இமாம் அவர்கள் ஹிஜ்ரீ 616ல் ஸ்பெய்ன் நாட்டின் “முர்ஸியா” என்ற ஊரில் பிறந்து அங்கேயே வளர்ந்தார்கள். பின் தூனுஸ் நாட்டுக்கு இடம் பெயர்ந்தார்கள். அங்கே இமாம் அபுல் ஹஸன் அலீ அஷ் ஷாதுலீ நாயகத்திடம் “தஸவ்வுப்” ஞானத்தைப் பெற்றுக் கொண்டார்கள். இமாம் ஷாதுலீ அவர்கள் தூனுஸ் நாட்டை விட்டும் வெளியேற்றப்பட்டபோது அவர்களுடன் அபுல் அப்பாஸ் அல் முர்ஸீ அவர்களும் வெளியேறி எகிப்துக்கு வந்தார்கள். இஸ்கந்தரிய்யஹ் நகரில் தரித்து தனது குருநாதர் இமாம் ஷாதுலீ அவர்களின் “ஷாதுலிய்யஹ்” தரீகஹ் வை வளர்த்தார்கள். ஹிஜ்ரீ 686ல் இவ்வுலகை விட்டும் பிரிந்தார்கள்.
இமாம் அபுல் அப்பாஸ் அல் முர்ஸீ அவர்களின் “வஹ்ததுல் வுஜூத்” ஐக் காட்டக் கூடிய பேச்சுக்களில் சிலவற்றை இங்கு தருகின்றோம்.
01. “அல்லாஹ்வுக்கு சில அடியார்கள் உள்ளார்கள். அல்லாஹ்வின் செயல்கள் கொண்டு அவர்களின் செயல்கள் இல்லாமலாகிவிட்டன. அல்லாஹ்வின் தன்மைகள் கொண்டு அவர்களின் தன்மைகள் இல்லாமலாகிவிட்டன. மேலும் அல்லாஹ்வின் “தாத்” உள்ளமை கொண்டு அவர்களின் “தாத்” உள்ளமை இல்லாமலாகிவிட்டது”
(அத் தபகாதுல் குப்றா லிஷ் ஷஃறானீ, 2-13)
02. “புகஹாஉ – சட்டமேதைகளின் இரு விடயங்களை – கருத்துக்களை நான் வெறுக்கின்றேன். ஒன்று – இமாம் ஹல்லாஜ் றஹிமஹுல்லாஹ் அவர்களை “காபிர்” என்று அவர்கள் கூறுவது, இரண்டு – களிர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மரணித்து விட்டார்கள் என்று அவர்கள் கூறுவது”
(லதாயிபுல் மினன் – பக்கம் – 473 )
03. “ஒரு வலீ – இறை நேசரின் எதார்த்தம் காண்பிக்கப்பட்டால் அவரை வணங்கப்படும். ஏனெனில் அவருடைய தன்மைகள் அல்லாஹ்வின் தன்மைகளாகும்”
(ஈகாளுல் ஹிமம், பக்கம் – 199, அத்பகாதுல் குப்றா, பக்கம் – 132 )
இமாம் அபுல் அப்பாஸ் அல் முர்ஸீக்குப் பிறகு அவர்களின் “கலீபஹ்” பிரதிநிதியாக ஷாதுலிய்யஹ் தரீகஹ் வை நடத்திச் சென்றவர்கள் அவர்களின் மாணவர் இப்னு அதாயில்லாஹ் அஸ்ஸிக்கற்தரீ றஹிமஹுல்லாஹ் அவர்களாகும். அவர்களும், அவர்களின் குருமார்கள் போன்று “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை ஏற்று அதன்படி வாழ்ந்து உயர் நிலை அடைந்தவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அவர்களின் பேச்சுக்களில் நின்றும் “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தைக் காட்டக் கூடிய சிலவற்றை இங்கு குறிப்பிடுகின்றோம்.
01. அவனே சகலவற்றையும் வெளியாக்கியவனாக இருக்க, அவனை ஒரு பொருள் எவ்வாறு மறைக்கும்?
02. அவனே சகல வஸ்த்துக்களாகவும் வெளியாகியிருக்க, அவனை எவ்வாறு ஒரு வஸ்த்து மறைக்கும்?
03. அவனே சகல வஸ்த்துக்களிலும் வெளியாகியிருக்க, அவனை எவ்வாறு ஒரு வஸ்த்து மறைக்கும்?
04. அவனே சகல வஸ்த்துக்களுக்கும் மூலமாக இருந்து வெளியாகியிருக்க, அவனை எவ்வாறு ஒரு வஸ்த்து மறைக்கும்?
05. அவனே சகல வஸ்த்துக்களின் “வுஜூத்” உள்ளமைக்கு முன் வெளியாகியிருக்க, அவனை எவ்வாறு ஒரு வஸ்த்து மறைக்கும்?
06. அவனே சகல வஸ்த்துக்களிலிருந்தும் வெளியாக்கி இருக்க, அவனை எவ்வாறு ஒரு வஸ்த்து மறைக்கும்?
07. அவனே “வாஹித்” தனித்தவனாக, அவனுடன் இன்னொரு பொருள் இல்லாமலிருக்க, அவனை எவ்வாறு ஒரு வஸ்த்து மறைக்கும்?
08. உனக்கு சகல வஸ்த்துக்களைவிடவும் மிக நெருக்கமாக இருக்க, அவனை எவ்வாறு ஒரு வஸ்த்து மறைக்கும்?
09. அவனின்றேல் எந்தவொரு பொருளுக்கும் “வுஜூத்” உள்ளமை இல்லாமலிருக்க, அவனை எவ்வாறு ஒரு வஸ்த்து மறைக்கும்?
10. ஆச்சரியமே! இல்லாமையாக இருப்பது எவ்வாறு வெளியாகும்? அல்லது புதிதாகத் தோன்றியது பூர்வீக தன்மையுடையவனுடன் (ஆரம்பமில்லாதவன், முடிவில்லாதவன்) எவ்வாறு தரிபடும்?
(அல் ஹிகமுல் அதாஇய்யஹ் இப்னு அதாயில்லாஹ் அஸ்ஸிக்கந்தரீ, பக்கம் – 40 )
இமாம் அல் குத்பு அபுல் ஹஸன் அலீ அஷ் ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் இஸ்லாமிய உலகப் பிரசித்தி பெற்ற ஒரு “குத்பு” மாத்திரமின்றி ஒரு ஸூபீயும், பேணுதலுள்ள ஒரு “தக்வா” தாரியுமாகும். ஆச்சரியமான அற்புதக்கடலுமாகும். “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை ஏற்று அதன் வழி சென்றவர்களுமாகும். “ஷாதுலிய்யஹ் தரீகஹ்” வின் தாபகருமாகும். அவர்களின் தரீகஹ் இலங்கை உட்பட அநேக நாடுகளில் பரவியுள்ளது. இந்த மகானுக்கு அவர்களின் காலத்திலேயே அதிகமான “முரீது”கள் காணப்பட்டனர். அஷ் ஷெய்கு அல் குத்பு அப்துஸ் ஸலாம் இப்னு மஷீஷ் அவர்களிடம் “பைஅத்” செய்தவர்கள். (இப்னு மஷீஷ் அவர்கள் அல் கௌத் அபூ மத்யன் அல் மகரிபீ அவர்களின் முரீது – ஞான சீடர் என்பது குறிப்பிடத்தக்கது) இப்படிப்பட்ட குத்பு அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” என்ற கடலில் மூழ்கினவர்கள் என்பது அவர்களின் மெற் சொன்ன பேச்சுக்கள் மூலம் தெளிவாகின்றது.
எனவே, “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை மறுக்கக் கூடிய சங்கைமிகு உலமாஉகளே! இந்த குத்பு பற்றி என்ன சொல்கின்றீர்கள். அவர்களும் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிய “முர்தத்” ஆகிவிட்டார்களா? அல்லது உண்மை விசுவாசி, ஏகத்துவவாதியா? உங்களின் தீர்ப்பை, உள்ளச்சத்தை வெளிப்படுத்துங்கள்?