Tuesday, October 8, 2024
Homeஎழுத்தாக்கங்கள்அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்

அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்

மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள்



சிரேஷ்ட விரிவுரையாளர் – அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம்

 

 

அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களைப் போன்ற ஒரு மனிதர் இவ்வுலகில் தோன்றவுமில்லை. தோன்றப் போவதுமில்லை.

 

சிருஷ்டிகளை வெளிப்படுத்த நாடிய அல்லாஹு தஆலா தனது புனிதமிகு தாத்திலிருந்து முதன் முதலில் வெளிப்படுத்தியது அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் ஒளியைத் தான் என்பது ஸுபீகளான இறைஞானிகளின் ஏகோபித்த முடிவாகும். வழிகேடர்கள் இதை மறுத்தாலும் எதார்த்தம் இதுவேயாகும். மறுப்பவன் நிச்சயம் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் எதார்த்தம் புரியாதவனாகவே இருப்பான்.

 

இறையொளி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மனித உருவில் எங்களைப் போன்றவர்களன்றி அவர்களின் எதார்த்தத்தில் எங்களைப் போன்றவர்களல்லர். அவர்கள் அல்லாஹு தஆலாவுக்கு மிக விருப்பமானவர்கள்.

 

இறையருள் பெற்றவர்கள், அருள் வடிவம் பெற்றவர்கள். அவர்களைப் போன்ற ஒருவரை அல்லாஹு தஆலா வெளிப்படுத்தவுமில்லை. வெளிப்படுத்தப் போவதுமில்லை. சந்திரனை விடப் பிரகாசமானவர்கள். ஒளி உருவம் பெற்றவர்கள். அழகின் முழு வடிவம் பெற்றவர்கள் அண்ணல் எம் பெருமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்.

 

அன்னவர்களின் உடல் முழுவதும் அருளாகும். அன்னவர்களின் கை
எவற்றையெல்லாம் தொட்டனவோ அவை அனைத்தும் அருள் பெற்றன. அன்னவர்கள் பாவித்த பொருட்கள் அனைத்தும் அருள் நிறைந்தவேயாகும்.

அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் எதார்த்தத்தை நன்கு புரிந்திருந்தார்கள் ஸஹாபஹ் – தோழர்கள். அன்னவர்களின் உடலின் ஒவ்வொரு பகுதியைக் கொண்டும் அருள் பெற்றார்கள். அன்னவர்கள் அணிந்த சேட், சாறம், ஜுப்பஹ், போர்வை, தலைப்பாகை போன்றவற்றைக் கொண்டு அருள் பெற்றார்கள். அன்னவர்களின் அருள் நிறைந்த புனித உடலிலிருந்து வெளியாகிய சிறுநீர், வியர்வை, இரத்தம், சளி போன்றவற்றைக் கொண்டு அருள் பெற்றார்கள்.

 

இது மாத்திரமன்றி நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் சாப்பிட்ட,
குடித்த பாத்திரங்களைக் கொண்டு அருள் பெற்றார்கள் ஸஹாபஹ்- தோழர்கள் றழியல்லாஹு அன்ஹும். அன்னவர்களின் திருவுடலில் காணப்பட்ட நபித்துவத்தின் முத்திரையை முத்தமிடுவது கொண்டும், தொடுவது கொண்டும் அருள் பெற்றார்கள். அன்னவர்களின் கை, கால், வயிறு போன்றவற்றை முத்தமிடுவது கொண்டும் அருள் பெற்றார்கள். அன்னவர்களின் முடிகள்,
நகங்கள் கொண்டும் அருள் பெற்றார்கள். நோய் நிவாரணம் பெற்றார்கள். அன்னவர்கள் வுழூச்செய்து எஞ்சிய நீரை அருந்துவது கொண்டும்,
தங்களின் உடலில் அதை பூசுவது கொண்டும் அருள் பெற்றார்கள்.

 

அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுத இடங்களில் தொழுவது கொண்டு ஸஹாபஹ் – தோழர்கள் அருள் பெற்றார்கள். அன்னவர்கள் தங்களின் அருள் நிறைந்த வாயிலிருந்து துப்பிய நீரைக் கொண்டு அருள் பெற்றார்கள். அன்னவர்களின் அருள் நிறைந்த உமிழ் நீரைக் கொண்டு அருள் பெற்றார்கள். நோய் நிவாரணம் பெற்றார்கள். அன்னவர்கள் சாப்பிட்டு எஞ்சிய உணவை சாப்பிடுவது கொண்டும்,
அன்னவர்களின் அருள் நிறைந்த கை
விரல்கள் பட்ட இடத்தில் சாப்பிடுவது கொண்டும் அருள் பெற்றார்கள்.

 

அதே போன்று நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் குடித்து எஞ்சிய பானத்தைக் குடிப்பது கொண்டும் ஸஹாபஹ் – தோழர்கள் அருள் பெற்றார்கள்.

 

அண்ணல் எம் பெருமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தங்களின் அருள் நிறைந்த வாயினுள் மென்ற ஈத்தம் பழத்தை சாப்பிடுவது கொண்டு ஸஹாபஹ்களின் குழந்தைகள் அருள் பெற்றார்கள். இந்த அருள் தங்களின் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டுமென்பதற்காக தங்களுக்கு குழந்தைகள் பிறந்தவுடன் அந்தக் குழந்தைகளை ஸஹாபஹ் –
தோழர்கள் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் சமூகத்துக்கு கொண்டு சென்றார்கள். நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஈத்தம் பழத்தை எடுத்து, தனது அருள் நிறைந்த வாயினுள் மென்று அதை அந்த குழந்தைகளின் வாயினுள் சுவைக்கச் செய்தார்கள்.

 

இவ்வாறு நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுடன் தொடர்புடைய சகல வஸ்துக்களைக் கொண்டும் ஸஹாபஹ் –
தோழர்கள் தங்களின் வாழ்க்கையில் அருள் பெற்றார்கள்.

 

அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பாவித்துவிட்டுச் சென்ற பொருட்களில் பறகத் – அருள் உண்டு என்பதை நம்பிய ஸஹாபஹ் – தோழர்கள் அவற்றைக் கொண்டு அருள் பெற்றிருப்பதும், சிறப்புப் பெற்றிருப்பதும் எமக்கு ஓர் சிறந்த முன்மாதிரியாகும்.

 

அண்ணல் எம் பெருமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களில், அன்னவர்கள் பாவித்த,
விட்டுச் சென்ற பொருட்களில் அருள் காணப்படுவது போன்று ஏனைய நபீமார்கள், வலீமார்கள், தரீகஹ்களின் ஷெய்ஹ்மார்கள், அல்லாஹ்வை நன்கறிந்த ஆரிபீன்களிலும், அவர்கள் பாவித்த, விட்டுச் சென்ற பொருட்களிலும் பறகத் – அருள் உண்டு என்பது ஸுன்னத் வல் ஜமாஅத் அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும்.

 

நபீ யஃகூப் அலைஹிஸ்ஸலாம், நபீ யூஸுப் அலைஹிஸ்ஸலாம் ஆகியோரின் வரலாற்றை அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் கூறிக்காட்டுகிறான்.

 

தனது மகன் யூஸுப் அலைஹிஸ்ஸலாம் அன்னவர்களைப் பிரிந்த காரணத்தினால் கடுமையான கவலையடைந்தார்கள். நபீ யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அன்னவர்கள் அழுதழுது அன்னவர்களின் பார்வை பலவீனமடைந்தது. தனது தந்தையின் நிலையை அறிந்தார்கள் நபீ யூஸுப் அலைஹிஸ்ஸலாம் அன்னவர்கள். தான் அணிந்திருந்த சேட்டைக் கழற்றி, தனது தந்தை யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அன்னவர்களின் முகத்தில்  அதை வைக்கும் படி அனுப்பி வைத்தார்கள். இந்த சேட்டை அன்னவர்களின் முகத்தில் வைத்தவுடன் அன்னவர்களின் பார்வை தெளிவடைந்தது.

 

இதை அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்.

 

اِذْهَبُوْا
بِقَمِيْصِيْ هَذَا فَأَلْقُوْهُ عَلَى وَجْهِ أَبِيْ يَأْتِ بَصِيْرًا.
وَأْتُوْنِيْ بِأَهْلِكُمْ أَجْمَعِيْنْ
.

 

நீங்கள் என்னுடைய இந்த சேட்டைக் கொண்டு போய் எனது தந்தையின் முகத்தின் மீது போடுங்கள். அவர் பார்வையுடையவராக வருவார். நீங்கள் உங்களின் குடும்பத்தினர் அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள்.

ஸுறது யூஸுப் 93

 

இந்த வசனத்தின் மூலம் நபீ யூஸுப் அலைஹிஸ்ஸலாம் அன்னவர்களின் சேட்டை நபீ யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அன்னவர்களின் முகத்தில் வைத்த போது அவர்களின் பார்வை தெளிவடைந்தது என்பது உறுதியாகிறது. அந்த சேட்டில் ஏதாவது மருந்து கலக்கப்பட்டிருந்ததா? இல்லை. அது ஒரு நபீ அணிந்திருந்த சேட் அதில் பறகத் உண்டு.

 

நபீமார்கள் பாவித்த பொருட்களில் அருள் காணப்படுவது போன்று அவர்களின் உடலின் ஒவ்வொரு உறுப்பிலும் அருள் உண்டு.

 

புனித முடிகளைக் கொண்டு அருள் பெறுதல்

 

அண்ணல் ஸெய்யிதுனா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளைக் கொண்டு அன்னவர்களின் தோழர்களான ஸஹாபஹ்கள் அருள் பெற்றிருக்கிறார்கள். அவற்றை தங்களின் வீடுகளில் மிக கண்ணியமாக பாதுகாத்திருக்கிறார்கள். அருள் நிறைந்த அந்த முடிகளின் பறகத்தினால் நோய் நிவாரணம் பெற்றிருக்கிறார்கள். அந்த முடிகளின் பறகத்தினால் யுத்தங்களில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். தாங்கள் மரணித்தால் அந்தத் திருமுடிகளை தங்களின் ஜனாஸாக்களுடன் சேர்த்து அடக்க வேண்டுமென்று எத்தனையோ ஸஹாபஹ் –
தோழர்கள் தங்களின் உறவினர்களிடம் இறுதி விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்.

 

அண்ணல் எம் பெருமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் முடிகள் எங்களைப் போன்றவர்களின் முடி போன்றதல்ல. அவை இறையருள் நிறைந்தவை.
பறகத் மிக்கவை. எந்த ஒரு நோயையும் குணப்படுத்தும் தன்மை கொண்டவை.

 

அது மாத்திரமல்ல அன்னவர்களின் திரு முடிகள் மிகவும் மணம் வாய்ந்வவையாகக் காணப்பட்டன. ஸஹாபஹ் – தோழர்கள் அது பற்றி வருணித்திருக்கிறார்கள்.

 

இன்னும் அவர்கள் அதிக முடிகள் கொண்டவர்களாகவும் திகழ்ந்தார்கள் கண்மனி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் இதுவே அவர்களின் உம்மத்தினர் பெற்ற பாக்கியமாகும்.

 

عَنْ جَابِرِبْنِ عَبْدِ اللهِ قَالَ كَانَ رَسُوْلُ اللهِ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا إِغْتَسَلَ مِنْ جَنَابَةٍ صَبَّ عَلَى
رَأْسِهِ ثَلَاثَ حَفَنَاتٍ مِنْ مَاءٍ. فَقَالَ لَهُ الْحَسَنُ ابْنُ مُحَمَّدٍ
إِنَّ شَعْرِيْ كَثِيْرٌ. قَالَ جَابِرٌ فَقُلْتُ لَهُ يَاابْنَ أَخِيْ كَانَ
شَعْرُ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكْثَرَ مِنْ شَعْرِكَ وَأَطْيَبَ                                                                                                              

நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஜனாபத்தின் போது குளித்தார்களாயின் நீரை மூன்று அள்ளுதல்கள் அள்ளி தங்களின் தலையின் மீது ஊற்றுவார்கள்.

 

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் றழியல்லாஹுஅன்ஹு அவர்கள் கூறினார்கள். அப்பொழுது ஹஸன் இப்னு முஹம்மத் றழியல்லாஹுஅன்ஹு அவர்கள் அவர்களிடம் எனது முடி அதிகமானது என்று கூறினார்கள்.

 

எனது சகோதரனின் மகனே! உனது முடியை விட மிக அதிகமானதாக, மிக மணமானதாக நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் முடி இருந்தது என்று அவருக்கு நான் கூறினேன் என்று ஜாபிர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம்
741

 

நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் முடிகள் அதிகமானவையாகவும், மிகவும் மணம் வாய்ந்தவையாகவும் காணப்பட்டன என்பதை இதன் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

இதே போன்று நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் தாடி முடிகளும் அதிகமாக காணப்பட்டன.

 

وَكَانَ
كَثِيْرَ الشَّعْرِ وَالِّلحْيَةِ   

 

அவர்கள் அதிக முடியுடையவர்களாகவும், தாடி அதிகமானவர்களாகவும் இருந்தார்கள்.

ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 6297

 

ஸஹாபஹ் – தோழர்கள் பாதுகாத்து வைத்திருந்த முடிகளில் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் தலை முடிகளும்,
தாடி முடிகளும் காணப்பட்டன.
இந்தியாவின் தலை நகர் டில்லியில் அமைந்துள்ள ஜும்அஹ் மஸ்ஜிதில் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் தாடி முடிகளில் ஒன்று கண்ணாடி பேழையில் மிகவும் கண்ணியமாக பாதுகாக்கப்படுவது இங்கு குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும். இன்றும் மக்கள் அந்த திரு முடியை தரிசித்து,
முத்தமிட்டு அருள் பெற்று வருகிறார்கள்.

 

அஷ் ஷெய்ஹ் அப்துல் கரீம் முஹம்மத் அல் முதர்ரிஸ் றஹிமஹுல்லாஹ் அவர்கள் எழுதிய நூறுல் இஸ்லாம் என்ற நூலில் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

 

நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் தாடி முடிகள் முஸ்லிம் மன்னர்களிடத்தில் பாதுகாக்கப்பட்டன அவற்றில் சில உத்மானிய்ய அரசர்களுக்குக் கிடைத்தன.
அவற்றில் சில இறாகிலுள்ள குர்திஸ்தான் வீடுகளை வந்தடைந்தன. இன்னும் அவை சுலைமானிய்யஹ் மாவட்டத்திலுள்ள பயாறா என்ற தைக்காவில் காணப்படுகின்றன.

 

பஞ்சம் ஏற்பட்டு விட்டால், அல்லது மழை இல்லாமல் போய்விட்டால் அந்தத் திருமுடிகளின் பறகத்ததைக் கொண்டு மக்கள் அல்லாஹு தஆலாவிடத்தில் வஸீலா தேடுவார்கள்.

 

அந்த திருமுடிகள் வைக்கப்பட்டிருக்கின்ற விஷேட பெட்டியிலிருந்து அவற்றை எடுக்கப்படும். நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது பல தடவை ஸலவாத் சொல்வோம்.
அந்த திருமுடிகளைக் கொண்டு அல்லாஹு தஆலாவிடம் வஸீலா தேடுவோம். அதிக மழை இறங்கும்.

 

அருகிலுள்ள முஸ்லிம் நாடுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுகின்ற நேரத்தில் அவற்றின் அருள் கொண்டு எதிரிகளின் தாக்குதலிலிருந்து எங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.
இந்தப் பகுதியில் வாழக்கூடிய மக்களிடத்தில் இது ஓர் அறியப்பட்ட விடயமாகும். இதில் எந்த விதமான சந்தேகமும் கிடையாது.

நூறுல் இஸ்லாம்

பக்கம் 124

 

அண்ணல் எம் பெருமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் புனித மிகு தலை முடிகள், தாடி முடிகள் உலகின் பல பகுதிகளிலும் இன்றும் காணப்படுகின்றன. அவை கொண்டு மக்கள் இன்றும் அருள் பெற்று வருவது குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும்.

ஸெய்யிதுனா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின்  திரு முடிகள் எவ்வாறு மக்களை வந்தடைந்தன என்பதை நோக்கும் போது கண்ணியத்திற்குரிய ஸஹாபஹ் –
தோழர்கள் மூலமாகவே அவை வந்தடைந்துள்ளன என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும். ஸஹாபஹ் – தோழர்களுக்கு அவை எவ்வாறு கிடைத்தன?

 

அகிலத்துக்கே அருட்கொடையாக அனுப்பப்பட்ட அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தாங்களாகவே முன் வந்து, தங்களின் திரு முடிகளை ஸஹாபஹ் – தோழர்கள் மத்தியில் பங்கு வைத்திருக்கிறார்கள். என்பதை நோக்கும் போது அந்த திரு முடிகள் எவ்வளவு பெறுமதி வாயந்தவை என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும். அந்த திரு முடிகளில் எந்தவிதப் பயனுமில்லையெனில், அவற்றில் அருள் இல்லையெனில் அவற்றை நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஸஹாபஹ்களின் மத்தியில் பங்கிட்டிருக்கமாட்டார்கள். அவற்றை பங்கிடும்படி பணித்திருக்கமாட்டார்கள். நிச்சயமாக அண்ணல் எம்பெருமானின் திரு முடிகளில் அருள் உண்டு, பறகத் உண்டு, நோய் நிவாரணம் உண்டு.

 

தங்களின் முடிகள் அருள் நிறைந்தவை என்பதை புரிந்து கொண்ட நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தனது உம்மத்தினரும் அந்த அருளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்காக தாங்களாகவே முன் வந்து அந்தத் திரு முடிகளைப் பங்கு வைத்தார்கள்.

பின்வரும் ஹதீத்கள் இதற்கு சான்றாகும்.

 

عَنْ
أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى
مِنًى فَأَتَى الْجَمْرَةَ فَرَمَاهَا. ثُمَ أَتَى مَنْزِلَهُ بِمِنًى وَنَحَرَ
ثُمَّ قَالَ لِلْحَلَّاقِ خُذْ وَأَشَارَ إِلَى جَانِبِهِ الْأَيْمَنِ ثُمَّ
الْأَيْسَرِ ثُمَّ جَعَلَ يُعْتِيْهِ النَّاسَ. 

நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மினாவுக்கு வந்து ஜம்றாவில் கல்லெறிந்தார்கள். பின்னர் மினாவில் தங்களின் இடத்திற்கு வந்து அறுத்தார்கள். பின்னர் அம்பட்டனிடம் எடு என்று சொல்லி தனது வலது பக்கத்தை பின்னர் தனது இடது பக்கத்தை சுட்டிக் காட்டினார்கள். பின்னர் மக்களுக்கு அதைக் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

ஸஹீஹ் முஸலிம் 3139

 

وَأَمَّا
فِيْ رِوَايَةِ أَبِيْ كُرَيْبٍ قَالَ فَبَدَأَ بِا لشِّقِّ الْأَيْمَنِ
فَوَزَّعَهُ الشَّعْرَةَ وَالشَّعْرَتَيْنِ بَيْنَ النَّاسِ. ثُمَّ قَالَ بِا
لْأَيْسَرِ فَصَنَعَ بِهِ مِثْلَ ذَالِكَ. ثُمَّ قَالَ هَهُنَا أَبُوْطَلْحَةَ؟
فَدَفَعَهُ إِلَى أَبِيْ طَلْحَةَ. 

அபூகுறைப் அவர்களின்
ரிவாயத்தில் பின்வருமாறு கூறுகிறார்கள்.

நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் வலது பக்கத்தைக் கொண்டு ஆரம்பித்து ஒரு முடியாக, இரண்டு முடியாக மக்கள் மத்தியில் அதனை பங்கிட்டார்கள். பிறகு இடது பக்கத்தை களையும் படி கூறினார்கள். அதைப் போன்றே அதனையும் செய்தார்கள். பின்னர் அபூதல்ஹா இங்கே
இருக்கிறாரா? என்று கேட்டு அதனை அபூதல்ஹாவிடம் ஒப்படைத்தார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் 3140

 

மேற்கூறப்பட்டவற்றின் மூலம்
நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களின் முடிகளை மக்கள் மத்தியில் பங்கு வைத்திருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. அவ்வாறாயின் இந்த செயலில் என்ன பிரயோசனம் இருக்கிறது? ஆம். நிச்சயமாக பிரயோசனம் இருக்கிறது. நிச்சயமாக அந்தத் திருமுடிகளில் அருள் இருக்கிறது.
அவற்றில் எந்த விதமான பிரயோசனமும் இல்லையெனில், அவற்றில் எந்த ஒரு அருளும் இல்லையெனில் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அவற்றை மக்கள் மத்தியில் பங்கு வைத்திருக்கமாட்டார்கள். ஸஹாபஹ் – தோழர்களும் அவற்றை பாதுகாத்திருக்கமாட்டார்கள்.

 

நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின்  அருள் நிறைந்த, புனிதம் நிறைந்த முடிகளை பல ஸஹாபஹ் – தோழர்கள் தங்களின் இல்லங்களில் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். அவற்றைக் கொண்டு அருள் பெற்றிருக்கிறார்கள். அவர்களில் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்குப் பத்து வருடங்களுக்கு மேல் பணிபுரிந்த ஸெய்யிதுனா அனஸ் இப்னு மாலிக் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் குடும்பத்தினர் மிக முக்கியமானவர்களாகும்.

 

 

இவர்களின் சாச்சா அபூதல்ஹதல் அன்ஸாரீ றழியல்லாஹு அன்ஹு, இவர்களின் தாய் அஸ்ஸெய்யிதஹ் உம்மு ஸுலைம் றழியல்லாஹு அன்ஹா இவர்களிடம் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தங்களின் திருமுடிகளை நேரடியாக வழங்கியிருக்கிறார்கள்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 

தொடர் – 02

 

அஸ்ஸெய்யித் அபூதல்ஹதல் அன்ஸாரீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள்

 

நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுடன் பத்ர் போரில் கலந்து கொண்ட ஓர் ஸஹாபீ. அம்பு எய்வதில் சிறந்த வீரர், உஹத் யுத்தத்தின் போது நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை நோக்கி வந்த அம்புகளை தனது நெஞ்சைக் கொண்டு காத்தவர்கள். ஸெய்யிதுனா அனஸ் இப்னு மாலிக் றழியல்லாஹு அன்னவர்களின் தாய் அஸ்ஸெய்யிதஹ் உம்மு ஸுலைம் றழியல்லாஹு அன்ஹா அன்னவர்களை திருமணம் செய்தவர்கள். அவர்களின் சாச்சா அண்ணல் எம் பெருமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அருள்மிக்க புனித முடிகளை பாதுகாப்பதில் மிக ஆர்வமாக செயற்பட்டவர்கள்.

 

عَنْ
أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
لَمَّا حَلَقَ رَأْسَهُ كَانَ أَبُوْطَلْحَةَ أَوَّلَ مَنْ أَخَذَ شَعْرَهُ.

 

அனஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தங்களின் தலை முடியை மழித்த போது அபூதல்ஹா அவர்களே முதன் முதலில் அவர்களின் முடிகளில் சிலவற்றை எடுத்தவர்களாகும்.

ஸஹீஹுல் புஹாரி 171

 

இந்த ஹதீதிலிருந்து ஸெய்யிதுனா அபூதல்ஹதல் அன்ஸாரீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திரு முடிகளை சேகரிப்பதிலும், அவற்றைக் காப்பதிலும் மிகவும் ஆர்வமாக செயற்பட்டார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

 

இது மாத்திரமின்றி கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தங்களின் முடிகளைக் களைந்து இவர்களிடமே ஒப்படைத்தார்கள். அவற்றை மக்கள் மத்தியில் பங்கு வைக்கும் படி இவர்களையே பணித்தார்கள். இது இவர்கள் பெற்றுக் கொண்ட பெரும் பாக்கியமாகும்.

 

عَنْ
أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَمَى
جَمْرَةَ الْعَقَبَةِ ثُمَّ انْصَرَفَ إِلَى الْبُدْنِ فَنَحَرَهَا وَالْحَجَّامُ
جَالِسٌ وَقَالَ بِيَدِهِ عَنْ رَأْسِهِ فَحَلَقَ شِقَّهُ الْأَيْمَنَ فَقَسَمَهُ
فِيْمَنْ يَلِيْهِ ثُمَّ قَالَ اِحْلِقِ الشِّقَّ الْاَخَرَ فَقَالَ أَيْنَ أَبُوْطَلْحَةَ؟
فَأَعْطَاهُ إِيَّاهُ.

 

அனஸ் இப்னு மாலிக் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்து விட்டு, அறுக்கும் இடத்திற்கு வந்து அதில் அறுத்தார்கள். இரத்தம் குத்தி எடுப்பவனும் அங்கு அமர்ந்திருந்தான். பின்னர் தனது கையினால் தனது தலையை மழிக்கும் படி கூறினார்கள். அவர்களின் வலது பகுதியை அவன் மழித்தான். அதை அங்கிருந்தோர் மத்தியில் பங்கிட்டார்கள். பின்னர் மற்றப் பகுதியை மழி என்று கூறினார்கள். அபூதல்ஹா எங்கே? என்று கேட்டு அதை அவர்களிடம் கொடுத்தார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம்
3141

 

இந்த ஹதீதிலிருந்து நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தங்களின் திரு முடிகளை தாங்களாகவே ஸஹாபஹ் –
தோழர்கள் மத்தியில் பங்கு வைத்திருக்கிறார்கள் என்பதும், அபூதல்ஹா றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள் என்பதும் நிரூபணமாகிறது.

 

عَنْ
أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ لَمَّا رَمَى رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
الْجَمْرَةَ وَنَحَرَ نُسُكَهُ وَحَلَقَ نَاوَلَ الْحَالِقَ شِقَّهُ الْأَيْمَنَ فَحَلَقَهُ.
ثُمَّ دَعَا أَبَاطَلْحَةَ الْأَنْصَارِيَّ فَأَعْطَاهُ إِيَّاهُ. ثُمَّ نَاوَلَهُ
الشِّقَّ الْأَيْسَرَ فَقَالَ اِحْلِقْ فَحَلَقَهُ فَأَعْطَاهُ أَبَاطَلْحَةَ فَقَالَ
اِقْسِمْهُ بَيْنَ النَّاسِ.

 

அனஸ் இப்னு மாலிக் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

 

நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஜம்றாவில் கல்லெறிந்து, அறுத்து முடிகளை மழித்த போது மழிப்பவனிடம் தனது வலது பகுதியை கொடுத்தார்கள். அவன் அதை மழித்தான். பின்பு அபூதல்ஹதல் அன்ஸாரீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களை அழைத்து அதை அவர்களிடம் கொடுத்தார்கள். பின்னர் இடது பகுதியைக் கொடுத்து மழி என்று சொன்னார்கள். அவன் அதை மழித்தான். அதை அபூதல்ஹா அவர்களிடம் கொடுத்து, இதை மக்கள் மத்தியில் பங்கு வைத்து விடுங்கள் என்று சொன்னார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம்
3142

 

மேற்கூறப்பட்ட ஹதீத் மூலமும் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் புனிதம் நிறைந்த முடிகள் ஸெய்யிதுனா அபூதல்ஹா றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களிடம் வழங்கப்பட்டது நிரூபணமாகிறது.

 

நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தங்களின் முடிகளின் அருள் அனைத்து ஸஹாபஹ் – தோழர்களுக்கும் கிடைக்க வேண்டுமென்பதற்காக தனது தோழர் அபூதல்ஹா றழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களை நியமித்து ஏனைய ஸஹாபஹ் – தோழர்களுக்கும் அவற்றைக் கிடைக்கச் செய்திருக்கிறார்கள்.

 

தனது முடிகளில் எந்த விதப் பயனுமில்லையெனில் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அவற்றை ஸஹாபஹ் –
தோழர்கள் மத்தியில் விநியோகிக்கும் படி பணித்திருக்கமாட்டார்கள். நிச்சயமாக அவற்றில் அருள் நிறைந்திருந்த காரணத்தினால் தான் இவ்வாறு அவர்கள் செய்தார்கள்.

 

மேற்கூறப்பட்ட ஹதீதுக்கு விரிவுரை எழுதியவர்களில் சிலர் “நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திரு முடிகள் கொண்டும், அவர்கள் விட்டுச் சென்ற அனைத்துச் சின்னங்கள் கொண்டும் அருள் பெறுவது ஆகும் என்று கூறுகிறார்கள்.

 

இன்னுமொரு சந்தர்ப்பத்தில் ஸெய்யிதுனா அனஸ் இப்னு மாலிக் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களின் தாய் ஸெய்யிததுனா உம்மு ஸுலைம் றழியல்லாஹு தஆலா அன்ஹா அன்னவர்களுக்கு தங்களின் திரு முடிகளை வழங்கினார்கள் அருள் ஜோதி அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்.

 

அஸ்ஸெய்யிதஹ் உம்மு ஸுலைம் றழியல்லாஹு தஆலா அன்ஹா அன்னவர்கள்

 

ஸெய்யிதுனா அனஸ் இப்னு மாலிக் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களின் தாய். ஆரம்பத்தில் மாலிக் இப்னுன் நழ்ர் என்பவரை திருமணம் செய்திருந்தார்கள். இவர்கள் மீது கோபமுற்ற அவர் சிரியாவுக்குச் சென்று அங்கேயே மரணித்து விட்டார்.
அதன் பின் அபூதல்ஹதல் அன்ஸாரீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களை திருமணம் செய்தார்கள். இவர்களில் ஓர் ஆண்குழந்தையை பெற்றெடுத்தார்கள். அவர்கள் சிறு வயதிலேயே மரணித்து விட்டார்கள். அவர்களின் பெயர் அபூஉமைர்.
பின்னர் அப்துல்லாஹ் என்ற குழந்தையை பெற்றெடுத்தார்கள். இவர்கள் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அருள் நிறைந்த முடிகளையும், வாசம் நிறைந்த
அவர்களின் வியர்வையையும் பாதுகாத்த ஓர் ஸஹாபிய்யஹ் பெண்மணி.

 

 

أَخْبَرَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ عَنْ هِشَامٍ بِهذَا الْإِسْنَادِ
أَمَّا أَبُوْبَكْرٍ فَقَالَ فِيْ رِوَايَتِهِ لِلْحَلاَّقِ هَا وَأَشَارَ
بِيَدِهِ إِلَى الْجَانِبِ الْأَيْمَنِ هَكَذَا. فَقَسَمَ شَعْرَهُ بَيْنَ مَنْ
يَلَيْهِ. قَالَ ثُمَّ أَشَارَ إِلَى الْحَلاَّقِ وَإِلَى الْجَانِبِ الْأَيْسَرِ.
فَحَلَقَهُ فَأَعْطَاهُ أُمُّ سُلَيْمٍ.

 

அபூபக்ர் றழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் தங்களின் ரிவாயத்தில் கூறியதாக ஹிஷாம் றழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் கூறினார்கள்.

 

மழிப்பவனிடம் தனது வலது பக்க முடிகளை மழிக்கும் படி கூறிய நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அவற்றை அவர்களுக்கு அருகிலிருந்தோருக்கு பங்கு வைத்தார்கள்.
பின்னர் மழிப்பவனிடம் தனது இடது பக்க முடிகளை மழிக்கும் படி சுட்டினார்கள். அவன்
அதை மழித்தான். அதை உம்மு சுலைம் றழியல்லாஹு தஆலா அன்ஹா அவர்களுக்கு
கொடுத்தார்கள்.

ஸஹீஹ்
முஸ்லிம் 3140

 

அஸ்ஸெய்யிதஹ் உம்மு சுலைம்
றழியல்லாஹு தஆலா அன்ஹா அன்னவர்கள் தனக்குக் கிடைத்த அருள் மிக்க அந்த முடிகளை தங்களின்
இல்லத்தில் மிகவும் கண்ணியமாகப் பாதுகாத்தார்கள். அவற்றைக்
கொண்டு அருள் பெற்றார்கள்.

 

அது மாத்திரமன்றி அவர்கள்
அண்ணல் எம்பெருமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அருள் நிறைந்த உடலிலிருந்து வழிகின்ற வியர்வையைக்
கூட சேமிப்பதில் மிக ஆர்வமுடையவர்களாகத் திகழ்ந்தார்கள். நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் சில சந்தர்ப்பங்களில் இவர்களின் வீட்டுக்குச் சென்று
ஓய்வெடுப்பார்கள். அந் நேரம் அவர்களின் அருள் நிறைந்த உடலிலிருந்து வெளியாகின்ற
வியர்வையை சிறு போத்தலில் சேமித்துக் கொள்வார்கள். அதை மணமாக உபயோகிப்பார்கள்.
அருள் பெற்றவர்கள் கண்ணியமிக்க ஸஹாபஹ் – தோழர்கள்.

 

அஸ்ஸெய்யித் அனஸ் இப்னு மாலிக் இப்னுன் நழ்ர் றழியல்லாஹு தஆலா அன்ஹு
அன்னவர்கள்.

 

அருள் நபீ அண்ணல்
முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்கு
பத்து வருடங்களுக்கு மேல் பணி செய்த ஓர் ஸஹாபீ – தோழர் தனது பத்து வயதில் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பணியாளராக
இணைந்தார்கள். பத்ர் யுத்தத்தில் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுடன்
பணியாளராகப் புறப்பட்டார்கள். நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அதிக ஹதீஸ்களை இவர்கள் ரிவாயத்
செய்திருக்கிறார்கள்.

 

அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் இவர்களுக்கு
விஷேடமாக துஆ செய்திருக்கிறார்கள்.

 

செய்யிதுனா அனஸ் றழியல்லாஹு
தஆலா அன்ஹு அன்னவர்கள் கூறியதாக தாபித் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள்
பின்வருமாறு கூறுகிறார்கள். எனது தாய் உம்மு ஸுலைம் அவர்கள் நான் சிறுவனாக
இருக்கும் போது நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களிடம் அழைத்துச் சென்று, யாரஸுலல்லாஹ் எனது மகன் அனஸுக்கு துஆ
செய்யுங்கள் என்றார்கள். அப்பொழுது நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் “இறைவா! இவருடைய பொருளாதாரத்தையும்,
இவருடைய பிள்ளைகளையும் அதிகரிக்கச் செய்வாயாக, இவரை சுவர்க்கத்தில் நுழைவிப்பாயாக”
என்று பிராத்தித்தார்கள்.

அல் இஸாபஹ் பீதம்யீஸிஸ்ஸஹாபஹ்

பக்கம் 83

 

நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் துஆ பறக்கத்தைப் பெற்றுக் கொண்ட
ஸெய்யிதுனா அனஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் மிக அருள் பெற்று
வாழ்ந்தார்கள். இவர்களுக்கு ஒரு தோட்டம் இருந்தது. இதில் வருடத்தில் இரண்டு
தடவைகள் பழம் தரக்கூடிய மரங்கள் காணப்பட்டன. அதே போன்று கஸ்தூரி வாடை வீசக்கூடிய
மலர்களும் காணப்பட்டன. இவர்கள் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திரு முடிகளை மிகக் கண்ணியமாக
பாதுகாத்தார்கள். தான் மரணித்தால் அந்த திரு முடிகளின் அருள் தனக்கு கிடைக்க
வேண்டும் என்பதற்காக அவற்றை தனது நாவின் கீழ் வைக்கும் படியும் இறுதி விருப்பம்
தெரிவித்தார்கள்.

 

தனது தந்தை சொன்னதாக
ஸப்வான் இப்னு ஹுபைறா றழியல்லாஹு தஆலா அன்ஹு கூறியதை இப்னுஸ் ஸகன் ரிவாயத்
செய்துள்ளார்கள்.

அனஸ் இப்னு மாலிக்
றழியல்லாஹு தஆலா அன்ஹு கூறியதாக தாபித் அல்புனானீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள்
எனக்கு கூறினார்கள்.

 

இது நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் முடிகளில்
ஒரு முடி இதை எனது நாவின் கீழ் வையுங்கள்.

 

தாபித் அல்புனானீ றழியல்லாஹு
தஆலா அன்ஹு அன்னவர்கள் கூறுகிறார்கள். அதைஅவர்களின் நாவின்
கீழ் வைத்தேன். அதன் கீழ் அது இருக்கின்ற நிலையிலேயே அவர்கள்
அடக்கம் செய்யப்பட்டார்கள்.

 

அல் இஸாபஹ்
பீ தமயீஸிஸ் ஸஹாப் பக்கம் 83

 

இன்னுமொரு ரிவாயத்தில் ஸெய்யிதுனா
அனஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் தனது தாய் அஸ் ஸெய்யிதஹ் உம்மு ஸுலைம் றழியல்லாஹு
தஆலா அன்ஹா அன்னவர்கள் பாதுகாத்து வைத்த நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திரு முடியும், அருள் வியர்வையும் கலந்த போத்தலிலிருந்து தனது கபனில் பூசப்பட வேண்டுமென்று
இறுதி விருப்பம் தெரிவித்தார்கள்.

 

عَنْ
ثُمَامَةَ عَنْ أَنَسٍ أَنَّ أُمَّ سُلَيْمٍ كَانَتْ تَبْسُطُ لِلنَّبِيِّ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نِطَعًا فَيَقِيْلُ عِنْدَهَا عَلَى ذَالِكَ النِّطَعُ.
قَالَ فَإِذَا نَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَتْ مِنْ عَرَقِهِ
وَشَعَرِهِ. فَجَمَعَتْهُ فِيْ قَارُوْرَةٍ. ثُمَّ جَمَعَتْهُ فِيْ سُكٍّ وَهُوُ نَائِمٌ.
قَالَ فَلَمَّا حَضَرَ أَنَسَ بْنَ مَالِكٍ الْوَفَاةُ أَوْصَ
ى إِلَيَّ أَنْ يُجْعَلَ
فِيْ حَنُوْطِهِ مِنْ ذَالِكَ السِّكِّ. قَالَ فَجُعِلَ فِيْ حَنُوْطِهِ.
                                             

அனஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் கூறியதாக துமாமா றழியல்லாஹு தஆலா அன்ஹு
அன்னவர்கள் கூறுகிறார்கள்.

 

உம்மு ஸுலைம் றழியல்லாஹு தஆலா அன்ஹா அன்னவர்கள்
நபீ
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்காக தோல் விரிப்பு ஒன்றை விரிப்பார்கள். அந்த விரிப்பில் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மதிய ஓய்வெடுப்பார்கள். நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் உறங்கி விட்டால் அவர்களின் வியர்வையையும், முடியையும் எடுத்து ஒரு
போத்தலில் சேகரிப்பார்கள். பிறகு அதை வாசனைப் பொருளில் வைப்பார்கள்
. நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் உறங்குகின்ற நிலையில் இதனை செய்வார்கள்.

துமாமா றழியல்லாஹு தஆலா
அன்ஹு அன்னவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

 

அனஸ் இப்னு மாலிக்
றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களுக்கு மரண வேளை நெருங்கிய போது தமது கபன் துணியில்
பூசப்படும் நறுமணத்தில் இந்த நறுமணத்தையும் சேர்த்துக் கொள்ளுமாறு என்னிடம் விருப்பம்
தெரிவித்தார்கள். அவ்வாறே அவர்களின் கபனில் பூசப்பட்ட நறுமணத்துடன் இதுவும்
சேர்க்கப்பட்டது.

ஸஹீஹுல்
புஹாரீ 6281

 

அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திரு முடியிலும், வியர்வையிலும் அருள் உண்டு என்பதை நம்பியிருந்தார்கள். ஸெய்யிதுனா அனஸ் இப்னு மாலிக் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் தனது வீட்டில்
கண்ணியத்துடன் பாதுகாக்கப்பட்ட அவற்றின் அருள் தான் மரணித்த பின்பும் தனக்கு கிடைக்க
வேண்டுமென்பதை விரும்பினார்கள். எனவே அவற்றைத் தனது ஜனாஸாவுடன்
சேர்த்து அடக்கும் படி பணித்தார்கள். பாக்கியஸாலிகள் நபீகளாரின்
சமூகம் வாழந்த ஸஹாபஹ் – தோழர்கள்.

ஸெய்யிதுனா அனஸ் இப்னு மாலிக்
றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களின் அடிமையாக இருந்த ஸெய்யிதுனா ஸீரீன் றழியல்லாஹு
தஆலா அன்ஹு அன்னவர்களிடமும் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திரு முடி காணப்பட்டது இது பற்றி அவர்களின்
புதல்வர் ஸெய்யிதுனா அபூபக்ர் முஹம்மத் இப்னு ஸீரீன் றழியல்லாஹு தஆலா அன்னவர்கள் பின்வருமாறு
கூறுகிறார்கள்.

 

عَنِ ابْنِ سِيْرِيْنَ قَالَ قُلْتُ لِعَبِيْدَتَ عِنْدَنَا
مِنْ شَعَرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَصَبْنَاهُ مِنْ قِبَلِ
أَنَسٍ أَوْ مِنْ قِبَلِ أَهْلِ أَنَسٍ. فَقَالَ لَأَنْ تَكُوْنَ عِنْدِيْ شَعْرَةٌ
مِنْهُ أَحَبُّ إِلَيَّ مِنَ الدُّنْيَا وَمَا فِيْهَا.

 

முஹம்மத் இப்னு ஸீரீன் றழியல்லாஹு
தஆலா அன்ஹு அன்னவர்கள் கூறுகிறார்கள்.

 

நான்
அபீதா றழியல்லாஹு தஆலா அன்னவர்களிடம்
“அனஸ் றழியல்லாஹு
தஆலா அன்னவர்களிடமிருந்து அல்லது அனஸின் குடும்பத்தாரிடமிருந்து நாங்கள் பெற்ற நபீ
ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அன்னவர்களின் சில முடிகள் எங்களிடமிருக்கின்றன” என்று
சொன்னேன்
. அதற்கு அபீதா றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள்
“நபீ ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அன்னவர்களின் ஒரு முடி என்னிடம் இருப்பது உலகமும், அதிலுள்ளவற்றையும் விட எனக்கு மிகவும் விருப்பமானது” என்று கூறினார்கள்.

ஸஹீஹுல்
புஹாரீ 170

 

ஸெய்யிதுனா அனஸ் றழியல்லாஹு
தஆலா அன்ஹு அன்னவர்களின் குடும்பத்தில் பாதுகாக்கப்பட்ட திருமுடிகள் அவர்களின் அடிமையாக
இருந்த காரணத்தினால் ஸெய்யிதுனா ஸீரீன் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களுக்கு கிடைத்தது. அதை அவர்கள் தங்களின் இல்லத்தில் மிக கண்ணியமாகப் பாதுகாத்தார்கள்.
இந்த அருள் முடிகள் பற்றியே ஸெய்யிதுனா முஹம்மத் இப்னு ஸீரீன் றழியல்லாஹு
தஆலா அன்ஹு அன்னவர்கள் இங்கே குறிப்பிடுகிறார்கள்.

 

மேற் கூறப்பட்டவற்றின் மூலம்
நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின்
திருமுடிகள் ஸெய்யிதுனா அனஸ் றழியல்லாஹு தஆலா அன்னவர்களின் குடும்பத்தினூடாக ஏனைய ஸஹாபஹ் – தோழர்களுக்கும்வழங்கப்பட்டிருப்பதை அறிய முடியும். ஸஹாபஹ்
– தோழர்கள் மூலம் அவை தாபியீன்களை வந்தடைந்தன. அவர்களிடம் அவை பாதுகாக்கப்பட்டன. அவை கண்ணியப்படுத்தப்பட்டன.
பொதுவாக இன்றும் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகள் உலகின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றன
என்றால் ஸஹாபஹ் – தோழர்களே அவற்றின் சிறப்பைப் பெறுகிறார்கள்.

 

அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளைக்
கொண்டு மக்கள் அருள் பெற வேண்டுமென்பதற்காக, அவற்றைக் கொண்டு
அவர்கள் நோய் நிவாரணம் பெற வேண்டுமென்பதற்காக அவற்றைத் தங்களிடம் பாதுகாத்து வைத்திருந்தார்கள்
கண்ணியத்திற்குரிய உம்மஹாதுல் முஃமினீன் – நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அன்பு மனைவிமார்
றழியல்லாஹு தஆலா அன்ஹுன்ன.

 

அஸ்ஸெய்யிதஹ் உம்மு ஸலமா றழியல்லாஹு தஆலா அன்ஹா அன்னவர்கள்

 

நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அன்பு
மனைவிமார்களில் ஒருவர் அபூஸலமா என்பவரை முதலில் திருமணம் செய்திருந்தார்கள். அவர்
மரணித்த பின் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களைத் திருமணம் செய்தார்கள்.

 

இவர்கள் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளை
மிகவும் கண்ணியத்துடன் தங்களிடம் பாதுகாத்தார்கள். அவை சாயமிடப்பட்டவையாகவும்,
சிவப்பு நிறம் உடையவையாகவும் காணப்பட்டன.

 

عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللهِ بْنِ مَوْهَبٍ قَالَ دَخَلْتُ
عَلَى أُمِّ سَلَمَةَ فَأَخْرَجَتْ إِلَيْنَا شَعَرًا مِنْ شَ
عَرِ
النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَخْضُوْبًا
.

உத்மான் இப்னு அப்தில்லாஹ் இப்னு மவ்ஹப் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

 

நான் உம்மு ஸலமா றழியல்லாஹு தஆலா அன்ஹா அன்னவர்களிடம் சென்றேன். அவர்கள் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் முடிகளிலிருந்து சாயமிடப்பட்ட முடியை எங்களுக்கு எடுத்துக் காட்டினார்கள்.

ஸஹீஹுல்
புஹாரீ 5897

 

عَنِ
ابْنِ مَوْهَبٍ أَنَّ أُمَّ سَلَمَةَ أَرَتْهُ شَعَرَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ أَحْمَرَ.

 

உத்மான் இப்னு அப்தில்லாஹ் இப்னு மவ்ஹப் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னலர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

 

அன்னை உம்மு ஸலமா றழியல்லாஹு தஆலா அன்ஹா அன்னவர்கள் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் சிவப்பான முடியை எனக்குக் காட்டினார்கள்.

ஸஹீஹுல்
புஹாரீ 5898

 

عن عثمان بن عبد الله بن موهب قال دخلنا على أمّ سلمة
فأخرجت لنا صرّة فيها شعر النّبيّ صلّى الله عليه وسلّم مخضوب بحنّاء. فقالت هذا من
شعرالنّبيّ صلّى الله عليه وسلّم.

 

உத்மான் இப்னு அப்தில்லாஹ் இப்னு மவ்ஹப் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

 

நாங்கள் உம்மு ஸலமா றழியல்லாஹு தஆலா அன்ஹா அன்னவர்களிடம் சென்றோம். அவர்கள் ஒரு முடிச்சியை எங்களுக்கு வெளிப்படுத்தி காட்டினார்கள். அதில் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் முடி இருந்தது. அது மருதோன்றி கொண்டு சாயமிடப்பட்டிருந்தது. இது நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் முடி என்று அவர்கள் கூறினார்கள்.

அல் முஃஜமுல் கபீர் லித்தபறானீ

பாகம் – 23 / இலக்கம்
764

 

மேற்சொல்லப்பட்ட ஹதீத்கள், அஸ்ஸெய்யிதஹ்
உம்மு ஸலமா றழியல்லாஹு தஆலா அன்ஹா அன்னவர்களிடம் காணப்பட்ட நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகள்
மருதோன்றி கொண்டு சாயமிடப்பட்டவையாகவும், சிவப்பானவையாகவும்
காணப்பட்டன என்பதை தெளிவாக்குகின்றன.

 

அஸ்ஸெய்யிதஹ் உம்மு ஸலமா
றழியல்லாஹு தஆலா அன்ஹா அன்னவர்களிடம் காணப்பட்ட திருமுடிகளில் அண்ணல் எம்பெருமான் முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின்
அருள் நிறைந்த தாடி முடிகளும் காணப்பட்டன. அவற்றை அவர்கள்
மிகவும் கண்ணியமாக பாதுகாத்தார்கள். வெள்ளிப்பாத்திரத்தில் மிக
மரியாதையுடன் அதை பாதுகாத்தார்கள்.

 

அது மாத்திரமன்றி தன்னிடமுள்ள
அருள் நிறைந்த முடிகளைக் கொண்டு ஏனைய ஸஹாபஹ் – தோழர்களும் அருள்
பெற வேண்டுமென்பதற்காக அவர்களுக்கும் அதை எடுத்துக் காட்டினார்கள். ஏனைய ஸஹாபஹ்கள் அவற்றைக் கொண்டு அருள் பெற்றார்கள். தங்களின்
நோய்களுக்கு அவற்றைக் கொண்டு நோய் நிவாரணம் பெற்றார்கள்.

 

عَنْ إِسْرَائِيْلَ عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللهِ بْنِ مَوْهَبٍ
قَالَ أَرْسَلَنِيْ أَهْلِيْ إِلَى أُمِّ سَلَمَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ بِقَدَحٍ مِنْ مَاءٍ. وَقَبَضَ إِسْرَائِيْلُ ثَلَاثَ أَصَابِعَ
مِنْ فِضَّةٍ فِيْهِ شَعَرٌ مِنْ شَعَرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ.
وَكَانَ إِذَاأَصَابَ الْإِنْسَانَ عَيْنٌ أَوْشَيْئٌ بَعَثَ إِلَيْهَا مَخْضَبَهُ.
فَاطَّلَعْتُ فِيْ الْجُلْجُلِ فَرَأَيْتُ شَعَرَاتٍ حُمْرًا.

 

உத்மான் இப்னு அப்தில்லாஹ் இப்னு மவ்ஹப் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் கூறியதாக இஸ்ராயீல் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் கூறுகிறார்கள்.

 

நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் மனைவி உம்மு ஸலமா றழியல்லாஹு தஆலா அன்ஹா அன்னவர்களிடம் என்னை என்
குடும்பத்தினர் ஒரு தண்ணீர் பாத்திரத்தை கொடுத்து அணுப்பி வைத்தார்கள்.

உம்மு
ஸலமா றழியல்லாஹு தஆலா அன்ஹா அன்னவர்கள் ஒரு சிமிழியை கொண்டு வந்தார்கள். அது
வெள்ளியால் ஆனதாக இருந்தது. அதில் நபீ ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அன்னவர்களின் முடிகளில் ஒரு முடி இருந்தது.

ஒருவருக்கு
கண்ணேறு அல்லது ஏதாவது ஒரு நோய் ஏற்பட்டுவிட்டால் அவர் தனது நீர்ப்பாத்திரத்தை
உம்மு ஸலமா றழியல்லாஹு தஆலா அன்ஹா அன்னவர்களிடம் அனுப்பி வைப்பார். (அவர்கள்
தன்னிடம் இருந்த நபீ ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அன்னவர்களின் முடியை தண்ணீருக்குள் முக்கி
அனுப்புவார்கள். அதை நோயாளி குடிப்பார்.)

நான்
அந்த சிமிழியை எட்டிப் பார்த்தேன் அதில் சிவப்பு நிற முடிகளைக் கண்டேன்.

ஸஹீஹுல்
புஹாரீ 5896

 

மேற் கூறப்பட்ட
ஹதீதுக்கு விரிவுரை எழுதியோர் பின்வருமாறு கூறுகின்றனர்.

 

அஸ்ஸெய்யிதஹ் உம்மு ஸலமா
றழியல்லாஹு தஆலா அன்ஹா அன்னவர்களிடம் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் சில முடிகள் இருந்தன. அவை சிவப்பு நிறம்
உடையவையாகக் காணப்பட்டன. வெள்ளிப் பாத்திரத்தில் அவற்றை அவர்கள்
பாதுகாத்து வைத்திருந்தார்கள். மக்களுக்கு நோய் ஏற்படும் போது
அந்த திருமுடிகளைக் கொண்டு அவர்கள் அருள் – பறகத் பெறுவார்கள்.
அவற்றின் பறக்கத்தினால் நோய் நிவாரணம் பெறுவார்கள். அந்தத்  திருமுடிகளை
எடுத்து தண்ணீர்ப் பாத்திரத்தில் அவற்றை வைத்து அந்த திருமுடிகள் இருக்கின்ற பாத்திரத்திலுள்ள
நீரைக் குடிப்பார்கள். அவர்களுக்கு நோய் நிவாரணம் கிடைக்கும்.

 

உத்மான் இப்னு அப்தில்லாஹ்
றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களின் குடும்பத்தினர் அந்த திருமுடிகளை எடுத்து, அவற்றை வெள்ளிப் பாத்திரத்தில் வைத்தார்கள். அதிலுள்ள
நீரைக் குடித்தார்கள். அவர்களுக்கு நோய் நிவாரணம் கிடைத்தது.
பின்னர் அந்தப் பாத்திரத்தை உம்மு ஸலமா றழியல்லாஹு தஆலா அன்ஹா அன்னவர்களிடம்
அனுப்பி வைத்தார்கள். அவர்கள் அதை எடுத்து வெள்ளிச் சிமிழியில்
வைத்தார்கள். உத்மான் இப்னு அப்தில்லாஹ் றழியல்லாஹு தஆலா அன்ஹு
அன்னவர்கள் அந்தச் சிமிழை எட்டிப் பார்த்தார்கள். அதில் பல சிவப்பு
முடிகளைக் கண்டார்கள்.

 

மக்களில் யாராவது ஒருவருக்கு
நோய் ஏற்பட்டு விட்டால் பெரிய பாத்திரம் ஒன்றில் நீரை எடுத்து அதில் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளை
வைப்பார்கள். நோயாளி அருள் நிறைந்த நோயாளி அந்த அருள் நிறைந்த
முடிகள் வைக்கப்பட்டிருக்கின்ற நீர்ப் பாத்திரத்தில் அமர்வார். அவருக்கு நோய் நிவாரணம் கிடைத்து விடும். பின்னர் அந்தத்
திருமுடிகளை வெள்ளிச்சிமிழியில் வைக்கப்படும்.

உம்ததுல்
காரீ பாகம் – 15, பக்கம் – 94

 

அஸ்ஸெய்யிதஹ் உம்மு ஸலமா
றழியல்லாஹு தஆலா அன்ஹா அன்னவர்களிடம் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் சிவப்பு நிற முடிகள் காணப்பட்டன. அவை சிமிழ் போன்ற ஒன்றில் வைக்கப்படிருந்தன.

 

மக்கள் தங்களுக்கு நோய் ஏற்படும்
போது அவற்றைக் கெண்டு நோய் நிவாரணம் பெறுவார்கள். சில நேரம்
அந்த அருள் முடிகளை ஓர் நீரப்பாத்திரத்தில் வைத்து அந்த நீரைக் குடிப்பார்கள்.
சில நேரம் சிறப்பு மிக்க முடிகள் வைக்கப்படிருக்கின்றன. சிமிழை ஓர் நீர்ப்பாத்திரத்தில் வைத்து அதில் உட்காருவார்கள்.

இர்ஷாதுஸ்ஸாரீ
பாகம் – 12, பக்கம் – 593

 

அஸ்ஸெய்யிதஹ் உம்மு ஸலமா
றழியல்லாஹு தஆலா அன்ஹா அன்னவர்களிடம் காணப்பட்ட நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகள்
வெள்ளியினாலான ஓர் சிமிழில் வைக்கப்பட்டருந்தன. அவ்வாறு
வெள்ளிச்சிமிழில் வைக்கப்பட்டதற்குக் காரணம் அந்த அருள் நிறைந்த முடிகளைப் பாதுகாப்பதற்கேயாகும்.

 

ஒருவருக்கு நோய் ஏற்பட்டு
விட்டால் ஓர் பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து, அதை உம்மு ஸலமா
றழியல்லாஹு தஆலா அன்ஹா அன்னவர்களிடம் அனுப்பி வைப்பார்கள். அவர்கள்
அருள் நிறைந்த அந்த முடிகளை அந்த நீரினுள் முக்கி, அவற்றைக் கழுவி,
உரியவரிடம் அதைக் கொடுப்பார்கள். நோய் நிவாரணம்
பெறும் நோக்கில் அவர் அதைக் குடிப்பார். அல்லது அந்த நீரைக் கொண்டு
குளிப்பார். அருள் நிறைந்த அந்த முடிகளின் பறகத் அவருக்குக் கிடைக்கும்.

பத்ஹுல்
பாரீ பாகம் – 10, பக்கம் – 398

 

 

அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளின்
சிறப்புக்களை இதன் மூலம் விளங்கிக் கொள்ள முடியும். அவர்களின்
முடிகள் எங்களைப் போன்றவர்களின் முடிகள் போன்றவையல்ல. அவை தெய்வீகத்
தன்மை கொண்டவை. அவை ஆன்மீக சக்தி வாய்ந்தவை. அவை நோய் நிவாரணம் வழங்கக் கூடியவை. ஸஹாபாக்கல் அவற்றின்
அருள் கொண்டு நோய் நிவாரணம் பெற்றிருக்கிறார்கள். நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் மனைவிமாருட்பட
பெரும்பாலான ஸஹாபஹ் – தோழர்கள் அவர்களின் அருள் நிறைந்த முடிகளைப்
பாதுகாத்திருக்கிறார்கள். அவை கொண்டு அருள் பெற்றிருக்கிறார்கள்.
இது நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் முடிகளின் சிறப்பை எமக்கு எடுத்துக் காட்டுகிறது.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 

தொடர் – 03

 

அஸ்ஸெய்யிதஹ் ஆயிஷா றழியல்லாஹு தஆலா அன்ஹா அன்னவர்கள்

 

ஸெய்யிதுனா அபூபக்ர் சித்தீக் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களின் அன்பு மகள், நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் மனைவிமார்களில் வயது குறைந்தவர்களும், மிகப்பிறசித்தி பெற்றவர்களுமாகும். அஸ்ஸெய்யிதஹ் ஆயிஷா றழியல்லாஹு தஆலா அன்ஹா அன்னவர்களுக்கு 6 அல்லது 7 வயதாக இருக்கும் போது நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அவர்களைத் திருமணம் செய்தார்கள். உம்மு அப்தில்லாஹ் என்று நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள். இவர்களுக்குப் பெயர் சூட்டினார்கள்.

 

இவர்கள் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அருள் நிறைந்த முடிகளைத் தங்களிடம் பாதுகாத்து வைத்திருந்தார்கள். மாத்திரமன்றி அவற்றைக் கொண்டு மக்கள் அருள் பெற வேண்டுமென்பதற்காக, பிரயோசனமடைய வேண்டுமென்பதற்காக அவற்றை அவர்கள் வெளிப்படுத்திக் காட்டினார்கள்.

 

عَنْ مَعْنِ بْنِ حُمَيْدٍ عَنْ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ أَنَّهُ دَخَلَ عَلَى عَائِشَةَ فَأَخْرَجَتْ شَعَرَاتٍ مِنْ شَعَرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا هُوَ أَحْمَرُ مَصْبُوْغٌ.

 

தான் ஆயிஷா றழியல்லாஹு தஆலா அன்ஹா அன்னவர்களிடம் சென்றதாகவும், அவர்கள் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் முடிகளில் சில முடிகளை வெளிப்படுத்திக் காட்டியதாகவும், அவை சாயமிடப்பட்ட சிவப்பு நிறமுடையதாக இருந்தாகவும் பழாலதுப்னு உபைத் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் கூறியதாக மஃனுப்னு ஹுமைத் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் கூறுகிறார்கள்.

அல் முஃஜமுல் கபீர் லித்தபறானீ

பாகம் – 18 இலக்கம் – 820

 

இந்த ஹதீதில் இடம் பெற்றுள்ள ஸெய்யிதுனா பழாலதுப்னு உபைத் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் ஸஹாபஹ் – தோழர்களில் ஒருவர் உட்பட பல யுத்தங்களில் அவர்களுடன் கலந்த கொண்டவர்கள். ஸெய்யிதுனா முஆவியா றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களின் ஆட்சிக் காலத்தில் மரணித்தார்கள். இவர்கள் மரணித்த போது முஆவியா றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களே அவர்களின் ஜனாஸாவை சுமந்து சென்றார்கள். தனது மகன் அப்துல்லாஹ்வை அழைத்து “மகனே! இவர்களை சுமப்பதில் எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள். இதன் பின் இவர்கள் போன்ற ஒருவரை நீங்கள் சுமக்கமாட்டீர்கள்.” என்று கூறினார்கள். இவர்கள் டமஸ்கஸில் மரணித்தார்கள்.

 

இத்தகைய அந்தஸதை பெற்ற ஓர் ஸஹாபிக்கு நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளை ஸெய்யித்துனா ஆயிஷா றழியல்லாஹு தஆலா அன்ஹா அன்னவர்கள் வெளிப்படுத்திக் காட்டினார்களென்றால் அது ஏன்? நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளின் பறகத்தை அவர்களும் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்காக. அருள் பெற்றவர்கள் ஸஹாபஹ் – தோழர்கள். அண்ணலின் திருமுடிகளின் சிறப்பை நன்கறிந்திருந்தார்கள். அவற்றைக் கொண்டு பயன் பெற்றார்கள்.

 

அல்லாஹ்வின் வாள் என்று வருணிக்கப்பட்ட ஸெய்யிதுனா ஹாலித் இப்னு வலீத் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள்.

 

ஸெய்யிதுனா ஹாலித் இப்னு வலீத் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுடன் பல யுத்தங்களில் கலந்து கொண்ட ஓர் ஸஹாபீ – தோழர். மக்கா வெற்றியின் போது நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுடன் இருந்தவர்கள். இவர்களைப் பற்றி நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறும் போது

 

نِعْمَ عَبْدُ اللهِ. هَذَا سَيْفٌ مِنْ سُيُوْفِ اللهِ.

 

“அல்லாஹ்வினுடைய அடியார்களில் இவர் நல்லவராகி விட்டார். இவர் அல்லாஹ்வினுடைய வாள்களில் ஒரு வாள்” என்று கூறினார்கள்.

 

இவர்கள் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அருள் நிறைந்த முடிகளை தங்களிடம் பாதுகாத்தார்கள். அதைக் கொண்டு பிரயோசனம் பெற்றார்கள். அருள் நிறைந்த அந்த முடிகளை தாங்களட அணியும் தொப்பியில் வைத்து பாதுகாத்தார்கள். அந்த தொப்பியை அணிந்து சென்று, யுத்தங்களில் கலந்து கொண்டு அருள் நிறைந்த அந்த முடிகளின் பறக்கத்தினால் அவற்றில் வெற்றியும் பெற்றார்கள்.

 

அப்துல் ஹமீத் இப்னு ஜஃபர் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் தனது தந்தை கூறியதாக பின்வருமாறு கூறுகிறார்கள்.

 

“நாங்கள் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுடன் உம்றா செய்தோம். அப்போது அவர்கள் தங்களின் திருமுடிகளைக் களைந்தார்கள். அங்கிருந்த மக்கள் திருமுடிகளைப் பெற்றுக் கொள்வதற்காக போட்டி போட்டுக் கொண்டனர். நான் முந்திச் சென்று, அவர்களின் முன் நெற்றி முடியை எடுத்துக் கொண்டேன். ஒரு தொப்பியை எடுத்து தொப்பியின் முன் பகுதியில் அந்த முடிகளை வைத்தேன். நான் அந்த தொப்பியை அணிந்து எந்த யுத்தத்தில் பங்கு பற்றினாலும் எனக்கு வெற்றியே கிடைத்தது.” என்று ஹாலித் இப்னு வலீத் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் கூறினார்கள்.

உஸ்துல் காபஹ் பீ மஃரிபதிஸ் ஸஹாபஹ்

பாகம் 02, பக்கம் 142

 

அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அருள் நிறைந்த முடிகள் தனக்கு கிடைத்த வரலாறு பற்றியும், தான் யுத்தங்களில் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணியாக நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அருள் நிறைந்த முடிகளே காணப்பட்டன என்பது பற்றியும் ஸெய்யிதுனா ஹாலித் இப்னு வலீத் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் இங்கே கூறிக்காட்டியுள்ளார்கள்.

 

யர்மூக் யுத்தத்தின் போது அருள் நிறைந்த நபீ பெருமானின் அருள் நிறைந்த முடிகள் காணப்பட்ட தொப்பியை தவறவிட்டார்கள் ஸெய்யிதுனா ஹாலித் இப்னு வலீத் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள். கடுங் கவலையுற்றார்கள். மிகவும் பெறுமதி வாய்ந்த, விலைமதிக்க முடியாத ஒரு பொருளை தவறவிட்ட ஓர் உணர்வைப் பெற்றார்கள். மிகத் தீவிரமாக அதைத் தேட ஆரம்பித்தார்கள். தன்னுடனிருந்த ஸஹாபஹ் – தோழர்கள் கொண்டும் அதைத் தேடச் செய்தார்கள். கடும் முயற்சியின் பின் ஸஹாபஹ் – தோழர்கள் அருள் நிறைந்த அந்தத் தொப்பியினைப் பெற்றக் கொண்டார்கள். அது ஒரு கிழிந்த தொப்பியாக காணப்பட்டது. இதற்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டீர்கள்? சாதாரணமாக அவர்களைப் பேசினார்கள் ஸஹாபாக்கள். அந்தத் தெப்பியின் இரகசியம் பற்றி கூறிய போது அதனை ஏற்றுடிக் கொண்டார்கள்.

 

அப்துல் ஹமீத் இப்னு ஜஃபர் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் தனது தந்தை கூறியதாகக் கூறுகின்றார்கள்.

 

ஹாலித் இப்னு வலீத் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் யர்மூக் யுத்தத்தின் போது தாங்கள் அணிந்திருந்த தொப்பியைத் தவற விட்டு விட்டார்கள். அங்கிருந்தோரிடம் தனது தொப்பியைத் தேடித்தாருங்கள் என்று கூறினார்கள். ஆனால் அவர்கள் அந்தத் தொப்பியை பெற்றக் கொள்ளவில்லை. கடும் முயற்சியின் பின் அந்தத் தொப்பியைப் பெற்றுக் கொண்டார்கள். அது ஒரு கிழிந்த தொப்பியாகக் காணப்பட்டது. உடனிருந்தவர்கள் இது பற்றிக் கேட்டார்கள். அப்பொழுது அவர்கள் “நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தங்களின் முடிகளைக் களைந்த போது மக்கள் விரைந்து சென்று, அவர்களின் முடிகளைப் பெற்றுக் கொண்டார்கள். நான் அவர்களை முந்திச் சென்று, அவர்களின் நெற்றி முடிகளைப் பெற்றுக் கொண்டேன். அவற்றை நான் இந்தத் தொப்பியில் வைத்திருக்கிறேன். அவற்றின் பறக்கத்தினால் நான் எந்த யுத்தத்தில் கலந்து கொண்டாலும் எனக்கு வெற்றியே கிடைத்தது.

அல் இஸாபஹ் பீ தம்யீஸிஸ் ஸஹாபஹ்

பக்கம் 330

 

அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளுக்கு ஸஹாபஹ் – தோழர்கள் வழங்கிய கண்ணியம் மிகவும் பெறுமதி வாயந்ததாகும். ஸெய்யிதுனா ஹாலித் இப்னு வலீத் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களின் இந்த செயல் எமக்கு பாரிய ஓர் முன் மாதிரியாகும்.

 

அஸ்ஸெய்யித் ஜுஃஷும் அல்ஹைர் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள்

 

அண்ணல் எம் பெருமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களிடம் மரத்தின் கீழ் பைஅத் செய்து கொண்ட ஸஹாபஹ் – தோழர்களில் ஒருவர். மிஸ்ர் வெற்றியின் போது இவர்களும் அதில் கலந்து கொண்டார்கள்.

 

இவர்கள் மீது அன்பு கொண்ட ஸெய்யிதுனா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தாங்கள் பாவித்த, அருள் நிறைந்த சில பொருட்களை இவர்களுக்கு அன்பளிப்புச் செய்தார்கள்.

 

بَايَعَ تَحْتَ الشَّجَرَةِ. وَكَسَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَمِيْصَهُ وَنَعْلَيْهِ. وَأَعْطَاهُ مِنْ شَعَرِهِ.

 

மரத்தின் கீழ் இவர்கள் பைஅத் செய்து கொண்டார்கள். நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தங்களின் சேட்டையும், தங்களின் இரண்டு பாதணிகளையும் இவர்களுக்கு அணிவித்தார்கள். தங்களின் முடியிலிருந்தும் இவர்களுக்குக் கொடுத்தார்கள்.

அல் இஸாபஹ் பீ தம்யீஸிஸ் ஸஹாபஹ்

பக்கம் 190

உஸ்துல் காபஹ் பீ மஃரிபதிஸ்ஸஹாபஹ்

பாகம் 01, பக்கம் 540

 

அண்ணல் எம் பெருமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தங்களின் தோழர் ஜுஃஷும் அல்ஹைர் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களுக்கு தங்களின் சேட், பாதரட்சைகள், முடி போன்றவற்றை வழங்கியிருக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

 

ஸெய்யிதுனா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் இவற்றை தனது தோழருக்கு ஏன் வழங்கினார்கள்? பெறுமதியற்ற பெருட்களை வழங்கினார்களா? நிச்சயமாக இல்லை. அப்படியாயின் நிச்சயமாக அவற்றில் பிரயோசனம் இருக்கிறது. நிச்சயமாக அவை மிகப் பெறுமதி வாய்ந்தவையாகும். காரணம் அவை அண்ணல் எம் பெருமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுடன் தொடர்புபட்டவையாகும். அவற்றில் எந்தவிதமான பிரயோசனமும் இல்லையென்றால் அவற்றை எம் பெருமானார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தனது தோழருக்கு வழங்கியிருக்கமாட்டார்கள்.

 

ஸெய்யிதுனா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளில் மாத்திரமல்ல, அவர்கள் அணிந்த சேட்டில் அருளுண்டு, அவர்கள் அணிந்த பாதரட்சைகளில் அருளுண்டு என்பதை இதன் மூலம் நாம் விளங்கிக் கொள்ள முடியும். ஏன்? அவர்களின் உடல் முழுக்க அருளாகும். அவர்கள் பாவித்த அனைத்து பொருட்களும் அருள் நிறைந்தவையாகும். அருள் நபியல்லவா அவர்கள்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 

தொடர் – 04

 

ஸெய்யிதுனா அப்துல்லாஹ் இப்னு ஸைத் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள்

 

 

 

இவர்கள் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் ஸஹாபஹ் – தோழர்களில் ஒருவர். ஹஸ்ரஜ் வம்சத்தைச் சேர்ந்த மதீனாவாசி, பத்ர் யுத்தம் மற்றும் பல யுத்தங்களில் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுடன் கலந்து கொண்டவர்கள். தொழுகைக்காக மக்களை எவ்வாறு அழைப்பது என்ற ஆலோசனை ஸஹாபாக்களின் மத்தியில் முன்வைக்கப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் இவர்கள் ஒரு கனவு கண்டார்கள். அதில் பாங்கு சொல்லும் முறை இவர்களுக்கு கனவில் அறிவிக்கப்பட்டது. தான் கண்ட கனவை நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களிடம் அவர்கள் கூறிய போது அதை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். ஸெய்யிதுனா பிலால் றழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களுக்கு கனவில் அறிக்கப்பட்டது போன்று பாங்கு சொல்லும்படி பணித்தார்கள். இவர்கள் அபூமுஹம்மத் என்ற புணைப் பெயர் கொண்டு அழைக்கப்பட்டார்கள். மதீனா முனவ்வராவில் தனது 64வது வயதில் மரணித்தார்கள். இவர்களின் ஜனாஸா தொழுகையை ஸெய்யிதுனா உத்மான் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் நடத்தினார்கள்.

 

இத்தகைய உயர் அந்தஸ்தினைப் பெற்ற இவர்களிடமும் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகள் காணப்பட்டன. அவற்றை அன்னவர்கள் மிகவும் கண்ணியமாகப் பாதுகாத்தார்கள்.

 

நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அரள் நிறைந்த முடிகள் இவர்களுக்குக் கிடைத்த வரலாறு பற்றி இவர்களின் புதல்வர் ஸெய்யிதுனா முஹம்மத் இப்னு அப்தில்லாஹ் இப்னு ஸைத் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் கூறிக்காட்டுகின்றார்கள். இவர்கள் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் காலத்தில் பிறந்தவர்கள். இவர்கள் நம்பிக்கை மிக்க தாபியீன்களில் ஒருவர் என்று ஸெய்யிதுனா இப்னு ஹிப்பான் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் கூறுகின்றார்கள்.

 

وَقَدْ أَخْرَجَ الْبُخَارِيْ فِيْ التَّارِيْخِ مِنْ طَرِيْقِ يَحْيَ بْنِ أَبِيْ كَثِيْرٍ أَنَّ أَبَا سَلَمَةَ حَدَّثَهُ أَنَّ مُحَمَّدَبْنَ عَبْدِ اللهِ بْنِ زَيْدٍ حَدَّثَهُ أَنَّ أَبَاهُ شَهِدَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ الْمَنْحَرِ وَقَدْ قَسَمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الضَّحَايَا فَأَعْطَاهُ مِنْ شَعْرِهِ.

 

யஹ்யப்னு அபீ கதீர் அவர்கள் மூலம் கிடைத்த செய்தியை இமாமுனா புஹாரீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள்.

 

முஹம்மத் இப்னு அப்தில்லாஹ் இப்னு ஸைத் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் தனக்குக் கூறியதாக அபூஸலமா றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் கூறுகின்றார்கள்.

அவர்களின் தந்தை அறுக்குமிடத்தில் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுடனிருந்தார்கள். நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அறுக்கப்பட்ட இறைச்சிகளைப் பங்கு வைத்தார்கள். அவர்களுக்கு அன்னவர்களின் முடியைக் கொடுத்தார்கள்.

அல் இஸாபஹ் பீ தம்யீஸிஸ்ஸஹாபஹ்

பக்கம் 774

 

حَدَّثَنَا يَحْيَ أَنَّ أَبَا سَلَمَةَ حَدَّثَهُ أَنَّ مُحَمَّدَ بْنَ عَبْدِ اللهِ بْنِ زَيْدٍ حَدَّثَهُ أَنَّ أَبَاهُ شَهِدَ الْمَنْحَرَ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هَوَ وَرَجُلٌ مِنَ الْأَنْصَارِ. قَالَ فَقَسَمَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ أَصْحَابِهِ ضَحَايَا. فَلَمْ يُصِبْهُ وَلَا صَاحِبَهُ. قَالَ فَحَلَقَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأْسَهُ فِيْ ثَوْبِهِ فَأَعْطَاهُ. فَقَسَمَ مِنْهُ عَلَى رِجَالٍ وَقَلَّمَ أَظْفَارَهُ فَأَعْطَا صَاحِبَهُ. فَإِنَّهُ عِنْدَنَا لَمَخْضُوْبٌ بِالْحَنَّاءِ وَالْكَتَمِ.

 

யஹ்யா றழியல்லாஹு தஆலா அன்ஹு பின்வருமாறு கூறுகின்றார்கள். முஹம்மத் இப்னு அப்தில்லாஹ் இப்னு ஸைத் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் தனக்குக் கூறியதாக அபூஸலமா றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் கூறினார்கள்.

 

தனது தந்தையும், மதீனாவாசிகளில் ஒருவரும் அறுக்குமிடத்தில் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுடன் இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் உடன் தங்களின் துணியில் தங்களின் தலையை மழித்து அதை அவர்களுக்குக் கொடுத்தார்கள். அங்கிருந்த சிலருக்கு அந்த முடிகளிலிருந்து அவர்கள் பங்கு வைத்தார்கள்.

தங்களின் நகங்களைக் களைந்தார்கள் பெருமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள். அதை அவர்களின் தோழருக்கு கொடுத்தார்கள்.

அது மருதோன்றி கொண்டும், ஒரு வகை சாயம் கொண்டும் எங்களிடம் சாயமிடப்பட்டுள்ளது.

அஸ்ஸுனனுல் குப்றா லில்பைஹகீ

பாகம் 01, பக்கம் 38

 

மேற் சொல்லப்பட்ட சம்பவத்தில் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அறுக்கப்பட்ட பிராணிகளின் இறைச்சிகள் தங்களின் தோழர்களுக்கு கிடைக்கவில்லை என்பதற்காக தங்களின் முடிகளையும், தங்களின் நகங்களையும் களைந்து அவர்களுக்கு அன்பளிப்புச் செய்திருக்கிறார்கள். பெருமானாரின் இந்த செயலில் என்ன அர்த்தம் இருக்கிறது? நிச்சயமாக அர்த்தம் நிறைந்து காணப்படுகிறது.

 

தங்களின் முடிகளில் மாத்திரமல்ல தங்களின் நகங்களிலும் அருள் உண்டு என்பதை உணர்த்தியிருக்கிறார்கள் அருள் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்.

 

தனக்குக் கிடைத்த அருள் நிறைந்த நபீகளாரின் திருமுடிகளை மருதோன்றி சாயமிட்டு தங்களின் இல்லத்தில் பாதுகாத்தார்கள். ஸெய்யிதுனா அப்துல்லாஹ் இப்னு ஸைத் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் இவர்களின் பாதுகாக்கப்பட்ட இந்த அருள் முடிகள் பற்றியே அவர்கள் புதல்வர் முஹம்மத் இப்னு அப்தில்லாஹ் இப்னு ஸைத் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் இங்கே குறிப்பிடுகின்றார்கள்.

 

அருள் பெற்ற ஸஹாபஹ்கள் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளில் அருள் உஒண்டு என்பதை நம்பியிருந்த காரணத்தினால் அவற்றைத் தங்களின் இல்லங்களில் மிகவும் கண்ணியமாகப் பாதுகாத்தார்கள். அவர்களால் பாதுகாக்கப்பட்ட அருள் முடிகளே இன்று உலகெங்கிலும் காணப்படுகின்றன. மக்கள் அவற்றைக் கொண்டு இன்றும் அருள் பெறுவதற்கு கண்ணியமிக்க ஸஹாபஹ்களே காரணமாகும். அவற்றின் நன்மைகள் அவர்களையே சாரும்.

 

ஸெய்யிதுனா முஆவியதுப்னு அபீ சுப்யான் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள்

 

இவர்கள் அண்ணல் எம்பெருமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் ஸஹாபஹ் – தோழர்களில் ஒருவர். நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் எழுத்தாழராகப் பணி செய்தார்கள். எழுதும் சில சந்தர்ப்பங்களில் முஆவியாவை அழையுங்கள் என்று நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறுவார்கள். அபூ அப்திர் றஹ்மான் என்று புனைப் பெயர் கொண்டு இவர்கள் அழைக்கப்பட்டார்கள். ஸெய்யிதுனா உமர் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் சிரியாவின் ஆளுனராக இவர்களை நியமித்தார்கள்.

 

இவர்களுக்காக நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பின்வருமாறு பிரார்தனை செய்தார்கள்.

இறைவா! இவரை நேர்வழி காட்டக் கூடியவராக, நேர்வழி காட்டப்பட்டவராக ஆக்குவாயாக. இவரைக் கொண்டு நேர்வழி காட்டுவாயாக.

 

இவர்களிடம் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகள் காணப்பட்டன. அவற்றை மிக கண்ணியத்துடன் பாதுகாத்தார்கள் ஸெய்யிதுனா முஆவியா றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள்.

 

ஸெய்யிதுனா முஆவியா றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

 

عَنْ مُعَاوِيَةَ قَالَ أَخَذْتُ مِنْ أَطْرَافِ شَعْرِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِشْقَصٍ كَانَ مَعِيْ بَعْدَ مَا طَافَ بِالْبَيْتِ وَبِالصَّفَا وَالْمَرْوَةَ فِيْ أَيَّامِ الْعَشْرِ.

 

நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் 10வது நாளில் கஃபாவையும், ஸபா மர்வாவையும் தவாப் செய்த பின்னர் என்னிடமிருந்த கத்தரி கொண்டு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் முடியின் ஓரங்களிலிருந்து நான் எடுத்துக் கொண்டேன்.

ஸுனன் நஸாயீ 2989

 

நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகள் எவ்வாறு தனக்குக் கிடைத்தன என்பதை இங்கே கூறிக்காட்டுகின்றார்கள் ஸெய்யிதுனா முஆவியா றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள்.

இதே போன்று இவர்களிடம் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் சேட், போர்வை, நகங்கள் போன்ற அருள் நிறைந்த பொருட்களும் காணப்பட்டன.

 

ஸெய்யிதுனா கஃபுப்னு ஸுஹைர் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் சமூகத்தில் அவர்களைப் புகழ்ந்து பாடினார்கள். மகிழ்ச்சியுற்ற நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தாங்கள் அணிந்திருந்த அருள் நிறைந்த போர்வையை அவர்களுக்கு அணிவித்தார்கள். இந்த அருள் நிறைந்த போர்வை தனக்குக் கிடைக்க வேண்டுமென்பதற்காக அவர்களிடம் முயற்ச்சி செய்தார்கள் ஸெய்யிதுனா முஆவியா றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள். ஆனால் அவர்கள் அதைக் கொடுக்கவில்லை. இறுதியில் அவர்களின் வபாத்தின் பின் அவர்களின் குடும்பத்தாரிடமிருந்து அந்த அருள் நிறைந்த போர்வையை இவர்கள் பெற்றுக் கொண்டார்கள். அதை மிகவும் கண்ணியத்துடன் பாதுகாத்தார்கள்.

 

இதே போன்று ஸெய்யிதுனா முஆவியா றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களிடம் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அருள் மிக்க நகங்களும் காணப்பட்டன. அவற்றையும் தங்களிடம் பாதுகாத்து அவற்றைக் கொண்டும் அருள் பெற்றார்கள்.

 

இதே போல் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் இவர்களுக்கு அணிவித்த அன்னவர்களின் சேட் ஒன்றும் இவர்களிடம் காணப்பட்டது. அந்த அருள் மிக்க சேட்டைத் தங்களிடம் பாதுகாத்தார்கள் ஸெய்யிதுனா முஆவியா றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள்.

மொத்தத்தில் ஸெய்யிதுனா முஆவியா றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களிடத்தில் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அருள் நிறைந்த முடிகள், சேட், போர்வை, நகங்கள் காணப்பட்டன. அவற்றை அவர்கள் மிகவும் கண்ணியத்துடன் பாதுகாத்தார்கள். அவற்றை அவர்கள் மிகப் பெறுமதி வாய்ந்த பொருட்களாகக் கருதினார்கள்.

 

ஏன் அவற்றை அவர்கள் பாதுகாத்தார்கள்? அவை அருள் மிக்கவை என்று நம்பிய காரணத்தினால். அவை மிகப் பெறுமதியானவை என்று நம்பிய காரணத்தினால்.

 

நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பாவித்த பொருட்களிலும், அன்னாரின் உடலின் ஒவ்வொறு உறுப்பிலும் அருள் உண்டு என்பதை அவர்கள் நம்பிய காரணத்தினால். தான் மரணித்த பின்னும் அவை தனக்குப் பயனளிக்கும் என்று உறுதி கொண்ட காரணத்தினால் தனது மரண கவருத்தத்தின் போது தனது மகனை அழைத்து பின்வருமாறு கூறினார்கள்.

 

எனது சின்ன மகனே! நான் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுடன் தோழமை கொண்டிருந்தேன். அவர்கள் மலசலம் கழிப்பதற்காக வெளியானார்கள். நான் ஒரு பாத்திரத்தில் நீரை எடுத்துக் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தேன். தங்களின் மேனியிலிருந்த இரண்டு துணிகளில் ஒன்றை எனக்கு அணிவித்தார்கள். இந்த நாளுக்காக அதை மறைத்து வைத்திருந்தேன்.

 

ஒரு நாள் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தங்களின் நகங்களையும், முடிகளையும் களைந்தார்கள். அவற்றை எடுத்து இந்த நாளுக்காக நான் அவற்றை மறைத்து வைத்திருந்தேன். நான் மரணித்தால் அந்த சேட்டை எடுத்து தனது மேனியுடன் பட்டதாக எனது கபனில் வையுங்கள். அந்த முடிகளையும், நகங்களையும் எடுத்து எனத வாயிலும், எனது கண்ணிலும், என்னில் ஸுஜுதுடைய இடங்களிலும் வையுங்கள். அது பிரயோசனமளித்தால் அதுதான். இல்லையெனில் நிச்சயமாக அல்லாஹு தஆலா மண்ணிப்பவனும், அருள் செய்பவனுமாகும்.

அல் இஸ்திஆப் பீ அஸ்மாயில் அஸ்ஹாப்

பாகம் – 02 பக்கம் – 246

 

மேற் சொல்லப்பட்டவற்றிலிருந்து அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகள், நகங்கள், ஆடைகளைக் கொண்டு ஸெய்யிதுனா முஆவியா றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் அருள் பெற்றிருக்கிறார்கள் என்பது நிரூபனமாகிறது.

 

ஸஹாபஹ் – தோழர்களின் செயல் எமக்கு ஓர் முன்மாதிரியாகும். ஸஹாபஹ்கள் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளைப் பெற்றுக் கொள்வதில் தங்களுக்கிடையில் போட்டி போட்டிருக்கிறார்கள். அண்ணலின் இரகசியம் அறிந்தவர்கள் அவர்கள். அண்ணல் கோமானின் எதார்த்தம் புரிந்தவர்கள் அவர்கள்.

இதன் காரணத்தினால் தான் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தங்களின் தலை முடிகளை களைகின்ற சந்தர்ப்பத்தில் ஸஹாபஹ் – தோழர்கள் அவர்களைச் சூழ நின்று அந்த அருள் முடிகளைப் பெற்றுக் கொள்வதில் அதிக ஆர்வம் செலுத்தியிருக்கிறார்கள்.

ஸெய்யிதுனா அனஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

 

நான் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்கு முடிகளை மழிப்பவன் மழிப்பதைக் கண்டேன். அவர்களின் தோழர்கள் அவர்களைச் சூழ நின்றனர். அவர்களிலிருந்து விழுகின்ற முடிகள் அவர்களின் கையிலேயே விழுந்தது.

ஸஹீஹ் முஸ்லிம் 5997

 

இந்த ஹதீதுக்கு விளக்க மெழுகியவர்கள் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளைக் கொண்டு அருள் பெறுவது ஆகும் என்று குறிப்பிடுகின்றார்கள்.

 

ஸஹாபஹ் – தோழர்கள் எந்த அளவு நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளைப் பெற்றுக் கொள்வதில் ஆர்வமாக, ஆவலாக இருந்திருக்கிறார்கள் என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

 

ஸஹாபஹ்களிடம் பாதுகாக்கப்பட்ட திருமுடிகள் இன்றும் உலகின் பல பகுதிகளிலும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவற்றைக் கொண்டு இன்றும் மக்கள் அருள் பெற்று வருகிறார்கள். மிகவும் கண்ணியமாக அவை பாதுகாக்கபடுகின்றன.

 

அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகள் பற்றி அல்ஆதாறுன் நபவிய்யஹ் என்ற நூலில் “அஷ்ஷஹாததுன் நபவிய்யஹ்” என்ற தலைப்பில் எழுதப்பட்ட சில குறிப்புக்களை இங்கே தருகிறோம்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 

தொடர் – 05

மக்காவில் காணப்பட்ட நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகள்

 

அல் அல்லாமஹ் அஸ் ஸஹாவீ றழியல்லாஹு
தஆலா அன்ஹு அன்னவர்கள் தங்களின் அழ்ழவ்உல் லாமிஃ என்ற நூலில் ஹிஜ்ரீ 763ம் ஆண்டு மக்காவில் பிறந்து ஹிஜ்ரீ 823ம் ஆண்டு மதீனாவில்
மரணித்த அல் முர்ஷிதீ என்று பிரசித்தி பெற்ற அபூஅப்தில்லாஹ் முஹம்மத் இப்னு அபூபக்ர்
றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் பற்றிக் கூறும் போது “அவர்கள்
சிறந்தவர்களாக, மார்க்கப் பற்றுள்ளவர்களாக, பேணுதல் உள்ளவர்களாக இருந்தார்கள். தனது கால்களினால் நடந்து சென்று 50 வருடங்களுக்கும் அதிகமாக
நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை ஸியாரத்
செய்திருக்கிறார்கள். அதே போன்று மூன்று தடவைகள் பைதுல் முகத்தஸை ஸியாரத்
செய்திருக்கிறார்கள். இவர்கள் அங்கு ஒரு நல்ல மனிதரை சந்தித்தார்கள். அவர்களிடம் நபீ
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் ஆறு திருமுடிகள் காணப்பட்டன. தனது மரணம்
நெருங்கிய போது அவற்றை ஆறு நபர்களுக்கு அவர்கள் சமமாகப் பங்கு வைத்தார்கள். அந்த
ஆறு நபர்களில் இவர்களும் ஒருவராகும். என்று கூறுகின்றார்கள்.

 

ஹிஜ்ரீ 862ல் மரணித்த
இவர்களின் புதல்வர் உமர் இப்னு முஹம்மத் அல்முர்ஷிதீ றழியல்லாஹு தஆலா அன்ஹு
அன்னவர்கள் இது பற்றிக் கூறும் போது ஆறு பேர்களுக்கன்றி மூன்று பேர்களுக்கு அவை
பங்கிடப்பட்டன என்பதே சரியாகும் என்று கூறுகின்றார்கள்.

 

அதில் அவர்கள்
பின்வருமாறு கூறுகின்றார்கள்.

 

பைதுல் முகத்தஸில்
அவர்களின் தந்தை சந்தித்த ஷெய்ஹிடமிருந்து பெற்றுக் கொண்ட நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அன்னவர்களின் திருமுடிகளில் ஒன்று இவர்களிடம் இருந்தது.
அந்த ஷெய்ஹிடத்தில் ஆறுதிருமுடிகள் இருந்தன. தனது மரணம் நெருங்கிய போது அவற்றை
மூன்று பேர்களுக்கு சமமாக பங்கிட்டார்கள். அவர்களில் இவர்களும் ஒருவர். அவற்றில்
ஒரு முடி தவறி விட்டது. அந்தத் திருமுடி கொண்டு நான் பறகத் பெற்றேன்.

 

அதன் பின் இவர்களின்
மகன் அபூஹாமித் அல்முர்ஷிதீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களிடம் இந்தத் திருமுடி
காணப்பட்டது. இவர்கள் பற்றி அல் இமாம் அஸ்ஸஹாவீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் அழ்ழவ்உல்
லாமிஃ என்ற தனது கிரந்தத்தில் குறிப்பிடும் போது இவ்வாறு கூறுகின்றார்கள்.

 

இன்னும் அவர்கள் பற்றிக்
கூறும் போது “அவர்கள் சிறந்தவர்கள், சிறந்த வணக்கசாலி, அதிக வறுமை மிக்கவர்கள்
தனது தந்தையிடமிருந்து பெற்றுக் கொண்ட திருமுடிகளில் ஒன்று இவர்களிடம் இருந்தது.”
என்று கூறுகின்றார்கள்.

 

அல் அல்லாமஹ் அல் குஸ்துல்லானீ
றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் இந்தத் திருமுடியைத் தரிசித்து இருக்கிறார்கள்.

 

தங்களின் அல் மவாஹிபுல்
லதுன்னிய்யஹ் என்ற கிரந்தத்தில் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

 

சிறப்பு மிக்க மக்காவில்
ஹிஜ்ரீ 897ம் ஆண்டு துல்கஃதா மாதம் அஷ்ஷெய்ஹ் அபூஹாமித்
அல்முர்ஷிதீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களிடம் ஒரு முடியைக் கண்டேன். அது நபீ ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அன்னவர்களின்
முடி என்ற செய்தி பரவியிருந்தது. அதை நான் மகாம் இப்றாஹீம் என்ற இடத்தில்
தரிசித்தேன்.

 

மக்காவில் இருந்த இன்னுமொரு முடி

 

தன்ஸீஹுல் முஸ்தபல் முக்தார்
என்ற கிரந்தத்தில் அல் அல்லாமஹ் இப்னுல் அஜமீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் அல்
அல்லாமஹ் இப்னு ஹஜர் அல் ஹைதமீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் கூறியதாக பின்வருமாறு
கூறுகின்றார்கள்.

 

மக்காவில் நபீ
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் கண்ணியமிக்க முடிகளில் ஒரு முடி இருக்கிறது. இது பிரசித்தி பெற்ற ஓர் அம்சமாகும். இந்தத் திருமுடியை
மக்கள் தரிசிக்கிறார்கள். அது நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அன்னவர்களின் திருமுடி என்பது முன்னோரினதும், பின்னோரினதும் ஏகோபித்த முடிவாகும்.

 

தூனிசியாவில் இருந்த சில திருமுடிகள்

 

தூனீசியாவைச் சேர்ந்த நம்பிக்கை
மிக்க அறிஞர்களில் ஒருவர் அது பற்றி எங்களுக்கெடுத்துரைத்தார். அவை மூன்று இடங்களில் இருந்தன.

 

01- கண்ணியமிக்க நபீத் தோழர் ஸெய்யிதுனா உபைத் இப்னு அர்கம் அபூஸம்அதல் பலவா றழியல்லாஹு
தஆலா அன்ஹு அன்னவர்கள் இவர்களின் புனித கப்று கைறுவான் என்ற இடத்தில் உள்ளது.

 

நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அன்னவர்கள் ஹஜ்ஜதுல் வதாஇன் போது மினாவில் தங்களின்
முடிகளைக் களைந்தார்கள். அந் நேரம் ஸெய்யிதுனா அபூஸம்ஆ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள்
நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளை
எடுத்து தங்களின் தொப்பியினுள் வைத்தார்கள். அதனுடனேயே அவர்கள் நல்லடக்கம்
செய்யப்பட்டார்கள்.

 

அந்தத் தொப்பியினுள்
மூன்று திருமுடிகள் காணப்பட்டதாகவும், அவற்றின் ஒன்றை தனது வலது கண்ணிலும்,
இன்னுமொன்றை தனது இடது கண்ணிலும், இன்னுமொன்றை தனது நாக்கிலும் வைக்க வேண்டுமென்று
அவர்கள் வஸிய்யத் செய்ததாகவும் கூறப்படுகிறது.

 

02- ஸ்பெயினையும், தூனீசியாவையும் சேர்ந்த அமைச்சர் அஸ்ஸிராஜ் அவர்கள்
பின்வருமாறு கூறுகின்றார்கள்.

 

தூனீசியாவிலுள்ள ஷெய்ஹ்மார்களின்
வீடுகளில் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகள் காணப்படுகின்றன.
அவை தற்பொழுது “வலிய்யுல்லாஹ் அல்மர்ஜானீ” அவர்களின் ஸாவியா என்று பிரசித்தி பெற்ற
அஸ்ஸாவியதுல் பறானிய்யாவில் காணப்படுகின்றன.

 

இப்னுத் தப்பாஃ
றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.

 

அவர்களின் பேரர் அபூ
பாரிஸ் அப்துல் அஸீஸ் அவர்கள் அவற்றை எனக்குக் காட்டினார்கள். அவற்றைக் கொண்டு
நான் அருள் பெற்றேன்.

 

03- மேற்கூறிய அமைச்சரவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள் அஷ் ஷெய்ஹ் அபூ ஷஃறா
றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் கட்டிடங்கள் கட்டுவது அவர்களின் தொழிலாக
இருந்தது. ஓரிடத்தில் அவர்கள் கட்டிடப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது
அங்குள்ள ஓர் களஞ்சியத்தில் நபீ ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகள் இருப்பதைக் கண்டார்கள். அதற்குரியவர்களிடம் அதைக்
கேட்டுப் பெற்றுக் கொண்டார்கள். தன்னுடன் அந்தத் திருமுடிகளை அடக்க வேண்டுமென்றும்
வஸிய்யத் செய்தார்கள். இதை தூனீசியா மக்கள் நன்கறிந்தவர்கள்.

 

04- எகிப்திலுள்ள அல் ஹுலாதீ என்பவரிடம்
காணப்பட்ட திருமுடி

அல் ஹாபிழ் இப்னு ஹஜர்
அல் அஸ்கலானீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் இவர் பற்றி தங்களின் அத்துறறுல்
காமினஹ் என்ற கிரந்தத்தில் பின்வருமாறு கூறுகிறார்கள்.

 

இவர்கள் அஸ்ஸெய்யித் அலிய்யுப்னு
முஹம்மத் இப்னுல் ஹஸன் அல்ஹுலாதீ அல்ஹனபீ அல்காதூஸீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களாகும்.
இவர்களிடம் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஒட்டகை அல்லது குதிரையில்
ஏறும் சந்தர்ப்பத்தில் தங்களின் அருள் நிறைந்த கால்களை வைத்து ஏறும் இரும்பினாலான படி (அர்ரிகாப்) போன்றது இருந்தது இதனால் அவர்கள்
“அர்ரிகாபீ” என்று அழைக்கப்பட்டார்கள்.

 

இதே போன்று இவர்களிடம் நபீ
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளும் இருப்பதை தான் உறுதி கொள்ளவதாக
கூறுகின்றார்கள்.

 

05- எகிப்திலுள்ள மத்ரசது இப்னிஸ்ஸமன் என்ற
இடத்திலுள்ள திருமுடி

அல் அல்லாமா அஸ்ஸஹாவீ றழியல்லாஹு
தஆலா அன்ஹு அன்னவர்கள் அழ்ழவ் உல்லாமிஃ என்ற தங்களின் நூலில் இவர்கள் பற்றி பின்வருமாறு
கூறுகின்றார்கள். டமஸ்கஸைச் சேர்ந்த ஸம்ஸுத்தீன் முஹம்மத்
இப்னு உமர் இப்னு முஹம்மத் இப்னு உமர் அஸ்ஸமன் அல் குறஷீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள்
இப்னுஸ்ஸமன் என்று பிரசித்தி பெற்றிருந்தார்க்கள். ஹிஜ்ரீ
824 ம் ஆண்டு பிறந்தார்கள் ஹிஜ்ரீ 897ம் ஆண்டு
மரணித்தார்கள். தனது தந்தையைப் போன்று இவர்களும் வியாபாரத்தில்
ஈடுபட்டிருந்தார்கள். அதிகமான மார்க்க அறிஞர்களை சந்தித்திருக்கிறார்கள்.
பல நல்லடியார்களையும் சந்தித்திருக்கிறார்கள். அவர்கள் சந்தித்த நல்லடியார்களில் சிலர் அற்புதங்கள் நிறைந்தவர்களாகக் காணப்பட்டார்கள்.
அவற்றைக் கொண்டு அவர்கள் பிரயோசனம் பெற்றார்கள்.

 

இவர்கள் சந்தித்த நல்லடியார்களில்
பீர் ஜமால் ஷீறாஸீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களும் ஒருவர். இவர்களிடம் நபீ ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அன்னவர்களின் அருள் நிறைந்த முடி காணப்பட்டது. அதை இவர்களுக்கு
அன்பளிப்புச் செய்தார்கள். அது தன்னிடம் இருப்பதாக அவர்கள் கூறினார்கள்.

 

இதே போன்று ஹைபர் யுத்தத்தின்
போது நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அருள் நிறைந்த பாதம்
பதிந்த கல் ஒன்றையும் இவர்களுக்கு எடுத்துக் காட்டப்பட்டது.

 

இதே போன்று நபீ
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களிடம் வஹ்யுன் – வஹீ எழுதியவர்களில் ஒருவரின்
கையெழுத்துப் பிரதியும் இவர்களுக்கு எடுத்துக் காட்டப்பட்டது.

 

இவை அனைத்தும் பூலாக் கரையோரம் அமைக்கப்பட்டுள்ள
மத்றஸஹ்வில் பாதுகாக்கப்படுகின்றன.

 

06- கான்காஹ் என்ற இடத்திலுள்ள
பர்ஸபாய் ஜும்அஹ் மஸ்ஜிதிலுள்ள அருள் நிறைந்த முடிகள்

கான்காஹ் என்பது பிரசித்தி
பெற்ற கெய்ரோவின் வட பகுதியிலுள்ள ஓர் கிராமம். மன்னர் அந்நாஸிர் முஹம்மத்
இப்னு குலாவூன் என்பவர் இந்த இடத்தில் ஸுபிய்யஹ்களுக்கென்று தியான மண்டபம் ஒன்றையும், ஓர் பள்ளிவாயிலையும், குளியலறை போன்ற சில வசதிகளையும்
அமைத்தார். ஹிஜ்ரீ 723 ம் ஆண்டு இது இடம்
பெற்றது.

 

இந்த இடத்தைச் சூழக் குடியிருப்பதற்கு
மக்கள் விரும்பினர். எனவே அதனைச் சூழ வீடுகளையும்,
கடைகளையும் கட்டினர். அது பெரிய நகரமாகவே மாறியது.
இன்று வரை அந்த ஊர் காணப்படுகிறது. பொது மக்கள்
அதை “ அல் ஹானிகஹ்” என்றழைக்கிறார்கள்.

 

மன்னர் அல் அஷ்ரப் பர்ஸபாய்
அத்துர்குமானீ அவர்கள் ஹிஜ்ரீ 825ம் ஆண்டு எகிப்தின் அதிகாரத்தைப் பெற்றார்.
ஹிஜ்ரீ 832ம் ஆண்டு ஆமித் என்ற பிரதேசத்தைக் கைப்பற்ற
நினைத்த அவர் இப்பிரதேசத்தின் ஒதுக்குப் புறமான ஓரிடத்தில் இறங்கி பின்வருமாறு நேர்ச்சை
செய்தார்.

 

“ அல்லாஹு தஆலா என்னை
உயிர் பெறச் செய்து, எதிரியுடனான யுத்தத்தில் என்னை வெற்றி பெறச்
செய்து, ஈடேற்றம் பெற்ற நிலையில் நான் திரும்பி வந்தால் இவ்விடத்தில்
மத்றஸஹ் ஒன்றையும், வழிப்போக்கர்கள் தங்குமிடம் ஒன்றையும் கட்டுவேன்.

 

யுத்தத்தில் வெற்றி பெற்று
அவர் திரும்பிய போது அவ்விடத்தில் பாரிய ஓர் ஜும்அஹ் பள்ளியை அமைத்தார். பல நிறங்களுடைய மாபிள் கற்கள் கொண்டு அதனை அழகுபடுத்தினார் அதனருகில் பிரயாணிகள்
தங்குமிடம் ஒன்றையும் கட்டினார்.

 

லதாயிபு அக்பாரில் அவ்வல்
என்ற தனது வரலாற்று நூலில் அல் அல்லாமஹ் அல் இஸ்ஹாகீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள்
பின்வருமாறு கூறுகிறார்கள். மேலே கூறப்பட்ட ஜும்அஹ் பள்ளிவாயலின்
மிஹ்றாபில் அண்ணல் நபீ ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளில் ஒன்பது திருமுடிகள் இருக்கின்றன.

 

இந்த விடயத்தை ஓர் கவிஞர்
தனது கவிதையில் பின்வருமாறு கூறுகின்றார்.

மன்னர் அல் அஷ்ரப் கான்காஹ்
என்ற இடத்தில் அதன் கூலி கொண்டு அருள் பெறுவதற்காக ஓர் ஜும்அஹ் பள்ளிவாயிலை நிர்மாணித்தார். நபீ முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அன்னவர்களின் சுவடுகளைக் கொண்டு வந்தார். அன்னவர்களின் திருமுடிகள் அதன்
மிஹ்றாபில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதன் இமாம் மக்கள் மத்தியில் உபகாரம்
செய்து கொண்டிருக்கிறார். இவ்வாறே நீதிவான்களும் அதன் வாசலில் சாட்சிகளுடன் நின்று
கொண்டிருக்கின்றனர்.

 

அல் அல்லாமஹ் அப்துல் கனீ
அந்நாபுலுஸீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் 12ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்
எகிப்துக்கு பிரயாணம் சென்ற போது கான்காஹ் என்ற இந்த ஊருக்கும் சென்றார்கள். அங்கே
தங்கினார்கள்.

 

அல் ஹகீகது வல் மஜாஸ்
பீரிஹ்லதிஷ் ஷாமி வமிஸ்ற வல் ஹிஜாஸ் என்ற தனது நூலில் பின்வருமாறு கூறுகிறார்கள்.

 

அல் அஷ்றப் பர்ஸபாய்
மத்றஷஹ்வை நினைவு கூரும் போது

மேற் கூறப்பட்ட ஊரில்
மன்னர் அல் அஷ்றபின் ஜும்அஹ் பள்ளிவாயல் இருக்கிறது. அது பாரிய ஓர் ஜும்அஹ்
பள்ளிவாயல். ஏனைய ஜும்அஹ் பள்ளிவாயல்களுக்கு மத்தியில் இதற்கு ஓர் தனிச் சிறப்பு
உண்டு. அது தான் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம்
அன்னவர்களின் திருமுடிகள் அதன் மிஹ்றாபில் காணப்படுவதாகும். என்று கூறுகிறார்கள்.

 

07- மன்ஜக் அல் யூஸுபீ அவர்களிடம் காணப்பட்ட
சில முடிகள்

ஹிஜ்ரீ 776
ம் ஆண்டு கெய்ரோவில் மரணித்த அல் அமீர் ஸைபுத்தீன் மன்ஜக் அல் யூஸுபீ
அந்நாஸிரீ றஹிமஹுல்லாஹ் ஹனபீகளுக்காக அமைத்த அல்மத்றஸதுல் மன்ஜகிய்யஹ் பற்றிக் கூறும்
போது அல்அல்லாமஹ் அந்நயீமீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

 

“இவர் (மன்ஜக் அல்யூஸுபீ) அண்ணல் முஹம்மத் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அன்னவர்களின் திருமுடி கொண்டு வெற்றி பெற்றிருப்பதானது இவர்
சீதேவீ என்பதன் அடயாளமாகும்.”

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 

தொடர் – 06

 

இற்றை வரை பாதுகாக்கப்படும் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அன்னவர்களின் திருமுடிகள்

 

கெய்ரோவிலுள்ள அல்மஸ்ஜிதுல் ஹுஸைனீயிலுள்ள திருமுடிகள்

 

“குப்பதுல்
கவ்ரீ” என்ற
இடத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின்
சுவடுகளுடன் காணப்பட்ட இரண்டு திருமுடிகள் அண்ணலாரின் சுவடுகள் இப் பள்ளிவாயலுக்கு
கொண்டு வரப்பட்ட நேரத்தில் அவையும் கொண்டு வரப்பட்டன.

 

இவ்விரண்டு திருமுடிகளும் பாதுகாக்கப்பட்ட கண்ணாடியில்
வெள்ளியினாலான சிறிய பெட்டியில் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பெட்டி அலங்கரிக்கப்பட்ட
பச்சை நிறப்பட்டினால் சுற்றப்பட்டுள்ளது.

 

பின்னர் இவ்விரு திருமுடிகளுடனும் அல் அல்லாமஹ் அஹ்மத்
தல்அத் பாஷா அவர்களிடமிருந்த திருமுடியும் சேர்க்கப்பட்டது.

 

இவர்கள் எகிப்தைச் சேர்ந்த பிரசித்தி பெற்ற ஓர் அறிஞர்.
சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். இவர்களிடம் காணப்பட்ட திருமுடி
குஸ்துந்தீனிய்யாவுக்கு இவர்கள் பயணம் செய்த நேரத்தில் அரசனால் இவர்களுக்கு
அன்பளிப்புச் செய்யப்ட்டது என்பது பிரசித்தி பெற்ற ஓர் விடயமாகும்

 

நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அருள் நிறைந்த இந்த முடியை ஹிஜாஸ் வாசிகளில்
ஒருவர் இவர்களுக்கு வழங்கினார்கள் என்பதும் அதற்காக அவருக்கு இவர்கள் அதிக
அன்பளிப்புக்களை வழங்கினார்கள் என்பதும் அவர்களின் குடும்பத்தினரின் கருத்தாகும்.

 

இவர்கள் மரணித்த போது மஸ்ஜிதுல் ஹுஸைனீயில்
பாதுகாக்கப்படுகின்ற நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் சுவடுகளுடன் இந்தத் திருமுடியும்
பாதுகாக்கப்பட வேண்டுமென்பதற்காக இப்பள்ளிவாயலுக்கு இந்தத் திருமுடியினை அவர்களின்
புதல்வர்கள் அன்பளிப்புச் செய்ய முடிவு செய்தனர். அவர்களிடம் அது ஒரு போத்தலில் பாதுகாக்கப்பட்டதாக இருந்தது. அவருடைய மூத்த மகள் அஸ்ஸெய்யிதஹ் ஹதீஜஹ் என்பவர் இந்தத்
திருமுடி பாதுகாக்கப்படுவதற்காக வெள்ளியினாலான பெட்டி ஒன்றை அன்பளிப்புச் செய்தார். அதில் கண்ணாடி ஒன்று வைக்கப்பட்டது. பின்னர் பச்சை நிறப்பட்டினால் ஏழு சுற்றுக்கள்
சுற்றப்பட்டது. பின்னர்
மிகவும் கண்ணியத்துடனும், மரியாதையுடனும்
மேற்கூறப்பட்ட பள்ளிவாயிலுக்கு சுமந்து செல்லப்பட்டு, அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின்
ஏனைய சுவடுகளுடன் இந்தத் திருமுடியும் பாதுகாக்கப்பட்டது.

 

ஹிஜ்ரீ 1340 அல்லது 1341ல்
இந்தத் திருமுடியுடன் “தக்கிய்யதுல்
குல்ஷனீ” என்ற
இடத்தில் இருந்த நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் சில திருமுடிகளும் சேர்க்கப்பட்டன. அவை சிவப்பு மெழுகினால் முத்திரையிடப்பட்ட ஓர் போத்தலில்
இருந்தன. இன்னும்
அந்தத் திருமுடிகள் மரத்தினாலும், கண்ணாடியினாலும்
செய்யப்பட்ட ஓர் பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பெட்டி அபூர்வமான அராபியக் கலாச்சாரம் கொண்டு
வடிவமைக்கப்பட்ட ஓர் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்தது.

 

ஹிஜ்ரீ 1342 ஷவ்வால் மாதம் கெய்ரோவிலுள்ள அல்முப்ததயான் வீதியில்
குடியிருந்த அல்ஹாஜ்ஜஹ் மலிகஹ் ஹாழினஹ் என்பவர் அந்நேரம் எகிப்தின் அரசராகவிருந்த
கமாலுத்தீன் இப்னுஸ் ஸுல்தான் ஹுஸைன் அவர்களை வரவழைத்து அவர் மூலம் அல்மஸ்ஜிதுல்
ஹுஸைனீக்கு சிறிய போத்தல் ஒன்றை அன்பளிப்புச் செய்தார். அதில் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின்
சிறப்பு மிக்க சில தாடி முடிகள் இருப்பதாகவும் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின்
ஏனைய அருள் நிறைந்த சுவடுகளுடன் இவையும் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதற்காக இவற்றைத்
தான் அன்பளிப்புச் செய்வதாகவும் கூறினார்.

 

அந்த போத்தல் பச்சை நிறமுடைய பட்டுத் துணி கொண்டு
சுற்றப்பட்டிருந்தது. சிவப்பு
நிற பட்டுத் துணி கொண்டு சுற்றப்பட்ட சிறிய பெட்டியில் அது வைக்கப்பட்டிருந்தது. பச்சை நிறப் பட்டினால் மூன்று சுற்றுக்கள் கொண்டு அது
சுற்றப்பட்டிருந்தது. பின்னர்
அதிக வாசம் நிறைந்த “பனப்ஸஜ்” என்ற மலர் கொண்டு ஓரங்கள் அலங்கரிக்கப்பட்ட பட்டுத்
துணியினால் அது சுற்றப்பட்டிருந்தது.

 

கெய்ரோவிலுள்ள அந்நக்ஷபந்திய்யஹ் தக்கிய்யஹ்வில் காணப்படும்
திருமுடி

 

“அந்நக்ஷபந்திய்யஹ்
தக்கிய்யஹ்” என்று
பிரசித்தி பெற்ற இந்த தக்கிய்யஹ் எகிப்தை ஆட்சி செய்த அப்பாஸ் பாஷா அல்கபீர்
என்பவரால் அமைக்கப்பட்டதாகும். இதை
அப்பாஸ் பாஷா அமைத்ததற்குக் காரணம் அஷ்ஷெய்ஹ் முஹம்மத் ஆஷிக் அந்நக்ஸபந்தி
அவர்களிடத்தில் அவர் கடும் நம்பிக்கை கொண்டிருந்தார். தானும், தன்னுடனிருக்கின்ற
ஏனைய ஸுபிகளும் தங்குவதற்கும், வணக்கத்தில்
ஈடுபடுவதற்கும் ஓர் இடத்தை அமைத்து  தரும்படி அவரிடம் அவர்கள் கோரினார்கள்.

 

அப்பாஸ் பாஷா ஹிஜ்ரீ 1268ல்
இந்தத் தக்கிய்யஹ்வை அமைத்தார். ஸுபிகள்
வணக்கத்தில் ஈடுபடுவதற்கான வசதிகளை ஏற்படுத்தினார். அவர்களின் ஷெய்ஹ் – குருவுக்கு ஓர் வீட்டையும் அமைத்துக் கொடுத்தார். அந்த இடத்தில் ஓர் பூங்காவையும் அமைத்தார். அதற்கு அதிகமான சொத்துக்களை “வக்ப்” செய்தார்.

 

அஷ் ஷெய்ஹ் முஹம்மத் ஆஷிக் றழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள்
ஹிஜ்ரீ 1300ல் மரணித்த போது அங்குள்ள ஓர் வீட்டில் நல்லடக்கம்
செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு
ஆண் மக்கள் வாரிசாக அமையவில்லை. அதனால்
அதன் அதிகாரம் அவர்களின் பேரன் அஸ்ஸெய்யித் உத்மான் ஹாலித் அவர்கள் வசம் கிடைத்தது.

 

அப்பாஸ் பாஷாவின் தாய் ஹஜ்ஜுக்கு சென்ற போது அண்ணல்
முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடி ஒன்று அவருக்கு அன்பளிப்புச்
செய்யப்பட்டது. அதை
அவர் தனது தாயகம் கொண்டு வந்தார்.

 

அவருக்கு மரணம் நெருங்கிய போது அஷ் ஷெய்ஹ் முஹம்மத் ஆஷிக்
றழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களிடம் அந்தத் திருமுடியை அவர் ஒப்படைத்து மக்கள்
இதனைக் கொண்டு பறகத் – அருள் பெற வேண்டுமென்பதற்காக அந்நக்ஸபந்திய்யஹ்
தக்கிய்யஹ்வில் அதனைப் பாதுகாக்கும் படி கேட்டுக் கொண்டார்.

 

அதனுடன் மெழுகு ஒரு துண்டு சேர்க்கப்பட்டு ஒன்றுடன் ஒன்று
இணைந்த மூன்று சிறிய பெட்டிகளில் அது பாதுகாக்கப்படுகிறது.

 

அஷ் ஷெய்ஹ் முஹம்மத் ஆஷிக் றழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள்
அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த இரவிலும், இஸ்றாவுடைய இறவிலும் மக்களின் பார்வைக்காக அதை வைத்து அதை
ஒரு விழாவாக கொண்டாடுவார்கள். இந்த விழாவுக்கு மார்க்க அறிஞர்கள், அரச உயர் அதிகாரிகள், தலைவர்களை
அவர்கள் அழைப்பார்கள். அவர்களுக்கு விருந்து வழங்கி அவர்களைக்
கௌரவிப்பார்கள்.

 

பின்னர் அந்தப் பெட்டிகளிலிருந்து நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின்
திருமுடியை வெளியிலெடுத்து அவர்களின் கண்களில் அதைக் கொண்டு அவர்கள் தடவுவார்கள்.
அவர்களின் மரணத்தின் பின் இந்த விழா நின்று விட்டது.

 

அவர்களின் பேரன் அந்தத் திருமுடி காணப்பட்ட பெட்டிகளை
எடுத்து பாரிய ஓர் பெட்டியினுள் அதனை வைத்து அவரின் பாட்டனின் கப்று இருக்கின்ற
அறையில் அதனைத் தொங்கவிட்டார். இன்று வரை அது அவ்வாறே காணப்படுகின்றது.

 

குஸ்துந்தீனிய்யஹ்விலுள்ள திருமுடிகள்

 

குஸ்துந்தீனிய்யஹ்விலுள்ள அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின்
அருள் நிறைந்த முடிகள் பற்றிக் கூறியவர்களில் மிக முக்கியமானவர் “ஹைபா” என்ற
இடத்தைச் சேர்ந்த அல் அல்லாமஹ் அஸ்ஸெய்யித் அப்துல்லாஹ் முஹ்லிஸ்” என்பவர்கள்.

 

அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

ஐந்தாவது முஹம்மத் என்று பிரசித்தி பெற்றிருந்த மன்னர் முஹம்மத்
றஷாத் இப்னு அப்தில் மஜீத் என்பவர் ஆட்சியை கைப்பற்றிய நேரத்தில் அண்ணல் முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் 43 திருமுடிகள் அருள் நிறைந்த நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின்
சுவடுகளுடன் பாதுகாக்கப்பட்டிருந்தன. அவற்றில் 24 முடிகளை உத்மானிய ஆட்சியிலிருந்த ஓர் நகருக்கு அவர்
அன்பளிப்பாக வழங்கினார். 19 முடிகள்
இன்று வரையும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

 

இவரின் பின்னர் பல மன்னர்களின் ஆட்சி இடம் பெற்றது.

மன்னர் றஷாத் அவற்றில் ஒரு திருமுடியை போபாலின் அரசிக்கு
அன்பளிப்பு செய்ததாகவும், இன்று
வரை 18 திருமுடிகள்
மாத்திரம் பாதுகாக்கப்படுவதாகவும் கூறப்படுகறது.

 

குஸ்துந்தீனிய்யஹ்விலுள்ள வேறு சில திருமுடிகள்

 

இங்குள்ள ஓர் பள்ளிவாயலில் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின்
சில திருமுடிகள் காணப்படுகின்றன என்பது அறியப்பட்ட ஓர் விடயமாகும். அவை
பலஸ்தீனிலுள்ள மூன்று நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

 

எகிப்தின் முப்தீயாக விழங்கிய அல் அல்லாமஹ் அஷ் ஷெய்ஹ்
அப்துர் றஹ்மான் குறாஆ அவர்கள் உத்மானிய்ய ஆட்சியில் இறுதி காழியாக விழங்கிய நூரீ
அபந்தீ அவர்களைப் பற்றிக் கூறும் போது அவர்களிடம் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின்
திருமுடிகள் இருந்தன என்று கூறுகின்றார்கள்.

 

அவை அவர்களின் தாயின் குடும்பத்தில் பாதுகாக்கப்பட்டு
பரம்பரையாக வந்த மூன்று திருமுடிகள். அவர்களின் சாச்சி அவற்றைப் பாதுகாத்தவர்களில்
இறுதியானவர்.

 

தன்னை விட அவர்கள் அந்தத் திருமுடிகளை பாதுகாப்பதற்குத்
தகுதியானவர்கள் என்பதைக் கண்ட அவர் அவற்றை பாதுகாக்கும் பொறுப்பை அவர்களிடம்
ஒப்படைத்தார் அவை அவர்களின் குடும்பத்தில் பாதுகாக்கப்பட்டன. இந்தத் திருமுடிகள் இப்பொழுது எங்குள்ளன என்பதை அறிய
முடியவில்லை.

 

டமஸ்கஸிலுள்ள அல் மஷ்ஹதுல் ஹுஸைனீயிலுள்ள திருமுடி

 

 

மன்னர் அப்துல் அஸீஸ் என்பவர் இந்த இடத்தில் பாதுகாக்கப்பட
வேண்டுமென்பதற்காக நபித்துவத்தின் சுவடுகளில் ஒரு முடியை இந்த இடத்துக்கு அனுப்பி
வைத்தார். இந்த
இடத்தில் அது மிகவும் கண்ணியமாகப் பாதுகாக்கப்பட்டது. இன்று வரை மக்கள் அதை ஓர் விழாவாக கொண்டாடி வருகின்றனர்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 

 

தொடர் – 07

 

 

ஒவ்வொரு வருடமும் புனித றமழான் மாதம் 27ம் இரவு மக்களின் பார்வைக்காக அந்தத் திருமுடி வெளியில் வைக்கப்பட்டு அதை ஓர் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

 

தறாவீஹ் தொழுகையின் பின் மக்கள் அந்தத் திருமுடியை தரிசனம் செய்வார்கள். அந்நேரம் காரீகள் அல்குர்ஆனை ஓதுவார்கள். பின்னர் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது ஸலவாத் கூற ஆரம்பிப்பார்கள். கண்கானிப்பாளர் அந்தத் திருமுடியினை தனது கையில் எடுத்து மக்கள் அதனை முத்தமிடுவதற்காக வழங்குவார். மக்கள் அதனை முத்தமிட்டு அருள் பெறுவர். மக்களின் தரிசனம் முடியும் வரை அங்கே ஸலவாத் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கும்.

 

பின்னர் உரிய முறையில் அந்தத் திருமுடியை பாதுகாப்பாக பெட்டியில் வைத்து அதற்குரிய இடத்தில் மிக கண்ணியமாக அதை வைக்கப்படும்.

 

(அல் மஷ்ஹதுல் ஹுஸைனீ) என்ற அருள் நிறைந்த இந்த இடம் ஸிப்துர் றஸுல் ஸெய்யிதுனா ஹுஸைன் ஷஹீதே கர்பலா றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களின் அருள் நிறைந்த தலை நல்லடக்கம் செய்யப்பட்ட ஓர் இடம் என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும்.

 

டமஸ்கஸிலுள்ள மகாமுத் தவ்ஹீதிலுள்ள திருமுடி

 

அஸ்ஸெய்யித் ஸஃதுத்தீன் அல்ஜபாவீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களின் இடம் தான் மகாமுத் தவ்ஹீத் என்று அழைக்கப்படுகிறது.

இந்த இடத்தின் ஷெய்ஹாக இருந்த அஷ்ஷெய்ஹ் பத்றுத்தீன் அஸ்ஸஃதீ அவர்களிடம் இந்தத் திருமுடி பற்றி அஸ்ஸெய்யித் ஸயீத் அல் ஹம்ஸாவீ அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள் “தனது தந்தை அஷ்ஷெய்ஹ் இப்றாஹீம் ஸஃதுத்தீன் அவர்கள் அவர்களின் தந்தை அஷ்ஷெய்ஹ் முஹம்மத் ஸஃதுத்தீன் அவர்களின் மூலம் இந்தத் திருமுடியைப் பெற்று அதனைக் கொண்டு சிறப்பைப் பெற்றார்கள். அவர்கள் அவர்களின் தந்தை அஷ்ஷெய்ஹ் முஹம்மத் அல் அமீன் அவர்கள் மூலம் பெற்று அதனைக் கொண்டு சிறப்பைப் பெற்றார்கள். இவ்வாறு சங்கிலித் தொடராக அவர்களின் பாட்டன்மார் மூலமாக இந்தத் திருமுடி கிடைக்கப் பெற்றது”. என்று கூறினார்கள்.

 

அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் இந்தத் திருமுடியைக் கொண்டு மக்கள் அருள் பெற வேண்டுமென்பதற்காக அவர்களின் பாட்டன்மார், முன்னோர் செய்தது போன்று இவர்களும் இந்தத் திருமுடியை நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த இரவன்றும், மிஃறாஜுடைய இரவன்றும், றமழானுடைய 27ம் இரவன்றும் மக்களின் பார்வைக்காக வைப்பார்கள்.

 

பைதுல் முகத்தஸிலுள்ள திருமுடி

 

நபீ முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடி இங்கு விஷேட அறையில் பாதுகாக்கப்படுகிறது. ஆரம்பகாலம் தொட்டு இவ்விடத்தில் அது பாதுகாக்கப்படுகிறது என்பது மிகச் சரியான ஓர் கருத்தாகும். இந்தத் திருமுடியின் பொறுப்பு “அந் நபஹானீ” குடும்பத்தாருக்கு வழங்கப்பட்டுள்ளது. மக்களின் தரிசனத்திற்காக ஒவ்வொரு வருடமும் றமழான் 27ம் நாள் இந்தத் திருமுடி வைக்கப்படுகிறது.

 

உக்கா, ஹைபா ஆகிய இடங்களிலுள்ள இரண்டு திருமுடிகள்

 

இவ்விரண்டு இடங்களும் பலஸ்தீனிலுள்ள இரண்டு ஊர்களாகும். குஸ்துந்தீனிய்யஹ்வில் பாதுகாக்கப்பட்ட அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளில் இரண்டு திருமுடிகள் இங்கே காணப்படுகின்றன. இவ்விரண்டு திருமுடிகளையும் மன்னர் முஹம்மத் றஷாத் அவர்கள் இவ்விரண்டு ஊர் மக்களுக்கும் அன்பளிப்புச் செய்தார். அவ்விரண்டு திருமுடிகளில் ஒன்று உக்காவிலுள்ள அஹ்மத் பாஷா பள்ளிவாயிலிலும், மற்றது ஹைபாவிலுள்ள பெரிய ஜும்அஹ் பள்ளிவாயிலிலும் பாதுகாக்கப்படுகிறது. இவ்விரண்டு இடங்களிலும் றமழான் மாதம் 27ம் இரவன்று மக்களின் பார்வைக்காக அவை வைக்கப்படுகின்றன.

 

ஸப்த், தபரிய்யா, அந் நாஸிறா ஆகிய இடங்களிலுள்ள மூன்று திருமுடிகள்

 

இவை பலஸ்தீனிலுள்ள ஊர்கள் இந்தத் திருமுடிகள் குஸ்துந்தீனிய்யஹ்விலுள்ள ஓர் பள்ளிவாயிலில் இருந்தவையாகும்.மன்னர் முஹம்மத் றஷாதினுடைய கட்டளையின் படி இவை இந்த ஊர்களுக்குக் கொண்டு வரப்பட்டன.

 

அவற்றில் ஒரு முடி ஸப்திலுள்ள யஃகூப் குகை பள்ளிவாயிலிலும், மற்றயமுடி தபரிய்யாவிலுள்ள அல்மஸ்ஜிதுல் அம்ரீயிலும், மற்றய முடி அந் நாஸிறாவிலுள்ள அலீ பாஷா பள்ளிவாயிலிலும் காணப்படுகின்றன.

ஹிஜ்ரீ 1332ம் வருட இறுதியில் நடைபெற்ற பாரிய யுத்தத்தின் போது அந் நாஸிறாவிலிருந்த அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடி திருடப்பட்டது.

 

மன்னர் முஹம்மத் றஷாத் அவர்கள் உக்கா, ஹைபா ஆகிய இரண்டு ஊர்களுக்கும் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் இரண்டு திருமுடிகளை அன்பளிப்புச் செய்த போது இந்த மூன்று ஊர்களையும் சேர்ந்த மக்கள் தங்களின் ஊர்களுக்கும் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளை அன்பளிப்புச் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டதற்கிணங்க மன்னர் முஹம்மத் றஷாத் அவர்கள் இந்த மூன்று ஊர்களுக்கும் மூன்று திருமுடிகளை அன்பளிப்புச் செய்தார். அவற்றைக் கொண்டு மக்கள் சிறப்புப் பெற்று, அருள் பெற்றனர்.

 

மன்னர் முஹம்மத் றஷாதினால் அன்பளிப்பச் செய்யப்பட்ட திருமுடிகள் அனைத்தும் கண்ணாடியினாலான குழாய்களில் பாதுகாக்கப்பட்டிருப்பதை தெளிவாகக் காணமுடியும். ஒவ்வொரு குழாயும் பல நிறங்களுடைய 40 பட்டுத் துண்டுகளினால் சுற்றப்பட்டிருந்தது.

 

ஒவ்வொரு வருடமும் றமழான் மாதம் 27ம் நாள் அஸ்ர் தொழுகையின் பின் அவை மக்களின் பார்வைக்காக வைக்கப்படும். மக்கள் அதை தரிசித்து அருள் பெறுவார்கள்.

 

மேற்கு தறாபுலுஸிலுள்ள இரண்டு திருமுடிகள்

 

அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் இந்த இரண்டு திருமுடிகள் பற்றியும் அஷ்ஷெய்ஹ் அந் நாஸிர் அஹ்மத் தறாபுலுஸீ அவர்கள் எங்களுக்கு பின்வருமாறு கூறினார்கள்.

 

இவ்விரண்டு முடிகளில் ஒன்று “தறாபுலுஸ்” நகரிலுள்ள தூர் அவ்த் பாஷா ஜும்அஹ் பள்ளிவாயலில் மிக அழகிய அறை ஒன்றில் பாதுகாக்கப்படுகிறது. அது ஒரு வட்டமான கண்ணாடி போத்தலில் காணப்படுகிறது. இந்த போத்தல் சிறிய பட்டுத் துண்டுகளால் சுற்றப்பட்டுள்ளது. அது கருங்காலி மரத்தினாலான ஒரு பெட்டியில் பாதுகாக்கப்படுகிறது.

 

ஷஃபான் மாதம் 15ம் இரவிலும், மிஃறாஜுடைய இரவிலும் அந்தத் திருமுடியை மக்களின் பார்வைக்காக வைக்கப்படும். அருள் பெறும் நோக்கில் மக்கள் தங்களுக்கிடையில் முண்டியடித்துக் கொண்டு அதனை முத்தமிடுவார்கள்.

 

அந்த முடிக்கென்று ஒருவர் பொறுப்பாக இருப்பார்.  அவர் அந்த முடியை தனது கையில் எடுத்து அதை மக்கள் முத்தமிடுவதற்காக அவர்களுக்கு வழங்குவார். இதற்காக அவ்காப் அமைச்சினால் இவருக்கு சம்பளம் வழங்கப்படுகிறது.

 

இது குஸ்துந்தீனிய்யஹ்வில் இருந்த முடியாகும். அதை மன்னர் அஹ்மத் ஹாஷிம் பாஷா தறாபுலுஸுக்குக் கொண்டு வந்தார்.

 

இரண்டவது முடி உத்மான் ஜும்அஹ் மஸ்ஜித் என்று பிறசித்தி பெற்ற றாஷித் பாஷா என்ற ஜும்அஹ் பள்ளியில் இருக்கிறது. பெரிய ஜும்அஹ் பள்ளியிலிருந்து அதை இங்கு கொண்டு வரப்பட்டது. கிழக்குப் பக்கத்தின் உள்ளிருந்து ஜும்அஹ் பள்ளிவாயலின் மேலுள்ள ஓர் அறையில் அதை வைக்கப்பட்டுள்ளது. விலையுயர்ந்த பட்டினால் சுற்றப்பட்ட ஓர் கண்ணாடி போத்தலில் அது வைக்கப்பட்டுள்ளது. அது கருங்காலி மரத்தினாலான ஓர் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட நாட்களில் மக்களின் பார்வைக்காக அது வைக்கப்படுகிறது. அதைக் கண்காணிக்கும் பொறுப்பு முப்தீக்கு வழங்கப்படுகிறது.

 

இந்தியாவின் போபாலிலுள்ள திருமுடி

 

போபாலின் அரசியாக விளங்கிய சுல்தான் ஜஹான் பேஹம் ஐரோப்பாவுக்கும், குஸ்துந்தீனிய்யாவுக்கும் பிரயாணம் செல்லும் வழியில் மன்னர் முஹம்மத் றஷாத் அவர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் இந்த அரசிக்கு அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளில் ஒன்றை அன்பளிப்புச் செய்தார்.

 

போபாலைச் சேர்ந்த சிறந்த இலக்கியவாதி அஸ்ஸெய்யித் அபூ நஸ்ர் அஹ்மத் பின்வருமாறு கூறுகின்றார்.

 

அரசி சுல்தான் ஜஹான் பேகம் தனது ஊருக்குத் திரும்பிய போது தனக்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடியை அங்குள்ள பெரிய ஜும்அஹ் பள்ளிவாயலில் ஒப்படைப்பதெனத் தீர்மானித்தார்.

 

அண்ணலின் திருமுடியை மிக கண்ணியமாக ஓர் பெட்டியில் வைத்து, போபாலின் அரசராக விளங்கிய அவருடைய மகனை அந்தப் பெட்டியை சுமக்கும் படி கூறினார். அரசர் அருள் நிறைந்த முடி வைக்கப்படிருந்த அந்தப் பெட்டியை தனது தலையில் சுமந்து சென்றார்.

 

மக்கள் அந்தப் பெட்டியை முத்தமிட்டு, அருள் பெறுவதற்காக தங்களுக்கிடையில் முண்டியடித்துக் கொண்டார்கள். மிகவும் சிரமத்தின் பின் அந்தப் பெட்டி பள்ளிவாயலை வந்தடைந்தது. பின்னர் இந்தத் திருமுடியை மக்கள் பார்த்து அருள் பெறும் நோக்கில் அதனை ஒரு விழாவாகக் கொண்டாடினர். பின்னர் சில உலமாஉகளின் குறுக்கீட்டினால் இந்த விழா நிறுத்தப்பட்டது. அதனை மிகவும் கண்ணியமாக ஓர் பெட்டியில் வைத்து பாதுகாக்கப்படுகிறது.

 

வுஜுதின் தலைவர் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் முடியுடன் தொடர்புடைய சில செய்திகளை நாம் தொகுத்திருக்கிறோம். சரி எது? பிழை எது? என்பதை அல்லாஹுத் தஆலாவே மிக அறிந்தவன்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 

தொடர் – 08

 






ஹன்பலீ மத்ஹபின் ஸ்தாபகர், இமாமுனா அபூ அப்தில்லாஹ் அஹ்மத் இப்னு ஹன்பல் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களிடம் காணப்பட்ட அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அருள் நிறைந்த முடிகள்.

 

ஹன்பலீ மத்ஹபின் ஸ்தாபகர் அல் அல்லாமஹ் இமாமுனா அபூ அப்தில்லாஹ் அஹ்மத் இப்னு ஹன்பல் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களிடம் அகிலத்தின் பேரொளி அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் மூன்று திருமுடிகள் காணப்பட்டன.

 

தான் மரணித்த பின் அருள் நிறைந்த அந்தத் திருமுடிகளை தனது கபனுடன் வைத்து அடக்கும் படியும், அவற்றில் ஒன்றை தனது ஒரு கண்ணிலும், மற்றதை தனது மற்றக் கண்ணிலும், மற்றதை தனது வாயிலும் வைக்கும் படியும் வஸிய்யத் செய்தார்கள்.அவர்கள் மரணித்த போது அவ்வாறே செய்யப்பட்டது.

 

அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளில் அருள் உண்டு என்பதை திடமாக நம்பியிருந்தார்கள். இமாமுனா அஹ்மத் இப்னு ஹன்பல் றழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள். தான் மரணித்த பின்னும் அவை தனக்குப் பயனளிக்கும் என்பதை நம்பியிருந்த காரணத்தால் தான் அவற்றை தனது கபனுடன் வைத்து அடக்கும் படி பணித்தார்கள்.

 

இமாமுனா அஹ்மத் இப்னு ஹன்பல் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் எதிரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளை அல் பழ்ல் இப்னுர் றபீஃ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் மூன்று முடிகளை இவர்களுக்கு வழங்கி இவை அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகள் என்று கூறினார்கள்.

 

எதிரிகளால் மிகவும் துன்புறுத்தப்பட்டவர்களில் இமாமுனா அஹ்மத் இப்னு ஹன்பல் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களும் ஒருவர். இவர்கள் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளை தங்களின் சேட்டின் கைப்பகுதியில் வைத்து தைத்திருந்தார்கள். முஃதஸம் என்பவன் அவர்களை துன்புறுத்துகின்ற வேளை அவர்களின் சேட்டின் கைப்பகுதியில் முடிச்சு போன்று ஒன்று இருப்பதைக் கண்டு இது என்ன? என்று கேட்டான். அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகள் என்று பதிலளித்தார்கள் இமாமவர்கள்.அதைத் தாருங்கள் என்று அவர்களிடமிருந்து அவற்றை எடுத்துக் கொண்டான். இந் நிலையில் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகள் அவர்களுடன் இருப்பதை அவன் காணும் பொழுதெல்லாம் அவர்கள் மீது அவன் இறக்கம் காட்டக் கூடியவனாக இருந்தான் என்று அஹ்மத் இப்னு ஸினான் என்பவர்கள் கூறுகிறார்கள்.

 

அபூபக்ர் இப்னு மகாரிம் இப்னு அபீயஃலா அல் ஹர்பீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஓர் கனவு கண்டார்கள். அதில் அவர்கள் இமாமுனா அஹ்மத் இப்னு ஹன்பல் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களிடத்தில் பின்வருமாறு கேட்டார்கள்.

 

“நாயகமே! ஏனைய கப்றுகளன்றி உங்களின் கப்று முத்தப்பமிடப்படுவதன் இரகசியம் என்ன?”

 

அதற்கவர்கள் “எனது சின்ன மகனே! இது எனக்கு வழங்கப்படும் கண்ணியமல்ல இது அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்கு வழங்கப்படும் கண்ணியம். ஏனெனில் என்னுடன் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகள் இருக்கின்றன”. என்று கூறினார்கள்.

 

இமாமுனா அஹ்மத் இப்னு ஹன்பல் றழியல்லாஹு தஅலா அன்ஹு அன்னவர்களின் புதல்வர் அப்துல்லாஹ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் பின்வறுமாரு கூறுகிறார்கள்.

 

“அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளை எனது தந்தை எடுத்து, அவற்றைத் தனது வாயில் வைத்து முத்தமிடுவதை நான் கண்டிருக்கிறேன். மாத்திரமன்றி அவற்றை தனது இரு கண்களில் வைப்பதையும் நான் கண்டிருக்கிறேன். மாத்திரமின்றி அந்தத் திருமுடிகளை நீரில் கழுவி, அந்த நீரைக் குடித்து சுகம் பெறுவதையும் நான் கண்டிருக்கிறேன்”.

 

இமாமுனா அஹ்மத் இப்னு ஹன்பல் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் மிகச் சிறந்த ஓர் அறிஞர், ஹன்பலீ மத்ஹபை ஸ்தாபித்த ஓர் மேதை. பிக்ஹ் சட்டக் கலையில் மேதையாகத் திகழ்ந்தவர்கள். இவர்கள் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளில் அருள் – பறகத் உண்டு என்பதை மிக உறுதியாக நம்பியிருந்தார்கள். இதனாற்தான் அந்த திருமுடிகளின் அருளை பெற்றுக் கொள்ளவேண்டுமென்பதற்காக தான் அணியும் சேட்டில் அதைத் தைத்திருந்தார்கள். தான் மரணித்த பின்னும் தனக்கு அவற்றின் அருள் கிடைக்க வேண்டுமென்று விரும்பிய காரணத்தினால் தான் தனது ஜனாஸஹ்வுடன் அவற்றை வைத்து அடக்க வேண்டுமென்று பணித்தார்கள். அருள் பெற்றவர்கள் அவர்கள் இவர்களின் அருளை அல்லாஹுத் தஆலா எமக்குச் சொரிவானாக.

 

அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளில் மாத்திரமல்ல அவர்கள் பாவித்த அனைத்துப் பொருட்களிலும் பறகத் – அருள் உண்டு என்பதை உறுதி கொண்டவர்கள் இமாமுனா அஹ்மத் இப்னு ஹன்பல் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள்.

 

இதனாற்தான் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பாவித்த பீங்கான் ஒன்றை தங்களிடம் பாதுகாத்து வைத்திருந்தார்கள் இமாமுனா அஹ்மத் இப்னு ஹன்பல் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் இது பற்றி இவர்களின் புதல்வர் அப்துல்லாஹ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

 

“அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பீங்கானை எனது தந்தை எடுத்து, அதை நீர்ப் பாத்திரத்தில் கழுவி, அதில் குடிப்பதை நான் கண்டிருக்கிறேன்”.

 

எனவே தான், இமாமுனா அஹ்மத் இப்னு ஹன்பல் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளில், அவர்கள் பாவித்த பொருட்களில் அருள் – பறகத் உண்டு என்பதை உறுதியாக நம்பியிருந்தார்கள் என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

 

றயீஸுல் முஹத்திதீன் இமாமுனா அபூ அப்தில்லாஹ் முஹம்மத் இப்னு இஸ்மாயீல் அல் புஹாரீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களிடம் காணப்பட்ட அண்ணலாரின் அருள் முடி.

 

ஹதீத் கலை மாமேதை அபூ அப்தில்லாஹ் முஹம்மத் இப்னு இஸ்மாயீல் அல் புஹாரீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் நிகரற்ற மாமேதை இஸ்லாமிய வரலாற்றில் அதிகம் பணிபுரிந்தவர்கள். அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் வாழ்க்கை வரலாற்றை மக்கள் முன் கொண்டு சென்ற ஓர் அறிஞர்.

 

இவர்கள் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளில் அருள் – பறகத் உண்டு என்று உறுதியாக நம்பியிருந்தார்கள். மாத்திரமன்றி அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பாவித்த அனைத்துப் பொருட்களிலும் அருளுண்டு என்பதை மிக உறுதியாக நம்பியிருந்தார்கள்.புனித ஸஹீஹுல் புஹாரீயில் பதியப்பட்டுள்ள சின்னங்கள் கொண்டு அருள் பெறுதல் சம்பந்தமான ஹதீத்கள் இதற்கு சான்றாகும்.

 

இவர்களிடத்தில் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அருள் நிறைந்த முடி காணப்பட்டது. அது அருள் பெறும் நோக்கில் தங்களின் ஆடையில் வைத்திருந்தார்கள்.

 

இது பற்றி அவர்களிடம் எழுத்தாளராகப் பணிபுரிந்த முஹம்மத் இப்னு அபீ ஹாதிம் றழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

 

“அவர்களிடம் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடி இருந்தது. அதை தனது ஆடையில் அவர்கள் வைத்திருந்தார்கள்.

 

பத்ஹுல் பாரீ

பக்கம் 645

 

இமாமுனா முஹம்மத் இப்னு இஸ்மாயீல் அல் புஹாரீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் தங்களின் ஆடையில் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடியை வைத்திருந்தார்களென்றால் அதில் அருளுண்டு என்பதை அவர்கள் நம்பியிருந்த காரணத்தினால்தான். அதன் அருள் தனக்குக் கிடைக்கும் என்று உறுதி கொண்ட காரணத்தினால்தான்.

 

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 

தொடர் – 09

 

அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

அன்னவர்களின் உமிழ் நீர் கொண்டு அருள் பெறுதல்

 

அகிலத்தின் பேரொளி அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் திருமுடியில் மாத்திரமல்ல அவர்களுடன் தொடர்புடைய அனைத்திலும் பறகத் – அருள் உண்டு என்பதே ஸுன்னத் வல் ஜமாஅத்தினரின் ஏகோபித்த கருத்தாகும். இதனாற்றான் கண்ணியமிக்க ஸஹாபஹ் – தோழர்கள் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களுடன் தொடர்புடைய அனைத்தைக் கொண்டும் பறகத் – அருள் பெற்றார்கள். நோய் நிவாரணம் பெற்றார்கள். அண்ணலின் தோழர்கள் பாக்கியம் பெற்றவர்கள்.

 

அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் புனித உடலிலிருந்து வெளியாகிய பல வஸ்துக்களைக் கொண்டு ஸஹாபஹ் – தோழர்கள் அருள் பெற்றார்கள். அவற்றில் முக்கிய இடத்தை வகிப்பது அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் அருள் நிறைந்த வாயிலிருந்து வெளியேறிய அருள் நிறைந்த உமிழ் நீர் ஆகும். அருள் நிறைந்த இந்த உமிழ் நீரைக் கொண்டு ஸஹாபஹ் – தோழர்கள் பல சந்தர்ப்பங்களில் அருள் பெற்றிருக்கிறார்கள். நோய் நிவாரணம் பெற்றிருக்கிறார்கள்.

 

தங்களின் குழந்தைகளுக்கு அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் உமிழ் நீரின் அருள் கிடைக்க வேண்டுமென்பதற்காக. அவர்களை அண்ணலின் சமூகத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அவர்களின் வாயினுள் உமிழும் படி வேண்டிக் கொண்டார்கள்.

 

தங்களுக்கு ஒரு நோய் ஏற்பட்டு விட்டால் அந்த நோய்க்கு நிவாரணமாக அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் அருள் நிறைந்த உமிழ் நீரை மருந்தாகப் பெற்றிருக்கின்றார்கள்.

 

அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் உமிழ் நீர் எங்களைப் போன்றோரின் உமிழ் நீர் போன்றதல்ல. அண்ணலின் உமிழ் நீர் இறையருள் நிறைந்ததாகும். தெய்வீக சக்தி மிக்கதாகும். எந்த ஒரு நோயையும் குணப்படுத்தும் சக்தி கொண்டதாகும். ஆன்மீக மணம் நிறைந்ததாகும். இதனாற்றான் தங்களின் தோழர்களுக்கு நோய், கஷ்டங்கள் ஏற்பட்ட போது தங்களின் அருள் நிறைந்த உமிழ் நீரை அவற்றுக்கு நிவாரணமாக வழங்கினார்கள் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள்.

 

பல ஸஹாபஹ் – தோழர்களின் வீடுகளுக்குச் சென்று வீடுகளிலுள்ள கிணறுகளில் உமிழ்ந்தார்கள் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள். அந்தக் கிணறுகள் அருள் பெற்றன. மணம் பெற்றன. மக்கள் அந்தக் கிணறுகளில் நீர் அருந்துவதை அருளாகக் கருதினார்கள்.

 

அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் உமிழ் நீர் கொண்டு அருள் பெற்ற, நோய் நிவாரணம் பெற்ற பல ஸஹாபஹ் – தோழர்களில் சிலரை நாம் இங்கு தொகுத்து வழங்குகின்றோம்.

 

அமீறுல் முஃமினீன் ஸெய்யிதுனா அபூபக்ர் அஸ்ஸித்தீக் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்வர்கள்

 

இவர்களின் பெயர் அப்துல்லாஹ் ஆகும். இஸ்லாத்திற்கு முன் இவர்களின் பெயர் அப்துல் கஃபா என்றிருந்தது. அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் அப்துல்லாஹ் என்று இவர்களுக்கப் பெயரிட்டார்கள். இவர்களின் தந்தையின் பெயர் அபூகுஹாபா. தாயின் பெயர் உம்முல் ஹைர். இப்னு அபீ குஹாபா என்றும் இவர்கள் அழைக்கப்பட்டார்கள். இவர்களைப் பற்றி பல ஸஹாபஹ் – தோழர்கள் ரிவாயத் செய்திருக்கிறார்கள்.

 

அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கலிமஹ் தையிபாவைப் பகிரங்கப்படுத்திய வேளை முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களும், முதன் முதலில் தொழுதவர்களும் ஸெய்யிதுனா அபூபக்ர் ஸித்தீக் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களேயாகும்.

 

அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை இவர்கள் முதன் முதலில் உண்மைப்படுத்திய காரணத்தினாலும், அவர்களின் அனைத்து விடயங்களையும் உண்மைப்படுத்திய காரணத்தினாலும் இவர்கள் “ஸித்தீக்” (அதிகம் உண்மை பேசுபவர்) என்று அழைக்கப்பட்டார்கள்.

 

இவர்களின் சிறப்புக்கள் அனந்தம் அவற்றை எல்லையிட முடியாது. பல சந்தர்ப்பங்களில் இவர்களை அதிகம் கண்ணியம் செய்திருக்கிறார்கள் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள்.

 

அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் ஒரு நாள் ஸெய்யிதுனா அபூபக்ர் ஸித்தீக் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களை நோக்கி “எனது உம்மத்தில் முதன் முதலாக சுவர்க்கத்தில் நுழைபவர் நீர்தான் என்று கூறினார்கள்”.

 

அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் பின் அந்தஸ்தில் இவர்களை விட மிக உயர்ந்தவர்கள் இவ்வுலகில் யாரும் கிடையாது.

 

அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் காபிரீன்களின் பார்வையிலிருந்து மறைந்து மூன்று தினங்கள் தவ்ர் குகையில் இருந்தார்கள். இவர்களுடன் மூன்று தினங்களும் ஒன்றாக இருந்தவர்கள் ஸெய்யிதுனா அபூபக்ர் ஸித்தீக் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள்.

 

இந்த சம்பவத்தை அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் சூறதுத் தவ்பஹ்வில் சுட்டிக் காட்டுகின்றான். இந்த சந்தர்ப்பத்தில் ஸெய்யிதுனா அபூபக்ர் ஸித்தீக் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களைப் பாம்பு தீண்டியது. அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் பாம்பு தீண்டிய இடத்தில் தங்களின் அருள் நிறைந்த உமிழ் நீரை உமிழ்ந்து சுகம் வழங்கினார்கள். இந்த சம்பவத்தை சுருக்கமாக கூறுகின்றோம்.

 

அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களும், ஸெய்யிதுனா அபூபக்ர் ஸித்தீக் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களும் காபிரீன்களின் பார்வையிலிருந்து மறைந்து “தவ்ர்” குகையை நோக்கி வருகின்றார்கள். அங்கே அவர்கள் வரும் போது இருளாகி விட்டது.

 

“தவ்ர்” குகையை நெருங்கியவுடன் ஸெய்யிதுனா அபூபக்ர் ஸித்தீக் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் அண்ணலை நோக்கி நாயகமே! குகையினுள்ளே நான் முதலில் சென்று பார்த்து வருகிறேன் உள்ளே ஏதாவது இருந்தால் அதன் தாக்கம் எனக்கு ஏற்படட்டும் என்று கூறி உள்ளே நுழைந்தார்கள். உள்ளே சென்று கூட்டினார்கள். குகையினுள்ளே பல துவாரங்கள் இருப்பதை அவதானித்த ஸெய்யிதுனா அபூபக்ர் ஸித்தீக் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள், அத்துவாரங்களினூடாக விஷ ஜந்துக்கள் நுழைந்து அண்ணலை தீண்டி விடும் என பயந்தார்கள். உடனே தான் அணிந்திருந்த ஆடையை களைந்து அதை பலதாக கிழித்து அத்துவாரங்களை அடைத்தார்கள். ஆயினும் இரண்டு துவாரங்கள் மாத்திரம் எஞ்சின. அவ்விரண்டையும் தங்களின் இரண்டு குதிகால்களைக் கொண்டும் அடைத்த ஸெய்யிதுனா அபூபக்ர் சித்தீக் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் அண்ணலை நோக்கி உள்ளே வருமாறு கூறினார்கள். உள்ளே நுழைந்த அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் அபூபக்ர் நாயகத்தின் மடியில் தலையை வைத்து சற்று உறங்கினார்கள்.

 

இந்த சந்தர்ப்பத்தில் உள்ளே நுழைய முயன்ற பாம்பு அபூபக்ர் நாயகத்தின் ஒரு காலைத் தீண்டியது. விஷம் ஏறத் துவங்கியது. வேதனை கடுமையாகுவதை உணர்ந்தார்கள் அபூபக்ர் நாயகம் அன்னவர்கள். தனது மடியில் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். தான் அசைந்தால் அவர்கள் எழுந்து விடுவார்கள். அவர்கள் தூக்கம் கலைந்து விடும் என பயந்தார்கள். எனவே அசையாமல் இருந்தார்கள். வேதனை கடுமையாகி அவர்களின் கண்களிலிருந்து நீர் வழிந்தது. அது அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் அருள் நிறைந்த முகத்தில் விழுந்தது. உடனே கண் விழித்த அவர்கள் அபூபக்ரே! உமக்கு என்ன நடந்தது? என்று கேட்டார்கள்.

 

நாயகமே! தாயும், தந்தையும் உங்களுக்கு அர்ப்பணம். என்னைப் பாம்பு தீண்டி விட்டது என்றார்கள் அபூபக்ர் நாயகம் அன்னவர்கள். உடனே அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் தங்களின் அருள் நிறைந்த வாயினால் பாம்பு தீண்டிய இடத்தில் உமிழ்ந்தார்கள். அவர்கள் பெற்ற வேதனை நீங்கியது.

 

காலையான போது அபூபக்ர் நாயகத்திடம் உமது ஆடை எங்கே? என வினவினார்கள் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் தான் செய்ததை அவர்களுக்கு கூறினார்கள். உடனே தங்களின் அருள் நிறைந்த இரண்டு கைகளையும் உயர்த்தி “இறைவா! மறுமை நாளில் எனது படித்தரத்தில் என்னுடன் அபூபக்ரையும் ஆக்கி வைப்பாயாக” என பிரார்த்தித்தார்கள். அல்லாஹு தஆலா உமது பிரார்த்தனையை அங்கீகரித்து விட்டான் என்று அல்லாஹு தஆலா அவர்களுக்கு வஹீ அறிவித்தான்.

 

இந்த சம்பவம் அல்மவாஹிபுல்லதுன்னிய்யஹ், அஸ்ஸீறதுல் ஹலபிய்யஹ் மற்றும் பல கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

நாம் இங்கு கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில், ஸெய்யிதுனா அபூபக்ர் ஸித்தீக் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களுக்கு பாம்பு தீண்டிவிட்டது என்பதை அறிந்தவுடன் அதற்கு வைத்தியம் செய்ய வேண்டுமல்லவா!!

 

அண்ணல் எம் பெருமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் என்ன செய்தார்கள்? பாம்பு தீண்டிய இடத்தில் உமிழ்ந்தார்கள். அப்படியாயின் அவர்களின் அருள் நிறைந்த உமிழ் நீர் மருந்தானது. நோய் நிவாரணியானது. அண்ணலின் உமிழ் நீரல்லவா! அது சாதரணமானவர்களின் உமிழ் நீர் போன்றதல்ல. இறை சக்தி மிக்க, அருள் மிக்க அண்ணலின் உமிழ் நீர் கொண்டு ஸஹாபஹ் – தோழர்கள் அருள் பெற்றது போல் எந்தவொரு உம்மத்தின் நபீயின் சமூகத்தினரும் அருள் பெறமாட்டார்கள்.

 

தங்களின் உமிழ் நீரில் எந்தவொரு பிரயோசனமும் இல்லையெனில், நோய் நிவாரணம் இல்லையெனில் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் பாம்பு தீண்டிய இடத்தில் உமிழ்ந்திருக்கமாட்டார்கள். ஸெய்யிதுனா அபூபக்ர் ஸித்தீக் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் சுகம் பெற்றிருக்கமாட்டார்கள்.

 

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 

தொடர் – 10

 

 

அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் உமிழ் நீர் கொண்டு அருள் பெறுதல்.

 

அகிலத்தின் பேரொளி அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் உமிழ் நீர் கொண்டு அருள் பெற்ற, நோய் நிவாரணம் பெற்ற ஸஹாபஹ் – தோழர்களில் மிக முக்கியமானவர்கள் ஸெய்யிதுனா அலீ இப்னு அபீதாலிப் (கர்றமல்லாஹு வஜ்ஹஹு) அன்னவர்கள்.

 

அமீறுல் முஃமினீன் ஸெய்யிதுனா அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்கள்.

 

அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் கலீபாக்கலில் ஒருவர். அண்ணெலம் பெருமானின் சாச்சாவின் மகன். சிறுவர்களில் இஸ்லாத்தை முதன் முதலாக ஏற்றவர்கள். அண்ணலின் அருள் நிறைந்த மடியில் வளர்ந்தவர்கள். மக்காவில் இருந்து ஹிஜ்றத் செல்லும் வரை அவர்களின் பாதுகாப்பிலும், அவர்களின் வீட்டிலும் அவர்களுடனிருந்தவர்கள். தபூக் யுத்தம் தவிர அனைத்து யுத்தங்களிலும் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களுடன் கலந்து கொண்டு, அவற்றின் தளபதியாக செயற்பட்டவர்கள். யுத்தங்கள் வெற்றி பெறுவதற்கு பிரதான காரணியாக அமைந்தவர்கள். வீரம் நிறைந்தவர்கள். அதிக யுத்தங்களில் இவர்களின் கைகளிலேயே அண்ணலவர்கள் தங்களின் கொடியை வழங்கினார்கள்.

 

இவர்களின் தாய் பாத்திமா பிந்து அஸத் றழியல்லாஹு தஆலாஅன்ஹா அன்னவர்கள். இவர்கள் சிறந்த ஓர் பெண்மணியாகத் திகழ்ந்தவர்கள். அண்ணலெம் பெருமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் இவர்களின் வீட்டுக்குச் சென்று இவர்களைச் சந்திப்பார்கள். சில சந்தர்ப்பங்களில் கைலூலா தூக்கத்தை இவர்களின் வீட்டில் தூங்குவார்கள். இவர்கள் மரணித்த போது தங்களின் சேட்டைக் கொடுத்து அதில் அவர்களைக் கபனிடும்படி பணித்தார்கள். மாத்திரமன்றி அவர்களின் கப்றினுள் இறங்கி சற்று சாய்ந்தார்கள்.

 

அண்ணலாரின் இந்த செயல் பற்றி அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு பின்வருமாறு அவர்கள் பதிலளித்தார்கள்.

 

“அபூதாலிபின் பின் இவர்களை விட எனக்கு மிக நன்றியுள்ளவர் யாரும் கிடையாது. நான் எனது சேட்டை இவர்களுக்கு அணிவித்ததன் காரணம் சுவர்க்கத்து ஆடைகள் கொண்டு இவர்கள் அணிவிக்கப்பட வேண்டுமென்பதற்காக. இவர்களின் கப்றில் நான் சாய்ந்ததன் காரணம் கப்றின் வேதனை இவர்களுக்கு இலகுவாக்கப்பட வேண்டுமென்பதற்காக” அண்ணல் எம் பெருமானின் இந்தக் கூற்றின் மூலம் அவர்களின் அருளை முழுமையாகப் பெற்ற ஓர் பெண்மணியாக ஸெய்யிதுனா அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்களின் தாய் விளங்கியிருக்கிறார்கள் என்பதையும், அவர்கள் சுவர்க்கவாதிகளில் ஒருவரென்பதையும் நாம் விளங்கிக் கொள்ள முடியும். அவர்களின் பொருட்டு கொண்டு அல்லாஹு தஅலா எமக்கு அருள் புரிவானாக.

 

தனது தாயின் அந்தஸ்தை விட பல மடங்கு அந்தஸ்தைப் பெற்றவர்கள் ஸெய்யிதுனா அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்கள். இவர்களின் சிறப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன. அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் பல சந்தர்ப்பங்களில் இவர்கள் பற்றி கூறியிருக்கிறார்கள்.

 

مَنْ اذَى عَلِيًّا فَقَدْ اذَانِيْ

எவன் அலீயை வேதனைப்படுத்தினானோ அவன் என்னை வேதனைப்படுத்தி விட்டான்.

 

مَنْ سَبَّ عَلِيًّا سَبَّنِيْ

வன் அலீயை ஏசினானோ அவன் என்னை ஏசிவிட்டான்.

 

أَنَا دَارُ الْحِكْمَةِ وَعَلِيٌّ بَابُهَا

தத்துவத்தின் வீடு அலீ அதன் வாசல்.நான்

 

النَّظَرُإِلَى وَجْهِ عَلِيٍّ عِبَادَةٌ

அலீயின் முகத்தைப் பார்ப்பது ஓர் வணக்கமாகும்.

 

மேற்கூறப்பட்டவை அனைத்தும் அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்கள் பற்றி அண்ணலெம் பெருமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் அருளியவையாகும். இவையனைத்தும் அவர்களின் உயரிய அந்தஸ்தினை எமக்கு தெளிவாக காட்டுகின்றன.

 

இத்தகைய உயர் அந்தஸ்தினைப் பெற்ற ஸெய்யிதுனா அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்கள் நாமறிந்த வகையில் இரண்டு சந்தர்ப்பங்களில் அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் உமிழ் நீர் கொண்டு அருள் பெற்றிருக்கிறார்கள். நோய் நிவாரணம் பெற்றிருக்கிறார்கள். அண்ணலின் உமிழ் நீர் அருள் நிறைந்தது. ஆன்மீக மணம் கொண்டது என்பதற்கு அது பாரிய சான்றாகும்.

 

முதலாவது சந்தர்ப்பம்:-

 

அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் ஸஹாபஹ் – தோழர்கள் மக்கஹ் முகர்றமஹ்விலிருந்து மதீனா முனவ்வறஹ்வை நோக்கி ஹிஜ்றத் சென்றதன் பின் ஸெய்யிதுனா ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அன்னவர்களின் வருகையை எதிர்பார்த்த வண்ணம் மக்கஹ் முகர்றமஹ்வில் தங்கினார்கள் அண்ணலெம் பெருமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள்.

 

மதீனஹ் முனவ்வறஹ்வுக்கு செல்லும் படி கிடைக்கப் பெற்ற இறை கட்டைளையை செயற்படுத்த விரும்பிய அண்ணலெம் பெருமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் ஸெய்யிதுனா அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்களையழைத்து “அலீயே! நான் மதீனா முனவ்வறஹ்வை நோக்கி செல்லப் போகிறேன். நான் உறங்குகின்ற இடத்தில் நீங்கள் உறங்குங்கள். மக்கஹ் முகர்றமஹ்விலுள்ள விடயங்களைக் கவனித்து விட்டு மதீனஹ் முனவ்வறஹ்வை வந்தடையுங்கள். அங்கு என்னுடன் இணையுங்கள்.” என்று கூறிவிட்டு தங்களின் வீட்டிலிருந்து வெளியேறினார்கள்.

 

அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் கட்டளையை சிறமேற்கொண்டு செயற்பட்ட செய்யிதுனா அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்கள் மக்கஹ் முகர்றமஹ்வில் சில நாட்கள் தங்கி அங்குள்ள பணிகளை நிறைவேற்றி விட்டு. மதீனஹ் முனவ்வறஹ்வை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். காபிரீன்களின் பார்வைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக பகல் வேளையில் நடந்து செல்லாமல் இரவு வேளையில் நடந்து சென்றார்கள். பகல் வேளையில் மறைந்து இருந்தார்கள். பல கஷ்டங்களின் பின் மதீனஹ் முனவ்வறஹ்வை வந்தடைந்தார்கள்.

 

மக்கஹ் முகர்றமஹ்விலிருந்து மதீனஹ் முனவ்வறஹ்வை நோக்கி மலை பிரதேசங்களினூடாக நடந்து சென்ற காரணத்தினால் ஸெய்யிதுனா அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்களின் இரண்டு கால்களும் வீங்கி அவற்றிலிருந்து இரத்தம் சொட்டியது.

 

ஸெய்யிதுனா அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்கள் மதீனஹ் முனவ்வறஹ்வை வந்தடைந்து விட்டார்கள் என்பதை அறிந்த அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் தங்களின் தோழர்களை அழைத்து அலீயை என்னிடம் அழைத்து வாருங்கள் எனக்கூறினார்கள். அப்பொழுது கண்ணியமிக்க ஸஹாபஹ் – தோழர்கள் அண்ணலெம் பெருமான் நோக்கி “யாறஸுலல்லாஹ்! அலீ அன்னவர்கள் கால் வலியினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் நடக்க முடியவில்லை” என்று கூறினார்கள்.

 

இதைச் செவியுற்ற காருண்ய நபீ அண்ணலெம் பெருமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் அவர்களிருக்குமிடம் தேடிச் சென்றார்கள். அவர்களைக் கண்டவுடன் அவர்களையணைத்துக் கொண்ட அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் அழுதார்கள். அவர்களின் கால்களிலிருந்து இரத்தம் சொட்டுவதைக் கண்ணுற்ற அண்ணலவர்கள் தங்களின் அருள் நிறைந்த கரங்களில் உமிழ் நீரை உமிழ்ந்தார்கள். அந்த உமிழ் நீரைக் கொண்டு அவர்களின் இரு கால்களிலும் தடவினார்கள். அவர்களுக்காக துஆச் செய்தார்கள். அவர்கள் மரணிக்கும் வரை அவர்களின் இரண்டு கால்களிலும் எந்த ஒரு நோயும் ஏற்படவில்லை.

 

“உஸ்துல் ஆபஹ் பீ மஃரிபதிஸ் ஸஹாபஹ்” என்ற நூலில் பாகம் – 04 பக்கம் – 92ல் இந்த சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

ஸெய்யிதுனா அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்களுக்கு கால் வலி ஏற்பட்டதல்லவா! இப்பொழுது அவர்களை வைத்தியரிடம் அழைத்து சென்று மருந்து செய்வதே முறையாகும். அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் என்ன செயதார்கள்? வைத்தியர்களிடம் அழைத்து செல்லுங்கள் என்று சொன்னார்களா? இல்லை. மாறாக தங்களின் அருள் நிறைந்த உமிழ் நீரை அவர்களின் கால்களில் தடவி, அந்த உமிழ் நீரை அதற்கு மருந்தாகப் பயன்படுத்தினார்கள். உமிழ் நீரின் அருளின் காரணத்தினால் மாத்திரமன்றி அண்ணலவர்களின் கைகளின் அருளினாலும் சுகம் பெற்றார்கள் ஸெய்யிதுனா அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்கள்.

 

என்னே! அண்ணலின் உமிழ் நீரின் மகிமை.

என்னே அண்ணலின் கைகளின் மகிமை.

 

வழிகெட்ட மடையர்கள் கூறுவது போன்று அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் எங்களைப் போன்ற சாதாரண மனிதரல்லர். அருள் நிறைந்தவர்கள் அண்ணலவர்கள். தெய்வீக சக்தி மிக்கவர்கள் அண்ணலவர்கள். அவர்களின் உடல் முழுக்க அருளாகும். அவர்களின் உடலிலிருந்து வெளியாகின்ற அனைத்தும் அருளாகும். கண்ணியமிக்க ஸஹாபஹ் – தோழர்கள் பாக்கியம் பெற்றவர்கள். அண்ணலைக் கொண்டு அருள் பெற்றவர்கள். அந்த மகான்களின் பொருட்டு கொண்டு அல்லாஹு தஆலா எமக்கு அரள் புரிவானாக.

 

இரண்டாவது சந்தர்ப்பம்:-

 

கண்நோயுற்றிருந்த ஸெய்யிதுனா அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்கள் அதற்கு மருந்தாக, நோய் நிவாரணியாக அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் அருள் நிறைந்த உமிழ் நீரைப் பெற்றார்கள். அவர்களின் கண்நோய் நீங்கியது. சுகம் பெற்றார்கள்.

 

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَأُعْطِيَنَّ الرَايَةَ غَدًا رَجُلاً يَفْتَحُ اللهُ عَلاَ يَدَيْهِ. قَالَ فَبَاتَ النَّاسُ يَدُوْكُوْنَ لَيْلَتَهُمْ أَيُّهُمْ يُعْطَاهَا. فَلَمَّا أَصْبَحَ النَّاسُ غَدَوْا عَلَى رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّهُمْ يَرْجُوْأَنْ يُعْطَاهَا. فَقَالَ أَيْنَ عَلِيُّ بْنُ أَبِيْ طَالِبٍ؟ فَقَالُوْا يَشْتَكِيْ عَيْنَيْهِ يِارَسُوْلَ اللهِ. قَالَ فَأَرْسِلُوْا إِلَيْهِ. فَأْتُوْنِيْ بِهِ. فَلَمَّا جَاءَ بَصَقَ فِيْ عَيْنَيْهِ وَدَعَا لَهُ. فَبَرَأَ حَتَّى كَأَنْ لَمْ يَكُنْ بِهِ وَجَعٌ. فَأَعْطَاهُ الرَّايَةَ. فَقَالَ عَلِيٌّ يَارَسُوْلَ اللهِ أُقَاتِلُهُمْ حَتَّى يَكُوْنُوْا مِثْلَنَا. فَقَالَ انْفُذْ عَلَى رِسْلِكَ حَتَّى تَنْزِلَ بِسَاحَتِهِمْ. ثُمَّ ادْعُهُمْ إِلَى الْإِسْلَامِ. وَأَخْبِرُهُمْ بِمَا يُجِبُ عَلَيْهِمْ مِنْ حَقِّ اللهِ فِيْهِ. فَوَاللهِ لَأَنْ يَهْدِيَ اللهَ بِكَ رَجُلاً وَاحِدًا خَيْرٌ لَكَ مِنْ أَنْ َيكُوْنَ لَكَ حُمْرٌ النَّعَمِ.

 

(கைபர் யுத்தத்தின் போது) அல்லாஹ்வின் தூதர் அண்ணல் முஹம்மத்   ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் “நாளை இந்தக் கொடியை ஒரு மனிதரிடம் கொடுக்கப் போகிறேன். அல்லாஹு தஆலா அவருடைய கரங்களில் வெற்றியை அளிப்பான்” என்று சொன்னார்கள். ஆகவே, மக்கள் தம்மில் எவரிடம் அது கொடுக்கப்படும் என்ற யோசனையில் இரவெல்லாம் மூழ்கியிருந்தனர்.

 

காலையானதும் மக்களில் ஒவ்வொருவரும் தன்னிடம் அது கொடுக்கப்பட வேண்டுமென்று ஆசைப்பட்ட வண்ணம் அல்லாஹ்வின் தூதரிடம்  சென்றனர். அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் “அலீ இப்னு அபீதாலிப்” எங்கே? என்று கேட்டார்கள். மக்கள் “அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கு கண்வலி” என்று சொன்னார்கள். உடனே அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் “அவர்களுக்கு ஆளனுப்பி என்னடம் அழைத்து வாருங்கள்” என்று உத்தரவிட்டார்கள். அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்கள் வந்தவுடன் அவர்களின் இரு கண்களிலும் (தம் உமிழ் நீரை) உமிழ்ந்து, அவர்களுக்காக பிரார்த்தனை புரிந்தார்கள். அவர்களுக்கு வலியே இருந்தில்லை என்பதைப் போன்று அவர்கள் குணமடைந்தார்கள். பிறகு அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் அலீ கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்களிடம் கொடியைக் கொடுத்தார்கள்.

 

அப்பொழுது அலீ கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் நம்மைப் போன்று ஆகும் வரை நான் அவர்களிடம் போரிடட்டுமா? என்று” கேட்டார்கள். அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் அவர்களுடைய களத்தில் இறங்கும் வரை நிதானமாகச் செல்லுங்கள். பிறகு அவர்களை இஸ்லாத்திற்கு அழையுங்கள். மேலும் இஸ்லாத்தில் அவர்கள் மீது கடமையாகின்ற அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை அவர்களுக்குத் தெரிவியுங்கள்.

 

“அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் மூலமாக அல்லாஹுத் தஆலா ஒரேயொரு மனிதருக்கு நேர் வழியை அளிப்பது உங்களுக்கு சிகப்பு ஒட்டகங்கள் இருப்பதை விட சிறந்ததாகும்.” என்று சொன்னார்கள்.

மேற் சொல்லப்பட்ட ஹதீதை ஸஹ்ல் இப்னு ஸஃத் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் அறிவிக்கின்றார்கள்.

 

ஸஹீஹுல் புஹாரீ- 3701

 

عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ يَوْمَ خَيْبَرَ لَأُعْطِيَنَّ الرَّايَةَ غَدًا رَجُلاً يُحِبُّ اللهَ وَرَسُوْلَهُ. وَيُحِبُّهُ اللهُ وَرَسُوْلُهُ. لَيْسَ بِفَرَّارٍ. يَفْتَحُ اللهُ عَلَى يَدَيْهِ. ثُمَّ دَعَا بِعَلِيٍّ وَهُوَ أَرْمَدُ فَتَفَلَ فِيْ عَيْنَيْهِ وَأَعْطَاهُ الرَّايَةَ. فَفُتِحَ عَلَيْهِ.

 

அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கைபர் யுத்த நாளன்று பின்வருமாறு கூறினார்கள். “நான் இந்தக் கொடியை நாளை ஒரு மனிதரிடம் கொடுக்கப் போகிறேன். அவர் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் விரும்பக்கூடிய ஒருவர். அவரையும் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் விரும்பக் கூடிய ஒருவர். அவர் விரண்டோடக் கூடிய ஒருவர் அல்லர்.”

பின்பு அலீ கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்கள் அவர்கள் கண்நோயுற்றிருந்த நிலையில் அவர்களை அழைத்தார்கள். அவர்களின் இரு கண்களிலும் உமிழ்ந்த அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் அவர்களிடம் அந்தக் கொடியைக் கொடுத்தார்கள். அவர்கள் மூலம் வெற்றி கொள்ளப்பட்டது.

அல் இஸ்திஆப் பக்கம் – 531

عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُوْدٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ قَالَ رَأَيْتُ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

كَحَلَ عَيْنَ عَلِيٍّ بِرِيْقِهِ.

 

அல்லாஹ்வின் தூதர் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் அலீ கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்களின் கண்ணுக்குத் தங்களின் உமிழ் நீர் கொண்டு சுறுமா இட்டதை நான் கண்டேன். என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் அறிவிக்கின்றார்கள்.

 

மஜ்மஉஸ் ஸவாயித் 14709

 

மேற் கூறப்பட்ட ஹதீஸ்கள் மூலம் கண்நோயுற்றிருந்த ஸெய்யிதுனா அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்களுக்கு தங்களின் அருள் நிறைந்த உமிழ் நீர் கொண்டு அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் வைத்தியம் செய்திருக்கிறார்கள், நோய் நிவாரணம் வழங்கியிருக்கிறார்கள். என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

 

ஒருவருக்கு கண்நோய் ஏற்பட்டு விட்டால் என்ன செய்ய வேண்டும்? வைத்தியரிடம் செல்ல வேண்டும். மருந்து செய்ய வேண்டும். அப்போது தான் கண்நோய் குணமடையும். மாறாக ஒருவருடைய உமிழ் நீர் கொண்டு கண்நோயிலிருந்து நிவாரணம் பெற முடியுமா? இல்லை.

 

அப்படியாயின் கண்நோயுற்றிருந்த ஸெய்யிதுனா அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்களின் கண்களில் தங்களின் உமிழ் நீரை உமிழ்ந்தார்களே அண்ணலெம் பெருமான் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள். அண்ணலின் இந்த செயலில் என்ன பிரயோசனமிருக்கிறது? அண்ணலின் இந்த செயலில் என்ன தத்துவமிருக்கிறது.?

 

நிச்சயமாக அண்ணலெம் பெருமானின் இந்த செயலில் பிரயோசனமிருக்கிறது. தத்துவமிருக்கிறது. தங்களின் உமிழ் நீரின் மகிமையை இங்கு வெளிப்படுத்தியிருக்கிறார்கள் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள். இறை ஜோதியல்லவா அண்ணலவர்கள்!

 

கண்நோய்க்கு மருந்தாக தனது உமிழ்நீரைப் பயன்படுத்தினார்கள் அண்ணலவர்கள். அண்ணலெம் பெருமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் உமிழ் நீர் சாதாரனமானதல்ல. ஆண்மீக மணம் கொண்டது. நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது என்பதை இதன் மூலம் நாம் தெளிவு பெறலாம்.

 

ஸெய்யிதுனா அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்களின் கண்களில் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் உமிழ்ந்த காரணத்தினால் அதன் அருளினால் அவர்களின் கண்நோய் நீங்கியது. ஆரோக்கியம் பெற்றார்கள், சுகம் பெற்றார்கள். யுத்தத்தில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றார்கள். அண்ணலின் அருள் நிறைந்த உமிழ் நீரின் காரணத்தினால் உடன் நிவாரணம் பெற்றார்கள்.

 

மாத்திரமன்றி அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் இவர்களின் கண்களில் உமிழ்ந்ததன் பின் இவர்கள் கண்நோய் நீங்கியதல்லவா! அதுமாத்திரமல்ல அதன் பின் அவர்களுக்கு கண்நோய் ஏற்படவுமில்லை. தலைவலி ஏற்படவுமில்லை. இது பற்றி ஸெய்யிதுனா அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

 

عَنْ أُمِّ مُوْسَى رَضِيَ اللهُ تَعَالَى عَنْهَا سَمِعْتُ عَلِيًّا كَرَّمَ اللهُ وَجْهَهُ يَقُوْلُ مَا رَمِدْتُ وَلاَ صُدِعْتُ مُنْذُ مَسَحَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَجْهِيْ وَتَفَلَ فِيْ عَيْنِيْ.

 

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்

அன்னவர்கள் எனது முகத்தை தடவி, எனது கண்ணில்

உமிழ்ந்ததிலிருந்து எனக்கு கண்நோயோ, அல்லது தலையிடியோ ஏற்படவில்லை என்று அலீ கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்கள் சொல்ல நான் செவியுற்றேன் என்று உம்மு மூஸா றழியல்லாஹு தஆலா அன்ஹா அன்னவர்கள் கூறினார்கள்.

 

ஸியறு அஃலாமின் நுபலா

பாகம் – 01 பக்கம் – 571

 

ஸெய்யிதுனா அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அவர்களுக்கு கண்நோய் ஏற்பட்ட நேரத்தில் அவர்களின் கண்களில் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் உமிழ்ந்தது மாத்திரமன்றி அருள் நிறைந்த அவர்களின் கரங்களினால் அவர்களின் முகத்தையும் தடவியிருக்கிறார்கள் என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

 

அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் உமிழ் நீரின் காரணத்தினால் மாத்திரமன்றி அவர்களின் அருள் நிறைந்த கரங்களின் பறகத் – அருளினாலும் ஸெய்யிதுனா அலீ கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்கள் நோய் நிவாரணம் பெற்றிருக்கின்றார்கள் என்பது வெள்ளிடை மலையாகும்.

 

அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் அருள் நிறைந்த உமிழ் நீரை பல சந்தர்ப்பங்களில் ஸஹாபஹ் – தோழர்கள் தங்களின் நோய்களுக்கு நிவாரணமாக, மருந்தாகப் பெற்றிருக்கின்றார்கள். இது அவர்கள் பெற்ற பாக்கியமாகும். இவர்களில் ஸெய்யிதுனா அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்கள் தங்களின் வாழ்வில் அண்ணலின் உமிழ் நீரை மருந்தாக பெற்ற சந்தர்ப்பங்களை மேலே கூறியிருக்கிறோம்.

 

கைபர் யுத்தத்தின் போது அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் உமிழ் நீரை மருந்தாகப் பெற்ற சம்பவம் பின்வரும் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

ஸஹீஹுல் புஹாரீ – 2942- 3009- 3701

ஸஹீஹ் முஸ்லிம் – 6117

அல் ஹஸாயிஸுல் குப்றா – பாகம் – 01 பக்கம் – 251

உஸ்துல் ஆபஹ் – பாகம் – 04 பக்கம் – 99

ஸஹீஹ் இப்னு ஹிப்பான் – 6932 – 6933 – 6935

ஹில்யதுல் அவ்லியா – பாகம் – 01 – பக்கம் – 60

ஷர்ஹுஸ் ஸுன்னா லில்பகவீ – பாகம் – 14 / 3906

அல் மவாஹிபுல் லதுன்னிய்யஹ் – பாகம் – 01 பக்கம் – 522 பாகம் – 02 பக்கம் – 235, 581

அல் முஃஜமுல் கபீர் லித்தபறானீ – 5730 – 6233 – 6304 – 10474

ரியாழுஸ் ஸாலிஹீன் – 175

முஸன்னப் அப்துர் றஸ்ஸாக் – பாகம் – 05/ 9637

தலாயிலுன் நுபுவ்வஹ் – பாகம் – 04 பக்கம் (205 – 208)

அல் இஸாபஹ் பீ தம்யீஸிஸ் ஸஹாபஹ் – பக்கம் – 939

மஜ்மஉஸ் ஸவாயித் – 10200 – 10201 – 10203 – 14707 – 14708 – 10204

அல் பிதாயஹ் வந்நிஹாயஹ் – பாகம் – 08 – பக்கம் – 26

அஸ் ஸுன்னுல் குப்றா லில்பைஹகீ – பாகம் – 13/ 18739 – 18854 – 18856

முஸ்னத் அஹ்மத் – 778 – 1608 – 1665 – 23381 – 23419

கன்ஸுல் உம்மால் – 28494 – 30120 – 30129

மிஷ்காதுல் மஸாபீஹ் – பக்கம் – 563

அல் காமில் பித்தாரீஹ் – பாகம் – 02 பக்கம் – 153

அல் இஸ்திஆப் – பக்கம் – 531

ஸியறு அஃலாமின் நுபலா – பாகம் – 01 – பக்கம் – 288

அல் முஸ்தத்றக் அலஸ்ஸஹீஹைன் – பாகம் – 03/ 5844

தொடர் – 11

அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் ஸெய்யிதுனா அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்களின் கண்களில் உமிழ்ந்ததன் பின்னர் அவர்களுக்கு அதனருளினால் கண் நோயோ, தலையிடியோ ஏற்படவில்லை. அண்ணலெம்பெருமானின் உமிழ் நீரின் அருளினால் அவற்றிலிருந்து நிவாரணம் பெற்றார்கள்.

மாத்திரமல்ல இந்நிகழ்வின் போது ஸெய்யிதுனா அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்களின் கண்களில் உமிழ்ந்த காருண்ய நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் அவர்களுக்காக ஒரு பிரார்த்தனை புரிந்தார்கள். அதன் பின்னர் சூடு, குளிர் ஆகியவை அவர்களுக்கு எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அண்ணலின் உமிழ் நீரின் அருளினால், அண்ணலின் பிரார்த்தனையின் பொருட்டினால் மாரி காலத்தில் கோடை காலத்து ஆடைகளையும், கோடை காலத்தில் மாரி காலத்து ஆடைகளையும் அணியக்கூடியவர்களாகத் திகழ்ந்தார்கள். ஸெய்யிதுனா அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்கள்.

عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِيْ لَيْلَىَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ قَالَ كَانَ يَسْمُرُ مَعَ عَلِيٍّ كَرَّمَ اللهُ وَجْهَهُ. وَكَانَ عَلِيٌّ كَرَّمَ اللهُ وَجْهَهُ يَلْبِسُ ثِيَابَ الصَّيْفِ فِي الشِّتَاءِ. وَثِيَابَ الشِّتَاءِ فِي الصَّيْفِ. فَقُلْتُ لِأَبِيْ لَوْ سَأَلْتَهُ فَسَأَلَهُ. فَقَالَ إِنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ بَعَثَ إِلَيَّ. وَأَنَا أَرْمَدُ الْعَيْنِ يَوْمَ خَيْبَرَ. فَقُلْتُ يَارَسُوْلَ اللهِ إِنِّيْ أَرْمَدُ. فَتَفَلَ فِيْ عَيْنِيْ. فَقَالَ أَلَّلهُمَّ أَذْهِبْ عَنْهُ الْحَرَّ وَالْبَرْدَ. فَمَا وَجَدْتُ حَرًّا وَلاَ بَرْدًا مُنْذُ يَوْمَئِذٍ.

அப்துல்லாஹ் இப்னு அபீ லைலா றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

“எனது தந்தை அலீ கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்களுடன் இரவு வேளையில் பேசிக் கொண்டிருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அலீ கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்கள் மாரி காலத்தில் கோடை காலத்து ஆடைகளையும், கோடை காலத்தில் மாரி காலத்து ஆடைகளையும் அணியக் கூடியவர்களாக இருந்தார்கள். இது பற்றி நீங்கள் அவர்களிடம் கேட்டாலென்ன என்று எனது தந்தையிடம் கூறினேன். எனது தந்தை இது பற்றி அவர்களிடம் கேட்டார். அதற்கவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள்.

ஹைபர் யுத்த தினத்தில் நான் கண்ணோய்யுற்றிருந்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் என்னை வரும்படி செய்தியனுப்பினார்கள். நான் அவர்களிடம் “யாரஸுலல்லாஹ்! நான் கண்நோயுற்றிருக்கின்றேன்” என்று கூறினேன். உடனே அவர்கள் எனது கண்ணில் உமிழ்ந்தார்கள். பின்னர் பின்வருமாறு பிரார்த்தித்தார்கள்.

“இறைவா! இவரை விட்டும் சூட்டையும், குளிரையும் போக்கி  வைப்பாயாக அன்றிலிருந்து சூட்டையோ, குளிரையோ நான் பெறவில்லை.”

ஸியறு அஃலாமின் நுபலா, பாகம் – 01 பக்கம் – 571

وَأَرْسَلَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى عَلِيٍّ يَوْمَ خَيْبَرَ وَكَانَ أَرْمَدَ. فَتَفَلَ فِيْ عَيْنَيْهِ. وَقَالَ أَلَّلهُمَّ أَذْهِبْ عَنْهُ الْحَرَّوَالْبَرْدَ. قَالَ فَمَا وَجَدْتُ حَرًّا وًلاَبَرْدًا مُنْذُ ذَلِكَ الْيَوْمِ. وَلاَرَمِدَتْ عَيْنَايَ.

ஹைபர் யுத்த தினத்தில் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் அலீ கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்களுக்கு செய்தியனுப்பினார்கள். அந்நேரம் அவர்கள் கண்நோயுற்றிருந்தார்கள். உடனே அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் அவர்களின் இரண்டு கண்களிலும் உமிழ்ந்தார்கள். பின்னர் இறைவா! இவரை விட்டும் சூட்டையும், குளிரையும் போக்கிவிடுவாயாக என்று பிரார்தித்தார்கள்.

அன்றிலிருந்து சூட்டையோ, குளிரையோ நான் பெற்றுக் கொள்ளவில்லை. எனது கண்களில் கண்நோய் ஏற்படவுமில்லை என்று அலீ கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்கள் கூறினார்கள்.

அல் மவாஹிபுல் லதுன்னிய்யஹ்

பாகம் – 04 பக்கம் – 485

அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் ஸெய்யிதுனா அலீ கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்கள் கண்நோயுற்றிருந்த வேளையில் அவர்களையழைத்து, தங்களருகில் அவர்களை அமரச்செய்து அவர்களின் கண்களில் உமிழ்ந்திருக்கின்றார்கள். அருள் நிறைந்த அவர்களின் கரங்களினால் அவர்களின் கண்களைத் தடவியிருக்கின்றார்கள். என்பதை மேற்கூறப்பட்டவற்றிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

அண்ணலின் உமிழ் நீரின் பறக்கத்தினால், அண்ணலின் கரங்களின் பறக்கத்தினால், அண்ணலின் பிரார்த்தனையின் பறக்கத்தினால் கண்நோயிலிருந்து நிவாரணம், தலையிடி ஏற்படாமை, சூடு, குளிர் ஆகியவற்றின் தாக்கம் ஏற்படாமை போன்ற பிரயோசனங்களை பெற்றார்கள் ஸெய்யிதுனா அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்கள்.

அண்ணலவர்கள் இறை ஜோதியல்லவா! அவர்களுக்கு நிகரானவர்கள் யாரும் கிடையாது. எங்களைப் போன்ற சாதாரண மனிதன் என்று அவர்களை நம்புபவன் முஃமின் அல்ல. அவன் வழிகெட்டவன். அண்ணலின் ஷபாஅத்தை விட்டும் தூரமானவன். அண்ணலின் அருள் பெற்ற ஸஹாபஹ் – தோழர்களின் பொருட்டு கொண்டு அல்லாஹு தஆலா எமக்க அருள் புரிவானாக.

தொடர் – 12

அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் உமிழ் நீர் கொண்டு பறகத் பெறுதல்.

அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் அருள் நிறைந்த
உமிழ் நீர் கொண்டும், அவர்களின் அருட் கரங்கள் கொண்டும்,
அவர்களின் பிரார்த்தனை கொண்டும் அருள் பெறுபவர்களில் மிக விஷேடமானவர்கள்
ஸெய்யிதுல் முபஸ்ஸிரீன் அபுல் அப்பாஸ் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு
அன்னவர்கள்.

இவர்கள் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் காலத்தில் பிறந்தவர்கள். அண்ணலின் அருளை பல வழிகளிலும் பெற்ற ஓர் ஸஹாபி – தோழர்.
இதன் காரணத்தினால் அறிவுக்கடலாகத் திகழ்ந்தார்கள் ஸெய்யிதுனா அப்துல்லாஹ்
இப்னு அப்பாஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள். ஸெய்யிதுல்
முபஸ்ஸிரீன் என்ற சிறப்புப் பட்டத்தையும் பெற்றார்கள்.

அண்ணலெம் பெருமான் அன்னவர்கள் மக்கஹ் முகர்றமஹ்விலிருக்கும்
போது இவர்கள் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்றிலிருக்கும் போதே
அண்ணலவர்கள் தங்களின் மறைவான ஞானத்தின் மூலம் அக்குழந்தை ஆண்குழந்தை என்பதை அறிந்து
கொண்டார்கள்.

அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் “ஹிஜ்ர் இஸ்மாயீல்” என்ற இடத்தில்
அமர்ந்திருக்கும் போது அவர்களருகில் சென்ற அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு
தஆலா அன்ஹு அன்னவர்களின் தாய் உம்முல் பழ்ல் றழியல்லாஹு தஆலா அன்ஹா
அன்னவர்களையழைத்து “உம்முல் பழ்லே! நீங்கள் ஓர் ஆண்குழந்தையை சுமந்திருக்கிறீர்கள்.
அக்குழந்தையை நீங்கள் பெற்றெடுத்தால் என்னிடம் கொண்டு வாருங்கள்” என்ற சுபச்
செய்தியை கூறினார்கள்.

ஸெய்யிதுனா அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு தஆலா
அன்ஹு அன்னவர்கள் தங்களின் தாயின் வயிற்றிலிருக்கும் போதே அண்ணலெம் பெருமானின்
அருட் பார்வையப் பெற்றுக் கொண்ட ஓர் ஸஹாபீ. அண்ணலெம் பெருமானின் நெருங்கிய குடும்ப
உறவினராகவும் இவர்கள் திகழ்ந்தார்கள். காரணம் அண்ணலாரின் சாச்சா ஸெய்யிதுனா
அப்பாஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களின் புதல்வர் இவர்கள்.

ஸெய்யிதுனா
அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள்.

இவர்களின் புனைப் பெயர் அபுல் பழ்ல் ஆகும். அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் தந்தையின் சகோதரர். அண்ணலின் சாச்சா. அண்ணலெம் பெருமானை விட
இரண்டு அல்லது மூன்று வருடங்கள் வயதில் கூடியவர்கள். குறைஷ் வம்சத்தினரிடையே
ஓர் தலைவராகத் திகழ்ந்தவர்கள். இவர்கள் சிறுவயதாக இருக்கும் போது
தவறி விட்டார்கள். எனவே இவர்களின் தாய் தனது மகன் கிடைத்து விட்டால்
கஃபதுல்லாஹ்வுக்கு பட்டுப் போர்வை போர்த்துவதாக நேர்சை செய்தார். அவர்கள் கிடைத்தவுடன் கஃபதுல்லாஹ்வுக்கு பட்டுப் போர்வை போர்த்தியவர் அப்பாஸ்
றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களின் தான் என்பது குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும்.

அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் ஸெய்யிதுனா அப்பாஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு
அன்னவர்களை அதிகம் கண்ணியம் செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள்.

அப்பாஸ் அவர்கள் எனது சாச்சா. எனது தந்தையுடன்
பிறந்தவர்கள். அவர்களை யார் வேதனை செய்கிறானோ அவன் என்னை வேதனை செய்து விட்டான்
என்று கூறினார்கள் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள்.

ஒரு சந்தர்ப்பத்தில் அண்ணலெம் பெருமானின் சபைக்கு
வந்தார்கள் ஸெய்யிதுனா அப்பாஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள். அவர்களைக் கண்ட
முத்து நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் எழுந்து, அவர்களின் இரண்டு
கண்களுக்கிடையில் முத்தமிட்டு, தங்களின் வலது பக்கம் அவர்களையமரச் செய்து இவர்கள்
எனது சாச்சா என்று கூறினார்கள்.

இன்னொரு சந்தர்ப்பத்தில் இறைவா! அப்பாஸ் அவர்களுக்கும்,
அப்பாஸுடைய பிள்ளைகளுக்கும், அவர்களை நேசிப்போருக்கும் மன்னிப்பாயாக என்று அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.

இன்னொரு சந்தர்ப்பத்தில் இறைவா! அப்பாஸ் அவர்களுக்கும்,
அப்பாஸ் அவர்களின் பிள்ளைகளுக்கும், அப்பாஸ் அவர்களின் பிள்ளைகளின்
பிள்ளைகளுக்கும் மன்னிப்பாயாக என்று பிரார்த்தனை செய்தார்கள். காருண்ய நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் பிரார்த்தனையின் அருளைப் பெற்ற ஓர் குடும்பம் தான் ஸெய்யிதுனா
அப்பாஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹ அன்னவர்களின் குடும்பம். இவ்வருட் குடும்பத்தில்
தோன்றியவர்கள்தான் ஸெய்யிதுனா அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு
அன்னவர்கள்.

இவர்கள் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் மூலம் பல
வழிகளில் அருள் பெற்றவர்கள்.

அண்ணலின்
உமிழ் நீர் கொண்டு அருள் பெற்ற இப்னு அப்பாஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள்.

அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் அருள்
நிறைந்த உமிழ் நீர் கொண்டு இரண்டு சந்தர்ப்பங்களில் நாமறிந்த வகையில் அருள்
பெற்றிருக்கிறார்கள். இப்னு அப்பாஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள்.

ஒன்று, இவர்கள் பிறந்தவுடன் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் சபைக்கு
இவர்கள் கொண்டு வரப்பட்ட போது இவர்களின் வாயினுள் அண்ணலவர்கள் தங்களின் அருள்
நிறைந்த உமிழ் நீரை செலுத்தியமை.

இரண்டு, ஸெய்யிதுனா உமர் இப்னுல் ஹத்தாப் றழியல்லாஹு தஆலா
அன்ஹு அன்னவர்கள் இவர்களையழைத்து இவர்களின் வாயினுள் அண்ணலவர்கள் உமிழ்ந்த்தை தான்
கண்டதாக கூறியமை.

அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் இவர்களின் தாய் இவர்களை வயிற்றில்
சுமந்திருக்கும் போது அவர்களையழைத்து குழந்தையைப் பெற்றவுடன் தன்னிடம் கொண்டு
வரும் படி கூறிய அந்தக் கட்டளைக்கமைய இவர்களின் இவர்களை அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் சபைக்கு கொண்டு சென்றார்கள்.

فَأٌتِيَ بِهِ
النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَحَنّّكَهُ بِرِيْقِهِ.

நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களிடம் இவர்கள் கொண்டு
வரப்பட்ட போது தங்களின் உமிழ் நீர் கொண்டு இவருக்கு “தஹ்னீக்”
செய்தார்கள். அதாவது அவர்களின் வாயினுள் தங்களின்
உமழ்நீரை செலுத்தினார்கள்.

உஸ்துல் ஆபஹ் – பாகம்
– 03

பக்கம் – 292

ஒரு குழந்தை பிறந்து விட்டால் அக்குழந்தையின் வாயினுள் ஒரு பெரியார்
மூலம் இனிப்புப் பண்டத்தை அல்லது ஈத்தம் பழத்தை அல்லது தேனைவைத்து சுவைக்கச் செய்வது
சுன்னத்தான ஓர் நடைமுறையாகும். அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் காலத்தில் பிறந்த
எத்தனையோ குழைந்தைகளுக்கு அண்ணலவர்கள் தங்களின் அருள் நிறைந்த வாயினுள் ஈத்தம் பழத்தை
மென்று, அக்குழந்தையின் வாயினுற் அதை வைத்து,
சுவைக்கச் செய்திருக்கிறார்கள். இங்கே அப்துல்லாஹ்
இப்னு அப்பாஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களின் வாயினுள் எந்தவொரு இனிப்புப் பொருளையும்
வைக்கவில்லை. மாறாக தங்களின் உமிழ் நீரையே அவர்களின் வாயினுள்
செலுத்தினார்கள் அண்ணலெம் பெருமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள்.

அருள் நிறைந்த அண்ணலின் உமிழ் நீரை பிறந்தவுடன் சுவைத்து,
அண்ணலின் அருளைப் பெற்று, அறிவுக்கடலாக திகழ்ந்தார்கள் ஸெய்யிதுனா அப்துல்லாஹ்
இப்னு அப்பாஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள். இன்னுமொரு சந்தர்ப்பத்திலும்
இவர்கள் அண்ணலின் உமிழ் நீரின் அருளைப் பெற்றார்கள்.

عَنْ زَيْدِ بْنِ
أَسْلَمَ عَنِ ْبنِ عُمَرَ أَنَّ عُمَرَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ دَعَا ابْنَ
عَبَّاسٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ فَقَرَّبَهُ وَكَانَ يَقُوْلُ إِنِّيْ رَأَيْتُ
رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَعَاكَ َيوْمًا فَمَسَحَ رَأْسَكَ
وَتَفَلَ فِيْ فِيْكَ وَقَالَ اَلّلَهُمَّ فَقِّهْهُ فِيْ الدِّيْنِ وَعَلِّمْهُ
التَّأْوِيْلَ.

அப்துல்லாஹ் இப்னு உமர் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் கூறியதாக
ஸெய்யிதுனா அஸ்லம் றழியல்லாஹு தஆலா அன்னவர்கள் கூறினார்கள்.

நிச்சயமாக உமர் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் இப்னு அப்பாஸ்
றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களை அழைத்து, அவர்களை நெருக்கமாக்கி
“நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் ஒரு நாள்
உங்களையழைத்து, உங்களின் தலையைத் தடவி, உங்களின் வாயினுள் உமிழ்ந்த்தைக் நான்
கண்டேன்.” என்று கூறுபவர்களாக இருந்தார்கள். இன்னும் அண்ணலவர்கள் “இறைவா! இவருக்கு
மார்க்கத்தில் விளக்கத்தை ஏற்படுத்துவாயாக. இன்னும் இவருக்கு
வலிந்துரையை கற்றுக் கொடுப்பாயாக” என்றும் கூறினார்கள்.

அல் இஸாபஹ் பீ தம்யீஸிஸ் ஸஹாபஹ்

பக்கம் – 796

ஸியறு அஃலாமின் நுபலா

பாகம் – 01 பக்கம் – 1083

மேற்கூறப்பட்டவற்றின் மூலம் அண்ணல் முஹம்மத்
ஸல்லல்லாஹு
அலைஹிவஸல்லம்
அன்னவர்கள் இரண்டு சந்தர்ப்பங்களில் ஸெய்யிதுனா இப்னு
அப்பாஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களின் வாயில் உமிழ்ந்துள்ளார்கள் என்பதை
நாம் விளங்கிக் கொள்ள முடியும். அண்ணலெம் பெருமானின் இந்தச் செயலின் தத்துவமென்ன?
எங்ளைப் போன்ற சாதாரன மனிதரா அவர்கள்? அவ்வாறு
எண்ணுபவன் நிச்சயம் இறைவன் சாபம் பெற்றவன் என்பதில் ஐயமில்லை.

அண்ணலின் உமிழ் நீரின் தங்கள் வாழ்வில் பெற்றுக் கொண்டார்கள்
ஸெய்யிதுனா அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள். அந்த உமிழ் நீரின் அருளினால் அவர்களின் உள்ளத்திலிருந்து இறைஞானம் ஊற்றெடுத்தது.
அறிவின் சிகரமாய்த் திகழ்ந்தார்கள்.

தொடர் – 13

அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் அருட்கரங்கள் கொண்டு அருள் பெறுதல்

அண்ணலெம் பெருமானின் உமிழ் நீர் கொண்டு மாத்திரமல்ல அவர்களின் கரங்கள் கொண்டும் அருள் பெற்றார்கள் ஸெய்யிதுனா அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள்.

ஒரு சந்தர்ப்பத்தில் இவர்களின் தலையில் தடவினார்கள். மேற்சொல்லப்பட்ட ஹதீஸ் அதற்கு சான்றாகும்.

عَنْ عِكْرِمَةَ
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا مَسَحَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ رَأْسِيْ وَدَعَالِيْ بِالْحِكْمَةِ.

அப்துல்லாஹ்
இப்னு அப்பாஸ் றழியல்லாஹூ தஆலா அன்ஹூ அன்னவர்கள் கூறியதாக இக்ரிமா றழியல்லாஹூ தஆலா அன்ஹூ அன்னவர்கள் கூறினார்கள்.

நபீ
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள் எனது தலையைத் தடவி, தத்துவம் கொண்டு எனக்குப் பிராத்தித்தார்கள்.

ஸியறு அஃலாமின் நுபலா

பக்கம் – 1083

அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள் இவர்களின் தலையில் தடவினார்களெனில் அது ஒரு வீணான செயலல்ல. மாறாக தத்துவ மிக்க செயல். அவர்களின் கரங்கள் சாதாரணமானவையல்ல. ஆன்மீக மணம் கொண்டவை. தெய்வீக சக்தி வாய்ந்தவை. தனதருள் தனது தோழர்களுக்கும் கிடைக்க வேண்டுமென்ற அண்ணலின் பெருந்தன்மை. தனதருளை பல வழிகளிலும் தனது தோழர்களுக்கு அள்ளி வழங்கினார்கள். காருண்ய நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள்.

அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள் இப்னு அப்பாஸ் றழியல்லாஹூ தஆலா அன்ஹூ அன்னவர்களின் தலையில் தடவியது போன்று அவர்களின் அருட் கரங்களை அவர்களின் நெஞ்சிலும் வைத்தார்கள். அதனருளையும் பெற்றார்கள் ஸெய்யிதுனா இப்னு அப்பாஸ் றழியல்லாஹூ தஆலா அன்ஹூ அன்னவர்கள்.

عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ رَضِيَ
اللهُ عَنْهُ أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَضَعَ يَدَهُ
عَلَى صَدْرِهِ. فَوَجَدَ عَبْدُ اللهِ بَرْدَهَا فِى صَدْرِهِ. ثُمَّ قَالَ  اَلَّلهُمَّ احْشُ جَوْفَهُ عِلْمًا وَحِلْمًا.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ
அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தங்களின் கையை தனது நெஞ்சின் மீது வைத்ததாக அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் றழியல்லாஹூ தஆலா அன்ஹூ அன்னவர்கள் கூறினார்கள். அதன் குளிரை அப்துல்லாஹ் அவர்கள் தங்களின் நெஞ்சில் பெற்றுக் கொண்டார்கள். பின்பு “இறைவா! இவரினுள்ளே கல்வியையும், பொறுமையையும் நிரப்புவாயாக” என்று பிரார்த்தித்தார்கள்.

மஜ்மஉஸ்
ஸவாயித் – 15517

عَنْ مَيْمُوْنِ بْنِ مِهْرَانْ عَنْ عَبْدِ
اللهِ بْنِ الْعَبَّاسِ رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ وَضَعَ يَدَهُ عَلَى رَأْسِ عَبْدِ اللهِ بْنِ الْعَبَّاسِ رَضِيَ
اللهُ عَنْهُ. فَقَالَ اَلَّلهُمَّ أَعْطِهِ الْحِكْمَةَ وَعَلِّمْهُ التّأْوِيْلَ
وَوَضَعَ يَدَهُ عَلَى صَدْرِهِ. فَوَجَدَ عَبْدُ اللهِ بْنُ الْعَبَّاسِ رَضِيَ
اللهُ عَنْهُ بَرْدَهَا فِيْ ظَهْرِهِ. ثُمَّ قَالَ اَللَّهُمَّ احْشُ جَوْفَهُ حُكْمًا
وَعِلْمًا.

அப்துல்லாஹ்
இப்னு அப்பாஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் கூறியதாக மைமூன் இப்னு மிஹ்றான் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் கூறினார்கள்.

நிச்சயமாக
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி

வஸல்லம் அன்னவர்கள் தங்களின் கரத்தை அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களின் தலை மீது வைத்து “இறைவா இவருக்கு தத்துவத்தைக் கொடுப்பாயாக. இன்னும் இவருக்கு வலிந்துரையையும் கற்றுக் கொடுப்பாயாக.” என்று கூறினார்கள். இன்னும் அவர்களின் கரத்தை அவரின் நெஞ்சின் மீது வைத்தார்கள். அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் அதன் குளிரை அவர்களின் முதுகில் பெற்றுக் கொண்டார்கள். பின்பு “இறைவா இவரினுள்ளே சட்டத்தையும், கல்வியையும் நிரப்புவாயாக என்று சொன்னார்கள்.”

அல் முஃஜமுல் கபீர் லித்தபறானீ 10585

ஹில்யதுல் அவ்லியா 1119

மேற் கூறப்பட்டவற்றின் மூலம் அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஸெய்யிதுனா அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களின் தலையிலும், நெஞ்சிலும் அவர்களின் அருட்கரங்களை வைத்துள்ளார்கள் என்பது தெளிவாகின்றது. அருள் நபீயின் அருட் கரங்களின் குளிரை தங்களில் பெற்றார்கள் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள்.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் நெஞ்சில் தனது கையை வைக்கும் போது அக்கரத்தின் குளிரை நெஞ்சில் அல்லது முதுகில் உணர முடியாது. அருள் நபீயல்லவா அண்ணலவர்கள். அவர்கள் எங்களைப் போன்ற சாதாரணமானவர்களல்லர். அவர்கள் இறையொளியின் வெளிப்பாடு அவர்களைப் போன்ற ஒருவரை இறைவன் வெளிப்படுத்தவுமில்லை, வெளிப்படுத்தப் போவதுமில்லை. அண்ணலின் அருள் பெற்ற ஸஹாபஹ் –தோழர்கள் பாக்கியவான்கள்.

அண்ணலெம் பெருமானின் உமழ் நீரின், கரங்களின் அருளைப் பெற்றது போல் அண்ணலின் பிரார்த்தனையின் அருளையும் பெற்றார்கள் ஸெய்யிதுனா அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள்.

وَعَنِ ابْنَ عَبَّاسٍ
رَضِيَ اللهُ عَنْهُمَا َدعَالِيْ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاْلحِكْمَةِ
مَرَّتَيْنِ.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ
அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தத்துவம் கொண்டு இரண்டு தடவைகள் எனக்குப் பிரார்த்தனை செய்தார்கள். என இப்னு அப்பாஸ் றழியல்லாஹூ தஆலா அன்ஹூ அன்னவர்கள் கூறினார்கள்.

ஸியறு
அஃலாமின் நுபலா – பக்கம் – 1084

عَنْ سَعِيْدِ بْنِ جُبَيْرٍ عَنِ بْنِ عَبَّاسٍ
رَضِيَ اللهُ عَنْهُمْ قَالَ كُنْتُ فِيْ بَيْتِ مَيْمُوْنَةَ بِنْتِ الْحَارِثِ رَضِيَ
اللهُ عَنْهَا. فَوَضَعْتُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَضُوْءً.
فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ وَضَعَ هَذَا؟ فَقَالَتْ
مَيْمُوْنَةُ وَضَعَهُ عَبْدُ اللهِ. فَقَالَ اَللَّهُمَّ عَلِّمْهُ التَّأْوِيْلَ
وَفَقِّهْهُ فِى الدِّيْنِ.

இப்னு அப்பாஸ் றழியல்லாஹூ தஆலா அன்ஹூ அன்னவர்கள் கூறியதாக ஸயீதுப்னு ஜுபைர் றழியல்லாஹூ தஆலா அன்ஹூ அன்னவர்கள் அறிவிக்கிறார்கள்.

நான் ஹாரிதுடைய மகள் மைமூனா றழியல்லாஹூ தஆலா அன்ஹா அன்னவர்களின் வீட்டிலிருந்தேன். அப்பொழுது நபீ
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள் வுழூச் செய்வதற்காக நீரை வைத்தேன். அப்பொழுது நபீ ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள் இதை வைத்தது யார்? எனக் கேட்டார்கள்.

அப்துல்லாஹ்தான் இதை வைத்தார் என மைமூனா றழியல்லாஹ் தஆலா அன்ஹா அன்னவர்கள் கூறினார்கள். அப்பொழுது நபீ ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள் “இறைவா! இவருக்கு வலிந்துரையைக் கற்றுக்கொடுப்பாயாக
மார்க்கத்தில் இவருக்கு விளக்கத்தை ஏற்படுத்துவாயாக” எனப்
பிரார்த்தனை செய்தார்கள்.

அல்
முஃஜமுல் கபீர் லித்தபராணீ – 10587

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ وَضَعْتُ
لِرَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَضُوْءً فَقَالَ اَللَّهُمَّ فَقِّهْهُ
فِى الدِّيْنِ وَعَلِّمْهُ التَّأْوِيْلَ.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்கு வுழூச் செய்வதற்கு நீரை வைத்தேன். அப்பொழுது அவர்கள் இறைவா! இவருக்கு மார்க்கத்தில்
விளக்கத்தை ஏற்படுத்துவாயாக. இன்னும் இவருக்கு வலிந்துரையையும்
கற்றுக்கொடுப்பாயாக என்று பிரார்தனை செய்தார்கள் என்று இப்னு அப்பாஸ் றழியல்லாஹூ தஆலா அன்ஹு அன்னவர்கள் கூறினார்கள்.

ஸியறு அஃலாமின் நுபலா – பக்கம் – 1084

அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்களின் உமிழ்நீரின் அருளை, கரங்களின் அருளை பிரார்த்தனையின் அருளைப் பெற்ற ஸெய்யிதுனா இப்னு அப்பாஸ் றழியல்லாஹூ தஆலா அன்ஹு அன்னவர்கள் அதன் பலனை தங்கள் வாழ்வில் பெற்றார்கள். இவர்கள் மீது நேசம் கொண்ட அண்ணலவர்கள் தங்களுடன் அவர்களையணைத்து, அவர்களுக்காக பிரார்த்தனை செய்தார்கள். அதனருளையும் பெற்றார்கள். இப்னு அப்பாஸ் றழியல்லாஹூ தஆலா அன்ஹு அன்னவர்கள்.

عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ
اللهُ عَنْهُمْ قَالَ ضَمِّنِيْ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْهِ
فَقَالَ اَللَّهُمَّ عَلِّمْهُ الْحِكْمَةَ.

நபீ
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள்

தங்களளவில் என்னை அனணத்து, இறைவா! இவருக்கு தத்துவத்தைக் கற்றுக் கொடுப்பாயாக என்று பிரார்த்தித்தார்கள் என்று இப்னு அப்பாஸ் றழியல்லாஹூ தஆலா அன்ஹு அன்னவர்கள் கூறியதாக இக்ரிமா றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் அறிவிக்கின்றார்கள்.

அல்முஃஜமுல் கபீர் லித்தபரானீ – 10588

ஸுனனுத் திர்மிதீ – 3824

ஹில்யதுல் அவ்லியா – 1113

عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ
اللهُ عَنْهُمْ قَالَ ضَمِّنِيْ النَّبِيُّ صَلًّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى
صَدْرِهِ  وَقَالَ  اَللَّهُمَّ عَلِّمْهُ الْحِكْمَةَ.

நபீ
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தங்களின் நெஞ்சுடன் என்னை அனணத்து, இறைவா! இவருக்கு தத்துவத்தைக் கற்றுக் கொடுப்பாயாக என்று பிரார்த்தித்தார்கள். என்று இப்னு அப்பாஸ் றழியல்லாஹூ தஆலா அன்ஹு அன்னவர்கள் கூறியதாக இக்ரிமா றழியல்லாஹூ தஆலா அன்ஹு அன்னவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹுல்
புஹாரீ – 3756

அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்களின் மூலம் பல வகைகளில் அருள் பெற்ற ஸெய்யிதுனா அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் அறிவுக்கடலாக விளங்கினார்கள். அண்ணலெம் பெருமானின் அருள் அவர்களில் பிரதிபலித்தது. அல்குர்ஆனுக்கு விளக்கமெழுதும் தகுதியைப் பெற்றார்கள். நபித்தோழர்கள் மத்தியில் அவர்களுக்கு தனிச் சிறப்பிருந்தது. அவர்களை ஸஹாபஹ் – தோழர்கள் கண்ணியம் செய்தார்கள்.

இவர்கள் பற்றி ஸெய்யிதுனா அமீறுல் முஃமினீன் உமர் இப்னுல் ஹத்தாப் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் கூறும் போது “அல்குர்ஆனின் மொழி பெயர்ப்பாளர்களில் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் சிறந்தவராகி விட்டார்.” என்று கூறுவார்கள். ஸுறதுன் நஸ்ரில் வந்த ஓர் ஆயத்துக்கு ஸஹாபஹ்களிடம் விளக்கம் கேட்டார்கள் ஸெய்யிதுனா உமர் இப்னுல் ஹத்தாப் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள். அவர்களில் சிலர் அதற்கு பதிலளித்தனர் சிலர் மௌனமாயிருந்தனர். ஆனால் அந்த பதில்கள் அவர்களுக்கு திருப்தியளிக்கவில்லை. அதன் பின்னர் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்னவர்களிடம் அது பற்றி வினவினார்கள். அவர்கள் அளித்த பதில் அவர்களுக்கு திருப்தியைக் கொடுத்த்து.

தொடரும்…

RELATED ARTICLES

Most Popular

Recent Comments