ஆக்கியோன்
மௌலவீ MJ.அஹ்மத் ஸுஹ்ரீ (றப்பானீ)
மண்ணோர் வலம் வரும் இணையிலா கோனே
விண்ணோர் புகழ்ந்திடும் மட்டில்லாப் புகழே
நல்லோர் தேடிடும் காதலன் நீரே
புகழ்ந்தே துதித்தேன் இரு கரமேந்தியே!
அலியார் ஆலிமின் ஆன்மிக ஒளியே
மூஸா உம்மா பெற்றிட்ட தவமே
ஷெய்குனா தந்த தௌஹீதின் தளமே
பத்ரிய்யஹ் ஆண்டிடும் நிகரிலா மதியே!
வறுமையில் பொறுமை கொண்டிட்ட நாதா
ஹிந்துஸ்தான் சென்றே கற்றிட்ட ராஜா
வேதங்கள் ஓதும் வேதாந்த வேதா
உம்மிடம் வந்தேன் நாட்டங்கள் தேடியே!
காடாய்க் கிடந்த இடத்தினைப் பெற்றீர்
குர்ஆன் மத்றஸா இறையில்லம் தந்தீர்
ஞானம் பொங்கிடும் இருதயம் கொண்டீர்
அதனால் படர்ந்தது தௌஹீதின் கொடியே!
ஹழ்றத் கரீமிடம் இறையியல் கற்றீர்
திருப்பத்தூர் வலியின் அற்புதம் கண்டீர்
அஹ்மத் மீரான் வாசலும் சென்றீர்
இறைவனைக் கண்டீர் இரு கரம் பற்றியே!
கப்பல் பயணமும் கடலினில் சென்றீர்
பன்றிக் குட்டிகள் பாய்ந்திடக் கண்டீர்
தோழர் கேள்விக்கு விளக்கமும் சொன்னீர்
பயணமும் தொடர்ந்தீர் கஃபா வழியே!
இறையோன் நினைவில் மூழ்கிடும் அன்று
மனைவியை அழைத்தீர் வாரும் என்று
மரணித்த பின்னும் காப்பேன் என்று
நல்லுபதேசம் செப்பினீர் மணியே!
திருநபீ தர்பார் உம் முன் கண்டீர்
யாறஸூலல்லாஹ்! என்றே சொன்னீர்
ஷெய்தான் வாதம் நாவால் வென்றீர்
இறையோன் பொருத்தம் பெற்றீர் றழியே!
இறையோன் இறக்கிய குர்ஆன் வேதம்
இயற்றிட இசைந்தே மூழ்கிடும் நேரம்
பிரிந்தீர் பெற்றோம் கையினில் சேதம்
இருந்தோர் உணர்ந்தார் ஜவாதெனும் வலியே!
உங்களின் இழப்பு ஆலத்தின் அழிவு
உங்களில் பெற்றோம் இறையவன் அறிவு
உங்களால் கண்டோம் ஏகனில் தெளிவு
உம்மடிமைக் கருள்வீர் ஞானத்தின் பதியே!
வலிமார் பகைவர் அழித்திட வருவீர்
மைந்தரின் வாழ்வும் நீண்டிடச் செய்வீர்
உம்மைத் தேடுவோர் நாட்டங்கள் தீர்ப்பீர்
நேர் வழி தருவீர் தேவனின் வலியே!
குவலயம் போற்றும் எட்டிடாக் கடலை
எழுதுகோல் எழுதிட மறுத்திடும் மதியை
காத்த நகர் வாழ் அற்புத வலீயை
வடித்தே முடித்தேன் கண்ணீர் சிந்தியே!!