தொடர் – 02
உதாரணம் : 2 -தோட்டம்
“தோட்டம்” என்பது பல்வேறு மரம், செடி, கொடிகளை கொண்ட ஒர் இடத்தின் பெயராகும். இச் சொல்லுக்குள் எல்லாவிதமான தாவர வர்க்கங்களும் அடங்கிவிடும். தோட்டத்திலுள்ள தாவரங்கள் தோட்டத்துக்கு வேறானவையல்ல. மா, பலா, வாழை போன்ற தாவர வர்க்கத்தின் மொத்த தொகுதியே தோட்டமாதலால் இவை எதுவும் தோட்டத்துக்கு வேறானதாக எங்ஙகனம் ஆக முடியும்? எனவே அவை தோட்டத்துக்கு வேறானவையல்ல!
ஆயினும், தோட்டத்திலுள்ள மா மரம், வாழை மரத்திற்கு வேறானதுதான். மாங்காய், தேங்காய்க்கு வேறானதுதான். இனிப்பு, புளிப்புக்கு வேறானதுதான். இவை யாவும் தோட்டத்திலிருந்து வெளியாகுவதால் இவைகளுக்கிடையே வேறுபாடு காணப்பட்டாலும், இவற்றில் எதுவும் தோட்டத்துக்கு வேறாகிவிட முடியாது.
எனவே, “தோட்டம் ஒன்றென்று” நம்புவதென்றால், அதிலுள்ள சகல வஸ்த்துக்களும், தன்மைகளும் ஒன்றென்று நம்புவதேயாகும். “அல்லாஹ் ஒருவன்” என நம்புவதின் கருத்தாவது, சகல வஸ்த்துக்களையும், தன்மைகளையும் உள்ளடக்கிய பிரம்மம் (தாத்) ஒன்றென்று நம்புவதேயாகும்.
இதுவரை கூறிய விவரத்தின் மூலம், பிரம்மத்தின் “அல்லாஹ்” என்ற பெயர் எதையெல்லாம் உள்ளடக்கியுள்ளது என்பதையும், அல்லாஹ் ஒருவன் என்பதின் அர்த்தம் பிரம்மம் (தாத்) ஒன்றென்று நம்புவதும்தான் என்பதும் தெளிவாகிவிட்டது.
தலை, கண், காது போன்ற எல்லா உறுப்புக்களையும் உள்ளடக்கிய “தாத்” முஹம்மத் என்ற பெயராலும்; மா மரம், தென்னை மரம், வாழை மரம் போன்ற எல்லா தாவர வர்க்கங்களையும் உள்ளடக்கிய “தாத்” தோட்டம் என்ற பெயராலும் அழைக்கப்படுவது போல், வானம், பூமி, மலை, கடல் போன்ற சகல வஸ்த்துக்களையும் உள்ளடக்கிய “தாத்” அல்லாஹ் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.
தலை, கண், காது என்பன முஹம்மதுவுக்கும்; வாழை, பலா, மா, தென்னை ஆகியன தோட்டத்துக்கும் வேறானவைகள் அல்ல. அதே போல் வானம், பூமி, மலை, கடல் போன்றவையும் அவற்றிலுள்ளவைகளும் “அல்லாஹ்” என்ற இப் பெயரைப் பெற்ற அப் பிரம்மத்திற்கு- “தாத்”துக்கு வேறானவையல்ல.
மேற்குறித்த விவரங்களுக்கு திருக்குர்ஆனிலும், திரு நபீயின் நிறை மொழிகளிலும், ஞான வள்ளல்களின் நூற்களிலும் ஆதாரங்கள் உள்ளன.
எனவே, எனது வாதம் பிழை என்பதற்கு சகோதரர் மனசூர் எழுதிக்காட்டிய “இக்லாஸ்” அத்தியாயத்தின் முதல் வசனமான “அல்லாஹ் ஏகன் (என்று) சொல்லுங்கள்” என்பதில் எந்த ஆதாரமும் இல்லை என்பது தெளிவாகிவிட்டது.
“பிரம்மம்” என்பது எதையெதையெல்லாம உள்ளடக்கியது என்பதற்கும், பிரம்மத்தின் பெயர்தான் “அல்லாஹ்” என்பதற்கும் நான் எழுதிய விளக்கம் பிழை என்று சகோதரர் மனசூர் கருதினால் அதற்கான சரியான விடையை விளக்கத்தை அவர் எழுதட்டும்.
– மூன்று சொற்கள் –
அல்லாஹ் ஏகன் என்ற அர்த்தத்தை தரக்கூடிய வசனத்தில், “குல்” (சொல்லுங்கள்) என்ற சொல்லை தவிர்த்து மேலும் மூன்று சொற்கள் இருக்கின்றன. அவையாவன ‘ஹூ’ (அவன்). “அல்லாஹ்” (அல்லாஹ்), “அஹத்” (ஏகன்) என்பனவாகும். இம்மூன்று சொற்களும் சேர்ந்துதான் “அல்லாஹ் ஏகன்” என்கிற அர்த்தத்தை தருகின்றன.
இம்மூன்றையும் தனித்தனியே நோக்கினால் “அவன் பிரம்மம் ஏகன்” என்று பொருள் வரும்.
“அல்லாஹ் ஏகன்” என்ற அர்த்தம் உண்டாவதற்கு “அல்லாஹ் அஹத்” என்றால் மட்டும் போதும். “ஹூ” (அவன்) என்ற சொல் அங்கு அவசியமில்லை. “குல் அல்லாஹ் அஹத்” என்றாலே “சொல்லுங்கள், அல்லாஹ் ஏகன்”என்பது தெளிவாகிவிடும்.
“ஹூ” என்ற சொல் இல்லாதபோது பெறப்படும் பொருளேதான், அது உள்ளபோதும் கிடைக்கிறதேயல்லாமல் அச்சொல்லைக் கொண்டு மேலதிக பொருள் ஏதும் கிடைப்பதாயில்லை. ஆனால், அர்த்தமற்ற ஒரு சொல்தானும் திருமறையில் இடம்பெறவில்லை.
அறபு மொழியில் இரு எழுத்துக்களிலான “ஹூ” என்ற சொல் திருமறையில் அர்த்தமின்றி இடம்பெறவில்லை. அதில் ஆழமான அர்த்தங்கள் உள்ளன. அதுபற்றி “இன்ஸான் காமில்” (சம்பூரண மனிதன்) நூலாசிரியர் இமாம் அப்துல் கரீம் அல்ஜீலி றஹிமஹுல்லாஹ் அவர்கள் விளக்கமாகக் கூறியுள்ளார்கள்.
“ஹூ” என்பது அது. அவன் என்ற அர்த்தம் தரக் கூடிய ஒருசொல். இது இறைவனின் திருநாமங்களுள் ஒன்றாகவும் கணிக்கப்பட்டுள்ளது. அவனது தொண்ணூற்றியொன்பது திருநாமங்களுள் “ஹூ” என்பதும் ஒன்று. அதேபோல் அதையடுத்த “அல்லாஹ்”, “அஹத்” என்பனவைகளும் அவனுடைய திருநாமங்கள்தான்.
மூன்று திருப்பெயர்கள் பிரிவில்லாமல் அவ்வசனத்தில் அடுத்தடுத்து இடம்பெற்றிருப்பதிலிருந்து எல்லாமாய் வெளியாகிருப்பது பிரம்மம் “தாத்”தான் என்பதற்கு போதிய ஆதாரம் உண்டென்று இமாம் பக்றுத்தீன் அர்-றாஸீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம் : லவாமிஉல் பையினாத். பக்.231) விரிவையஞ்சி அதன் விவரத்தை கூறாமல் விட்டேன்.
இதுவரை கூறியதிலிருந்து, மேற்படி “இக்லாஸ்” அத்தியாயத்துள் முதலாம் வசனத்தில் எனது வாதம் பிழை என்பதற்கு எதுவித ஆதாரமும் இல்லை என்பதும் எனினும் அது ‘வஹ்ததுல் வுஜூத்’ என்னும் அத்வைத ஞானத்தையே உணர்த்துகின்றதென்பதும் தெளிவாகிவிட்டது.
2.அல்லாஹுஸ் ஸமத்
“இறைவன் தேவையற்றவன்”
இனி, இவ்வத்தியாயத்தின் இரண்டாவது வசனத்தில், என் வாதம் பிழை என்பதற்கு ஆதாரம் உண்டா? அல்லது சகோதரர் மனசூர் அவர்களின் வாதம் பிழை என்பதற்கு ஆதாரம் உண்டா? என்பதை ஆராய்வோம்.
“அஸ்ஸமத்” என்ற சொல்லுக்கு (திருநாமத்துக்கு) இமாம் பக்றுத்தீன் அர்-றாஸீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் “லவாமிஉல் பையினாத்” என்ற நூலில் 235,236ம் பக்கங்களில் 34 வகையான அர்த்தங்களை எழுதியுள்ளார்கள். அவை அனைத்தையும் எடுத்து ஆராய முடியாது. ஆகையால் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் ஒரு அர்த்தத்தை வைத்தே நாம் மேலே தொடர்வோம்.
“அஸ்ஸமத்” தேவையற்றவன் அதாவது பிரம்மம் “தாத்” எந்தத்தேவையும் இல்லாதது. சர்வ சிருஷ்டிகளும் அதன்பால் தேவையானதும், அது எதன்பாலும் தேவையாகாததுமாகும். இதுவே அச்சொல்லின் அர்த்தம்.
இவ்வசனத்திலும் எனது வாதம் பிழை என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. சகோதரர் மன்சூர் அவர்கள் எனது வாதம் பிழை என்பதற்கு இவ்வசனத்தை ஆதாரம் காட்டியுள்ளதால் இதற்கும் சிறுவிளக்கம் கூறி அடுத்த வசனத்தைத் தொடர்வேன்.
காரணம்
பிரம்மம் “தாத்” தேவையற்றது என்றால் – அதற்கான தர்க்க ரீதியான காரணம் என்ன?
“தேவையாகுதல்” என்பது சிருஷ்டியின் தன்மை. இத்தன்மை சிருஷ்டி கர்த்தாவான பிரம்மத்தில் உண்டு எனக்கொள்வதால் சிருஷ்டியின் தன்மை பிரம்மத்தில் உண்டாகிவிடுகிறது. இதனால் பிரம்மம் சிருஷ்டிக்கு ஒப்பாகிவிடுகிறது. ஆகையால் “தேவையாகுதல்” பிரம்மத்துக்கு இல்லை. எனவேதான், இறைவன் தேவையற்றவனாகி விட்டான். இவ்வாறு சிலர் கூறுகின்றனர்.
இறைவன் தேவையற்றவன் என்பதற்கு இது சரியான காரணமல்ல. ஏனெனில் தேவையாவதால் சிருஷ்டிகளுக்கு ஒப்பு ஏற்படுகின்றது என்றவாதம் பிழையானது ஒப்பு நிகர் இல்லாத ஒருவன் ஒப்பாகுவது நிகராவது எங்ஙனம்?
மேலும், இதைக் காரணமாக வலியிறுத்துவதானால் அவனில் சிருஷ்டிகளின் தன்மை உண்டாகிவிடக்கூடாதென்பதற்காகவே அவன் தேவையற்றவனாக இருக்கிறானேயல்லாமல், அவனுக்கு தேவைகளும் உண்டு என்ற அர்த்தம் வந்துவிடும். தேவையிருந்தும், சிருஷ்டிகளுடன் ஒப்பு ஏற்பட்டுவிடும் என்றதனால் தேவையாகாமல் தேவையற்றவனாக அவன் இருக்கிறான் என்ற கருத்தும் ஏற்பட்டுவிடும்.
“அல்லாஹ்” (எனப்படும் அப்பிரம்மம்) தேவையாகாமலிருப்பது மேற்கூறியவாறு சிருஷ்டிகளுக்கு ஒப்பாகிவிட நேரிடும் சிருஷ்டிகளின் தன்மை அவனில் வந்துவிடும் என்பதற்காக அல்ல. தேவை என்பது அவனைப் பொறுத்து அசாத்தியம் என்பதினாலேயேயாகும்.
தேவையாகுதல் என்பது பிரம்மத்துக்கு அசாத்தியம் என்பதற்கு தர்க்கரீதியான பதில் அத்வைத ஞானம்தரும் விளக்கம் ஒன்றேயாகும். இதை இரு பிரிவுகளில் விளக்கி எழுதுகிறேன்.
1.எல்லாம் உள்ளவன்
எல்லாம் உள்ள ஒருவனுக்கு தேவை இருக்காது. ஏதேனும் ஒன்று இல்லாதவன்தான் அதன்பால் தேவையாகுவான். “அல்லாஹ்” எல்லாம் உள்ளவன். தனக்குள்ளவைகளைப்பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான்.
“வானத்திலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை” (ஆலஇம்றான் : 1௦௦09)
“கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை” (அல்பகறா : 115)
இவ்வாறு அனைத்தும் அவனுக்கே சொந்தமாக இருக்கையில் அவனுக்கு என்ன தேவை?
வானத்திலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே சொந்தம்! கிழக்கும் மேற்கும் அவனுக்கே சொந்தம் என்றால் கிழக்கிலும் மேற்கிலும் உள்ளவைகள் வேறு யாருக்குச் சொந்தமானவை? நிலத்திலுள்ளவை நிலச்சொந்தக்காரனுக்கன்றி வேறு யாருக்கு உரியன?
எனவே, அனைத்தும் அவனுக்கே சொந்தமாயிருப்பதன் காரணமாக அவனுக்குத் தேவையில்லை. யாவும் அவனுக்குச் சொந்தமாக இருப்பதுதான், அவன் தேவையற்றவன் எனபதற்குரிய காரணமாகும்.
“அஸ்ஸமத்” (தேவையற்றவன்) என்பதின் அர்த்தம் “எல்லாம் உள்ளவன்” என்பதாகும். எல்லாம் உள்ளவன் என்றால் உருவமும் உள்ளவன் தானே? அனைத்தும் என்பதில் “உருவம்” அடங்கவில்லையா? அதற்கு மாத்திரம் என்ன விதிவிலக்கா?
அல்லாஹ்வுக்கு அனைத்தும் சொந்தம் என்பது, முகம்மத் என்பவருக்கு தோட்டமும், அஹ்மத் எனபவருக்கு காரும் சொந்தமாயிருப்பது போன்ற விட்டுப்பிரிந்த சொந்தம் அல்ல. முகம்மதுக்கு கண்ணும், காதும், மிளகாய்க்கு உறைப்பும் சொந்தமாயிருப்பது போன்ற தன்னளவிலான (தற்கிழமை) சொந்தமேயாகும்.
தன்னைவிட்டும் பிரிந்த சொந்தமல்ல (பிறிதின்கிழமை) இறைவனின் சொந்தம். விட்டுப்பிரிக்க முடியாத பண்பை (சொந்தத்தை) யுடையவன் இறைவன். பிரம்மத்திற்கு பிரபஞ்சம் விட்டுப் பிரியாத-பிரிக்க முடியாத சொந்தமாகும். இதுபற்றி மிக விரிவான விவரம் உண்டு. விரிவை அஞ்சித் தவிர்த்தேன்.
மேற்கூறிய விவரத்தின் மூலம், இறைவன் அனைத்தும் உள்ளவனாய் இருப்பதனாலேயே அவன் தேவையற்றவனாக இருக்கிறான் என்பதும், சிருஷ்டிகளின் தன்மை தன்னில் உண்டாகிவிடு்ம் என்பதற்காக அவன் தேவையற்றவனாக இருக்கிறான் என சிலர் கூறுவது தர்க்க ரீதியான விளக்கமல்ல என்பது தெளிவாகிவிட்டது. இனி, அடுத்த பிரிவை நோக்குவோம்.
2.எல்லாம் அவன்
“இறைவன் தேவையற்றவன்” என்பதற்கான இரண்டாவது காரணம் என்னவெனில், “தேவையாகுதல்” என்பதற்கு இரு வஸ்த்துக்கள் தேவைப்படும். ஒன்று “முஹ்தாஜ்” தேவையாகும் வஸ்த்து. மற்றது “முஹ்தாஜ் இலைஹி” தேவையாக்கப்பட்ட வஸத்து. முகம்மத் என்பவருக்கு பணம் தேவையென்றால், முகம்மத் தேவையாகும் வஸ்த்துவாகும், பணம் தேவையாக்கப்பட்ட வஸ்த்துவாகவும் இருக்கும். இவ்விரு வஸ்த்துக்களும் “தேவையாகுதல்” என்பதற்கு அவசியமானவைகளே!
அல்லாஹ் தேவையாகிறான் என வைத்துக் கொண்டால் அவனுக்கு தேவையாக்கப்பட்ட (முஹ்தாஜ் இலைஹி) வஸ்த்து எது? எதனளவில் தேவையானான்? இவ்வினாக்களின் விடைகளிலே அவன் தேவையற்றவன் என்பதற்கான தர்க்கரீதியான காரணம் உண்டு.
“அல்லாஹ்”(பிரம்மம்)தான் பிரபஞ்சமாக வெளியாகி இருப்பதால், அவனல்லாத (அப்பிரம்மத்துக்கு வேறான) ஒன்றும் இல்லவே இல்லை என்பது, ஏற்கெனவே எனது விளக்கங்களின் மூலம் நிரூபணமான ஒன்றாகும்.
எனவே, அனைத்தையும் உள்ளடக்கிய பிரபஞ்சமாக வெளியான அல்லாஹ்வைப் (பிரம்மத்தைப்) பொறுத்து “தேவையாகுதல்” என்ற பேச்சுக்கே இடமில்லாற் போய்விட்டது. “தேவையாகுதல்” என்பதற்கு இரண்டு வஸ்த்துக்கள் வேண்டும் என்பதை மேலே கண்டோம். இரண்டென்பதே இல்லை என்றால், “தேவையாகுதல்” என்பதும் இல்லைதானே?
மேற்குறிப்பிட்ட ”எல்லாம் உள்ளவன்”, “எல்லாம் அவன்” என்ற இரு காரணங்களால்தான் இறைவன் தேவையற்றவனாக இருக்கிறான். தவிர அவன் தேவையாகுவதால் சிருஷ்டிக்கு ஒப்பாகி விடுகிறான் என்பது காரணமல்ல. அவன் நிகரற்றவன், ஒப்பற்றவன் என்பது இறைவனின் வாக்கு.
சகோதரர் மன்சூர் அவர்கள் எடுத்துக் காட்டிய ஆதாரங்களுள் ஒரு வசனமான இதுவும் எனது “எல்லாம் அவன்” என்ற தத்துவத்தையே உறுதிப்படுத்துகின்றது என்பதும், இவ் வசனமும் அவரது வாதத்தை மறுத்துரைக்கிறது என்பதும் இதிலிருந்து தெளிவாகிவிட்டதல்லவா?
இனி, அவ்வத்தியாயத்தின் மூன்றாம் வசனமாகிய “அவன் பெறவில்லை: அவனைப் பெறவுமில்லை” என்பதை ஆராய்வோம். அதிலாவது சகோதரர் மன்சூர் அவர்கள் (மறுத்து எழுதிய) அவரது வாதத்துக்கு ஆதாரம் உண்டா என்று தேடிப்பார்ப்போம்.