(தொடர் -03)
ஸூபி தரீக்காக்கள் போதிக்கும் கொள்கை “வஹ்ததுல் வுஜூத் – உள்ளமை ஒன்று” என்பதுதான்.
இந்த தொடரில் காதிரிய்யா தரீக்கா போதிக்கும் வஹ்ததுல் வுஜூத் பற்றி நான் எழுதிவருகின்றேன். கௌதுனா முஹிய்யித்தீன் அப்துல்காதர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களின் நூல்களிலும் அவ்றாதுகளிலும் வஹ்ததுல் வுஜூத் – உள்ளமை ஒன்று எனும் உண்மையான நம்பிக்கையை தெளிவுபடுத்தியுள்ளதை நான் எழுதிவருகின்றேன்.
அந்த அடிப்படையில் அல்புயூழாதுர் றப்பானிய்யா என்ற நூலில் இஸ்மாயீல் இப்னு அஸ்ஸெய்யித் முஹம்மத் ஸயீத் அல்காதிரீ அவர்கள் கௌதுனா முஹிய்யித்தீன் அப்துல்காதர் ஜீலானீ கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களின் பேச்சுக்களை தொகுத்து எழுதியுள்ளார்கள் இந்த நூலின் 04ம் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்.
ثم قال لي ياغوث الأعظم ماظهرت في شيئ كظهوري فى الانسان.
மனிதனில் நான் வெளியாகியிருப்பது போல் எந்த வஸ்துவிலும் நான் வெளியாகவில்லை என்று அல்லாஹ் தஆலா எனக்குச்சொன்னான். என்று குறிப்பிட்டுள்ளார்கள்
அல்புயூழாதுர் றப்பானிய்யா என்ற நூலின் 05ம் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்.
لاهو الاّ أنا ولا أنا غيره
அவன் எனக்கு வேறானவன் அல்ல . நான் அவனுக்கு வேறானவனும் அல்ல என்று அல்லாஹ் தஆலா எனக்குச்சொன்னான். என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
அல்புயூழாதுர் றப்பானிய்யா என்ற நூலின் 34ம் பக்கத்தில் ஸூபியாக்களின் ஏழு ஆத்மீக நிலைகள் பற்றி குறிப்பிடும் அட்டவணையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்.
كثرة في وحدة ووحدة في كثرة
“பலதை ஒன்றில் காணுதல் ஒன்றை பலதில் காணுதல்” எனும் விடயம் குறப்பிடப்பட்டுள்ளது
இந்த விடயம் ஸுபியாக்களின் கலைச் சொற்கள் புரிந்தவர்களுக்கு தெளிவாக விளங்கக் கூடியது.
அல்புயூழாதுர் றப்பானிய்யா என்ற நூலின் 43ம் பக்கத்தில் அவ்றாது ஒன்றில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்.
اللهم لك الكل وبك الكل ومنك الكل وإليك الكل وأنت الكل وكل الكل .
“யா அல்லாஹ் உனக்கே எல்லாம் உரியது. உன்னைக் கொண்டே எல்லாம்(நடைபெறுகிறது). உன்னில் நின்றுமே எல்லாம் (நடைபெறுகிறது). உன்னளவிலேயே எல்லாம்(மீளுகின்றது). நீயே எல்லாமாக இருக்கின்றாய். எல்லாவற்றின் எல்லாமுமாக நீயே இருக்கின்றாய்.” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலும் கௌதுனா முஹிய்யித்தீன் அப்துல்காதர் ஜீலானீ கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் தனது தப்ஸீருல் ஜீலானீ எனும் அல் குர்ஆன் விரிவுரையில் 01ம் பாகம் 230ம் பக்கத்தில்
{اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ} [البقرة: 255]
எனும் வசனத்திற்கு விளக்கமளிக்கும்போது,
( لَا إِلَهَ) أي لا موجود, وإن شئت قل لا وجود ولا تحقق ولا كون ولا ثبوت (الاّ هو)
“சிருஷ்டிகள் அவனுக்கு வேறானதல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலும் தப்ஸீருல் ஜீலானீ எனும் அல் குர்ஆன் விரிவுரையில் 03ம் பாகம் 140ம் பக்கத்தில்
{اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى} [طه: 8]
எனும் வசனத்திற்கு விளக்கமளிக்கும்போது,
( لَا إِلَهَ) أي لا موجود, (الاّ هو)
சிருஷ்டிகள் அவனுக்கு வேறானதல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலும் தப்ஸீருல் ஜீலானீ எனும் அல் குர்ஆன் விரிவுரையில் 03ம் பாகம் 473ம் பக்கத்தில்
{وَلَا تَدْعُ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ لَا إِلَهَ إِلَّا هُوَ كُلُّ شَيْءٍ هَالِكٌ إِلَّا وَجْهَهُ لَهُ الْحُكْمُ وَإِلَيْهِ تُرْجَعُونَ} [القصص: 88]
எனும் வசனத்திற்கு விளக்கமளிக்கும்போது,
( لَا إِلَهَ) فى الوجود ولا موجود فى الشهود (الا هو)
“உள்ளமையில் எந்த இலாஹும் அவனுக்கு வேறானதல்ல , காட்சியில் எந்த சிருஷ்டிம் அவனுக்கு வேறானதல்ல.” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
இங்கு நான் குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தும் காதிரிய்யா தரீக்காவின் ஸ்தாபகர் கௌதுனா முஹிய்யித்தீன் அப்துல்காதர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் தங்களின் போதனைகளிலும் அவர்களினால் கோர்வை செய்யப்பட்ட நூல்களிலும் அவ்றாதுகளிலும் வஹ்ததுல் வுஜூத் – உள்ளமை ஒன்று எனும் உண்மையான நம்பிக்கையைத்தான் போதித்தார்கள் என்பதை தெளிவாகக் காட்டுகின்றன.
இதுபோல் காதிரிய்யா தரீக்காவின் ஏனைய ஷெய்குமார்களின் போதனைகளிலும் வஹ்ததுல் வுஜூத் – உள்ளமை ஒன்று எனும் கருத்து நிறைந்து காணப்படுகின்றது. அவற்றை இங்கு குறிப்பிட்டால் இந்த தொடர் நீண்டுவிடும்.
எனவே மெய்பொருளாகிய அல்லாஹ் மட்டுமே இருக்கின்றான் அவனைத்தவிர எதுவும் இல்லை என்பதே திருக்கலிமாவின் முழுமையான தத்துவார்த்தம் ஆகும் இதையே ஸூபி தரீக்காக்கள் போதித்தன.
ஒரே உள்ளமை மட்டுமே இருக்கின்றது. உள்ளமையைப்பொறுத்து மனிதர்களிடயே எந்த வேறுபாடும் இல்லை. எல்லா மனிதர்களும் ஒரு உள்ளமையின் தோற்றங்களே. சாதி, மதம், இனம், நிறம் என்ற வேறுபாடுகள் வெளிரங்க அடையாளங்களுக்காகவே இருக்கின்றன. உள்ளமையில் வேறுபாடு கிடையாது. ஒரு உள்ளமையின் வெளிப்பாடுகாளாகிய நாம் ஒற்றுமையை பேணி நடப்பதற்கு தடைகள் எதுவும் இருக்க முடியாது.
அதுபோல் உள்ளமையைப் பொறுத்து ஏனைய படைப்புகளிடயேயும் எந்த வேறுபாடும் இல்லை. எனவே அனைத்து படைப்புகளையும் ஒரு உள்ளமையின் தோற்றங்களாக எண்ணி நாம் செயல்படவேண்டும் என்பதுவே ஸூபி தரீக்காக்களின் போதனையாகும்.
இந்த அடிப்படையில் பார்க்கும்போது ஸூபி தரீக்காக்கள் போதிக்கும் கொள்கையான “வஹ்ததுல் வுஜூத் – உள்ளமை ஒன்று” எனும் கொள்கைதான் உலக மக்களின் ஒற்றுமைக்கான ஒரே வழியாக காணப்படுகின்றது.