மக்கஹ் சென்று புனித “ஹஜ்” வணக்கத்தை நிறைவேற்றி மதீனஹ் சென்று நபீகள் நாதரை ஸியாரத் செய்து அருள்பெற்று உலக முஸ்லிம்கள் தங்களது தாயகத்திற்குத் திரும்பிவிட்டனர்.
எல்லாம் வல்ல இறைவன் அன்னவரது ஹஜ் வணக்கத்தை ஏற்று, அவர்கள் வாழ்வில் பேரருள் புரிந்து, அவர்களைத் தனது நல்லடியார்களாக ஏற்றுக் கொள்வானாக என்று முதலில் பிரார்த்திக்கின்றேன்.
இஸ்லாமின் கடமைகளான கலிமஹ், தொழுகை, ஸகாத், நோன்பு ஆகியவற்றை அவரவர் தமது தாயகத்தில் இருந்துசெய்து கொள்ள முடியும். ஆனால் “ஹஜ்” வணக்கம் செய்ய வேண்டுமாயின் அதற்கு மக்காஹ்வுக்கே செல்ல வேண்டும். அங்கு சென்றே ஹஜ் கடமையைச் செய்ய முடியும்! அதனாற்தான் இலட்சக்கணக்கான உலக முஸ்லிம்கள் மக்கஹ் சென்று ஹஜ் கடமை செய்து வருகின்றனர்.
ஹஜ் கடமைகளி்ல் தொழுகையைப் போன்று வாயினால் ஓதவேண்டிய பர்ழான எந்த ஓதல்களும் இல்லை. செயற்பாடுகளே கடமையாக்கப்பட்டுள்ளன.
ஹஜ்ஜில் செய்யப்படும் கடமைகளை மார்க்கம் ஆகுமாக்கவில்லையானால் இன்றைய முஸ்லிம்களில் பலர் (வஹ்ஹாபியக் கொள்கையுடையவர்கள்) அவற்றை “ஷிர்க்” என்று சொல்லத் துணிந்துவிடுவர்.
காரணம் ஹஜ்ஜின் செயற்பாடுகளில் “தவாப்” கஃபாவைச் சுற்றுதல், கல்லுக்கு கல்லெறிதல், தொங்கோட்டம் ஓடுதல், கல்லை முத்தமிடுதல், அறபஹ்வில் தரித்தல், தலைமுடி சிரைத்தல், வௌ்ளையுடை அணிதல், தல்பியாச் சொல்லுதல், குர்பான் கொடுத்தல், ஸம் ஸம் நீரைக் குடித்தல், குளித்தல் போன்றவைகளை இஸ்லாம் கடமைகளென்றும், சுன்னத்துக்களென்றும், நல்லமல்களென்றும், சொல்லவில்லையானால் மனிதன் அவற்றைப் பிறிதொரு கோணத்திலேயே நோக்குவான் என்பதில் ஐயமில்லை.
அன்னிய மத சகோதரர்கள் தங்களது திருத்தலங்களுக்குச் சென்று கோயிலைச்சுற்றுகின்றனர். தூய ஆடை அணிகின்றனர், ஆற்றில் குளிக்கின்றனர், மொட்டையடிக்கின்றனர், அரோஹரா என்று எல்லோரும் சேர்ந்து சொல்கின்றனர். இன்னும் பல விடயங்களில் ஈடுபடுகின்றனர்.
இவற்றை “ஷிர்க்” என்று சொல்லும் முஸ்லிம்களாகிய நாம் “ஹஜ்” வணக்கத்தில் செய்யப்படும் செயற்பாடுகளை “இபாதத்” வணக்கம் என்று சொல்கின்றோம்.
“கஃபதுல்லாஹ்” என்பது கல்லால் கட்டப்பட்ட ஒன்றுதான். கஃபாவைத் “தவாப்” செய்பவர்கள் கல்லால் கட்டப்பட்ட ஒரு வீட்டைத்தான் ஏழுமுறை சுற்றுகின்றனர்.
கோயிலைச் சுற்றுவதை நிராகரிக்கும் நாம் கஃபாவைச் சுற்றுவதை ஏன் ஏற்றோம்? அதில் அமைந்துள்ள தத்துவம் என்ன? சிந்தித்துப் பார்த்தோமா ?
பெரியார்களின் கப்றுகளை, அவர்கள் பாவித்த பொருள்களை முத்தமிட்டு “பறகத்” பெறுவதை அறியாமையால் “ஷிர்க்” என்று சொல்லும் நாம் “ஹஜறுல் அஸ்வத்” என்ற கல்லை பெரும் சிரமத்துக்கு மத்தியில் ஏன் முத்தமிடுகின்றோம் சிந்தித்தோமா?
காபிர்கள் தமது வணக்கஸ்தலங்களில் மொட்டை அடிக்கின்றனர். அது “ஷிர்க்” என்று நாம் ஏற்றுக் கொள்கின்றோம். அதே செயலை நாம் ஹஜ் கடமைகளின் போது செய்கின்றோம். அது “இபாதத்” என்கின்றோம். ஏன் அது “இபாதத்” ஆகியது என்பதைச் சிந்தித்தோமா?
காபிர்கள் தமது வணக்கஸ்தலங்களில் மொட்டை அடிக்கின்றனர். அது “ ஷிர்க் ” என்று நாம் ஏற்றுக் கொள்கின்றோம். அதே செயலை நாம் ஹஜ் கடமைகளின் போது செய்கின்றோம். அது “இபாதத்” என்கின்றோம். ஏன் அது “இபாதத்” ஆகியது என்பதைச் சிந்தித்தோமா?
காபிர்கள் அவர்களது கடமைகளுக்கேற்ப ஒரே நிற உடைகளை அணிகின்றனர். அதேபோல் நாங்களும் இஹ்றாம் கடமைக்காக வெண்மைத் துணியையே அணிகிறோம். ஏன் என்று சிந்தித்தோமா?
ஹஜ்ஜின் போது “ சயீ ” செய்கின்றோம் சபா- மர்வா மலைகளுக்கிடையே ஓடுகின்றோம். தொங்கோட்டம் ஓடுகின்றோம். ஏன்? அது ஓடுவதற்கு என்ன விளையாட்டுத் திடலா? சிந்தித்தோமா?
ஹஜ் வணக்கத்தில் ஷைத்தானுக்குக் கல் எறிவதாக கல்லுக்குத்தானே கல்லால் எறிகிறோம். இதை இஸ்லாத்தின் தத்துவம் புரியாதவர்கள் பிழை என்பார்களே….. ஏன் கல்லுக்குக் கல்லால் எறிந்தோம் புரிந்ததா?
காபிர்கள் தமது வணக்கத்தலங்களில் அதிலுள்ள நீர் தடாகத்தில் குளித்தும் , குடித்தும் செயற்படுகிறார்களே அதேபோல் ஸம்ஸம் நீரை நாம் நின்று குடித்தும் – அங்கு குளித்தும் செயற்படுகின்றோமே ! காரணம் புரிந்தா செயற்படுகின்றோம்?
காபிர்கள் மிருகங்களை அறுத்துப் பலியிடுகிறார்கள். நாங்களும் ஹஜ்ஜின் போது “ குர்பான் ” கொடுக்கின்றோம். புரிந்தா செய்கின்றோம்?
காபிர்கள் எல்லோரும் சேர்ந்து தமது வணக்கத்தலங்களில் “ அரோஹரா ” என்று முழங்குகின்றார்கள். நாங்கள் மக்கஹ்வில் “ தல்பியா ” “ லெப்பைக், அல்லாஹூம்ம லெப்பைக் ” என்று முழங்குகின்றோம். இரண்டுக்குமிடையே உள்ள வித்தியாசம் என்ன என்பதை அறிந்தோமா?
இப்படி இப்படி நாம் செய்யும் வணக்கங்களைச் சரிகாண்கின்றோம். காபிர்கள் செய்வதை ஷிர்க் என்கின்றோம்.
இருவர் செய்வதிலும் சிறு சிறு வித்தியாசம் காணப்படினும் செற்பாடு ஒன்றுதான். ஆனால் முஸ்லிம்க்ள செய்வதை இஸ்லாம் ஏற்கிறது. காபிர்கள் செய்வதை மறுக்கிறது. ஏன் ? தத்துவம் புரிந்ததா?
எனவே ஹஜ் வணக்கம் என்பது மார்க்கக் கடமை என்பதை ஒரு பக்கம் வைத்துவிட்டு அவ்வணக்கச் செயற்பாடுகளை வெறுமனே பார்த்தால் அன்னியருக்கும் நமக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விடும். மார்க்கக் கடமை என்று நோக்கும்போதே அது ஏற்க்கப்படுகின்றது, வசதி உள்ளவர்கள் அதைச் செய்வது கடமையாகிறது. விட்டால் அல்லாஹ்வின் தண்டனை கடமையாகிவிடுகிறது.
எனவே ஹஜ் செய்வோம். அதன் கடமைகளின் இரகசியங்களையும் அதன் தத்துவங்களையும் புரிந்து செய்வோம்.
ஹஜ் செய்யும் சிலர் ஹஜ் கடமை முடிந்ததும், மதீனஹ் வந்து எங்கள் கண்மணி நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களை “ ஸியாறத் ” தரிசிக்காமலேயே நாடு திரும்பிவிடுகின்றனர்.
இச்செயல் நபீ மீது அவர்களுக்கு “ மஹப்பத் ” அன்பில்லை என்பதையே உணர்த்துகிறது. நபீமேல் பூரண அன்பு வைக்காதவர் “ முஃமின் ” விசுவாசி அல்லன் என்று அவர்களே கூறியுள்ளார்கள்.
நபீயின் மீது அன்பில்லாத – விசுவாசியல்லாதவனுடைய ஹஜ் எப்படி ஏற்றுக் கொள்ளப்படும். சிந்தித்தோமா?
எவர் ஹஜ் செய்து முடித்தபின் மதீனஹ் வந்து என்னை “ஸியாறத்” தரிசிக்கவில்லையோ அவர் “பகத்ஜபானீ” என்னை நிச்சயம் வெறுத்துவிட்டார் என்று நபீகள் திலகம் நவின்றுள்ளார்கள்.
எனவே, நபீயை வெறுத்தவனின் ஹஜ் ஏற்றுக் கொள்ளப்படாது என்பது உறுதி, காரணம் நபீயை வெறுத்தவன் அல்லாஹ்வையே வெறுத்தவனாகின்றான்.
ஹஜ் செய்வோம். அகமியங்களை அறிந்து செய்வோம். தத்துவங்களைப் புரிவோம். அண்ணல் நபீயை ஸியாரத் செய்வோம். அவர்களின் பேரன்பை இவ்வுலகிலும், மறு உலகிலும் பெறுவோம் !
ஸல்லல்லாஹூ அலா முஹம்மத் யாறப்பி ஸல்லி அலைஹி வஸல்லிம்.