Sunday, October 13, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஸூபி தரீக்காக்கள் போதிக்கும் “வஹ்ததுல் வுஜூத் – உள்ளமை ஒன்று” எனும் கொள்கைதான் உலக...

ஸூபி தரீக்காக்கள் போதிக்கும் “வஹ்ததுல் வுஜூத் – உள்ளமை ஒன்று” எனும் கொள்கைதான் உலக மக்களின் ஒற்றுமைக்கான ஒரே வழியாகும்.

(தொடர் -02)

ஸூபி தரீக்காக்கள் போதிக்கும் கொள்கை “வஹ்ததுல் வுஜூத் – உள்ளமை ஒன்று” என்பதுதான்.

இன்று சிலர் ஸூபி தரீக்காக்கள் வஹ்ததுல் வுஜூத் – உள்ளமை ஒன்று” என் பதை போதிக்கவில்லை என கூறுகின்றனர். ஆனால் ஸூபி தரீக்காக்களின் ஷெய்கு மார்களின் போதனைகளையும் அவர்களினால் கோர்வை செய்யப்பட்ட நூல்களையும் அவ்றாதுகளையும் ஆராய்ந்து பார்க்கும் போது அவர்கள் வஹ்ததுல் வுஜூத் – உள்ளமை ஒன்று எனும் உண்மையான நம்பிக்கையை அல்குர்ஆனினதும் அல்ஹதீதினதும் அடிப்படையில் ஈமான் கொண்டு அதை தங்களின் வாழ்வியலின் அம்சமாக எடுத்து நடந்துள்ளனர் என்பதை புரிந்துகொள்ள முடியும்.

காதிரிய்யா தரீக்கா

மெய்ஞ்ஞான மேதை முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது காதிரிய்யா தரீக்கா ஆகும். இவர்கள் ஹிஜ்ரி 470 ஆம் ஆண்டு ஈரானின் ஜீலான் நகரில் பிறந்தார்கள்.

சுமார் இருபத்தைந்து ஆண்டுகள் காட்டில் தனிமையாக தவம் இருந்து இறை தியானத்தில் மூழ்கி வல்ல அல்லாஹ்வை தூய்மைப்படுத்தினார்கள் . கல்வி ஞானத்திலும், உயர் பண்புகளிலும், மக்களுடன் பழகுவதிலும், சிறந்து விளங்கினார்கள். இவர்களின் சொற் பொழிவுகள் சொல் நயமும், பொருள் நயமும் மிக்கவை. ஐம்பது அல்லது அறுபதாயிரம் மக்கள் கொண்ட பெருங்கூட்டத்தில் இவர்களின் சொற்கள் ஒலி பெருக்கியின்றி கணீரென்று தெளிவாகக் கேட்கும். இதனைக் கேட்கும் ஒவ்வொரு உள்ளமும், கவரப்படும். எங்கும் ஒரே அமைதி நிலவும். இவ்வாறு நாற்பதாண்டுகள் வரை நடைபெற்ற சொற் பொழிவுகளால் இலட்சக்கணக்கான மக்கள் பயன் பெற்றனர்.

பேச்சு மூலம் மக்களை புனித இஸ்லாத்தின் பால் அழைத்த இவர்கள் பல தத்துவ நூல்களை எழுதியும் அறிவுலகிற்கு அளித்தார்கள். அவற்றுள் பின்வரும் நூற்கள் பிரசித்தி பெற்றவைகளாகும்.

1) புதூஹூல் கைப் – இது “தஸவ்வுப்” ஞானத் துறையை விளக்கும் நூல்.
2) குன்யதுத் தாலிபீன் – இது சரீஅத், தரீக்கத், சம்பந்தமான விளக்க நூல்.
3) பத்ஹூர் றப்பானீ – இதில் குத்பு நாயகத்தின் 68 சொற் பொழிவுகள் இடம் பெற்றிருக்கின்றன.

முஹிய்யித்தீன் அப்துல்காதர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களை ஞானாசிரியராகப் பின்பற்றி ஞானவழியை அடைந்தவர்கள் காதிரிய்யா தரீக்காவைச் சேர்ந்தவர்களானார்கள்.

மெய்ஞ்ஞான மேதை முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் தங்களின் நூல்களில் பின்வருமாறு வஹ்ததுல் வுஜூத் – உள்ளமை ஒன்று” என் பதை போதிக்கின்றார்கள்.

ஒரு மனிதனுக்கு ஏற்படும் சோதனைகளையும் அதனோடு தொடர்பான நிலை களையும் பற்றிக் குறிப்பிடும் போது புதூஹூல் கைப் 08ம் பக்கத்தில்
فهو غائب عن نفسه في فعل مولاه. فلا يرى غير مولاه وفعله.
“அடியான் தன்னை விட்டும் தன் எஜமானானின்(அல்லாஹ்வின்) செயலில் மூழ்கிவிடுவான். அப்போது தன் எஜமானையும்(அல்லாஹ்வையும்) அவனது செயலையும் தவிர வேறு எதையும் காணமாட்டான்” என்று குறிப்பிடுகின்றார்கள்.

தொடர்ந்து புதூஹூல் கைப் 161ம் பக்கத்தில்
கடைத்தெருவுக்கு செல்லும் மனிதன் பற்றி குறிப்பிடும் போது.
فإذا رأيته وقد دخل السوق يقول مارأيت شيأ. نعم قد رأى الأشياء لكن قد رآها ببصر رأسه لا ببصر قلبه.
கடைத்தெருவில் நுழைந்தபோதும் “நான் எதையும் காணவில்லை என்றுசொல்வான். தனது தலைக்கண்ணினால் அவற்றை அவன் கண்டான் தனது மனக்கண்ணினால் அவன் அவற்றை காணவில்லை”

فبظاهره ينظر ما فى السوق وبقلبه ينظر إلى ربه عز وجل
தனது தலைக்கண்ணினால் கடைத்தெருவில் உள்ளவற்றைப்பார்ப்பான்.

தனது மனக்கண்ணினால் தனது றப்பை(அல்லாஹ்வை) பார்ப்பான். என்று குறிப்பிடுகின்றார்கள்.

ஒரு ஞான குருவின் உதவியுடன் அல்லாஹ் அளவில் சேர்தல் பற்றி புதூஹூல் கைப் 41ம் பக்கத்தில் குறிப்பிடும் போது
فإذا وصلت إلى الحق عز وجل على مابينا فكن آمنا أبدا من سواه عز وجل . فلا ترى لغيره وجودا البتة
நாம் விபரித்த அடிப்டையில் நீ ஹக்(அல்லாஹ்)அளவில் சேர்ந்து விட்டால் அவன் அல்லாதவைகளில் நின்றும் நீ அச்சம் தீர்ந்தவனாக இரு. அவன் அல்லாதவைகளுக்கு உள்ளமையை(வுஜூதை) நீ அறவே காணமாட்டாய். என்று குறிப்பிடுகின்றார்கள்.

புதூஹூல் கைப் 97ம் பக்கத்தில் குறிப்பிடும் போது

فلا ترى لغيره وجودا
அவன் (அல்லாஹ்)அல்லாதவைகளுக்கு உள்ளமையை(வுஜூதை) நீ காணமாட்டாய்.
என்று குறிப்பிடுகின்றார்கள்.

அல்லாஹ்விடமிருந்து வரும் அழைப்பைப் பற்றி புதூஹூல் கைப் 127ம் பக்கத்தில் குறிப்பிடும்போது

وتجرد عن الاكوان والموجودات .
படைப்புகள் அனைத்தை விட்டும் நீ நீங்கி விடு.
وافن عن الكل. وتطيب بالتوحيد
எல்லாவற்றையும் விட்டு நீ அழிந்து விடு . ஏகத்துவத்தைக் கொண்டு ( அல்லாஹ் மட்டும் தான் இருக்கின்றான் என்பதைக்கொண்டு) நீ மணம் பூசிக்கொள். என்று குறிப்பிடுகின்றார்கள்.

கௌதுனா முஹிய்யித்தீன் அப்துல்காதர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களின் மேற்குறிப்பிட்ட வசனங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கு மட்டுமே வுஜூத் – உள்ளமை இருக்கின்றது படைப்புகளுக்கு உள்ளமை கிடையாது, உள்ளமை ஒன்று தான் என்ற வஹ்ததுல் வுஜூத் கொள்கையைதெளிவுபடுத்துகின்றது

(காதிரிய்யா தரீக்கா போதிக்கும் வஹ்ததுல் வுஜூத் தொடரும்….)

RELATED ARTICLES

Most Popular

Recent Comments