ஆக்கம் – அபுன் நூர் –
தொடர்-2.
வஹ்ததுல் வுஜூத் விளக்கம் அடங்கிய ‘அல் கிப்ரீத்துல் அஹ்மர்’ என்ற ஷைஹுனா மிஸ்பாஹி அவர்கள் எழுதிய பத்வாவிற்கு அம்பா நாயகம் அவர்கள் கையொப்பம் இட்டமையானது எமது தெளஹீத் வரலாற்றில் ஒரு மகுடமேயாகும்.
வஹ்ததுல்வுஜூத் என்று ஒரு தத்துவம் இருக்கிறது ஆனால் வஹ்ததுல்வுஜூதுக்கு ஷெய்ஹ் அப்துர்றஊப் மிஸ்பாஹி அவர்கள் கொடுக்கும் விளக்கம்தான் தவறானது என்று தானும் குழம்பி மற்றோரையும் குழப்பிய அனைவரினதும் முகத்தில் கரியைப்பூசியது அம்பா நாயகத்தின் இந்த அங்கீகாரம்.
இன்றும் மிஸ்பாஹி நாயகத்திற்கு அம்பா நாயகம் கையெழுத்திட்டதைக்கண்ணுற்ற பலர் பேச்சுமூச்சின்றி தூங்குபவனைப்போல் நடிக்கின்றனர்.
ஆனால் ஒரே ஒரு உண்மை நிதர்சனம். அஷ்ஷெய்ஹ் அப்துர் றஊப் மிஸ்பாஹி அவர்களது கருத்துக்களை எதிர்க்கிறார் ஒருவர் என்றால் அவர் ஷைஹு வேசம் போட்ட சாதாரணர் அல்லது போலி எனலாம். ஏனெனில் சத்தியத்தை விலாயத்துடையவர்கள் ஒரு போதும் எதிர்க்கமாட்டார்கள் என்பதை கடந்தகால வரலாறுகள் எமக்கு பாடம் புகட்டிக்கொண்டிருக்கிறது.
அம்பா நாயகம் அவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில் உங்களிடமும் ஸுபி ஹஸ்ரத்திடமும் “சஃன் இல்ல” என்றார்கள்.
அதென்ன நாயகமே “சஃன்” என்றால்…! என்று மிஸ்பாஹி அவர்கள் வினவியதற்கு,
அம்பா நாயகம் அதற்கு விளக்கம் தந்ததோடு, தனது மகனிடம் அவ்விளக்கத்தை ஒரு துண்டில் எழுதிக்கொடுக்குமாறும்
பணித்தார்கள். அந்த துண்டு இப்பொழுதும் ஷைஹுனாவிடம் உள்ளது. அவ்விளக்கத்தையும் அல் கிப்ரீதுல் அஹ்மரில் இணைத்திருக்கிறார்கள்.
“சஃன்” என்றால் என்னவென்று ஷைஹுனா ஆராய்ந்ததில் அம்பா நாயகம் நம்மைவிட ஒருபடி மேல் நின்று வஹ்ததுல் வுஜூத் பேசுகிறார்கள் என்று புரிந்தது.
அதாவது நாங்கள்,
அல்லாஹ்தான் சிருஷ்டியாக தஜல்லியாகி இருக்கிறான்.
அல்லாஹ்தான் சிருஷ்டியாக வெளியாகியிருக்கின்றான் என்று வஹ்ததுல் வுஜூத் பேசுவோம்.
ஆனால்
அம்பா நாயகமோ,
ஹே! சிருஷ்டி என்று எங்கே இருக்கின்றதப்பா சிருஷ்டியாக வெளியாகியிருக்கிறான் என்பதற்கு……!
அல்லாஹ்தான் இருக்கான் என்று பேசேன்!
சிருஷ்டியாக…அதுவாக…இதுவாக அல்லாஹ் வெளியாகிறான் என்று இன்னொன்று இருப்பதுபோலல்லவா பேசுகிறீர்கள்….! அப்படி சிருஷ்டியைத்தரிபடுத்தி பேசாதே! அல்லாஹ்தான் இருக்கின்றான் என்று பேசு எனும் மேலான கட்டமே அதுவாகும்.
அம்பா நாயகத்தை முதலாவதாக சந்தித்த இந்நிகழ்வு 1984ம் ஆண்டு நடந்தது.
பின்னர் இரண்டாவது தடவை ஷெய்ஹுனா மிஸ்பாஹி அவர்கள் மெளலவி மர்ஹும் M.C.K முஹம்மது பஹ்ஜீ (பெரிய சமத் மெளலவி)யையும் அழைத்துக்கொண்டு அம்பா நாயகத்தைச்சந்திக்க சென்றார்கள்.
இவர்கள் தைக்காவினுள் நுழையும்போதே ஹவ்ழில் ஒழுவெடுத்துவிட்டு, ஒருகையால் பெரும்கயிற்றைப்பற்றிப்பிடித்தவாறு கால்களைக்கழுவிக்கொண்டு நின்ற அம்பா நாயகம் தூரத்திலிருந்தவாறே ஷைஹுனா மிஸ்பாஹியைக் கண்டதும் “வயிற்று வலி சுகமா!” என்று கேட்டார்கள்.
பின்னர், மாமியார் சுகமாக இருக்கிறார்களா என்றும் கேட்டார்கள்.
ஆம் நாயகமே! சுகம் என்றவாறு தைக்காவினுள் நுழைந்தார்கள்.
ஷெய்ஹுனா மிஸ்பாஹியின் இச்சந்திப்பின் போது அம்பா நாயகம் அவர்களுக்கு ஒரு மௌலவீ பணி செய்துகொண்டிருந்தார். அவர் ஷெய்ஹுனா மிஸ்பாஹியிடம் அம்பா நாயகத்தின் “கறாமத்” அற்புதங்கள் பற்றிக் விவரித்தார்.
ஸஹாபீ – மாநபித் தோழர் அப்துர் றஹ்மான் இப்னு அவ்ப் (றழி) அவர்களுக்கும் அம்பா நாயகத்துக்கும் நேரடித்தொடர்பு இருக்கின்றது.
நபித்தோழர் அவர்கள் இரவு நேரத்தில் அம்பா நாடகத்திடம் வந்து உரையாடிச் செல்கிறார்கள் என்றும் அம்பா நாயகத்தின் தேவைக் கேற்ப பணமும் கொடுத்துச் செல்கிறார்கள் என்றும் அந்த ஹாதிம் மௌலவீ சொன்னார்.
அடுத்த நாள் காலை ஸுப்ஹு தொழுகை முடித்த பின் அந்த மௌலவீ ஷெய்ஹுனா மிஸ்பாஹியிடம் ஒர் இரகசியம் சொன்னார். குறித்த மாநபித் தோழர் அப்துர் றஹ்மான் இப்னு அவ்ப் (றழி) அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள ஒரு பள்ளிவாயலில் மிஹ்றாப் தொழுகை நடத்துமிடம் அமைந்துள்ள இடத்தில்தான் சமாதி கொண்டுள்ளார்கள்.
அம்பா நாயகம் அவர்கள், தங்களின் சீடர்களில் சிலருக்கு மட்டுமே இந்த இடத்தைக் காட்டித் தந்துள்ளார்கள். அவர்கள் அனுமதி தந்தால் உங்களுக்கும் அந்த இடத்தைக் காட்டித்தருவேன் என்று சொன்னார்.
நாயகத்திடம் அனுமதி பெற்று வருமாறு அந்த மெளலவீயை ஷெய்ஹுனா வேண்டிக்கொள்ள, அவரும் பயந்தவராக அம்பா நாயகத்திடம் சென்று உரையாடி விட்டு வந்து,
“மௌலவீ நீங்கள் பாக்கியசாலி! அம்பா நாயகம் உங்களை அங்கு போகட்டுமாம் என அனுமதி தந்து விட்டார்கள்” என்றார்.
பின்னர் அந்த மௌலவீ ஷெய்ஹுனா மிஸ்பாஹியை அழைத்துக் கொண்டு அந்த ஊருக்குச் சென்று பூவுடல் பள்ளிகொள்ளும் இடத்தையும் காட்டிக்கொடுத்தார். அங்கு சற்று நேரம் தங்கியிருந்து சியாரத் செய்து பாத்திஹாவும் ஓதிவிட்டு திரும்பினார்கள்.
அன்று மாலை சுமார் ஐந்து மணியளவில் அம்பா நாயகம் தங்களின் சீடர்களிற் சிலருடன் பேசிக் கொண்டிருந்தார்கள். ஷெய்ஹுனா மிஸ்பாஹியும் ஒரு பக்கம் அமர்ந்து கொண்டார்கள்.
யாரோ ஒருவர் அங்கு வந்து அம்பா நாயகத்திடம்தனது தேவையைக் கூறி பணம் கேட்டார். அவர்கள் தனது இடுப்பில் அணிந்திருந்த அகலமான “பெல்ட்” வாரில் இருந்த பண நோட்டுக்களை எடுத்துக்கொடுத்தார்கள். அவை கசங்காதவையாகவும் புதிதானவையாகவும் இருந்தது. சற்று நேரம் கழித்து இன்னும் ஒருவர் வந்து பணம் கேட்டார். அவருக்கும் புதிய பண நோட்டுக்கள் கொடுத்ததார்கள்.
இந்த நிகழ்வு அம்பா நாயகத்துக்கு ஸஹாபீ அப்துர் றஹ்மான் இப்னு அவ்ப் (றழீ) அவர்கள் பணம் கொடுக்கின்றார்கள் என்று பணியாள் மௌலவீ சொன்னதை உறுதி செய்வது போல் இருந்தது.
மூன்றாவது தடவை ஷெய்ஹுனா மிஸ்பாஹி அவர்கள் பல தோழர்களை அழைத்துக்கொண்டு அன்னாரை தரிசிக்கச்சென்றார்கள்.
அதில் கவிஞர் ஜப்பார் G.S.O அவர்கள் அம்பா நாயகம் முன்னிலையில் நின்று கவி பாட
அவர்கள் கேட்டு ரசித்துக்கொண்டிருந்தார்கள்.
சென்ற முறைகள் போன்று ஹாஸ்யமான நிலமையில் இம்முறை அம்பா நாயகம் இருக்கவில்லை. அவர்களுடைய ஹால் மாறியிருந்தது. என்றாலும் வந்தவர்களை உபசரித்து அனுப்பிவைத்தார்கள்.
ஷெய்ஹுனா அவர்கள்
அம்பா நாயகத்தை சந்தித்த மூன்று முறைகளில் இரண்டாம் மூன்றாம் முறைகளில் பணம் கொடுத்திருக்கிறார்கள்.
மற்றுமொரு சமயம் மர்ஹும் மௌலவீ MSM. பாறுக் காதிரீ அவர்கள் அம்பா நாயகத்தைச்சந்திக்கச் சென்ற போது ஐநூறு ரூபா இந்தியப் பணமும் ஒரு சேட் துணியும் ஒரு கைலியும் அவர் மூலம் ஷைஹுனா மிஸ்பாஹிக்கு கொடுக்கும்படி அனுப்பி வைத்திருந்தார்கள்.
கீழக்கரை அறூஸிய்யஹ் மத்ரசாவில் சமாதி கொண்டு பல அற்புதங்கள் நிகழ்த்தி வரும் கல்வத் நாயகமவர்களுக்கு இருவர் கலீபாக்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. முதலாமவர்,
அம்பா நாயகம் அவர்களின் தந்தையார் அல் ஆலிமுல் பாழில் வல் ஆரிபுல் வாஸில் முஹம்மத் ஸயீத் ஜல்வத் நாயகம் ஆவார்கள்.
மற்றவர்
மேலைப்பாளயத்தில் சமாதி கொண்டுள்ள சங்கைக்குரிய யுஸுப் நாயகம் ஆவர்கள்.
இவர்களின் தரீகத்: தரீகதே இலாஹிய்யா எனும் விஷேசம் நிறைந்த தரீக்காவாகும்.
அம்பா நாயகம் அவர்களின் தந்தை முஹம்மத் ஸயீத் ஜல்வத் நாயகம் அவர்கள் திரு மக்கா சென்று “ஹஜ்” வணக்கத்தை முடித்து விட்டு தங்களின் தாயகம் வந்த போது தங்களின் குரு கல்வத் நாயகம் அவர்களின் கட்டளைப்படி கம்பத்தில் தொடராக பன்னிரண்டு ஆண்டுகள் “கல்வத்” இருந்து அங்கு மார்க்கப்பணி செய்து இறையடி சேர்ந்தார்கள்.
இவர்களின் திருச்சமாதி கம்பத்தில் இவர்களின் தைக்காவிலேயே உள்ளது.
அம்பா நாயகம் அவர்களின் தந்தை முஹம்மத் ஸயீத் நாயகம் அவர்கள் ஜில்லா ஹஜரத் , ஜல்வத் நாயகம் என அழைக்கப்பட்டார்கள்.
இவர்கள் பிறந்த தேதி: ஹிஜ்ரி1297 , ஆண்டு 1880
வபாத்: திங்கள் பகல் ரஜப் – 4 ம் நாள் ஹிஜ்ரி 1396 (05-07-1976)
இவர்களுக்கு இரு குழந்தைகள்:
மகளார்: நபீஃஸா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள்
மகனார் : அப்துல் ரஹ்மான் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள்
மகனார் அப்துல் ரஹ்மான் அவர்கள்தான் அம்பா நாயகம் என்றும் கம்பம் ஹஸ்றத் என்றும் பிரசித்தி பெற்றிருந்தார்கள்.
இவர்களும் தங்களின் தந்தை போல் குறித்த தைக்காவில் இருபத்தைந்து ஆண்டுகள் கல்வத் இருந்து மார்க்கப்பணி செய்து ஹிஜ்ரி 1420 ஜுமாதுல் ஆகிறஹ் மாதம் பிறை மூன்றில் (13-09-1999) சுமார் 72 வயதில் தாறுல் பனாவை விட்டும் தாறுல் பகாவுக்குச் சென்றார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.
இவர்களும் தமது தந்தைக்கு அருகில் ஹயாத்துடன் துயில் கொள்கிறார்கள்
-முற்றும்-