மௌலவீ ACA. ஜெஸ்லின் (றப்பானீ)
ஹஜ்ரத் அலீ(றழி) அவர்களிடம் அண்ணல் நபீ(ஸல்) அவர்களிடம் தங்களுக்கு எந்த அளவு அன்பு இருந்தது? என்று ஒருவர் கேட்டார், “அல்லாஹ்வின் மீது சத்தியமாகச் சொல்கின்றேன். எங்களுடைய சொத்துக்கள், பெற்றெடுத்த மக்கள், அன்பு அன்னை மார்கள், ஆகியவர்களை விடவும், கடுமையான தாகத்தின் போது கிடைக்கும் குளிர்ந்த நீரை விடவும் நாங்கள், அண்ணலாரை நேசித்தோம்” என்று கூறினார்கள்.
ஹஜ்ரத் அலீ(றழி) அவர்கள் கூறியது முற்றிலும் உண்மையே! அண்ணலாரின் தோழர்கள் அனைவருமே அப்படித்தான் அண்ணலார் மீது அன்பு கொண்டிருந்தார்கள். அதற்கு முக்கிய காரணம், அவர்கள் கொண்டிருந்த பரிபூரணமான இறை உறுதியே! எனவே, ஏன் அவர்கள் அவ்வாறு இருக்கக் கூடாது? அல்லாஹ் தஆலா திருக்குர் ஆனில் கூறுகின்றான்.
மனிதர்களே! உங்கள் பெற்றோர், மக்கள், சகோதரர்கள், மனைவியர் பந்துக்கள், நீங்கள் நஷ்டப்படுவதை அஞ்சும் உங்கள் வர்த்தகம், நீங்கள் ஆசிக்கும் உங்களது இல்லங்கள் ஆகியவை அல்லாஹ்வையும் அவனது தூதரையும், அவனுடைய பாதையிலே போரிடுவதையும் விட உங்களுக்கு அதிக பிரியமுடையவராயின், அல்லாஹ், தன்னுடைய ஆனையைக் கொண்டு வரும் வரை நீங்கள் பொறுத்திருங்கள்! அல்லாஹ், பாவிகளுக்கு அவர்களது நோக்கத்தில் வெற்றி தரமாட்டான்.
அல்லாஹ்வின் இந்த அறிவிப்பிலே, மேற்கானும் எல்லோரையும் விட, அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர் மீதும் அன்பு குறைந்து விடுபவர்களுக்குக் கடுமையான எச்சரிக்கை தரப்பட்டுள்ளதை காண்கிறோம்.
“உங்களில் எவரும், தங்களது பெற்றோர், மக்கள், இதர உற்றார் உறவினர்களை விட என்னை அதிகமாக நேசிக்காத வரை, நீங்கள் உண்மையான விசுவாசிகளாக ஆகிவிட முடியாது. என்று அண்ணலார் கூறியதாக, ஹஜ்ரத் அனஸ்(றழி) அவர்கள் கூறியிருக்கின்றார்கள். இதே விதமான மற்றுமொரு நபி மொழியை ஹஜ்ரத் அபூஹூரைறா(றழி) அவர்களும் கூறியிருக்கின்றார்கள்.
“நேசித்தல்” என்பதைப்பற்றி, மார்க்க மேதைகள் பின்வருமாறு விளக்கம் தருகின்றார்கள். “நேசம் இரு வகைப்படுகின்றது! ஒன்று, தான் விரும்பி நேசிப்பது, மற்றெது இயற்கையாகவே நேசிப்பது! விருப்பமான தேசத்தில் இயற்கையும் கலந்து விட்டது என்றால், அது பரிசுத்தமான, பரிபூரணமான நேசமாகி விடுகிறது. இத்தகைய நேசத்தைத்தான் கொண்டிருந்தார்கள், அண்ணலார் மீது அவர்களது தோழர்கள்”.
அல்லாஹ்வின் மீதும், அவனது தூதர் நபி(ஸல்) அவர்கள் மீதும் பரிபூரணமான விசுவாசமும், அதில் இணையில்லா உறுதியும் எத்தகையவர்களுக்கும் இருக்கும் என்பதைக்குறிக்கும், பின் வரும் நபி மொழி அனஸ் (றழி) அவர்கள் அறிவித்தார்கள்.
· “உலகில் உள்ள எல்லாவற்றையும் விட அல்லாஹ்வையும் அண்ணலாரையும் அதிகம் நேசித்தல்”.
· “எவரை நேசிப்பதாக இருந்தாலும் அந்த நேசம் அல்லாஹ்விற்காகவென்றே இருத்தல்”.
· “இஸ்லாத்திற்கு எதிரான ஒரு காரியம் செய்ய முற்படுவதாயின், நெருப்பில் விழுவதைப் போன்ற சிரமமாகத் தெரிதல்”,
உமர்(றழி) அவர்கள், அண்ணலாரின் சமூகத்தில் ஒரு தடவை கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! எனது உயிரைத்தவிர மற்றெல்லாத்தையும் விட தாங்களே எனக்கு அதிகம் பிரியமுள்ளவர்களாயிருக்கின்றீர்கள்”!
“தனது உயிரை விட என்னை அதிகமாக நேசிக்காத வரை ஒருவர், பூரணமான விசுவாசியாகமாட்டார்” என்று அண்ணலார் அதற்கு பதிலாகக் கூறினார்கள். உடனே, உமர்(றழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே, தாங்கள் என்னுயிரை விட இப்பொழுது அதிகப்பிரியமுள்ளவராக இருக்கிறீர்கள்! என்றார்கள்.
“ஓ உமரே! இப்பொழுது தான்!” என்று அண்ணலார் கூறினார்கள். இக்கூற்றுக்கு மார்க்க மேதைகள், இருவிதமான பொருள்களைக் கூறுகிறார்கள். முதலாவது! ஓ உமரே! இப்பெழுதான் உமது விசுவாசம் பரிபூரணமாயிற்று. இரண்டாவது! ஓ உமரே! இப்பொழுதான் நான் எச்சரித்த பிறகுதான், உமதுயிரைவிட என்னை அதிகமாக நேசிப்பதாக கூறுகிறீர்கள்! இவ்வாறு முன்பே ஏற்பட்டிருக்க கூடாதோ?
ஸூஹைலெதுஸ்தரீ(றழி) அவர்கள் கூறுகின்றார்கள்! “ஒருவர் பெருமானார் (ஸல்) அவர்களை தன் மீது ஆணை செலுத்துபவராகவும், தனது மனோ இச்சைக்கு கட்டுப்படாதவராகவும் கருதாதவரை பெருமானாரின் முன் மாதிரிகளிலுள்ள இன்பத்தை நுகர முடியாது.” அண்ணலாரின் தோழர் ஒருவர் ஒருதடவை அண்ணாலரின் சமூகத்திற்கு வந்து இறுதி நாள் எப்பொழுது வரும்? என்று கேட்டார். அந்த நாளை எதிர் பார்க்கும் நீர் அதற்குரிய எந்த சாதனையை திரட்டிவைத்திருக்கின்றீர்கள்! என்று அண்ணலார் கேட்டார்கள். “அல்லாஹ்வின் தூதரே! நான் நிறைய தொழுகைகளையும், நோன்புகளையும், தானதருமங்களையும் சேர்த்து வைக்கவில்லை! ஆனால், அல்லாஹ் மீதும், அவனுடைய தூதர் மீதும் எனதுள்ளத்தில் நிறைய அன்பு சேர்த்து வைத்துள்ளேன்!” என்றார்.
“எவரை நீர் நேசித்தீரோ, மறுமையில் அவருடனேயே இருப்பீர்கள்!” என்றார்கள் பெருமானார் அவர்கள். அதாவது “மனிதன், உலகில் எதை அதிகம் நேசிக்கின்றானோ, அதனுடன் தான் அவன் மறுமையில் எழுப்பப்படுவான், என்பது இதன் பொருளாகும். இந்த நபிமொழியை அண்ணலாரின் தோழர்கள் பலர் அறிவித்துள்ளனர். இவர்களில், அப்துல்லா இப்னு மஸ்ஊத்(றழி), அபூ மூஸா அஸ்அரி(றழி), ஸப்வான்(றழி), அபூதர்(றழி) பொன்றோரும் உள்ளனர்.
“அண்ணலாரின் இந்த அறிவிப்பை கேட்டதும், அவர்களது தோழர்கள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லாது போய் விட்டது. என்று அனஸ்(றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஏனெனில் அண்ணலாரின் அன்பு அவர்களின் தோழர்களின் நரம்பு நாளங்களிலெல்லாம் ஊடுருவி சென்றிருந்ததல்லவா?
பாத்திமா (றழி) அவர்களது வீடு, அண்ணலாரிருந்து வந்த இடத்திலிருந்து சற்று தூரத்தில் இருந்து வந்தது. ஒரு தடவை பாத்திமா (றழி) அவர்களிடம் அண்ணலார் உனது வீடு, எனக்குச் சமீபத்தில் இருக்க வேண்டும் என்று எனது மணம் நாடுகின்றது. என்று கூறினார்கள். ஹாரிதாவின் வீடு உங்களுக்கு அருகில் தான் இருக்கின்றது. எனது வீட்டுக்கு பதிலாக அவருடைய வீட்டில் ஒன்றை எனக்குக் கொடுக்கும் படி தாங்கள் அவரிடம் கூறியிருக்கலாமே! என் பாத்திமா(றழி) அவர்கள் கூறினார்கள்.
இதற்கு முன்னொரு தடவையும், அவருடைய வீட்டில் ஒன்றை இவ்வாறு மாற்றியுள்ளேன். இப்பொழுது மீண்டும் அவ்வாறு கேட்க வெட்கமாக இருக்கிறது! என்றார்கள் அண்ணலார்.
ஹாரிதா(றழி) அவர்களுக்கு இத் தகவல் எட்டியதும், உடனே விரைந்து அண்ணலாரிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே!, பாத்திமா (றழி) அவர்களுடைய வீடு உங்களருகில் இருக்க வேண்டும். என்று தாங்கள் பிரியப்படுவதாக எனக்குத் தெரிய வந்தது. இதோ எனது அத்தனை வீடுகளையும் உங்களுக்கு அர்ப்பணிக்கின்றேன். இவற்றை விட வேறு எந்த வீடும் தங்களுக்கு அருகிலில்லை” இவற்றில் எதை விரும்புகின்றீர்களோ அதனை மாற்றிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் தூதரே! என்னிடமுள்ள எல்லா பொருட்களுமே, அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் உரியனவே! அல்லாஹ்வின் மீது சத்தியமாகக் கூறுகின்றேன். இவை என்னிடம் இருப்பதை விட தங்களிடம் இருப்பதையே நான் விரும்புகின்றேன்” என்று கூறினார்கள். இதனைக் கேட்டு மகிழ்ந்த அண்ணலார், “நீர் கூறுவது உண்மைதான்” என்று கூறி அந்த தோழர் மேலும் விருத்தியடைய வேண்டுமென்று “துஆ” செய்து அவ்வாறே தங்கள் விருப்பப்படி வீட்டை மாற்றிக் கொண்டார்கள்.
ஒரு தடவை அண்ணலாரின் தோழரொருவர் அண்ணலாரின் சமூகத்தில் வந்து “அல்லாஹ்வின் தூதரே! எனனக்கு எனது உயிர், எனது பெருள், எனது குடும்பத்தார், உறவினர் அனைவரையும் விட தங்கள் மீது அதிக பாசம் இருந்து வருகின்றது. எனக்குத் தங்கள் நினைவு வந்து விட்டால், என்னால் அதனை பொறுக்க முடியாமல் போய்விடுகிறது. உடனே தங்களை வந்து தரிசித்துக் கொள்ளாதவரை நிம்மதி ஏற்படுவதில்லை. இப்பொழுது எனக்கு ஒரே கவலை ஏட்பட்டுவிட்டது. மரணம் தங்களுக்கும் இருக்கிறது. ஏனெனில், தங்களோ அல்லாஹ்வுடைய தூதராக இருக்கின்றீர்கள். எனவே தூதர்களது அந்தஸ்தில் தரிசனம் கிடைக்காது போய்விடுமே!” என்று முறையிட்டுக் கொண்டார்கள்
அண்ணலார் இதற்கு விடை கூறாது மௌனம் சாதித்ததார்கள். உடனே,ஹஸ்ரத் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் ஆஜராகி, கீழ்வரும் திருவசனத்தை ஓதிக்காட்டினார்கள்
ومن يطع الله والرسول فألئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين. وحسن أولئك رفيقا ذلك الفضل من الله وكفى بالله عليما.
பொருள் : எவர் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கீழ்படிந்து நடந்து கொள்கிறார்ளோ அவர்கள் அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்கள், மெய்யடியார்கள், உயிர்தியாகிகள், நல்லடியார்கள் ஆகியோருடன் இருப்பர். இவர்களே தோழமைக்கு சிறந்தவர்களாக இருக்கிறாகள் இந்தத் தோழமையானது அல்லாஹ்வுடைய ஓர் அருளாகும். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கிறான். அண்ணலாரின் தோழர்கள் பலருக்கு இத்தகைய சந்தேகங்கள் பல சந்தர்பங்களில் தோன்றி உள்ளன. அண்ணலார், அவர்களுக்கெல்லாம் இந்த வசனத்தையே ஓதிக்காட்டியுள்ளார்கள்.
மற்றொரு தடவை அண்ணலாரின் தோழரொருவர் வந்தார்; அண்ணலாரின் சமூகத்தில் அவர் கூறினார். ‘’அல்லாஹ்வின் தூதரே, தங்கள் மீது எந்த அளவு நேசம் கொண்டுள்ளேன் என்றால், தங்களது நினைவு வந்ததும் தங்களை உடனே வந்து பார்க்காவிடில் எங்கு எனது உயிரே பிரிந்துவிடுமோ! என்று கூட சந்தேகப்படவேண்டியதாக இருக்கிறது. இப்பொழுது எனக்கு மற்றொரு சந்தேகமும் வந்து விட்டது. அப்படி ஒரு வேளை நான், மறுமையில் பிரவேசித்தாலும் கூட நான் தாழ்ந்த அந்தஸ்தில் தான் இருந்து வேண்டி வரும். எனவே தங்களை தரிசிக்காத நிலையில் அந்த சுவர்க வாழ்வும் எனக்கு மிகக்கடினமாகத்தானே இருந்து வரும்?
அந்த தோழருக்கும் அண்ணலார் இதே வசனத்தையே ஓதிக்காட்டினார்கள். மற்றொரு நபிமொழியில் பின்வரும் சம்பவம் காணப்படுகிறது.
ஓர் அன்ஸாரித் தோழர், அண்ணலாரின் சமூகத்தில் வந்து மிகவும் கவலை தோய்ந்த முகத்தினராய் உட்கார்ந்து இருந்தார். ‘’ஏன் இப்படிக்கவலையுடன் இருக்கிறீர்! ‘’என்று விசாரித்தார்கள். அண்ணலார்.’’ஒரு பிரச்சினை என்னை சிந்தனையில் ஆழ்த்தி விட்டது!’’ என்றார் அந்த தோழர் ’’அப்படி என்ன சிந்தனையில் ஆழ்த்திவிட்ட பிரச்சினை உமக்கு?’’ என்று மீண்டும் கேட்டார்கள். அண்ணலார்.
‘’ அல்லாஹ்வின் தூதரே! தற்சமயம், காலையிலும், மாலையிலும். தங்கள் சன்னிதானத்தில் இருந்து வருகிறோம்; தங்களைக்கண்டு பேரானந்தத்தில் நனைந்து விடுகறோம். தங்கள் கூடவே இருந்து வாழ்கிறோம்! ஆனால் நாளை மறுமை நாளிலோ, தங்கள் நபிமார்ளோடு உயர்ந்த அந்தஸ்தில் இருப்பீர்கள்! நாங்களோ, அந்த அளவுக்கு வருவதற்கு சாத்தியமில்லை. எப்படி தங்ளைச்சந்திப்போம் என்பதே எனது கவலை!’’ என்றார் அந்த தோழர்.
அண்ணலார் அச்சமயத்திலும் மௌனம் சாதித்து விட்டு, இந்த வசனம் இறங்கிய பிறகு அந்த அன்சாரி ஸஹாபியையும் அழைத்து ஓதிக்காட்டினார்கள். மற்றொரு நபி மொழியில், பின்வரும் சம்பவம் விபரிக்கப்படுகிறது.
அண்ணலாரின் தோழர்கள் கேட்டார்கள்!’’ அல்லாஹ்வின் தூதரே! ஒரு நபியை பின்பற்றுபவர்களின் அந்தஸ்தை விட, அந்த நபியின் அந்தஸ்து உயர்வானது என்பது எல்லோரும் அறிந்ததுதான்! அவ்வாறு இருக்கும் பொழுது, அவர்களோடு ஒன்றித்திருக்க அல்லாஹ்வின் மற்றைய நல்லடியார்கள் என்ன செய்வது?’’
அதற்கு அண்ணலார் விளக்கம் கூறினார்கள்; ‘’ உயர்ந்த அந்தஸ்திலுள்ளவர்கள், தாழ்ந்த அந்தஸ்திலுள்ளவர் இருக்கும் இடத்திற்கு வருவார்கள். அவர்கள் அருகில் அமருவார்கள்; அவர்களொடு பேசுவார்கள்.’’ அண்ணலார் மேலும் விளக்கம் கூறினார்கள்.
‘’எனக்குப் பின்னால் தோன்றக்கூடியவர்களிலும் என்னை அதிகம்நேசிக்கக் கூடியவர்கள் சிலர் இருப்பார்கள், அவர்கள் என்னை காண்பதற்காகவேண்டி தங்கள் உயிர், பொருள், குடும்பத்தார் அனைவரையும் அர்பணித்து விட இருப்பார்கள். (துர்ருள் மன்தூர்)
காலித் (றழி) அவர்களின் மகனார், அப்தா (றழி) அவர்கள் கூறினார்கள். ‘’எனது தந்தை உறங்கச் சென்றால், அவர்களுக்கு உடனே நித்திரை வந்து விடாது; அண்ணலாரோடு கழித்த நாட்களை ஞாபகப்படுத்திக்கொண்டே இருப்பார்கள்; அவர்களோடு. அன்போடு அளவளாவிக் கொண்டிருந்ததை நினைவு கூறுவார்கள். மக்கா தோழர்கள், மதீனா தோழர்கள் ஒவ்வருவருடைய பெயரையும் குறிப்பிட்டு நினைவு கூறுவார்கள். ‘இவர்கள்தான் எனது உடன் பிறந்தார் உறவினர் எல்லாம்! என் மனம் இவர்கள் பக்கம்தான் ஈர்கப்படுகிறது. யாஅல்லாஹ்! எனக்கு விரைவில் மரணம் அழிப்பாயாக! நானும் இவர்களோடு போய் சேர்ந்து கொள்கிறேன்’’ என்று கூறியவாறே தூங்கிவிடுவார்கள். ஒரு தடவை அபூபக்கர் (றழி) அவர்கள் அண்ணலாரிடம் கூறினார்கள்!
‘’அல்லாஹ்வின் தூதரே! எனக்கு எனது தந்தை முஸ்லிமாவதைவிட, தங்கள் சிறிய தந்தையார் அபூதாலிப் அவர்கள் முஸ்லிம், ஆகிவிட வேண்டும் என்றே நான் ஆசைப்படுகின்றேன்! ஏனெனில், அவர்கள் முஸ்லிமாவதைக் கொண்டு தாங்கள் அதிக சந்தோஷப்படுவீர்கள் அல்லவா? அதாவது தமது சந்தோஷத்திற்கு பதிலாக அண்ணலாரின் சந்தோசத்தையே அவர்கள் அதிகம் விரும்பினார்கள்.
உமர் (றழி) அவர்கள், ஹழ்றத் அப்பாஸ் (றழி) அவர்களிடம் ‘’எனது தந்தையார் முஸ்லிமாவதை விட தாங்கள் முஸ்லிமாவதைக் கொண்டு நான் அதிகம் சந்தோஷப்படுகிறேன்! எனெனில் தாங்கள் முஸ்லிமாவது அண்ணலாருக்கு அதிகப் பிரியமாக இருக்கின்றது’’ என்று கூறினார்கள்.
மற்றொறு தடவை உமர் (றழி) அவர்கள் நகர பாதுகாப்பிற்காக இரவில் சுற்றி வருகையில், ஒரு வீதியின் பக்கம் வரும் பொழுது ஒரு வீட்டில் இருந்து வெளிச்சம் வருவது தெரிந்தது. சற்று நேரம் நின்று கவனித்தார்கள். அந்தக் கிழவி, நூல் நூற்றுக்கொண்டு கீழ் வரும் கவிதையை வெகு உருக்கமாகப் பாடிக்கொண்டிருந்தாள் அதன் பொருள் பின் வருமாறு.
‘’அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீது நன்மையாளர்களின் நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக! பரிசுத்தவான்களிலுள்ள நல்லடியார்களின் நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக! அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக நீங்கள் இரவெல்லாம் வணக்கத்தில் இருந்து வந்தீர்கள்! இரவின் இறுதி நேரத்திலே, இறைவனிடம் இறைஞ்சி அழுதவாறு இருந்து வந்தீர்கள்! மரணம் மனிதனுக்கு எந்த நிலையில் வரும் என்பதை எவரறிவார்? எனது மரணத்திற்குப் பின், அருமை நபியாகிய தங்ளோடு சேர்ந்திருக்க முடிகிறதோ, என்னவோ! ஏனெனில் எனது மரணம் எந்த நிலையில் வருகிறதோ! எனது மரணத்திற்குப் பிறகு அண்ணலாரை நான் சந்திக்க முடிகிதோ, என்னவோ!
கிழவியின் இந்தக் கவிதையை கேட்டு உமர் (றழி) அவர்கள் அதே இடத்தில் அமர்ந்து அழ ஆரம்பித்துவிட்டார்கள்.
பிலால் (றழி) அவர்கள், மரணப்படுக்கையில் இருந்தார்கள்; இறுதி மூச்சின் கடைசி எல்லை நெருங்கிக் கொண்டிருந்தது. கணவரின் கடைசிக்கட்டத்தை காணச்சகியாது அவர்களது மனைவியார், ‘அதோ என் கதியே! என்று அழுது புலம்பிய வண்ணமிருந்தார்கள். அச்சமயம்,பிலால் (றழி) அவர்கள், தம் மரணத்தைக் குறித்து சந்தோஷமடைந்தவராக ‘’ ஸுப்ஹானல்லாஹ்! என்ன சுவையான விஷயம்! நான் நாளை அண்ணலாரை தரிசிப்பேன்! அவர்களது இதர தோழர்களையும் சந்திப்பேன்! ‘’என்று கூறினார்கள்.
ஜைத்(றழி) அவர்களைத் தூக்கு மேடையில் ஏற்றி, அபூஸுப்யான் ஜைத் (றழி) அவர்களை நோக்கி, ‘’உம்மை விடுதலை செய்து விட்டு, உமக்குபதிலாக முஹம்மதுக்கு இந்தத்தண்டனை அளிப்பதாயிருந்தால் நீர், அதற்கு சம்மதிப்பீரா? என்று கேட்டார்! அதற்கு ஜைத் (றழி) அவர்கள் ‘’ அல்லாஹ்வின் மீது சத்யமாக, அண்ணலார், அவர்களது வீட்டில் இருக்கும் பொழுது, அவர்களுக்கு ஒரு சிறு முள் தைத்து விட்டதாக இருந்தால் கூட, நான் சுகமாயிருப்பதை என்னால் சகிக்க முடியாதே! என்று கூறினார்கள். அப்போது அபூஸுப்யான், ‘’முஹம்மதுவை அவர்களது தோழர்கள் நேசிப்பதைப்போல வேறெவரையும் யாரும் இப்படி நேசிப்பதை நான் கண்டதில்லை! ‘’என்று ஆச்சரியப்பட்டு கூறினார்கள்.
குறிப்பு;- அண்ணலார் மீது அன்பு கொள்வது சம்மந்தமாக மார்க மேதைகள் பல அடையாளங்கள் கூறியுள்ளனர். காழீ இயாழ் (றழி) அவர்கள் கூறுகிறார்கள்.
‘’ஒரு மனிதன் ஒரு பொருளின் மீது மோகங் கொள்வதாயின், மற்றெல்லாவற்றையும் விட அதன் மீது அன்பு கொண்டே தீருவான் இதுவே அந்த அன்பின் உன்மையான அடயாளமாகும். அவ்வாறு இல்லையாயின், அந்த அன்பு வெறும் போலி அன்புதான்!’’
எனவே அண்ணல் நபி(ஸல்) அவர்கள் மீது நாம் உண்மையான அன்பு கொள்வதாயின், அவர்களை ஒவ்வொரு விஷயத்திலும் நாம் முழுக்க முழுக்கப் பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் சொற்படி நடக்க வேண்டும்; செய்த முன்மாதிரிகளையே பின்பற்றிச் செய்ய வேண்டும். எதனை விட்டு தடுத்தார்களோ அதனை அறவே விட்டுவிட வேண்டும். சுகத்திலும், துக்கத்திலும், வறுமையிலும்,செல்வத்திலும், எந்த நிலையிலும் அண்ணலாரையே பிள்பற்றி நடந்துகொள்ள வேண்டும். இதனைக் குறித்து அல்லாஹுத்தஆலா திருக்குர் ஆனில் பின்வறுமாறு கூறியுள்ளான்.
قل ان كنتم تحبون الله فاتبعو ني يحببكم الله ويغفرلكم ذنوبكم والله غفورالرحيم
பொருள்;- ‘’நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றி நடப்பீர்களாக, அப்பொழுதுதான், அல்லாஹ் உங்களை நேசித்து, உங்கள் குற்றங்களை மன்னிப்பான் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன் கிருபை உள்ளவன் என்று (நபியே! முஸ்லிம்களுக்கு) கூறுவீராக’’(3;31)