Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்உள்ளமை, இருப்பு, وجود ஒன்றே!

உள்ளமை, இருப்பு, وجود ஒன்றே!

உள்ளமை, இருப்பு, وجود ஒன்றே என்பதே உண்மைத் தௌஹீத் !

அல்லது இல்முத் தௌஹீத் எனும் ஏகத்துவ ஞானம் !அத்வைத மெய்ஞானம் !

The existing entity is only One ! It is the real Monism or Non-Dualism !

படைத்தவன், படைப்புக்கள் இரண்டென்பது ஷிர்க்கே ! இணைவைப்பே !

Making another being with Allah is only Dualism

அல்லாஹ்வும் இரஸூலும் ஒன்றே……..!

அவனது உள்ளைமையினுள் ஒளிந்திருக்கும் சக்திகளும், பல்வேறு ஸிபத்துக்கள் எனும் தன்மைகள், கல்யாணக் குணங்களும், அந்த ஒன்றாகிய அஹதாகிய ஏகனுக்கே தனிப்பட்ட சொந்தம்……!

உதாரணமாக, ஒரு மனிதன் வுஜூதாக, உள்ளமையாகவும் அவனுக்குள் மறைந்திருக்கும் அவனிலிருந்து வெளிப்படும் சக்திகளும், தன்மைகளும், செயல்பாடுகளும் அவனுக்கே உரிய தன்மைகளாகவும் இருப்பது போல ! உள்ளமையாக இருப்பதும் அவனே !

அவனுள் மறைந்தும், வெளிப்படும் சக்திகளும், செயல்பாடுகளும், அந்த வல்ல அல்லாஹ்வுக்கே தனிப்பட்ட சொந்தமாகும் ! திருமறையில், அல்லாஹ் தன்னை, சில வசனங்களில்

நான் انا என்றும், நாங்கள் نحن என்றும், நீ انت என்றும், அவன் هو என்றும் கூறுகின்றான்!

நீங்கள், அவள், இவள், அவர்கள், இவர்கள், அது, இது, அவைகள், இவைகள் என்பவற்றையும் அர்ஷு, குர்ஸீ, லௌஹு, கலம், வானங்கள், பூமி, மேகக்கூட்டங்கள், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மலக்குகள், ஷைத்தான்கள், மனிதர்கள், ஜின்கள், சொர்க்கம், நரகம், காடுகள், மலைகள், கடல்கள், மிருகங்கள், மீன்கள், பறவைகள், பாம்புகள், ஏன் ? கொசுக்கள், ஈக்கள் என உயர்திணை, அஃறிணை ஆகிய அனைத்தையும் தானே படைத்த சிருஷ்டிகளாகவே குறிப்பிட்டாலும்,

தங்கத்திலிருந்து வந்த மோதிரம், மூக்குத்தி,தோடு, ஜிமிக்கி, நெக்லெஸ், வளையல், காப்பு, போன்ற நகைகள் தங்கமே போல,

வெள்ளியிலிருந்து வெளியான டம்ப்ளர், தட்டு, கோப்பை, கரண்டி, போன்ற பாத்திரங்கள் வெள்ளியே போல,

களிமண்ணிலிருந்து செய்யப்பட்ட சட்டிகள்,பானைகள், அடுப்புகள், களவாடைகள், குடங்கள், கூஜாக்கள் முதலியன களிமண்ணே போல,

இரும்பினால் செய்யப்பட்ட கத்தி, அரிவாள், வாள், வேள், ஆணிகள், ஈட்டி, சூலாயுதம், எல்லாம் இரும்பே போல

மரத்திலான கட்டில், அலமாரிகள், மேசை, நாற்காலி, வீட்டின் நிலைக்கதவுகள், ஜன்னல் கதவுகள், முதலியன மரமே போல்,

கருங்கல்லால் செதுக்கப்பட்ட விக்கிரகங்கள், யானை, நாய், குதிரைகளின் உருவங்கள் எல்லாம் கல்லாலானதுபோல,

அனைத்திற்கும் ஏக மூலமான, ஆதிமூலமான தானே தன்னில் தானான அல்லாஹ்விலிருந்து………….
உண்டான அனைத்து படைப்புக்களும் அல்லாஹ்வேயாகும் !

சகல சிருஷ்களும் அணுவிலிருந்து அண்டசராசரங்கள் வரையான அனைத்தும் , அனைத்தையும் தன்னுடைய உள்ளமையிலிருந்து (வுஜூதுல் ஹக்) தன்னுள்ளேயே படைத்து, வளர்த்து, பாதுகாத்து வருகின்ற றப்புல் ஆலமீனாகிய ஏகன் அல்லாஹ்வேயாகும் !

ஆதலால், ஸலாம் என்னும் சாந்தியும் அவனே ! சாந்தியடைந்த ஆத்மாவான முஸ்லிமும் அவனே !

ஈமான் என்னும் அச்சமற்ற தன்மையும் அவனே ! அச்சமற்ற முஃமினும் அவனே ! தக்வா எனும் சுயம் உணர்தலும் அவனே ! சுயம் உணர்ந்த முத்தக்கீயும் அவனே ! தவக்குல் எனும் தானாயிருக்கும் தன்னையே முழுமையாக நம்பி பரம்சாட்டுதலும் அவனே ! பரம் சாட்டுபவனாகிய முதவக்கிலும் அவனே ! ஷுஹூத் எனும் சாட்சியாக இருந்து பார்த்தலும் அவனே ! ஷாஹிதும், சாட்சியாளனும் அவனே ! மஷ்ஹூது எனும் சாட்சியாக பார்க்கப்படுபவனும் அவனே ! ஆக அனைத்தும் அவனே ! அவனே நான் ! நானே அவன் ! அவனில்லாமல் நானில்லை ! நானில்லாமல் அவனில்லை ! எனும் அத்வைத உணர்வே நம்மை கரைசேர்க்கும் ! கடைத்தேற்றும் ! நான் இன்ஸான், என்ற மாய பொய்யுணர்வு நீங்கி, நான் ஹக்கே (இன்ஸானே காமில்) என்ற கலிமா தௌஹீதின் வேர் ஆழமாக நம் கல்பில் வேரூன்றி வானளாவ தன் கிளைகளைப் பரப்பி எல்லாக்காலங்களிலும் அருள்ஞானக்கனிகளை சொரிந்துக் கொண்டிருக்கக்கூடிய கலிமா விருட்சத்தைக்குறித்து தன் திருமறையில், அவனே அருளியது போல, இப்பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்து நமக்கும் உலக மக்கள் அனைவருக்கும் நல்ல பல நற்பலன்களை ஊழியூழிக்காலம் தந்துக்கொண்டேயிருக்கும் என்பதில் எந்தவிதமான ஐயப்பாடும் இல்லை !

ஏனெனில், ஒரு ஞானியோ வேறு யாரோ ஒரு மனிதர் எப்போது “நான் அல்லாஹ்” என்று உணர்கிறாரோ கலிமாவின் தத்துவார்த்தமாகவே மாறிவிடுகிறாரோ, அந்தக்கணமே அவர் அனைத்துமாகி விடுகிறார் ! அதாவது, இவர் தானே மெய்ப்பொருளாக ஹக்காகவே இருக்கின்றார் !

இத்தகைய மகத்துவமிக்க உன்னதமான இறை நிலையை அடைவதே மனித வாழ்வின் மாபெரும் நோக்கமும், குறிக்கோளுமாகும்!

The most important Vision and Mission of the human life !

ஆகவே, எங்களின் அருமை பிள்ளைகளே ! இரத்த உறவின் முறையினரே ! அன்புறவின் முறையினரே ! பெரியோர்களே! தாய்மார்களே ! எங்களின் உடன் பிறந்த, உடன் பிறவா சகோதர, சகோதரிகளே ! அன்பர்களே ! நண்பர்களே ! ஞான வழித்தோழர்களே ! நாமனைவரும், கல்பளவில், லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்வின் தத்துவார்த்தத்தை அனுபூதியில் அறிந்துணர்ந்து கலிமா விருட்சமாக மாறி என்றும் அருட் பிரகாச ஞானக் கனிகளை தரும் கற்பகத்தருவாகவே ஆகிவிட்ட இறை நேசச் செல்வர்களாவோம் !

நாமாகிய ,அனைத்துமாகிய, ஏகன் வல்ல ரஹ்மான் அல்லாஹ் தௌஃபீக் செய்வானாக ! ஆமீன்…………! யாறப்பல் ஆலமீன்!

இறை நன்றியுடன்,
இறையன்புடன்,
மஹானந்தன் (அமீருத்தீன்) .

RELATED ARTICLES

Most Popular

Recent Comments