Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்“ஜத்பு” எனும் ஆன்மீக நிலை

“ஜத்பு” எனும் ஆன்மீக நிலை

جَذْبَةٌ مِنْ جَذَبَاتِ الرَّحْمنِ تُوَازِيْ عَمَلَ الثَّقَلَيْنِ

عوارف المعارف فى هامش الإحياء – ٢/٩١

அல்லாஹ்வின் இழுத்தல்களில் ஓர் இழுத்தல் மனு, ஜின்கள் செய்கின்ற நல்லமல்களுக்கு நிகரானதாகும்.

அவாரிபுல் மஆரிப் ஹாமிஷ் இஹ்யா
பாகம் – 02
பக்கம் – 91

ஒரு நல்லடியானுக்கு ஏற்படுகின்ற ஆன்மீக நிலைகளில் “ஜத்பு” என்பதும் ஒரு நிலைதான்.

“ஜத்பு” என்ற அறபுச் சொல்லுக்கு இழுத்தல் என்று பொருள் வரும். 
அதாவது அல்லாஹ் ஆன்மீக வழி நடக்கும் ஒருவனை தன்பக்கம் அழைத்து அவனுக்கு ஆன்மீக உயர்வு வழங்க விரும்பினால் அவனைத் தன்பக்கம் இழுப்பான். இவ்வாறு இழுக்கப்பட்டவர் “மஜ்தூப்” என்று அழைக்கப்படுவார்.

அல்லாஹ்வால் இழுக்கப்பட்ட ஒருவர் இழுக்கப்பட்ட நேரத்திலிருந்து  சில நிமிடங்கள் மட்டுமே அதே நிலையில் இருந்து அதன் பின் விடுபடுவதும் உண்டு. இன்னும் சிலர் பல மணி நேரங்கள் அதே நிலையில் இருந்தும், இன்னும் சிலர் பல நாட்கள் அதே நிலையில் இருந்தும், இன்னும் சிலர் பலமாதங்கள், இன்னும் சிலர் பல வருடங்கள் அதே நிலையில் இருந்தும் விடுபடுவதும் உண்டு. இன்னும் சிலர் இழுக்கப்பட்ட நேரம் முதல் மரணிக்கும் வரை அதே நிலையில் இருப்பதும் உண்டு.

ஆகையால் இழுக்கப்பட்ட ஒருவர் அதே நிலையில் எவ்வளவு காலம் இருப்பார் என்பது திட்டமாகச் சொல்ல முடியாது.

“மஜ்தூப்” என்பவர் “ஷரீஆ”வின் சட்டங்களில் “மஜ்னூன்” பைத்தியக்காரன் போன்றவர்தான். அவருக்கு ஏவல், விலக்கல் கிடையாது. அவரை மற்றவர்கள் கண்ணியப்படுத்தலாம். அவருக்கு உதவி உபகாரம் செய்யலாம். ஆயினும் மார்க்க விடயத்தில் அவரைப் பின்பற்றுதல் கூடாது அதேபோல் அவரின் நடவடிக்கைகளுக்காக அவரைத் துன்புறுத்துவதும், அவருக்கு தொல்லை கொடுப்பதும் கூடாது. 
அறபு மொழிச் சொற்களில் ஜீம், நூன் இரு எழுத்துக்களும் வேறு எழுத்துக்களால் பிரிக்கப்படாமல் சேர்ந்து வருமாயின் அது அநேகமாக மறைதல் என்ற பொருள் உள்ளதாகவே இருக்கும்.

உதாரணமாக “ஜுனூன்” பைத்தியம், “ஜின்” ஏவல், விலக்களுக்குட்பட்ட ஓர் உயிரினம், “ஜன்னத்” சுவர்க்கம், “ஜனீன்” கற்பாசனத்தில் உள்ள குழந்தை , “ஜனாபத்” முழுக்கு என்பன போன்று. 
“ஜத்ப்” உடைய நிலை “மஹ்வு” உடைய நிலை என்றும் சொல்லப்படும். தெளிவற்ற நிலை என்று பொருள் வரும். இதன் எதிர்ச் சொல் “ஸஹ்வு” என்று வரும். தெளிவு நிலை என்று பொருள் வரும்.

ஒருவர் “மஜ்தூப்” ஆன பிறகு “விலாயத் என்ற ஒலித்தனம் பெறுவதும் உண்டு.  இன்னொருவர் “மஜ்தூப்” ஆகாமல் “விலாயத்” ஒலித்தனம் பெறுவதும் உண்டு.

இக்காலத்தில் போலி “மஜ்தூப்”களும், போலி வலீமாரும் மலிந்து போய் விட்டார்கள்.

ஒருவர் தனது அறிவுத் திறமை கொண்டும், அனுபவத்திறமை கொண்டும், மனோ தத்துவ அறிவு கொண்டும் ஏதாவது ஒரு  விடயத்தைச் சொல்லி அவர் சொன்னது போன்றே காரியமும் நிகழ்ந்து விட்டால் அவரை அதோடு சம்மந்தப்பட்டவர்கள் பெரிய மனிதன் என்று நினைக்கின்றார்கள். அல்லது கதைக்கின்றார்கள். இதை அவர் அறிந்து கொண்டால் போதும். அவர் அன்று முதல் தன்னை ஒரு “குத்புஸ்ஸமான்” போல் பாவனை செய்யத் தொடங்கி விடுகிறார்.  அதோடு தன்னை இன்னும் பலப்படுத்திக் கொள்வதற்காக மந்திரம் கால் மதி முக்கால் என்று சொல்லப்படுவது போல் தந்திரங்களைக் கையாண்டு மேலும் தன்னை பலப்படுத்திக் கொள்கிறார். அவரின் இரகசியங்களை அறிந்த அவரின் மிக நெருங்கிய நண்பர்கள், என்ன ஹபீப் குத்புஸ்ஸமானாகி விடுவீர்கள் போல் தெரிகிறதே என்று சொன்னால்  لَا تَحْصُلُ الدُّنْيَا اِلّا بِحِيْلَةٍ  தந்திரம், மந்திரம் கொண்டுதான் இந்த “துன்யா”வை அடையலாம் என்று அவர்களின் காதுக்குள் ஊதி விடுகிறார்.

அண்மைக்காலத்தில் “தேங்காய் உருட்டி குத்பு” என்று ஒருவர் வெளிச்சம் போடத் தொடங்கினார். அறிவில்லாத மக்கள் அவரை ஒரு “குத்பு” என்று எண்ணிக் கொண்டு அவரிடம் போவதும்,வருவதுமாக இருந்தார்கள்.

இதையறிந்த அவர் “றாதிப்”ஒன்றையும் ஆரம்பித்தார். சில நாட்களின் பின் எல்லாம் ஓய்ந்து போய் விட்டன. தற்போது தேங்காய் உருட்டுவதையும் நிறுத்திக் கொண்டார்.

இதற்கு காரணம் பௌத்த மதத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் TV மூலம் தேங்காய் உருட்டிக் காட்டியதேயாகும்.

எனவே போலி “மஜ்தூப்”களும், போலி அவ்லியாஉகளும் மலிந்து போயுள்ள இக்கால கட்டத்தில் இவர்களைக் கண்மூடிக் கொண்டு பின் பற்றாமல் இனங்கண்டு செயல்பட வேண்டும்.

தலைப்பில் எழுதிய தத்துவத்தின் படி சிறிய அளவிலேனும் “ஜத்பு” நிலை ஏற்படுவது பெரிய வணக்கம் என்பதை அறிந்து அந்த நிலையை அடைய முயற்சிப்போம். போலிகள் விடயத்தில் எச்சரிக்கையாக இருப்போம்.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments