ஆக்கம் – அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ்
A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ,பஹ்ஜீ அவர்கள்
—————————————————————————
اَللهُ مَوْجُوْدٌ وَالْخَلْقُ مَفْقُوْدٌ
அல்லாஹ்வுக்கு “வாஜிப்” ஆன “ஸிபாத்” தனன்மைகள் இருபது. “முஸ்தஹீல்” ஆன தன்மைகள் இருபது. “ஜாயிஸ்”ஆன தன்மை ஒன்று.
அவனுக்கு “வாஜிப்”ஆன தன்மைகள் என்றால் அவன் செய்வதற்கு அவனுக்கு கடமையான தன்மைகள் என்று கருத்துக் கொள்ளக் கூடாது. அவ்வாறு கொண்டால் அவனுக்கு யார் எதை கடமையாக்கினார்கள் என்று பல கேள்விகள் தோன்றும். இவ்வாறு கேள்வி கேட்பது குதர்க்கவாதிகளின் பண்பாகும்.
அவனுக்கு “வாஜிப்”ஆன தன்மைகள் என்றால் அவனில் அவசியம் இருக்க வேண்டிய தன்மைகள் என்று கருத்துக் கொள்ள வேண்டும்.
அவனுக்கு “முஸ்தஹீல்” ஆன தன்மைகள் என்றால் அவனில் அறவே எக்காரணம் கொண்டும் இருக்க முடியாத தன்மைகளாகும்.
அவனுக்கு “ஜாயிஸ்” ஆன தன்மைகள் என்றால் அவன் விரும்புவதை செய்வதும், விரும்பாததை செய்யாமல் விடுவதுமாகும்.
எல்லாம் சேர்த்து 41 தன்மைகள் அவனுக்கு உண்டு.
அவனில் அவசியம் இருக்க வேண்டிய தன்மைகளில் மிகப் பிரதானமானது “வுஜூத்” என்ற உள்ளமையாகும்.
எத்தன்மைகள் அவனில் அவசியம் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளதோ அத் தன்மைகள் யாவும் அவனில் இருக்க வேண்டும். இத்தன்மைகளுக்கு எதிரான எத்தன்மையும் அவனில் இருக்க முடியாது. இருப்பதாக நம்பவும் கூடாது.
உதாரணமாக “வுஜூத்” என்ற உள்ளமை அவனில் அவசியம் இருக்க வேண்டிய ஒன்றாகும். இது அவனில் அவசியம் இருக்க வேண்டியதென்றால் இது சிருட்டியில் இருப்பது கூடாது. அல்லது முடியாது. அதாவது “வுஜூத்” என்ற சொல்லுக்கு எதிரான “அதம்” இன்மை அல்லது இல்லாமை என்பது அவனில் இருக்க முடியாது. அதேபோல் அது “அதம்” என்பது நிச்சயமாக சிருட்டியில் இருக்க வேண்டும். அது நிச்சயமாக சிருட்டியில் இருக்க வேண்டும் என்ற கூற்றின் கருத்து என்ன? அது இல்லாமல் இருக்க வேண்டும். சிருட்டிக்கு “வுஜூத்” என்ற உள்ளமை கிடையாது. இருக்கவும் கூடாது. முடியாது. சிருட்டிக்கு “அதம்” இல்லாமை அல்லது இன்மை அவசியம் என்பதற்கு இவ் ஆதாரம் ஒன்று மட்டுமே போதும்.
சிருட்டி என்பது சென்ற காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்று சொல்லப்படுகின்ற முக்காலத்திலும் இல்லாததேயாகும்.
இதே கருத்தையே ஷாதுலிய்யா தரீகாவின் தாபகர் அல் குத்புல் அக்பர் அபுல் ஹஸன் அலீ அஷ் ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள். اَللهُ وَاجِبُ الْوُجُوْدِ وَمَا سِوَاهُ مَفْقُوْدٌ அல்லாஹ் மட்டுமே உள்ளான். அவன் தவிர வேறொன்றுமில்லை. அதாவது சிருட்டி என்பதே இல்லை என்று திட்டமாகவும், தெளிவாகவும் கூறியுள்ளார்கள்.
இதே வசனத்தையே ஷாதுலிய்யா தரீகாவைச் சேர்ந்தவர்கள் “வளீபா – யாகூதிய்யா” ஓதும் போதெல்லாம் ஓதுகிறார்கள். நாம் இவ்வாறு ஷாதுலீ நாயகம் சொல்லியுள்ளார்கள் என்று கூறினால் அதற்கு அர்த்தம் வேறு என்று சொல்கின்றார்கள். அந்த அர்த்தம் எது? அதை நீங்கள் சொல்லுங்கள் என்றால் ஊமையாகிவிடுகிறார்கள். ஆப்பிழுத்த குரங்காகும் நிலை தமக்கு ஏற்பட்டுவிடுமென்று அஞ்சுகிறார்கள் போலும். “ஷாதுலிய்யா கலீபதுல் குலபா” அவர்களிடம் பல தரம் நாங்கள் கேட்டும் அவர் பதில் தரவில்லை. அவர்தான் ஊமையாகிப் போனாலும் ஏனைய கலீபாக்கள் எங்கே? அவர்களுமா அவர் போலாகிவிட்டார்கள்? ஸுப்ஹானல்லாஹ்!
அபுல் ஹஸன் அலி அஷ் ஷாதுலீ நாயகம் அதோடு நின்றுவிடவில்லை. இதோ பின்வருமாறும் கூறியுள்ளார்கள்.
قَالَ الشَّيْخُ أَبُو الْحَسَنْ عَلِيّ الشَّاذُلِيْ رَضِيَ الله تَعَالَى عَنْهُ (قَدْ مَحَقَ الْحَقُّ تَعَالَى جَمِيْعَ الْأَغْيَارِ بِقَوْلِهِ هُوَ الْأَوَّلُ وَالْآخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ، فَقِيْلَ لَهُ فَأَيْنَ الْخَلْقُ؟ فَقَالَ مَوْجُوْدُوْنَ وَلَكِنْ حُكْمُهُمْ مَعَ الْحَقِّ تَعَالَى كَالْأَنَابِيْبِ الَّتِيْ فِى كُوَّةِ الشَّمْسِ تَرَاهَا صَاعِدَةً هَابِطَةً ، فَإِذَا قَبَضْتَ عَلَيْهَا لَا تَرَاهَا، فَهِيَ مَوْجُوْدَةٌ فِى الشُّهُوْدِ مَفْقُوْدَةٌ فِى الْوُجُوْدِ) (اليواقيت والجواهر ، ج الأول، ص 65 )
(அல்லாஹ் திருக்குர்ஆனில் முந்தினவனும் அவனே, பிந்தினவனும் அவனே, வெளியானவனும் அவனே, உள்ளானவனும் அவனே என்ற தனது சொல் கொண்டு (தனக்கு படைப்புக்கள் வேறானவை) என்பதை அழித்துவிட்டான் என்று கூறினார்கள். அவ்வாறாயின் படைப்பு எங்கே என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் ஆம் அது உள்ளது. ஆயினும் அது வீடுகளின் கூரையில் உள்ள துவாரம் வழியாக சூரியனின் சுடர் – வெளிச்சம் ஒழு குழாய் – பட்டை வழியாக கீழே வரும் போது அந்த வெளிச்சத்தில் கீழே இறங்குவதும், மேலே ஏறுவதும் போல கண்ணுக்குத் தெரிகின்றது போன்றதாகும். நீ அதை கையால் பிடித்தால் அது இருக்காது. அது பார்வைக்கு மட்டும் தெரியுமேயன்றி எதார்த்தத்தில் எப்பொருளாயும் இருக்காது) என்று கூறினார்கள்.
ஷாதுலீ நாயகம் சொல்லியுள்ள தத்துவத்தின் கருத்து என்னவெனில் அல்லாஹ்வுக்கு படைப்பு வேறானதென்ற தவறான கருத்தை முந்தினவனும் அவனே, பிந்தினவனும் அவனே, வெளியானவனும் அவனே, உள்ளானவனும் அவனே என்ற திருமறை வசனத்தைக் கொண்டு அழித்துவிட்டான் என்பதாகும். அதோடு சிருட்டி என்பது பார்வையில் மட்டும் உள்ளதேயன்றி எதார்த்தத்தில் அது இல்லை. அதற்கு தனியான உள்ளமை இல்லை என்பதுமாகும்.
ஷாதுலீ நாயகம் சொல்லியுள்ள இதே கருத்தை (சிருட்டி பார்வையில் மட்டும் உள்ளதேயன்றி எதார்த்தத்தில் உள்ளதல்ல) அல்லாஹ் திருக்குர்ஆனிலும், நபீகட்கரசர் தங்களின் திரு மொழிகளிலும், இறை ஞானிகள் தமது ஞான நூல்களிலும் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.
எனினும் “வஹம்” என்ற பேதமையால் சூழப்பட்ட மனிதன் இதை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றான். இதற்குக் காரணம் அவனைச் சூழ்ந்துள்ள “வஹ்ம” என்ற திரைகளேதான்.
بين الرب وعبده سبعون حجابا
அல்லாஹ்வுக்கும், அவனின் அடியானுக்குமிடையில் எழுபது திரைகள் உள்ளன என்ற “ஹதீதுக்குத்ஸீ” இறையறிவிப்பு இதை உறுதி செய்கிறது. திரையிடப்பட்டவன் மனிதனேயன்றி அல்லாஹ் அல்ல. ஏனெனில் அல்லாஹ்வை எந்த ஒரு வஸ்த்துவும் திரையிட முடியாது. எதற்கும் அத்தகைய வல்லமை இல்லை.
وأما المحجوب فى الحقيقة فهو العبد لا الربّ، لأنّ الحجاب خلق، فكيف يقدر الخلق أن يحجب خالقه؟ وهذا محال، والمراد بالحجاب الجهلُ بالله، وأما الحجب كلّها فإما نورانيّة أو ظلمانيّة، فيجب على العبد الّذي أراد الوصول إلى الله وفنائه فيه أن يزيل كل حجاب حجبه، معناه أن يعرف ربّه بقدر وسعه، أي وُسع العبد، فتلخّص ممّا كتبت أنّ الحقّ تعالى موجود ومشهود بالقلب فى الدنيا ومرئيّ بالبصر – أي بعيني الوجه فى الآخرة، وأنّ الخلق معدوم ومفقود، ومرئيّ بالبصر ، كالسّراب المرئيّ بالبصر فى الصّحراء،
உண்மையில் – எதார்த்தத்தில் திரையிடப்பட்டவன் “அப்து” அடியானேயன்றி அல்லாஹ் அல்ல. “அப்து” என்ற மனிதன் படைப்பு. படைப்புக்கு படைத்தவனைத் திரையிட எவ்வாறு முடியும்? இது அசாத்தியம். திரை என்பது அறியாமைதான். வேறொன்றில்லை.
திரைகள் என்பன ஒன்றோ ஒளித்திரையாகவும் இருக்கும். இருள் திரையாகவும் இருக்கும். இருள் திரை ஒரு வஸ்த்தை மறைப்பது போல் ஒளித்திரையும் அவ்வாறே செய்யும்.
எனவே, அல்லாஹ்வை அறிந்து அவனை அடைந்து அவனில் “பனா” அழிந்திட அல்லது அவனில் ஒழித்திட நினைக்கும் ஓர் அடியான் “ஹக்” தஆலாவை விட்டும் தன்னை மறைத்துள்ள அனைத்து திரைகளையும் அகற்றுவது அவனுக்கு அவசியம். இதன் கருத்து என்னவெனில் அடியான் தன்னால் முடிந்த அளவு அல்லாஹ்வை அறிவதற்கு முயற்சிக்க வேண்டும்.
இது வரை எழுதியவற்றின் சாரம் என்னவெனில் அல்லாஹ் உள்ளான் என்பதும், அவன் இவ்வுலகில் கல்பால் – உள்ளத்தால் பார்க்கப்படுபவன் என்பதும், மறுமையில் தலைக் கண்ணால் காணப்படுபவன் என்பதும், சிருட்டி என்பது எதார்த்தத்தில் இல்லாதது என்பதும், பாலைவனத்தில் பார்க்கப்படுகின்ற – காணப்படுகின்ற கானல் நீர் போன்றதே படைப்பு என்பதும் தெளிவாகிவிட்டது.