காற்றும் வந்தே சோபனம் சொல்லும்
கடலலை யோசை காதினில் மெல்லும்
காத்த நகரின் மகத்துவம் சொல்லும்
கதிரொளி மிஸ்பாஹீ கதை சொல்லும்!
கருவுக்குக் கருத்தும் சொல்லிய நாதர்
கருவேதான் எல்லாம் என்றிட்ட சீலர்
கருப்பொருள் அறியா மனிதரோ வீணர்
காவியம் சொன்ன மிஸ்பாஹீ வாழீ!
“கறாமத்”கள் அனந்தம் செய்திடும் ராஜர்
காத்த நகர்வாழ் அற்புத சோழர்
காத்திடும் எங்கள் ஜவாத்வலீ நாதர்
கருவாய் மலர்ந்த மிஸ்பாஹீ வாழீ!
காயல் பதியில் தோன்றிய ஞானி
காதிர் எனும்பெயர் பெற்றிட்ட ஜோதி
கரம்தனை பற்றி அருள்பெற்ற தேனீ
காமிலாம் எங்கள் மிஸ்பாஹீ வாழீ!
கடவுளின் ஞானம் வாயினில் பொங்கும்
கனிவுடன் உள்ளம் ஆசையில் மிஞ்சும்
கல்பினில் இறையின் காதலும் கொள்ளும்
கறைதனை போக்கிய மிஸ்பாஹீ வாழீ!
காலங்கள் ஆயிரம் ஆண்டுகள் சென்றும்
கலிமா அர்த்தம் தெளிவுறச் சொல்லும்
கருத்தே இதுதான் மாறிடா தென்றும்
கருத்தினை சொன்ன மிஸ்பாஹீ வாழீ!
கண்ணிய வலீமார் பரம்பரை வழியில்
கலிமா சொல்லும் சூபிஸ நெறியில்
காத்திரமாய் என்றும் வாழ்ந்திடும் பதியின்
காலடி வழியை நோக்கியே செல்வோம்!
காலத்தின் கௌதாய் வாழ்ந்திடும் எங்கள்
காமிலாம் ஞான களஞ்சிய வள்ளல்
கதிரவன் கண்டே வெட்கிடும் திங்கள்
காட்டிடும் பாதை நாடியே செல்வோம்!
கருத்தை அறிந்தே இறையியல் கற்க
காதிரிய்யா சபை தந்திட்டார் வெல்ல
காருண்யம் பெற்றே இறையிடம் செல்ல
காதலர் மிஸ்பாஹீ வழி செல்வோம்!
கற்பனை உலகில் வெற்றியும் காண
கரம்தனை பிடித்தே சூபிஸ ஞான
கடலினில் மூழ்கி ஆழமும் காண
கறைதனை போக்கி இறையிடம் செல்வோம்!
காண்போம் என்றும் இறைவனின் காட்சி
காமில் வலியெங்கள் கடவுளின் சாட்சி
கனிவுடன் பெறுவோம் கருவினில் ஆட்சி
கனம் அவர்பாதை வழிதனில் செல்வோம்!
காதலர் மிஸ்பாஹீ தினம் வாழீ!
காலங்கள் நலமாய் ஆண்டுகள் வாழீ!
காதிரிய்யாவின் சீடர்கள் வாழீ!
கண்ணியம் பெற்றே நீடூழி வாழீ!
——————————————-
கவிதை : மௌலவீ MJ.அஹ்மத் ஸுஹ்ரீ றப்பானீ