Tuesday, October 8, 2024
Homeஎழுத்தாக்கங்கள்இறைஞானிகள் எங்கும் தொழுவர். எதிலும் தொழுவர்.

இறைஞானிகள் எங்கும் தொழுவர். எதிலும் தொழுவர்.

இனியோரே!

அஸ்ஸலாமுஅலைக்கும் வறஹ்மதுல்லாஹிவபறகாதுஹு

இறைஞானிகளான அவ்லியாக்கள் எனப்படுபவர்கள் ஷரீஅத் என்ற வணக்க வழிபாடு அம்சங்களை பற்றிப் பிடித்து நடக்கக் கூடியவர்கள்தான் என்ற கருத்தை நான் என் சென்ற கட்டுரையான “ஷரீஅத் வேண்டாம் என்று நாம் சொல்லவில்லை” என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.

இன்று அக்கட்டுரையுடன் தொடர்புடைய ஒரு முக்கிய விடயத்தை இக்கட்டுரை ஊடாக உங்கள் அறிவுகளுக்குச் சுவைக்கத் தர நாடுகிறேன்.
நான் இப்போது கூறப்போகும் அவ்விடயத்தை இறைஞான அமிர்தத்தில் ஒரு சிறு துளியேனும் பருகாத, பருக நினைக்காத சில துர்ப்பாக்கியவாதிகள் நம்பாமல் கேலிசெய்தாலும் அவர்களின் கேலியால் அவ்விடயம் பொய்யாகிவிடாது. அக்கேலி அப்போலிகளின் அறியாமையின் வெளிப்பாடாகும்.

அவ்விடயம் என்னவெனில் :- இறைஞானிகளான வலீமார்களில் சிலர் தொழாதவர்கள் போன்று எங்கள் வெற்றுக் கண்களுக்குத் தெரியும். அதனால் நாங்கள் நினைப்போம் “இறைஞானிகளான வலீமார்கள் என்று சொல்லப்படுபவர்களில் சிலர் தொழுவதை நாம் காண்பதேயில்லையே! அவர்களுக்கு என்ன தொழுகை கடமை கிடையாதா?”என்று
இப்படிநாம் எண்ணுவது தவறாகும். ஏனெனில் இறைஞானிகளான வலீமார்களில் சிலர் தொழாதது போல் எங்கள் கண்களுக்குத் தெரிந்தாலும் அவர்கள் தொழுபவர்களேயாகும்.
அவர்கள் நாங்கள் தொழுமிடத்தில் தொழுவதில்லை. எங்களுக்குமத்தியிலும் தொழுவதில்லை. தங்களது மனம் எங்கு தொழுவதற்கு ஆசை கொள்கிறதோ அங்கு றூஹுடன் பயணித்து அவர்கள் தொழுவார்கள்.
இப்படி பல வலீமார்கள் இருந்திருக்கிறார்கள். இப்போதும் இருந்து கொண்டேயிருக்கிறார்கள்.
இப்படியான தன்மையுடையவர்கள் பற்றி இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களுடைய நூலான “அல் யவாகீத் வல் ஜவாஹிர்” என்ற நூலிலே மிகத் தெளிவாக, அழகாக விளக்கியுள்ளார்கள். அவற்றைநாம் இப்போதுபார்ப்போம்.
واعلم يا أخي ! إن من عباد الله من لا يصلي الصلوات الخمس إلا بمكة. ومنهم من لا يصليها إلا ببيت المقدس. ومنهم من لا يصليها إلا بالمدينة المشرفة . ومنهم من لا يصليها إلا بجبل ق . ومنهم من لا يصليها إلا في قبة أرين . ومنهم من لا يصليها إلا فوق سدّ إسكندر . ومنهم من لا يصليها إلا على الجبل المقطم المشرق على بحر السويس.

فربما لات الناس بمثل ذلك ويقولون إنه تارك للصلاة وهو خطأ. ولأهل هذا المقام أما لات يتميزون بها على من يترك الصلاة تهاونا أو كسلا.

பொருள் : என் சகோதரனே நீ அறிந்து கொள்! அல்லாஹு தஆலாவின் அடியார்களிற் சிலர் அவர்கள் எங்கிருந்தாலும் மக்கா பள்ளிவாயலில் மாத்திரம்தான் தொழுகிறார்கள். இன்னும் சிலர் ஜெரூசலத்தில் உள்ள “பைத்துல் மக்திஸ்” பள்ளிவாயலில் மட்டும்தான் தொழுகிறார்கள். இன்னும் சிலர் மதீனா பள்ளிவாயலில் மட்டும்தான் தொழுகிறார்கள். இன்னும் சிலர் “காப்” என்றமலையில் மட்டும்தான் தொழுகிறார்கள். இன்னும் சிலர் “அர்யன்” கோபுரத்தில் மட்டும்தான் தொழுகிறார்கள். இன்னும் சிலர் “இஸ்கந்தர்” அணைக்கட்டில் மட்டும்தான் தொழுகிறார்கள். இன்னும் சிலர் “சுவைஸ்” கால்வாயை அடுத்துள்ள “முகத்தம்” என்ற மலையில் மட்டும்தான் தொழுகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலைகள் உள்ள மனிதர்களை சில நபர்கள் “தொழாதவர்கள்” என்று குறை கூறுகின்றனர். இப்படிக் கூறுவது தவறாகும். ஏனெனில் இந்த உன்னத நிலையை அடைந்தவர்களுக்கு பல அடையாளங்கள் இருக்கின்றன. அவ்வடையாளங்களைக் கொண்டு அவர்களையும் வேண்டுமென்றும் சோம்பல் காரணமாகவும் தொழாமல் இருப்பவர்களையும் பிரித்து அறிந்து கொள்ள முடியும்.
மேலும் இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்

قال لي مرة سيدي عبد القادر الدشطوشي :- ولم تقول أهل مصر عبد القادر ما يصلي شيأ ونحن والله لا ننقطع الصلاة. ولكن لنا أماكن نصلي فيها. فقلت ذلك لسيدي محمد بن عنان رضي الله عنه فقال :- صدق الشيخ عبد القادر له أماكن يصلي فيها.
பொருள் : ஒருநாள் என்னிடம் அப்துல் காதிர் அத்தஷ்தூஷீ என்ற பெரியார் :- அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ அவர்களே! அப்துல் காதிர் அத்தஷ்தூஷீ ஆகிய நான் அறவே தொழுவதில்லை என மிஸ்ர் நாட்டுமக்கள் ஏன் சொல்கிறார்கள்? எதற்காக அப்படிச் சொல்கிறார்கள்?

அல்லாஹ்வின்மீதுசத்தியமாக! நாங்கள் தொழுகையை விடுவதேயில்லை. தொழுது கொண்டுதான் இருக்கின்றோம். ஆயினும் எங்களுக்கு தொழுவதற்கு பல இடங்கள் இருக்கின்றன. அவ்விடங்களில் நாங்கள் தொழுது கொள்கின்றோம் என்றார்கள்.

இதைநான் கேட்டபின் என் ஞானகுரு முஹம்மத் இப்னு அனான் றழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று அச்செய்தியைக் கூறினேன். அதற்கு அவர்கள் :- ஆம், அப்துல் காதிர் அத்தஷ்தூஷீ கூறியது உண்மைதான். நிச்சயமாக! அவருக்கு தொழுவதற்கு பல இடங்கள் இருக்கின்றன. அவ்விடங்களில் அவர் தொழுது கொண்டுதான் இருக்கின்றார் என்று பதில் கூறினார்கள்.

மேலும் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்

وقد حضرت أنا صلاة الظهر عند سيدي عبد القادر الدشطوشي رضي الله عنه. فلما سمع الأذان إضطجع وقال :- غطوني بالملاءة فغطيناه بها فلم نجد تحت الملائة أحدا ثم جاء بعد نحو خمس عشرة درجة.

பொருள் : நான் ஒருநாள் ளுஹ்ர் தொழுகை நேரம் அப்துல் காதிர் அத்தஷ்தூஷீ றழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்றேன். ளுஹ்ருடைய பாங்கு சத்தம் கேட்டதும் அவர்கள் எங்களிடம் “என்னைப் போர்வையால் மூடிவிடுங்கள்” என்றார்கள். நாங்கள் அவ்வாறே செய்தோம். மூடிய பிறகு போர்வைக்கு கீழ் அவர்கள் காணப்படவேயில்லை. சுமார் 15 நிமிடங்களுக்கு பின்புதான் அவ்விடத்தில் அவர்கள் திரும்பி வந்தார்கள்.

அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் மேலும் கூறுகிறார்கள்

وكان سيدي علي الخواص رضي الله عنه يغلق باب حانوته بعد أذان الظهر ساعة ثم يفتحه ففتحوا عليه مرة فلم يجدوه

பொருள் : என்னுடைய தலைவரான அலீ அல்கவ்வாஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் ளுஹ்ருடைய பாங்கு சொல்லப்பட்டதன் பின்பு தங்களின் கடைக் கதவை பூட்டி விட்டு அக்கடையினுள் சென்று சொற்ப நேரத்தின் பின்னரே வெளியே வருவார்கள். ஒரு தடைவ வழமைபோல் அவர்கள் கடைக் கதவை பூட்டிய பின் சிலர் அதைத் திறந்து பார்த்தார்கள். அப்போது அலீகவ்வாஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் உள்ளே காணப்படவில்லை.

நூல் : அல் யவாகீத் வல் ஜவாஹிர்

எனவே, இறைஞானிகளான வலீமார்களில் சிலர் தொழாதது போல் எங்களது ஒளியற்ற கண்களுக்குத் தெரிந்தாலும் அவர்கள் தொழக்கூடியவர்களேயாகும். அவர்களுக்குள்ள விலாயத் என்ற உயர் பதவி மூலம் தன்னை மறந்து அல்லாஹ்வில் அழிந்து போனதன் காரணமாக அவர்கள் எங்கும் தொழுவர். எதிலும் தொழுவர். தொழுவதற்கு அவர்களுக்கு குறிப்பிட்ட இடம் கிடையாது. எங்கு சென்றும் தொழக் கூடிய தன்மையை அல்லாஹ் தஆலா அவர்களுக்கு வழங்கியிருக்கின்றான்.

கவனிக்க!
இக்கட்டுரையை வாசிப்போருக்கு இவ்விடத்தில் ஓர் கேள்வி தோன்ற வாய்ப்பிருக்கின்றது. ஆகவே, நாம் இங்கு அக்கேள்வியையும் குறிப்பிட்டு அதற்கான பதிலையும் சற்று நோக்குவோம்.

கேள்வி : இறைஞான வழி செல்லக்கூடியவர்களே! நீங்கள் சொல்வதுபோல் இறைஞானிகள் எங்கும் தொழுவார்கள், எதிலும் தொழுவார்கள், தொழுவதற்கு அவர்களுக்கு குறிப்பிட்ட இடம் இல்லையென்றால் எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களே இறைஞானிகளின் முதன்மையானவர்களாகும். அப்படியிருக்கும் போது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஏன் எங்கும் தொழவில்லை? எதிலும் தொழவில்லை? மக்களோடு மக்களாக சேர்ந்து தொழுதார்கள்?

பதில் : எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களே இறைஞானிகளில் முதன்மையானவர்களும், இறைஞானத்தின் முதல்வரானவர்களுமாகும். அவர்கள் இறைஞானத்தில் அடைந்த உச்சத்தை யாருமே அடையவில்லை. இனிமேல் யாராலும் அந்த உச்சத்தை அடையவும் முடியாது.

இருந்தாலும் பெருமை மிகு எம் பெருமான் நபீகள் கோமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மக்களோடு மக்களாக சேர்ந்து தொழுததற்குரிய காரணம் என்னவெனில் :- பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மக்களுக்குவழிகாட்ட வந்தவர்களாகும். அதனால் அவர்கள் மக்களுடன் மக்களாக இருந்து அவர்களை வழி நடாத்தி, கவனித்து திருத்த வேண்டிய கடமை அவர்கள் மீது உள்ளதாகும்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் இறைஞானத்தின் உச்சத்தை அடைந்திருந்தாலும் அல்லாஹ்வில் அழிந்துபோய் தன்னைவேறு இடங்களுக்குச் சென்றால் மக்களுக்கு வழிகாட்டுவதற்கு, மக்களை சீர்படுத்துவதற்கு இயலாமல் போய்விடும். அது அவர்களின் நபித்துவத்திற்கு முரணானதாக ஆகிவிடும்.

இதற்காகவே உயர் திரு நபீகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மக்களோடு மக்களாக வாழ்ந்தார்கள், தொழுதார்கள், தொழுகையும் நடாத்தினார்கள்.

இதுபற்றி அதாவது நபிகளார் தன்னை மறந்து விட்டு இறைவனில் அழிந்து விடக் கூடாது என்பதை துள்ளியமாக அல்லாஹுதஆலா பின்வரும் வசனம் மூலம் அழகாகக் கூறுகின்றான். அவ்வசனம் யாதெனில்

فاستقم كما أمرت
பொருள் : நபிகளாரே! நீங்கள் ஏவப்பட்டது போல் செவ்வனே இருந்து கொள்ளுங்கள். என்பதாகும்.
அத்தியாயம் : 11
வசனம் : 112
முக்கிய அவதானத்திற்கு!

இன்று நாம் வாழக்கூடிய காலகட்டத்தில் மக்களை ஏமாற்றி தன் சுய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஷெய்குமார்கள் போன்றும், வலீமார்கள் போன்றும் வேடம் பூண்டு திரிகின்ற போலி ஷெய்குமார்கள், போலி வலீமார்கள் “எங்கும் தொழக் கூடிய நன்மக்கள்” என்ற வட்டத்தினுள் அடங்கமாட்டார்கள்.

அப்படியான போலிகள் தொழாமல் இருந்துகொண்டு “நான் கஃபாவில் தொழுதுவிட்டேன்” என்று கூறினாலோ அல்லது “நான் மதீனா முனவ்வராவில் தொழுது விட்டேன்” என்று கூறினாலோ அவர்களே பொய்யர்களில் முதன்மையான பொய்யர்களாகும்.

எனவே இனியோரே!
உண்மையை அறிந்துகொள்ளுங்கள்! பொய்யைத் தவிர்ந்துகொள்ளுங்கள்! நன்மையை அள்ளிக் கொள்ளுங்கள்! சத்தியத்தை நிலைநாட்ட எழுந்துவாருங்கள்! அசத்தியத்தை தவிடு பொடியாக்க கை கோருங்கள்! அல்லாஹுதஆலா ஈருலகிலும் அவனது அருள் மழையெனும் அடை மழையை உங்கள் மீது கொட்டச் செய்வானாக!
ஆமீன்
மௌலவீ  பஹ்றுத்தீன் ஸுஹ்தீ 
றப்பானீ, மிஸ்பாஹீ
RELATED ARTICLES

Most Popular

Recent Comments