Tuesday, October 8, 2024
Homeஎழுத்தாக்கங்கள்தல்கீன் ஓதுதல் பற்றி ஓர் ஆய்வு

தல்கீன் ஓதுதல் பற்றி ஓர் ஆய்வு

தொடர் – 06 …

சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ 
அல்ஹாஜ் A.அப்துர்றஊப் (மிஸ்பாஹீ) அவர்கள் 
திரை நீக்கம் 
“தல்கீன்” ஓதுவது கூடாதென்போர் மரணித்தவர்கள் மண்ணுடன் மண்ணாகிவிட்டபடியால் உயிருள்ளவர்களின் அழைப்பை அவர்கள் கேட்கமாட்டார்கள் என்போரும் தமது வாதத்துக்கு பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களை ஆதாராமாக முன்வைக்கின்றார்கள். 
وماآنت بمسمع من فى القبور 
நீங்கள் கப்றுகளில் இருப்பவர்களுக்கு கேட்கச் செய்பவர்கள் அல்லர். 
(திருக்குர்ஆன் – 35 – 22) 
إنك لاتسمع الموتى ولاتسمع الصم الدعاء اذاولوا مدبرين 
நீங்கள் மரணித்தவர்களுக்கு கேட்கச் செய்யமாட்டீர்கள் (மரணித்தவர்களுக்குக் கேட்கச் செய்ய உங்களால் முடியாது. இன்னும் செவிடர்கள் பின் காட்டிச் சென்றார்களாயின் அவர்களுக்கும் உங்கள் அழைப்பைக் கேட்கச் செய்ய மாட்டீர்கள் (அவர்களுக்கும் உங்களால் கேட்கச் செய்யமுடியாது) 
(திருக்குர்ஆன் – 27– 80) 
மேற்கண்ட திருவசனங்கள் இரண்டையும் மேலோட்டமாகப் பார்த்தால்உயிருள்ளவர்களின் அழைப்பை மரணித்தவர்கள் கேட்கமாட்டார்கள் என்றும், அவர்களின் பேச்சை விளங்கிக் கொள்ள மாட்டார்கள் என்றும் விளங்கவரும். 
அறிஞர்கள் என்று பிரசித்தி பெற்றவர்களிற் சிலர் இவ்வாறே விளங்கியுமிருந்தார்கள். 
“தல்கீன்” ஓதக் கூடாதென்றும் உயிருள்ளவர்களின் அழைப்பை மரணித்தவர்கள் கேட்கமாட்டார்கள் என்றும் கொக்கரிக்கும் கொள்கைக் குருடர்கள் மேற்கண்ட திருவசனங்கள் இரண்டையுமேதமது வாதத்துக்கு இரும்புத் துருப்பாகக்கொண்டுள்ளார்கள். இவ்விரு வசனங்களையும் வைத்துக் கொண்டே ஒற்றைக் காலில் நின்று கூச்சலிடுகின்றார்கள். 
இந்தக் கொள்கைக் குருடர்கள் மேற்கண்ட இரு வசனங்களையும் இலக்கண,இலக்கிய அடிப்படையில் ஆய்வு செய்யும் முன் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது நபி ஸல் அவர்கள்اعلم العالمينஉலகமக்களில் மிக அறிஞர் என்பதையும் علمت علم الاوّلين والآخرين.முன்னோர பின்னோர் (கொள்கைக் குருடர்கள் உட்பட) யாவரின் அறிவையும் அறிந்தவர்கள்என்பதையும், மேற்கண்ட திருவசனங்களின் தாற்பரியத்தையும் விளக்கத்தையும் அனைவரை விடவும் அதிகம் அறிந்தவர்கள் என்பதையும் புரிந்து கொள்ளுதல் வேண்டும். 
உயிருள்ளவர்களின் அழைப்பையும் பேச்சையும் மரணித்தவர்கள் கேட்கின்றார்கள் என்ற பலம் வாய்ந்த நபி மொழிக்கு “சியாறத்“ தொடர்பாக வந்துள்ள நபி மொழிகளுக்கும் மேற்கண்ட (35-22),(27-80) ஆகிய திருவசனங்கள் முரணாகமாட்டாது. 
மேற்கண்ட திருவசனங்களில் முதலாவது வசனத்தில்مسمع – முஸ்மிஉன் என்ற சொல்லும், இரண்டாவது வசனத்தில் تسمع – ” துஸ்மிஉ” என்ற சொல்லும் வந்துள்ளன. இவ்விரு சொற்களும் ஒரே சொல்லின் வேறு இரு தோற்றங்களாகும். 
இவ்விரு சொற்களும் اسمع–“அஸ்மஅ”என்ற சொல்லடியிலுள்ளவையாகும். “அஸ்மஅ“என்ற சொல்லுக்குகேட்கச் செய்தான் என்று பொருள் வரும். “ஸமிஅ“என்ற சொல்லுக்கு கேட்டான் என்று பொருள் வரும். அறபு மொழிச் சொல்லிலக்கணத்தில் “அஸ்மஅ“ என்ற சொல் “முதஅத்தீ“என்றும் “ஸமிஅ“ என்ற சொல் “லாசிம்“ என்றும் சொல்லப்படும். 
“அஸ்மஅ“ என்ற சொல்லுக்கு ஒருவன் தனது அழைப்பை அல்லது பேச்சை பிறருக்குக் கேட்கச் செய்தான் என்று பொருள் கொள்ள வேண்டும். இப்பொருள் தவிர இச்சொல்லுக்குவேறு பொருள் கிடையாது. 
இதன் முந்தின வசனத்துக்கு கப்றுகளில் உள்ளவர்களுக்கு நீங்கள் கேட்கச் செய்பவர்கள் அல்லர் என்று பொருளும், இரண்டாம் வசனத்துக்கு நீங்கள் மரணித்தவர்களுக்கு கேட்கச் செய்யமாட்டீர்கள் இன்னும் செவிடர்கள் பின்காட்டிச் சென்றார்களாயின் அவர்களுக்கு அழைப்பை கேட்கச் செய்யவுமாட்டீர்கள் என்ற பொருளும் வரும். 
“அல்இஸ்மாஉ“ கேட்கச் செய்தல் என்பது அல்லாஹ் தவிர வேறு எவருக்கும் முடிந்த காரியமில்லை. ஒருவனின் அழைப்பை அல்லது பேச்சை இன்னொருவனுக்குக் கேட்கச் செய்தல் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே முடிந்த காரியம். 
மரணித்தவர்களுக்கு மட்டுமன்றி உயிரள்ளவர்களுக்குக் கூட ஓர் அழைப்பை அல்லது பேச்சைக் கேட்கச் செய்தல் என்பது அல்லாஹ்வால் மட்டும் முடிந்ததேயன்றி வேறு எவராலும் முடிந்ததல்ல. 
மேற்கன்ட இரண்டு வசனங்கள் மூலமும் அல்லாஹ் வலியுறுத்தும் கருத்து என்னவெனில், உயிருள்ளவனால் தனது அழைப்பையும்,பேச்சையும் மரணித்தவனுக்குக் கேட்கச் செய்ய முடியாதென்பது மட்டுமேயாகும். ஏனெனில் கேட்கச் செய்தல், எட்டிவைத்தல் என்பன அல்லாஹ்வால் மாத்திரம் முடிந்தவையாகும் இது தவிர மரணித்தவனை அழைக்கக் கூடாதென்பதோ, அவர்களுக்கு அழைப்புக் கேட்காதென்பதோ அல்ல. மேற்கண்ட இரு வசனங்களிளும் இப்படியொரு கருத்தின் வாடை கூட இல்லை. 
மேற்கன்ட திருவசனம் ஒரு வைத்தியனிடம்உன்னால் இந்நோயைச் சுகப்படுத்தி வைக்க முடியாதென்று சொல்வது போன்றாகும்.ஒரு வைத்தியனால்மருந்து மட்டும்தான் கொடுக்க முடியுமேயன்றி அவனால் சுகமாக்கி வைக்க முடியாது. சுகமாக்கி வைத்தல் அல்லாஹ்வால் மட்டும் முடிந்ததாகும். ஒரு வைத்தியனிடம் உன்னால் இந்நோயைச் சுகப்படுத்த முடியாதென்று சொல்வதால்வைத்தியனிடம் மருந்து கேட்கக் கூடாது என்று கருத்து வந்து விடாது. 
இவ்வாறு தான் மேற்கண்ட திருவசனங்களின் கருத்துமாகும். 
கப்றுகளில் உள்ளவர்களுக்கு உங்களால் கேட்கச் செய்யமுடியாதென்பதாலும், மரணித்தவர்களுக்கு உங்களால் கேட்கச் செய்யமுடியா தென்பதாலும் செவிடர்கள் பின்காட்டி சென்றார்களாயின் அவர்களுக்கு அழைப்பை உங்களால் கேட்கச் செய்யமுடியா தென்பதாலும்அவர்களை அழைக்கூடாதென்ற கருத்தோ,அவர்களுடன் பேசக்கூடாதென்ற கருத்தோ அவர்கள் கேட்க மாட்டார்கள் என்ற கருத்தோ வந்து விடாது. 
உண்மை இவ்வாறிருக்க உயிருள்ளவர்களின் அழைப்பை மரணித்தவர்களால் கேடகமுடியாதென்றும் அவர்களுடன் பேச முடியாதென்றும் திருக்குர்ஆன் வசனங்களைப் பிழையாக விளங்கிக் கொண்டு தாம் சொல்வதே தூய இஸ்லாம் என்றும் இதுவே திருக்குர்ஆனினதும் ஸுன்னஹ்வினதும், வழி என்றும் சொல்வோர் சற்றுத் தெளிவு பெற வேண்டும். 
இன்னுமொரு விடயம் இங்கு மிக நுட்பமாக ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். அதாவது மேற்கண்ட இரண்டு திரு வசனங்களிலும் முந்தின வசனத்தில் வந்துள்ள من فىالقبورகப்றுகளில் இருப்பவர்கள் என்பதும், இரண்டாவது வசனத்தில் வந்துள்ள الموتىமரணித்தவர்கள் என்பதும் எதார்த்தத்தில் மரணித்தவர்களையோ, குழியிலிடப்பட்டவர்களையோ குறிக்கவில்லை. இவ்வுண்மை புரியாதோர்தான் மயக்கத்தில் மாட்டி மதியிழந்து உளறுகின்றார்கள். 
“மன்பில் குபுர்“ கப்றுகளில் இருப்பவர்கள் என்றும், “அல்மௌதா“மரணித்தவர்கள் என்றும் சுட்டப்பட்டிருப்பது “கல்பு“என்ற மனக்கண் குருடானவர்களேயன்றி எதார்த்தத்தில் மரணித்தவர்களல்லர். ஆயினும் அல்லாஹ் இப்படியோரு பாணியைக் கையாண்டிருப்பதில் ஏதோ இரகசியம் இருக்காமற் போகாது. சுருங்கக் கூறின் – மனக்கண் குருடானவர்கள் எதார்த்தத்தில் மரணிக்காதவர்களாயினும் மரணித்தவர்களுக்கு அவர்களை ஒப்பிட்டுப் பேசியிருப்பது அவர்கள் உயிரற்ற வெறும் சடலங்கள் என்பதை உணர்த்துவதற்காகவும் மனக்கண் தெளிவானவன் மட்டுமே உயிருள்ளவன் என்பதை உணரத்துவதற்காகவுமேயாகும். இது ஒருவனைச் சுட்டி இவன் மாடு போல் நல்ல மனிதன்என்றும், நாய் போல் நன்றியுள்ளவன் என்றும் சொல்வது போன்றது. மனக்கண் குருடானோரை செத்துப் போனவர்கள் எனக் கூறி அவர்களை இழிவு படுத்தி நையப்புடைத்திருக்கும் பாணி விந்தை மிகுந்தது. (விந்தை மிக்கது.) 
இதுவே திரு வசனங்கிளில் உள்ள நுட்பம். இதைச் சரியாக விளங்கிக் கொண்டால் மரணித்தவர்கள் உயிரோடுள்ளவர்களின் அழைப்பை கேட்கின்றார்களா? இல்லையா? அவர்களின் பேச்சை விளங்கிக் கொள்கின்றார்களா இல்லையா? என்ற கேள்விக்கே இடமில்லாமல் போய்விடும். இப்படியொரு சர்ச்சையும் இல்லாமல் போய்விடும். 
அறபு மொழியில் ஓதப்படும் “தல்கீன்.”அந்த மொழி தெரியாதவனுக்குப் புரியுமா?
மரணித்தவன் எந்த மொழி பேசுபவனாயினும் அறபு மொழியில் மட்டும் தல்கீன் ஓதினால் போதும் இதுவே நடைமுறையுமாகும். அவனுக்குத் தெரிந்த மொழியில் மொழி பெயர்க்க வேண்டுமென்பதோ, அங்கு கூடுகின்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக அவர்களுக்கு தெரிந்த மொழியில் மொழி பெயர்க்க வேண்டுமென்பதோ அவசியமில்லை. 
தல்கீன் ஓதுவதன் நோக்கம் அதில் கூறப்படுகின்ற விடயங்களை மரணித்தவனுக்குச் சொல்லிக் கொடுப்பதேயன்றி அங்கு கூடுகின்றவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதல்ல. ஆகையால் கூடுகின்றவர்கள் விளங்க வேண்டுமென்ற நோக்கத்தில் செயல்படத் தேவையில்லை. ஆயினும் அவர்கள் விளங்க வேண்டுமென்பதற்காக அவர்களுக்குத் தெரிந்த மொழியில் மொழி பெயர்ப்பது பிழையாகவும் மாட்டாது. 
மரணித்தவன் அறபு மொழி தெரியாதவனாயின் அவனுக்கு தல்கீன் எவ்வாறு விளங்கும்? என்ற கேள்விக்கும், அங்கு கூடி நிற்கின்ற அறபு மொழி தெரியாதவர்களுக்கு அது விளங்காமற் போவதற்கும் காரணம் என்ன? என்ற இரண்டு கேள்விக்களுக்கும் இங்கு விடை எழுதுவது பொருத்தமானது என்று நினைக்கின்றேன். 
இது ஆன்மீகத்தோடு சம்பந்தப்பட்ட விளக்கமேயன்றி பிக்ஹ்-சட்டக்கலையோடு சம்பந்தப்பட்டதல்ல. ஆகையால் சற்று ஆன்மீகத்தோடு நுழைந்து பார்ப்போம். 
றூஹ் என்றும் ஜிஸ்ம் என்றும் இரண்டு அம்சங்கள் உள்ளன. றூஹ் என்றால் உயிர் என்றும், ஆன்மா என்றும் சொல்லப்படும். ஜிஸ்ம் என்றால் உடல் என்று பொருள் வரும். இவ்விரண்டிற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. 
உடல் என்ற கூண்டில் றூஹ் என்ற பறவை இருந்தால் மட்டுமே உடல் உறுப்புக்களில் ஒவ்வொன்றும் இயங்கும். கண் பார்க்கும், காது கேட்கும், மூக்கு சுவாசிக்கும், வாய் பேசும், கை இயங்கும், கால் இயங்கும். இதே போல் ஏனைய உறுப்புக்களும் இயங்கும். 
உயிர் இருப்பது கொண்டுதான் உடல் சிறப்புடையதாகின்றது. உயிர் இன்றேல் உடலால் மட்டும் ஒன்றும் செய்து விட முடியாது. உயிர் போன பின் உடல் நாற்றம் எடுக்கும் வரைதான் அதை வைத்திருக்கவும் முடியும். நாற்றம் வந்து விட்டால் அவ்வுடலை மண்ணில் மறைக்கவே வேண்டும். அது பாசமுள்ள மனைவியின் உடலாயினும், பெற்ற தாயின் உடலாயினும் சரியே. 
உடலில் தேங்கி நிற்கும் மேற்கண்ட தன்மையுள்ள உயிர் மிக பரிசுத்தமானது. அழியாதது. எடை, நிறம் கொண்டு அளக்கவோ வருணிக்கவோ முடியாதது. சிறியது பெரியது என்று கணிக்க முடியாதது. 
இத்தன்மையிலுள்ள றூஹ் என்பது எல்லா மொழிகளையும் விளங்கிக் கொள்ளும் இயற்கை ஆற்றல் பெற்றதாகும். அதுவொரு உடலில் தங்கி இருக்கும் வரைதான் அதற்கு கட்டுப்பாடு உண்டு. அது எந்த மொழி பேசுகின்றவனின் உடலில் தங்கி உள்ளதோ அது அவ்வுடலில் தங்கி இருக்கும் வரை அந்த மொழிக்கு கட்டுப்பட்டதாக இருக்கும். அதுவோர் உடலில் தங்கி இருக்கும் வரைதான் ஒரு சப்தத்தைக் கேட்பதற்கு தூரம், திரை என்பன அதற்குத் தடையாக இருக்கும். உடலை விட்டு உயிர் பிரிந்த பின் அதற்கு எத்தடையும் கிடையாது. எந்த கட்டப்பாடும் இருக்கவும் மாட்டாது. 
இதனால்தான் பிரேதத்தை அடக்கம் செய்த பின் அதற்குச் சொல்லிக் கொடுக்கப்படுகின்ற தல்கீன் என்பதை அது கேட்கின்றது. அறபு மொழியில் சொல்லிக் கொடுக்கப்படுகின்ற விடயங்களையும் அது விளங்கிக் கொள்கின்றது. 
ஆனால் உயிரோடு உள்ள ஒருவனை குழியில் அடக்கம் செய்து விட்டு அவனை அழைத்தால் அது அவனுக்குக் கேட்காது. இதற்குக் காரணம் அவனின் றூஹ் அவனின் உடலில் கட்டுப்ப்டு இருப்பதே ஆகும். இதனால் மண் போன்ற திரையால் அவனுக்குச் சப்தத்தைக் கேட்க முடியாமல் போகின்றது. இவ்வாறுதான் உயிருள்ள ஒருவனுக்குத் தெரியாத மொழி விளங்காமல் போவதுமாகும். இதற்கும் அவனின் உயிர் உடலில் கட்டுப்பட்டு இருப்பதே காரணமாகும். 
எனவே மரணித்த ஒருவனின் றூஹ் கட்டுப்பாட்டை கடந்து விடுகின்ற படியால் அதன் இயற்கையின் படி அது எல்லா மொழிகளையும் கேட்கும் என்பதிலும், அவற்றை புரிந்து கொள்ளும் என்பதிலும் சந்தேகமில்லை. 
முடிவுரை 
وذكّر فإنّ الذّكرى تنفع المؤمنين.நீங்கள் நினைவூட்டுங்கள். ஏனெனில் நினைவூட்டுதல் விசுவாசிகளுக்குப் பயன் தரும் என்ற திருக் குர்ஆன் வசனத்தையும் இந்நூலில் எழுதப்பட்டுள்ள நபீ மொழிகளையும் புகஹாஉ எனும் சட்ட மேதைகள் தமது சட்ட நூல்களில் எழுதியுள்ளவற்றையும் ஆதாரங்களாகக் கொண்டு தல்கீன் ஓதுவது நல்ல காரியமேயன்றி அது எந்த வகையிலும் வழிகேடாகவோ, பாவச் செயலாகவோ மாட்டாது என்பதை புரிந்து கொள்ளுதல் வேண்டும். அதேபோல் தல்கீன் ஓத வேண்டுமென்று சொல்லியுள்ள இமாம் நவவீ, இமாம் இப்னு ஹஜர் போன்ற சட்ட ஆய்வாளர்களிடம் தல்கீன் கூடாதென்று சொல்லும் அண்மைக்கால அறிஞர்கள் பால் குடிக்க வேண்டுமென்பதையும் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். 
யா அல்லாஹ்! தல்கீன் ஓதுகின்ற அனைவர் மீதும் உன்னுடைய அருள் மழையைச் சொரிவாயாக! அறியாமையினால் அதை மறுப்போரின் மனக் கதவைத் திறந்து விடுவாயாக! அவர்களின் உள்ளங்களை அறிவொளி கொண்டு பிரகாசிக்கச் செய்வாயாக.!மனமுரண்டினாலும் பணவாசை, பதவி மோகங்களினாலும் அதை மறுப்போரின் உள்ளங்களில் ஹிதாயத் – நேர்வழி என்றவிதையை விதைத்து விடுவாயாக.! 
முற்றும்​

***888***888***888***888***



தொடர் – 05..

உயிருள்ளவர்களின் அழைப்பை மரணித்தவர்கள் கேட்பார்களா? 

“பத்று“ப் போரில் சுமார் 70 “காபிர்”கள் கொல்லப்பட்டனர். அவர்களில் 24 பேர்கள் குறைஷித் தலைவர்களாயிருந்தனர். நபி ஸல் அவர்கள், அவர்களை மட்டும் ஒரு குழியில் குவிக்குமாறு பணித்தார்கள். பின்னர் நபி ஸல் அவர்கள் 24 பிரேதங்களையும் நோக்கி! 
يا فلان بن فلان! يا فلان بن فلان! آيسركم آنكم آطعتم الله ورسوله؟فانا قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكمحقا فقال عمر يا رسول الله ما تكلم من اجسادلا ارواح لها فقال رسول الله صلى الله عليه وسلم والذى نفس محمد بيده ما انتم با سمع لما اقولمنهم 
இன்னான் மகன் இன்னானே! இன்னான் மகன் இன்னானே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனின் தூதருக்கும் வழிப்பட்டிருந்தால் உங்களைச் சந்தோஷப்படுத்தியிருக்குமல்லவா?நிச்சயமாக நாங்கள் எங்களின் அல்லாஹ் எங்களுக்கு வாக்களித்ததைப் பெற்றுக் கொண்டோம். உங்களின் அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்ததை பெற்றுக் கொண்டீர்களா? என்று கேட்டார்கள். அப்போது உமர் றழி அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! உயிரில்லாத வெறும் உடல்களுடன் பேசுகின்றீர்களே! என்று வியந்து கேட்டார்கள். அதற்க்கு நபி ஸல் அவர்கள் முஹம்மதுடைய உயிர் எவன் கையில் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாகநான் சொல்வதை உங்களை விட அவர்களே நன்கு கேட்கிறார்கள் என்று கூறினார்கள். 
ஆதாரம் – ஸஹீஹுல் புஹாரீ,
ஹதீஸ் இலக்கம் – 3976,பாகம் – 07 
புஹாரியில் பதிவாகியுள்ள மேற்கண்ட நபி மொழி வேறு பல ஹதீதுக் கிரந்தங்களிலும் வந்துள்ளது. அவற்றில் சில அறிவிப்புகளில் உமர் றழி அவர்கள் நபி அவர்களிடம், அவர்கள் மரணித்து மூன்று நாட்களின் பின் அவர்களை அழைக்கின்றீர்களே! அவர்களுக்கு கேட்குமா? மரணித்தவர்களுக்குக் கேட்கச் செய்ய உங்களால் முடியாதென்று அல்லாஹ் சொல்லியிருக்கின்றானே? என்று சொன்னார்கள். அதற்கு நபி ஸல் அவர்கள் முஹம்மதுடைய உயிர் எவன் கையில் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக நான் சொல்வதை நீங்கள் கேட்பதை விட அவர்களே நன்றாகக் கேட்கின்றனர். ஆயினும் அவர்கள் பதில் கூற மாட்டார்கள். 
ஆதாரம் – பத்ஹுல்பாரீ,
பக்கம் – 346 
மேற்கண்ட பலம் வாய்ந்த நபி மொழி மூலம் உயிரோடிருப்பவர்களின் அழைப்பை மரணித்தவர்கள் கேட்கின்றார்கள். விளங்கியும் கொள்கிறார்கள் என்ற உண்மை தெளிவாகின்றது. 
நுட்பம் 
இந்த நபி மொழியில் இரண்டு நுட்பங்கள் இருப்பது கவனத்திற் கொள்ள வேண்டியவையாகும். 
ஒன்று – நபி ஸல் அவர்கள் உயிரற்ற வெறும் உடல்களுடன் பேசிய போது உமர் றழி அவர்கள் வியந்தவர்களாக உயிரற்ற உடல்களுடன் பேசுகிறீர்களே என்று நபி ஸல் அவர்களிடம் கேட்டதற்கு உங்கள் போல் அவர்களும் கேட்பார்கள் என்று பதில் கூறாமல் உங்களை விட மிக நன்றாகஅவர்கள் கேட்பார்கள் என்று கூறியிருப்பது சற்று ஆழமாக ஆய்வு செய்ய வேண்டிய ஒன்றாகும். 
இரண்டு – உமர் றழி அவர்களின் கேள்விக்கு நபி ஸல் அவர்கள் சாதாரணமாக பதில் கூறாமல் அல்லாஹ் மீது சத்தியம் செய்து கூறியிருப்பதும் ஆழமாக ஆய்வு செய்ய வேண்டிய ஒன்றாகும். 
முதலாவது நுட்பத்துக்கான விபரத்தை அறபு மொழியில் ஓதப்படும் தல்கீன் அந்த மொழி தெரியாதவனுக்கு புரியுமா? என்ற தலைப்பில் எழுதுகின்றேன் அங்கே காண்க. 
ஆயினும் இரண்டாவது நுட்பத்துக்கான விளக்கத்தை மட்டும் இங்கு எழுதுகின்றேன். 
பேசுகின்ற ஒருவன் தனது பேச்சை சத்தியம் செய்து உறுதிப்படுத்திப் பேசுவதும், சத்தியம் செய்யாமல் சாதாரணமாகப் பேசுவதும் அவனின் பேச்சைக் கேட்பவனின்– முன்னிலைப்படுத்தப்பட்டவனின் மன நிலையைப் பொறுத்ததும், தனது பேச்சின் தாற்பரியத்தைப் பொறுத்ததுமேயாகும். 
பேசுகின்ற ஒருவன் தனது பேச்சு மிக முக்கியமானதென்று கேட்பவனுக்கு உணர்த்துவதற்காகவும், சத்தியம் செய்து பேசலாம் அல்லது தனது பேச்சை கேட்பவன் அதில் சந்தேகம் கொள்வான் என்று பேசுபவன் கருதினாலும் சத்தியம் செய்து பேசலாம். 
பேசுகின்றவன் மேற்கண்ட இரண்டு காரணங்களில் ஒன்றுக்காக அல்லது இரண்டு காரணங்களுக்காகவும் சத்தியம் செய்து பேசலாம். 
நபி ஸல் அவர்கள் உமர் றழி அவர்களுக்குப் கூறிய சமயம் அந்த விடயம் மிக முக்கியமானதென்பதை அவர்களுக்கு உணர்த்துவதற்காகச் சத்தியம் செய்திருக்கவும் வாய்ப்புண்டு. அதேபோல் தங்களின் பேச்சில் உமர் றழி அவர்கள் சந்தேகம் கொள்ளாமலிருப்பதற்காகச் சத்தியம் செய்திருக்கவும் வாய்ப்புண்டு. அல்லது இரண்டு காரணங்களுக்காகவும் சத்தியம் செய்திருக்க இடமுண்டு. 
முந்தின காரணம் பற்றி மிக ஆழமாக ஆய்வு செய்யத் தேவையில்லை. ஆயினும் இரண்டாவது காரணம் பற்றி சற்று ஆய்வு செய்தல் பயன் தரும். 
நபி ஸல் அவர்களின் பேச்சில் உமர் றழி அவர்களுக்குச் சந்தேகம் வருவதற்கு எந்த நியாயமுமில்லை. அவர்களுக்கு அதில் சந்தேகம் வரவும் மாட்டாது. 
ஆயினும் பின்னொரு காலத்தில் வழிகேடர்கள் இவ்வாறு தோன்றி இவ்வுண்மையை எதிர்கலாமென்பதைத் தீர்க்கதரிசனமாக அறிந்த நபி ஸல் அவர்கள் அந்த வழிகேடர்களைக் கருத்திற் கொண்டு சத்தியம் செய்து சொல்லியிருக்கலாமேயன்றி உமர் றழி அவர்களைக் கருத்திற் கொண்டு சொல்லியிருக்க மாட்டார்கள். 
மரணித்தவர்கள் உயிருள்ளவர்களின் அழைப்பைக் கேட்கின்றார்கள் என்ற உண்மையை அன்று நபி ஸல் அவர்கள் சத்தியம் செய்து சொல்லியிருந்தும் கூட அந்த வழிகேடர்கள் இன்று அதை எதிர்க்கின்றார்களென்றால்சத்தியம் செய்யாமல் சொல்லியிருந்தால் நபி ஸல் அவர்களையே அவர்கள் குறை கூறியிருப்பார்கள் என்பதில் என்ன சந்தேகம்!? 
உயிரோடுள்ளவர்களின அழைப்பை மரணித்து அடக்கம் செய்யப்பட்டவர்கள் கேட்கின்றார்கள் என்பதற்கு மேலே எழுதிக்காட்டிய புஹாரியில் பதிவு செய்யப்பட்ட நபி மொழி ஆதாரமாக இருப்பது போல் “சியாறதுல் குபூர்”கப்றுகளை தரிசித்தல் தொடர்பாக வந்துள்ள நபி மொழிகளும் ஆதாரங்களும் உள்ளன. 
நபி மொழிகள் 
அல்லாஹ்வின் தூதரே! கப்றுகளை தரிசிக்கும் போது நான் எவ்வாறு சொல்ல வேண்டும் என்று ஆயிஷஹ் றழி அவர்கள் நபி ஸல் அவர்களிடம் கேட்ட போது. 
السلام عليكم على آهل الديار من المؤمنين والمسلمين ويرحم الله المستقدمين منكم ومنا والمستاخرين وإناإن شاء الله بكم لاحقون 
என்று சொல்ல வேண்டும் என்று கூறினார்கள். 
ஆதாரம் – முஸ்லிம், 
அறிவிப்பு – ஆயிஷஹ் றழி 
அல்அக்தார் பக்கம் – 152 
நபி (ஸல்) அவர்களை மையவாடிக்குச் சென்று 
السلام عليكم دار قوم مؤمنين وإنا إن شاالله بكم لاحقون 
என்று சொல்வார்கள். 
ஆதாரம் – இப்னு மாஜஹ் ,நஸாயீ, அபுதாவூத் 
அறிவிப்பு – அபு ஹுறைறா றழி 
அல்அத்கார் பக்கம் – 152 
“கப்று” களை சியாறத் – தரிசிக்கும் ஒருவன் திருக்குர்ஆன் திக்ர் போன்றவற்றை அதிகம் செய்வதும் அந்த மையவாடியிலுள்ளவர்களுக்காவும், ஏனைய முஸ்லிம்களுக்காகவும் துஆ கேட்பதும் “ஸுன்னத்” ஆகும். அதேபோல் அதிகம் “சியாறத்”செய்வதும் நல்லடியார்கள் வலிமார்களின் “கப்று“களிடம் அதிக நேரம் – தங்கி நிற்பதும் ”ஸுன்னத்”ஆகும். 
ஆதாரம் – அல்அத்கார்,
பக்கம் – 152 
மேற்கண்ட நபி மொழிகள் மூலம் மரணித்துஅடக்கம்செய்யப்பட்டவர்கள் உயிரோடுள்ளவர்களின் அழைப்பையும் பேச்சையும் கேட்கின்றார்கள் என்பது தெளிவாக விளங்குகின்றது. இதற்கு அழைக்கப்படுவோர் வலிமார்களாக இருக்க வேண்டுமென்பது விதியல்ல. “காபிர்” உட்பட எவரும்“ கேட்பார்கள் என்பதே ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைவாதிகளின் தீர்க்கமான முடிவாகும். 
உயிரோடுள்ளவர்களின் அழைப்பைமரணித்தவர்கள் கேட்கமாட்டார்கள்என்று வைத்துக் கொண்டால்நபி ஸல் அவர்கள் “பத்ர்” யுத்தகளத்தில் குழியிடப்பட்டிருந்த இருபத்து நான்கு பேர்களின் பெயர்கள் சொல்லி அழைத்ததும் அவர்களுடன் பேசினதும் அர்த்தமற்ற வீணான செயலாகி விடும். அது மட்டுமன்றி உங்களைவிட அவர்கள் மிக நன்றாகக் கேட்கின்றார்கள் என்று நபி ஸல் அவர்கள் உமர் றழி அவர்களுக்கு சொன்னதும் அர்த்தமற்ற வீணான சொல்லாகி விடும். 
நபி ஸல் அவர்கள் சியாறங்களுக்குச் சென்று அடக்கப்பட்ட நல்லடியார்களுக்கு ஸலாம் சொன்னதும், ஸலாம் சொல்லுமாறும், கப்றுகளை “சியாறத்” செய்யுமாறும் மக்களை ஏவினதும் அர்த்தமற்ற வீணான செயலாகி விடும். 
நபி ஸல் அவர்கள் அர்த்தமற்ற வீணான எந்த ஒரு வேலையும் செய்ததற்கு ஆதாரமே இல்லை. 
எனவே மரணித்தவர்கள் உயிரோடுள்ளவர்களின் அழைப்பைக் கேட்கின்றார்கள் என்பதும், அவர்களின் பேச்சை விளங்கிக் கொள்கின்றார்கள் என்பதும் தீர்க்கமான முடிவாகி விட்டது. 
மரணித்தவர்கள் உயிரோடுள்ளவர்களின் அழைப்பைக் கேட்கின்றார்கள் என்பது உண்மையாயினும் அவர்கள் மரணித்தவர்களாயிருக்கும் நிலையில் கேட்கவில்லை என்றும் அல்லாஹ் அவர்களை அந்த நேரத்தில் உயிர்ப்பிக்கின்றான். அதனால் அவர்கள் கேட்கின்றார்களே தவிர மரணித்தவர்கள் கேட்கவில்லை என்றும் சிலர் கருத்து கூறுகின்றார்கள். இவர்களின் இக்கருத்துப் பொருத்தமற்றதாகும். ஏனெனில் மரணித்தவர்களை அல்லாஹ்உயிர்பித்த பின் அவர்கள் கேட்கின்றார்கள் என்பது சொல்ல வேண்டிய ஒன்றல்ல. அது அதிசயமுமில்லை, தத்துவமுமில்லை. அதோடு ماانتم بآسمع منهم لما اقول நான் சொல்வதை உங்களை விட அவர்களே நன்றாக்க கேட்கின்றார்கள் என்ற நபி ஸல் அவர்களின் பேச்சு அரத்தமற்றதாயும் ஆகிவிடும். 
தொடரும்……
==888==888==888==888==
தொடர் – 04..
சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ
அல்ஹாஜ் A.அப்துர்றஊப் (மிஸ்பாஹீ) அவர்கள்
தல்கீன் ஓதுகின்றவன் மரணித்தவனின் தலைப்பக்கமாக நிற்பதும், மூன்று முறை ஓதுவதும் ஸுன்னத் ஆகும்.வயது வராத சிறுவனுக்கு தல்கீன் ஓதுவதில் மாத்திரம் இமாம்களுக்கிடையில் கருத்து வேறுபாடுஇருந்து வருகின்றது. சிறுவர்களுக்கு கப்று – மண்ணறையில் கேள்வி உண்டு என்றுகூறுவோர் அவர்களுக்காக தல்கீன் ஓதுவது சுன்னத் என்றும், அவர்களுக்கு கேள்வி இல்லை என்போர் அது ஸுன்னத் இல்லை என்றும் கூறுகின்றார்கள். 
வயது வராத சிறுவனுக்கு தல்கீன் ஓத வேண்டும் என்பதற்கு -இமாம் முதவல்லீ (றஹ்) அவர்கள் பின்வரும் நபி மொழியை ஆதாரமாகக் கூறியுள்ளார்கள். 
நபி (ஸல்) அவர்கள் மகன் இப்றாஹீம் அவர்களை அடக்கம் செய்த பின் நபி (ஸல்) அவர்கள் அவருக்கு பின்வருமாறு சொல்லச் சொன்னார்கள். (அல்லாஹ் எனது இரட்சகன்எனது தந்தை அல்லாஹ்வின் திருத்தூதர் இஸ்லாம் எனது மார்க்கம் என்று சொல்) அப்பொழுது அல்லாஹ்வின் தூதரே! அவருக்கு நீங்கள் சொல்லிக் கொடுக்கின்றீர்கள். எங்களுக்கு யார் சொல்லித தருவார் என்று கேட்கப்பட்டது. அப்பொழுது, 
يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخلرة 
(விசுவாசிகளை தரிபாடான சொல் கொண்டு அல்லாஹ் இவ்வுலகிலும், மறுவுலகிலும் தரிபடுத்தி வைப்பான்) என்ற திரு வசனத்தை அல்லாஹ் அருளினான். 
இவ்வசனம் கேள்வி கேட்டவர்களுக்கு சாந்தியை ஏற்படுத்தியது. இமாம் முதவல்லீ(றஹ்) அவர்கள் தல்கீன் ஓத வேண்டும் என்பதற்கு ஆதாரமாக மேலே எழுதிக் காட்டிய நபி மொழி இன்னொரு அறிவிப்பில் பின்வருமாறு வந்துள்ளது. 
நபி (ஸல்) அவர்களின் மகன்இப்றாஹீம் அடக்கம் செய்யப்பட்ட பின் அவர்கள் அங்கு சற்று நேரம் தரித்து நின்று, அன்பு மகனே! மனம் கவலைப் படுகின்றது. கண் நீரை கொட்டுகின்றது. அல்லாஹ்வைக் கோபமாக்கும் எதையும் நாங்கள் பேசமாட்டோம். நாங்கள் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவர்கள். அவனளவிலேயே நாங்கள் மீள்வோம் என்று கூறி பின்வருமாறு சொல்லச் சொன்னார்கள். (அல்லாஹ் எனது இரட்சகன்எனது தந்தை அல்லாஹ்வின் திருத்தூதர் இஸ்லாம் எனது மார்க்கம் என்று நீ சொல்.)அங்கு நின்ற நபித் தோழர்கள் அழுதார்கள்.உமர்(றழி) அவர்களும் அழுதார்கள். உமரே! ஏன் அழுகின்றீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு உமர் (றழி) அவர்கள் நபியே! அவர் உங்கள் மகன். இவர் வயது வந்தவருமல்ல. இவரின் நன்மை தீமை எழுதப்படுவதுமில்லை. அவ்வாறிருந்தும் இவ்வாறான கட்டத்தில் அவருக்கு தவ்ஹீத் – ஏகத்துவத்தை சொல்லிக் கொடுக்கின்றீர்கள். இந்த உமரோ வயது வந்தவர். இவரின் நன்மை தீமை எழுதப்படுகின்றது. இவருக்கு ஏகத்துவத்தைச் சொல்லிக் கொடுப்பதற்கு உங்கள் போன்று யாருமில்லையென்று சொன்னார்கள். இது கேட்ட நபி (ஸல்) அவர்கள் அழுதார்கள். அவர்களுடன் ஏனைய நபித் தோழர்களும் அழுதார்கள். அப்போது மேலே சொன்ன திருவசனம் அருளப்பட்டது. அதை நபி (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டிய போது அனைவரும் அமைதியடைந்தார்கள். 
தல்கீன் ஓதுதல் நல்ல காரியம் என்பதற்கு அது தொடர்பானநபி மொழிகளும், இமாம்களின் கூற்றுக்களும் அதிகம் உள்ளன. இங்கு கூறப்பட்ட ஆதாரங்கள் மனக்கண் தெளிவான ஒருவனுக்கு போதுமானவையாகும். 
எனவே தல்கீன் ஓதுதல், ஸுன்னத் வல்ஜமாஅத் கொள்கை வாதிகளிடமும், திட்டமான அறிவு ஞானமுள்ளவர்களிடமும் “ஸுன்னத்” ஆன விடயமாகிவிட்டது. அவர்களில் ஒருவர் கூட அது கூடாத விடயமென்று சொன்னது கிடையாது. 
நூறுல் யகீன் பீ மத்ஹதித் தல்கீன் தப்ஸிறதுல் முஃமினீன் பிஸ்திஹ்பாபித் தல்கீன் என்ற நூல்களின் குறிப்புக்கள் முடிந்து விட்டன. 
அஷ்ஷெய்கு அப்துல் ஹமீத் அஷ்ஷர்வானி அஹ்மத் இப்னு காசிம் அல் அபாதி றஹ் அவர்களின் ஹவாஷிஷ் ஷர்வானீ என்ற நூலில் இருந்து தல்கீன் தொடர்பாக வந்துள்ள சில தகவல்களை இங்கு தருகின்றேன். 
பக்கம் – 206 
ஒரு மையித்தை அடக்கம் செய்த பின் ஒரு கூட்டம் அங்கு தரித்து நின்று அந்த மையித்துக்காக தரிபாட்டைக் கேட்பதும், அதன் பாவத்தை மன்னிக்குமாறு அல்லாஹ்விடம் கேட்பதும் “ஸுன்னத்” ஆகும். இதற்கு முஸ்லிம் என்ற நூலில் அம்றுப்னுல் ஆஸ் என்ற ஸஹாபி அறிவித்துள்ள நபி மொழி ஆதாரமாக உள்ளது. அவர்கள் பின்வருமாறு சொல்லியுள்ளார்கள். நீங்கள் என்னை அடக்கம் செய்த பின் ஒரு ஆடு அறுத்து அதன் இறைச்சியை பங்கு வைக்கும் நேரம் அளவு எனது கப்றை சுற்றி நில்லுங்கள். 
ஷர்வானி குறிப்பு முற்றுப் பெற்றது. 
கேரளா மாநிலத்தில் கலிகட் நகரில் இயங்கி வருகின்ற ஜாமிஅது மர்கசித்தகாபதிஸ் ஸுன்னிய்யதில் இஸ்லாமியஹ் பல்கலைக் கழக விரிவுரையாளர் அறிஞர் அஷ்ஷெய்கு முஹம்மது இஸ்மாயீல் நெல்லி கூத்தீ அவர்கள் எழுதிய “அகீத்துஸ் ஸுன்னஹ்”என்ற நூலில் இருந்து தல்கீன் தொடர்பான சில தகவல்களை இங்கு தருகின்றேன். 
பக்கம் – 549 
மிகப் பிரசித்தி பெற்ற அம்றுப்னுல் ஆஸ் என்ற நபி தாழர் தனது மரணப்படுக்கையின் போது,என்னை நீங்கள் அடக்கம் செய்து முடிந்த பின்ஓர் ஆடு அறுத்துஅதைப் பங்கு வைக்கும் நேரம் அளவு எனது கப்றை சுற்றி நில்லுங்கள் என்று சொன்னார்கள். இந்த நபி மொழி முஸ்லிம் நபி மொழிக் கோவை முதலாம் பாகம் 76ம் பக்கத்தில் வந்துள்ளது. 
அகீத்துஸ் ஸுன்னஹ் என்ற நூலின் தகவல் முடிந்து விட்டது. 
அஷ்ஷெய்கு முஹம்மத் அல் கதீப் அஷ்ஷிர்பீனீ (றஹ்) அவர்களின் முக்னில் முஹ்தாஜ் என்ற நூலில் கிதாபுல் ஜனாயிஸ் என்ற பாடத்தில் 498ம் பக்கத்தில் தல்கீன் தொடர்பாக வந்துள்ள தகவலை இங்கு தருகின்றேன். 
ஒருவனை அடக்கம் செய்த பின் ஒரு கூட்டம் அவ்விடத்தில் தரிபட்டு நின்று அவனுக்காக தரிபாட்டைக் கேட்பது ஸுன்னத் ஆகும். நபி (ஸல்) அவர்கள் மையித்தை அடக்கம் செய்த பின் அங்கு தரிபட்டு நின்று 
استغفروا لآخيكم واسثلواله التثبيت فانه الآن يسنل 
உங்களின் சகோதரனுக்காக பாவமன்னிப்பு கேளுங்கள். இன்னும் அவனுக்காக தரிபாட்டையும் கேளுங்கள். ஏனெனில் இப்பொழுது அவன் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளான் என்று சொல்வார்கள். இந்த நபி மொழியை இமாம் பஸ்ஸார் (றழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். இமாம் ஹாகிம் அவர்கள் இந்த நபி மொழியை சரிதானென்று கூறியுள்ளார்கள். நபி தோழர் அம்றுப்னுல் ஆஸ் அவர்களுக்கு மரண வருத்தம் நெருங்கிய போது, என்னை நீங்கள் அடக்கம் செய் பின், ஓர் ஆடு அறுத்து அதைப் பங்கு வைக்கும் நேரம் அளவு எனது கப்றை சுற்றி நில்லுங்கள் என்று சொன்னார்கள். 
ஒரு மையித் வயது வந்ததாக இருந்தால் அதை அடக்கம் செய்த பின் தல்கீன் ஓதுவது ஸுன்னத் ஆகும். பின்வருமாறு ஓத வேண்டும். 
يا عبدالله ابن امة الله اذكر ماخرجت عليه من دار الدنيا 
شهادة ان لآإله إلآالله وآن محمدا رسول الله . أنّ الجنة حق 
وأنّ النار حق وان البعث حق وأنّ الساعة آتية لاريب فيها 
وأنّ الله يبعث من في القبور. وانك رضيت باالله ربا 
وبا لإسلام دينا وبمحمد نبيا وبا القرآن إماماوبا لكعبة 
قبلة وبا لمؤمنين إخوانا. 
இது தொடர்பாக நபி மொழி வந்துள்ளது. 
றவ்ழா என்ற நூலில் இந்த நபி மொழி பற்றிக் கூறுகையில் இது தொடர்பாக வந்துள்ள நபி மொழி பலம் குறைந்த்தாக இருந்தாலும் சரியான வேறு சில நபி மொழிகளால் இது பலம் கூடியதாகிவிட்டது. அதோடு இந்த நபி மொழி கொண்டு தொன்று தொட்டு மக்கள் செயல் பட்டும் வந்துள்ளார்கள். 
وذكر فإن الذ كرى تنفع المومنين – الذاريات55 
நீங்கள் நினைவுபடுத்துங்கள். நிச்சயமாக நினைவுபடுத்துதல் விசுவாசிகளுக்கு பயன் தரும். 
திருக்குர்ஆன் 
ஒருவனுக்கு நினைவுட்டுவதற்காக பொருத்தமான நேரம் இந்த நேரமேயாகும். 
தவ்கீன் ஓதுகின்றவன் கப்றின் தலைப் பக்கம் அமர்ந்து கொள்ளுதல் வேண்டும். 
சிறுவனுக்கு அவன் போன்ற விதிவிலக்கில்லாத பைத்தியக்காரனுக்கும் தல்கீன் ஓதத் தேவையில்லை. ஏனெனில் இவ்விருவரும் கேள்விக் குட்படுத்தப்படமாட்டார்கள். 
இத்துடன் முக்னில் முஹ்தாஜ்என்ற நூலின் குறிப்பு முடிந்து போயிற்று 
மேற்கண்ட விபரங்கள் யாவும் துஹ்பதுல் முஹ்தாஜ் என்ற நூல் 206ம் பக்கத்திலும் வந்துள்ளது. இந்நூல் இமாம் ஷிஹாபுத்தீன் அஹ்மத் இப்னுஹஜர் (றஹ்) அவர்களால் எழுதப்பட்டது. விரிவையஞ்சி விபரமாக எழுதவில்லை. 
இன்னும் தல்கீன் தொடர்பான இமாம் நவவீ(றஹ்) அவர்களின் றவ்ழதுத் தாலிபீன் 137ம் பக்கத்திலும், இமாம் மன்ஸுர் இப்னு யுஸுப் அல் பஹுனி றஹ் அவர்களின் அர்றவ்ழுல் முறப்பஉ 132ம் பக்கதிலும் இடம் பெற்றுள்ளது. விரிவையஞ விட்டோம். 
“தல்கீன்”தொடர்பாக இமாம் ஷாபிஈ றஹ் அவர்களின் மத்ஹப் வழி சென்ற பிரசித்தி பெற்ற இமாம்களும் மஹான்களும் தமது நூல்களில் எழுதியுள்ள கருத்துக்களை இச்சிறு நூலில் சுருக்கமாக எழுதியுள்ளேன். 
இமாம்களின் கருத்தின் படி “தல்கீன்”ஓதுவது நல்ல விடயம். அதாவது அது ஸுன்னத், முஸ்தஹப்பு, மன்தூப் என்ற பெயர்களால் குறிப்பிடப்படுகின்றது.எந்தப் பெயரால் குறிப்பிடப்பட்டாலும் அது நன்மை தரக்கூடிய நல்ல காரியமென்பதே சுருக்கமான கருத்தும், தீர்க்கமான முடிவுமாகும். 
والسنة المثاب من قدفعله – ولم يعاقبامرأ ان اهمله 
“ஸுன்னத்” என்பதை ஒருவன் செய்தால் அவனுக்கு நன்மை கிடைக்கும். ஆனால் அதைச் செய்யாமல் விட்டவன் தண்டிக்கப்படமாட்டான் என்பது சட்டக்கலையின் பொது விதி. 
இப்பொது விதியை கருத்திற் கொண்டு ஆராய்ந்தால் தல்கீன் ஓதுவதால் ஓதுகின்றவனுக்கும், அதற்கு ஒத்துழைப்புவழங்குவோருக்கும் நன்மை கிடைக்கும். ஓதாவிட்டால் எவரும் தண்டிக்கப்படமாட்டார்கள். இதுவே உண்மை. 
ஆனால் மனத்தூன்மையும் ஆழமான மார்க்க ஞானமும் இல்லாத சிலர் “தல்கீன்” ஓதுதல் “பித்அத்” என்றும் இஸ்லாத்துக்கு முரணானதென்றும் கூறி பொது மக்களுக்கிடையில் குழப்பத்தையும் மனக் கசப்பையும் ஏற்படுத்தி வருகின்றார்கள். இது அர்த்தமற்ற அல்லாஹ்வுக்கும் றஸுலுக்கும் பொருத்தமற்ற ஒன்றாகும். 
எங்காவது ஓர் ஊரில் தொன்று தொட்டு தல்கீன் ஓதும் வழக்கம்இருந்து வந்தால் அதை விட்டு விடாமல் தொடர்ந்து ஓத வேண்டும். ஓதக் கூடாதென்போர் அதை வன்செயல் மூலம் தடுத்து நிறுத்த முனைதல் கூடாது. 
நமது இலங்கை நாட்டைப் பொறுத்தவரையில் “தல்கீன்“ ஓதும் வழக்கம் பட்டணம் முதல் பட்டிக்காடு வரை இருந்தே வந்துள்ளது. விரல் விட்டெண்ணக்கூடியஒரு சிலர் அது பித்அத் என்றுகூச்சிலிட்டாலும் அக்கூச்சல் பொதுமக்கள் செவியினுட் புகவில்லை. 
ஆயினும் இன்று அவ்வாறு கூச்சலிடுவோர் தமது வழிகேட்டை வேரூன்றச் செய்வதற்காக நாய்க்குமலத்தைக் காட்டி அதை வசப்படுத்துவது போலும் பேய்க்கு சாம்பிராணி போட்டு அதை ஆட வைப்பது போலும் காடையர்களுக்கு ரூபாய்களைக் காட்டித் தமக்கு ஆதரவைத் தேடிவருகின்றார்கள். இவர்கள் காசால் காடயர்களை வசப்படுத்தி கைக்குள் வைத்துக்கொண்டி
ருப்பதால் நல்லவர்களும் அப்பாவி உலமாஉகளிற் சிலரும் அவர்களுக்குப் பயந்து அவர்களின் வழிகேட்டுக்கு ஆமாசாமி போடவேண்டியதாயுள்ளது.மனதால் வெறுத்துக் கொண்டேனும் தலையசைக்க வேண்டியுள்ளது. 
கண்டதெல்லாம் பித்அத் என்றும் அனாச்சாரமென்றும் கூச்சலிடுவோர் சத்தியத்தை நிலை நாட்ட வேண்டுமெனபதற்காகவோ நபி (ஸல்) அவர்களின் “ஸுன்னத்” வழிமுறையைநிலை நாட்ட வேண்டுமெனபதற்காகவோ அவ்வாறு கூச்சலிவில்லை. மாறாக தாம் அவ்வாறு கூச்சலிடாவிட்டால். 
தமது தலைவர்களான ஷா​த்தான்களிடமிருந்து தமக்கு மாதாந்தம் வந்து சேரும் வருமானம் தடைபட்டு விடுமென்பதற்காகவும் தாம் தொடர்ந்தும் சொகுசான வாழ்வை அனுபவித்து வரவேண்டுமென்பதற்காகவுமே அவ்வாறு கூச்சலிடுகின்றார்கள்.இதுவே உன்மை. 
எனவே கண்டதை எல்லாம் பித்அத் என்றும், ஷிர்க் என்றும் கூறி கூலிக்கும் மாரடிக்கும் கூட்டத்தவர்கள் பற்றி எச்சரிக்கையாக இருந்து கொள்ளுமாறு பொது மக்களை கேட்டுக் கொள்கிறேன். சத்தியத்தில் நிலைத்திருந்தால் ரியாலும், தீனாரும், திர்ஹமும் காலடிக்குத் தானாக வரும். அல்லாஹ் எல்லா வல்லமையும் உள்ளவனே. 
தொடரும்……..

==***==***==***==***==***==

தொடர் – 03..

“தல்கீன்”ஓதுவது ஆகுமென்று கூறும் “ஸுன்னத்வல் ஜமாஅத்” அறிஞர்கள் தமது வாதத்தை நிறுவுவதற்குக் கூறும் ஆதாரங்களை இங்கு எழுதுகின்றேன்.

பத்ஹுல் முயீன்
இந் நூல் மலபார் (மலையாளம்) பொன்னானி நகரைச் சேர்ந்த, ஷாபிஈ மத்ஹபின் சட்ட மேதை அஹ்மத் ஸெய்னுத்தீன் (றஹ்) அவர்களால் தொகுக்கப்பட்டது. இந்நூல் இலங்கை, தமிழ் நாடு,மலபார் (மலையாளம்) போன்ற இடங்களிலுள்ள அறபுக்கல்லூரிகளில் பாடத்திட்டத்திலுள்ள நூலாகும். மேற்கண்ட இடங்களில் இந்நூலைப்படிக்காத அறிஞர்கள் இருக்கமாட்டார்கள். ஷாபிஈ மத்ஹபின் சட்டக்கலைக்கு இந்நூல் மிகப் பிரதான நூல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நூல் மேற்கண்ட இடங்களில் பாடத்திட்டத்தில் இதுவரை இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நூல் 162ம் பக்கத்தில் “தல்கீன்” தொடர்பாக வந்துள்ள செய்தியை இங்கு முழுமையாகத் தருகின்றேன்.
ஜிஹாத் – புனிதப் போரில் உயிர் துறந்த “ஷஹீத்” ஆக இருந்தாலும் அவருக்காகத் “தல்கீன்” ஓதுவது ஸுன்னத் ஆகும். இமாம் ஷர்கஸீ (றஹ்) அவர்கள் மாத்திரம் ஷஹீத் ஆக இருந்தால் “தல்கீன்” ஓதத் தேவையில்லை என்று கூறியுள்ளார்கள். ஜனாஸஹ் – பிரதேதத்தை அடக்கம் செய்த பின்னரே “தல்கீன்” ஓத வேண்டுமேயன்றி அதற்கு முதல் ஓதுதல் ஸுன்னத் ஆகாது.
பிரேதத்தின் முகத்திற்கு எதிராக கிப்லாவிற்குப் பின் புறம் காட்டி ஒருவன் அமர்ந்து மரணித்தவனின் தாயின் பெயருடன் அவனின் பெயரையும் சேர்த்து அவனை அழைத்து (லாயிலாஹ இல்லல்லாஹ்- அல்லாஹ் தவிர நாயன் இல்லை. அவன் தனித்தவன், அவனுக்கு இணையில்லை, முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர், சுவர்க்கம், நரகம், மரணத்தின் பின் எழுப்புதல், என்பன உண்மையானவை, மறுமை என்பது நிச்சயமானது, கப்று – மண்ணறையில் உள்ளவர்களை அல்லாஹ் எழுப்புவான் என்பதும் நிச்சயமானது என்ற நம்பிக்கையுள்ளவனாக நீ வாழ்ந்தாய். அந்த நம்பிக்கையோடு தான் உலகை விட்டும் வந்துள்ளாய். நீ இதைச் சற்று நினைத்துப் பார். அல்லாஹ் எஜமான் என்றும், இஸ்லாம் மார்க்கமென்றும், முஹம்மத் ஸல் அவர்கள் நபீ என்றும், திருக்குர்ஆன் இமாம் என்றும், “கஃபஹ்”வானது – கிப்லஹ் என்றும், விசுவாசிகள் சகோதரர்கள் என்றும் நீ ஏற்று வாழ்ந்து வந்தாய்.) என்று சொல்ல வேண்டும்.
(அஷ்ஷெய்ஹ் இப்னு ஹஜர் ஹைதமீ றஹ் தல்கீன் மூன்று முறை ஓதுவது ஸுன்னத் என்று கூறியுள்ளார்கள். தல்கீன் ஓதும் போது ஓதுபவன் அமர்ந்திருப்பதும்,கேட்போர் நின்று கொண்டிருப்பதும் மிகச் சிறந்தது. தல்கீன் ஓதுவதுபவனுக்கு மரணித்தவனின் தாயின் பெயர் தெரியுமாயின் அவனின் பெயருடன் தாயின் பெயரையும், தெரியாவிட்டால் தாயின் பெயருக்கு பதிலாக ஹவ்வாஉ என்ற பெயரையும் சேர்த்து ஓதுதல் வேண்டும்.)
(பத்ஹுல் முயீன் குறிப்பு முடிந்தது.)
அல்அத்கார்
இந்நூல் அல்இமாம் அல்ஹாபிழ் ஷெய்குல் இஸ்லாம் முஹ்யித்தீன் அபூசகரிய்யாயஹ்யா இப்னு ஷறப்அந்நவவீ (றஹ்)அவர்களால் எழுதப்பட்டது. இவர்கள் சிரியாவின் தலைநகரமான டமஸ்கஸ் நகரைச் சேர்ந்தவர்கள்.ஷாபிஈ மத்ஹப் வழி வாழ்ந்தவர்கள். ஹிஜ்ரீ 631 பிறந்து 676ல் மரணித்தவர்கள். ஷாபிஈ மத்ஹப் சட்டக்கலையில் நிகரற்ற “இமாம்” என்று அறிவுலகால் வாழ்த்தப்பட்டவர்கள். இவர்கள் கூறும் சட்டம் நூற்றுக்கு நூறுவீதம் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இவர்கள் பல சட்டநூல்கள் எழுதியுள்ளார்கள். அவையாவும் சட்டக்கலையில் மிகப்பிரசித்திபெற்று விளங்குகின்றன. அவற்றில் “அல்அத்கார்” என்ற நூலும் ஒன்று இந்த நூல் பற்றி
بع الدار واشتر به اللأذكار வீட்டைவிற்றேனும் “அல்அத்கார்” என்ற நூலை வாங்கிக் கொள் என்று அறிஞர்கள் கூறியுள்ளார்கள். இந்நூல் 148ம்பக்கத்தில்“தல்கீன்” தொடர்பாக அவர்கள் எழுதியுள்ள கருத்துக்களை இங்குதருகின்றேன்.
(ஒரு “ஜனாஸஹ்” வை அடக்கம் செய்தபின் தல்கீன் ஓதுவது “முஸ்தஹப்பு” –விரும்பத்தக்கது என்று சட்டக்கலை மேதைகள் பலர் சொல்லியுள்ளார்கள். அவ்வாறு தெளிவாக சொன்னவர்களில் காழீஹுஸைன் (றஹ்) அவர்களும்ஒருவர் இவர்கள் தங்களின் “தல்கீன்” என்ற நூலிலும், அவர்களின் தோழர் அபூஸயீத்அல்முதவல்லீ( றஹ்)அவர்கள் தங்களின்“ததிம்மஹ்” என்ற நூலிலும் தல்கீன் ஓதவேண்டும் என்று கூறியுள்ளார்கள். இன்னும் அஷ்ஷெய்குல் இமாமுஸ்ஸாதிக் அபுல்பத்ஹ் நஸ்று இப்னு இப்றாஹீம் இப்னு நஸ்ர்அல்மக்தஸீ (றஹ்)அவர்களும் அல்அல்இமாம் அபுல்காஸிம் அர்றாபியீ (றஹ்) அவர்களும் தல்கீன் ஓதுதல்“ முஸ்தஹப்பு” நல்ல காரியம் என்று தெளிவாக சொல்லியுள்ளார்கள்.
ஓதவேண்டிய தல்கீன் வசனம் நஸ்ருல் மக்திஸீ (றஹ்) அவர்களின் “அத்தஹ்தீப்” என்ற நூலில் வந்துள்ளது.
அல்இமாம் அபூ அம்ரு இப்னுஸ்ஸலாஹ் (றஹ்) அவர்களிடம் தல்கீன் பற்றிக் கேட்கப்பட்டபோது அது நல்லவிடயம், நாங்கள் தல்கீன் ஓதிவருகின்றோம் என்று தங்களின் பத்வாவில் பதில் கூறியுள்ளார்கள். குறாஸான் நாட்டைச் சேர்ந்த சட்டமேதைகளிற் பலர் இதே கருத்தைக்கூறியுள்ளார்கள். அபூஉமாமா (றஹ்)அவர்கள் அறிவித்துள்ள ஹதீது றாவீ – அறிவிப்பாளர் அடிப்படையில் பலம் குறைந்ததாயினும் வேறு ஆதாரங்கள் கொண்டும், ஷாம் – சிரியாவாசிகள் தொன்று தொட்டு தல்கீன் ஓதி வந்ததாலும் அந்தஹதீது பலம் வாய்ந்த ஹதீதாகக்கருதப்படுகின்றது.)
(அல்அத்கார்குறிப்புமுடிந்தது) 
இஆனதுத்தாலிபீன்
இந்நூல் அல்லாமதுல் பாழில் அஸ்ஸாலிஹுல்காமில் அஸ்ஸெய்யித் அபூபக்கர்(றஹ்) அவர்களால் எழுதப்பட்டதாகும். இது பாடத்திட்டத்திலுள்ள பத்ஹுல்முயீன் என்ற சட்டநூலின் விரிவுரை நூலாகும். இந்நூலை வாசிக்காத எந்த ஒரு மார்க்க அறிஞரும் இருக்கமாட்டார்.
மரணித்தவன் வயது வந்தவனாயின் அவனுக்காகத் தல்கீன் ஓதுவது “ஸுன்னத்” ஆகும். இதற்குஆதாரம் وذكّر فانّ الذكرى تنفع المومنين நபியே! நீங்கள் நினைவூட்டுங்கள். நினைவூட்டுதல் விசுவாசிகளுக்கு பயன்தரும். என்ற திருக்குர்ஆன் வசனமாகும்.
(அத்தியாயம் 51 – வசனம் 55)
ஒருமனிதன்இந்தக்கட்டத்திலேதான்நினைவூட்டல்தேவையுள்ளவனாயிருக்கின்றான்.
வயது வந்தவனுக்கு தல்கீன் ஓத வேண்டுமேயன்றி வயது வராத சிறுவர் சிறுமியருக்கு “தல்கீன்”ஓதத்தேவையில்லை. ஏனெனில் அவர்கள் மண்ணறையில் கேள்விக்குட்படாதவர்களாவர். பைத்தியக்காரன் இவ்விடயத்தில் சிறுவன் போன்றவனே. அவனுக்கு “தல்கீன்” ஓதத் தேவையில்லை. ஒருவன் வயது வந்தது முதல் பைத்தியக்காரனாய் இருந்தால் மட்டுமே அவனுக்காக “தல்கீன்”ஓதத்தேவையில்லை. ஆயினும் ஒருவன் வயது வந்த பின் ஒரு நாளேனும் பைத்தியமின்றி சுகதேகியாயிருந்து பின்னர் பைத்தியம் வந்தவனாயின் அவனுக்காக “தல்கீன்”ஓதுவது “சுன்னத்”ஆகும்.
இமாம் றமலீ (றஹ்) அவர்கள் தங்களின் “நிஹாயஹ்” என்ற நூலில் மேற்கண்டவாறே கூறியுள்ளார்கள். இவ்வாறுதான் இமாம் அத்றாயீ அவர்களும் கூறியுள்ளார்கள்.
ஒரு “ஜனாசஹ்” வை அடக்கம் செய்த பிறகுதான் “தல்கீன்” ஓதவேண்டுமேயன்றி அதற்கு முதல் ஓதுதல் பொருத்தமற்றதாகும். ஏனெனில் ஒரு “ஜனாசஹ்”வை மண்ணறையில் வைத்து அடக்கம் செய்து விட்டு அடக்கம் செய்தவர்கள் வீடு திரும்போது அவர்களின் காலடிச்சத்தத்தை அந்த “ஜனாஸா”கேட்டுக் கொண்டிருக்கும் போதே அதனிடம் இரு மலக்குகள் வருகின்றார்கள் என்ற நபீமொழியை ஆதாரமாகக் கொண்டு அடக்கம் செய்த பின்னரே “தல்கீன்”ஓதவேண்டும்.
(இஆனதுத் தாலிபீன் குறிப்பு முடிந்தது)
நூறுல் யகீன் பீமப்ஹதித் தல்கீன்
தப்ஸிறதுல் முஃமினீன் பிஸ்திஹ்பாபித் தல்கீன்.
இந்நூல் அஷ்ஷெய்ஹ் முஸ்தபா இப்னு இப்றாஹீம்அல்கரீமீ அஸ்ஸியாமீ (றஹ்) அவர்களால் தல்கீன் சம்பந்தமாக எழுதப்பட்ட நூலாகும். இதில் அவர்கள் “தல்கீன்”ஓதுவது “ஸுன்னத்”என்று பல ஆதாரங்கள் கொண்டு நிரூபித்து எழுதியுள்ளார்கள். இந்நூலில் “தல்கீன்”தொடர்பாக அவர்கள் எழுதிய விடயங்களில் முக்கியமானவற்றை மட்டும் இங்கு தொகுத்துத் தருகின்றேன். இந்நூல் கெய்ரோ அல் ஜாமிஉல் அஸ்ஹர் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஷாபிஈ மத்ஹபைச் சேர்ந்த ஈத்இப்னுல்ஹாஜ் என்பவரால் சரிபார்க்கப்பட்டது.
ஒரு “ஜனாசஹ்”வை அடக்கம் செய்யப்பட்டபின் அதற்காக “தல்கீன்”ஓதுவது அறிஞர்களின் ஏகோபித்த முடிவின் பிரகாரம் “ஸுன்னத்”ஆன விடயமாகும். இதற்கு ஆதாரமாக அறிஞர்கள்
وذكّر فإنّ الذّكرى تنفع المؤمنين
நபியே! நீங்கள் நினைவு படுத்துங்கள். ஏனெனில் நினைவு படுத்துதல் விசுவாசிகளுக்குப் பயன் தரும்.
என்ற திருக்குர்ஆன் வசனத்தைக் கூறுகிறார்கள்.
ஒருவனுக்கு ஒரு விடயத்தை எந்நேரமும் நினைவூட்டலாம். ஆயினும் ஒருவன் மரணித்து அவனை நல்லடக்கம் செய்த பின் அவனுக்கு நினைவூட்டுதல் மிகவும் பொருத்தமான ஒன்றாகும்.
தல்கீன் தொடர்பாக ஒரு நபீ மொழி உண்டு. இந்த நபீ மொழியை இமாம் தபறானீ (றஹ்) அவர்கள் தங்களின் அல்கபீர், கிதாபுத்துஆஇ என்ற நூல்களிலும், இமாம் இப்னு மந்தஹ் (றஹ்) அவர்கள் அபூ உமாமா அறிவித்ததாக தங்களின் றூஹ் என்ற நூலிலும் எழுதியுள்ளார்கள். அந்த நபீ மொழி பின்வருமாறு…
உங்கள் சகோதரர்களில் ஒருவர் மரணித்து அவனை நல்லடக்கம் செய்து குழியை மண்ணால் மூடிய பின் உங்களில் ஒருவர் அவரின் தலைப்பக்கமாக நின்று (இன்னானின் மகன் இன்னானே! என்றழைக்கவும். அவன் அதைக் கேட்பான். ஆனால் அவனால் பதில் கூறமுடியாது. பின்னர் இன்னானின் மகன் இன்னானே! என்றழைக்கவும். அவன் எழுந்து அமர்வான். பின்னர் இன்னானின் மகன் இன்னானே! என்றழைக்கவும். அப்போது அவன் எங்களுக்கு நல்வழியைச் சொல்லித் தாருங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வான். என்று சொல்வான். ஆயினும் நீங்கள் இதை உணர்ந்து கொள்ளமாட்டீர்கள். பின்னர் தல்கீன் ஓதுகின்றவன் அந்த மையித்துக்கு பின்வருமாறு சொல்ல வேண்டும். (நீ உலகில் இருந்த நேரம் அல்லாஹ் தவிர நாயன் இல்லை என்றும்,முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனின் அடியாரும்,திருத்தூதருமாவார்கள் என்று நம்பியிருந்தாய். அந்த நம்பிக்கையோடு உலகை விட்டும் நீ வெளியாகி விட்டாய். நீ அல்லாஹ்வை இரட்சகன் என்றும் இஸ்லாமை மார்க்கம் என்றும் முஹம்மத் (ஸல்) அவர்களை நபீ என்றும், திருக்குர்ஆனை இமாம் என்றும் நீ பொருந்திக் கொண்டவனாய் இருந்தாய்.)
மேற்கண்ட நபீ மொழியை ஆதாரமாகக் கொண்டே இமாம் ஷாபிஈ றஹ், இமாம் மாலிக் றஹ், இமாம் அபூஹனீபா றஹ் ஆகியோர் “தல்கீன்”ஓதவேண்டும் என்று கூறியுள்ளார்கள்.
இது தொடர்பாக இன்னொரு நபீ மொழியும் உண்டு. இந்த நபீ மொழியை றாஷித் இப்னு ஸஃத், ஹப்ஸதுப்னு ஹபீப்,ஹகீம் இப்னு உமைர் அறிவித்துள்ளதாக ஸயீத் இப்னு மன்ஸுர் (றழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். அந்த நபீ மொழி பின்வருமாறு….
ஒருவன் மரணித்து அவனை நல்லடக்கம் செய்து முடிந்த பின் அந்த மையித்துக்கு பின்வருமாறு சொல்லிக் கொடுப்பது “ஸுன்னத்”ஆகும்.
(இன்னானின் மகன் இன்னானே! லாயிலாஹ இல்லல்லாஹ் என்று நீ சொல். மூன்று முறை சொல்ல வேண்டும். பின்னர் இன்னானின் மகன் இன்னானே! எனது இறைவன் அல்லாஹ் என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் எனது நபீ என்றும், இஸ்லாம் எனது மார்க்கம், திருக்குர்ஆன் எனது இமாம் என்றும், கஃபதுல்லாஹ் எனது கிப்லா என்றும், தொழுகை என் மீது கடமை என்றும், முஸ்லிம்கள் எனது சகோதரர்கள் என்றும், இப்றாஹீம் அலை எனது தந்தை என்றும், நான் லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுன் றஸுலுல்லாஹ் என்ற கொள்கையில் வாழ்ந்து மரணித்தேன் என்றும் நீ சொல்.)
தல்கீன் ஓதுவது ”சுன்னத்“ என்று இமாம் நவவீ (றஹ்) அவர்கள் றவ்ழஹ் என்ற நூலிலும் ஷெய்குல் இஸ்லாம் (றஹ்) அவர்கள் அஸ்னல் மதாலிப், பத்குல் வஹ்ஹாப் என்ற நூல்களிலும் இமாம் இப்னு ஹஜர் (றஹ்) அவர்கள் துஹ்பஹ், பத்ஹுல் ஜவாத் என்ற நூல்களிலும் இமாம் றமலீ (றஹ்) அவர்கள் நிஹாயஹ் என்ற நூலிலும் அல்லாமஹ் அல்கதீப் (றஹ்) அவர்கள் முக்னீ என்ற நூலிலும் கூறியுள்ளார்கள். அவர்கள் அனைவரும் தல்கீன் ஓதுவது முஸ்தஹப்பு நல்ல காரியம் என்று சொல்லியுள்ளார்கள். அவர்கள் அனைவரும் கூறியுள்ள குறிப்பில் வயது வந்த சித்த சுவாதீன முள்ளவனுக்கும் ஏற்கனவே சித்த சுவாதீனமுள்ளவனாயிருந்து பின்னர் பைத்தியம் ஏற்பட்டவனுக்கும் தல்கீன் ஓத வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். துஹ்பா என்ற நூலில் இந்த விபரத்தோடு மரணித்தவன் ஷஹீத்-புனிதப் போரில் உயிர் துறந்தவனாயினும் சரியே என்ற விபரத்தையும் சேர்க்கப்பட்டுள்ளது.
“தல்கீன்“ சம்பந்தமாக வந்துள்ள நபீ மொழி பலம் குறைந்ததென்று வைத்துக் கொண்டாலும் இது ஒரு பர்ழு வாஜிபு என்று சொல்லப்படுகின்ற ஒரு கடமை பற்றியதாக இல்லாமல் “பழாயில்“ என்று சொல்லப்படுகின்ற மேலதிக வணக்கம் பற்றியதாக இருப்பதால் அறிஞர்களின் ஏகோபித்த முடிவின்படி மேலதிக வணக்கம் செய்வதற்கு அது பற்றி வந்துள்ள நபீ மொழி பலம் வாய்ந்ததாக இருக்கவேண்டுமென்பது விதியல்ல.இதன்படி தல்கீன் சம்பந்தமாக வந்துள்ள நபீ மொழி கொண்டு செயல்படுவது சிறந்ததே தவிர அது ஒரு வழிகேடாகவோ குற்றச் செயலாகவோ மாட்டாது. அல் இமாம் இஸ்ஸத்தீன் இப்னு அப்திஸ்ஸலாம் (றஹ்) அவர்கள் தல்கீன் “பித்அத்“என்ற சொல்லியிருந்தாலும் அது மேற்கண்ட விளக்கம் மூலம் மறுக்கப்படுகின்றது.
அஸ்னல் மதாலிப் என்றநூலில் இது தொடர்பாக இன்னும் மேலதிக விபரம் தரப்பட்டுள்ளது. அது பின்வருமாறு.
ஒரு மையித்தை அடக்கம் செய்யும் இடத்திற்கு வந்த ஒருவன் அடக்க வேலை முடிந்த பின் சற்று நேரம் அங்கு தரித்து நின்று மரணித்தவனுக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கேட்டு அவனுக்காக பிராத்திக்க வேண்டும். ஏனெனில் நபீ (ஸல்) அவர்கள் ஒரு மையித்தின் அடக்க வேலை முடிந்தால் அங்கு சற்று நேரம் தரித்து நின்று உங்கள் சகோதரனுக்காக பாவமன்னிப்புக் கேளுங்கள். அவருக்காக தரிபாட்டையும் கேளுங்கள். ஏனெனில் அவன் இப்போது கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளான்.என்று சொல்வார்கள்.இந்த நபீ மொழியை பலம் வாய்ந்த அறிவிப்பாளர்கள் கொண்டு இமாம் அபூதாவூத் (றஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(தகவல் – மஜ்மூஉ)
முக்னீ, றவ்ழஹ் இரண்டிலும் இன்னுமொரு விபரம் கூறப்பட்டுள்ளது (அதாவது – தல்கீன் தொடர்பாக வந்துள்ள நபீ மொழி பலம் குறைந்ததென்று வைத்துக் கொண்டாலும் அது வேறு பல பலம் வாய்ந்த நபீ மொழிகள் கொண்டு பலம் வாய்ந்த நபீ மொழியின் தரத்தைப் பெற்றுள்ளது. அதோடு பின்பற்றுவதற்குத் தகுதி பெற்றோர் வாழ்ந்த காலம் முதல் இன்று வரை “தல்கீன்“ வழக்கத்தில் இருந்தும் வருகின்றது)
அம்றுப்னுல் ஆஸ்(றழி) அவர்களுக்கு மரண வருத்தம் நெருங்கியபோது அவர்களுடன் இருந்தவர்களுக்கு பின்வருமாறு “வஸிய்யத்“ உபதேசம் செய்தார்கள். நீங்கள் என்னை அடக்கம் செய்தால் நன்றாக மண்ணால் மூடி விடுங்கள். பின்னர் ஓர் ஆடு அறுத்து அதை பங்கிடும் நேரம் அளவு அங்கு தரித்த நில்லுங்கள். நான் உங்களால் நிம்மதி பெறுவேன்.
இந்த நபீ மொழியை இமாம் முஸ்லிம் அறிவித்துள்ளார்கள்.
“தல்கீன்“ ஓதிய பின்னர் சற்று நேரம் அங்கு தரித்து நின்று முடியுமான அளவு திருக்குர்ஆனை ஓதுவது விரும்பத்தக்கது. திருக்குர்ஆன் முழுதையும் ஓதுவது மிகச் சிறந்ததாகும்.
திருக்குர்ஆனை ஓதி அதன் நன்மையை மரணித்தவனுக்கு சேர்த்து வைத்தலானது وان ليس للإنسان الا ما سعى “மனிதனுக்கு அவன் முயற்சித்ததே யன்றி வேறில்லை”. என்ற திருக்குர்ஆன் வசனத்திற்கு முரணாகாது. ஏனெனில் இத்திருவசனத்தின் “ஹுக்ம்” சட்டம் மாற்றப்பட்டுள்ளது என்று திருக்குர்ஆன் விரிவரையாளர்களின் தலைவர் இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறியுள்ளார்கள். மேற்கண்ட திருவசனத்தின் சட்டத்தை மாற்றிய திருவசனம் والحقنا بهم ذريتهم “நாங்கள் அவர்களின் சந்ததிகளை அவர்களுடன் சேர்த்து விட்டோம்” என்ற வசனமாகும். சுவர்க்கம் சென்ற பெற்றோர்களின் அருளால், பொருட்டால் பிள்ளைகளும் அவர்களுடன் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.
மேற்கண்ட திருவசனத்தைக் கொண்டு மனிதனுக்கு அவன் முயற்சி செய்ததேயன்றி வேறில்லை என்ற திருவசனத்தின் சட்டம் மாற்றப்பட்டுள்ளது. இதே போல் ஒரு நபீமொழியின் ஆதாரம் கொண்டும் இப்னு அப்பாஸ் றழி அவர்களின் கூற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒரு பெண் நபீ (ஸல்) அவர்களிடம் வந்து தனது சிறுவனைச் சுட்டி இவனுக்கு “ஹஜ்” வணக்கம் கடமையா? என்று கேட்டார். அதற்கு நபீ (ஸல்) அவர்கள் ஆம் உனக்கு கூலி உண்டு என்று சொன்னார்கள்.
இந்த நபீ மொழி கொண்டும் திருவசனத்தின் சட்டம் மாற்றப்பட்டுள்ளதென்பது தெளிவாகின்றது.
தகிய்யுத்தீன் அபுல் அப்பாஸ் (றஹ்) அவர்கள் பின்வருமாறு சொல்லியுள்ளார்கள். (ஒரு மனிதர் தான் செய்த அமல் கொண்டேயன்றிப் பயன் பெற மாட்டான் என்று நம்புவானாயின் அவன் வழி தவறிவிட்டான். அதோடு பலவகையில் இஜ்மாஉ என்ற நான்கு மூலாதாரங்களில் ஒன்றுக்கு மாறு செய்தும் விட்டான் என்று)
மரணித்தவனின் இனபந்துக்களில் நற்பண்பும், நல்லொழுக்கமும், மார்க்கப்பற்றுமுள்ளவர் ஒருவர் தல்கீன் ஓதுவதே சிறந்தது. இத்தன்மை உள்ளவர்கள் இல்லாதபோது மற்றவர்கள் ஓதலாம். இக்கருத்தை இமாம் அத்றாயீ (றஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
தொடரும்…..


==***==***==***==***==***==


தொடர் – 02…

சங்கைக்குரிய ஷெய்குனா கலாநிதி மௌவீ
அல்ஹாஜ் A. அப்துர்றஊப்(மிஸ்பாஹீ) அவர்கள்
சுருக்கம்
“தல்கீன்” ஓதுவதற்கு பலம் வாய்ந்த நபீமொழிகளில் ஆதாரம் இல்லாவிட்டாலும் “ழஈப்” பலம் குறைந்த நபீமொழிகளில் ஆதாரமிருப்பதால் பலம் குறைந்த நபிமொழிகள் கொண்டு செயல்படலாம் என்ற விளக்கத்தின் படி“தல்கீன்”ஓதலாம் என்பது தெளிவாகிவிட்டது. “தல்கீன்” தொடர்பாக வந்துள்ள பலம் குறைந்த நபீ மொழிகள் பின்னால் வரும்.
இரண்டாவது விடயம்
“பித்அத்” எல்லாம் வழிகேடாகுமா? இல்லையா?
பித்அத் என்ற சொல்லுக்கு நூதன அனுஷ்டானம் என்ற பொருள் சொல்லிக் கொண்டாலும் இதன் சரியான விபரம் என்னவெனில் நபீ(ஸல்) அவர்களின் காலத்தில் இல்லாத, அவர்களின் மறைவுக்குப் பின் ஏற்படுத்தப்பட்ட ஒரு செயல் “பித்அத்” என்று சொல்லப்படும். ஒரு சமயம் நபீ ஸல் அவர்கள்
كلّ محدثة بدعة وكلّ بدعة ضلالة وكلّ ضلالة في النّار
புதிதாக ஏற்படுத்தப்பட்டவையெல்லாம் “பித்அத்”. “பித்அத்”எல்லாம் வழிகேடு. வழிகேடு எல்லாம் நரகத்தில். என்று சொன்னார்கள். இது பலம் வாய்ந்த நபீ மொழி என்பதில் ஐயமில்லை. இந்த நபீ மொழியின் படி அவர்களின் காலத்தின் பின்னர் ஏற்படுத்தப்பட்ட எல்லாமே வழிகேடாயும், நரகத்திற்கான செயலாயும் ஆகிவிடும்.
இவ் அடிப்டையில் மௌலித் ஓதுதல், கத்ம், பாதிஹஹ் ஓதுதல், வஸீலா-உதவி தேடுதல், மத்ஹபுகளை பின்பற்றுதல், தரீகஹ்களை பின்பற்றுதல், கொடி ஏற்றுதல், கந்தூரி கொடுத்தல், புர்தஹ் ஓதுதல், அவ்லியாஉகளின் தர்ஹாக்களுக்குச் செல்லுதல், தல்கீன் ஓதுதல் போன்றவை யாவும் வழிகேடாயும், நரகத்துக்கான செயல்களாயும் ஆகிவிடும்.
மேற்கண்ட நபீ மொழியை மேற்சொன்னவாறு விளங்கிக் கொண்டவர்களே “பித்அத்”அனைத்தும் வழிகேடென்று கூறி “தல்கீன்”ஓதுவதையும், மற்றும் நபீ ஸல் அவர்களின் காலத்தின் பிறகு ஏற்படுத்தப்பட்டவற்றையும் தடுத்து வருகின்றார்கள். வழிகேடு என்றும் சொல்கிறார்கள்
இவர்கள் சொல்வது போல் “பித்அத்” எல்லாம் வழிகேடென்று வைத்துக் கொண்டால் உலகிலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் வழிகேட்டிலுள்ளார்கள் என்றே சொல்லவேண்டும். அதோடு ஒரு மனிதன் பல் துலக்குதல் முதல் பயணம் செய்கின்ற வரையிலான எல்லாக் காரியமும் “பித்அத்” ஆகிவிடும்.
இன்று வாழ்பவர்களில் அநேகர் பிறஷ், பற்பசை போன்றவற்றைக் கொண்டே பல்சுத்தம் செய்கிறார்கள். இதேபோல் இன்றுள்ளவர்களில் அநேகர் மிதிவண்டி, மோட்டார்சைக்கில், கார், வேன், விமானம் போன்றவற்றிலேயே பயணம் செய்கின்றார்கள்.
பல்சுத்தம் செய்வதற்காக பிறஷ், பற்பசை, போன்றவற்றைப் பாவிப்பதும், மேற்கண்டவற்றில் பயணம் செய்வதும் நபி ஸல் அவர்களின் காலத்தின் பிறகு ஏற்படுத்தப்பட்டவையாகும். “பித்அத்”எல்லாம் வழிகேடென்ற கருத்தின் படி மேற்கண்டவற்றைக் கொண்டு பல்சுத்தம் செய்பவர்களும், மேற்கண்டவற்றில் பயணம் செய்பவர்களும் வழிகேடர்கள் என்றாகிவிடும். “பித்அத்”எல்லாம் வழிகேடென்று சொல்பவர்களின் இக்கருத்து உலகிலுள்ள முஸ்லிம்கள் அனைவரையும் வழிடேர்களாயும், நரகவாதிகளாயும்ஆக்கும் கருத்தாகும்.
மார்க்க விடயமின்றி உலக நடைமுறை விடயங்களுக்கு இந்த நபீ மொழி பொருத்தமற்றதென்று கூறி பிறஷ், பற்பசை கொண்டு பல்சுத்தம் செய்வதும், விமானம், பஸ், கார் போன்றவற்றில் பயணம் செய்வதும் “பித்அத்”என்ற வகையில் அடங்காது என்று சொல்பவர்களும் உள்ளனர். இதன் முழுவிபரமும் “ஷரீஅத்தின் பார்வையில் பித்அத்”என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.
எனவே புதிதாக ஏற்படுத்தப்பட்டவை எல்லாம் “பித்அத்”. “பித்அத்”எல்லாம் வழிகேடு, வழிகேடெல்லாம் நரகம் செல்லும். என்ற நபீ ஸல் அவர்களின் அருள்மொழிக்கு இவர்கள் சொல்லும் விளக்கத்தை விட்டு வேறு விளக்கம் கொள்ளுதல் வேண்டும்.
مامن عام الاَوقد خصَ منه البعض 
எந்த ஒரு பேச்சாயினும் அதிலிருந்து சில விடயங்களுக்கு விதி விலக்கு உண்டு என்ற பொது விதியைக் கருத்திற் கொண்டு ஆராய்ந்தால் பித்அத் எல்லாம் வழிகேடென்று கருத்து வராது. இது عام مخصوص என்று சொல்லப்படும்.அதாவது மேற்கண்ட நபீ மொழியில் வந்துள்ள “குல்லுபித்அதின்”என்ற வசனம் எல்லா எல்லா பித்அத்துக்களையும் எடுத்துக் கொள்ளக் கூடிய ஒரு பொதுப் பேச்சாயிருந்தாலும் கூட இந்தப் பேச்சிலிருந்து சில “பித்அத்”துகள் விதிவிலக்குப் பெறும். இதற்குச் செய்ய வேண்டியது என்னவெனில் “குல்லுபித்அதின்” என்ற வசனத்தில் வந்துள்ள “பித்அதின்” என்ற சொல்லுக்கு “ஸெய்யிஅதின்” என்ற சொல்லை வலிந்துரையாகக் கொண்டு “தீயபித்அத்” அனைத்தும் வழிகேடென்று பொருள் கொள்ள வேண்டும்.
كلَ بدعة سيَئة ضلالة தீய ​“பித்அத்”அனைத்தும் வழிகேடு என்று வலிந்துரை கொண்டால் திருக்குர்ஆனுக்கும், நபீஸல் அவர்களின் அருள் மொழிக்கும் முரணான நூதன அனுஷ்டானம் மட்டுமே வழிகேடு என்று விளங்க வரும்.
வலிந்துரை அவசியமா?​
மேற்கண்ட நபீமொழிக்கு மேலே சொன்னது போல் வலிந்துரை கொள்வது மிக அவசியமானதாகும். வலிந்துரை கொள்ளாமல் “பித்அத்”எல்லாம் வழிகேடென்று கொண்டால் உலக முஸ்லிம்களில் அதிகமானவர்களை வழி கேடர்கள் என்றும், நரகவாதிகள் என்றும் சொல்ல வேண்டும். அதோடு “ஸஹாபஹ்” நபீ தோழர்களில் பலரையும் வழி கேடர்கள் என்றும், நரகவாதிகள் என்றும் சொல்ல வேண்டும். அது மட்டுமன்றி “பித்அத்” எல்லாம் வழிகேடென்று கொள்வது பல நபீ மொழிகளுக்கு முரணானதாயும் ஆகிவிடும்.
உலக முஸ்லிம்களில் அதிகமானவர்களை வழிகேடர்கள், நரகவாதிகள் என்று கருதுவதும், நபீ தோழர்களை வழிகேடர்கள், நரகவாதிகள் என்று கருதுவதும், ஒரு நபீ மொழிக்கு முரண்படும் வகையில் இன்னொரு நபீ மொழிக்கு கருத்துக் கொள்வதும் பிழையான விடயமாகும்.
أصحابي كالنَجوم بأيهم اقتديتم اهتديتم
எனது தோழர்கள் நட்சத்திரங்கள் போன்றவர்கள். அவர்களில் எவரை நீங்கள் பின்பற்றினாலும் நீங்கள் நேர்வழி பெற்று விடுவீர்கள் என்ற நபீமொழியையும்
عليكم بسنتي وسنة الخلفاء الراشدين من بعدي
எனது வழிமுறையையும், எனக்குப்பின் வருகின்ற நல்வழி பெற்ற “கலீபஹ்களின் வழிமுறையையும் பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள். என்ற நபீமொழியையும் கருத்திற்கொண்டு ஆராய்ந்தால் மேலே நான் சுட்டிக்காட்டிய முரண்பாடு தெளிவாகும்.
ஏனெனில் நபீ (ஸல்) அவர்களின் காலத்தில் “தராவீஹ்”தொழுகை “ஜமாஅத்”கூட்டாக நடத்தப்படவில்லை. “ஸஹாபஹ்”நபீ தோழர்கள் தனித்தனியாகவே தொழுது வந்தார்கள். “கலீபஹ்”உமர் (றழி) அவர்களின் காலத்தில்றமழான் மாத ஓர் இரவு அவர்கள் மதீனஹ் பள்ளிவாயலில் நுழைந்தார்கள். அங்கு வழமை போல் நபீ தோழர்கள் தனித்தனியாக “தராவீஹ்”தொழுது கொண்டிருந்ததைக் கண்ட உமர் (றழி) அவர்கள், இவர்கள் அனைவரையும் ஒரே இமாமின் கீழ் ஒன்று சேர்த்தால் சிறப்பாயிருக்கும் எனக் கூறிவிட்டு உபையிப்னு கஃப் என்ற நபீ தோழரின் தலைமையில் தறாவீஹ் தொழுகையை கூட்டாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்தார்கள். மறுநாளிரவு அவர்கள் பள்ளிவாயலில் நுழைந்த போது அனைவரும் குறித்த இமாமின் தலைமையில் தறாவீஹ் தொழுது கொண்டிருந்தது கண்டு نعمت البدعة هذه இது நல்ல “பித்அத்”என்று புகழ்ந்துரைத்து மகிழ்ச்சி அடைந்தார்கள்.
உமர் றழி அவர்கள் ஒரு “பித்அத்”செய்தது மட்டுமன்றி அதை நல்ல “பித்அத்”என்று புகழ்ந்துரைத்திருப்பது இங்கு கவனத்திற் கொள்ள வேண்டிய ஒன்றாகும். “பித்அத்”என்பதில் நல்லதும் உண்டு என்பதற்கு இது மறுக்க முடியாத ஓர் ஆதாரமே.
“பித்அத்” எல்லாம் வழிகேடென்று கூறுபவர்கள் உமர் )றழி( அவர்கள் செய்த இவ் வேலையை வழிகேடென்றும், உமர் )றழி( அவர்களை வழிகேடர் என்றும் சொல்ல வேண்டும். அதோடு நபீ தோழர்கள் பற்றியும், நல்வழி பெற்றவர்கள் என்று நபீ )ஸல்( அவர்களால் வருணிக்கப்பட்ட நான்கு கலீபஹ்கள் பற்றியும் வந்துள்ள நபீ மொழியையும் மறுக்க வேண்டும்.
ஆகையால் “பித்அத்”எல்லாம் வழிகேடு என்ற நபீ மொழிக்கு திருக்குர்ஆனுக்கும், நபீ மொழிக்கும் முரணான “பித்அத்”மாத்திரம் வழிகேடு என்று வலிந்துரை கொள்வது அவசியமாயிற்று.
كلَ محثة بدعة وكلَ بدعة ضلالةபுதிதாக ஏற்படுத்தப்பட்டவை யாவும் “பித்அத்” அவை அனைத்தும் வழிகேடு என்ற நபீ மொழியானது كلَ عين زانية எல்லாக் கண்களும் விபச்சாரம் செய்கின்றன என்ற நபீ மொழி போன்றதாகும்.
வஹ்ஹாபிகள் சொல்வது போல் வலிந்துரை கொள்ளாமல் இந்த நபீமொழியை ஆய்வு செய்தால் நபீமார், வலீமார், நல்லடியார்களின் கண்களும் விபச்சாரம் செய்கின்றன என்று கொள்ளவே வேண்டும். ஏனெனில் كلَ عين எல்லாக் கண்களும் என்ற இப் பொதுச் சொல் நபீமார்களின் கண்களையும், வலீமார், நல்லடியார்களின் கண்களையும் எடுத்துக் கொள்ளும். இது இஸ்லாமிய அடிப்படைக்கு முரணானதாகும். ஏனெனில் நபீமார், வலீமார், நல்லடியார்களின் கண்கள் பாவம் செய்யாதவையாகும். ஆகையால் இன்னோரின் கண்கள் தவிர ஏனையோரின் கண்களே விபச்சாரம் செய்கின்றன என்று கொள்வதாயின் இதற்கு வலிந்துரை கொள்ளுதல் அவசியமாகும். அதாவது
كلَ عين تنظر المرأة الأجنبيَة அந்நியப் பெண்ணைப் பார்க்கின்ற கண்கள் யாவும் என்று வலிந்துரை கொள்ள வேண்டும்.
இந்த நபீ மொழியும் மேலே சொன்ன நபீ மொழி போல் عام مخصوص என்ற பிரிவைச் சேர்ந்ததே. எல்லாக் கண்களும் என்று சொல் சொல்லப்பட்டிருந்தாலும் இப் பொதுச் சொல்லில் இருந்து சில கண்களுக்கு விதிவிலக்கு உண்டு.
இவ்வடிப்படையில் மேற்கண்ட நபீ மொழிகளை ஆய்வு செய்யாதவர்களே புதிதாக ஏற்படுத்தப்பட்டவை எல்லாம் “பித்அத்” என்றும் “பித்அத்”எல்லாம் வழிகேடு என்றும் சொல்கின்றார்கள். இவர்களின் வாதப்படி நபீமார்,வலீமார், நல்லடியார்களின் கண்களும் விபச்சாரம் செய்கின்றன என்றும், பாவம் செய்கின்றன என்றும் கொள்ளவேண்டும். இது இஸ்லாமிய “அகீதஹ்” கொள்கைக்கு முற்றிலும் முரணானதாகும் ஏனெனில் வலீமார், நல்லடியார்களை விட்டாலும், அவர்களால் பாவம் நிகழச் சாத்தியமிருந்தாலும் நபீமார்களால் எக்காரணம் கொண்டும் பாவம் நிகழவே மாட்டாது. அவர்கள் “நுபுவ்வத்” நபித்துவத்தின் முன்னும், அதன் பின்னும் “மஃஸூமீன்” பாவத்தை விட்டும் பாதுகாக்கப் பட்டவர்களேயாவர். இதுவே ஸுன்னத்வல்ஜமாஅத் கொள்கையுடையோரின் “அகீதஹ்” கொள்கையாகும்.
“பித்அத்”தொடர்பான விபரம் நான் எழுதி வெளியிட்ட மெளலித் ஓதுதல் பற்றி ஓர் ஆய்வு எனும் நூல் 38ம் பக்கம் முதல் 47ம் பக்கம் வரை விரிவாக எழுதப்பட்டுள்ளது. அங்கே காண்க!
சுருக்கம்
நபீ ஸல் அவர்களின் காலத்தின் பிறகு ஏற்படுத்தப்பட்டவை யாவும் “பித்அத்”என்ற பெயருக்குப் பொருத்தமானதாயிருந்தாலும் “பித்அத்”எல்லாம் வழிகேடென்று கொள்ளுதல் கூடாது. மாறாக திருக்குர்ஆனுக்கும், நபீ மொழிக்கும் முரணான கெட்ட “பித்அத்”மட்டுமே வழிகேடு என்று கொள்ள வேண்டும். இதன் படி “தல்கீன்” ஓதுதல் “பித்அத்”என்று வைத்துக் கொண்டாலும் அது நல்ல “பித்அத்”என்று கொள்ளவேண்டும்.
“தல்கீன்”ஓதக்கூடாதென்போர் தமது வாதத்தை நிறுவுவதற்குக் கூறிவரும் காரணங்களில் ஒன்று- “தல்கீன்” தொடர்பாக திருக்குர்ஆனிலோ, பலம் வாய்ந்த நபீ மொழியிலோ ஆதாரம் இல்லை என்பது. மற்றது- நபீ )ஸல்( அவர்களின் காலத்தின் பிறகு ஏற்படுத்தப்பட்ட ஒன்று “பித்அத்” ஆகும் என்பது. “பித்அத்” எல்லாம் வழிகேடு. வழிகேடெல்லாம் நரகத்தில். என்ற பலம் வாய்ந்த நபீ மொழியின் படி “தல்கீன்” ஓதுவதும் “பித்அத்” ஆன வழிகேடு என்பதாகும். அவர்கள் கூறும் இவ்விரு காரணங்களில் முந்தின காரணம் நான் மேலே சொல்லி வந்த விளக்கத்தின் மூலம் பிழை என்பது தெளிவாகி விட்டது. “தல்கீன்”ஓதுவதற்குப் பலமான நபீ மொழியில் ஆதாரம் இல்லாவிட்டாலும் பலம் குறைந்த நபீ மொழியில் ஆதாரமிருப்பதாலும், பலம் குறைந்த நபீ மொழி கொண்டு செயல்பட முடியுமென்று பொது விதி இருப்பதாலும் “தல்கீன்”கூடாதென்போரின் முந்தின காரணம் பிழையாகிவிட்டது.
அவர்கள் கூறும் இரண்டாவது காரணம் “பித்அத்” எல்லாம் வழிகேடு என்ற வகையில் “தல்கீன்”ஓதுவதும் வழிகேடான “பித்அத்” என்பதாகும்.
“பித்அத்” தொடர்பாக மேலே தரப்பட்டுள்ள விளக்கத்தின் படி “தல்கீன்”ஓதுவது ஒரு வகையில் “பித்அத்”என்று வைத்துக் கொண்டாலும் அது “பித்அதுன்ஹஸனதுன்” என்ற நல்ல “பித்அத்”ஆகுமேயன்றி “பித்அதுன்ஸெய்யிஅதுன்” என்ற கெட்ட “பித்அத்” ஆகாதென்பதும் தெளிவாகிவிட்டது.
“தல்கீன்”ஓதுவது ஆகுமென்று கூறும் “ஸுன்னத்வல் ஜமாஅத்” அறிஞர்கள் தமது வாதத்தை நிறுவுவதற்குக் கூறும் ஆதாரங்களை இங்கு எழுதுகின்றேன்.
(தொடரும்.)
===**==**==**==**==**==**===



தொடர் – 01 (புதிய தொடர் ஆரம்பம்)

அதிசங்கைக்குரிய ஷெய்குனா கலாநிதி மௌவீ
அல்ஹாஜ் A. அப்துர்றஊப்(மிஸ்பாஹீ) அவர்கள்
“குன்” என்ற சொல் கொண்டு குவலயம் படைத்த கோனே! ஏகனே! எல்லாம் அறிந்தவனே! நிகரில்லாதவனே! அடியான் தன்னை ஒரு சாண் நெருங்கினால் தான் அவனை ஒரு முழம் நெருங்குவதாயும் அவன் ஒரு முழம் நெருங்கினால் தான் அவன் பக்கம் ஒரு பாகம் நெருங்குவதாயும், அவன் தன் பக்கம் நடந்து வந்தால் தான் அவன் பக்கம் ஓடி வருவதாயும் “ஹதீதுக்குத்ஸீ” மூலம் வாக்களித்த வல்ல நாயனே! தனதடியான் தன்னை நினைக்குமிடத்தில் தானிருப்பதாகச் சொன்ன றஹ்மானே! நீங்கள் என்னை நினையுங்கள். நான் உங்களை நினைப்பேன் என்று திருக்குர்ஆனில் வாக்களித்த வல்ல நாயனே!நான் உன்னை புகழ்கின்றேன். என் நாவினால் மட்டுமன்றி எனது உடல்முழுவதாலும் உன்னைப்புகழ்கின்றேன். உனக்கு நன்றியும் சொல்கின்றேன். உன்னுடைய அருட்பார்வை கொண்டு என்னை ஒரு நொடி நேரம் பார்த்துவிடு. அதுவே எனக்குப் போதும். அது கொண்டு என் பாவங்கள் எரிந்து சாம்பராகி விடும். அல்ஹம்துலில்லாஹ்.
யாறஸூலல்லாஹ்! யாஹபீபல்லாஹ்! யாறஹ்மதன்லில் ஆலமீன்! யாஷபீஅல் முத்னிபீன்! யாஇமாமல் அன்பியாயிவல்முர்ஸலீன்! யாஇமாமல் முத்தகீன வல்முவஹ்ஹிதீன்! யாஸெய்யிதல் ஆலம்! யாஅதா அல்ஹக்! உங்கள் போல் ஒரு சிருட்டி நான் வாழ்வில் அறிந்ததில்லை. உங்கள் போல் ஒரு நபீயும் இப்புவியில் தோன்றவில்லை. “யாஷபீஅல் முத்னிபீன்”பாவிகளுக்காய்ப் பரிந்துரைக்கும் பயகம்பரே! மறுமையில் எனக்காகப் பரிந்துரைப்பீர்களா? கைதந்து காப்பீர்களா? ஒவ்வொரு நபீயும் யாநப்ஸீ – யாநப்ஸீ என்னைக்கார் என்னைக்கார் என்று சொல்லும் வேளையில் யாஉம்மதீ – யாஉம்மதீ எனது சமூகம் கார் – எனது சமூகம் கார் என்று குரல் கொடுக்கும் கண்ணியநபீயே! பாவம் தோய்ந்த நாவால் உங்கள் மீது ஸலவாத் –ஸலாம் சொல்ல நான் தகுதியற்றவன். என் நா நாணுகின்றது. ஆகையால் அந்தப்பொறுப்பை அல்லாஹ்விடம் ஒப்படைக்கின்றேன். அல்லாஹூம்ம ஸல்லிவஸல்லிம் அலாஹபீபிக்க ஸெய்யிதினா முஹம்மதின் வஅலா ஆலிஹீ வஅஸ்ஹாபிஹீ அஜ்மயீன். 
உள்ளே நுழையுமுன் 
காத்தான்குடி ஊர்வீதியில் வசிக்கும் சகோதரர் எம்.எல்.எம் இஸ்மாயீல் அவர்கள் 14.01.2005 அன்று என்னிடம் வந்து, ‘எனது சகோதரி மரணித்த போது ஊர் வீதியிலுள்ள சின்னப் பள்ளிவாயலில் “ஜனாசஹ்” தொழுகை நடாத்தி ஜாமிஉள்ளாபிரீன் மையவாடியில் நல்லடக்கம் செய்தோம். அடக்கப்பணிகளை மேற்கொண்ட மௌலவி அவர்கள் வழமையாக “ஜனாசஹ்” வுக்கு ஓதப்படுகின்ற “தல்கீன்” ஓதவில்லை. இது எனக்கும், எனது உறவினருக்கும் பெருங் கவலையையும், வேதனையையும் தந்தது. அதோடு எனது அயலவர்களும் இது பற்றிக் குறைபட்டுக் கொண்டனர். பின்பு ஜாமியுள்ளாபிரீன் பள்ளிவாயலின் தலைவர் அவர்களை நான் கண்டு இது பற்றிக் கூறியபோது இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு தனக்கு ஒரு கடிதம் தருமாறு கேட்டுக்கொண்டார். நான் ஒரு கடிதம் கொடுத்தேன். காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அதிபர் அவர்களைச் சந்தித்து அவர்களிடமும் இவ்விவரத்தைக் கூறினேன். அவர்களும் நடவடிக்கை எடுப்பதற்காகத் தனக்கு ஒரு கடிதம் தருமாறு கேட்டார்கள். அவர்களுக்கும் ஒரு கடிதம் கொடுத்தேன். பின்னர் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அவர்களைக் கண்டு அவர்களிடமும் இது பற்றி முறையிட்டேன். அவர்களும் தனக்கு ஒரு கடிதம் தருமாறு கேட்டார்கள். அவர்களுக்கும் ஒரு கடிதம் கொடுத்துள்ளேன். இறுதியாக உங்களுக்கும் ஒரு கடிதம் எழுதிக் கொண்டு வந்துள்ளேன்.’ என்று கூறிக் கடித்தைத் தந்தார்.உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் என்னைக் கேட்டுக் கொண்டார். காத்தான்குடி உலமா சபையும்,ஜாமிஅதுல் பலாஹ் ஹஸ்றத்மார்களும் இதற்குத் தகுந்த பதில் கொடுப்பார்கள் என்று 14.01.2006 வரை சரியாக ஒரு வருட காலம் பொறுத்திருந்து பார்த்தேன். ஒரு பதிலும் வெளிவரவில்லை. வேலை காரணமாக அவர்கள் பதில் கொடுக்காமல் விட்டுருக்கலாம், அல்லது மறந்திருக்கலாமென்று அவர்கள் மீது நல்லெண்ணம் கொண்டவனாக“தல்கீன்” ஓதுதல் தொடர்பாக சட்டக் கலை நூல்களிருந்து ஆதாரங்கள் திரட்டி ஒரு தொகுப்பு எழுதி வெளியிட்டால் கேள்விகேட்ட சகோதரரும், ஏனையோரும் பயன்பெறுவார்கள் எனக் கருதி இத் தொகுப்பை எழுதி வெளியிடுகிறேன். 
என்னுடைய அறுபத்துமூன்று வருட வாழ்க்கையில் நான் பிறந்து வாழ்த்து கொண்டிருக்கிகின்ற காத்தான்குடியில் மூன்று “ஜனாசஹ்” கள் மட்டும் “தல்கீன்” ஓதாமல் அடக்கம் செய்யப்பட்டது எனக்கு தெரியும். இவ்வாறு செய்தவர்கள் கூட அண்மைக் காலத்தில் மௌலவி பட்டம் பெற்ற சிலரும், சஊதி நாட்டில் படித்தவர்களுமேயாவர். காத்தான்குடியில் இமாம்கள் போல் திறமையும், அறிவு முதிர்ச்சியும், அனுபவமும் உள்ள பலர் இருந்துங்கூட அவர்களில் ஒருவர் கூட தல்கீனுக்கு எதிராகக் குரல் கொடுத்ததில்லை. மாறாக அனைவரும் “தல்கீன்” ஓதியே ஆயிரக்கணக்கான “ஜனாசஹ்” கள் அடக்கம் செய்து வந்துள்ளார்கள். “தல்கீன்” ஓதாமல் கால்நடைகளைக் குழியிலிட்டுப் புதைப்பதுபோல் “ஜனாசஹ்” களைப் புதைக்கும் நோய் அல்லது பைத்தியம் சமீபத்தில் பரவியதேயாகும். அல்லாஹ்வின் பேரருளாலும், அவ்லியாஉகளின் பறக்கத்தாலும் மட்டுமே இந்நோய் சுகமடைய வாய்ப்புண்டே தவிர இதற்கு மருந்து மாத்திரை எதுவுமே இல்லை.பிறவியில் முடம் பேய்க்குப் பார்த்துத் தீராது. இத்தொகுப்பில் நான் எழுதும் சட்டங்கள் யாவும் ஷாபிஈ மத்ஹபைத் தழுவியதாகவே இருக்கும். இந்த மத்ஹபில் மிகப் பிரசித்தி பெற்ற இமாம்களால் எழுதப்பட்ட ஹவாஷிஷ்ஷர்வானீ, அகாயிது ஸுன்னஹ், முக்னில் முஹ்தாஜ், துஹ்பதுல் முஹ்தாஜ், றவ்ழதுத்தாலிபீன், அர்றவ்ழுல்முறப்பவு, உம்ததுஸ்ஸாலிக், பத்ஹுல்முயீன்-இஆனதுத்தாலிபீன், ஜவ்ஜரீ, ஷர்ஹுல்மஹல்லி, அல்பாஜுரீஅலாஷரஹிப்னிகாஸிம் போன்ற சட்டநூல்களிருந்து ஆதாரங்கள் எடுத்துள்ளேன். 
இத் தொகுப்பை வாசிக்கும் மார்க்க அறிஞர்கள், அறபுக்கல்லூரி அதிபர்கள், உஸ்தாதுமார்கள் முப்திகள் பிழை இருக்கக் கண்டால் என்னை நேரில் கண்டு அல்லது கடிதம் மூலம் எனக்கு அறிவித்தால் பிழையைத் திருத்திக் கொள்ள நான் ஆயத்தமாயுள்ளேன். ஆயினும் “லாமத்ஹப்”காரர்களின் கருத்துக்களை எற்றுக்கொள்ள நான் தயாராக இல்லை. இவர்களுடன் பேசி அல்லது விவாதித்து எனது நேரத்தை வீணாக்கவும் நான் விரும்பவில்லை. 
ஷரீஅத்தின் பார்வையில் தல்கீன் 
“தல்கீன்” என்ற இச்சொல்லுக்கு சொல்லிக் கொடுத்தல் என்ற பொருள் வரும். “மையித்” பிரேதத்தை நல்லடக்கம் செய்தபின் ஒருவன் அதன் தலைப் பக்கம் அமர்ந்து பின்வரும் விடயங்களை அதற்குச் சொல்லிக் கொடுப்பதற்கு “தல்கீன்” ஓதுதல் என்று சொல்லப்படும். அந்த விடயங்கள் அடங்கிய அறபுமொழியிலுள்ள ஓதலும், அதன் மொழி பெயர்ப்பும் பின்னால் வரும் “தல்கீன்” ஓதும் வழக்கம் இலங்கை நாட்டைப் பொறுத்தவரை பெரும் பட்டணங்கள் முதல் சிறிய குக் கிராமங்கள் வரை இருந்து வந்துள்ளது. இவ் வழக்கத்தை அவ்வக்காலத்தில் வாழ்ந்த மார்க்க அறிஞர்களே செய்து வந்துள்ளார்கள். அவர்களில் எந்த ஓர் அறிஞன் கூட எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இவ் வழக்கம் இஸ்லாமுக்கு முரணானதென்று சொன்னதுமில்லை, எழுதியதுமில்லை, இவ் வழக்கத்தைக் கைவிட்டதுமில்லை. சுருங்கச் சொன்னால் இது ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகக் கருதப்படவே இல்லை. எனினும் அண்மைக் காலம் தொட்டு இவ்வழக்கம் குறைந்து வருவதைக் காணமுடிகின்றது. தெளிவாகச் சொன்னால் வஹ்ஹாபிய வழியிற் செல்வோர்களே இதற்குக் காரணர்களாக உள்ளனர். “தல்கீன்” ஓதுவதற்கு ஆதாரம் இல்லை என்றும், ஆதாரமில்லாதது “பித்அத்”என்றும் “பித்அத்”எல்லாம் வழிகேடு என்றும் கூறி இவ்வழக்கத்தைத் தடுத்து வருகின்றார்கள். ஆயினும் வஹ்ஹாபியக் கொள்கையை எதிர்த்துக் கொண்டிருக்கும் “ஸுன்னத்வல்ஜமாஅத்” கொள்கை வழி செல்லும் நல்லடியார்களான மார்க்க அறிஞர்கள்இதற்கு ஆதாரமுண்டு என்று கூறுகின்றார்கள். 
இரு பிரிவினர்களும் மார்க்க அறிஞர்கள் என்ற போர்வையிலிருந்து கொண்டு எதிரும் புதிருமான கருத்துக்கள் கூறுவதால் “அவாமுன்னாஸ்” மாரக்க ஞானமில்லாத பொதுமக்கள் அறிஞர்களில் யாரை ஏற்பது? யாரை எறிவது? என்று செய்வதறியாமல் நிலைகுலைந்து நிற்கின்றார்கள். “தல்கீன்” ஓதலாம் என்று கூறுபவர்களின் பின்னால் ஒரு கூட்டமும், அது கூடாதென்று கொக்கரிப்பவர்கள் பின்னால் இன்னொரு கூட்டமும் நின்று கொண்டு வாதப்பிரதிவாதங்களிலும், சண்டைசச்சரவுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். 
எனவே “தல்கீன்” ஓதக்கூடாதென்று கூறுவோர் தமது வாதத்திற்கு முன்வைக்கும் ஆதாரங்களையும் அவற்றுக்கான மறுப்பையும், அது கூடுமென்று கூறுவோர் தமது வாதத்திற்கு முன்வைக்கும் ஆதாரங்களையும் அவற்றுக்கான விளக்கங்களையும் இங்கு எழுதுகின்றோம். முதலில் “தல்கீன்” ஓதுவதை மறுப்போரின் ஆதாரங்களையும், அவற்றுக்கான மறுப்பையும் எழுதுகின்றோம். “தல்கீன்”ஓதுவதற்கு திருக்குர்ஆனிலோ, “ஸஹீஹ்” பலம் லாய்ந்த நபீமொழியிலோ
ஓர் ஆதாரம் கூட இல்லாதிருப்பதால் அது “பித்அத்”என்ற வழிகேடென்றும் அது தவிர்கப்படவேன்டும் என்றும் “தல்கீன்”ஓதுவதை மறுப்போர் கூறுகின்றார்கள். 
இவர்களின் இக்கூற்றை கருவாகக் கொண்டு இரண்டு விடயங்களை ஆய்வு செய்ய வேண்டும். 
ஒன்று– ஒருவிடயத்திற்கு “ஸஹீஹ்” பலமான நபீ மொழியில் ஆதாரமில்லாமல் “ழஈப்” பலம் குறைந்த நபீ மொழியில் மட்டும் ஆதாரமிருந்தால் அது கொண்டு செயல்படலாமா? ஆகுமா? ஆகாதா? 
இரண்டு – “பித்அத்”எல்லாம் வழிகேடாகுமா? இல்லையா? 
நபீ மொழிகளின் வகைகள் 
“முஹத்திதீன்”நபீமொழி ஆய்வாளர்கள் நபீ மொழிகளைபலதரங்களாக வகுத்து கூறியுள்ளார்கள். அவற்றில் ஸஹீஹ், ழஈப், மவ்ழூஉ என்பன அடங்கும் இம் மூன்றிலும் “ஸஹீஹ்”என்பது முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். இது பற்றி இங்கு விளக்கம் கூறத்தேவையில்லை.“மவ்ழூஉ”என்பது முழுமையாக மறுக்கப்பட வேண்டிய ஒன்றாகும். சுருங்கச் சொன்னால்“மவ்ழூஉ” என்பது நபீ ஸல் அவர்கள் சொல்லாததை அவர்கள் சொன்னதாகச் சொல்லப்பட்ட ஒன்றாகும். இது பற்றியும் இங்கு விளக்கம் கூறத் தேவையில்லை. ஆயினும் சிந்தனைக்குச் சில உதாரணங்கள். 
من بلغ ار بعين سنة ولم يأخذ العصا فقد عصي أبا القاسم صلي الله عليه وسلم 
ஒருவன் நாற்பது வயதை அடைந்து ஒரு தடி –கைக்கோல் எடுத்துக் கொள்ளவில்லையாயின் அவன் நபீ ஸல் அவர்களுக்கு மாறுசெய்துவிட்டான். என்பது போன்று. இது கைக்கோல் வியாபாரி ஒருவனால் தன்னலங் கருதிச் சொல்லப்பட்ட, நபீ ஸல் அவர்கள் மீது இட்டுக் கட்டப்பட்டதாகும். 
من لم يأ كل متّي فليس من أمّتي 
“மத்தீ”என்ற கருவாடு சாப்பிடாதவன் எனது உம்மத்திலுள்ளவனல்லன் என்பது போன்று. இது மத்தீ கருவாடு வியாபாரி ஒருவனால் தன்னலங் கருதிச் சொல்லப்பட்டதாகும். 
இந்த “மவ்ழூஉ” என்பது முற்றாக மறுக்கப்பட வேண்டியதென்பதில் அறிஞர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு இல்லை. 
“ழஈப்”என்றால் பலம் குறைந்ததாகும். இது நபீ மொழிகளை அறிவிக்கும் “றாவீ”அறிவிப்பாளர்களுடன் தொடர்புள்ள விடயமாகும். ஒரு நபீ மொழியை அறிவிக்கும் அறிவிப்பாளர்களில் ஒருவரேனும் சந்தேகத்துக்குரியவராயின் அந்த நபீ மொழி “ழஈப்”பலம் குறைந்ததென்று சொல்லப்படும். உதாரணமாக ஒரு நபீ மொழியை ஐந்து அறிவிப்பாளர்கள் அறிவிக்கின்றார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்களில் நால்வர் நம்பிக்கைக்குரியவர்களாயும்,ஒருவர்மட்டும் சந்தேகத்துக்குரியவராயுமிருந்தாலும் கூட அது “ழஈப்” பலம் குறைந்ததென்றே கணிக்கப்படும். “ழஈப்”பலம் குறைந்த நபீ மொழி என்பதற்கான சுருக்கமான விளக்கம் இதுவே. 
“ழஈப்” எனக் கருதப்படும் ஒரு நபீ மொழியை ஆதாரமாகக் கொண்டு மார்க்க “பத்வா”– தீர்ப்பு மட்டும் தான் வழங்க முடியாதேயன்றி அதை ஆதாரமாகக் கொண்டு ஒருவன் செயல்படுவதால் எந்தக் குற்றமும் வந்துவிடாது. “ழஈப்”பலம் குறைந்த நபீ மொழி கொண்டு “பழாயிலுல் அஃமால்” மேலதிக வணக்க வழிபாடுகளில் செயல்படலாம் என்பது இமாம்களின் ஏகோபித்த, தீர்க்கமான முடிவாகும். “ழஈப்”ஆன நபீ மொழி கொண்டு செயல்படுவதால் – அமல் செய்வதால் எந்தக் குற்றமும் வராதென்றிருக்க, அந்த நபீ மொழி கொண்டு செயல்படுதல் பெருங்குற்றமென்று பொது சனங்களுக்கு காட்டும் பாணியில் கண்டதெற்கெல்லாம் இது ழஈப், அது ழஈப் என்று அடம்பிடித்து நிற்பதும், இவ்வழக்கத்தை தொழிலாகக் கொள்வதும் பிழையானதாகும். 
இமாம்களில் அநேகர் தமது நூல்களில் “ழஈப்”ஆன நபீ மொழிகளை நிறைய எழுதியிருப்பதை நாம் காண்கின்றோம். இமாம் கஸ்ஸாலீ (றஹ்) அவர்கள் தங்களின் “இஹ்யாஉ உலீமித்தீன்”என்ற சூபிஸ ஞான ஏட்டில் அநேக “ழஈப்”ஆன நபீ மொழிகளைப் பதிவு செய்துள்ளார்கள். அதே போல் இமாம் இஸ்மாயீல் ஹக்கீ (றஹ்) அவர்கள் தங்களின் “தப்ஸீர் றூஹில்பயான்” என்ற திருக்குர்ஆன் விரிவுரை நூலில் அநேக பலம் குறைந்த நபீ மொழிகளைக் கொண்டு வந்துள்ளார்கள். இந் நூல்கள் “ழஈப்” ஆன நபீ மொழிகள் பதிவு செய்யப்பட்டவை என்ற காரணத்தால் இவற்றைத் தூக்கியெறிதல் கூடாது. அது அறிவுடமையுமல்ல. அவை பலம் குறைந்த நபீமொழிகள் என்பதை அவர்கள் அறிந்திருந்துங்கூட அவற்றைப் பதிவு செய்தது அவை கொண்டு செயல்படலாம் என்ற அடிப்படையைக் கருதிற் கொண்டும், மக்கள் நல்லமல்கள் செய்து நற்பாக்கியம் பெறட்டும் என்ற நல்லெண்ணத்தைக் கருத்திற் கொண்டுமேயாகும். 
இவ்வாறு “ழஈப்”எனக் கருதப்படும் நபீ மொழியை ஆதாரமாகக் கொண்டு “பத்வா”மார்க்கத் தீர்ப்பு மட்டும் தான் வழங்க முடியாதே தவிர அதை ஆதாரமாகக் கொண்டு ஒருவர் செயல்படுவதால் எந்தக் குற்றமும் வந்துவிடாது. இது ஹதீதுக்கலை மேதைகளினதும், சட்டக்கலை மேதைகளினதும் ஏகோபித்த முடிவாகும். இந்த முடிவின்படி “தல்கீன்”ஓதுதல் தெடர்பாக வந்துள்ள நபீ மொழிகள் பலம் குறைந்தவை என்று வைத்துக் கொண்டாலும் கூட அவற்றை ஆதாரமாகக் கொண்டு செயல்படுவதால் எந்தக் குற்றமும் வந்துவிடாது. 
“தல்கீன்” தொடர்பாக வந்துள்ள பலம் குறைந்த நபீ மொழிகள் பற்றிக் கூறிய இமாம்கள் அவை பலம் குறைந்தவையாயினும் வேறு ஆதாரங்கள் கொண்டும், ஷாம் – சிரிய நாட்டு மக்கள் தொன்றுதொட்டு அந்த நபீ மொழிகளின் படி செயல்பட்டு வந்தது கொண்டும் அவை பலம் வாய்ந்த நபீ மொழிகள் போல் கணிக்கப்படுகின்றன என்று கூறியுள்ளார்கள். இவர்களின் கூற்றை ஆதாரமாகக் கொண்டு தல்கீன் தொடர்பாக வந்துள்ள நபீ மொழிகளின்படி செயல்படுவது சிறந்ததாகும். “ழஈப்”– பலம் குறைந்த “ஹதீது” என்றால் அது எந்த வகையில் பலம் குறைந்ததென்பது மார்க்க அறிஞர்களுக்கு மட்டுமே தெரியும். ஆகையால் பொதுமக்கள் பலம் குறைந்த “ஹதீது” என்றால் நபீ ஸல் அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்டதென்று தவறாக விளங்கி அதை முற்றாகப் புறக்கணித்து வருகின்றார்கள். இட்டுக்கட்டப்பட்ட ஹதீதுக்கு அறபு மொழியில் “மவ்ழூஉ”எனப்படும் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வுண்மையை மார்க்க அறிஞர்கள் அவர்களுக்கு விளக்கி வைக்கவும் வேண்டும். 
மேற்கண்ட விபரங்கள் மூலம் “ழஈப்”– பலம் குறைந்த நபீ மொழி கொண்டு ஒருவன் அமல் செய்யலாம் –செயல்படலாம் என்பது தெளிவாகிவிட்டது. 
தொடரும் …
RELATED ARTICLES

Most Popular

Recent Comments