ஆக்கம் – ஷெய்குனா மிஸ்பாஹீ
(مؤسّس الطّريقة الشّاذليّة الشّيخ السيّد أبو الحسن عليّ الشاذلي رحمه الله)
قال الشّيح أبو الحسن علي الشّاذليّ رحمه :
الله ونقله الإمام عبد الوهّاب الشّعراني رحمه الله فى الصفحة الخامسة والسّتّين من اليواقيت والجواهر( قد محق الحقّ تعالى جميع الأغيار بقوله هو الأوّل والآخر والظاهر والباطن، فقيل له فأين الخلق؟ فقال موجودون، ولكن حُكمُهم مع الحقّ تعالى كالأنابيب الّتي فى كوّة الشّمس تراها صاعدة هابطة فاذا قَبَضْتَ عليها لا تراها، فهي موجودة فى الشّهود مفقودة فى الوجود)
ஷாதுலிய்யாஹ் தரீகாவின் மூலவர் அஷ்ஷெய்கு அஸ்ஸெய்யித் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹ்மதுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு சொன்னதை இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஅறானீ றஹ்மதுல்லாஹ் அவர்கள் தங்களின் “அல் யவாகீத் வல் ஜவாஹிர்” என்ற ஞான நூல் 65ம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.
அல்லாஹ் தனது “முந்தினவனும் அவனே, பிந்தினவனும் அவனே, வெளியானவனும் அவனே, உள்ளானவனும் அவனே” என்ற திருவசனம் கொண்டு “அஃயார்” – أغيار – அல்லாஹ் சிருஷ்டிகளுக்கு வேறானவன் என்பதை அழித்து விட்டான். அவ்வாறாயின் சிருட்டிகளின் நிலை என்ன? அவை எங்கே? என்று அவர்களிடம் கேட்கப்பட்ட போது ஆம். சிருட்டிகள் இருக்கின்றன. அவை பார்வையில் மட்டுமே இருக்கின்றன. அவற்றுக்கு “வுஜுத்” இல்லை. எது போலென்றால் வீட்டுக் கூரையிலுள்ள ஓட்டை – துவாரம் – வழியாக வருகின்ற சூரியனின் வெளிச்சத்தில் கண்களுக்குத் தென்படுகின்ற மிகச்சிறிய தூசிகள் போன்று அவை பார்வைக்குத் தெரியுமேயன்றி அவற்றுக்கு “வுஜுத்“ உள்ளமை இல்லை. அத்தூசிகள் ஏறுவது போலும், இறங்குவது போலும் கண் பார்வைக்குத் தெரியும். ஆனால் அவற்றைக் கையால் பிடித்துப் பார்க்க முடியாது.
இவ்வாறு சொன்னவர் உலகப் பிரசித்தி பெற்ற ஒரு ஞான மகான் ஆவார். இவர் என்ன சொல்கிறார் என்றால் அல்லாஹ்வுக்கு மட்டுமே “வுஜூத்” உள்ளமை உண்டு. அவனின் படைப்புகளில் ஒன்றுக்கும் “வுஜூத்” இல்லை. அவை அனைத்தும் மனிதனின் ஊனக்கண்களுக்குத் தெரிகின்றனவேயன்றி எதார்த்தத்தில் சிருட்டி என்பதே இல்லை. அல்லாஹ்வின் “வுஜூத்” உள்ளமை மட்டுமே உண்டு.