மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள்
சிரேஷ்ட விரிவுரையாளர் –
அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம்
தொடர் – 01
அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களைப் போன்ற ஒரு மனிதர் இவ்வுலகில் தோன்றவுமில்லை. தோன்றப் போவதுமில்லை.
சிருஷ்டிகளை வெளிப்படுத்த நாடிய அல்லாஹு தஆலா தனது புனிதமிகு தாத்திலிருந்து முதன் முதலில் வெளிப்படுத்தியது அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் ஒளியைத் தான் என்பது ஸுபீகளான இறைஞானிகளின் ஏகோபித்த முடிவாகும். வழிகேடர்கள் இதை மறுத்தாலும் எதார்த்தம் இதுவேயாகும். மறுப்பவன் நிச்சயம் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் எதார்த்தம் புரியாதவனாகவே இருப்பான்.
இறையொளி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மனித உருவில் எங்களைப் போன்றவர்களன்றி அவர்களின் எதார்த்தத்தில் எங்களைப் போன்றவர்களல்லர். அவர்கள் அல்லாஹு தஆலாவுக்கு மிக விருப்பமானவர்கள்.
இறையருள் பெற்றவர்கள், அருள் வடிவம் பெற்றவர்கள். அவர்களைப் போன்ற ஒருவரை அல்லாஹு தஆலா வெளிப்படுத்தவுமில்லை. வெளிப்படுத்தப் போவதுமில்லை. சந்திரனை விடப் பிரகாசமானவர்கள். ஒளி உருவம் பெற்றவர்கள். அழகின் முழு வடிவம் பெற்றவர்கள் அண்ணல் எம் பெருமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்.
அன்னவர்களின் உடல் முழுவதும் அருளாகும். அன்னவர்களின் கை எவற்றையெல்லாம் தொட்டனவோ அவை அனைத்தும் அருள் பெற்றன. அன்னவர்கள் பாவித்த பொருட்கள் அனைத்தும் அருள் நிறைந்தவேயாகும்.
அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் எதார்த்தத்தை நன்கு புரிந்திருந்தார்கள் ஸஹாபஹ் – தோழர்கள். அன்னவர்களின் உடலின் ஒவ்வொரு பகுதியைக் கொண்டும் அருள் பெற்றார்கள். அன்னவர்கள் அணிந்த சேட், சாறம், ஜுப்பஹ், போர்வை, தலைப்பாகை போன்றவற்றைக் கொண்டு அருள் பெற்றார்கள். அன்னவர்களின் அருள் நிறைந்த புனித உடலிலிருந்து வெளியாகிய சிறுநீர், வியர்வை, இரத்தம், சளி போன்றவற்றைக் கொண்டு அருள் பெற்றார்கள்.
இது மாத்திரமன்றி நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் சாப்பிட்ட, குடித்த பாத்திரங்களைக் கொண்டு அருள் பெற்றார்கள் ஸஹாபஹ்- தோழர்கள் றழியல்லாஹு அன்ஹும். அன்னவர்களின் திருவுடலில் காணப்பட்ட நபித்துவத்தின் முத்திரையை முத்தமிடுவது கொண்டும், தொடுவது கொண்டும் அருள் பெற்றார்கள். அன்னவர்களின் கை, கால், வயிறு போன்றவற்றை முத்தமிடுவது கொண்டும் அருள் பெற்றார்கள். அன்னவர்களின் முடிகள், நகங்கள் கொண்டும் அருள் பெற்றார்கள். நோய் நிவாரணம் பெற்றார்கள். அன்னவர்கள் வுழூச்செய்து எஞ்சிய நீரை அருந்துவது கொண்டும், தங்களின் உடலில் அதை பூசுவது கொண்டும் அருள் பெற்றார்கள்.
அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுத இடங்களில் தொழுவது கொண்டு ஸஹாபஹ் – தோழர்கள் அருள் பெற்றார்கள். அன்னவர்கள் தங்களின் அருள் நிறைந்த வாயிலிருந்து துப்பிய நீரைக் கொண்டு அருள் பெற்றார்கள். அன்னவர்களின் அருள் நிறைந்த உமிழ் நீரைக் கொண்டு அருள் பெற்றார்கள். நோய் நிவாரணம் பெற்றார்கள். அன்னவர்கள் சாப்பிட்டு எஞ்சிய உணவை சாப்பிடுவது கொண்டும், அன்னவர்களின் அருள் நிறைந்த கை விரல்கள் பட்ட இடத்தில் சாப்பிடுவது கொண்டும் அருள் பெற்றார்கள்.
அதே போன்று நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் குடித்து எஞ்சிய பானத்தைக் குடிப்பது கொண்டும் ஸஹாபஹ் – தோழர்கள் அருள் பெற்றார்கள்.
அண்ணல் எம் பெருமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தங்களின் அருள் நிறைந்த வாயினுள் மென்ற ஈத்தம் பழத்தை சாப்பிடுவது கொண்டு ஸஹாபஹ்களின் குழந்தைகள் அருள் பெற்றார்கள். இந்த அருள் தங்களின் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டுமென்பதற்காக தங்களுக்கு குழந்தைகள் பிறந்தவுடன் அந்தக் குழந்தைகளை ஸஹாபஹ் – தோழர்கள் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் சமூகத்துக்கு கொண்டு சென்றார்கள். நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஈத்தம் பழத்தை எடுத்து, தனது அருள் நிறைந்த வாயினுள் மென்று அதை அந்த குழந்தைகளின் வாயினுள் சுவைக்கச் செய்தார்கள்.
இவ்வாறு நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுடன் தொடர்புடைய சகல வஸ்துக்களைக் கொண்டும் ஸஹாபஹ் – தோழர்கள் தங்களின் வாழ்க்கையில் அருள் பெற்றார்கள்.
அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பாவித்துவிட்டுச் சென்ற பொருட்களில் பறகத் – அருள் உண்டு என்பதை நம்பிய ஸஹாபஹ் – தோழர்கள் அவற்றைக் கொண்டு அருள் பெற்றிருப்பதும், சிறப்புப் பெற்றிருப்பதும் எமக்கு ஓர் சிறந்த முன்மாதிரியாகும்.
அண்ணல் எம் பெருமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களில், அன்னவர்கள் பாவித்த, விட்டுச் சென்ற பொருட்களில் அருள் காணப்படுவது போன்று ஏனைய நபீமார்கள், வலீமார்கள், தரீகஹ்களின் ஷெய்ஹ்மார்கள், அல்லாஹ்வை நன்கறிந்த ஆரிபீன்களிலும், அவர்கள் பாவித்த, விட்டுச் சென்ற பொருட்களிலும் பறகத் – அருள் உண்டு என்பது ஸுன்னத் வல் ஜமாஅத் அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும்.
நபீ யஃகூப் அலைஹிஸ்ஸலாம், நபீ யூஸுப் அலைஹிஸ்ஸலாம் ஆகியோரின் வரலாற்றை அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் கூறிக்காட்டுகிறான்.
தனது மகன் யூஸுப் அலைஹிஸ்ஸலாம் அன்னவர்களைப் பிரிந்த காரணத்தினால் கடுமையான கவலையடைந்தார்கள். நபீ யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அன்னவர்கள் அழுதழுது அன்னவர்களின் பார்வை பலவீனமடைந்தது. தனது தந்தையின் நிலையை அறிந்தார்கள் நபீ யூஸுப் அலைஹிஸ்ஸலாம் அன்னவர்கள். தான் அணிந்திருந்த சேட்டைக் கழற்றி, தனது தந்தை யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அன்னவர்களின் முகத்தில் அதை வைக்கும் படி அனுப்பி வைத்தார்கள். இந்த சேட்டை அன்னவர்களின் முகத்தில் வைத்தவுடன் அன்னவர்களின் பார்வை தெளிவடைந்தது.
இதை அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்.
اِذْهَبُوْا بِقَمِيْصِيْ هَذَا فَأَلْقُوْهُ عَلَى وَجْهِ أَبِيْ يَأْتِ بَصِيْرًا. وَأْتُوْنِيْ بِأَهْلِكُمْ أَجْمَعِيْنْ.
நீங்கள் என்னுடைய இந்த சேட்டைக் கொண்டு போய் எனது தந்தையின் முகத்தின் மீது போடுங்கள். அவர் பார்வையுடையவராக வருவார். நீங்கள் உங்களின் குடும்பத்தினர் அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள்.
ஸுறது யூஸுப் 93
இந்த வசனத்தின் மூலம் நபீ யூஸுப் அலைஹிஸ்ஸலாம் அன்னவர்களின் சேட்டை நபீ யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அன்னவர்களின் முகத்தில் வைத்த போது அவர்களின் பார்வை தெளிவடைந்தது என்பது உறுதியாகிறது. அந்த சேட்டில் ஏதாவது மருந்து கலக்கப்பட்டிருந்ததா? இல்லை. அது ஒரு நபீ அணிந்திருந்த சேட் அதில் பறகத் உண்டு.
நபீமார்கள் பாவித்த பொருட்களில் அருள் காணப்படுவது போன்று அவர்களின் உடலின் ஒவ்வொரு உறுப்பிலும் அருள் உண்டு.
புனித முடிகளைக் கொண்டு அருள் பெறுதல்
அண்ணல் ஸெய்யிதுனா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளைக் கொண்டு அன்னவர்களின் தோழர்களான ஸஹாபஹ்கள் அருள் பெற்றிருக்கிறார்கள். அவற்றை தங்களின் வீடுகளில் மிக கண்ணியமாக பாதுகாத்திருக்கிறார்கள். அருள் நிறைந்த அந்த முடிகளின் பறகத்தினால் நோய் நிவாரணம் பெற்றிருக்கிறார்கள். அந்த முடிகளின் பறகத்தினால் யுத்தங்களில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். தாங்கள் மரணித்தால் அந்தத் திருமுடிகளை தங்களின் ஜனாஸாக்களுடன் சேர்த்து அடக்க வேண்டுமென்று எத்தனையோ ஸஹாபஹ் – தோழர்கள் தங்களின் உறவினர்களிடம் இறுதி விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்.
அண்ணல் எம் பெருமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் முடிகள் எங்களைப் போன்றவர்களின் முடி போன்றதல்ல. அவை இறையருள் நிறைந்தவை. பறகத் மிக்கவை. எந்த ஒரு நோயையும் குணப்படுத்தும் தன்மை கொண்டவை.
அது மாத்திரமல்ல அன்னவர்களின் திரு முடிகள் மிகவும் மணம் வாய்ந்வவையாகக் காணப்பட்டன. ஸஹாபஹ் – தோழர்கள் அது பற்றி வருணித்திருக்கிறார்கள்.
இன்னும் அவர்கள் அதிக முடிகள் கொண்டவர்களாகவும் திகழ்ந்தார்கள் கண்மனி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் இதுவே அவர்களின் உம்மத்தினர் பெற்ற பாக்கியமாகும்.
عَنْ جَابِرِبْنِ عَبْدِ اللهِ قَالَ كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا إِغْتَسَلَ مِنْ جَنَابَةٍ صَبَّ عَلَى رَأْسِهِ ثَلَاثَ حَفَنَاتٍ مِنْ مَاءٍ. فَقَالَ لَهُ الْحَسَنُ ابْنُ مُحَمَّدٍ إِنَّ شَعْرِيْ كَثِيْرٌ. قَالَ جَابِرٌ فَقُلْتُ لَهُ يَاابْنَ أَخِيْ كَانَ شَعْرُ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكْثَرَ مِنْ شَعْرِكَ وَأَطْيَبَ
நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஜனாபத்தின் போது குளித்தார்களாயின் நீரை மூன்று அள்ளுதல்கள் அள்ளி தங்களின் தலையின் மீது ஊற்றுவார்கள்.
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் றழியல்லாஹுஅன்ஹு அவர்கள் கூறினார்கள். அப்பொழுது ஹஸன் இப்னு முஹம்மத் றழியல்லாஹுஅன்ஹு அவர்கள் அவர்களிடம் எனது முடி அதிகமானது என்று கூறினார்கள்.
எனது சகோதரனின் மகனே! உனது முடியை விட மிக அதிகமானதாக, மிக மணமானதாக நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் முடி இருந்தது என்று அவருக்கு நான் கூறினேன் என்று ஜாபிர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் 741
நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் முடிகள் அதிகமானவையாகவும், மிகவும் மணம் வாய்ந்தவையாகவும் காணப்பட்டன என்பதை இதன் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
இதே போன்று நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் தாடி முடிகளும் அதிகமாக காணப்பட்டன.
وَكَانَ كَثِيْرَ الشَّعْرِ وَالِّلحْيَةِ
அவர்கள் அதிக முடியுடையவர்களாகவும், தாடி அதிகமானவர்களாகவும் இருந்தார்கள்.
ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 6297
ஸஹாபஹ் – தோழர்கள் பாதுகாத்து வைத்திருந்த முடிகளில் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் தலை முடிகளும், தாடி முடிகளும் காணப்பட்டன. இந்தியாவின் தலை நகர் டில்லியில் அமைந்துள்ள ஜும்அஹ் மஸ்ஜிதில் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் தாடி முடிகளில் ஒன்று கண்ணாடி பேழையில் மிகவும் கண்ணியமாக பாதுகாக்கப்படுவது இங்கு குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும். இன்றும் மக்கள் அந்த திரு முடியை தரிசித்து, முத்தமிட்டு அருள் பெற்று வருகிறார்கள்.
அஷ் ஷெய்ஹ் அப்துல் கரீம் முஹம்மத் அல் முதர்ரிஸ் றஹிமஹுல்லாஹ் அவர்கள் எழுதிய நூறுல் இஸ்லாம் என்ற நூலில் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் தாடி முடிகள் முஸ்லிம் மன்னர்களிடத்தில் பாதுகாக்கப்பட்டன அவற்றில் சில உத்மானிய்ய அரசர்களுக்குக் கிடைத்தன. அவற்றில் சில இறாகிலுள்ள குர்திஸ்தான் வீடுகளை வந்தடைந்தன. இன்னும் அவை சுலைமானிய்யஹ் மாவட்டத்திலுள்ள பயாறா என்ற தைக்காவில் காணப்படுகின்றன.
பஞ்சம் ஏற்பட்டு விட்டால், அல்லது மழை இல்லாமல் போய்விட்டால் அந்தத் திருமுடிகளின் பறகத்ததைக் கொண்டு மக்கள் அல்லாஹு தஆலாவிடத்தில் வஸீலா தேடுவார்கள்.
அந்த திருமுடிகள் வைக்கப்பட்டிருக்கின்ற விஷேட பெட்டியிலிருந்து அவற்றை எடுக்கப்படும். நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது பல தடவை ஸலவாத் சொல்வோம். அந்த திருமுடிகளைக் கொண்டு அல்லாஹு தஆலாவிடம் வஸீலா தேடுவோம். அதிக மழை இறங்கும்.
அருகிலுள்ள முஸ்லிம் நாடுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுகின்ற நேரத்தில் அவற்றின் அருள் கொண்டு எதிரிகளின் தாக்குதலிலிருந்து எங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும். இந்தப் பகுதியில் வாழக்கூடிய மக்களிடத்தில் இது ஓர் அறியப்பட்ட விடயமாகும். இதில் எந்த விதமான சந்தேகமும் கிடையாது.
நூறுல் இஸ்லாம்
பக்கம் 124
அண்ணல் எம் பெருமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் புனித மிகு தலை முடிகள், தாடி முடிகள் உலகின் பல பகுதிகளிலும் இன்றும் காணப்படுகின்றன. அவை கொண்டு மக்கள் இன்றும் அருள் பெற்று வருவது குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும்.
ஸெய்யிதுனா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திரு முடிகள் எவ்வாறு மக்களை வந்தடைந்தன என்பதை நோக்கும் போது கண்ணியத்திற்குரிய ஸஹாபஹ் – தோழர்கள் மூலமாகவே அவை வந்தடைந்துள்ளன என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும். ஸஹாபஹ் – தோழர்களுக்கு அவை எவ்வாறு கிடைத்தன?
அகிலத்துக்கே அருட்கொடையாக அனுப்பப்பட்ட அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தாங்களாகவே முன் வந்து, தங்களின் திரு முடிகளை ஸஹாபஹ் – தோழர்கள் மத்தியில் பங்கு வைத்திருக்கிறார்கள். என்பதை நோக்கும் போது அந்த திரு முடிகள் எவ்வளவு பெறுமதி வாயந்தவை என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும். அந்த திரு முடிகளில் எந்தவிதப் பயனுமில்லையெனில், அவற்றில் அருள் இல்லையெனில் அவற்றை நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஸஹாபஹ்களின் மத்தியில் பங்கிட்டிருக்கமாட்டார்கள். அவற்றை பங்கிடும்படி பணித்திருக்கமாட்டார்கள். நிச்சயமாக அண்ணல் எம்பெருமானின் திரு முடிகளில் அருள் உண்டு, பறகத் உண்டு, நோய் நிவாரணம் உண்டு.
தங்களின் முடிகள் அருள் நிறைந்தவை என்பதை புரிந்து கொண்ட நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தனது உம்மத்தினரும் அந்த அருளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்காக தாங்களாகவே முன் வந்து அந்தத் திரு முடிகளைப் பங்கு வைத்தார்கள்.
பின்வரும் ஹதீத்கள் இதற்கு சான்றாகும்.
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى مِنًى فَأَتَى الْجَمْرَةَ فَرَمَاهَا. ثُمَ أَتَى مَنْزِلَهُ بِمِنًى وَنَحَرَ ثُمَّ قَالَ لِلْحَلَّاقِ خُذْ وَأَشَارَ إِلَى جَانِبِهِ الْأَيْمَنِ ثُمَّ الْأَيْسَرِ ثُمَّ جَعَلَ يُعْتِيْهِ النَّاسَ.
நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மினாவுக்கு வந்து ஜம்றாவில் கல்லெறிந்தார்கள். பின்னர் மினாவில் தங்களின் இடத்திற்கு வந்து அறுத்தார்கள். பின்னர் அம்பட்டனிடம் எடு என்று சொல்லி தனது வலது பக்கத்தை பின்னர் தனது இடது பக்கத்தை சுட்டிக் காட்டினார்கள். பின்னர் மக்களுக்கு அதைக் கொடுக்க ஆரம்பித்தார்கள்.
ஸஹீஹ் முஸலிம் 3139
وَأَمَّا فِيْ رِوَايَةِ أَبِيْ كُرَيْبٍ قَالَ فَبَدَأَ بِا لشِّقِّ الْأَيْمَنِ فَوَزَّعَهُ الشَّعْرَةَ وَالشَّعْرَتَيْنِ بَيْنَ النَّاسِ. ثُمَّ قَالَ بِا لْأَيْسَرِ فَصَنَعَ بِهِ مِثْلَ ذَالِكَ. ثُمَّ قَالَ هَهُنَا أَبُوْطَلْحَةَ؟ فَدَفَعَهُ إِلَى أَبِيْ طَلْحَةَ.
அபூகுறைப் அவர்களின் ரிவாயத்தில் பின்வருமாறு கூறுகிறார்கள்.
நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் வலது பக்கத்தைக் கொண்டு ஆரம்பித்து ஒரு முடியாக, இரண்டு முடியாக மக்கள் மத்தியில் அதனை பங்கிட்டார்கள். பிறகு இடது பக்கத்தை களையும் படி கூறினார்கள். அதைப் போன்றே அதனையும் செய்தார்கள். பின்னர் அபூதல்ஹா இங்கே இருக்கிறாரா? என்று கேட்டு அதனை அபூதல்ஹாவிடம் ஒப்படைத்தார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் 3140
மேற்கூறப்பட்டவற்றின் மூலம் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களின் முடிகளை மக்கள் மத்தியில் பங்கு வைத்திருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. அவ்வாறாயின் இந்த செயலில் என்ன பிரயோசனம் இருக்கிறது? ஆம். நிச்சயமாக பிரயோசனம் இருக்கிறது. நிச்சயமாக அந்தத் திருமுடிகளில் அருள் இருக்கிறது. அவற்றில் எந்த விதமான பிரயோசனமும் இல்லையெனில், அவற்றில் எந்த ஒரு அருளும் இல்லையெனில் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அவற்றை மக்கள் மத்தியில் பங்கு வைத்திருக்கமாட்டார்கள். ஸஹாபஹ் – தோழர்களும் அவற்றை பாதுகாத்திருக்கமாட்டார்கள்.
நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அருள் நிறைந்த, புனிதம் நிறைந்த முடிகளை பல ஸஹாபஹ் – தோழர்கள் தங்களின் இல்லங்களில் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். அவற்றைக் கொண்டு அருள் பெற்றிருக்கிறார்கள். அவர்களில் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்குப் பத்து வருடங்களுக்கு மேல் பணிபுரிந்த ஸெய்யிதுனா அனஸ் இப்னு மாலிக் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் குடும்பத்தினர் மிக முக்கியமானவர்களாகும்.
இவர்களின் சாச்சா அபூதல்ஹதல் அன்ஸாரீ றழியல்லாஹு அன்ஹு, இவர்களின் தாய் அஸ்ஸெய்யிதஹ் உம்மு ஸுலைம் றழியல்லாஹு அன்ஹா இவர்களிடம் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தங்களின் திருமுடிகளை நேரடியாக வழங்கியிருக்கிறார்கள்.
தொடரும்…