கர்த்தனின் திருநாமம் போற்றிப் புகழ்ந்தேன்.
திருநபி வதனம் நெஞ்சில் வரைந்தேன்.
றமழான் நோன்பை நெஞ்சில் சுமந்தேன்.
வரையத் தொடங்கினேன் பேனை நட்டியே!
காலங்கள் ஓடி வருடமும் செல்லுதே
அதிலும் ஒருமாதம் சிறப்பும் கொள்ளுதே
றமழான் வந்திடின் கடைசிப் பத்திலே
கத்ரெனும் இரவும் ஒற்றையில் வருகுமே!
கடவுளின் சின்னம் திருமறை வேதம்
நபிகளுக்கதுவோ இறைவனின் சாதம்
உலகத்தோர்க்கோ அதுவோர் கடிதம்
இறக்கினான் இறைவனும் உன்னத இரவிலே!
கல்க்குகள் வணங்கும் இரவுப் பொழுதினில்
மலக்குகள் றூஹுடன் சேர்ந்தே உலகினில்
இறங்கியே துதிப்பர் இறைவனின் அருளினில்
இறைவனும் அருள்வான் அருள்மிகு இரவிலே!
காலங்கள் எண்பத்து மூன்று வருடங்கள்
ஒன்றுசேர் சிறப்பைப் பெற்றிடும் இரவு!
கல்குகள் அடங்களின் செயற்பாடடங்களும்
தீர்மானம் செய்யும் இறைவனின் இரவு!
கறுமையில் இரவும் கடந்திடும் வேளை
படைப்பினர் அனைவரும் விழித்திடும் காலை
கதிரவன் சூடும் குறைந்திட்ட சாடை
அறிவார் மானிடர் லைலதுல் கத்ரிலே!
கடலினில் அலையும் குறைந்திடும் அன்று
கடும் மழை கடும் இடி காணார் அன்று
மரக்கிளை அசைந்திடா அதிசயம் கண்டு
அறிவார் மானிடர் லைலதுல் கத்ரிலே!
கண்ணியமிக்க கத்ரெனும் இரவினை
கண்ணியப்படுத்தி வணங்குவீர் இறைவனை
கண்டிடார் என்றும் இறையோன் சோதனை
அடைவீர் பெறுவீர் இறைவனில் சாதனை!!
ஆக்கியோன் :
மௌலவீ MJ. அஹ்மத் ஸுஹ்ரீ
(றப்பானீ)