“லெப்பை” என்ற சொல்லை முன்னோர்கள் “லெவ்வை” என்றும் மொழிவதுண்டு. அஹ்மத் லெப்பை – அஹ்மத் லெவ்வை என்பன போன்று
இச்சொல் இலங்கை நாட்டு மக்களின் வழக்கத்தில் மௌலவியல்லாத, ஆனால் திருக்குர்ஆன் ஓத, ஓதிக் கொடுக்கத் தெரிந்த, மௌலித், கத்ம், பாதிஹா போன்றவை ஓதத் தெரிந்த, ஊதிப் பார்க்க, தண்ணீர் ஓத, தாயத்து – இஸ்ம் – கட்டத் தெரிந்த ஒருவர் “லெப்பை” என்று அழைக்கப்பட்டு வந்துள்ளார்கள்.
காலிக் கோட்டையில் வாழ்ந்தவர்கள் இச்சொல்லை “இலவ” என்றும், மௌலவீ மார்களுக்கு “லெப்பை” என்றும் சொல்லி வந்துள்ளார்கள்.
அறபு மொழியில் “லெப்பை” என்று ஒரு சொல் இல்லாது போனாலும் “லெப்பைக” என்று ஒரு சொல் உண்டு. இச்சொல் ஒருவனின் அழைப்பைக் கேட்ட இன்னொருவன் அவனுக்கு பதில் சொல்லும் வகையில் “லெப்பைக” என்று சொல்வதுண்டு. குறிப்பாக ஒரு மார்க்கப் பெரியாரின் அழைப்புக்கு பதிலாக இச்சொல் பாவிக்கப்படுகிறது.
“ஹஜ்” வணக்கத்தை நிறை வேற்றுவதற்காக திருமக்கா நகர் சென்றவர்கள் “லெப்பைக” என்ற சொல்லை எந்நேரமும் சொல்வார்கள்.
لَبَّيْكَ. اَلَّلهُمَّ لَبَّيْكَ. لَاشَرِيْكَ
لَكَ لَبَّيْكَ. إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ. لَاشَرِيْكَ لَكَ.
لَكَ لَبَّيْكَ. إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ. لَاشَرِيْكَ لَكَ.
“ஹஜ்” உடைய காலத்தில் அதற்காக மக்கா சென்றவர்கள் அல்லாஹ்வின் அழைப்புக்கு பதிலாகவே இவ்வாறு சொல்கிறார்கள். அல்லாஹ்வின் அழைப்புக்கு பதிலாகவே இவ்வாறு சொல்கிறார்கள் என்பதற்கு ஆதாரம் அதன் பின்னால் வந்துள்ள வசனங்களே ஆகும்.
“திரு மக்கா நகருக்கு “ஹஜ்” செய்யவா” என்ற அல்லாஹ்வின் அழைப்பு எவனின் செவிக்கு எட்டியதோ அவன் அங்கு சென்று “லெப்பைக” வந்து விட்டேன் என்று சொல்ல வேண்டும். அல்லாஹ்வின் அழைப்புக்கு பதில் கூறுவது கடமை. அதே போல் நபீ பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழைத்தாலும் அவர்களின் அழைப்புக்கு பதில் சொல்வதும் கடமைதான்.
اِسْتَجِيْبُوْا لِلهِ وَلِلرَّسُوْلِ اِذَا
دَعَاكُمْ
دَعَاكُمْ
அல்லாஹ்வும்,
றஸூலும் உங்களை அழைத்தால்
றஸூலும் உங்களை அழைத்தால்
அவர்களுக்கு
பதில் கூறுங்கள்.
பதில் கூறுங்கள்.
–
திருக்குர்ஆன் –
திருக்குர்ஆன் –
“ஹஜ்” வணக்கத்திற்காக திருமக்கா சென்று லெப்பைக் – லெப்பைக் என்று சொல்பவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் அழைப்பைச் செவியேற்று “வந்து விட்டேன்” என்று “தல்பியா” சொல்பவர்களல்ல. அவர்களில் ஆன்மீகப் பலம் பெற்றவர்கள், அவ்லியாஉகள் மட்டுமே அல்லாஹ்வின் அழைப்பைச் செவியேற்று “வந்து விட்டேன்” என்று சொல்வார்கள்.
இக்காலத்தில் மௌலவீகள் அதிகம் லெப்பைகள் குறைவு. ஒரு லெப்பை கூட இல்லை என்று சொன்னாலும் பொருந்தும். ஆனால் அக்காலத்தில் – சுமார் நூறு வருடங்களுக்கு முன் லெப்பைகள் அதிகம். மௌலவீகள் மிகக் குறைவு.
லெப்பைகளின் ஆட்சிக் காலத்தில் சிறுவர்களுக்கு திருக்குர்ஆனைக் கற்றுக் கொடுப்பதற்கு அவர்கள் தமக்கென்று ஒரு பாணியை கையாண்டு வந்துள்ளார்கள். சிறார்கள் அறபு எழுத்துக்களின் சரியான மொழித்தலைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே “லெப்பை”கள் அந்தப் பாணியைக் கையாண்டு வந்துள்ளார்கள்.
உதாரணமாக “அலிப்” என்ற எழுத்தின் மொழித்தலை சிறுவர்கள் இலகுவாக கற்றுக் கொள்வதற்காக அவர்கள் கையாண்ட கவிதை நடையை இங்கு எழுதுகிறேன்.
அலிபுக்க பெப்பன் அபனப குறிபன் அபம்ப பாபா
இதே போல் ஒவ்வோர் எழுத்துக்கும் அமைத்துக் கொண்டார்கள்.
“பே” பேக்கு பெப்பன் பபனப குறிபன் பமம்ப பாபா
“தே” தேக்கு பெப்பன் தபனப குறிபன் தபம்ப பாபா
இவ்வாறு ஒவ்வோர் எழுத்துக்கும் கவிகள் அமைத்து எழுத்துக்களின் மொழித்தலை கற்றுக் கொடுத்துள்ளார்கள். இது லெப்பைகளின் ஆட்சிக்காலம்.
இத்தகவலை எனக்குச் சொன்னவர் காத்தான்குடி – 6 இரும்புத் தைக்காவில் நெடுங்காலம் “முஅத்தின்” ஆக கடமை செய்த மர்ஹூம் அல்ஹாஜ் ஹஜ்ஜி முஹம்மத் ஆவார்.
(இவர் பற்றிச் சில வரிகள்)
நான் அறிந்தவரை இலங்கையில் ஆகக் கூடுதலான காலம் பள்ளிவாயலில் “முஅத்தின்” ஆக கடமை செய்தவர் இவராகதான் இருக்க வேண்டும். இவர் காத்தான்குடி – 6 இரும்பத் தைக்காவில் தொடராக 51 ஆண்டுகள் பணி செய்துள்ளார். இந்தப் பள்ளிவாயலில்தான் எனது மூத்தவாப்பா – தந்தையின் தந்தை – அலியார் ஆலிம் – நாகூர் ஆலிம் என்பவர் – சமாதி கொண்டுள்ளார்கள்.
முஅத்தின் அவர்களின் பெயர் காசிம் பாவா கச்சி முஹம்மத் என்பதாகும். 24 – 02 – 1917ல் பிறந்த இவர் 18 – 04 – 2002 வியாழக்கிழமை இறையடி சேர்ந்தார். இவருக்கு நான்கு ஆண் பிள்ளைகளும், நான்கு பெண் பிள்ளைகளும் பிறந்துள்ளனர். பல வருடங்கள் சம்பளமின்றிப் பணி புரிந்த இவர் இறுதியில் பெற்றுக் கொண்ட சம்பளம் 3500 ரூபாய்தான். வறுமைப் பிடியில் வாழும் இவரின் குடும்பத்திற்காக “துஆ” செய்யுமாறு முஸ்லிம் சகோதரர்களை கேட்டுக் கொள்கிறேன்.