அவர்களின் இயற் பெயர் அப்துல் கரீம் ஆகும். அவர்களின் தந்தை இப்றாஹீம் என்பவரும், அவர்களின் தந்தை அப்துல் கரீம் என்பவருமாவார். “அல் ஜீலீ” அல்லது “அல் ஜீலானீ” என்று “ஜீலான்” நகரைச் சார்ந்தவர்கள் என்பதால் சொல்லப்படுகின்றது. (ஜீலான் நகர் பாரிஸ் நகர்களில் ஒரு பகுதியாகும்) அடிப்படை “பக்தாத்” நகரைச் சார்ந்தவர்கள். ஹிஜ்ரீ 767ல் பிறந்தார்கள். இந்தியா, பாரிஸ், மிஸ்ர், பலஸ்தீன், ஹிஜாஸ் போன்ற அதிக ஊர்களுக்குச் சென்றுள்ளார்கள். பின்பு ஹிஜ்ரீ 796ல் யமன் தேசத்திலுள்ள “ஸுபைத்” நகர் வந்து அங்கேயே தனத “வபாத்” மரணம் வரை (ஹிஜ்ரீ – 826) இருந்தார்கள்.
இமாம் அப்துல் கரீம் ஜீலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் “ஸுபிஸ” வழியை யமன் தேச ஸூபீகளின் தலைவர் இஸ்மாயீல் அல் ஜப்றதீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்களிடமிருந்தும், அவர்களுக்கு முன் வாழ்ந்த ஸூபிய்யஹ் களின் நூல்களிலிருந்தும் பெற்றுக் கொண்டார்கள். ஹிஜ்ரீ 9ம் நூற்றாண்டின் தலைசிறந்த பெரிய ஸூபீ என்று சொல்லப்படும் அளவிற்கு சிறந்து விளங்கினார்கள்.
இமாம் ஜீலீ அவர்களுக்கு சுமார் 30 க்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை ஸூபிய்யஹ் களின் கொள்கையை எடுத்துக் கூறக் கூடிதாகவே உள்ளன. அவற்றில் முக்கியமான சில நூல்களை இங்கு குறிப்பிடுகின்றோம்.
* அல் இன்ஸானுல் காமில்
* அல் மனாளிறுல் இலாஹிய்யஹ்
* அல் காமூஸுல் அஃளம்
* ஷர்ஹு முஷ்கிலாதில் புதூஹாத்
* அல் வுஜூதுல் முத்லக்
* மறாதிபுல் வுஜூத்
இமாம் ஜீலீ அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையை போதித்தவர்கள் ஆவர். அவர்களுக்கு இக் கொள்கையைப் போதிப்பதே தொழிலாக இருந்தது. இது இவர்களின் பிரதான நூல்களில் தெளிவாக விளங்குகின்றது.
அவர்கள் “அல்லாஹ் மாத்திரமே தனியான உள்ளமை உடையவன்” என்று கருதுகின்றார்கள். இதை தரிபடுத்துவதே தவ்ஹீதின் உச்ச நிலை என்றும் கருதுகின்றார்கள். இந்த விடயத்தையே பின்வருமாறு கூறுகின்றார்கள். “ஷஹாதஹ் கலிமஹ் என்பது இல்லாமற் செய்தல் மீதும் (கலிமஹ்விலுள்ள “லா” என்ற சொல் மூலம்) தரிபடுத்துதல் மீதும் (கலிமஹ்விலுள்ள “இல்லா” என்ற சொல் மூலம்) கட்டுப்பட்டதாகும். இதன் பொருளாகின்றது “அல்லாஹ் தவிர எந்தவொரு படைப்புக்கும் உள்ளமை கிடையாது” என்பதாகும்.
(அல் இன்ஸானுல் காமில் 2-134 )
பிரபஞ்சம் அல்லது படைப்பு அல்லது வையகம் என்பது திரையிடப்பட்டவர்களின் புத்தியில் திடீரென ஏற்படும் பேதமைகளில் நின்றும் ஒரு பேதமையாகும். அல்லது மாயைகளில் நின்றும் ஒரு மாயை ஆகும். படைப்பென்பது இமாம் ஜீலீ அவர்களிடம் சுயமான உள்ளமை இல்லாததாகும். அதனுடைய உள்ளமை “மஜாஸீ” (மெய்நிகர்) ஆகும். அதனுடைய எதார்த்தம் அல்லாஹ்வேதான். ஆனால் அவனே அவைகளின் உருவங்களில் வெளியாகி உள்ளான்.
இமாம் ஜீலீ அவர்கள் அந் நாதிறாதுல் ஐனிய்யஹ் என்ற தனது பாடல் தொகுப்பில் பின்வருமாறு ஒரு பாடலில் கூறுகின்றார்கள்.
“அவனுடைய பிரதிபலிப்பாக, பெயராக, வர்ணனைகளாக உள்ள பிரபஞ்சம் அவன் தானானதே! அல்லாஹ் என்பது அனைத்தையும் உள்ளடக்கியவன். அங்கே அல்லாஹ் தவிர எதுவும் கிடையாது. அவனன்றி கேட்பவனும், கேட்கப்படுபவனும் இல்லை”
மேலும் ஒரு பாடல் அடியில் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
“வஸ்த்துக்களின் உள்ளமையாக அவனே இருந்து கொண்டு அவற்றை வெளிப்படுத்தியவன் அவன். அனைத்தினதும் “தாத்” உள்ளமையாக அவனே உள்ளான். அவன் அனைத்தையும் உள்ளடக்கியவன். தன்னுடைய “தாத்”தின் படித்தரங்களின் அடிப்படையில் “ஹக்” என்றும் “கல்க்” என்றும் பெயர் சொல்லப்படும் அவன் விசாலமானவன்.
எவரும் தன்னை, படைப்புகளுக்கு தனியான “வுஜூத்” உண்டு என்றும் அதிலே இறைவன் வெளியாகின்றான் என்றும் நம்புவதாக எண்ணிவிடக் கூடாது என்பதற்காக பின்வருமாறு கூறுகின்றார்கள். “அவன் தன்னிலேயன்றி வேறெதிலும் வெளியாகவில்லை. ஆனால் நாங்கள்தான் அந்த இலாஹிய்யத்தான நுட்பத்திற்கு “அப்து” அடிமை என்று (அடிமைக்குப் பகரமாக உள்ளதென்று எண்ணி ) பெயர் வைக்கின்றோம். அப்படி இல்லை என்றால் “றப்பு” ம் இல்லை, “அப்து” அடிமையும் இல்லை. ஏனெனில் வளர்க்கப்படுபவன் இல்லை என்றால் வளர்ப்பவன் எப்படி இருப்பான்? அதாவது “மர்பூப்” வளர்க்கப்படுபவன் என்பதே இல்லை என்றால் “றப்பு” வளர்ப்பவன் என்ற பெயர் எதற்கு? அல்லாஹ் மாத்திரமே உள்ளான்”
(அல் இன்ஸானுல் காமில், பக்கம் – 97 )
இமாம் ஜீலீ அவர்கள் படைப்பு (கல்கு), படைத்தவன் (ஹக்கு) என்ற பெயர்கள் சூட்டப்படுபவைகளின் எதார்த்தம் அவனே! அல்லாஹ்வே! என்று தெளிவாகக் கூறுகின்றார்கள்.
(அல் இன்ஸானுல் காமில், பக்கம் – 5 )
இமாம் ஜீலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் படைப்புக்கு ஐஸ்கட்டி, நீர் ஆகியவற்றை உதாரணமாகச் சொல்லிக் காட்டியுள்ளார்கள். அவர்களிடம் அல்லாஹ்வாகிறவன் நீர் போன்றும், படைப்பாகின்றது ஐஸ்கட்டி போன்றும் ஆகும். ஐஸ்கட்டியென்பது எதார்த்தத்தில் அவ்வுருவில் தோன்றிய நீரன்றி வேறில்லை. இதையே பின்வரும் பாடல் மூலம் கூறுகின்றார்கள்.
وما الخلقُ فى التِّمْثَال إلّا كثَلْجَةٍ – وأنت بها الماء الّذي هو نابعٌ
இமாம் ஜீலீ அவர்கள் படைப்புக்கும், படைத்தவனுக்கும் உள்ளமை ஒன்று என்ற அடிப்படையில் அல்லாஹு தஆலா படைப்புக்களின் அனைத்து தன்மைகள் கொண்டும் வருணிக்கப்பட்டவன் என்று கருதுகின்றார்கள். அல்லது அவர்கள் பின்வருமாறு கூறுவது போன்று. “ஒவ்வொரு வஸ்த்துவிலும் அவன் வெளியாகியுள்ளான். “ஹக்”, “கல்கு” ஆகியவற்றின் கருத்துக்கள் ஒவ்வொன்றைக் கொண்டும் குணம் பெற்றுவிட்டான்”
(அல் இன்ஸானுல் காமில், பக்கம் – 8 )