Tuesday, October 8, 2024
Homeஎழுத்தாக்கங்கள்திங்கள் நபீயைப் புகழாதவன் துர்ப்பாக்கியம் பெற்றவனே!

திங்கள் நபீயைப் புகழாதவன் துர்ப்பாக்கியம் பெற்றவனே!

மௌலவீ MT. பஹ்றுத்தீன் ஸுஹ்தீ
றப்பானீ , மிஸ்பாஹீ

அன்பார்ந்த இஸ்லாமிய பெருமக்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

இறை கருவூல மன்னவர், கயல் விழிக்கண்ணவர், கற்கண்டுத் தேனவர், இவ்வகிலத்தின் நாயகர் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அவதரித்த கண்ணியம் பூத்த புண்ணிய ‘ரபீஉல் அவ்வல்’ மாதத்திலே நாம் இருந்து கொண்டிருக்கின்றோம். அல்ஹம்துலில்லாஹ்!

இம்மாதத்தில் மிக விஷேடமாகவும், அதிகம் அதிகமாகவும் எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் மாண்புகளையும், கீர்த்திகளையும் புகழ்ந்து பாடுவதும், அன்னவர்கள் மீது எண்ணிக்கையற்ற ஸலவாத் ஸலாம் கூறுவதும் ஓர் புனித வணக்கமேயாகும்.

இப்புனித வணக்கத்தை அல்லாஹ்வினதும், அருள் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களினதும் ஆசிபெற்ற நற்பாக்கியவாதிகளே செய்வார்களேயன்றி இப்லீசிடம் ஆசிபெற்ற துர்ப்பாக்கியவாதிகள் செய்யமாட்டார்கள். ஏனெனில் அவ்வணக்கம் அவர்களுக்கு கசப்பானதும் நற்பாக்கியவாதிகளுக்கு கரும்பானதுமாகும்.

நபீகள் கோமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களைப் புகழ்வது ஆகுமென்பதற்கு பலதரப்பட்ட ஆதாரங்கள் குவியல்களாக இருக்கின்றன. அவையனைத்தையும் பூரண விளக்கத்துடன் கூறப்போனால் இப்பிரசுரம் புத்தகம் ஆகிவிடும் என்பதற்காக அவற்றில் சில நுணுக்கமான துணுக்குகளை மாத்திரம் நாம் இங்கு தருகின்றோம்.

முதலில் நாம் ஒரு விடயத்தை நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும். அது என்னவெனில் :- மன்னர் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை படைப்புகளான நாம் புகழ்வது உண்மையில் வியப்பான விடயமே கிடையாது.

ஏனெனில் படைப்பாளனான அல்லாஹுதஆலாவே திருக்குர்ஆனில் பல இடங்களிலே பலவிதமாக எல்லையின்றி அளவுகோலின்றி திரு நபீகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் புகழ்துதிகளைக் கூறியுள்ளான்.

அல்லாஹுதஆலாவே பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் புகழ்துதிகளை ஆதாரமாக எடுத்து நடக்கவேண்டிய திருமறையில் சொல்லியுள்ள போது நாம் அந்த நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் புகழ்துதிகளை சொல்லுவது, பாடுவது எந்த அமைப்பில் கூடாத காரியமாகும்? எந்த வகையில் ஆகாத செயலாகும்?

எனவே அல்லாஹுதஆலா புகழ்ந்த நம் கருணை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை நாம் புகழ்வதன் மூலம் அல்லாஹுதஆலா செய்த காரியத்தை நாமும் செய்கின்றோம். இதன் மூலம் அல்லாஹ்விற்கு நாம் வழிப்படுகின்றோம்.

இதுவே பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களைப் புகழ்வதற்கு முதலாவது அடிப்படை காரணமும், ஆதாரமுமாகும்.

இனி அல்லாஹுதஆலா அருள் மறையாம் திருமறையில் அண்ணல்  நபீ நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை எப்படி எப்படியெல்லாம் புகழ்ந்துரைத்துள்ளான் என்பதைப் பார்ப்போம்.

وَإِنَّكَ لَعَلى خُلُقٍ عَظِيْمٍ
நபீயே! நிச்சயமாக நீங்கள் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவர்களாக இருக்கின்றீர்கள்.
68:4

அல்லாஹுதஆலா இந்த வசனத்தில் தனது காதலரான காவிய நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை தனது சொல்லான என்பதன் மூலம் முகம் நேரே விழித்து ‘நீங்கள் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உள்ளவர்களாக இருக்கின்றீர்கள் என்று புகழ்ந்து கூறியிருப்பதை நன்றாகப் பாருங்கள்.

இந்த ஆயத்தில் அல்லாஹுதஆலா உண்மை நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் உளரீதியான நற்பண்பை மனம் திறந்து அழகாகப் புகழ்ந்துள்ளான்.

இன்னும் அல்லாஹுதஆலா திருக்குர்ஆனின் மற்றுமொரு வசனத்தில்

وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِيْنَ
நபீயே! நாங்கள் உம்மை அகிலத்தோர் அனைவருக்கும் அருட்கொடையாகவே அனுப்பியுள்ளோம்.
21:7

இந்த ஆயத்திலும் அல்லாஹுதஆலா நபிகட்கரசர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை உடல்ரீதியாகவும் உளரீதியாகவும் மொத்தமாக சம்பூரணமாக வர்ணித்து ‘ அகிலத்தோரின் அருட்கொடை’ எனப் புகழ்கின்றான்.

மீண்டும் அல்லாஹுதஆலா

وَإِنَّكَ لَتَهْدِى إِلَى صِرَاطٍ مُسْتَقِيْمٍ
நபீயே! நிச்சயமாக நீங்களே செவ்வையான பாதையின் பக்கம் மக்களை நேர்வழி காட்டக் கூடியவர்கள் ஆகும்.
42:52

இந்த வசனத்தில் அல்லாஹுதஆலா நபீகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை ‘நேர்வழிகாட்டி’ எனப் புகழ்கின்றான்.

மேலும் திருக்குர்ஆனில் பின்வரும் வசனத்தின் ஊடாக அல்லாஹுதஆலா உத்தம நபீகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை ‘ பேரொளி ‘ என்று புகழ்கின்றான்.

قَدْجَائَكُمْ مِنَ اللهِ نُوْرٌ وَكِتَابٌ مُبِيْنٌ
மக்களே! உங்களிடத்தில் அல்லாஹ்விடமிருந்து பேரொளியும், தெளிவான வேதமும் வந்திருக்கின்றது.
5:15

இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள பேரொளி என்ற சொல்லுக்கு அதிகமான தப்ஸீர் உடைய இமாம்கள் விரிவுரை எழுதும் போது

اَلْمُرَادُ بِالنُّوْرٍ هُوَ مُحَمَّدٌ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ

இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள பேரொளி என்ற சொல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களைத்தான் குறிக்கின்றது. என்று கூறியுள்ளார்கள்.

இப்படியெல்லாம் அல்லாஹுதஆலா ஏந்தல் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை ‘மிக உயர்ந்த மகத்தான நற்குணமுடையவர்கள்’ என்றும், ‘அகிலத்தோருக்கு அருட்கொடை’ என்றும், ‘நேர்வழிகாட்டி ‘ என்றும், ‘பேரொளி’ என்றும் புகழ்ந்து கூறியதுடன் மட்டுமன்றி

وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ
நபீயே! நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்து விட்டோம்
94:4

என்று புகழேந்தி நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை புகழின் உச்சத்தில் வைத்து சிறப்பாகப் புகழ்கின்றான். பாராட்டுகின்றான்.

அன்புக்குரியவர்களே!

நாம் மேற்சொன்ன அனைத்து திருமறை வசனங்கள் மூலமாகவும் அகிலத்தின் அரசர் உயர் நபீ நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை அல்லாஹுதஆலா புகழ்ந்துள்ள விதங்களை நன்கு விளங்கியிருப்பீர்கள்.

அல்லாஹுதஆலாவே பூமான் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் கண்ணியத்தை, அகமியத்தை இவ்வாறு புகழ்ந்து கூறியிருக்கும் போது அல்லாஹுதஆலாவின் அடியார்களான நாம் நபீகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களைப் புகழ்ந்து கூறுவதில் என்ன தவறு இருக்கிறது? அது அல்லாஹுதஆலாவால் சொல்லப்பட்ட விடயம் என்பதை நாம் நன்கு அறிந்து கொள்ளவேண்டும்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களைப் புகழ்வது பித்அத் – புதிதாக உண்டாக்கப்பட்ட காரியமா? அது ஷிர்க் – இணைவைப்பை ஏற்படுத்துமா?

ஒரு சில நபர்கள் வேந்தர் நபீகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களைப் புகழ்வதை பித்அத் – புதிதாக உண்டாக்கப்பட்ட காரியம் என்றும் அது ஷிர்க் – இணைவைப்பு என்றும் கூறுகின்றனர்.  இது அவர்களின் மாபெரும் பொய்களில் ஒரு பொய்யாகும்.

ஏனெனில் மார்க்கத்தில் ஒரு காரியத்தை பித்அத்- புதிதாக உண்டாக்கப்பட்டது என்று சொல்லவேண்டுமானால் அக்காரியம் முன்னரே இருந்திருக்கக்கூடாது.

அப்போதுதான் அதை பித்அத் -புதிதாக உண்டாக்கப்பட்ட காரியம் என்று கூறமுடியும்.

நம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் புகழ்துதிகள் மார்க்கத்தின் மாபெரும் ஆதாரமான திருக்குர்ஆனில் வெளிப்படையாக இருக்கும் போது அதை எப்படி பித்அத் – புதிதாக உண்டாக்கப்பட்ட காரியம் என்று கூறமுடியும்?

இது சிந்திப்பவர்களுக்கு நன்கு விளங்கும்!

அது மட்டுமன்றி கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களைப் புகழ்வது ஷிர்க் – இணைவைப்பு என்றால் திருக்குர்ஆனில் அல்லாஹுதஆலா அருள் நபீயாம் நம் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் மகத்துவத்தை புகழாக கூறியிருப்பது ஏன்? தான் புகழ்ந்துள்ளதை பார்த்து தன் அடியார்களும் புகழ்வார்கள் அதனால் தனக்கு ஷிர்க் – இணைவைப்பு ஏற்பட்டு விடும் என்று புகழாமல் விட்டிருக்கலாம்தானே!

எனவே பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களைப் புகழ்வது பித்அத், ஷிர்க் என்றால் அல்லாஹுதஆலா திருமறையில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களைப் புகழ்ந்துள்ளதையும் பித்அத், ஷிர்க் என்றே கணிக்கவேண்டும். இதன் மூலம் பித்அத், ஷிர்க் ஐ வெறுத்த அல்லாஹுதஆலாவே பித்அத்திற்கு ஷிர்க்கிற்கு சாதகமான வசனங்களை திருக்குர்ஆனில் கூறியுள்ளான் என்ற கருத்து ஏற்பட்டு விடுகின்றது.

வேடிக்கை

உன்னத நபீ நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை புகழக்கூடாது என்று கூறுபவர்கள் திருக்குர்ஆனை ஓதக்கூடியவர்களாக இருந்தால் தாங்கள் நாடாவிட்டாலும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களைப் புகழ்ந்துதான் ஆக வேண்டும். ஏனெனில் திருக்குர்ஆன் என்பது பெருமானாரின் புகழ்பேழைகளில் ஒன்றாகும்.

இல்லை இல்லை திருக்குர்ஆனில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் புகழ்கள் இடம் பெறும் வசனங்களை நாங்கள் ஓதமாட்டோம் என்று யாராயினும் ஒருவர் கூறினால் அவர் நிச்சயமாக அல்லாஹுதஆலாவின் வசனங்களை நிராகரித்ததன் காரணமாக இறை நிராகரிப்பாளராகிவிடுவார்.

எனவே அன்புக்குரியவர்களே!

அல்லாஹுதஆலாவால் புகழப்பட்ட எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை நாம் அனுதினம் புகழவேண்டும். அதிகம் அதிகம் புகழவேண்டும். விஷேடமாக அவர்கள் பிறந்த ரபீஉல் அவ்வல் மாதத்தை அவர்களின் புகழுக்காகவே நாம் ஆக்கிக் கொள்ளவேண்டும். அப்போதுதான் அல்லாஹுதஆலா செய்த காரியத்தை அவனுக்கு வழிபட்டுச் செய்த நற்பாக்கியவாதிகளாக நாம் ஆகமுடியும். இல்லையேயெனில் அல்லாஹுதஆலாவின் வசனங்களை மதிக்காமல் இப்லீசிற்கு வழிபட்ட துர்ப்பாக்கியவாதிகளாகவே ஆக வேண்டிய நிலை எற்படும். அல்லாஹ் பாதுகாப்பானாக!

RELATED ARTICLES

Most Popular

Recent Comments