Tuesday, October 8, 2024
Homeஎழுத்தாக்கங்கள்மௌன விரதம் – நோன்பு – இஸ்லாம் அனுமதித்த ஒன்றல்ல.

மௌன விரதம் – நோன்பு – இஸ்லாம் அனுமதித்த ஒன்றல்ல.

ஞான வழி நடப்பவர்களாக தம்மைக் காட்டிக் கொள்பவர்களிற் சிலர் மௌன விரதம் – மௌன நோன்பு – நோற்கிறார்கள். காலை முதல் – “ஸுப்ஹ்” நேரம் வரை – மௌனிகளாக இருக்கிறார்கள். பேசுவதற்கு பதிலாக எழுதிக்காட்டுகிறார்கள். இன்னும் சிலர் பல வருடங்களாகவும், பல மாதங்களாகவும் பேசாமல் இருக்கிறார்கள். இவ்வாறு செய்பவர்களில் அநேகர் “உலமாஉ”கள் அல்லாதவர்களேயாவர்.

இவர்களிடம் ஏன் இவ்வாறு இருக்கின்றீர்கள் என்று கேட்டால் من صَمَتَ نجا வாய்மூடி இருந்தவன் வெற்றி பெற்று விட்டான் என்றும் من سَكَتَ سلِم   வாய்மூடி மௌனியாக இருந்தவன் ஈடேற்றம் பெற்று விட்டான் என்றும் வந்துள்ள அருள் வாக்குகளை ஆதாரமாகக் கூறுகிறார்கள்.

இவர்கள் கூறுகின்ற அருள் மொழிகள் சரியானவையாக இருந்தாலும் இவர்கள் அவற்றைத் தவறாகப் புரிந்து கொண்டதே இவர்களின் மௌனத்திற்கு காரணமாகும்.

அருள் மொழிகளின் கருத்து என்னவெனில் ஒருவன் பாவமான, அவசியமில்லாத, தேவையற்ற பேச்சுக்கள் பேசாமல் மௌனியாக இருக்க வேண்டுமென்பதேயன்றி அறவே பேசாமல் இருக்க வேண்டுமென்பதல்ல.

இது தொடர்பாக வந்துள்ள தகவல்களை இங்கு தருகின்றேன்.

(باب النّهي عن صمت يوم إلى الّلّيل)

(روينا فى سنن ابي داؤود، با سناد حسن، عن عليّ رضي الله عنه قال : حفظت عن رسول الله صلّى الله عليه وسلّم (لا يتم بعد احتلام، ولا صمات يوم إلى اللّيل

ஒருவன் பருவ வயதை அடைந்த பின் “யதீம்” அனாதை என்பதில்லை. காலை முதல் இரவு வரை – பகல் முழுவதும் – மௌனமாயிருத்தல் என்பதும் இல்லை என்று நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.

அறிவிப்பு – அலீ  றழியல்லாஹு அன்ஹு

ஆதாரம் – அபூதாஊத்

அல் அத்கார் – 1061

இஸ்லாமிய கண்ணோட்டத்தில் தந்தையை இழந்தவன் “யதீம்” அனாதை என்று சொல்லப்படுகின்றான். அவனுக்கு சில சலுகைகள் உண்டு. எனினும் அவன் பருவ வயதான 15 வயதை அடைந்த பின் “யதீம்” என்று கணிக்கப்பட மாட்டான்.

ஒருவன் பகல் நேரத்தில் இருந்து இரவு நேரம் வரை எந்த ஒரு நோய் காரணமின்றி மௌனியாக இருப்பது கூடாது.

ஒரு பகல் அல்லது ஒரு நாள் மௌனமாயிருப்பது கண்டிப்பாக கூடாதென்றால் பலமாதங்கள், அல்லது பல வருடங்கள் மௌனமாயிருப்பது கண்டிப்பாகக் கூடாது.

وروينا فى معالم السّنن للإمام أبي سليمان الخطّابي رضي الله عنه قال  فى تفسير هذا الحديث كان اهل الجاهليّة من نسكهم الصّمات، وكان احدهم يعتكف اليوم والليلة فيصمت ولا ينطق، فنهوا : يعني فى الإسلام عن ذلك، وامروا بالذكر والحديث با لخير،

“ஜாஹிலிய்யா” அறியாமைக்காலத்தவர்கள் மௌனமாயிருப்பதை வணக்கமாகக் கருதினார்கள். அவர்களில் ஒருவன் இரவு பகல் முழுவதும் அறவே பேசாமல் இருப்பான். இது இஸ்லாம் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகும். பேசாமல் இருக்காமல் நல்லத்தைப் பேச வேண்டும்.

ஆதாரம் – மஆலிமுஸ் ஸுனன்

ஆசிரியர் – அபூ ஸுலைமான் அல் கத்தாபீ றழியல்லாஹு அன்ஹு

روينا فى صحيح البخاري عن قيس بن أبي حازم رحمه الله قال : دخل أبو بكر الصّدّيق رضي الله عنه على امرأة من احمس. يقال لها زينب فرآها لا تتكلّم، فقال مالها لا تتكلّم؟ فقالو حجّت مصمتة، فقال لها تكلّمي فإنّ هذا لا يحلّ، هذا من عمل الجاهليّة، فتكلّمت،

அபூபக்ர் ஸித்தீக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் “அஹ்மஸ்” குடும்பத்தைச் சேர்ந்த, செய்னப் என்ற பெயருடைய ஒரு பெண்ணைக் கண்டார்கள். அவர் பேசாமல் மௌனியாயிருப்பது கண்டு இவர் ஏன் பேசாமல் இருக்கிறார்? என்று வினவினார்கள். அவர் மௌனியாகவே “ஹஜ்” செய்தார் என்று சொல்லப்பட்டது. அப்போது அவரிடம் உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் நீ பேசு இது அறியாமைக் காலத்தவர்களின் வேலை என்று சொன்னார்கள். உடனே அவர் பேசினார்.

ஆதாரம் – புகாரீ

அறிவிப்பு – கைஸ் றழியல்லாஹு அன்ஹு

“அய்யாமுல் ஜாஹிலிய்யா” அறியாமைக் கால மக்கள் மௌனமாயிருப்பதை ஓர் “அமல்” – வணக்கமாக – கருதிச் செய்து வந்துள்ளார்கள். அதைப் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சரிகாண வில்லை. இதனால் புனித இஸ்லாம் இதைத் தடை செய்துள்ளது. வீணான, பாவமான விடயங்கள் பேசாமல் மௌனமாயிருப்பது நல்ல காரியம்தான். ஆயினும் ஒரு நாள் அல்லது ஒரு மாதம், அல்லது ஒருவருடம் என்று திட்டமிட்டு நல்லதைக்கூடப் பேசாமல் பொதுவாக மௌனியாவது விரும்பத்தக்கதல்ல.

இவ்வாறு செய்வது நல்ல காரியம் என்று விளங்கிக் கொண்டு சிலர் செய்கிறார்கள். இது அவர்களின் அறியாமை. இன்னும் சிலர் தம்மை மற்றவர்கள் நல்ல மனிதன், அப்பாவி என்று எண்ணிக் கொள்ள வேண்டுமென்பதற்காகச் செய்கிறார்கள். அறியாமைக்கு மன்னிப்புண்டு. அகப்பெருமைக்கு என்னதான் உண்டு.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments