Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்இணையிலா ஏந்தல் அண்ணல் ஹாஜா

இணையிலா ஏந்தல் அண்ணல் ஹாஜா

அஜ்மீரில் இருந்து உலகாளும் மகான், ஏழைகளின் தோழர், வாடாத ரோஜா, அண்ணலெம் ஹாஜா நாயகம் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக தவ்ஹீதின் தலம் பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாயலில் 33வது வருடாமாக நடைபெறும் மாகந்தூரியை முன்னிட்டு இக்கட்டுரை வெளியிடப்படுகின்றது.

வரலாற்றுச் சுருக்கம்:

அஜ்மீர் அரசர் அண்ணல் ஹாஜா நாயகம் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் ஹிஜ்ரீ 536 றஜப் பிறை 14ல் வெள்ளிக்கிழமை அஸ் ஸெய்யித் ஹாஜா கியாதுத்தீன், அஸ்ஸெய்யிதா மாஹ் நூர் றழியல்லாஹு அன்ஹுமா ஆகியோருக்கு மகனாக குறாஸானின் – ஸன்ஜர் எனுமிடத்தில் பிறந்தார்கள். இவர்களுக்கு பெற்றோர்களால் வைக்கப்பட்ட இயற்பெயர் ஹஸன் என்பதாகும். இவர்கள் தந்தை வழி ஸெய்யிதுனா ஹஸன், தாய் வழி ஸெய்யிதுனா ஹுஸைன் றழியல்லாஹு அன்ஹுமா ஆகியேரைச் சென்றடையும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. (ஸெய்யிதுனா ஹஸன் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் பதினோராவது பேரர் ஆகும்)

குறாஸானிலேயே வளர்ந்த அண்ணல் ஹாஜா அவர்கள் பதினொரு வயது பூர்த்தியடையும் போதே தனது தந்தை அஸ்ஸெய்யித் கியாதுத்தீன் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் “வபாத்” இறையடி சேர்ந்துவிட்டார்கள். அவர்களின் (அஸ்ஸெய்யித் கியாதுத்தீன்) சொத்துக்கள் மூன்று ஆண் மக்கள் மத்தியில் பங்கிடப்படுகின்றன. தனது தந்தையின் அனந்தரமாக தனக்குக் கிடைத்த ஒரு தோட்டத்தில் தான் வேலை செய்து கொண்டிருந்த வேளை ஹாஜா நாயகம் அவர்களிடம் இப்றாஹீம் கலந்தர் என்ற பெயருடைய ஒரு மஜ்தூப் வருகிறார்கள். ஹாஜா நாயகம் அவர்களோ அந்த மஜ்தூப் இப்றாஹீம் கலந்தர் அவர்களை கண்ணியப்படுத்தி, அவர்களை இருப்பாட்டி அவர்களுக்கு தனது தோட்டத்திலிருந்து உலர்ந்த திராட்சைப்பழங்களை அன்பளிப்பாக வழங்கினார்கள். ஆனால் மஜ்தூப் இப்றாஹீம் கலந்தர் அவர்கள் அதில் ஆசை கொள்ளவில்லை. மாறாக தனது பையிலிருந்து ரொட்டித் துண்டு ஒன்றை எடுத்து அதை தனது வாயில் வைத்து சப்பி அதை ஸெய்யிதுனா ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாயில் உமிழ்ந்தார்கள். அதைச் சாப்பிட்ட கனமே ஹாஜா நாயகம் அன்னவர்களுக்கு இறையொளி தென்பட ஆரம்பித்தது. உலக ஆசை அவர்களை விட்டும் விரண்டோடிவிட்டது. தனக்கு அனந்தரமாகக் கிடைத்த தோட்டத்தை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தை தகுதியானவர்களுக்கு வழங்கிவிட்டு மார்க்க அறிவை கற்பதற்காகவும், ஆன்மீக ஞானங்களை தேடியும் பயணித்தார்கள்.

முதலாவதாக “ஸமர்கந்த்” நகருக்குச் சென்ற ஹாஜா நாயகம் அங்கு சில நாட்கள் தங்கியிருந்தார்கள். பின்பு “புகாரா” நாட்டிற்குச் சென்றார்கள். அந்நேரம் புகாரா தேசம் அறிவுக்கும், நீதத்திற்கும் புகழ்பெற்ற இடமாக இருந்தது. அங்கேயே அல்குர்ஆன் முழுவதையும் மனனம் செய்தார்கள். அதேபோல் “தப்ஸீர்”, “ஹதீது”, “பிக்ஹ்” கலைகளையும் கற்றார்கள். அஷ்ஷெய்கு ஹுஸாமுத்தீன் அல்புகாரீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்களிடமிருந்து இறையறிவுகளையும் பெற்றார்கள். பின்பு இறைஞானத்தையும், பறகாத் – அருள்களையும் உண்டாக்கிக் கொள்ளும் நோக்கில் இறாக் நாட்டின் பக்தாத் நகருக்குச் சென்றார்கள். அங்கு அஷ்ஷெய்கு நஜ்முத்தீன், அஷ்ஷெய்கு அஹதுத்தீன் அல்கர்மானீ, அஷ்ஷெய்கு ஷிஹாபுத்தீன் அஸ்ஸஹ்றவர்தீ போன்ற பெரியார்களையும் சந்தித்து அவர்களின் ஆசிகளையும் பெற்றுக் கொண்டார்கள். அதுமட்டுமன்றி இதன் போது வலீகட்கரசர் கௌதுல் அஃளம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அவர்களையும் சந்திக்கும் பாக்கியம் பெற்றார்கள். அங்கிருந்து (பக்தாத்) அஷ்ஷெய்கு உத்மான் ஹாறூனீ றழியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு நைஸாபூர் அருகிலுள்ள ஹாறூன் நகருக்குச் சென்று அங்கு அஷ்ஷெய்கு உத்மான் ஹாறூனீ றழியல்லாஹு அவர்களிடம் சென்று அவர்களுக்கு 10 வருடங்கள் பணி செய்தார்கள். (இருபது வருடங்கள் என்றும் கூறப்படுகின்றது) ஹாஜா ஷெய்கு உத்மான் ஹாறூனீ அவர்களுக்கு ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ அன்னவர்கள் மீது கடும் அன்பு ஏற்பட்டது. அவர்களைப் பிரியவும் மனம் வரவில்லை, தொடர்ந்து வைத்திருக்கவும் மனம் வரவில்லை என்ற ஒரு நிலையில் முயீனுத்தீன் சிஷ்தீ அவர்களை தன்னுடன் அழைத்துக் கொண்டு புனித மக்கமா நகர் சென்றார்கள். புனித “கஃபா”வின் வாயலில் நின்று ஷெய்கு உத்மான் ஹாறூனீ அவர்கள் ஒரு பிரார்த்தனை செய்தார்கள். இறைவா! உன்னுடைய அடியார் ஹாஜா முயீனுத்தீனை உன்னிடம் பாரஞ்சாட்டுகிறேன். உடனே “நாம் ஏற்றுக் கொண்டோம்” என்று ஒரு அசரீதி கேட்டது.

பின்பு இருவரும் புனித மதீனா நகருக்குப் பயணித்தார்கள். இருவரும் பெருமானார் றஸூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் புனித றவ்ழா ஷரீபாவில் நுழைந்து ஸலாம் சொல்கின்றார்கள். பெருமானாரின் புனித அடக்கவிடத்தினுள்ளிருந்து பதில் வந்தது. பெருமானாருக்கு முன்பாக ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ அவர்கள் “முறாகபா” என்ற ஞான இருப்பு இருந்தார்கள். “ஷகஷ்பு” எனும் உதிப்பு மூலம் அவர்களுக்கு “ஷெய்குல் மஷாயிக் முயீனுத்தீனே நான் உங்களுக்கு இந்தியாவின் அதிகாரத்தை வழங்கியுள்ளேன்” என்று அறிவிக்கப்பட்டது. (“முயீனுத்தீன்” என்று பெயர் வைக்கப்பட்டது பெருமானார் அவர்களாலே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது) இந்தியா பற்றி அறிந்திராத ஹாஜா நாயகம் தனது ஞானாசான் ஷெய்கு உத்மான் ஹாறூனிடம் விடயத்தைச் சொல்ல, உத்மான் ஹாறூனீ அவர்கள் ஹாஜா நாயகத்தின் இரு கண்களையும் தனது கைகளால் மூடினார்கள். கண்ணால் பாரப்பதுபோல் தனது உளக் கண்களால் இந்தியாவை கண்டு கொண்டார்கள் ஹாஜா நாயகம் அன்னவர்கள். இருவரும் பக்தாத் வந்து அங்கிருந்து இந்தியாவுக்குச் செல்வதற்கு அனுமதியும் வழங்கினார்கள். பத்தினித்தனம் கொண்டும், படைப்புகளை விட்டும் ஒதுங்கி இறைவன் பக்கம் சேர்ந்திருப்பது கொண்டும் “வஸிய்யத்” – நல்லுபதேசம் செய்தார்கள். (இவ்வுபதேசம் “வஹ்ததுல் வுஜூத்” இறையியலைக் கற்றவர்களுக்கே நன்கு புரியும். மார்க்கப்பணி செய்யும் ஒருவரை படைப்புகளை விட்டும் ஒதுங்கியிருக்க உபதேசிப்பதென்பது என்னவென்பதை ஞானத்தை முறையாகக் கற்றவர்களுக்கே புரிந்து கொள்ள முடியும். இன்று ஞானி வேடம் பூண்டு மக்களை ஏமாற்றும் குருட்டு ஞானம் பேசும் அல்லது ஏட்டில் ஒன்று உதட்டில் ஒன்று பேசும் வேஷதாரிகளிடம் கற்றவர்களுக்குப் புரியாது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது)

ஹாஜா நாயகம் அஜ்மீர் நகருக்கு வந்த நேரம் அங்கு இந்து மன்னன் பத்ஹூராவின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஹாஜா நாயகமோ “அனாஸ்கார்|” நதியின் அருகே அமைதியான முறையில் “சில்லா” எனப்படும் தவம் இருந்தார்கள். அங்கிருந்து கொண்டு மக்களை இஸ்லாத்தின் பால் அழைத்துக் கொண்டு தனது பணியைச் செய்து கொண்டிருந்தார்கள். இதைக் கண்ட மன்னன், ஹாஜா நாயகத்தை அங்கிருந்து வெளியேற்ற நாடினான். இதைச் செவியேற்ற ஹாஜா நாயகம் “நீ என்னை வெளியேற்றினால் “ஜப்பார்” (அடக்கியாள்பவன்) ஆன அல்லாஹ் உன்னை வெளியேற்றுவான்” என்று சூழுரைத்தார்கள். அல்லாஹ்வும் அதை ஏற்றுக் கொண்டான். ஸுல்தான் ஷிஹாபுத்தீன் கூரீ என்பவரை அல்லாஹ் அனுப்பி அந்த மன்னனுடன் இரு முறை போர் செய்ய வைத்தான். இது 1192ம் ஆண்டு நடைபெற்றது. யுத்தத்தில் ஸுல்தான் அவர்கள் வெற்றி பெற்றார்கள். அந்த யுத்த்தில் மன்னன் பத்ஹூறா கொலை செய்யப்பட்டு அன்றிலிருந்து இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி நடை பெற்றது. இது (இஸ்லாமிய ஆட்சி) 1857 வரை நீடித்ததாகவும் சொல்லப்படுகின்றது.

ஏந்தல் ஹாஜா அன்னவர்கள் ஹிஜ்ரீ 633 றஜப் பிறை 06ம் நாள் ஸஹர் நேரம் “வபாத்” ஆனார்கள். தான் “வபாத்” ஆகப் போகின்றேன் என்பதை அறிந்த ஹாஜா நாயகம் அன்னவர்கள் தனது கலீபா குத்புத்தீன் பக்தியாரீ கஃகீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களை அழைத்து தனக்கு ஷெய்குமார்களிடமிருந்து கிடைத்த சகல “தபர்றுகாத்” அருள்களையும் ஒப்படைத்துவிட்டு தான் “கல்வத்” இருக்கும் அறையை மூடிக் கொண்டார்கள். ஸஹர் நேரம் வரும் வரை அயலவர்களுக்கு கேட்குமளவு சத்தமாக “தஸ்பீஹ்” செய்து கொண்டிருந்தார்கள். சத்தம் நிற்க வீட்டிலிருந்தவர்கள் கதைவை தட்டுகிறார்கள் கதவு திறக்கப்படவில்லை. கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்று பார்த்தார்கள். ஹாஜா நாயகம் அன்னவர்கள் “விஸால்” உடைய நிலையில் இருந்தார்கள். அவர்களின் நெற்றியில் “இவர் இறையன்பர். இறையன்பிலேயே மரணித்தார்” என்று ஒளியால் எழுதப்பட்டிருந்தது.

இவர்கள் தனது 90வது வயதிலேயே திருமணம் செய்தார்கள் என்பதும், இரண்டு மனைவியர்கள், நான்கு குழந்தைகள் (மூன்று ஆண் மக்கள், ஒரு பெண்) என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

குழந்தைகள்:

01. ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு
02. ஹாஜா ளியாஉத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு
03. ஹாஜா ஹுஸாமுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு
04. பீபீ ஹாபிளா ஜமால் றழியல்லாஹு அன்ஹா

அண்ணல் ஹாஜாவின் அற்புதங்களில் சில.

* மன்னன் பத்ஹூரா சூனியக் காரர்களின் தலைவனாக இருந்த அஜேபால் எனும் தனது மந்திரியை 1500 சூனியக் காரர்களுடன் ஹாஜா நாயகம் அவர்களுக்கு தங்களது மந்திரத்தால் சூனியம் செய்வதற்காக அனுப்பி வைத்தான். அவர்கள் செய்த அனைத்து சூனியங்களையும் தனது அற்புதம் கொண்டு உடைத்தார்கள், தகர்த்தெறிந்தார்கள் ஹாஜா நாயகம் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள். அவர்கள் தங்களின் அனைத்து மந்திரங்களிலும் தோல்விடைந்து போக இறுதியாக அவர்களின் தலைவனாக இருந்த அஜேபால் ஆகாயத்தில் பறந்து காட்டினார். ஹாஜா நாயகம் மிரிவடி என்று சொல்லப்படும் மரத்தினால் ஆன தனது செருப்புகள் இரண்டையும் வானத்தை நோக்கி எறிந்தார்கள். அவ்விரண்டு செருப்புகளும் அஜேபாலின் தலையில் அடிக்க, அவர் ஹாஜாவின் காலடியில் கீழே விழுந்தார். உடனே தமது அனைத்து மந்திரங்களும் ஹாஜாவின் “விலாயத்”திற்கு முன் செயலிழந்து போய் கீழே விழுந்த அவர் புனித தீனுல் இஸ்லாத்தை தழுவினார். அது மாத்திரமின்றி நபீ கழிர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் போன்று உலக முடிவு வரை உயிர் வாழ்வதை கேட்டு நின்றார். அவரின் விடயத்தில் ஹாஜா நாயகம் துஆ செய்ததாகவும், அதை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு அவர் இன்று வரை அஜ்மீர் அருகில் ஒரு மலையில் வாழ்வதாகவும் கூறப்படுகின்றது. அவர்கள் இஸ்லாமான பிறகு அவர்களின் பெயர் “கலந்தர் மீரான் ஸெய்யித் ஹுஸைன்” என்று சொல்லப்படுகின்றது.

* ஹாஜா நாயகம் அன்னவர்களுக்கு எம் பெருமானார் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கட்டளையிட்டது போல் மக்களை இஸ்லாத்தின் பால் அழைத்த வண்ணம் இருந்தார்கள். அவர்களின் வெளியரங்கம் மக்களுடன் தொடர்பாக இருந்தாலும், அவர்களின் உள்ரங்கம் ஹக் தஆலாவுடன் தொடர்பானதாகவே இருந்தது. அவர்களின் ஒரு மூச்சுக்கூட அல்லாஹ் அல்லாதவைகளை நினைத்ததாக வெளியேறவில்லை. ஒரு நொடியேனும் மார்க்கத்தை உயிர்ப்பிப்பதிலன்றி வேறு விடயங்களில் கழிந்தது கிடையாது. இந்தியாவுக்கு வருகை தந்து சுமார் நாற்பது வருடங்கள் இறை வணக்கத்திலேயே கழித்தார்கள். ஒரு “வக்த்” தொழுகையையேனும் “கழா” செய்த வரலாறே கிடையாது. இதுவே மாபெரும் ஒரு அற்புதமாகும்.

* ஹாஜா குத்புத்தீன் பக்தியாரி கஃகீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள். நான் இருபது வருடங்கள் ஹாஜா நாயத்திற்கு பணி செய்து வந்தேன். தண்டிப்பதற்காகக் கூட எவர் மீதும் கோபித்தது கிடையாது. அந்த அளவு “ஜமால்” உடையவர்கள். (வலீமார்கள் ஒன்றோ “ஜமால்” – இரக்க சுவாபம் உடையவராக இருப்பார்கள். அல்லது “ஜலால்” – கோபம் மிகைத்தவர்களாக இருப்பார்கள்.) தொடராக ஒருவர் “ஜமால்” தன்மையுள்ளவராக இருப்பதும் ஒரு அற்புதமாகும்.

* ஹாஜா நாயகம் ஒவ்வொரு இரவும் இஷாவின் பிறகு புனித மக்கமா நகருக்குச் சென்று அங்கு புனித கஃபாவை “தவாப்” செய்பவராக இருந்தார்கள். அதை ஹாஜிகள் தவாபுடைய நேரத்தில் காண்பார்கள். ஆனால் இந்த விடயம் குடும்பத்தவர்களுக்கு தெரியாது. அவர்கள், ஹாஜா நாயகம் அறையினுள் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக எண்ணிக் கொண்டிருந்தார்கள். பிற்காலத்தில்தான் இந்தச் செய்தி அதாவது இஷாவின் பின் சென்று ஸுப்ஹுக்கு முன் வருகின்றார்கள் என்ற செய்தி தெரிய வந்தது.

* ஹாஜா நாயகம் அன்னவர்களுடன் ஒருவர் தொடராக மூன்று தினங்கள் “ஸுஹ்பத்” நட்பு வைத்திருந்தாராயின் அவர் ஆன்மீக நிலைகளைப்பெற்று அந்தஸ்த்து உடையவராக ஆகிவிடுவார் என்றும் கூறப்படுகின்றது.

* ஹாஜா குத்புத்தீன் பக்தியாரீ கஃகீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஹாஜா நாயகம் அவர்கள் “நான் சுவனம் செல்வதாயின் தனது முரீதுகளுடனேயே செல்ல வேண்டும்” என்று பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள். “நாங்கள் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்” என்று அசரீதி அவர்களுக்கு கேட்டது. பின்பு ஹாஜா நாயகம் சொன்னார்கள். என்னுடைய “ஸில்ஸிலா” சங்கிலித் தொடரில் இறுதி நாள் வரை வரக்கூடிய அனைவரும் என்னுடைய முரீதுகளே! அதற்கும் “உங்களின் வேண்டுதலை நாம் ஏற்றுக் கொண்டோம்” என்று விடை வந்தது.

* மன்னன் பத்ஹூறாவினால் ஹாஜா நாயகம் பயன்படுத்தி வந்த அனாஸ்கார் நதியை பயன்படுத்த தடை விதித்த நேரம் தான் “வுழூ” என்ற சுத்தம் செய்ய பயன்படுத்தி வந்த கூஜாவில் அனாஸ்கார் நதியின் நீர் மற்றுமுள்ள அனைத்தையும் அடைத்தார்கள். நீரின்றி கால்நடைகள், விவசாயங்கள் பாதிக்கப்பட்டன. அனைவரும் ஹாஜா நாயகம் அவர்களிடம் சரணடைய தனது கூஜாவை கவிழ்த்து விட்டார்கள். நதி முன்பிருந்தது போல் நீரால் செழித்தது. (இந்த கூஜா இன்றுவரை ஹாஜா நாயகம் அன்னவர்களின் தர்ஹா ஷரீபில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது)

* நெருப்பு வணங்கிகளிடம் சென்று இஸ்லாத்தில் இணையுமாறு வேண்டினார்கள். அவர்கள் தாம் கடவுளாக நம்பி வணங்கி வரும் நெருப்புக் கிடங்கை விட்டும் வரமாட்டோம் என்று கூற, நீங்கள் பல்லாண்டுகளாக வணங்கி வரும் இந் நெருப்பு உங்களை எரிக்கக் கூடாதல்லவா? கிடங்கினுள் சென்று வருவோம் வாருங்கள் என்றழைத்தார்கள். அவர்களால் முடியவில்லை. உடனே ஹாஜா நாயகம் தனது இரு செருப்புக்களையும் கழட்டி கிடங்கினுள் எறிந்துவிட்டு அங்கிருந்த கைக் குழந்தை ஒன்றையும் தூக்கிக்கொண்டு கிடங்கினுள் இறங்கினார்கள். உள்ளே சென்ற ஹாஜா நாயகம் தான் எறிந்த செருப்புகளுடன் எந்த ஒரு பாதிப்பும் இன்றி வெளியே வந்தார்கள். இதைக் கண்ட அனைவரும் புனித தீனுல் இஸ்லாத்தை தழுவினார்கள். “உன்னைக் கொண்டு ஒரு மனிதனை அல்லாஹ் நேர்வழி காட்டுவது உலகையும், அதிலுள்ளவற்றையும் விட சிறந்தது” என்ற பெருமானாரின் வாக்கிற்கமைய ஹாஜா நாயகம் அன்னவர்களைக் கொண்டு 90 இலட்சம் காபிர்கள் இஸ்லாத்தில் இணைந்தார்களாயின் ஹாஜாவின் மகத்துவத்தை என்னென்பது?

* செல்வத்தை தேடும் மக்களுக்கு அருளும், பொருளும் வாரி வழங்கினார்கள். இன்றும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

* ஹாஜா நாயகம் “வபாத்” ஆன போது அவர்களது நெற்றியில் “ஹாதா ஹபீபுல்லாஹ், மாத பீ ஹுப்பில்லாஹ்” (இவர் இறையன்பர். இறை அன்பிலேயே மரணித்தார்) என்று அவர்களது நெற்றியில் ஒளியினால் எழுதப்பட்டிருந்தது.

இவ்வாறான மகத்துவங்களைக் கொண்ட அண்ணல் ஹாஜா நாயகம் அன்னவர்களின் நினைவாக நடைபெறும் மா கந்தூரியில் நாமும் கலந்து கொண்டு அவர்களின் அன்பையும், அருளையும் பெற்று ஜெயம் பெறுவோம் வாரீர்!

RELATED ARTICLES

Most Popular

Recent Comments