ஸலாத்துல்முஸாபிர்
(கஸ்ரு, ஜம்உ தொழுகை)
மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ
‘ளுஹர்- அஸர்’ இவ்விரண்டையும் மற்றும் ‘மஃரிபு-இஷா’ இவ்விரண்டையும் ஒன்றின் வக்தில் மற்றொன்றை முற்படுத்தி அல்லது பிற்படுத்தி தொழுவதற்கு ஜம்உ என்று பெயர். இவைகளுக்கு 08 விதிமுறைகள் உள்ளன.
விதிமுறைகள்:
1. பயணத்தொலைவு 130 கிலோமீட்டர் (82 மைல்) அல்லது அதற்கு அதிகமாக இருக்கவேண்டும். இத்தொலை தூரத்தை மண், விண், நீர் ஆகிய மூன்றிலும் கவனத்தில் கொள்ளப்படும். விமானங்களில் பயணம்செய்து இத்தொலை தூரத்தை சில நிமிடங்களில் கடந்துசென்றாலும் கஸ்ராகவும் ஜம்உ ஆகவும் தொழ அனுமதியுண்டு.
2. பயணம் ஹலாலானதாக இருக்கவேண்டும். பாவத்திற்கான பயணம் எனில் கஸ்ரும் ஜம்உவும் தொழ முடியாது.
3. கஸ்ரும் ஜம்உம் தொழுது முடிக்கும்வரை அவர் பயணியாக இருக்கவேண்டும். பயணத்தின் இடையே ஒரு ஊரில் 04 நாட்கள்( அதாவது சென்று இறங்கும் நாளையும் அங்கிருந்து புறப்படும் நாளையும் நீக்கி) தங்கநேரிட்டால் அல்லது இவ்வாறு தங்வேண்டுமென்று நாடினால் இவர் “முகீம்” என்ற பெயரைப் பெறுகின்றார். அவர் தங்கும் 04 நாட்களிலும் கஸ்ரும் ஜம்உம் தொழ அனுமதியில்லை.
4.ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊரை நினைத்து அவர் பயணம் செய்திருக்கவேண்டும். தளபதிக்குப்பின் செல்லும் வீரர்கள், முதலாளிக்குப்பின் செல்லும் தொழிலாளிகள் போன்று எங்கு செல்கிறோம் என்று தெரியாமல் சென்றால் கஸ்ரும் ஜம்உம் தொழமுடியாது.
5. பயணியுடைய சொந்த ஊரின் எல்லையைக் கடந்திருக்கவேண்டும்.
6. வியாபாரம், உறவினரை சந்தித்தல் போன்று ஏதேனும் சில காரணங்களுக்காகவாவது பயணம் அமைய வேண்டும். எவ்வித காரணமுமின்றி ஊர் சுற்றிவருதல் எனும்நோக்கம் மட்டுமிருந்தால் கஸ்ரும் ஜம்உம் தொழமுடியாது.
7. அஸரை ளுஹர்வக்திலும், இஷாவை மக்ரிப்வக்திலும் முற்படுத்திதொழும் போது ளுஹர் தொழுது முடிப்பதற்குள் அஸரை முற்படுத்தி தொழப்போவதாகவும் மஃரிப்தொழுது முடிப்பதற்குள் இஷாவை முற்படுத்தி தொழப்போவதாகவும் நிய்யத்செய்வது அவசியமாகும்.
இதேபோன்று ளுஹரை அஸர்வக்தில் பிற்படுத்தி தொழும்போது ளுஹர்வக்து முடியும்முன் அஸருடன் ளுஹரை பிற்படுத்தி தொழுகிறேன் என்றும், மஃரிபை இஷாவக்தில் பிற்படுத்தி தொழும்போது மஃரிப்வக்து முடியும்முன் இஷாவுடன்; மஃக்ரிபை பிற்படுத்தி தொழுகிறேன் என்றும் நிய்யத்செய்து கொள்ளவேண்டும். இரண்டு பர்ழுகளையும் ஒன்று முடிந்தவுடன் மற்றொன்று என்றுதாமதமின்றித் தொழுவது அவசியமாகும்.
8. கஸ்ராகத் தொழுபவர்கள் கஸ்ரின்றி பரிபூரணமாக தொழும் இமாமை பின்தொடர்ந்து தொழுவது கூடாது.