மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள்
சிரேஷ்ட விரிவுரையாளர் – அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம்
தொடர் – 05
அல் அல்லாமஹ் அஸ் ஸஹாவீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் தங்களின் அழ்ழவ்உல் லாமிஃ என்ற நூலில் ஹிஜ்ரீ 763ம் ஆண்டு மக்காவில் பிறந்து ஹிஜ்ரீ 823ம் ஆண்டு மதீனாவில் மரணித்த அல் முர்ஷிதீ என்று பிரசித்தி பெற்ற அபூஅப்தில்லாஹ் முஹம்மத் இப்னு அபூபக்ர் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் பற்றிக் கூறும் போது “அவர்கள் சிறந்தவர்களாக, மார்க்கப் பற்றுள்ளவர்களாக, பேணுதல் உள்ளவர்களாக இருந்தார்கள். தனது கால்களினால் நடந்து சென்று 50 வருடங்களுக்கும் அதிகமாக நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை ஸியாரத் செய்திருக்கிறார்கள். அதே போன்று மூன்று தடவைகள் பைதுல் முகத்தஸை ஸியாரத் செய்திருக்கிறார்கள். இவர்கள் அங்கு ஒரு நல்ல மனிதரை சந்தித்தார்கள். அவர்களிடம் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் ஆறு திருமுடிகள் காணப்பட்டன. தனது மரணம் நெருங்கிய போது அவற்றை ஆறு நபர்களுக்கு அவர்கள் சமமாகப் பங்கு வைத்தார்கள். அந்த ஆறு நபர்களில் இவர்களும் ஒருவராகும். என்று கூறுகின்றார்கள்.
ஹிஜ்ரீ 862ல் மரணித்த இவர்களின் புதல்வர் உமர் இப்னு முஹம்மத் அல்முர்ஷிதீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் இது பற்றிக் கூறும் போது ஆறு பேர்களுக்கன்றி மூன்று பேர்களுக்கு அவை பங்கிடப்பட்டன என்பதே சரியாகும் என்று கூறுகின்றார்கள்.
அதில் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
பைதுல் முகத்தஸில் அவர்களின் தந்தை சந்தித்த ஷெய்ஹிடமிருந்து பெற்றுக் கொண்ட நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளில் ஒன்று இவர்களிடம் இருந்தது. அந்த ஷெய்ஹிடத்தில் ஆறுதிருமுடிகள் இருந்தன. தனது மரணம் நெருங்கிய போது அவற்றை மூன்று பேர்களுக்கு சமமாக பங்கிட்டார்கள். அவர்களில் இவர்களும் ஒருவர். அவற்றில் ஒரு முடி தவறி விட்டது. அந்தத் திருமுடி கொண்டு நான் பறகத் பெற்றேன்.
அதன் பின் இவர்களின் மகன் அபூஹாமித் அல்முர்ஷிதீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களிடம் இந்தத் திருமுடி காணப்பட்டது. இவர்கள் பற்றி அல் இமாம் அஸ்ஸஹாவீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் அழ்ழவ்உல் லாமிஃ என்ற தனது கிரந்தத்தில் குறிப்பிடும் போது இவ்வாறு கூறுகின்றார்கள்.
இன்னும் அவர்கள் பற்றிக் கூறும் போது “அவர்கள் சிறந்தவர்கள், சிறந்த வணக்கசாலி, அதிக வறுமை மிக்கவர்கள் தனது தந்தையிடமிருந்து பெற்றுக் கொண்ட திருமுடிகளில் ஒன்று இவர்களிடம் இருந்தது.” என்று கூறுகின்றார்கள்.
அல் அல்லாமஹ் அல் குஸ்துல்லானீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் இந்தத் திருமுடியைத் தரிசித்து இருக்கிறார்கள்.
தங்களின் அல் மவாஹிபுல் லதுன்னிய்யஹ் என்ற கிரந்தத்தில் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
சிறப்பு மிக்க மக்காவில் ஹிஜ்ரீ 897ம் ஆண்டு துல்கஃதா மாதம் அஷ்ஷெய்ஹ் அபூஹாமித் அல்முர்ஷிதீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களிடம் ஒரு முடியைக் கண்டேன். அது நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் முடி என்ற செய்தி பரவியிருந்தது. அதை நான் மகாம் இப்றாஹீம் என்ற இடத்தில் தரிசித்தேன்.
மக்காவில் இருந்த இன்னுமொரு முடி
தன்ஸீஹுல் முஸ்தபல் முக்தார் என்ற கிரந்தத்தில் அல் அல்லாமஹ் இப்னுல் அஜமீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் அல் அல்லாமஹ் இப்னு ஹஜர் அல் ஹைதமீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் கூறியதாக பின்வருமாறு கூறுகின்றார்கள்.
மக்காவில் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் கண்ணியமிக்க முடிகளில் ஒரு முடி இருக்கிறது. இது பிரசித்தி பெற்ற ஓர் அம்சமாகும். இந்தத் திருமுடியை மக்கள் தரிசிக்கிறார்கள். அது நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடி என்பது முன்னோரினதும், பின்னோரினதும் ஏகோபித்த முடிவாகும்.
தூனிசியாவில் இருந்த சில திருமுடிகள்
தூனீசியாவைச் சேர்ந்த நம்பிக்கை மிக்க அறிஞர்களில் ஒருவர் அது பற்றி எங்களுக்கெடுத்துரைத்தார். அவை மூன்று இடங்களில் இருந்தன.
01- கண்ணியமிக்க நபீத் தோழர் ஸெய்யிதுனா உபைத் இப்னு அர்கம் அபூஸம்அதல் பலவா றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் இவர்களின் புனித கப்று கைறுவான் என்ற இடத்தில் உள்ளது.
நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஹஜ்ஜதுல் வதாஇன் போது மினாவில் தங்களின் முடிகளைக் களைந்தார்கள். அந் நேரம் ஸெய்யிதுனா அபூஸம்ஆ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளை எடுத்து தங்களின் தொப்பியினுள் வைத்தார்கள். அதனுடனேயே அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
அந்தத் தொப்பியினுள் மூன்று திருமுடிகள் காணப்பட்டதாகவும், அவற்றின் ஒன்றை தனது வலது கண்ணிலும், இன்னுமொன்றை தனது இடது கண்ணிலும், இன்னுமொன்றை தனது நாக்கிலும் வைக்க வேண்டுமென்று அவர்கள் வஸிய்யத் செய்ததாகவும் கூறப்படுகிறது.
02- ஸ்பெயினையும், தூனீசியாவையும் சேர்ந்த அமைச்சர் அஸ்ஸிராஜ் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
தூனீசியாவிலுள்ள ஷெய்ஹ்மார்களின் வீடுகளில் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகள் காணப்படுகின்றன. அவை தற்பொழுது “வலிய்யுல்லாஹ் அல்மர்ஜானீ” அவர்களின் ஸாவியா என்று பிரசித்தி பெற்ற அஸ்ஸாவியதுல் பறானிய்யாவில் காணப்படுகின்றன.
இப்னுத் தப்பாஃ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
அவர்களின் பேரர் அபூ பாரிஸ் அப்துல் அஸீஸ் அவர்கள் அவற்றை எனக்குக் காட்டினார்கள். அவற்றைக் கொண்டு நான் அருள் பெற்றேன்.
03- மேற்கூறிய அமைச்சரவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள் அஷ் ஷெய்ஹ் அபூ ஷஃறா றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் கட்டிடங்கள் கட்டுவது அவர்களின் தொழிலாக இருந்தது. ஓரிடத்தில் அவர்கள் கட்டிடப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அங்குள்ள ஓர் களஞ்சியத்தில் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகள் இருப்பதைக் கண்டார்கள். அதற்குரியவர்களிடம் அதைக் கேட்டுப் பெற்றுக் கொண்டார்கள். தன்னுடன் அந்தத் திருமுடிகளை அடக்க வேண்டுமென்றும் வஸிய்யத் செய்தார்கள். இதை தூனீசியா மக்கள் நன்கறிந்தவர்கள்.
04- எகிப்திலுள்ள அல் ஹுலாதீ என்பவரிடம் காணப்பட்ட திருமுடி
அல் ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் இவர் பற்றி தங்களின் அத்துறறுல் காமினஹ் என்ற கிரந்தத்தில் பின்வருமாறு கூறுகிறார்கள்.
இவர்கள் அஸ்ஸெய்யித் அலிய்யுப்னு முஹம்மத் இப்னுல் ஹஸன் அல்ஹுலாதீ அல்ஹனபீ அல்காதூஸீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களாகும். இவர்களிடம் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஒட்டகை அல்லது குதிரையில் ஏறும் சந்தர்ப்பத்தில் தங்களின் அருள் நிறைந்த கால்களை வைத்து ஏறும் இரும்பினாலான படி (அர்ரிகாப்) போன்றது இருந்தது இதனால் அவர்கள் “அர்ரிகாபீ” என்று அழைக்கப்பட்டார்கள்.
இதே போன்று இவர்களிடம் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளும் இருப்பதை தான் உறுதி கொள்ளவதாக கூறுகின்றார்கள்.
05- எகிப்திலுள்ள மத்ரசது இப்னிஸ்ஸமன் என்ற இடத்திலுள்ள திருமுடி
அல் அல்லாமா அஸ்ஸஹாவீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் அழ்ழவ் உல்லாமிஃ என்ற தங்களின் நூலில் இவர்கள் பற்றி பின்வருமாறு கூறுகின்றார்கள். டமஸ்கஸைச் சேர்ந்த ஸம்ஸுத்தீன் முஹம்மத் இப்னு உமர் இப்னு முஹம்மத் இப்னு உமர் அஸ்ஸமன் அல் குறஷீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் இப்னுஸ்ஸமன் என்று பிரசித்தி பெற்றிருந்தார்க்கள். ஹிஜ்ரீ 824 ம் ஆண்டு பிறந்தார்கள் ஹிஜ்ரீ 897ம் ஆண்டு மரணித்தார்கள். தனது தந்தையைப் போன்று இவர்களும் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அதிகமான மார்க்க அறிஞர்களை சந்தித்திருக்கிறார்கள். பல நல்லடியார்களையும் சந்தித்திருக்கிறார்கள். அவர்கள் சந்தித்த நல்லடியார்களில் சிலர் அற்புதங்கள் நிறைந்தவர்களாகக் காணப்பட்டார்கள். அவற்றைக் கொண்டு அவர்கள் பிரயோசனம் பெற்றார்கள்.
இவர்கள் சந்தித்த நல்லடியார்களில் பீர் ஜமால் ஷீறாஸீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களும் ஒருவர். இவர்களிடம் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அருள் நிறைந்த முடி காணப்பட்டது. அதை இவர்களுக்கு அன்பளிப்புச் செய்தார்கள். அது தன்னிடம் இருப்பதாக அவர்கள் கூறினார்கள்.
இதே போன்று ஹைபர் யுத்தத்தின் போது நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அருள் நிறைந்த பாதம் பதிந்த கல் ஒன்றையும் இவர்களுக்கு எடுத்துக் காட்டப்பட்டது.
இதே போன்று நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களிடம் வஹ்யுன் – வஹீ எழுதியவர்களில் ஒருவரின் கையெழுத்துப் பிரதியும் இவர்களுக்கு எடுத்துக் காட்டப்பட்டது.
இவை அனைத்தும் பூலாக் கரையோரம் அமைக்கப்பட்டுள்ள மத்றஸஹ்வில் பாதுகாக்கப்படுகின்றன.
06- கான்காஹ் என்ற இடத்திலுள்ள பர்ஸபாய் ஜும்அஹ் மஸ்ஜிதிலுள்ள அருள் நிறைந்த முடிகள்
கான்காஹ் என்பது பிரசித்தி பெற்ற கெய்ரோவின் வட பகுதியிலுள்ள ஓர் கிராமம். மன்னர் அந்நாஸிர் முஹம்மத் இப்னு குலாவூன் என்பவர் இந்த இடத்தில் ஸுபிய்யஹ்களுக்கென்று தியான மண்டபம் ஒன்றையும், ஓர் பள்ளிவாயிலையும், குளியலறை போன்ற சில வசதிகளையும் அமைத்தார். ஹிஜ்ரீ 723 ம் ஆண்டு இது இடம் பெற்றது.
இந்த இடத்தைச் சூழக் குடியிருப்பதற்கு மக்கள் விரும்பினர். எனவே அதனைச் சூழ வீடுகளையும், கடைகளையும் கட்டினர். அது பெரிய நகரமாகவே மாறியது. இன்று வரை அந்த ஊர் காணப்படுகிறது. பொது மக்கள் அதை “ அல் ஹானிகஹ்” என்றழைக்கிறார்கள்.
மன்னர் அல் அஷ்ரப் பர்ஸபாய் அத்துர்குமானீ அவர்கள் ஹிஜ்ரீ 825ம் ஆண்டு எகிப்தின் அதிகாரத்தைப் பெற்றார். ஹிஜ்ரீ 832ம் ஆண்டு ஆமித் என்ற பிரதேசத்தைக் கைப்பற்ற நினைத்த அவர் இப்பிரதேசத்தின் ஒதுக்குப் புறமான ஓரிடத்தில் இறங்கி பின்வருமாறு நேர்ச்சை செய்தார்.
“ அல்லாஹு தஆலா என்னை உயிர் பெறச் செய்து, எதிரியுடனான யுத்தத்தில் என்னை வெற்றி பெறச் செய்து, ஈடேற்றம் பெற்ற நிலையில் நான் திரும்பி வந்தால் இவ்விடத்தில் மத்றஸஹ் ஒன்றையும், வழிப்போக்கர்கள் தங்குமிடம் ஒன்றையும் கட்டுவேன்.
யுத்தத்தில் வெற்றி பெற்று அவர் திரும்பிய போது அவ்விடத்தில் பாரிய ஓர் ஜும்அஹ் பள்ளியை அமைத்தார். பல நிறங்களுடைய மாபிள் கற்கள் கொண்டு அதனை அழகுபடுத்தினார் அதனருகில் பிரயாணிகள் தங்குமிடம் ஒன்றையும் கட்டினார்.
லதாயிபு அக்பாரில் அவ்வல் என்ற தனது வரலாற்று நூலில் அல் அல்லாமஹ் அல் இஸ்ஹாகீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள். மேலே கூறப்பட்ட ஜும்அஹ் பள்ளிவாயலின் மிஹ்றாபில் அண்ணல் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளில் ஒன்பது திருமுடிகள் இருக்கின்றன.
இந்த விடயத்தை ஓர் கவிஞர் தனது கவிதையில் பின்வருமாறு கூறுகின்றார்.
மன்னர் அல் அஷ்ரப் கான்காஹ் என்ற இடத்தில் அதன் கூலி கொண்டு அருள் பெறுவதற்காக ஓர் ஜும்அஹ் பள்ளிவாயிலை நிர்மாணித்தார். நபீ முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் சுவடுகளைக் கொண்டு வந்தார். அன்னவர்களின் திருமுடிகள் அதன் மிஹ்றாபில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதன் இமாம் மக்கள் மத்தியில் உபகாரம் செய்து கொண்டிருக்கிறார். இவ்வாறே நீதிவான்களும் அதன் வாசலில் சாட்சிகளுடன் நின்று கொண்டிருக்கின்றனர்.
அல் அல்லாமஹ் அப்துல் கனீ அந்நாபுலுஸீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் 12ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எகிப்துக்கு பிரயாணம் சென்ற போது கான்காஹ் என்ற இந்த ஊருக்கும் சென்றார்கள். அங்கே தங்கினார்கள்.
அல் ஹகீகது வல் மஜாஸ் பீரிஹ்லதிஷ் ஷாமி வமிஸ்ற வல் ஹிஜாஸ் என்ற தனது நூலில் பின்வருமாறு கூறுகிறார்கள்.
அல் அஷ்றப் பர்ஸபாய் மத்றஷஹ்வை நினைவு கூரும் போது
மேற் கூறப்பட்ட ஊரில் மன்னர் அல் அஷ்றபின் ஜும்அஹ் பள்ளிவாயல் இருக்கிறது. அது பாரிய ஓர் ஜும்அஹ் பள்ளிவாயல். ஏனைய ஜும்அஹ் பள்ளிவாயல்களுக்கு மத்தியில் இதற்கு ஓர் தனிச் சிறப்பு உண்டு. அது தான் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகள் அதன் மிஹ்றாபில் காணப்படுவதாகும். என்று கூறுகிறார்கள்.
07- மன்ஜக் அல் யூஸுபீ அவர்களிடம் காணப்பட்ட சில முடிகள்
ஹிஜ்ரீ 776 ம் ஆண்டு கெய்ரோவில் மரணித்த அல் அமீர் ஸைபுத்தீன் மன்ஜக் அல் யூஸுபீ அந்நாஸிரீ றஹிமஹுல்லாஹ் ஹனபீகளுக்காக அமைத்த அல்மத்றஸதுல் மன்ஜகிய்யஹ் பற்றிக் கூறும் போது அல்அல்லாமஹ் அந்நயீமீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
“இவர் (மன்ஜக் அல்யூஸுபீ) அண்ணல் முஹம்மத் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடி கொண்டு வெற்றி பெற்றிருப்பதானது இவர் சீதேவீ என்பதன் அடயாளமாகும்.”
தொடரும்…