பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம்
அஸ்ஸலாது வஸ்ஸலாமு அலைக்க யாறஸூலல்லாஹ்
அஸ்ஸலாது வஸ்ஸலாமு அலைக்க யாஹபீபல்லாஹ்
அஹதவனின் தூதாய், காதமுன் நபீயாய், காரிருள் நீக்க வந்த இறை ஜோதியாய் அவனியில் அவதரித்த அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அவதரித்த பொன் நேரத்தை வரவேற்கும் நன்நோக்கில் 24.12.2015 (வியாழக்கிழமை) அன்று காத்தான்குடி – 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் திருமுடிகள் தரிசன நிகழ்வும், சங்கை நபீகளார் மீது ஸலவாத் சொல்லும் ஸலவாத் மஜ்லிஸும், ஈத் மீலாதுன் நபீ கொண்டாட்டமும் நடைபெற்றது.
அன்று நடைபெற்ற நிகழ்வுகளின் தொகுப்பு….
ஸலவாத் மஜ்லிஸுக்காக செய்யப்பட்ட முன் ஏற்பாடுகளும்
அலங்கார வேலைகளும்…
கருணை நபீகளாரின் திருமுடிகளை தரிசித்து அருள் பெறும் நன்நோக்கில் அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளையும், கௌதுல் அஃழம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜுலானீ குத்திஸ ஸிர்ருஹு அன்னவர்களின் திரு முடிகளையும் தரிசி்த்து அருள் பெறும் இனிய நிகழ்வு இரவு 10.00 மணி தொடக்கம் நள்ளிரவு 02.00 மணிவரை ஆண்களும் பெண்களும் பார்வையிட்டு அருள் பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து சங்கை்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களினால் 03.30 மணிவரை (அல்லாஹ் முன்வானத்திற்கு இறங்குகின்றான்) எனும் தலைப்பில் சன்மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.
சன்மார்க்க சொற்பொழிவைத் தொடர்ந்து ஆன்மீக மனங்கமழும் ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வு ஆரம்பமானது. இந்நிகழ்வில் ஆறாயிரம் (6000) இற்கும் அதிகமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு சுப்ஹ் தொழுகை்கான அதான் வரை ஒருமித்த குரலில் அண்ணலார் பேரில் ஸலவாத் சொல்லி அருளான முஸ்தபா அன்னவர்கள் பிறந்த நேரத்தை கண்ணியம் செய்து நெஞ்சம் பூரித்தனர்.
புனித ஸலவாத் மஜ்லிஸுக்காக இறை நபீ நேசர்களால் வழங்கப்பட்ட பழங்களை மஜ்லிஸில் பங்கு கொண்ட முஹிப்பீன்களுக்கு வழங்கப்பட்டது.
இறுதியாக சுப்ஹ் தொழுகைக்காக இகாமத் சொல்லப்ட்டடது. ஜமாஅத்தாக தொழுகை நடாத்தப்பட்டு இனிதே ஸலவாதுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.