Tuesday, October 8, 2024
Homeஎழுத்தாக்கங்கள்அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்

அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்

மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள்
சிரேஷ்ட விரிவுரையாளர் – 
அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம்
தொடர் – 12



அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் உமிழ் நீர் கொண்டு 
பறகத் பெறுதல்.
அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் அருள் நிறைந்த
உமிழ் நீர் கொண்டும், அவர்களின் அருட் கரங்கள் கொண்டும்,
அவர்களின் பிரார்த்தனை கொண்டும் அருள் பெறுபவர்களில் மிக விஷேடமானவர்கள்
ஸெய்யிதுல் முபஸ்ஸிரீன் அபுல் அப்பாஸ் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு
அன்னவர்கள்.
இவர்கள் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் காலத்தில் பிறந்தவர்கள். அண்ணலின் அருளை பல வழிகளிலும் பெற்ற ஓர் ஸஹாபி – தோழர்.
இதன் காரணத்தினால் அறிவுக்கடலாகத் திகழ்ந்தார்கள் ஸெய்யிதுனா அப்துல்லாஹ்
இப்னு அப்பாஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள். ஸெய்யிதுல்
முபஸ்ஸிரீன் என்ற சிறப்புப் பட்டத்தையும் பெற்றார்கள்.
அண்ணலெம் பெருமான் அன்னவர்கள் மக்கஹ் முகர்றமஹ்விலிருக்கும்
போது இவர்கள் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்றிலிருக்கும் போதே
அண்ணலவர்கள் தங்களின் மறைவான ஞானத்தின் மூலம் அக்குழந்தை ஆண்குழந்தை என்பதை அறிந்து
கொண்டார்கள்.
அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் “ஹிஜ்ர் இஸ்மாயீல்” என்ற இடத்தில்
அமர்ந்திருக்கும் போது அவர்களருகில் சென்ற அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு
தஆலா அன்ஹு அன்னவர்களின் தாய் உம்முல் பழ்ல் றழியல்லாஹு தஆலா அன்ஹா
அன்னவர்களையழைத்து “உம்முல் பழ்லே! நீங்கள் ஓர் ஆண்குழந்தையை சுமந்திருக்கிறீர்கள்.
அக்குழந்தையை நீங்கள் பெற்றெடுத்தால் என்னிடம் கொண்டு வாருங்கள்” என்ற சுபச்
செய்தியை கூறினார்கள்.
ஸெய்யிதுனா அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு தஆலா
அன்ஹு அன்னவர்கள் தங்களின் தாயின் வயிற்றிலிருக்கும் போதே அண்ணலெம் பெருமானின்
அருட் பார்வையப் பெற்றுக் கொண்ட ஓர் ஸஹாபீ. அண்ணலெம் பெருமானின் நெருங்கிய குடும்ப
உறவினராகவும் இவர்கள் திகழ்ந்தார்கள். காரணம் அண்ணலாரின் சாச்சா ஸெய்யிதுனா
அப்பாஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களின் புதல்வர் இவர்கள்.

ஸெய்யிதுனா
அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள்.

இவர்களின் புனைப் பெயர் அபுல் பழ்ல் ஆகும். அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் தந்தையின் சகோதரர். அண்ணலின் சாச்சா. அண்ணலெம் பெருமானை விட
இரண்டு அல்லது மூன்று வருடங்கள் வயதில் கூடியவர்கள். குறைஷ் வம்சத்தினரிடையே
ஓர் தலைவராகத் திகழ்ந்தவர்கள். இவர்கள் சிறுவயதாக இருக்கும் போது
தவறி விட்டார்கள். எனவே இவர்களின் தாய் தனது மகன் கிடைத்து விட்டால்
கஃபதுல்லாஹ்வுக்கு பட்டுப் போர்வை போர்த்துவதாக நேர்சை செய்தார். அவர்கள் கிடைத்தவுடன் கஃபதுல்லாஹ்வுக்கு பட்டுப் போர்வை போர்த்தியவர் அப்பாஸ்
றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களின் தான் என்பது குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும்.
அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் ஸெய்யிதுனா அப்பாஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு
அன்னவர்களை அதிகம் கண்ணியம் செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள்.
அப்பாஸ் அவர்கள் எனது சாச்சா. எனது தந்தையுடன்
பிறந்தவர்கள். அவர்களை யார் வேதனை செய்கிறானோ அவன் என்னை வேதனை செய்து விட்டான்
என்று கூறினார்கள் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள்.
ஒரு சந்தர்ப்பத்தில் அண்ணலெம் பெருமானின் சபைக்கு
வந்தார்கள் ஸெய்யிதுனா அப்பாஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள். அவர்களைக் கண்ட
முத்து நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் எழுந்து, அவர்களின் இரண்டு
கண்களுக்கிடையில் முத்தமிட்டு, தங்களின் வலது பக்கம் அவர்களையமரச் செய்து இவர்கள்
எனது சாச்சா என்று கூறினார்கள்.
இன்னொரு சந்தர்ப்பத்தில் இறைவா! அப்பாஸ் அவர்களுக்கும்,
அப்பாஸுடைய பிள்ளைகளுக்கும், அவர்களை நேசிப்போருக்கும் மன்னிப்பாயாக என்று அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.
இன்னொரு சந்தர்ப்பத்தில் இறைவா! அப்பாஸ் அவர்களுக்கும்,
அப்பாஸ் அவர்களின் பிள்ளைகளுக்கும், அப்பாஸ் அவர்களின் பிள்ளைகளின்
பிள்ளைகளுக்கும் மன்னிப்பாயாக என்று பிரார்த்தனை செய்தார்கள். காருண்ய நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் பிரார்த்தனையின் அருளைப் பெற்ற ஓர் குடும்பம் தான் ஸெய்யிதுனா
அப்பாஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹ அன்னவர்களின் குடும்பம். இவ்வருட் குடும்பத்தில்
தோன்றியவர்கள்தான் ஸெய்யிதுனா அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு
அன்னவர்கள்.
இவர்கள் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் மூலம் பல
வழிகளில் அருள் பெற்றவர்கள்.
அண்ணலின்
உமிழ் நீர் கொண்டு அருள் பெற்ற இப்னு அப்பாஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள்.

அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் அருள்
நிறைந்த உமிழ் நீர் கொண்டு இரண்டு சந்தர்ப்பங்களில் நாமறிந்த வகையில் அருள்
பெற்றிருக்கிறார்கள். இப்னு அப்பாஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள்.
ஒன்று, இவர்கள் பிறந்தவுடன் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் சபைக்கு
இவர்கள் கொண்டு வரப்பட்ட போது இவர்களின் வாயினுள் அண்ணலவர்கள் தங்களின் அருள்
நிறைந்த உமிழ் நீரை செலுத்தியமை.
இரண்டு, ஸெய்யிதுனா உமர் இப்னுல் ஹத்தாப் றழியல்லாஹு தஆலா
அன்ஹு அன்னவர்கள் இவர்களையழைத்து இவர்களின் வாயினுள் அண்ணலவர்கள் உமிழ்ந்த்தை தான்
கண்டதாக கூறியமை.
அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் இவர்களின் தாய் இவர்களை வயிற்றில்
சுமந்திருக்கும் போது அவர்களையழைத்து குழந்தையைப் பெற்றவுடன் தன்னிடம் கொண்டு
வரும் படி கூறிய அந்தக் கட்டளைக்கமைய இவர்களின் இவர்களை அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் சபைக்கு கொண்டு சென்றார்கள்.
فَأٌتِيَ بِهِ
النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَحَنّّكَهُ بِرِيْقِهِ.
நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களிடம் இவர்கள் கொண்டு
வரப்பட்ட போது தங்களின் உமிழ் நீர் கொண்டு இவருக்கு “தஹ்னீக்”
செய்தார்கள். அதாவது அவர்களின் வாயினுள் தங்களின்
உமழ்நீரை செலுத்தினார்கள்.
உஸ்துல் ஆபஹ் – பாகம்
– 03
பக்கம் – 292
ஒரு குழந்தை பிறந்து விட்டால் அக்குழந்தையின் வாயினுள் ஒரு பெரியார்
மூலம் இனிப்புப் பண்டத்தை அல்லது ஈத்தம் பழத்தை அல்லது தேனைவைத்து சுவைக்கச் செய்வது
சுன்னத்தான ஓர் நடைமுறையாகும். அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் காலத்தில் பிறந்த
எத்தனையோ குழைந்தைகளுக்கு அண்ணலவர்கள் தங்களின் அருள் நிறைந்த வாயினுள் ஈத்தம் பழத்தை
மென்று, அக்குழந்தையின் வாயினுற் அதை வைத்து,
சுவைக்கச் செய்திருக்கிறார்கள். இங்கே அப்துல்லாஹ்
இப்னு அப்பாஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களின் வாயினுள் எந்தவொரு இனிப்புப் பொருளையும்
வைக்கவில்லை. மாறாக தங்களின் உமிழ் நீரையே அவர்களின் வாயினுள்
செலுத்தினார்கள் அண்ணலெம் பெருமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள்.
அருள் நிறைந்த அண்ணலின் உமிழ் நீரை பிறந்தவுடன் சுவைத்து,
அண்ணலின் அருளைப் பெற்று, அறிவுக்கடலாக திகழ்ந்தார்கள் ஸெய்யிதுனா அப்துல்லாஹ்
இப்னு அப்பாஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள். இன்னுமொரு சந்தர்ப்பத்திலும்
இவர்கள் அண்ணலின் உமிழ் நீரின் அருளைப் பெற்றார்கள்.
عَنْ زَيْدِ بْنِ
أَسْلَمَ عَنِ ْبنِ عُمَرَ أَنَّ عُمَرَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ دَعَا ابْنَ
عَبَّاسٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ فَقَرَّبَهُ وَكَانَ يَقُوْلُ إِنِّيْ رَأَيْتُ
رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَعَاكَ َيوْمًا فَمَسَحَ رَأْسَكَ
وَتَفَلَ فِيْ فِيْكَ وَقَالَ اَلّلَهُمَّ فَقِّهْهُ فِيْ الدِّيْنِ وَعَلِّمْهُ
التَّأْوِيْلَ.
அப்துல்லாஹ் இப்னு உமர் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் கூறியதாக
ஸெய்யிதுனா அஸ்லம் றழியல்லாஹு தஆலா அன்னவர்கள் கூறினார்கள்.
நிச்சயமாக உமர் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் இப்னு அப்பாஸ்
றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களை அழைத்து, அவர்களை நெருக்கமாக்கி
“நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் ஒரு நாள்
உங்களையழைத்து, உங்களின் தலையைத் தடவி, உங்களின் வாயினுள் உமிழ்ந்த்தைக் நான்
கண்டேன்.” என்று கூறுபவர்களாக இருந்தார்கள். இன்னும் அண்ணலவர்கள் “இறைவா! இவருக்கு
மார்க்கத்தில் விளக்கத்தை ஏற்படுத்துவாயாக. இன்னும் இவருக்கு
வலிந்துரையை கற்றுக் கொடுப்பாயாக” என்றும் கூறினார்கள்.
அல் இஸாபஹ் பீ தம்யீஸிஸ் ஸஹாபஹ்
பக்கம் – 796
ஸியறு அஃலாமின் நுபலா
பாகம் – 01 பக்கம் – 1083
மேற்கூறப்பட்டவற்றின் மூலம் அண்ணல் முஹம்மத்
ஸல்லல்லாஹு
அலைஹிவஸல்லம்
அன்னவர்கள் இரண்டு சந்தர்ப்பங்களில் ஸெய்யிதுனா இப்னு
அப்பாஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களின் வாயில் உமிழ்ந்துள்ளார்கள் என்பதை
நாம் விளங்கிக் கொள்ள முடியும். அண்ணலெம் பெருமானின் இந்தச் செயலின் தத்துவமென்ன?
எங்ளைப் போன்ற சாதாரன மனிதரா அவர்கள்? அவ்வாறு
எண்ணுபவன் நிச்சயம் இறைவன் சாபம் பெற்றவன் என்பதில் ஐயமில்லை.
அண்ணலின் உமிழ் நீரின் தங்கள் வாழ்வில் பெற்றுக் கொண்டார்கள்
ஸெய்யிதுனா அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள். அந்த உமிழ் நீரின் அருளினால் அவர்களின் உள்ளத்திலிருந்து இறைஞானம் ஊற்றெடுத்தது.
அறிவின் சிகரமாய்த் திகழ்ந்தார்கள்.
தொடரும்…
RELATED ARTICLES

Most Popular

Recent Comments