அரபு மொழியில் மஸ்ஜித், ஜாமிஉ என்ற மக்களெல்லாம் ஒன்று சேர்ந்து ஏக இறைவனை வணங்கி கூட்டுப் பிரார்த்தனை செய்யக்கூடிய புனித இடத்திற்கு பள்ளி வாசல் ! அல்லது பள்ளிவாயில் ! என நம் ஞானத்தமிழ் முஸ்லிம் முன்னோர்கள் ஏன் பெயர் வைத்திருக்கிறார்கள் ? என்பதற்கு ஏற்புடைய காரணங்கள் உண்டு !
நம் தாய் மொழித் தமிழில் பள்ளி, பள்ளிக்கூடம் என்ற பதத்திற்கு கல்வி அல்லது ஞானம் கற்கக்கூடிய இடம் என்றும் பள்ளியறை என்பதற்கு துயிலக்கூடிய இடம் என்றும் பொருள்தரப்படுகிறது !
பள்ளி வாயில் என்று பகரும்போது, இஸ்லாத்தின் சரியை என்னும் சரீஅத்தைப்பற்றியும், இஹ்ஸான் என்னும் மஃரிபத்தை, இறைவனைப் பற்றிய ஞானத்தைப்பற்றியும் பயிலக்கூடிய வழியைக் காட்டும் வாயில் என்றே கொள்ளப்படும் !
அடுத்து, அங்கு, இறை ஞானத்தைப் பயின்று தியானம் என்னும் மனமற்ற, எண்ணமற்ற ஏகாந்த நிலைக்கு சென்று, பள்ளியறையில் துயில்வதுபோல, அல்லாஹ்வின் வுஜூத் என்னும் உள்ளமையிலும் ஸிபாத்துக்கள் என்னும் அவனுடைய கல்யாண குணங்களிலும் தன் உடலையும், மனதையும் காணமலாக்கி-பனாவாக்கி,தொலைத்து யோக நித்திரையில், அப்து வேறு றப்பு வேறு எனும் உண்மையான ஷிர்க்கை முற்றிலும் நீக்கி, இறைவனோடு ஒன்றித்த பேரின்ப நிலையில் தூங்காமல் தூங்கி சுத்த சுகவாரிதனில் மூழ்கியிருக்கக்கூடிய இடம் என்றும் பொருள் கொள்ளலாம் ! இது வெளியிலுள்ள பள்ளிவாயில் !
நம்மில் உள்ள பள்ளிவாயில்கள் மூன்றாகும் ! அவைகளில் முதலாவது நமது உடலில் மையமாக இருக்கக்கூடிய மூன்று ஹிருதய (மைய்யம், நடு இடம்) , அனாகதா என்னும் நம் மார்புகளுக்கு மத்தியிலுள்ள மைய்யம் (The central point in between our two chests)
இரண்டாவது,
இரு புருவங்களுக்கு இடையிலுள்ள ஆக்ஞா எனும் சுழுமுனை மைய்யம் !
The central place in between our two eye-brows !
மூன்றாவது,
தலை உச்சியிலுள்ள சகஸ்ராரா எனும் ஆயிரம் இதழ் தாமரை ஆதார மைய்யம்!
The central place of the top of our head !
மேற்குறிப்பிட்ட அந்த மூன்று மைய்யங்களும் நம் சுயத்தோடு, இறையோடு , உடல், மன உணர்வற்று நம் நப்ஸ், கல்பு, ரூஹ், ஸிர்ரு, ஹஃபீ, அஹ்பா, சுல்தானுல் அத்கார் எனும் ஸித்ரதுல் முன்தஹா இறுதியில் தலை உச்சிக்கு ஒரு ஜான் நேராக மேலே அர்ஷுல்லாஹ்வில் அல்லாஹ்வின் திரு தரிசனத்தில் மெய்மறக்கும் ஒன்றாக இலயிக்குமிடங்களாகும் !
இறையன்புடன்
மஹானந்தன்( அமீருத்தீன்)