-மௌலவீ MTM. நஸ்றுத்தீன் றப்பானீ-
முற்காலத்தில் வாழ்ந்திருந்த ஓர் அரசனின் அவையில் சூனியக்காரன் ஒருவன் இருந்து வந்தான். அவன் சூனியக்கலையில் நன்கு தேர்ச்சி பெற்றவன் வயோதிபமடைந்து விட்ட அவன் ஒருநாள் அரசனிடம் “நான் வயோதிபமடைந்து விட்டேன். விரைவில் இறந்துவிடுவேன் என்று பயப்படுகிறேன். அவ்வாறு நான் இறந்து விட்டால் என்னுடைய கலை என்னுடனேயே முடிந்துவிடும் அதனை நீங்கள் பயன்படுத்த தேவைப்படுகின்றபோது யாரும் இருக்கமாட்டார்கள். ஆகையால் அறிவுக்கூர்மையான ஓர் இளைஞனைத் தேடிக்கொண்டு வாருங்கள் அவனுக்கு என்னுடைய கலைகளைக் கற்றுக் கொடுக்கிறேன். என்று கூறினான்.
அவ்வாறே கூர்மையான அறிவுடைய வாலிபன் ஒருவனை தேடிக்கொண்டு வந்து “நீ தினந்தோறும் இங்குவந்து இவர் கற்றுத்தரும் கலைகளைக் கற்றுக்கொண்டு செல்ல வேண்டும்“ என்று அரசன் கட்டளையிட்டான். அவ்வாறே அவ்வாலிபன் தன் வீட்டில் இருந்து அந்த சூனியக்காரன் இருக்கும் இல்லத்திற்கு வந்து கலைகளைக் கற்றுக்கொண்டு வந்தான்.
வாலிபன் தன் வீட்டில் இருந்து சூனியக்காரனுடைய இல்லத்திற்கு வந்து செல்லும் வழியில் ராஹிப் என்று சொல்லக்கூடிய ஒரு மதப்போதகர் ஒருவர் இருந்தார் அவரிடம் மார்க்கம் படிப்பதற்காக சிலர் கூடியிருப்பார்கள் அவர்ஆத்ம ஞானங்களை கற்றுக்கொடுப்பார்.
அவ்வாலிபன் அவ்வழியாக சூனியக்காரனிடம் செல்லும் போதெல்லாம் அந்த ராஹிபிடம் சென்று அவர் கூறுகின்ற ஆத்ம உபதேசங்களையும் செவியேற்றுச் செல்வான். இதனால் தாமதித்து வருவதற்காக சூனியக்காரனும் வீட்டில் உள்ளவர்களும் ஏசவும் அடிக்கவும் செய்தனர்.
இச் செய்தியை ராஹிப் என்ற ஞானியிடம் அவன் தெரியப்படுத்தினான். முஸ்லிம் அல்லாத பையைன் தம்மிடத்தில் வருவதை இருவரும் கேள்வியுற்றால் இங்கு ஆத்ம ஞானம் கற்றுக்கொள்ளமுடியாதுபோய்விடும் என்பதை அறிந்த ராஹிப் அவனிடம் “நீ வீட்டுக்குச் சென்றால் சூனியக்காரன் பிற்படுத்திவிட்டான் எனக்கூறு. தாமதம் பற்றி சூனியக்காரன் கேட்டால் வீட்டில் பிற்படுத்தி விட்டார்கள் எனக்கூறு என தந்திரம் சொல்லிக்கொடுத்தார் இவ்வாறே அவன் சிலகாலம் செய்து வந்தான்.
ஒரு நாள் அவன் வரும்வழியில் ஒரு பெரிய சிங்கம் ஒன்று நின்று கொண்டு அவ்வழியே எவரும் செல்ல முடியாவண்ணம் தடுத்து நின்றது. பீதியடைந்த மக்கள் போகமுடியாமல் அங்கலாய்த்துக் கொண்டு நின்றனர். அடிக்கடி ஏற்படும் இவ்வாறான துன்பத்திற்கு விடிவுகாண முடியாமல் இருந்தசமயம் இந்த வாலிபனுக்கு ஒரு யோசனை தோன்றியது சமையவிவகாரத்தில் உண்மை புலப்பட வேண்டும் என விரும்பினான் எனக்கு சூனியம் படிப்பிக்கும் ஆசான் சிறந்தவரா ஆத்ம ஞானம் கற்பிக்கும் ராஹிப் சிறந்தவரா என அறிய வேண்டும். என எண்ணியவனாக ஒரு கல்லை எடுத்து “யா அல்லாஹ்“ இந்த ராஹிப் உன்னுடைய விடயத்தில் இந்த சூனியக்காரனை விட பிரியமானவராக இருந்தால் இந்த மிருகத்தை நீ கொலைசெய்து விடுவாயாக! என்று கூறியவனாக அக்கல்லை அந்த மிருகத்தை நோக்கி எறிந்தான் கல்பட்டவுடன் அது இறந்து விட்டது மக்கள் அவ்வாலிபனைப்புகழ்ந்து அவனுக்கு தனிப்பட்ட ஞானம் இருப்பதாக பேசிக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை றாஹிபிடம் வாலிபன் தெரிவித்தான். இதைக்கேட்ட ராஹிப் மகனே! இன்று நீ என்னை விடச்சிறந்தவனாக இருக்கின்றாய் நீ உயர்ந்த நிலையை அடைந்துள்ளாய் விரைவில் தீய சோதனைக்கு உள்ளாக்கப்படுவாய் அவ்வாறு நிகழ்கின்ற நேரத்தில் என்னைக் காட்டிக் கொடுத்து விடாதே! என்று அவனிடம் கூறினார்.
அதன் பிறகு அவ்வாலிபன் பல நோயாளிகளைக் குணப்படுத்தும் ஆற்றல் பெற்றவனாக விளங்கினான். குஷ்டரோகிகளையும் குணமடையச்செய்தான். மக்கள் சாரிசாரியாக வந்து தங்கள் நோய்களுக்கு அவனிடம் மருந்த கேட்டுச்சென்றனர்.
அவ்வூரில் அரசனுக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் இருந்தார். அவர் கண்பார்வை இழந்தவர் வாலிபனுடைய செய்தியைக்கேள்விப்பட்டு ஏராளமான வெகுமதிகள் பணங்களை எடுத்துக்கொண்டு அவனிடம்வந்து நீ என்னுடைய கண்களைப் பார்வையுடையதாக ஆக்கிவிட்டால் உனக்கு இவைகளைத் தருகிறேன் என்று கூறினார்.
அதற்கு அந்த வாலிபன் “நான் யாருக்கும் சுகமளிப்பவனல்ல சுகமளிப்பவனெல்லாம் அந்த அல்லாஹ்தான் எனவே உம்முடைய அன்பளிப்புகள் எனக்குத்தேவையில்லை நீங்கள் அல்லாஹ்வை விசுவாசம் கொண்டு ஈமான் கொள்வதாகக் கூறினால் நான் அல்லாஹ்விடத்தில் துஆச் செய்கிறேன். அவன் உமக்குப்பார்வையை அளிப்பான் என்று கூறினான். அவ்வாறே அவர் ஈமான் கொண்டார் துஆச் செய்ததும் அவருக்கு பார்வை கிடைக்கப்பெற்று சுகம் கிடைத்தது இறைவனைப் புகழ்ந்தார்.
பார்வை கிடைக்கப்பெற்ற அவர் வழக்கம் போல அரசனிடம் அருகில் அமர்ந்தார். தட்டுத்தடுமாறி வந்துஅமரும் அவர் திறந்த கண்ணோடு வந்தமர்ந்ததைப் பார்த்த அரசன் வியப்புற்று உமக்கு பார்வையை அளித்தவர் யார் எனக்கேட்டார் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பின்தான் பார்வை கிடைத்தது என்றபடியால் எனது இரட்சகன் அல்லாஹ் என்று கூறினார். எல்லாம் உனக்கு எல்லாம் உனக்கு நானாக இருக்க வேறு அல்லாஹ்வின் பெயர் கூறுகிறாயா? ஆம் எனக்கும் உமக்கும் றப்பு அல்லாஹ்தான் என்று கூற இவனுக்கு பரிகாரம் செய்தவனைக்கேட்டுத் துன்புறுத்தினான். வேதனை தாங்கமுடியாமல் வாலிபனைப்பற்றிச் சொன்னான் உடனே வாலிபனை கொண்டுவரச் செய்து நான் உன்னை சூனியம்படிக்கச் வைத்து அதன் மூலம் நோய்களைத் தீர்க்கும் வல்லமை உமக்கு கிடைக்க சமயம் மாறி துரோகமிழைத்து விட்டாய் எனநோவினை செய்தான் அவ்வாலிபன் குணம் கொடுப்பது அல்லாஹுத்தஆலாதான் என்று கூற உமது குரு யார் இதைக்கற்றுத்தந்தவர் யார் எனக்கேட்டு விடாப்பிடியாக வேதனை செய்தான்.
அதனால் அந்த றாஹிபையும் சொல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்பட றாஹிபும் கொண்டுவரப்பட்டார். அவரையும் மார்க்கத்தை விட்டுவிட வேண்டும் என துன்புறுத்தப்படவே அவர் மறுத்தார் இவ்வாலிபன் முன்பதாகவே கண்பார்வை கிடைத்தவரையும் இவரின் ஞானகுரு றாஹிபையும் சிரச்சேதம் செய்து கொண்று விட்டான். உமக்கும் இதே கதிதான் உனது மார்க்கத்தை விட்டுவிடு எனக்கூறினான். அவன் மறுத்துக் கொண்டே இருந்தான்.
ஆத்திரமடைந்த அரசன் சேவகர்களில் சிலரைஅழைத்து இவனை மலைஉச்சிக்கு கொண்டு சென்று நிற்கவைத்து உயிர் போகுமுன் உமது மார்க்கத்தை விட்டுவிடும் படி இறுதியாகக் கேளுங்கள் ஒப்புக்கொண்டால் அழைத்து வந்து விடுங்கள். இல்லையானால் மலை உச்சியில் இருந்து கீழே உருட்டிவிடுங்கள் சிதறி சாகட்டும் எனசொல்லியனுப்பினான். அவர்கள் அவ்வாலிபனை கட்டி இழுத்துக்கொண்டு மலை உச்சிக்கு கொண்டு சென்றனர். மலையில் ஏறும் போது அவ்வாலிபன் “யா அல்லாஹ்“ நீ நாடிய விதத்தில் இவர்களுடைய விடயத்தில் எனக்கு போதமானவனாக இரு றஹ்மானே! என துஆ செய்தான். அக்கணமே மலை அதிர்ந்து அழைத்து வந்த சேவகர்களும் பாக்கியில்லாமல் மலையில் இருந்து உருண்டு விழுந்து இறந்து போயினர். அவ்வாலிபன் எவ்வித ஆபத்துமின்றி அங்கிருந்து மறுபடியும் அரச சபைக்கு வந்தான். அவனை பார்த்த அரசன் உன்னுடன் வந்தவர்கள் என்னவானார்கள் என்று கேட்டான். “அல்லாஹ்“ அவர்களை அழித்து என்னைக் காப்பாற்றினான். என்று கூறினான்.
மறுபடியும் அரசன் தன் சேவகர்களில் சிலரை அழைத்து இவனைக் கொண்டு போய் ஒரு படகில் ஏற்றி நடுக்கடலில் சென்றதும் இவன் தனது மார்க்கத்தை விட்டு விட்டால் அழைத்துவாருங்கள் மறுத்தால் கடலில் தள்ளிவிடுங்கள் என்று அனுப்பிவைத்தான்.
அவர்கள் அவ்வாலிபனை ஒரு படகில் ஏற்றி அழைத்துச் சென்றனர். அவ்வாலிபன் படகில் வைத்து இறைவா நீ நாடியவிதத்தில் இவர்களுடைய விடயத்தில் எனக்கு நீ போதுமாக்கி விடுவாயாக என்று துஆச் செய்தான். அக்கணமே படகு கவிழ்ந்து வாலிபன் காப்பாற்றப்பட்டு அவர்கள் அனைவரும் மூழ்ககடிக்கப்பட்டனர்.
எவ்வித ஆபத்துமின்றி மீண்டும் அரசனிடம் வந்தான் உன்னோடு வந்தவர்கள் என்ன ஆனார்கள் என அரசன் கேட்டபோது “அல்லாஹுத்தஆலா அவர்களை அழித்து என்னைக் காப்பாற்றினான். என்று கூறினான் வாலிபன். பிறகு அந்த வாலிபன் அரசனிடம் “நான் சொல்லுகின்ற முறைப்படி செய்யாத வரை நீர் என்னைக் கொல்லமுடியாது“ என்று கூறினான்.
அது என்ன? என்றான் அரசன். ஒரு பெரிய மைதானத்தில் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்ட வேண்டும். அங்கு என்னை ஒரு மரத்தி்ல் ஏற்றி எனது அம்புக்கூட்டில் இருந்து ஒரு அம்பை எடுத்து
بسم الله ربَ الغلام
“பிஸ்மில்லாஹி றப்பில் உலாமி” இவ்வாலிபனுடைய இரட்சகனான அல்லாஹுத்தஆலாவின் திருநாமத்தால் என்று கூறி அம்பை என் மீது எறிந்தால் என்னைக் கொல்லலாம் என்று கூறினார்.
அவ்வாறே அரசன் ஒரு மைதானத்தில் நகர மக்களை எல்லாம் ஒன்று கூட்டி அவ்வாலிபனை தூக்குமேடையில் நிறுத்தி அவனுடைய அம்புக்கூட்டினுள் இருந்து ஒரு அம்பை எடுத்து வில்லில் வைத்து பிஸ்மில்லாஹி றப்பில் உலாமி என்று கூறி எய்தினான் அந்த அம்பு அவ்வாலிபனுடைய நெற்றிப்பொட்டில் பட்டது அவன் தன் கையை அப்பொட்டின் மீது வைத்தவனாக கீழே விழுந்தான் அதே இடத்தில் அவன் உயிர் பிரிந்தது.
இக்காட்சியை கண்ட அங்கிருந்த மக்கள் “இந்தவாலிபனுடைய இரட்சகனைக் கொண்டு நாங்கள் ஈமான் கொள்கிறோம். என்று மூன்று முறை சப்தமிட்டுக் கூறினார்கள். அரசன்முகத்தில் கரி பூசியதைப்போல் ஒருமித்த குரலில் அரசனே! நீ எதைப்பயந்தாயோ அது நடந்துவிட்டது. மக்கள் அனைவரும் ஏகத்துவத்தை ஏற்று ஈமான் கொண்டு விட்டார்கள் என்று கூறினார்கள். ஆத்திரமடைந்த அரசன் என்னை எதிர்த்த இப்பயலுக்கு நான் கொடுத்த தண்டனை இது வென்றால் இதைவிட பெரிய தண்டனை உங்களுக்கு என்று ஊரில் உள்ள விறகுகளை எல்லாம் சேகரித்து பாரிய நெருப்புக்கிடங்கொன்றை ஏற்படுத்தி அல்லாஹுவை ஈமான் கொண்டவர்களை நெருப்புக்கிடங்குகளுக் கண்மையில் நிறுத்தி புதிய மார்க்கத்தை விட்டு விடுகிறீர்களா என்று கேட்டு அதற்கு அவர்கள் மறுத்தால் நெருப்புக்கிடங்கில் தள்ளிவிட்டு அநியாயமாக கொலைசெய்து கொண்டிருந்தான். நெருப்புக்கு பயந்தவர்களும் ஈமானில் உறுதியில்லாதவர்களும் விடுதலையளிக்கப்பட்டனர்.
அவர்களின் ஒரு பெண் பால்குடிக்கும் தன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்தாள். நீ உன் மார்க்கத்தை விட்டு விடுகிறாயா? என்று அவளிடம் கேட்டபோது அவள் நெருப்புக்குண்டத்தையும் தன் அருமைக் குழந்தையையும் மாறிமாறிப் பார்த்துவிட்டு தன் குழந்தைக்காக ஈமானை விட்டுவிட எண்ணினாள். அப்போது அக்குழந்தை பேசியது. எனது தாயே! நீ சத்தியத்தின் மீது இருக்கின்றாய். நீ பயப்படவேண்டாம் இதைவிட பெரியநெருப்பை நான் காண்கிறேன். இந்த நெருப்பில் விழவில்லையானால் அந்த நெருப்பை நீ அணைக்க முடியாது. என்று பேசாத பச்சிளம் குழந்தை பேசியது. உடனே அப்பெண் அக்குழந்தையுடன் நெருப்புக்குண்டத்தில் வீழ்ந்து விட்டாள் இவ்வாறு ஈமானில் அதிகமானவர்கள் இருந்தார்கள். ஆக 11பேர்கள் மட்டும்தான் காப்பாற்றப்பட்டனர்.
இறை நீதி இவனை சும்மாவைக்கவில்லை திருக்குர்ஆனில் சூறத்துல் புறுஜில் இச்சம்பவத்தை மையமாகக் கொண்டு அரசனும் அவனைச்சேர்ந்தவர்களும் நெருப்புக்குண்டத்தை சுற்றி உக்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்த போதே அந்த நெருப்பு பொங்கி எழுந்து பறந்துவந்து அரசனையும் மற்றவர்களையும் நாசமாக்கிவிட்டது. என “தப்ஸீர் ஸாவீ“ எனும் கிரந்தத்தில் விளக்கவுரை வழங்கப்பட்டுள்ளது.
70 ஆண்டுக்கு முன் நடைபெற்ற இச்சம்பவத்தை றஸுலே கரீம் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக சுஹைப் (றழி) அவர்கள் கூறிய விடயம் முற்றுப்பெற்று உமர்(றழி) அவர்கள் ஆட்சியின் போது நஜ்ரான் தேசத்தில் அன்று வாழ்ந்த ஒரு மனிதர் ஒரு தேவைக்காக குழியொன்று தோண்டிக் கொண்டிருந்த போது அங்கு ஒருவாலிபரின் சடலம் இருந்தது. தன் கையை நெற்றிப்பொட்டின் மீது வைத்தவாறு இரத்தம் கசிய அவ்வாலிபனின் சடலம் இருந்தது. அவ்வாலிபனின் விரலில் இருந்த மோதிரத்தில்
ربّي اللّه றப்பியழ்ழாஹு எனது இரட்சகன் அல்லாஹ் எனும் வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.
இந்த விடயத்தை கலீபாவாக இருந்த உமர் (றழி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது அச்சடலத்தை இருந்தபடியே வைத்துவிடுங்கள். அது அப்துல்லாஹிப்னு தாமிர் எனும் இறைவிசுவாசம் கொண்டு கொல்லப்பட்ட சரித்திரமிக்க வாலிபனின் சடலம்தான் என விளக்கம் கூறினார்கள். இறைபாதையில் உயிர் நீர்த்தவர்களை மண் பாதுகாப்பாக வைத்திருக்கும் என்பதற்கு இது சான்றாகும். மேலும் உயிரை இழந்தேனும் ஈமானைக் காப்பாற்ற வேண்டும் என்பதும் எமக்குப் படிப்பினையாகும்.