மெளலவீ KRM ஸஹ்லான் றப்பானீ
வஹ்தத்துல் வுஜுத் பற்றி விமர்சனம் செய்ய முன்வந்துள்ள ஒருவர் “வஹ்ததுல் வுஜூத்” என்பது “உள்ளமை ஒன்று அல்லது மெய்ப்பொருள் ஒன்று என்பதை விபரிக்கின்றது என்தையும் ஒரே உள்ளமையான அல்லாஹ் தான் ஹுலூல், இத்திஹாத் இன்றி பஞ்சு பிடவையாக,சேட்டாக, சாரனாக,தொப்பியாக தோற்றுவது போலவும், தங்கம் காப்பாக, மாலையாக, மோதிரமாக தோற்றுவதுபோலவும் கடல் அலையாக,நுரையாக தோற்றுவது போலவும் இரும்பு திறப்பாக,பூட்டாக தோற்றுவது போலவும் படைப்புகளாக ஒரே உள்ளமையான அல்லாஹ் தோற்றமளிக்கின்றான் என்பதையும் விபரிக்கின்றது என புரிந்து கொள்ளாமல் படைப்பின் ஒவ்வொரு பொருளும் “அல்லாஹ்” என்கின்றனர் எனவும் படைப்புக்களை அல்லாஹ் என்கின்றனர் எனவும் ஒன்றை அல்லது பிரபஞ்சத்தைப் பார்த்து “அல்லாஹ்.” என்று கூறினால் அவர் கூறும் பொருளை அல்லது பிரபஞ்சத்தை தெய்வீகத் தன்மையுள்ளது (உலூஹிய்யத் உள்ளது) என்று வாதிக்கின்றார்கள் என்றும் தவறாக விமர்சனம் செய்கின்றார்.
உலூஹிய்யத் என்றால் என்ன என்பதை இவர் முதலில் புரிந்து கொள்ளவில்லை.
தாத், இஸ்ம், ஸிபத் பெயர்களும் தன்மைகளும் எதில் தங்கி நிற்கின்றதோ அது தாத் எனும் உள்ளமையாகும்.
எல்லா பெயர்களும் தன்மைகளும் தாத் எனும் உள்ளமையிலேயே தங்கி நிற்கின்றது.
அல்லாஹ் ஸுப்ஹானஹுவ தஆலாவுடைய தாத் என்பது அவனையே குறிக்கின்றது. அவன் தனது தாத் எனும் உள்ளமையைக் கொண்டே நிலை பெற்றிருக்கின்றான். அவனது திரு நாமங்களும் பண்புகளும் அவனது தாத்தில் தங்கி நிற்கின்றன. அவனது பரிசுத்த தாத்தை பரிபூரணமாக அறிந்து கொள்ள முடியாது, வார்த்தைகளால் விபரிக்கவோ, சாடைகளாலும் சைக்கினைகளாலும் தெளிவு படுத்தவோ முடியாது.
ஒரு பொருளை அறி்ந்து கொள்வதாயின் அதற்கு ஒத்த, நேர்பாடான பொருளினாலோ அல்லது அதற்கு எதிரான,விரோதமான பொருளினாலோ தான் அதை அறிய முடியும்.
அல்லாஹ் ஸுப்ஹானஹுவ தஆலாவின் தாத்துக்கு ஒத்த,நேர்பாடான பொருளோ அல்லது எதிரான பொருளோ உள்ளமையில் இல்லாத காரணத்தினால் அவனை பரிபூரணமாக அறிந்து கொள்ள முடியாதுள்ளது. பேச்சாளா்களெல்லாம் அல்லாஹ்வின் தாத்தின் விடயத்தில் மௌனிகளாகவே இருக்கின்றனர். புத்தியும் விளக்கமும் அவனை பூரணமாக விளங்கிக் கொள்வதை விட்டும் அவன் தூயவன். அவன் தனது தாத் எனும் உள்ளமை கொண்டு சகலமுமாக வெளியாகி அவனே காட்சியளிக்கின்றான். அத்துடன் புலன்களுக்கு உட்படாமல் மறைந்திருப்பவைகளும் அவனேதான். அவனைத்தவிர வேறுயாருமில்லை. அவனுக்கு இரண்டு பண்புகளுள்ளன. ஒன்று ஹக் (حق) எனும் மெய்ப் பொருள் மற்றது கல்க் (خلق ) எனும் பொய்ப் பொருள். அவனுக்கு இரண்டு வர்ணனைகள் உள்ளன. ஒன்று கிதம்(قدم) எனும் பூர்வீகம் மற்றது ஹுதூத் ( حدوث) எனும் புதிதான ஆரம்பம். அவனுக்கு இரண்டு பெயர்கள் உள்ளன. ஒன்று றப்பு ( رب) மற்றது அப்து ( عبد ). அவனுக்கு இரண்டு நிலைகள் உள்ளது ஒன்று ழாஹிர் வெளியானவன் மற்றது பாதின் மறைந்தவன் இது போல் எதிரான பண்புகள் பல அவனுக்கு இருக்கின்றன.
அல்லாஹ் எனும் திருநாமம் அவனது தூய்மையான உள்ளமையைக் குறிக்கின்றது. அல்லாஹ்வை (அவனது உள்ளமையை) அவனது திருநாமங்களையும் பண்புகளையும் கொண்டுதான் அறிய முடியும். அவனது எல்லா திருநாமங்களும் தன்மைகளும் அல்லாஹ் என்ற திருநாமத்திலேயே தங்கி நிற்கின்றன. அல்லாஹ் எனும் திருநாமம் தான் எதார்த்தமான உள்ளமையாகும். அந்தப் பெயர் ஹக்கையும் ((حق கல்கையும்(خلق ) பொதிந்துள்ளது. இந்த திருநாமம்தான் மனிதனில் பூரணமாக ஆகியுள்ளது. அதைக் கொண்டுதான் அருளாளனும் அருள் செய்யப்பட்டவனும் ஒன்றித்துள்ளனர். வெளிரங்கத்தில் இந்த திருநாமத்தை நோட்டமிடுபவன் அல்லாஹ்வுடன் இஸ்மைக் கொண்டு ஆகியிருப்பான். வெளிரங்கத்தைக் கடந்தவன் அல்லாஹ்வுடன் ஸிபாத் எனும் பண்புகளைக் கொண்டு ஆகியிருப்பான். எல்லை கடந்தவன் இஸ்ம் எனும் பெயரையும் ஸிபத் எனும் பண்பையும் கடந்தவனாவான்.
அல்லாஹ் எனும் திருநாமம் மனிதனுக்கு கண்ணாடி போன்றது. அதை நோட்டமிடும் போது மனிதனின் கேள்வி அல்லாஹ்வின் கேள்வி என்பதும் மனிதனின் பார்வை அல்லாஹ்வின் பார்வை என்பதும் மனிதனின் பேச்சு அல்லாஹ்வின் பேச்சு என்பதும் மனிதனின் உயிர் அல்லாஹ்வின் உயிர் என்பதும் மனிதனின் அறிவு அல்லாஹ்வின் அறிவு என்பதும் மனிதனின் நாட்டம் அல்லாஹ்வின் நாட்டம் என்பதும் மனிதனின் சக்தி அல்லாஹ்வின் சக்தி என்பதும் ஞான உதயத்தின் மூலம் தெளிவாகி விடும். இவை அனைத்தும் மனிதனுக்கு இரவலாக கிடைத்தது என்பதும் அல்லாஹ்வுக்கு சொந்தமானது என்பதும் தெளிவாகி விடும். எவர் தன்னில் அல்லாஹ் எனும் திருநாமத்தை அனுபவ ரீதியாக நோட்டமிடுகின்றானோ அவர் அல்லாஹ் என்று அழைப்பவனுக்கு பதில் சொல்வார். அந்த நேரம் அவர் அல்லாஹ் எனும் திருநாமத்தின் வெளிப்பாடாகவே இருப்பார். எவர் தனது இல்லாமை எனும் பண்பைக் கடந்து உள்ளமை எனும் வாஜிபுல் வுஜூதை அடைகின்றாரோ அவர் அல்லாஹ் எனும் திருநாமத்தின் கண்ணாடியாக ஆகிவிடுவார். இந்த நிலையை அடைந்தவரை யாராவது அழைத்தால் அதற்கு அல்லாஹ் பதில் சொல்வான். அவரை யாராவது கோபித்தால் அல்லாஹ் அவருடன் கோபிப்பான். அவரை யாராவது பொருந்திக் கொண்டால் அல்லாஹ் அவரை பொருந்திக் கொள்வான்.
அல்லாஹ் எனும் திருப் பெயர் சகல பரிபூரணங்களினதும் தோற்றமாகும். எந்தவொரு பூரணத்துவமும் அந்த திருப் பெயரிலே உள்ளடங்கியே இருக்கிறது. அல்லாஹ்வுடைய பரிபூரணத்துவத்திற்கு முடிவில்லை. அல்லாஹ் வெளிப்படுத்தியுள்ள சகல பரிபூரணங்களையும் விட மிக வலுப்பமுள்ள மேன்மையான பூரணத் தன்மைகள் அவனிடம் வெளிப்படுத்தப்படாமல் மறைந்துள்ளன. சகல சிருஷ்டிகளும் தாத்திய்யத் எனப்படும் உள்ளார்ந்த அடிப்படையில் காந்தம் இரும்பை கவர்வது போல் அவனை காதல் கொள்வதால் அவன் அல்லாஹ் الله என அழைக்கப்படுகிறான் என சில ஸூபிகள் குறிப்பிடுகின்றனர். இங்கு اله என்ற சொல்லுக்கு عشق காதல் கொண்டான் என்று பொருள் வழங்கப்படுகிறது. சிருஷ்டிகள் அவன் மீது காதல் கொள்வது முதலாம் நிலை தஸ்பீஹ் ஆகும். அந்த சிருஷ்களில் அவன் வெளியாகுவதற்கு அவை இசைந்திருப்பது இரண்டாம் நிலை தஸ்பீஹ் ஆகும். அந்த சிருஷ்களில் அவன் வெளியாகி கல்க் எனும் பெயர் பெற்றிருப்பது மூன்றாம் நிலை தஸ்பீஹ் ஆகும். இவ்வாறு சிருஷ்டிகள் செய்யும் தஸ்பீஹ்களில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு இறை திருநாமத்திற்கும் ஏற்ற வகையிலும் விஷேட தஸ்பீஹ்களை சிருஷ்டிகள் செய்து கொண்டிருக்கின்றன. அவைகளை எல்லையிட்டு கூறிவிட முடியாது.
ஸிபத் என்பது ஒன்றின் பண்பு அல்லது தன்மையைக் குறிக்கின்றது. ஒரு வஸ்துவின் நிலை பற்றிய அறிவை ஏற்படுத்துவதும் அது எப்படியானது என்பதை விபரிக்கக் கூடியதும் ஸிபத் என்று சொல்லப்படுகிறது. ஸிபத் எனும் பண்பை அது தங்கி நி்ற்கும் உள்ளமையை வி்ட்டும் பிரிக்க முடியாது. மிளகாயை விட்டும் காரத்தை பிரிக்க முடியாதது போல. முஹக்கிகீன்கள் எனப்படும் எதார்த்த வாதிகளான ஞானிகளிடத்தில் இறை திருநாமங்கள் தாத்திய்யத் எனப்படும் உள்ளமையோடு தொடர்பான திருநாமங்கள் என்றும் ஸிபாத்திய்யத் எனப்படும் பண்புகளோடு தொடர்பான திருநாமங்கள் என்றும் இரு வகைப்படுகின்றன. அஹது,வாஹிது,பர்த்,ஸமத் போன்ற திருநாமங்கள் தாத்திய்யத் எனப்படும் உள்ளமையோடு தொடர்பான திருநாமங்கள் என்றும் அலீம்,றஹ்மான்,காதிர்,காலிக் போன்ற திருநாமங்கள் ஸிபாதிய்யத் பண்புகளோடு தொடர்பான திருநாமங்கள் என்றும் இறைஞானிகள் குறி்ப்பிடுகின்றனர்.
அல்லாஹ் எனும் திருநாமம் வாஜிபுல் வுஜூத் – உள்ளமை நிச்சயமாகிய பரிபூரண ஹக்கின் தன்மைகளையும் கல்கி்ன் தன்மைகளையும் பொதிந்த தாத்தின் பெயராகும். இறை பண்புகளை எல்லையிட்டு விளங்கிக் கொள்ள முடியாது. ஒரு அடியான் கவ்னிய்யத் எனப்படும் சிருஷ்களின் படித்தரத்தில் இருந்து குத்ஸிய்யத் எனப்படும் தூய படித்தரத்தை அடையும் போது அல்லாஹ் தஆலாவின் உள்ளமைதான் இந்த அடியானின் உள்ளமை என்பதை கஷ்ப் எனப்படும் ஞான உதயத்தின் மூலம் தெளிவாக அறிந்து கொள்வான். ஆனால் அந்த உள்ளமைகளின் பண்புகளின் எதார்த்தத்தை அது எப்படி இருக்குமோ அப்படி அறிந்து கொள்ள முடியாது. அது தேவைக்கேற்ப வெளியாகிக் கொண்டிருக்கின்றது. ஹுலூல் எனும் அல்லாஹ் தஆலா படைப்புகளில் இறங்குதல் என்பதும் இத்திஹாத் எனும் அல்லாஹ் தஆலா படைப்புகளோடு இரண்டறக் கலத்தல் என்பதும் இல்லாமல் நீ அவன்தான் அவன் நீதான் என்பதை ஞான உதயத்தின் மூலம் நீ அறிந்து கொள்வது அவனது உள்ளமையை அறிந்து கொள்வதாக அமையும்.
ஆயினும் அவனது தாத் எனும் உள்ளமைமையையோ ஸிபாத் எனும் பண்புகளையோ பரிபூரணமாக அறிந்து கொள்ள முடியாது.
வுஜூத் எனும் உள்ளமையின் எதார்த்தங்கள் அனைத்தையும் அதன் சகல படித்தரங்களிலும் பேணுவது உலூஹிய்யத் எனப்படுகிறது. இலாஹிய்யத் எனப்படும் தெய்வீகத் தன்மையின் சகல படித்தரங்களையும் கவ்னிய்யத் எனப்படும் சிருஷ்டிகளின் சகல படித்தரங்களையும் உள்ளடக்கியதும் உள்ளமையின் ஒவ்வொரு படித்தரத்திற்கும் ஏற்ற அந்தஸ்தை கொடுப்பதும் உலூஹிய்யத் எனப்படுகிறது. இந்த மர்தபாவின் பெயர் அல்லாஹ் என்பதாகும். இந்தப் பெயர் வாஜிபுல் வுஜூத் – உள்ளமை நிச்சயமாகிய தாத்துக்குரியதாகும். தாத்தின் வெளிப்பாடுகளில் மிக உயர்ந்தது உலூஹிய்யத் எனும் வெளிப்பாடாகும். இந்த உலூஹிய்யத் எனப்படும் வெளிப்பாடு ஏனைய எல்லா வெளிப்பாடுகளினதும் பெயர்கள், பண்புகள் அனைத்தையும் பொதிந்துள்ளது.
உலூஹிய்யத் என்பது கதீம் – பூர்வீகமானவன், ஹதீத்-புதிதானவன், ஹக்-மெய்ப்பொருள், கல்க்-பொய்ப்பொருள், வுஜூத்-உள்ளமை, அதம்-இல்லாமை ஆகிய எதிர் எதிரான தன்மைகளை தன்னகத்தே கொண்டது. உலூஹிய்யத்துடைய நிலையில் ஹக் தஆலா கல்க் எனும் உருவத்தில், சிருஷ்களின் தோற்றத்தில் வெளியாகின்றான்.
அல்லாஹ் முதலில் இந்த சிருஷ்டிகளுக்கு செய்த பேரருள் அந்த சிருஷ்டிகளை அவன் தன்னில் இருந்து வெளிப்படுத்தியதாகும். இதனால் அவனது வெளிப்பாடு சகல சிருஷ்களிலும் ஊடுருவியுள்ளது. சிருஷ்டியின் ஒவ்வொரு பகுதியிலும் அவனது கமால் எனும் பூரணத்துவம் வெளியாகியுள்ளது. அவன் இவ்வாறு பல வெளிப்பாடுகளாக வெளியானதால் அவன் பலதாகிவிடவில்லை. சகல சிருஷ்களிலும் வெளியாகியுள்ள அவன் ஒருவனே! அவனது தாத்தையும் பண்புகளையும் பொறுத்து அவன் அஹத் எனும் ஏகனே! அவன் தன்னில் நின்றும் சிருஷ்டிகளை படைத்ததனால் சிருஷ்டிகள் அவனிலிருந்து பிரிந்து விடவில்லை. இந்த சிருஷ்டிகளுக்கு சிருஷ்டி எனும் பெயர் கூட தற்காலிகமானதே தவிர நிரந்தரமானதல்ல. கல்க் எனும் பெயர் இரவலானதே தவிர சொந்தமானதல்ல. ஹக்காகிய அல்லாஹ் தஆலாவே இந்த சிருஷ்டியின் மூலப் பொருளாவான்.
{ وَمَا خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا إِلَّا بِالْحَقِّ} [الحجر: 85]
என்று இதனையே திருமறையில் அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். சிருஷ்டி ஐஸ்கட்டி போன்றது. ஹக் தஆலா அந்த ஐஸ்கட்டியின் மூலப்பொருளான தண்ணீரைப் போன்றவன். ஐஸ்கட்டிக்கு ஐஸ்கட்டி எனும் பெயர் இடையில் வந்தது, இரவலானது. தண்ணீர் எனும் பெயரே நிலையானதும் உண்மையானதுமாகும்.
கல்க் எனும் சிருஷ்டிக்கு கல்க் எனும்பெயர் இரவலானதே தவிர சொந்தமானதல்ல ஹக்காகிய அல்லாஹ் எனும் பெயரே நிலையானதும் உண்மையானதுமாகும்.