தான். அதில் அவர்களுக்குப் பின்னால் நபீ (ஸல்) அவர்கள் வரையான எல்லா நபீமார்களினதும் உருவங்கள் இருந்தன. அது மூன்று முழ நீளமும், இரண்டு முழ அகலமும் உடையதாயிருந்தது.
நபீ ஆதம் (அலை) அவர்கள் அதைப் பேணிப்பாதுகாப்பாக தமது மரணபரியந்தம் வைத்திருந்தார்கள். அவர்களின் வபாத்துக்குப்பின் அவர்களின் பிள்ளைகளிடம் ஒருவர் பின் ஒருவராக அது மாறிவந்தது.
இவ்வாறு தலைமுறை தலை முறையாக அப்பெட்டி கைமாறி வந்து. நபி யஃகூப் (அலை) அவர்களிடம் வந்தது. பின்னர் பனூஇஸ்ராயீல்களின் கைக்கு வந்து மூஸா (அலை) அவர்களிடம் வந்து சேர்ந்தது.
பல்லாயிரம் வருடங்கள் வயதுடைய அப்புனிதப் பெட்டியில் நபீ மூஸா (அலை) அவர்கள் தங்களுக்கு அருளப்பட்ட “தவ்றாத்” வேதத்தையும், இன்னும் முக்கிய சில பொருட்களையும் வைத்திருந்தார்கள்.
அவர்கள் யுத்தத்திற்கு போகும்போது அப்பெட்டியை தூக்கிச்சென்று யுத்தகளத்தில் வைத்துவிட்டு யுத்தம் செய்வார்கள். பனூஇஸ்ராயீல்களின் மனங்களெல்லாம் அப்பெட்டியின் பக்கமே இருந்தன. நபீ மூஸா (அலை) அவர்கள் மரணித்த பிறகு அப்பெட்டி மீண்டும் பனூஇஸ்ரயீல்ளின் கைக்கு வந்தது. அவர்கள் அதைக் கொளரவமாகவும், கண்ணியமாகவும் பாதுகாத்து வந்தார்கள்.
அவர்களுக்கிடையில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அந்தப் பெட்டியிடம் சென்று தீர்ப்பும், நீதியும் கேட்பார்கள். அப்பெட்டி அவர்களுடன் பேசும். அவர்களின் பிரச்சினையைத் தீர்த்துவைக்கும். அவர்கள் போருக்குச் செல்கையில் அந்தப் பெட்டியையும் எடுத்துச்சென்று அவர்களுக்கு முன்னால் வைத்துவிட்டு எதிரிகளுக்குத் தோல்வியும், தமக்கு வெற்றியும் கிடைக்க வேண்டு மென்று அந்தப்பெட்டியைக் கொண்டு அல்லாஹ்விடம் வஸீலாத் தேடுவார்கள். அமரர்கள் தான் அப்பெட்டியை யுத்த களத்திற்க்கு எடுத்துச் செல்பவர்களா யிருந்தார்கள். அந்தப்பெட்டியை யுத்த களத்தில்வைத்து அதைக்கொண்டு அல்லாஹ்விடம் வஸீலா உதவிதேடியபின்னர்தான் யுத்தம் செய்வார்கள்.
யுத்த களத்தில் அப்பெட்டி சப்தமிட்டால் தமக்குவெற்றி கிடைக்குமென்று நம்பிக்கொள்வார்கள்.
பனூ இஸ்றாயீல்கள் பாவத்திலீடுபட்டு அல்லாஹ்வுக்கு மாறு செய்யத் தொடங்கினதும் அவர்கள் மீது கோபமுற்ற அல்லாஹ் எதிரிகளுக்கு அதிகாரத்தைக் கொடுத்தான். அப்போது எதிரிகள் பனூ இஸ்றாயீல்களிடமிருந்த அந்த அருள் நிறைந்த பெட்டியை அவர்கள் கைப்பற்றிக் கொண்டு சனங்கள் மலசலம் கழிக்குமிடத்தில் அதைப்போட்டு இழிவு படுத்தினார்கள்.
அவ்வாறு இழிவுபடுத்தியவர்களை அல்லாஹ் “பாஸூறா” மூலவியாதி கொண்டு சோதித்தான்.
மேலும் அவர்களின் பட்டணங்களில் ஐந்து பட்டணங்களையும் அழித்து நாசமாக்கினான். தமது இழிவான நடவடிக்கையின் காரணமாகவே தமக்கும் தமது நகரங்களுக்கும் இந்நிலை ஏற்பட்டதையுணர்ந்த அவர்கள் இரட்டை மாட்டு வண்டியொன்றில் பெட்டியை வைத்து மாடுகளை ஓடச் செய்தனர்.
அம்மாடுகள் வண்டியை இழுத்துக் கொண்டு சென்றன அப்போது அல்லாஹ் நான்கு அமரர்களை அனுப்பி அவ்வண்டியை “தாலுத்” அவர்களின் வீட்டுக்கு இட்டுச்செல்லுமாறு பணித்தான். அவ்வாரே அவர்களும் செயற்பட்டு பெட்டியை தாலூத்திடம் ஒப்படைத்தனர்.
தாலூத்தை அரசனாக ஏற்றுக்கொள்ள ஆதாரம்கேட்டிருந்த பனூ இஸ்ராயீல் மக்கள் குறிப்பிட்டபெட்டி தாலூத்தை வந்தடைந்த பின்னர் நபீ இஷ்மவீல் (அலை) அவர்களின் அறிவிப்புப்படி அவரை அரசராக ஏற்றுக் கொண்டனர்.
அப்பெட்டியில் மூஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட “தவ்றாத்” வேதமும், அவர்களினதும் ஹாறூன் (அலை) அவர்களினதும் குடும்பத்தினர்கள் விட்டுச்சென்ற சிலபொருட்களும் காணப்பட்டன. மூஸா (அலை) அவர்களின் அஸா, தலைப்பாகை, உடைகள், செருப்புகள், என்பனவும் ஹாறூன் (அலை) அவர்களின் தலைப்பாகையும், நபீ ஸூலைமான் (அலை) அவர்களின் மோதிரமும், பனூ இஸ்ராயீல்களுக்கு சுவர்க்கத்திலிருந்து இறக்கிவைக்கப்பட்ட உணவில் சிறிதளவும் இருந்தன.
திருறை கூறும் இந்த வரலாறு பல பாடங்களையும், அறிவுரைகளையும் வழங்குகிறது.
“தாலூத்” என்பவர் கீழ்த்தரமான தொழில் செய்த வராகவும், ஏழையாகவும், மக்கள் மத்தியில் மதிப்பற்றவராகவும் இருந்தாலுங் கூட அவரிடம் நீதி, நேர்மை, அறிவு, அன்பு, அச்சம் முதலான உயர் குணங்கள் இருந்தபடியால் தான் அல்லாஹ் அவரை அரசனாக்கினான்.
இதிலிருந்து ‘’துயிஸ்ஸு மன்தஷாஉ’’ (நீ விரும்பினவர்களை கண்ணியப்படுத்தி வைப்பாய்) என்ற தத்துவம் விளங்குகின்றது.
அல்லாஹ் ஒரு மனிதனை உலகத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு பதவியைக்கொண்டோ அல்லது விலாயத் எனும் ஒலித்தனம் கொண்டொ கண்ணியப்படுத்த விரும்பினால், அம்மனிதனின் வம்சத்தையோ தொழிலையோ கவனிக்காமல் அவரின் உயர் பண்புகளைக்கொண்டு மட்டும் தான் கண்ணியப்படுத்துவான் நபீ ஆதம் (அலை) அவர்களுக்கு அப்பெட்டி சுவர்க்கத்தில் இருந்து இறக்கப்பட்டதனாலும் அதில்மேற்கூறப்பட்ட நபீமார்களினதும் குடும்பத்தாரினதும் பொருட்கள் இருந்ததினாலும் அப்பெட்டி கௌரவத்துக்கும், கண்ணியத்துக்குமுரியபெட்டியாக விளங்கியது.
இப்பெட்டி அருள் ‘பறகத்’பெட்டியாயிருந்ததினால்தான் மூஸா நபீ(அலை) அவர்கள் அந்தப்பெட்டியை எடுத்துச்சென்று யுத்த களத்தில் வைத்து அதன்பொருட்டால்வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் யுத்தம்செய்தார்கள்.
அல்லாஹ்தான்வெற்றியளிப்பவன் என்று கூறும் கூற்று நபீ மூஸா (அலை) அவர்களுக்குத்தெரியாமலா பெட்டியின் பொருட்டால் வெற்றியை நாடினார்கள்? அல்லாஹ்வுடன்நேரில் வசனித்த ஒரு நபீயை விடவா வழிகேடர்களுக்கு அறிவு கிட்டிவிட்டது?.
இந்நிகழ்ச்சிளெல்லாம் நல்லடியார்களின் பொருட்டைக்கொண்டு அல்லாஹ்விடம் உதவிகேட்பதுபோல் அவர்கள் பாவித்த உடைமைகளைக்கொண்டும் உதவியும் அருளும்கேட்கலாம் என்பது தெளிவாக விளங்குகின்றது.
திருக்குர்ஆன் கூறுகின்ற இந்த ஆதாரங்களின்படி நல்லடியார்கள் பாவித்த பொருட்ளைக் கொண்டு ‘பறகத்’ அருள்பெறுதல் என்பது இஸ்லாத்தில் உள்ளதுதான் என்ற உண்மை தெளிவாகின்றது.
முற்றும்..
================================================================
தொடர் – 03 ……..
அதி சங்கைக்குரிய ஷெய்குனா ஞானபிதா
மௌலவி அல்ஹாஜ் A.அப்துர் றஊப் மிஸ்பாஹீ
(அ.இ. சமாதான நீதிவான்) அவர்கள்
சஃது (றழி) அவர்கள் மற்றவர்களை விடத் தனக்கு ஒரு சிறப்பு இருப்பதாக நினைத்தது தவறான நினைப்பாகும். அவர் ஒரு ஸஹாபியாக இருந்தாலும் இப்படி ஒரு நினைப்பு அவருக்கு வந்ததில் வியப்பொன்றுமில்லை. ஏனெனில் அவரும் ஒரு மனிதன்தான்.
எனினும் அவருடைய மனதிலேற்பட்ட நினைப்பை நபீ (ஸல்) அவர்கள் அறிந்து கொண்டதுதான் வியப்பான விடயம். இது வியப்பான விடயம் என்று சொல்வது கூட நபீயவர்கள் நம்மைப் போன்ற சாதாரன மனிதன் என்ற வஹாபிகளின் கொள்கைப்படியேயாகும். சுன்னத்வல் ஜமாஅத் கொள்கையுடையோரிடம் இது வியப்பான விடயமே அல்ல.
சஃது (றழி) அவர்களின் நினைப்பு தப்பானதென்பதை யுணர்ந்த நபீ (ஸல்) அவர்கள் தங்களின் சூசகமான பதில் மூலம் அந்த நினைப்பு தப்பானதென்று அவருக்கு உணர்த்தினார்கள்.
உங்களில் பலம் குறைந்தவர்களைக் கொண்டுதான் நீங்கள் உதவியும், உணவும் கொடுக்கப்படுகிறீர்கள் என்ற பதில் அவருடைய தவறை அவருக்கு உணர்த்துவதுடன் ஏழைகளினால் அல்லது இறைநேசர்களினால்தான் ஏனையோருக்கு உணவும், உதவியும் கொடுக்கப்படுகின்றதென்ற கருத்தையும் காட்டுகிறது .
இது “நல்லோரொருவருளரேலவர் பொருட்டால் எல்லோருக்கும் பெய்யுமழை” யென்ற தத்துவம் போன்றதாகும்.
இதே கருத்தை நபீ (ஸல்) அவர்களின் வேறுபல பொன் மொழிகளும் வலியுறுத்துகின்றன. “லவ்லா ஸிப்யானு றுள்ளஉன் வபஹாயிமு றுத்த உன் வமஷாயிகு றுக்கஉன் லசுப்ப அலைக்குமுல் அதாபு சப்பன் சப்பா”
பால் குடிக்கும் பச்சிளங் குழந்தைகளும், புல்மேயும் கால் நடைகளும் , இறைவனை இஸ்தோத்திரம்செய்யும் மகான்களும் உலகில் இல்லையானால் உங்கள் மீது வேதனை கொட்டப்படும் என நபீ (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
உலகில் நல்லவர்களும் வாழ்கிறார்கள்,கெட்டவர்களும் வாழ்கிறார்கள், எனினும் நல்லவர்களின் பொருட்டைக் கொண்டுதான் கெட்டவர்களுக்கும் அல்லாஹ் உணவும், உதவியுமளித்துக் கொண்டிருக்கின்றான்.
சஃது (றழி) அவர்கள் மற்றவர்களை விடத் தனக்கொரு சிறப்பு இருப்பதாக நினைத்தது தப்பான நினைப்புத்தான். எனினும் இவ்வாறு நினைப்பவர்களுக் கூட அல்லாஹ் உணவும், உதவியுமளிக்கின்றான் என்றால் அது ஏனைய நல்லடியார்களின் பொருட்டைக் கொண்டுதான் என்ற கருத்தை நபீ (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தினார்கள். இந்த ஹதீஸ் அவ்லியாக்கள், நல்லடியார்கள் ஆகியோரின் பொருட்டாலும், பறகத்தாலும் தான் ஏனையோர் ஒருமிடர் தண்ணீரேனும் குடித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்கின்ற உண்மையை உணர்த்துகிறது.
இந்த உன்மையை இந்த “ஸமான்” காலத்தில் நிதர்சனமாகக் காணமுடியும். விபச்சாரம், கொலை, களவு, கொள்ளை, அநீதி, குடி, சூது போன்ற பாதகச் செயல்களும் , அட்டூழியங்களும் மலிந்து காணப்படுகின்ற தற்காலத்தில் அட்டூழியக்காரர்களும், பாதகர்களும் ஒரு மிடர் தண்ணீரேனும் குடிக்கிறார்கள் என்றால் அது இக்காலத்தில் உயிர் வாழும் அவ்லியாக்கள், தரீக்காக்களின் ஷெய்குமார்கள் முதலான நல்லடியார்களின் பறக்கத்தினாலும் அவர்களின் பொருட்டினாலுமே தான். ஹனபி மத்ஹபின் ஸ்தாபகர் அல் இமாமுல் அஃளம் அபூ ஹனீபா (றஹ்) அவர்கள் இமாம் ஷாபி (றஹ்) அவர்களுக்கு முந்தினவர்கள்.
இவர்கள் ஈராக் நாட்டின் தலை நகரமான பக்தாதில் ‘’அஃளமிய்யா’’ எனும் இடத்திலுள்ள “ஜாமிஉல் இமாமில் அஃளம் ‘’ எனும் பள்ளிவாயலில் கிப்லாப்பக்கமாகச் சமாதி கொண்டுள்ளார்கள். சந்தணமரத்தினாலான கண்ணைக்கவரும் அழகியல் வேலைப்பாடுகளைக் கொண்ட கூட்டினுள்ளே துயில்கின்றார்கள்.
இவர்களின் மகிமையையும், சிறப்பையும் உணர்ந்த இமாம் ஷாபீ (றஹ்) அவர்கள் இவர்களின் கபுறடிக்கு வந்து அங்கு இரண்டு ‘’ரக்அத்’’ துக்கள் சுன்னத் தொழுதுவிட்டு அவர்களைக் கொண்டு ‘’வஸீலா’’ கேட்டதுடன் அவர்களைக் கொண்டு ‘’பறகத்” அருள் பெற்றும் வந்தார்கள். சட்டக்கலை மேதையாகவும், உலகத்து அறிஞர்களால் இமாம் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டவருமான இமாம் ஷாபி (றஹ்) அவர்கள் இமாம் அபூஹனீபா (றஹ்) அவர்களின் சமாதிக்குச் சென்று அவர்களைக் கொண்டு வஸீலா தேடியும், பறகத் பெற்றுமிருக்க வஸீலாத்தேடுவது கூடாதென்றும், நாதாக்கள் நல்லடியார்களைக் கொண்டு பறகத் பெறுதல் கூடாதென்றும் கொக்கரிக்கின்ற வஹ்ஹாபிகளைப் என்னென்றுதான் சொல்லமுடியும் ? இமாம் புஹாரி (றஹ்) அவர்கள் “ஸஹீஹூல் புஹாரி” எனும் மாபெரும் ஹதீஸ் களஞ்சியத்தை எழுதிய நேரம் ஒவ்வொரு தலைப்பு எழுதும் போதும் வுழூச் செய்து இரண்டு ரக்அத்துக்கள் சுன்னத் தொழுதபிறகுதான் எழுதுவார்கள் .
ஒரு தலைப்பில் ஒரு ஹதீஸை எழுதியபின் நபீ (ஸல்) அவர்களின் கப்றுக்கும் அவர்களின் மிம்பருக்குமிடையில் அந்த கிதாபை எடுத்துக்கொண்டு நபீ (ஸல்) அவர்களின் “பறகத்” அருள் வேண்டி நடந்து செல்வார்கள் என்றும், இவ்வாறு அவர்கள் நடந்தது நபீ (ஸல்) அவர்களின் அருளை பெறவேண்டுமென்ற ஆவலினால்தான் என்றும் “முகத்திமதுல் புஹாரி” யில் வரையப்பெற்றுள்ளது.
“ றயீசுல் முகத்திஸீன்” முஹம்மத் பின் இஸ்மாயீல் புஹாரி (றஹ்) அவர்கள் உலகப் பிறசித்திபெற்ற ஹதீஸ் கலை மேதையாவார்கள். இவர்களைப் பற்றி அறியாத அறிஞர்கள் உலகில் இருக்கமாட்டார்கள்.
இவர்களின் செயல்கள் நமக்குப் போதிய ஆதாரங்களாகும். இவர்கள் “ஸஹீஹூல் புஹாரி” என்ற நபி மொழிக் களஞ்சிய நூலை திரு மதீனா நகரிலிருந்து எழுதிக் கொண்டிருக்கையில் ஒரு ஹதீஸை எழுதி முடித்தவுடன் அந்த கிதாபை எடுத்துக் கொண்டு “சுவர்க்கத்தின் பூங்கா” என்று அழைக்கப்படுகின்ற நபீ (ஸல்) அவர்களின் கப்றுக்கும், அவர்களின் “மிம்பர்” மேடைக்குமிடையில் நடந்து கொண்டிருந்தார்கள்.
இமாம் புஹாரி (றஹ்) அவர்கள் ஏன் இவ்வாறு நடந்தார்கள் என்றால் நபீ (ஸல்) அவர்களைக் கொண்டு “பறகத்” அருள்பெறவேயன்றி வேறொன்றுக்காகவுமில்லை . நபீ (ஸல்) அவர்களின் கப்றுக்கும் அவர்களின் மிம்பருக்குமிடையில் நடமாடிக்கொண்டிருப்பதில் கூட அருள் “பறகத்” இருக்கிறது. என்பது இமாம் புஹாரி (றஹ்) அவர்களின் இந்நடவடிக்கையில் இருந்து தெளிவாக விளங்குகிறது.
இமாம் புஹாரி (றஹ்) அவர்களே நபீ (ஸல்) அவர்களின் பேரருளை நாடி இவ்வாறு செய்திருக்க அவர்களின் எல்லையில்லா பேரறிவில் கோடி கோடியிலொன்ரைக் கூட அறிந்திடாத வஹ்ஹாபிகள் இத்தகைய வேலைகள் இஸ்லாத்துக்கு முரண் என்றும், இவ்வாறு எல்லாம் செய்வதில் பறகத்தும் இல்லை, ஹறகத்தும் இல்லை என்றும் ஓலமிடுகிறார்கள். இவர்கள் அறியாமையெனும் இருளிலிருந்து அறிவெனும் வெளிச்சத்துக்கு எப்பொழுதுதான் வருவார்களோ ………? நாம் ஒருவரை மகான் என்றும், வலீ என்றும், இமாம் என்றும், ஷெய்கு என்றும் ஏற்றுக்கொண்டபின் அவருடைய செயல்களை ஆட்சேபிப்பதும், அவரது செயல் இஸ்லாத்திற்க்கு முரணானதா இல்லையா எனச்சிந்திப்பதும் , அவருடைய செயல்களுக்கு மூலாதாரங்களில் ஆதாரம் தேடமுட்படுவதும் முட்டாள்தனமேயாகும்.
நபீமார்கள், ஸஹாபாக்கள், இமாம்கள், அவ்லியாக்கள் ஆகியோர்தான் நமது வழிகாட்டிகளாவர். நாம் இவர்களின் சொற்செயல்களைப் பின்பற்றி இவர்கள் காட்டிய வழியில் நடக்குமாறுதான் பணிக்கப்பட்டுள்ளோம்.
இவர்களின் சொற்செயல்கள்தான் நமக்கு ஆதாரமேயன்றி இவர்களின் சொற் செயலுக்கு நாம் ஆதாரம் தேடவேண்டிய அவசியமே கிடையாது. ஆதாரம் தேடவும் கூடாது. அவர்கள் எல்லாம் நேரான வழி நடந்த சத்திய சீலர்களாகவே இருக்கிறார்கள். இவர்களுக்கு காட்டிய நேர்வழியை காட்டுமாறு தான் நாமும் தினமும் தொழுகையிலே அல்லாஹ்விடம் இறைஞ்சுகின்றோம்.
உதாரணமாக;- நபீமார்கள், நாற்பெரும் கலீபாக்கள், நாயகத்தோழர்களான ஸஹாபாக்கள், மத்ஹபுகளையுடைய நான்கு இமாம்களான இமாம் ஹனபி, இமாம் ஹன்பலீ, இமாம் ஷாபீ இமாம் மாலிக் ஆகியோர், ஹதீஸ் கிரந்தங்களையுடைய இமாம் புஹாரி, இமாம் முஸ்லிம், இமாம் அபூதாவூத், இமாம் துர்மிதி, இமாம் இப்னுமாஜா, இமாம் நஸயீ ஆகியோர் தரீக்காக்களின் ஷெய்குமார்களான காதிரிய்யா தரீக்காவின் ஸ்தாபகர் குத்புல் அக்தாப் – கௌதுல் அஃலம் “முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானி”, ஷாதுலிய்யா தரீக்காவின் ஸ்தாபகர் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலி, நக்ஷபந்திய்யா தரீக்காவின் ஸ்தாபகர் பஹாஉத்தீன் அந்நக்ஷபந்தீ, சஹ்ரவர்திய்யா தரீக்காவின் ஸ்தாபகர் ஸிஹாபுத்தீன் அஸ்ஸஹ்றவர்தீ, சிஷ்திய்யா தரீக்காவின் ஸ்தாபகர் “கரீபே நவாஸ் குதுபுல் ஹிந்த்’’ ஹாஜாமுயீனுத்தீன் சிஷ்தீ, அலவிய்யா தரீக்காவின் ஸ்தாபகர் அஸ்ஸெய்யித் அப்துல்லாஹ் அலவிய்யுல்ஹத்தாத் ஆகியோர்கள் அனைவரும் அல்லாஹ் நல்வழியிலிட்டுச் சென்ற நல்லடியார்களும், மகான்களுமாவார்கள்.
‘’அதீஉள்ளாஹ வஅதீஉர்றசூல வஉலில் அம்ரிமின்கும் “ (அல்லாஹ்வுக்கும், றசூலுக்கும், உங்களில் “அம்று” உடையவர் களுக்கும் வழிப்பட்டுக் கொள்ளுங்கள். )
திருக்குர்ஆன் ; 04;59
இத்திருவசனத்தில் “அம்று” உடையவர்கள் என்று உலமாக்களைத்தான் அல்லாஹ் குறிப்பிட்டிருக்கிறான் என்று தப்ஸீர் உடைய உலமாக்கள் எழுதியிருக்கிறார்கள். தப்ஸீறுடைய இமாம்கள் இவ்வாறு எழுதியிருப்பதை வைத்துக் கொண்டு அறபுக்கல்லூரிகளில் ஏழு வருடங்கள் குறிப்பிட்ட பாடத்திட்டத்தின்படி ஒரு சில கிதாபுகளை அரையுங்குறையுமாக ஓதிவிட்டு இஸ்லாமும், ஈமானும் தெரியாமல் இருக்கும் நுனிப்புல் மேய்வாளர்களும் நாங்கள்தான் திருக்குர்ஆனில் கூறப்பட்ட ‘’உலுல்அம்ர்’’ எனக்கூறிவருகிறார்கள்.
உண்மை இவர்கள் நினைப்பது போலன்று. அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிட்ட ‘’உலுல் அம்ர்’’ என்போர் ‘’உலமாயே றப்பானி’’ எனப்படும் ஆரிபீன்களும் ஞானிகளுமேயாவார்கள். மேலே நான் குறிப்பிட்ட மகான்கள் அனைவரும் “உலமாயே றப்பானி’’ எனும் ஆரிபீன்களும், மார்க்க மேதைகளுமேயாவர் . எனவே அவர்களுக்கு வழிப்படுவது நமது தலையாய கடமையாகும்.
அவர்கள் யாவரும் நாம் வழிப்படுவதற்குத் தகுதிவாய்ந்த தலைவர்களே ஆவர். ஆகையால் அவர்கள்சொன்னதை நாம் செய்யவேண்டும். அதேபோல் அவர்கள் செய்த அமல்களையும் நாம் செய்ய வேண்டும் . அவர்களின் எந்தவொருசெயலையும் நாம் ஆட்சேபிக்கவோ, அது இஸ்லாத்துக்கு முணானதா, இல்லையா ? என்று ஆராயவோ கூடாது.
“கைபர்” யுத்தநேரம் கிடைத்த மாலை ஒன்றை “பனூ கிபாபா ” குடும்பத்தைச்சேர்ந்த “உமையத் பின் அபிஸ்ஸல்த்” என்ற பெண்ணுக்கு நபீ (ஸல்) அவர்கள் கொடுத்தார்கள். அவளின் கழுத்தில் நபீ (ஸல்) அவர்கள் தங்களின் திருக்கரத்தினாலையே கட்டிவிட்டார்கள்.
அப்பொழுது அந்தப்பெண் “ இது ஒருபோதும் என்னைவிட்டும் பிரியாது “ என்று கூறினாள்.
அவளுக்கு மரணவருத்தம் நெருங்கியபோது அந்த மாலையைத் தன்னுடன் வைத்து அடக்கிவிடுமாறு இருந்தவர்களுக்கு “வஸிய்யத்” செய்தாள்.
ஆதாரம் ;- முஸ்னதுல் இமாம் அஹ்மத்
“கைபர்” யுத்த நேரம் “கனீமத்” கொள்ளைப் பொருளாக நபீ (ஸல்) அவர்களுக்குக் கிடைத்த மாலை காபிரீன்கள் விட்டுச் சென்ற மாலையேயன்றி நபி (ஸல்) அவர்களோ ,ஸஹாபாக்களோ பாவித்த மாலை அல்ல.
காபிர்களால் செய்யப்பட்டு அவர்களே பாவித்துவந்த மாலையை அந்தப் பெண் பக்குவமாக வைத்திருந்ததற்கும் , தான் மரணித்த பின் அதை தன்னுடன்வைத்து அடக்கம் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டதற்கும் காரணம் அது நபீ (ஸல்) அவர்களால் வழங்கப்பட்டதினாலும், அவர்களின் திருக்கரம் அதில் பட்டதினாலுமேயாகும்.
இந்த ஹதீஸ் நபீ (ஸல்) அவர்களின் திருக்கரம் பட்டபொருளில் கூட “பறகத்” உண்டு என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
மேலும், நபீ (ஸல்) அவர்களின் திருக்கரம் பட்ட பொருளை மையத்துடன்வைத்து அடக்குவதால் அம்மையித்துக்கு வேதனை குறைக்கப்படும் என்பதையும் இந்த ஹதீஸ் காட்டுகிறது.
நபித்தோழர் ஹாலித் பின் வலீத் (றழி) அவர்களின் தொப்பியில் நபி (ஸல்) அவர்களின் தலைமுடிகளில் சில முடிகள் இருந்தன. ஒரு யுத்தநேரம் அவர்களிடமிருந்து அந்தத் தொப்பி தவறிவிட்டது. அதனால் காலித் பின் வலீத் ஆத்திரமடைந்தவராகக் காணப்பட்டார்.
அங்கிருந்த நபீத்தோழர்கள் தொப்பி காணாமற் போனதற்காக காலித் இவ்வாறு கோபப்படுகிறார் என்று பேசிக்கொண்டனர். இதைக்கேட்ட காலித் இப்னு வலீத் (றழி) அவர்கள் ஸஹாபாக்களை நோக்கி “தொப்பி” காணாமற் போனதற்காக நான் கவலைப்பவோ கோபப்படவோ இல்லை. அதில் நபீ (ஸல்) அவர்களின் தலை முடிகளிற் சில முடிகள் இருக்கின்றன. அதன் “பறகத்” தவறிவிடுமென்றும் அது காபிர்களிடம்போய்விடுமென்றும் அஞ்சுகிறேன்” என்றுசொன்னார்கள்.
ஆதாரம் ;- அஷ்ஷிபா
அறிவிப்பு ;- காளி இயாள் (றழி)
காலித் பின் வலீத் (றழி)அவர்கள் மிகப் பிரசித்தி பெற்ற ஸஹாபாக்களில் ஒருவர் வீர நெஞ்சுடையவர்,போர்க்களங்களில் தளபதியாகத் தலைமை தாங்கிப்போர் புரிபவர். எது சரி?, எது பிழை?, என்பதையும், எது “ஈமான்” எது “குப்ர்” என்பதையும் நன்கறிந்தவர். இத்தகைய சிறப்புக்களைக்கொண்ட ஸஹாபீ நபீ (ஸல்) அவர்கள் மீது கொண்ட பாசத்தின் காரணமாக ஹஸரத் அபூதல்ஹா (றழி) அவர்களிடமிருந்து பெற்ற நபீ (ஸல்)அவர்களின் திரு முடியை தனது படைத் தொப்பியில் வைத்துத் தைத்திருந்தது அவர்களின் முடியைக் கொண்டு பறகத்பெறுவதற்கும், காபிரீன்களின் தாக்குதல்களிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்குமேயாகும்.
நபீ (ஸல்) அவர்களின் முடியில் பறகத் உண்டென்றும். அதைவைத்திருப்பதால் எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்புக் கிடைக்குமென்றும் நபித்தோழர் காலித் பின் வலீத் நம்பியிருந்தார் என்பது இந்த ஹதீஸ் மூலம் தெளிவாகிறது.
நபீ (ஸல்) அவர்களின் முடியைக் கொண்டு “பறகத்” பெறுவது போன்றுதான் அவ்லியாக்கள், ஷெய்குமார்கள் ஆகியோரின் முடி, நகம், போன்றவற்றைக் கொண்டு “பறகத்” பெறுவதுமாகும்.
ஒரு நபீயின் அல்லது ஒரு வலீயின் முடி, நகம் அல்லது அவர்கள் உடுத்த உடை, அவர்கள் பாவித்தபொருட்கள் கிடைக்காத பட்சத்தில் அவர்கள் சமாதிகொண்டுள்ள கப்ரின் மீது போடப்பட்டுள்ள போர்வை, மலர், நூல் போன்றவற்றை “பறகத்”தை நாடி எடுத்துவைத்துக்கொள்ளுதல் நபித்தோழர் “காலித்” பின் வலீத் (றழி)அவர்களின் செயல் போன்றதேயாகும்.
இதனால்தான் நபிமார்களின் பக்தர்களும், அவ்லியாக்களின் பக்தர்களும் அன்னார்களின் முடி, நகம், முஸல்லா, தஸ்பீஹ், கைக்கோல், செருப்பு, உடுப்புகள் முதலியவற்றை எடுத்துப் பக்குவமாக பேணிப் பாதுகாத்து வருகின்றார்கள்.
இவை கிடைக்காதவர்கள் வேறுவகைகளில் அந்த நாதாக்களைக் கொண்டு பறகத் பெற்று வருகின்றார்கள்.
நபீமார்களின் பக்தர்களும், அவ்லியாக்களின் பக்தர்களும் எப்படியெல்லாம் அவர்களைக் கொண்டு பறகத்பெற்று வருகின்றார்களென்பதை அவர்கள் சமாதி கொண்டுள்ள இடங்களுக்குச் சென்று பார்த்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.
பக்தாத், கூபா, கர்பலா, அஜ்மீர், நாகூர், ஏர்வாடி, முத்துப்பேட்டை போன்ற இடங்களை இங்கு நினைவுபடுத்துதல் பொருத்தமென்று நினைக்கின்றேன்.
இந்த இடங்களை அல்லாஹ்வின் அருள்விளையும் இடங்களாக “ஸூன்னத் வல் ஜமாஅத்” கொள்கையுடைய நாம் கருதுகின்றோம். ஆனால் வஹ்ஹாபிகளோ இந்த இடங்களை அனாச்சாரம் விளையும் இடங்களாகக் கருதுகின்றனர்.
இந்த இடங்களுக்கு அருகாமையால் செல்வதைக்கூட மாபெரும் பாக்கியமாக “சுன்னத்துவல் ஜமாஅத்” கொள்கையுடைய நாம் கருதுகின்றோம். ஆனால் வஹ்ஹாபிகளோ இந்த இடங்களுக்குப் பக்கத்தால் போனால்கூட “ஷிர்க்” ஏற்பட்டு விடுமென்று சொல்கிறார்கள்.
கண்டதையெல்லாம் “ஷிர்க்” என்று கண்மூடித்தனமாகக் கூறும் வஹ்ஹாபிகளுக்கு இன்னும் “ஷிர்க்” என்றால் என்ன? ஈமான் என்றால் என்ன? என்ற விபரம் சரியாகப் புரியவில்லை. இதனால்தான் கண்டதையெல்லாம் “ஷிர்க்” என்றும் “பித்அத்” என்றும் கூறி நாட்டையும், நாட்டுமக்களையும் படுகுழியில் தள்ளிக் கொண்டிருக்கின்றனர்.
இங்கு பக்தாத் நகரை சற்று நினைவு படுத்துகின்றேன். இங்குதான் வலிகட்கரசர் “குத்புல் அக்தாப் ” முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (றழி) அவர்கள் சமாதி கொண்டுள்ளார்கள். இங்கு உலகில் எல்லா நாடுகளிலிருந்தும் மக்கள் வந்து குவிந்த வண்ணமே இருக்கின்றார்கள். காலையும், மாலையும், இரவும் பகலும் இங்கு ஒன்றுபோல்தான் இருக்கும். இன- மத – நிற – மொழிவேறுபாடுகள் எதுமின்றி இத்திருத்தளத்தில் மனித குலம் அலை திரண்டு வந்து அருள் கோரி நிற்கும் காட்சி ஆத்மீக பரவசமானதாகும்.
ஆபிரிக்க,ஐரோப்பிய நாடுகளிலிருந்து இங்கு வரும் பக்தர்களில் பெண்கள் தமது நாட்டுச் சம்பரதாயப்படி மகானவர்களின் சமாதியின் வாயலில் நின்று குரவைக் குரலெழுப்பி உள்ளே செல்வதை தினமும் காணமுடியும்.
மகானவர்களைத் தரிசிக்க வருகின்ற பக்தர்கள் வாசனைத்திரவியங்களைக் கொண்டுவந்து மகானின் சமாதிக்கு பூசுவதையும், டொபிபோன்ற இனிப்புவகைகளைக் கொண்டுவந்து அவர்களின் சமாதியில் சற்றுநேரம் வைத்துவிட்டுப் பிறகு அதை தனது குடும்பத்தாருக்கும், இனபந்துக்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுப்பதற்காக எடுத்துச் செல்வதையும் காணலாம்.
இனிப்புப் பொருட்களை மகானவர்களின் சமாதியில் வைத்தெடுப்பதால் அதில் அவர்களின் “பறகத்” இருக்கின்றதென பக்தர்கள் கருதுகின்றார்கள்.
இவ்வாறு செய்தல் அந்த மகானைக் கொண்டு பறகத் பெறுவதைச் சேர்ந்ததேயன்றி இது ஷிர்குமில்லை, பித்அத்துமில்லை. ஆனால், உலகம் தெரியாத கிணற்றுத் தவளைகளும், குளத்துத் தேரைகளும் எவ்வாறு கத்தினாலும் கத்தெட்டும், கத்திக்கொண்டே இருக்கட்டும்.
இதை அடிப்படையாகக் கொண்டுதான் குணங்குடி மஸ்தான் ஷெய்கு அப்துல் காதிர் ஆலிம் புலவரவர்கள் பின்வருமாறு பாடினார்கள் போலும்.
நெடுமரம் போலோங்கி வளர்ந்தும்
அறிவற்றவர்
நெருப்புண்ணப் போனாலும் போகட்டும்
– அவர்
இடு குட்டிச் சுவரைப்போலிருந்தென்ன
இறந்தென்ன
எப்படிப் போனாலும் போகட்டும் –
இன்னுங்
கொடும்பு மிடும்பும் வம்புங் குடிகேடுங்
குடிகொண்டு
கூத்தாடினாலும் கூத்தாடட்டும்
–என்னை
மடியிற்கை போட்டிழுத் தலகினாலடி
போட்டு
மல்லாடினாலு மல்லாடட்டும் –அந்தக்
கெடுவார்களென் கடைமயிர்தான் –
குணங்
குடி கொண்டாலென்னுயிர் குயிர்தான்.
மடையரெல்லாங் கூடிக் கூத்தாடிக்
கூத்தாடி
வையாளி போட்டாலும் போடட்டும் –
இன்னும்
விடிய விடியவும் பரத்தையர் மடிகளில்
விளையாடினும் விளையாடட்டும் –
கள்ளுக்
குடியரெல்லாங் கள்ளைக் குடித்துக்
குடித்தவர்கள்
குடிகெட்டுப் போனாலும் போகட்டும் –
ஞானம்
படியாரெல்லா மென்னைப் பழித்துப்
பழித்துக் கொண்டு
பகைத்தாற் பகைத்துக் கொண்டு
சாகட்டும் – அந்தக்
கொடுவார்களென் கடைமயிர்தான் –
குணங்குடி கொண்டாலென்னுயிர்க்
குயிர்தான்
இன்னும் இங்கு அஜ்மீர் நகரை சற்று நினைவு படுத்துகின்றேன். இங்குதான் தொண்ணூறு இலட்சம் காபிர்களை இஸ்லாத்தில் இணைத்த வீர புருஷர் அஜ்மீர் அரசர்,மௌனக்களல வீசும் மகிபர், ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தி (றழி) அவர்கள் உரங்கிக் கொண்டுருக்கின்றார்கள்.
இன – மத – மொழி வேறுபாடு எதுவுமின்றி பக்தகோடிகள் இங்கு குவிந்த வண்ணமே இருப்பார்கள். ஹாஜாவின் சமாதிக்கு மலர் தூவி கெளரவிக்க தலையில்ரோஜா மலர் தட்டேந்தி பேண்டு வாத்திய இசையுடன் மேளதாள ஒசையுடன் பக்தர்கள் வரும் காட்சி கண்கொள்ளா காட்சியாக இருக்கும். குறிப்பாக முஸ்லிம்களின் எதிரிகலென்று பரவலாக பேசப்படுகின்ற சீக்கிய இனத்தைச் சேர்ந்தவர்கள் கூட தலைமூடி ரோஜா மலர் தட்டேந்தி வரும் காட்சி ஆன்மீகத்திற்க்கு முன்னால் அனைத்தும் சரண் என்ற தத்துவத்தை உணர்த்திக்கொண்டிருக்கும்.
பக்தர்கள் ஹாஜாவின் சமாதியை போர்வையால் போர்த்தி அதன்மேல் ரோஜா மலர் தூவிய பின் ஹாஜாவின் பறகத்தைப் பெறும்பொருட்டு தூவப்பட்ட மலரில் சிலதை எடுத்துச் சாப்பிடுவதும், அதை தமது வீட்டுக்கு எடுத்துச்சென்று “பறகத்” பெற விரும்புகின்றவர்களுக்குக் கொடுப்பதும்,ஹாஜாவின் சமாதிக்கு சந்தணம் பூசி பூசப்பட்ட சந்தணத்தைச் சாப்பிடுவதும், அதை தமது வீட்டுக்கு எடுத்துச்சென்று பக்தர்களுக்கு பங்கிட்டுக் கொடுப்பதும், அதை அந்த ஹாஜாவைக் கொண்டு “பறகத்” பெறுவதை சேர்ந்த்தேயல்லாமல் இது ஷிர்குமில்லை, குப்ருமில்லை, பித்அத்துமில்லை. “நப்ஹூல் கிலாப் லாயளுர்றுஸ்ஸஹாப்” நாய் குரைத்தல் வான் முகிலைத்தாக்காது.
இன்னும் நாகூர் நகரை இங்கே சற்று நினைவு படுத்துகின்றேன். இங்குதான் பாரதமாண்ட பாண்டியனுட்பட பல மன்னர்களையும், மகுடாதிபதிகளையும் தலை குனியச்செய்த பாதுஷா ஷாகுல் ஹமீத் அப்துல்காதிர் மீரான் ஸாஹிபு ஆண்டகை (றழி) அவர்கள் கொலு வீற்றிறுக்கின்றார்கள் .
“பறாமன்” என்னும் பிராமணன் உற்படப் பல மதத்தவர்களும், பல இனத்தவர்களும் பல மொழியுடையவர்களும் பாரபற்சமின்றி இங்கு வந்து பாதுஷாவின் பேரருளைப் பெற்றுச் செல்கிறார்கள்.
(தொடரும்……..)
==================================
தொடர் – 02 ……..
12.11.2011
அதி சங்கைக்குரிய ஷெய்குனா ஞானபிதா மௌலவி அல்ஹாஜ்
A.அப்துர் றஊப் மிஸ்பாஹீ
(அ.இ. சமாதான நீதிவான்) அவர்கள்
நபீ (ஸல்) அவர்களிடம் மதீனாவாசிகள் தண்ணீர்ப் பாத்திரங்களைக் கொண்டு வந்தது நபி அவர்களுக்கு தண்ணீர் கொடுப்பதற்காக அல்ல அப்பாத்திரங்களில் நபீ (ஸல்) அவர்கள் கைவிட்டு எடுப்பார்களாயின் அந்த நீர் “பறகத்” அருள்நிறைந்த நீராகிவிடும். அதைக் குடித்தும், உடலில் தடவியும் அருள்பெறலாம் என்ற நன்னோக்கம் கொண்டுதான் அவர்கள் அவ்வாறு செய்தனர்.
அவர்கள் தண்ணீர் பாத்திரத்தைக் கொண்டு வந்து வைத்ததற்கான நோக்கத்தையறிந்த நபீ (ஸல்) அவர்கள் அவர்களின்நோக்கத்தை நிறைவேற்றி அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காகத் தங்களின் திருக்கரத்தை அப்பாத்திரங்களினுள் விட்டு எடுத்தார்கள்.
வஹ்ஹாபிகள் சொல்வதுபோல் இத்தகைய வேலைகள் மார்க்கத்திற்கு முரணானதாகயிருந்தால் ஸஹாபாக்கள் தண்ணீர்ப் பாத்திரங்ளைக் கொண்டு வந்திருக்கவும் மாட்டார்கள். அவற்றில் நபீ (ஸல்) அவர்கள் தங்களின் திருக்கரத்தை விட்டு எடுத்திருக்கவும் மாட்டார்கள்.
நபீ (ஸல்) அவர்களினதும் ஸஹாபாக்களினதும் இந்த வேலையானது நமது வாழ்கையில் நாமும் இத்தகை வேலைகளைச் செய்வதற்க்கு ஆதாரமாக விளங்குகின்றது.
இந்த நபி மொழியின் அடிப்டையில்தான் அவ்லியாக்கள் ஷெய்குமார்கள் ஆகியோர் சாப்பிட்டபின் கைகழுவிய தண்ணீரையும், அவர்கள் அருந்தி மிஞ்சும் தண்ணீர்,தேனீர் போன்ற பானங்களையும் அருளை எதிர்பார்த்து குடிப்பதுமாகும்.
“சுஃருள் முஃமினி ஷிபாஉன்” (ஒரு முஃமின் குடித்து மிஞ்சியது மற்றவர்களுக்கு மருந்து) என்ற நபீ (ஸல்) அவர்களின் பொன்மொழி இங்கு நினைவுகூறப் பொருத்தமானது.
நபீமார்களும், அவ்லியாக்களும் விசுவாசிகள் என்பதிலும்,அவர்களிளும் சிறப்புள்ளவர்கள் என்பதிலும் சற்றேனும் சந்தேகமில்லை.
விசுவாசிகள் குடித்து மிஞ்சியது மற்றவர்களுக்கு மருந்து என்றால் அவர்களைவிட அதி சிறந்தவர்களான நபீமார்களும், அவ்லியாக்களும் குடித்து மிஞ்சியது அதியற்புத மருந்து என்பதில் என்ன சந்தேகம் ?
விசுவாசி குடித்து மிஞ்சியதுதான் மற்றவர்களுக்கு மருந்து எனக் கூறப்பட்டிருப்பதால், விசுவாசியல்லாதவர்கள் குடித்து மிஞ்சியது ஒரு போதும் மருந்தாக மாட்டாது.
நபீ (ஸல்) அவர்கள் ‘’விசுவாசி’’ என்று குறிப்பிட்டிருப்பதால் விசுவாசிகளில் ‘’பறகத்’’ அருள் உண்டு என்பது விளங்குகின்றது.
மேலே கூறிய ஹதீஸில் நபீ (ஸல்) அவர்களின் ‘’பறகத்’’ அருளைநாடி ஸஹாபாக்கள் தண்ணீர்ப் பாத்திரங்களைக் கொண்டு வந்தபொழுது அதில் நபீ (ஸல்) அவர்கள் தங்களின் கையை விட்டெடுத்ததால் அவர்களின்கையில் மட்டும் தான் ‘பறகத்’ உண்டேயல்லாமல் அவர்களின் காலிலும், ஏனைய உறுப்புக்களிலும் ‘’பறகத்’’ இல்லையென்ற அர்த்தம் வந்துவிடாது.
பொதுவாக ‘’பறகத்’’ என்பதேயில்லை. அது கையிலுமில்லை. காலிலுமில்லை என்று கூறுபவர்களிடம் மேற்கூறிய ஆதாரங்ளைக் கூறிக்காட்டினால் ஜவாபு சொல்ல முடியாமல் தலை குனிந்து நின்றுவிட்டு குப்புற விழுந்தும் மீசையில் மண்பட வில்லை யென்பதுபோல் நபீ (ஸல்) அவர்களின் கையில்தான் ‘பறகத்’ அருள் உண்டேயல்லாமல் அவர்களின் காலில் பறகத் இல்லை என்று குதர்க்கம் பேசத்தொடங்குகிறார்கள்.
நபீ (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்ட தண்ணீர்ப் பாத்திரங்களில் அவர்கள் தங்களின் கையைவிடாமல் காலை விட்டிருந்தால் அந்த ஸஹாபாக்கள் என்ன செய்திருப்பார்கள் ? காலிலும் அருளுண்டு என்று நம்பி அப்பாத்திரங்களை எடுத்துச் சென்றிருப்பார்களா ? அல்லது தண்ணீரை வெளியே கொட்டிவிட்டு வெறும் பாத்திரங்களை எடுத்துச் சென்றிருப்பார்களா?
இப்படி ஒரு கேள்வியை முழுப்பயித்தியக்காரனிடம்கேட்டால் கூட அவன் இதற்குரியபதில்சொல்லி விடுவான். ஏனனில் அவன் மூலள கலங்கியவனாக இருந்தாலும் அவனுக்கு மூளை உண்டு.
ஆனால் வழிகேடர்களான வஹ்ஹாபிகளிடம் இப்படியொரு கேள்வியைக் கேட்டால் அவர்கள் ஒரு பதிலும் கூறமாட்டார்கள்.
நபீ (ஸல்) அவர்களிடம் தண்ணீர்ப் பாத்திரங்களைக்கொண்டுவந்த ஸஹாபாக்கள், நபீ (ஸல்) அவர்களிடம் பறகத் உண்டென்று நம்பித்தான் வந்தார்களேயன்றி அவர்களின்கையில் மட்டும் பறகத் உண்டென்று நம்பிக்கொண்டு வரவில்லை.
ஏனெனில், அல்லாஹ் திருறையில் ‘வமா அர்சல்னாக இல்லா றஹ்மதன் லில் ஆலமீன்’ என்று நபீ (ஸல்) அவர்களுக்குக் கூறியிருப்பது ஸஹாபாக்களுக்குத் தெரிந்த விஷயமேயாகும்.
‘உங்களை உலகத்தாருக்கு ஒரு ‘றஹ்மத்’ அருளாகவேயன்றி நாம் அனுப்பவில்லை
திருக்குர்ஆன் 21;107
இத்திரு வசனத்தை உரிய முறையில் ஆராய்ந்தால் நபீ (ஸல்) அவர்களின் கால் நகம் முதற் கொண்டு தலைமுடிவரையுள்ள சகல உறுப்புக்களிலும் ‘பறகத்’ அருள் உண்டென்பது தெளிவாக விளங்கும்.
மேலே கூறிய திரு வசனத்தில் ‘உங்களை அருளாக அனுப்பியுள்ளோம்’ என்றுதான் அல்லாஹ் கூறியிருகின்றானேயல்லாமல் உங்களில் அருள் இருக்கிறதென்றோ உங்களுடைய கையில் அருள் இருக்கிறது என்றோ அவன் கூறவில்லை.
‘உங்களை’ என்று அல்லாஹ் முன்னிலைப்படுத்தியது நபீ (ஸல்) அவர்களையேயன்றி அவர்களின் கையை மட்டுமோ அல்லது காலை மட்டுமோ அல்ல. ‘உங்களை’ என்ற சொல் நபீ (ஸல்) அவர்களை முழுமையாக குறிக்கின்றதேயல்லாமல் அவர்களின் ஒரு சில உறுப்புக்களை மட்டுமோ பாதி உடலை மட்டுமோ குறிக்காது.
எனவே “உங்களை றஹ்மத்தாக அனுப்பினோம்’ என்ற இறை வசனத்தின் அர்த்தம் நீங்கள் முழுமையாகவே உலகத்தாருக்கு றஹ்மத்தாக இருக்கின்றீர்கள் என்தேயாகும்.
இந்த விபரத்தின்படி நபீ (ஸல்) அவ்வர்களின் தலையுச்சியில் இருந்து உள்ளங்கால் வரையிலான சகல உறுப்புக்ளையும் ஒன்று சேர்த்துக் கொண்ட உடலையே “உங்களை” என்றசொல் குறிப்பதால் நபீ (ஸல்) அவர்களின் சகல உறுப்புக்களிலும் பறகத்தும், றஹ்மத்தும் உண்டென்பது தெளிவாகிவிட்டது. நபீ (ஸல்) அவர்களின் “காதிம்” பணியாளர் ஹஸ்ரத் அனஸ் (றழி) அவர்கள் நபீ (ஸல்) அவர்களின் தலைமுடியை தன்னுடன்வைத்து அடக்க வேண்டுமென்று வஸிய்யத் இறுதி உபதேசம் செய்தார்கள்
ஆதாரம் ;- புஹாரி
அனஸ் (றழி) அவர்களிடம் இருந்து பெற்ற நபீ (ஸல்) அவர்களின் தலைமுடிகளிற் சில என்னிடம் உண்டு என்று அபூதர் (றழி) அவர்களிடம் நான் சொன்ன பொழுது நபீ (ஸல்) அவர்களின் முடியில் ஒரு முடி என்னிடம் இருப்பது உலகத்தையும், உலகிலுள்தையும் விட எனக்கு மிகச் சிறந்ததாகும் என்று என்னிடம் கூறினார்கள் என்று அனஸ் பின் ஸீரீன் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
ஆதாரம் ;- புஹாரி
மேலே கூறிய ஹதீஸ்களிலிருந்து நபீ (ஸல்)அவர்களின் முடியின் மகிமை எத்கையது என்பது விளங்கும்.
ஹாலித் பின் வலீத் (றழி) அவர்கள் நபீ (ஸல்) அவர்களின் முடியிற் சிலதை தங்களின் தொப்பியில்வைத்து தைத்துக் கொண்டார்கள். யுத்தங்களுக்குச் செல்லும்போது அதை அணிந்து கொண்டுதான் செல்வார்கள். அவ்வாறு அணிந்துகொண்டுபோன எந்தவொரு போரிலும் அவர்கள் தோல்வியடைந்ததேயில்லை.
ஆதாரம் ;- அஷ்ஷிபா
அபூசுப்யானின் மனைவி “ஹிந்து” ஆரம்பகாலத்தில் இஸ்லாத்தின் விராதியாக இருந்தாள். ஒரு சமயம் ஹம்ஸா (றழி) அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி அவளுக்கு கிடைத்ததும் அங்கு விரைந்து வந்து ஹம்ஸா (றழி) அவர்களின் வயிற்றைப் பிளந்து அவரின் ஈரலை எடுத்துச் சாப்பிட்டு தனது கோபத்தைத் தீர்த்துக் கொண்டாள்.
பின்னர் அவள் இஸ்லாத்தில் இணைந்தபோது ‘உனது வயிற்றில் அவரின் ஈரல் இருக்கும் வரை நீ நரகத்துக்குச் செல்லமாட்டாய். என்று நபீ (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நபீ (ஸல்) அவர்களின் இரத்த்த்தை ஒரு சமயம் ‘மாலிக் பின் ஸினான்’ (றழி) அவர்கள் குடித்துவிட்டார்கள் அப்பொழுது நபிமணி (ஸல்) அவர்கள் “நரகம் உன்னைத் தொடாது “ என்று அவருக்கு கூறினார்கள். அவர்செய்த வேலையை பிழையென்றோ “ஷிர்க்” கென்றோ நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை.
ஒரு சமயம் நபீ (ஸல்) அவர்களின் சலத்தை ஒருபெண் குடித்துவிட்டாள். நபீ (ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணுக்கு ஒருபோதும் உனக்கு வயிற்றுவலி வராது என்று கூறினார்கள்.
ஆதாரம் ;- தாரகுத்னீ
இந்த ஹதீஸை அநேக இமாம்கள் தமது நூல்களில் எழுதியுள்ளார்கள்.
இமாம் காளி இயாள் அவர்கள் தங்களின் “அஷ்ஷிபா” எனும் நூலிலும், இமாம் கஸ்தல்லானி அவர்கள் தங்களின் “அல்மவாஹிபுல் லதுன்னிய்யா” எனும் நூலிலும் எழுதியுள்ளார்கள்.
மேலே கூறிய மூன்று ஹதீஸ்களில் முந்தின ஹதீஸில் ஹம்ஸா (றழி) யின் ஈரலைச் சாப்பிட்ட ஹிந்துவுக்கு உனது வயிற்றில் அவருடைய ஈரல் இருக்கும்வரை நீ நரகத்திற்க்கு போகமாட்டாய் என்று நபீ (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்தும், இரண்டாவது ஹதீஸில் தங்களின் இரத்தத்தைக் குடித்த “மாலிக் பின் ஸினான்” என்ற ஸஹாபிக்கு நரகம் உன்னைத் தீண்டாது என்று அவர்கள் கூறியதிலிருந்தும், மூன்றாவது ஹதிஸில் தங்களின் சலத்தைக் குடித்த பெண்மணிக்கு எனக்கு வயிற்றுவலி ஒருபோதும் வராதென்று அவர்கள் கூறியதிலிருந்தும் நபீ (ஸல்) அவர்களின் இரத்தம்,சலம் போன்றவற்றில் கூட பறகத்தும், றஹ்மத்தும் உண்டென்பது தெளிவாக விளங்குகின்றது.
நபீ யூசுப் அலை அவர்கள் அல்லாஹ்விடத்தில் “என்னை முஸ்லிமாக மரணிக்கச்செய்து ஸாலிஹீன்களுடன் சேர்த்துக் கொள்வாயாக! என்று வேண்டினார்கள்.
இவர்கள் இவ்வாறு துஆகேட்டு ஒரு வாரத்தின் பிறகு வபாத்தாகி விட்டார்கள். அவர்களை அடக்கும் விஷயத்தில் “மிஸ்ர்’’ – எகிப்து நாட்டவர்கள் பிரச்சினைப்பட்டுக் கொண்டார்கள்.
இறுதியில் அவர்களை சலவைக்கல் பெட்டியில்வைத்து அவர்களின் ‘பறகத்’’ அருள் அனைவருக்கும் கிடைக்கும் பொருட்டு நைல் நதியின்மேற்க்குப் புறத்தில் நல்லடக்கம் செய்தார்கள்.
ஆதாரம் ;- தப்ஸீர் ஜலாலைன்
நபீ யூசுப் (அலை) அவர்கள் மரணித்ததும் அவர்ளை எங்கே அடக்குவது என்பதில் மிஸ்ர் வாசிகளிடையே பாரிய பிரச்சினை ஏற்பட்டது. ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்தவர்களும் தமது பகுதியிலேயே நல்லடக்கம் செய்ய வேண்டுமென்று வாதாடினார்கள்.
இவர்களிடையே கைகலப்பு ஏற்படுமளவுக்கு விவாதம் வலுப்பெற்றது.
இக்ரீமா (றழி) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள். நபீ யூசுப் (அலை) அவர்கள் நைல் நதியின் வலப்பக்கமாக நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். அன்று முதல் அந்நாட்டின் வலப்பக்கம் செல்வமும்,செழிப்பும் ஏற்படத் தொடங்கியது.அதேபோல் இடப்பக்கம் பஞ்சமும், வரட்சியும் தலைதூக்கின.
இதனால் அந்நாட்டவர்களில் இடதுபுறமாக வாழ்ந்தவர்கள் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவர்ளை இடப்பக்கம் மாற்றி அடக்கம் செய்தார்கள். அன்று முதல் இடப்பக்கம் செழிப்பும் வலப்பக்கம் பஞ்சமும் ஏற்படலாயிற்று.
இதனால் மீண்டும் தோண்டியெடுத்து நைல்நதியின் நடுவில் நல்லடக்கமசெய்தார்கள். அதன் பிறகுதான் நைல்நதியின் இருமருங்கிலும் செல்வமும் செழிப்பும் ஏற்பட்டது.
நபீ மூஸா (அலை) அவர்கள் நபியாக வந்தபிறகு அவர்களைத் தோண்டியெடுத்து சிரியாவில் தங்களின் மூதாதையர்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இடத்தில் அடக்கம் செய்தார்கள்.
ஆதாரம் ;- தப்ஸீர் காஸின் , தப்ஸீர் மதாரிக்
மேலே கூறிய நபீ யூசுப் (அலை) அவர்களின் வரலாற்றிலிருந்து நபீமார்களின் புனித உடலைச் சுமந்திருக்கும் இடத்துக்கும், ஊருக்கும் பறகத் உண்டு என்பதும் , அவர்களின் புனித உடல் அடக்கப்பட்டிருக்கும் திசைக்கும் பறகத் உண்டு என்பதும் தெளிவாகிவிட்டது.
நபீமார்கள், நாதாக்கள், அவ்லியாக்கள் ஆகியோர்களை அடக்குமிடத்துக்கு பறகத் உண்டு என்ற காரணத்தினால்தான் மிஸ்ர் நாட்டவர்கள் அவர்களை அடக்கும் விஷயத்தில் போர் செய்யுமளவு தர்க்கம் செய்து கொண்டார்கள்.
ஒவ்வோர் ஊரிலுள்ளவர்களும் அவர்களைத் தமது ஊரில் அடக்கவேண்டுமென்றும் ஒவ்வொரு திசையிலுள்ளவர்களும் தமது திசையில் அடக்க வேண்டுமென்றும் தர்க்கித்ததற்குக் காரணம் அவர்கள் அனைவரும் நபீ யூசுப் (அலை) அவர்ளைக் கொண்டு “பறகத்’’ அருள் பெறுவதை நாடியதேயாகும்.
இதிலிருந்து ஒரு நபீ சமாதிகொண்டிருக்கும் இடத்திற்க்குக் கூட “பறகத்’’ உண்டென்பது தெளிவாகிவிட்டது. இதனால்தான் நபீ (ஸல்) அவர்கள் சமாதி கொண்டுள்ள மதீனா நகர் “மதீனா முனவ்வறா’’ (ஒளி நகர்) என்ற சிரப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது.
இவ்விஷயத்தில் ஒரு நபீயை போன்றவர்தான் அந்த நபீயின் வழி நடந்து சிறப்புக்குரிய “விலாயத்’’ எனும் வலித்தனம் பெற்ற ஒரு வலீயும் ஆகும்.
அந்த வலீ சமாதிகொண்டுள்ள இடத்துக்கும் நிச்சயமாக “பறகத்’’ உண்டு.
இந்த அடிப்படையில் பக்தாத் நகருக்குச் சிறப்பு வரவும் அது “பக்தாத் ஷரீப்’’ (சிறப்பு மிகு பக்தாத்) என்றழைக்கப்படுவதற்கும் காரணம் அங்கே வலீகட்கரசர் “குத்புல் அக்தாப்’’ முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானீ (றழி) அவர்கள் சமாதி கொண்டிருப்பதும், அஜ்மீர் நகருக்குச் சிறப்பு வரவும் அது “அஜ்மீர் ஷரீப்’’ (சிறப்பு மிகு அஜ்மீர்) என்றழைக்கப்படுவதற்கும் காரணம் அங்கே அருளுக்கும், பொருளுக்கும் அரசராம் “குத்புல் ஹிந்த்’’ ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ (றழி) அவர்கள் சமாதிகொண்டிருப்பதும் நாகூர் நகருக்குச் சிறப்புவரவும் அது “நாகூர் ஷரீப்’’ (சிறப்புமிகு நாகூர்) என் றழைக்கப்படுவதற்கு காரணம் அங்கே காரணக்கடல் பாதுஷா நாயகம் ஷாஹூல் ஹமீத் அப்துல்காதிர் ஆண்டகை (றழி) அவர்கள் சமாதி கொண்டிருப்பதுமேயாகும்.
கலீபா அபூபக்கர் (றழி) அவர்களின் மகள் அஸ்மா (றழி) அவர்கள் ஒரு ஜூப்பாவை காட்டி “இது நபீ (ஸல்) அவர்களின் ஜுப்பா. இது ஆயிஷா நாயகியிடம் இருந்தது. அவர்கள் மரணித்த பின் அதை நான் எடுத்துக் கொண்டேன். நபீ (ஸல்) அவர்கள் அதை உடுத்திருந்தார்கள். நாங்கள் அதைக்கழுவி நோயாளர்களுக்குக் குடிக்கக் கொடுப்போம் என்று சென்னார்கள்.
ஆதாரம் ;- முஸ்லிம் , மிஷ்காத்
கலீபா அபூபக்கர் (றழி) அவர்களின் மகள் அஸ்மா (றழி) அவர்கள் நபீ (ஸல்) அவர்கள் உடுத்திருந்த ஜூப்பாவைக் கழுவி நோயாளர்களுக்குக் குடிக்கக் கொடுப்போம் என்று கூறியதிலிருந்து ஒரு நபியின் உடையைக் கழுவிக்குடிப்பதிலும் “பறகத்’’ உண்டென்பது தெளிவாகிவிட்டது.மேலும் அந்த நீர் நோய்க்கு மருந்து என்பதும் தெளிவாகிவிட்டது .
இந்த அடிப்படையில்தான் நபிமார்களின் வழி நடந்து “விலாயத்’’ எனும் ஒளித்தனம் பெற்ற அவ்லியாக்கள், ஷெய்குமார்கள் ஆகியோர் சாப்பிட்டு மிஞ்சிய உணவைச் சாப்பிடுவதும், அவர்கள் சாப்பிட்ட பீங்கானைக் கழுவிக் குடிப்பதுமாகும் .
ஹஸ்றத் அப்துல்லாஹ் பின் மவ்ஹிப் (றழி) அவர்கள் கூறுகிறார்கள். எனது மனைவி ஒரு தண்ணீர்ப் பாத்திரத்தை என்னிடம்கொடுத்து உம்மு சல்மா (றழி) அவர்களிடம் அனுப்பிவைத்தாள்.
ஒருவனுக்கு கண் திரிஷ்டி அல்லது ஏதோ ஒன்று ஏற்படுமாயின் இவ்வாறு தண்ணீர்ப் பாத்திரம் ஒன்றை உம்மு சல்மாவிடம் என் மனைவி அனுப்புவது வழக்கம். அதேபோல் தான் என்னையும் அனுப்பிவைத்தாள்
உம்மு சல்மா அவர்கள் எனது தண்ணீர்ப் பாத்திரத்தைக் கண்டதும் தன்னிடமிருந்த வெள்ளிப் பாத்திரம் ஒன்றைக் கொண்டு வந்து அதில்வைக்கப்பட்டிருந்த நபீ (ஸல்) அவர்களின் தலைமுடியை எடுத்து நான் கொண்டு சென்ற தண்ணீர்ப் பாத்திரத்தினுள் அதைவிட்டு அசைத்தார்கள் அப்பொழுது நான் பாத்திரத்தினுள் எட்டிப்பார்த்தேன் அங்கு சிவந்த முடிகள் இருப்பதை கண்டேண் என்று சொன்னார்கள்.
ஆதாரம் ;- புஹாரி, மிஷ்காத்
கண்திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நோயால் பீடிக்கப்பட்டவர்களுக்கும் கொடுப்பதற்காகச் மக்கள் தண்ணீர்ப் பாத்திரங்களை அன்னை உம்மு சல்மா (றழி) அவர்களிடம் கொண்டு வருவார்கள்.
அன்னை உம்மு சல்மா (றழி) அவர்கள் வெள்ளிப்பாத்திரம் ஒன்றில் நபீ (ஸல்) அவர்களின் முடியை மிகப்பக்குவமாகவும் கண்ணியமாகவும் வைத்திருந்தார்கள்.
அவர்களிடம் யாரேனும் நோயாளிகளுக்குக் கொடுப்பதற்காக தண்ணீர்ப்பாத்திரங்களைக்கொண்டு சென்றால் அப்பாத்திரங்களில் நபி (ஸல்) அவர்களின் திருமுடியை விட்டு அதை அசைத்து விட்டுக் கொடுப்பது வழக்கம்.
இந்த நீரைக் குடிக்கும் நோயாளர்கள் சுகம் பெற்று விடுவார்கள். இவ்வழக்கம் அந்நேரம் ஸஹாபாக்கள் மத்தியில் பகிரங்கமாக அறியப்பட்ட விஷயமாகவே இருந்து வந்தது.
அல்லாஹ் திருக்குர்ஆனில் நபீ (ஸல்) அவர்களை முன்னிலைப்படுத்தி “உங்களை அருளாக அனுப்பியுள்ளேன்’’ என்று கூறியபடி நபீ (ஸல்)அவர்களின் முடியிலும் “பறகத்’’ உண்டு என்பதும் அதேபோல் அந்த முடிபட்ட நீர்நோய்க்கு மருந்தாகி விடுகிறதென்பதும் தெளிவாகிட்டது.
நபீ (ஸல்) அவர்கள் மினாவுக்கு வந்தார்கள் பிறகு “ஜம்றா’’ எனுமிடத்திற்க்கு வந்து கல்லெறிந்தார்கள். பிறகு மினாவிலுள்ள தங்களின் வீட்டுக்கு வந்து “குர்பான்’’ கொடுத்துவிட்டு முடிவெட்டுபவனையழைத்து தலைமுடியைக் களைந்துவிடுமாறு பணித்தார்கள்.
முடிவெட்டுபவர் நபீ (ஸல்) அவர்களின் வலப்பக்கத் தலைமுடியைக் களைந்தார். அப்போது நபீ (ஸல்) அவர்கள் ஸஹாபி அபூதல்ஹதுல் அன்ஸாரி (றழி) அவர்களையழைத்து அந்த முடியைக்கொடுத்தார்கள். இடப்பக்கமுள்ள முடியையும் களைந்து அதையும் அந்த ஸஹாபியிடமே கொடுத்து அவற்றை மக்களுக்குப் பங்குவைத்துவிடுமாறு பணித்தார்கள்.
ஆதாரம் ;- புஹாரி ,முஸ்லிம், பத்லுல் மஜ்ஹூத் ஷர்ஹூ அபீதாவூத்
நபீ (ஸல்) அவர்கள் தங்களின் தலைமுடியைக் களைந்து அபூதல்ஹதுல் அன்ஸாரி (றழி) அவர்களிடம்கொடுத்து அதைப் பங்குவைக்குமாறு பணித்திருப்பது அவர்களின் முடியில் அருளுண்டு என்பதையும் அவ்வருளை ஒருவர் மட்டுமன்றிப் பலரும் பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான் அதைப் பங்குவைக்குமாறு சொன்னார்கள் என்பதையும் தெளிவாகக் காட்டுகிறது.
நபீ (ஸல்) அவர்களின் காலத்தில் பங்கு வைக்கப்பட்ட அருள் நிறைந்த திருமுடிகள் ஸஹாபாக்கள் மத்தியில் பரவலாக இருந்து வந்தன. அந்த முடிகள் ஸஹாபாக்களால் பாதுகாக்கப்பட்டு அவர்களின் காலத்தின் பிறகு அவர்களுக்குப் பின்னால் உள்ளவர்களிடம் வந்து சேர்ந்தன.
நபீ (ஸல்) அவர்களின் முடியைப் பெற்ற ஸஹாபாக்கள் அவர்கள் மரணிக்கும் வரை மதீனாவிலேயே தங்கியிருக்க வில்லை. ஒரு சிலர் அங்கு வாழ்ந்தாலும் கூடப் பலர் பல நாடுகளுக்கு வியாபாரத்திற்காகவும் வேறுதேவைகளுக்காகவும் போகலானார்கள். அப்பொழுது நபீ (ஸல்) அவர்களின் திருமுடிகளையும் தம்முடன் எடுத்துச்சென்றார்கள்.
இதனால் உலகின் பல நாடுகளுக்கும் அந்தத் திருமுடிகள் போக வாய்ப்பு ஏட்பட்டது .
கொழும்பு மூன்றாம் குறுக்குத் தெருவிலுள்ள ஹனபிப் பள்ளியில் (பாய்ப்பள்ளி) நபீ (ஸல்) அவர்களின் திருமுடி இருக்கிறது. இது பாக்கிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது.
தமிழகத்தின் பல ஊர்களில் நபீ (ஸல்) அவர்கள் திருமுடி இருக்கிறது. தமிழகத்தில் மிகப் பிரசித்திபெற்ற “பாக்கியத்துஸ்ஸாலுகாத் அறபுக்கல்லூரியுள்ள வேலூர் நகரில் இரண்டு பள்ளிவாயல்களில் நபீ (ஸல்) அவர்களின் திருமுடி இன்றும் இருக்கிறது.
இன்னும் பக்தாத், பஹ்ரைன் ,மிஸ்ர், எமன், துருக்கி முதலிய நாடுகளிலும் நபீ (ஸல்) அவர்களின் திருமுடி இருக்கிறது.
நபீ (ஸல்) அவர்களின் திருமுடி ஏனையவர்களின் முடிக்கு மாறானது. அவர்களின் முடியில் கிளைகள் இருக்கும். இந்த விஷேடம் வேறெவரின் முடிக்கும் இல்லை.
நபீ (ஸல்) அவர்களின் முடியை இரண்டாக கிழிக்க முடியும். இப்படியொரு விஷேடம் வேறொருவரின் முடிக்கும் இல்லை. அவர்களின் திருமுடி மிக அற்புதமானது. அது ஒரு நேரம் கருப்பு நிறத்தில் தென்படும். இன்னொரு நேரம் சிவப்பு நிறத்தில் தென்படும் . இப்படியான விஷேட தன்மையும் வேறொருவரின் முடிக்கும் இருந்தது கிடையாது.
நபீ (ஸல்) அவர்களின் முடி எல்லா நேரமும் ஒரே அளவில் இருக்காது. ஒருநேரம் ஐந்து அங்குல நீளத்தில் இருக்கும் முடி இன்னொரு நேரத்தில் பத்து அங்குல நீளத்தில் இருக்கும். இப்படியொரு விஷேடம் வேறோருவரின் முடிக்கும் இல்லை. நபீ (ஸல்) அவர்களின் முடி உயிருள்ள வஸ்து போன்று அசைந்து கொண்டும், துடித்துக் கொண்டுமிருக்கும். இப்படியொரு விஷேடம் வேறொருவரின் முடிக்கும் இல்லை.
நபீ (ஸல்) அவர்கள் தங்களின் நகத்தை வெட்டி அதைப் பங்கவைக்குமாறு ஸஹாபாக்களிடம் கொடுத்ததாக அஷ்ஷெய்கு அப்துல் அஸீஸ் முஹத்திஸ் திஹ்லவி (றஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நபீ (ஸல்) அவர்களின் நகம், அவர்களின் முடி பங்குவைக்கப்பட்டது போல் பல ஸஹாபாக்களுக்கும் பங்குவைக்கப்பட்டது. நகத்தைப் பெற்றுக் கொண்ட ஸஹாபாக்களிற் சிலர் மதீனாவிலேயே இருந்துவிட்டார்கள். இன்னும்பலர் பல நாடுகளுக்கும் சென்றார்கள். அவ்வாறு சென்றவர்கள் தாம்சென்ற இடங்களுக்கெல்லாம் நபீ (ஸல்) அவர்களின் நகத்தையும் எடுத்துச் சென்றனர்.
ஹஸரத் சஃது (றழி) அவர்கள் ஒரு சமயம் மற்றவர்களை விடத் தனக்கு ஒரு சிறப்பு இருப்பதாக நினைத்தார்கள். அப்பொழுது நபீ (ஸல்) அவர்கள் “அவருக்கு உங்களில் பலம் குறைந்தவர்களைக் கொண்டுதான் நீங்கள் உதவியும், உணவும் பெறுகிறீர்கள்’’ என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸூக்கு அஷ்ஷெய்கு அப்துல் அஸீஸ் முஹத்திஸ் திஹ்லவி (றஹ்) அவர்கள் விளக்கம் எழுதுகையில் “பலம் குறைந்தவர்கள்’’ என்றசொல்லுக்கு ஏழைகளின் பொருட்டைக் கொண்டு என்றும் , அல்லாஹ்வில் “பனா’’ வான இறைநேசர்களின் பொருட்டைக் கொண்டு என்றும் விளக்கம் எழுதியுள்ளார்கள்.
ஆதாரம் ;- பத்லுல் மஜ்ஹூத் ஷர்ஹூ அபீதாவூத்
தொடரும்……..
———————————————————————————————————————————–
———————————————————————————————————————————–
தொடர் – 01 ……..
அதி சங்கைக்குரிய ஷெய்குனா ஞானபிதா மௌலவி அல்ஹாஜ்
A.அப்துர் றஊப் மிஸ்பாஹீ
(அ.இ. சமாதான நீதிவான்) அவர்கள்
நபீமார்கள், றஸூல்மார்கள், அவ்லியாக்கள் ஆகியோர் பாவித்து வந்த ஜுப்பா, தலைப்பாகை, ஷேட், சாரம், தொப்பி, செருப்பு, முஸல்லா, அஸா, மோதிரம் போன்ற பொருட்களை வீடு, கடை போன்றவற்றில் வைத்திருப்பது கொண்டும், அவற்றை முத்தமிடுவது கொண்டும் ‘’பறகத்’’ அருள் பெற்றுக்கொள்ளுதல் தொடர்பான ஆதாரங்களையும், விபரங்களையும் இங்கு எழுதுகின்றேன்.
இத்தலைப்பில் நான் எழுதுவதற்க்கு காரணம் வழிகேடர் நஜ்திசாஹிபும், அவருடைய ஆதரவாளர்களும் இதை மறுத்து வருவதும். இதை ‘’ஷிர்க்’’ இணைவைத்தல் என்று கூறிவருவதுமாகும்.
யாராவது ஒருவன் ஒரு நபீயின் அல்லது ஒரு வலீயின் தலைமுடி, தாடிமுடி, பல் போன்றவற்றை அல்லது அவர்கள் பாவித்த ஒரு பொருளை அவர்களின் ‘’பறகத்’’ அருளைக்கருதி வைத்துக்கொள்வதும், அவர்களின் திருச்சமாதியில் கட்டி எடுக்கப்பட்ட நூல்களைக் கையிலும், கழுத்திலும் அவர்களின் அருளை நாடிக் கட்டிக் கொள்வதும் ‘’ஷிர்க்’’ இணைவைத்தலான காரியம் என்று வஹ்ஹாபிகள் கூறிவருகின்றார்கள்.
இது பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்களையும், ஆதாரங்களையும் எழுதுவதற்காகவே இப்படியொரு தலைப்பைத் தெரிவு செய்தேன்.
01) நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பெண் வந்து “அல்லாஹ்வின் றஸுலே! இதை நீங்கள் உடுக்கவேண்டும் என்பதற்காக நான் எனதுகையால் நெசவு செய்து கொண்டு வந்துள்ளேன்’’.
எனக்கூறி அழகிய போர்வையொன்றை அண்ணலிடம் கொடுத்தாள். அண்ணல் நபீ (ஸல்) அவர்களும் பெருமகிழ்ச்சியுடன் அதைப் பெற்று உடுத்துக்கொண்டார்கள்.
அவர்கள் உடுத்திருந்ததைக் கண்ட ஸஹாபி ஒருவர்அதைத் தனக்குத்தரும்படி அண்ணலைக் கேட்டார்.
பெரும் மனம் கொண்ட பெரும்தகை பெருமான் (ஸல்) அவர்கள் அக்கணமே அப்போர்வையை கழற்றி அந்த ஸஹாபிக்கு கொடுத்தார்கள். அவரும் மன நிறைவுடன் அதைப் பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியை அவதானித்துக் கொண்டிருந்த நபீத் தோழர்களில் ஒருவர் அந்த ஸஹாபியிடம் சென்று “நீங்கள் செய்தது சரிதானா? நபி (ஸல்) அவர்களிடம் யார் எதைக்கேட்டாலும் அவர்கள் மறுக்காமல் கொடுத்துவிடுவார்கள் என்பது உங்களுக்கு நன்றாக தெரிந்திருந்தும் ஏன் அதைக்கேட்டீர்கள்? ” என்று குறை பட்டுக்கொண்டார்.
அதற்கந்த ஸஹாபி நபீ(ஸல்) அவர்கள் அதை உடுக்கக்கூடாது என்பதற்காக நான் அவர்களிடமிருந்து வாங்கவில்லை எனினும் நபீ (ஸல்) அவர்கள் உடுத்தபோர்வையில் ‘’பறகத்’’ அருள் உண்டு என்பதற்காகவும் நான் மரணித்தபிறகு அப்போர்வையால்தான் என்னை ‘’கபன்’’ செய்ய வேண்டுமென்பதற்காகவும் தான் அதை நான் வாங்கினேன் என்று சொன்னார்.
ஆதாரம் ;- புஹாரி
அறிவிப்பு ;- ஸஹ்ல் பின் ஸஃது (றழி)
இந்த ஹதீஸை ‘’ரிவாயத்’’ பேசிவந்த ஸஹ்ல் (றழி) அவர்கள் அந்த ஸஹாபி சொன்னதுபோல் அப்போர்வையாலேயே அவர் கபன் செய்யப்பட்டு அடக்கப்பட்டார் என்று கூறியுள்ளார்கள்.
இந்த ஹதீதிலிருந்து நபீ (ஸல்) அவர்கள் உடுத்த துனியில் ‘’பறகத்’’ அருள் உண்டு என்பதும், மரணித்த ஒருவரை அதில் கபன் செய்வதால் பிரயோசனம் உண்டு என்பதும் தெளிவாகிறது.
அந்த ஸஹாபி நபீ (ஸல்) அவர்களிடம் போர்வையைக் கேட்டபொழுது அவர் எதற்காகக் கேட்கிறாரென்பது நபீ (ஸல்) அவர்களுக்குத் தெரிந்த விஷயம் தான்.
அந்த ஸஹாபியின் நோக்கம் நபீ (ஸல்) அவர்களுக்குத் தெரிந்திருந்தும் மறுக்காமல் அதைக் கொடுத்ததிலிருந்து ‘’பறகத்’’ பெறும் நோக்கத்தில் ஒரு பெரியாரிடம் அவர் பாவித்த பொருளைக் கேட்பது ஆகுமென்பதும், அவ்வாறு யாராவது கேட்டால் அதைக் கொடுத்துவிட வேண்டுமென்பதும் தெளிவாகி விட்டது.
இந்த அடிப்படையில்தான் மக்கா நகருக்குச் செல்பவர்கள் புனித ‘’கஃபா’’ போர்த்தப்பட்ட துணியைக் கொண்டு வந்து தமது உறவினர்ளுக்குக் கொடுக்கிறார்கள். மேலும் அதை மையித்தின் கண்ணில்வைத்து நல்லடக்கமும் செய்கிறார்கள். மேலும் இந்த அடிப்படையில் தான் அவ்லியாக்களின் புனித தர்ஹாவுக்குச் செல்வோர் அவர்களின் புனித ‘’கப்று ஷரீப்’’ போர்த்தப்பட்ட துணியை அல்லது தாம் புதிய துணி வாங்கி அது கொண்டு அந்தக் ‘’கப்று ஷரீபை’’ போர்த்தி அதைத் தமது ஊருக்கு கொண்டு வந்து தமது உறவினர்களுக்குக் கொடுக்கிறார்கள்.
மேலும் இந்த அடிப்படையில் தான் அஜ்மீர் அரசர், கரீப் நவாஸ் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ (றழி) அவர்களின் தர்ஹா ஷரீபுக்குச் செல்வோர் கையில் அல்லது கழுத்தில் கட்டுவதற்குப் பொருத்தமான நூலை அவர்களின் ‘’கப்று ஷரீபில்’’ வைத்து எடுத்து வந்து அவர்களின் பக்தர்களுக்கு கொடுத்து வருகிறார்கள்.
‘’பறகத்’’ பெறும் நோக்குடன் ஒரு பெரியாரிடம் அவர் பாவித்த பொருளைக் கேட்பது கூடாதென்றிருந்தால் அந்த ஸஹாபி கேட்டபொழுது நபீ (ஸல்) அவர்கள் நிச்சயமாக அவரைத் தடுத்திருப்பார்கள். அதைக் கொடுத்திருக்கவும் மாட்டார்கள்.
அதேபோல் ஒரு பெரியார் பாவித்த உடையில் ‘’பறகத்’’ பெறும் நோக்குடன் ‘’கபன்’’ செய்வது கூடதென்றிருந்தால் நபீ (ஸல்) அவர்கள் நிச்சயமாக அதைத்தடுத்திருப்பார்கள். நபீ (ஸல்) அவர்கள் ஒரு பொழுதும் பாவமான அல்லது ‘’ஷிர்க்’’ கான காரியத்துக்கு உதவியாக இருக்கமாட்டார்கள்.
எனவே! அந்த ஸஹாபி ‘’பறகத்’’ பெரும் நோக்கத்தில் கேட்கிறார் என்பதை நபீ (ஸல்) அவர்கள் அறிந்திருந்தும் அவருடைய நோக்கத்தை நிறை வேற்றும் வகையில் நடவடிக்கை எடுத்திருப்பது இத்தகைய செயல் ஆகுமாக்கப்பட்ட செயலென்பதை ஊர்ஜிதம் செய்கிறது.
இந்த ஹதீதையும், இன்னுமிதுபோன்ற ஹதீஸ்களையும் ஆதாரமாகக் கொண்டுதான் ஒரு ‘’தரீகஹ்’’ வைப் பின்பற்றிவாழும் முரீது (ஆன்மீகமானவன்) தனது தரீகஹ்வின் ‘’ஷெய்கு” மார்கள் பாவித்த உடைகளை அவர்களிடமிருந்துபெற்று தாம் மரணித்த பின் அவற்றைத் தம்முடன்வைத்து அடக்கம்செய்ய ஏற்பாடுசெய்கிறார்கள்.
ஒரு பெரியார் பாவித்த உடையில் ‘’கபன்’’ செய்யப்படுவதில் பிரயோசனம் உண்டு என்றால் அவர் பாவித்த உடைகளில் சிறிய துண்டுகள்வெட்டி எடுத்து அதைத்தன்னுடன் அல்லது தனது வியாபார சரக்குடன்வைத்துக் கொள்வதிலும் பிரயோசனம் நிச்சயம் உண்டு.
பெரியார்கள் பாவித்தபொருட்கள் கிடைக்காதவர்கள் கடையில் புதிய துணிவாங்கி அதை அந்தப்பெரியாரின் கப்றில் சொற்ப நேரம் வைத்தெடுத்து அதைக்கொண்டு பறகத் பெற்று வருகின்றனர்.
இவ்விதம் செய்வதும் ஒரு பெரியார் பாவித்த பொருளைக் கொண்டு ‘’பறகத்” பெறுதைச் சேர்ந்ததேயாகும்.
2) நபீ (ஸல்) அவர்கள் சிலசமயம் ‘’உம்மு சுலைம்’’ (றழி) அவர்களிடம் உறங்குவார்கள். அந்நேரம் உம்மு சுலைம் அவர்கள் நபீ (ஸல்) அவர்களின் திருவுடலில் இருந்து வடியும் வியரவையை எடுப்பார்கள்.
ஒரு நாள் நபீ (ஸல்) அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கையில் உம்மு சுலைம் (றழி) அவர்கள் நபிகளாரின் வியர்வையை எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
எதிர் பாராமல் கண்விழித்த ஏந்தலர் நபீ (ஸல்) அவர்கள் ‘’உம்மு சுலைமே! என்ன செய்கிறீர்? என வினவினார்கள்.
அதற்கவர்கள் ‘’நாயகமே! எங்களுடைய சிறுவர்களுக்காக பறக்கத்தை நாடி எடுக்கின்றேன்’’ என்று சொன்னார்கள். அதற்கு நபீ (ஸல்) அவர்கள் சரியென்று கூறினார்கள்.
ஆதாரம் ;- புகாரி
அறிவிப்பு ;- உம்மு சுலைம் (றழி)
முதலில் காட்டிய ஹதீஸ் நபீ (ஸல்) அவர்களின் உடையைக் கொண்டு பறகத் பெறுவதைக் காட்டுவதுபோல் மேலே சொல்லப்பட்டுள்ள இரண்டாவது ஹதீஸ் நபீயவர்களின் வியர்வையைக் கொண்டு பறகத் பெறுவதைக் காட்டுகிறது.
உம்மு சுலைம் (றழி) அவர்கள் நபீ (ஸல்) அவர்களின் வியர்வை, திருமுடி இவ்விரண்டையும் எடுத்து ஒரு பையில் போட்டு வைத்திருந்தார்கள். அனஸ் (றழி) அவர்களுக்கு மரணவருத்தம் ஏற்பட்ட சமயம் தனது மரணத்தின் பிறகு அதைத் தனது கபனில் வைத்து அடக்கவேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். அவ்வாறே அவர்களுக்குச் செய்யப்பட்டது. ஆதாரம் ;- புகாரி
மேலே கூறிய ஹதீஸ்களில் இருந்து ‘’பறகத்’’ அருளை நாடி நபீ (ஸல்) அவர்களினது வியர்வையும், முடியும் எடுக்கப்பட்டுள்ளன என்பதும். அதை கபனுடன் வைத்து ஒரு ஸஹாபி அடக்கம் செய்யப்பட்டுள்ளார். என்பதும் அதைக் கபனுடன் வைத்து அடக்கம் செய்வதில் ஏதோவொரு விஷேசம் இருக்கிறதென்பதும் விளங்குகிறது.
3) நபீ (ஸல்) அவர்கள் ளுஹர் தொழுகையை முடித்தபிறகு பள்ளிவாயலில் அமர்ந்திருப்பார்கள். மதீனாவிலுள்ள வேலையாட்கள் தண்ணீர் நிறைந்த பாத்திரங்களைக் கொண்டுவந்து நபீ (ஸல்) அவர்கள் முன்வைப்பார்கள். நபீ (ஸல்) அவர்கள் ஒவ்வொரு பாத்திரங்களிலும் தங்களின் திருக்கரத்தை விட்டு எடுப்பார்கள்.
ஆதாரம் ;- முஸ்லிம்
தொடரும்……..