Moulavi MJM. Jahaany Rabbani
“ஹழ்றத் புரைதஹ் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் நபீ (ஸல்) அவர்கள் நவின்றார்கள். கப்றுகளை ஸியாறத் செய்வதை விட்டும் உங்களை நான் தடுத்திருந்தேன் இப்போது கப்றுகளை ஸியாறத் செய்யுங்கள் ஏனெனில் அதில் நல்லுபதேசம் இருக்கின்றது.”
நூல்: அபூதாவூத்
பாகம் – 02, பக்கம் – 105
மேலும் பைஹகீ என்ற கிரந்தத்தில் வருகிறது. “ஹழ்றத் அனஸ் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் நபீ (ஸல்) அவர்கள் குர்பானுடைய இறைச்சியையும் (பேரீத்தம் பழங்களைப் புளிக்கவைக்கப்பயன்படுத்திய) பாத்திரங்களையும், கப்றுகளை ஸியாறத் செய்வதையும் தடுத்திருந்தார்கள். பின் அத்தடைகளை நீக்கி அனுமதி வழங்கினார்கள். மேலும் அதுபற்றி அதிகமாகக் கூறினார்கள். இன்றும் கூறினார்கள். நான் உங்களுக்கு கப்றுகளை ஸியாறத் செய்வதைத் தடுத்திருந்தேன். பின் அதற்கு அனுமதி கிடைத்து விட்டது. இப்போது நீங்கள் கப்றுகளை ஸியாறத் செய்யுங்கள். ஏனெனில் கப்றுகளை ஸியாறத் செய்தல் உள்ளங்களை இளகச்செய்கிறது. கண்களில் கண்ணீரை பொழிய வைக்கிறது. மறுமையைநினைவூட்டுகிறது. நீங்கள் அவசியம் சென்று கப்றுகளை ஸியாறத் செய்யுங்கள்.”
நூல்: பைஹகீ
பாகம் – 04,பக்கம் – 77
மேற்கண்ட இரு ஹதீதுகளில் இருந்தும் நபீ (ஸல்) அவர்கள் கப்றுகளை ஸியாரத் செய்வதைவிட்டும் ஆரம்பகால கட்டத்தில் தடை செய்து பின் இறைவனிடம் இருந்து அதற்கான அனுமதி கிடைத்த்தன் காரணத்தாலும்,
மேலும் அதில் மனித குலத்திற்கு நல்லுபதேசம் இருப்பதாலும் அவற்றை அவசியம் ஸியாறத் செய்யுங்கள் என்று நவின்றார்கள்.
ஆகவே கப்றுகளை ஸியாரத் செய்தல் என்பது ஆதார பூர்வமாக இஸ்லாத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். இன்னும் மையவாடிகளுக்குச் சென்றால் “அஸ்ஸலாமு அலைக்கும் தார கௌமின் முஃமினீன் வஇன்னா இன்ஷா அல்லாஹு பிகும் லாஹிகூன்” என்று கப்றுகளிலுள்ள முஃமீன்களுக்கு ஸலாம் கூறும்படியும் இஸ்லாம் எம்மைப் பணிக்கின்றது.
இனி கப்றுகளை எவ்வாறு பேணுவது என்பது பற்றிக் கவணிப்போம்.
இருலோக இரட்சகர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இவ்வுலகை விட்டும் மறைந்த போது அவர்களின் புனித கப்றை கட்டியவர்கள் யார்? நபீத் தோழர்கள்தானே கட்டினர். நபீயவர்கள் ஏற்கனவே வஹ்ஹாபிகள் கூறுவது போன்று தரைக்கு மேல் உயர்ந்திருக்கம் கப்றுகளையெல்லாம் இடிக்கும்படி கூறியிருந்தால் ஸஹபாக்கள் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள்.
நபீயவர்கள் இருக்கும் போது நபீயவர்களின் உறவினர்களில் ஒருவரான உஸ்மான் பின் மழ்வூன் (றழி) அவர்கள் இவ்வுலகை நீத்த போது, அவர்களின் கப்றின் தலை மாட்டுப் பகுதியில் ஒரு கல்லை ஊன்றி, எனது சகோதரனின் கப்றுக்கு அடையாளமிடுகிறேன். இவருடைய கப்றுக்குப் பக்கத்தில் எனது உறவினர்களையும் நான் நல்லடக்கம் செய்வேன். என்பதாக நபீ (ஸல்) அவர்கள் கூறினார்கள். இது பற்றி புஹாரீ ஷரீபின் “ஹாஷியஹ்” எனும் ஓரக்குறிப்பில் இக்கல்லானது ஒருவர் தாண்டிக்குதிக்க முடியாத அளவுக்கு உயரமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
கப்றுகளுக்கு அடயாளமிட்டு அவற்றைத் தரிசிப்பதால் இறைவனுக்கு, ஏகத்துவத்துக்கு களங்கம் ஏற்படும் என்றிருந்தால் நபீயவர்கள் இதனைசெய்திருக்க மாட்டார்கள். மேலும் ஒவ்வொர் ஆண்டும் உஹதுப் போரில் வீர மரணமடைந்த தனது தோழர்களின் கப்றுகளை ஸியாரத் செய்திருக்கவுமாட்டார்கள்.
ஒரு நபீயின், அல்லது ஒரு வலீயின், கப்றுக்கு முன்னால் ஸுஜுது செய்யலாம் என ஸுன்னத் வல்ஜமாஅத் உடைய எந்த ஒரு ஆலிமும் கூறியதேயில்லை. அக்கப்றில் உள்ளவர் ஒரு நபீ அல்லது வலீயே அன்றி அவர் இறைவனல்ல என்பதை இஸ்லாமியர்களுக்கு எடுத்துக்காட்டும் வண்ணம் அக்கப்றுக்குப் பக்கத்திலேயே ஒரு பள்ளிவாயிலையும் கட்டிவைத்து குறித்த கப்றை ஸியாறத் செய்ய வருவோர் இறைவனைத் தொழுவதற்காகப் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்பதை எடுத்துக் காட்டப்படுகிறது.
இதுவரை கப்றுகளை அடையாளப்படுத்தி ஸியாறத் செய்தல் பற்றி அறிந்து கொண்டோம். இப்போது அவற்றின் மீது போர்வை போர்த்துதல் பற்றிக் கவனிப்போம்.
ஹழ்றத் உதுமான் பின் ஹானி காசிம் என்பவர் அறிவிக்கின்றார்கள் அன்னை ஆயிஷா (றழி) அவர்களிடம் சென்று அன்னையே எனக்கு றஸூல் (ஸல்) அவர்கள் மற்றும் ஸஹாபாக்களின் கப்றை ஸியாறத் செய்வதற்காகத் திறந்து காட்டுங்கள் என்று கேட்க, அன்னையவர்கள் மூன்று கப்றுகளின் மீதும் போர்த்தப்பட்டிருந்த போர்வையை அகற்றினார்கள். அப்போது அம்மூன்று கப்றுகளும் பூமியை விட்டும் மிகவும் உயரமாகவோ, அல்லது பூமியோடு பூமியாகவோ, இல்லாது நடுத்தரமான உயரத்தில் இருந்தன.
மேலும் அபூஅலீ (றழி) அவர்கள் கூறுகின்றார்கள். நபீ (ஸல்) அவர்களின் கப்று முன்னால் இருந்தது அபூபக்கர் (றழி) அவர்களின் கப்று நபீ (ஸல்) அவர்களின் தலைக்குப் பக்கத்தில் இருந்தது. இவ்வாறே உமர் (றழி) அவர்களின் கப்று அபூபக்கர் (றழி) அவர்களின் தலைக்குப் பக்கத்தில் இருந்தது.
மேற்கன்ட ஹதீதிலிருந்து கப்றுகளுக்குப் போர்வை போர்த்துதல் என்பது ஸஹாபாக்களின் காலத்திருந்து வந்தது. என்பதைப் புரிந்து கொண்டோம்.
“ சுப்யான் பின்தீனார் என்பவர் அறிவிக்கின்றார்கள் இவர்கள் . நபீ (ஸல்) அவர்களின் கப்றுஉயரமாக இருந்ததைக் கண்டதாக கூறினார்கள். அடுத்து அபூநயீம் என்பவர்கள் தனது முஸ்தக்ரஜ் எனும் நூலில் இதைவிட அதிகமாக கூறும் போது, ஹழ்றத் அபூபக்கர் மற்றும் உமர் (றழி) ஆயோரது கப்றுகளும் ஒட்டகத்தின் முதுகைப் போன்று உயரமாக இருந்ததைக் கண்டதாக கூறினார்கள். எனவே இதைக் கொண்டு கப்றுகளை ஒட்டகத்தின் முதுகைப் போன்று உயர்த்துவதே முஸ்தஹப்பான முறைஎன்பதாக ஆதாரம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இமாம் அபூஹனீபா, இமாம் மாலிக், மற்றும் முஸ்னி போன்றோரின் அகீதாவும் ஷாபிய்யாக்களின் பெரும் பான்மையோரின்அகீதாவும் இப்படித்தான் அமைந்திருந்தது. மேலும் காழீஹூஸைன் என்பவர்கள் அனைத்து தோழர்களும் இதில்தான் ஒருங்கினைத்திருந்தனர் என்பதாக ஒரு வாதத்தையே முன்னிறுத்துகிறார்கள்”
நூல் ஸீர்கான்
மேற்கண்டஆதாரங்களில் இருந்து கப்றுகளை ஸியாறத் செய்வதும் அவற்றை உயரமாகக் கட்டி அவற்றின் மீது போர்வை போர்த்துவதும் ஆதார பூர்வமாகநபீ (ஸல்) அவர்களின் காலத்திலிருந்தும், ஸஹாபாக்களின் காலத்திலிருந்தும் வந்த ஸுன்னத் ஆனநடைமுறையாகும்.
ஆகவே, நபீமார், வலீமார்களின் கப்றுகளை உயரமாகக் கட்டுதல் அவற்றின் மேல்போர்வை போர்த்துதல் அவற்றைத் தரிசிக்க செல்லல் போன்றவை இஸ்லாத்தில் ஆகுமான முஸ்தஹப்பான (விரும்பப்பட்ட) ஒன்றாகும். மேலும் அவைகளை ஸியாறத் செய்வதில் மனித குலத்துற்கு நற்போதனையும் உண்டு.
(முற்றும்)