ஸுப்ஹான மன் அள்ஹறல் அஷ்யாஅ வஹுவ ஐனுஹா
(முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு)
சகல வஸ்துக்களும் அவனேதான். அவையாயிருக்க அவ்வஸ்துக்களை வெளிப்படுத்தினவன் துய்யவன். அவன்தான் அல்லாஹ். அவனுக்கே சர்வ புகழும்.
முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இல்லை என்றால் அல்லாஹ்வை அறிய முடியாது அவர்கள் மீதும், அவர்களது ஆல் அஸ்ஹாபுகள் மீதும் சலவாத்தும், சலாமும் உண்டாவதாகுக.
(நான் கூறிய கருத்துக்களைச் சரிகாணுகின்ற உலமாப் பெருமக்கள் இலங்கையின் பல பகுதிகளிலும் பரவலாக வாழ்கின்றார்களாதலால், இங்கு உலமாக்கள் என்று நான் குறிப்பிடுவது எனக்கு “முர்தத்” என்று பட்டம் வழங்கிய உலமாக்களை மட்டுமே குறிக்கும்)
அல்லாஹ்வுக்கும், அவனது ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கும், உலமாக்களுக்கும் வழிப்பட்டுக் கொள்ளுங்கள் என்பது அல்லாஹ்வின் அருள்வாக்கு. இவ்வருள் வாக்குக் கேற்ப உலமாக்களுக்கு வழிபட்டு நடப்பது ஒவ்வொருவரினதும் கட்டாயக் கடமையாகும். ஆனால் உலமாக்களென்ற போர்வையில் வாழ்பவர்களனைவருக்கும் வழிபட வேண்டுமென்பது இதன் விளக்கமல்ல. படித்திருந்தும் வழிதவறிய உலமாக்களையும், கற்றிருந்தும் நேர்மை – நியாயமற்ற உலமாக்களையும் பின்பற்றுதல் கூடாது. உலமாக்களில் அல்லாஹ்வின் அச்சமுடையவர்கள் மட்டும் தான் உலமாக்களாவர். அல்லாஹ்வின் அச்சம் இல்லாதவர்கள், பெயரளவில் உலமாக்களாக இருந்தாலும் அவர்கள் உலமாக்களல்லர். போதனையாலும், சாதனையாலும் காபிர்களை இஸ்லாமாக்குவது தான் உலமாக்களின் பணியேயன்றித் திருக்கலிமாவை திருத்தமாயறிந்து ஏகத்துவக் கொள்கையில் வேரூன்றிய உண்மை முஸ்லிம்களுக்கு முர்தத்துக்கள் என்று பட்டம் வழங்குவதல்ல. முஸ்லிம்களுக்கிடையிலேயே அவர்களிலொரு சிலர் மறு சிலரைக் காபிராக்குகின்ற சரித்திரம் நெடுங்காலமாகவே இருந்து வருகிறது. இது உலக முடிவுக்குரிய அடையாளங்களுள் ஒன்று என்றால் கூட அது மிகையாகாது. பின்னோர்கள் முன்னோர்களைச் சபித்தல் உலக முடிவுக்குரிய அடையாளங்களுள் ஒன்றென்பது நாயக வாக்கு.
உலமாக்களே!
11-02-1979 இல் காத்தான்குடியில் நடைபெற்ற மீலாத் விழா ஒன்றில் நான் கூறிய கருத்துக்கள் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைக்கு முரணானவை என்று கருதிய நீங்கள், எனது கருத்துக்குரிய விவரத்தையும், ஆதாரத்தையும் என்னிடமே நேரடியாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளக்கூடிய சகல வாய்ப்புக்கள் இருந்தும் கூட என்னை விசாரிக்காமலும், நான் கூறிய கருத்துக்களுக்குரிய விவரங்களையும், ஆதாரங்களையும் என்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளாமலும் நான் உங்களுக்கு அனுப்பிய கடிதத்தை (பதிவுத் தபாலை)க் கூட கவனத்திற் கொள்ளாமலும் நானும், எனது கருத்தைச் சரி கண்டவர்களும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று “பத்வா” தீர்ப்பு வழங்கி விட்டீர்கள். மேலும் அத்தீர்ப்பை இலங்கை முழுவதிலும் பிரகடனப் படுத்தினீர்கள். நீங்கள் மேற்கொண்ட இந்த நடவடிக்கையினால் நீங்கள் கண்ட பலன் என்ன? எனது கருத்தை விளங்கிச் சரி கண்டவர்களில் எத்தனை பேரை உங்கள் பத்வா மாற்றியிருக்கின்றது? அல்லது எத்தனை பேருக்கு எனது பேச்சில் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது? நான் கூறிய கருத்துக்களைச் சரியாக விளங்கி, மனப்பூர்வமாக அவற்றைச் சரிகண்ட ஒரு நபரையாவது (உங்களுடய பத்வாவின் படி) கலிமாச் சொல்லச் செய்து உங்கள் கூற்றை ஏற்றுக் கொள்ளச் செய்ய உங்களால் முடிந்ததா? அதுதானில்லை. இதற்கு மாறாக உங்கள் “ஊடுருவல்” செய்த புனித சேவை முஸ்லிம்களிடையே பிளவையும், பிரச்சினையையும், போட்டியையும் ஏற்படுத்தியுள்ளது. உறங்கிக் கிடந்த பித்னாவை தட்டியெழுப்பி இருக்கிறது. ஏகத்துவக் கொள்கையின் உண்மை தத்துவத்தைச் சொன்ன முன்னோர்களையும், பின்னோர்களையும் முர்தத்துக்களென்று இழித்துரைக்கப் பாமரர்களைத் தூண்டியுள்ளது. அதனால் அவர்கள் பாவத்திலாவதற்கு வழி வகுத்துள்ளது.
உலமாக்களே!
“பித்னா” உறங்குகிறது. அதைத் தட்டியெழுப்பியவனை அல்லாஹ் சபித்து விடுவானாக” என்ற நபிமொழி யாருக்குப் பொருத்தமுடையது? ஜம்-இய்யதுல் உலமா என்ற பெயர் பெரிதாக இருப்பதனால் அதற்கு அனைவரும் பயந்தும், பணிந்தும் வாழ வேண்டும் என்று நினைத்தல் சர்வ மடமையாகும். “பத்வா” வழங்குவதற்காக நீங்கள் எடுத்த சகல நடவடிக்கைகளும் பிழையானவைகளாகும். உங்களுடைய பத்வாவோ பொய்யும், புரட்டும் நிறைந்து ஆதாரமற்றதாகவிருக்கின்றது. நான் கூறிய கருத்து ஒன்றிருக்க நீங்கள் வேறொன்றுக்கு “பத்வா” வழங்கியிருக்கிறீர்கள். நீங்கள் இவ்வாறு “பத்வா” வழங்கியதிலிருந்து நான் கூறிய கருத்துக்களை நீங்கள் அறவே புரிந்து கொள்ளவில்லையென்பதும், நான் கூறிய ஞான மலரின் வாடையைக் கூட நுகர வில்லையென்பதும் தெளிவாகி விட்டது. எனது கருத்துக்களை விளங்காமலேயே பத்வா எழுதி விட்டீர்களென்பது நிரூபணமாகிவிட்டது. அதற்கு உங்களுடைய “பத்வா” நூலிலிருந்து சில எடுத்துக்காட்டுகளை மட்டும் தருகிறேன். கவனியுங்கள் நான் கூறுவது பிழையானால் அதற்குரிய ஆதாரத்துடன் பாமரர்களும் அறிந்து கொள்வதன் பொருட்டு பகிரங்கமாக அறிவியுங்கள்.
♦முதலாவது
“ஏகத்துவக் கொள்கையில் ஊடுருவல்” என்ற உங்கள் பத்வாவின் அறபுப் பகுதி மூன்றாம் பக்கம் நாலாவது வரியில் “நான் இறைவனுக்கு “ஜிஸ்மு” சடம் உண்டு” என்று பேசியதாக அபாண்டமான பொய்யொன்றை இணைத்துள்ளீர்கள். எதற்காக இப்படியொரு பொய்யைச் சேர்த்தீர்கள்? நான் அவ்வாறு பேசியதாக உங்களிடம் என்ன ஆதாரமிருக்கின்றது? உங்களால் பகிரங்கமாகக் கூறமுடியுமா? அல்லாஹ்வுக்கு சூறத் (உருவம்) உண்டு என்றுதான் பேசியிருக்கின்றேனேயன்றி அவனுக்கு ஜிஸ்மு (சடம்) உண்டென்று நான் பேசியதே கிடையாது. எனக்கு முர்தத் என்ற பட்டம் வழங்குவதற்காக இப்படியொரு பொய்யை உங்கள் பொக்கட்டிலிருந்து போட்டு பத்வா எழுதியிருப்பது முறையற்ற செயலும், உலமாக்கள் என்ற போர்வையில் இருந்து கொண்டு நீங்கள் செய்த அநீதியுமாகும். உலமாக்கள் இப்படியொரு பொய்யை பகிரங்கமாகச் சொல்லலாமா? சடத்துக்கும், உருவத்துக்குமிடையேயுள்ள வேறுபாடு உங்களுக்கு சரியாகப் புரியவில்லை என்பது உங்கள் பத்வாவிலிருந்து தெளிவாகிவிட்டது. பத்வா வழங்கி சுமார் இரண்டு வருடத்துக்கும் மேலாகி விட்டதே. இப்போதாவது அவ்விரண்டுக்குமுள்ள வேறுபாடு புரிய வில்லையா?
♦இரண்டாவது
உங்களுடைய பத்வா மூன்றாம் பக்கம் பதினோராம் வரியில் “இறைவன் தனது கையை நெற்றியில் வைத்துக் கொண்டு நித்திரை செய்ததை ஜிப்ரீல் (அலை) அவர்கள் கண்டார்கள்” என்று நான் பேசியதாக எழுதியிருக்கின்றீர்கள். உங்கள் பத்வா அறபுப் பகுதியில் “றகத” என்ற சொல்லை உபயோகித்திருக்கின்றீர்கள். “றகத” என்றால் நித்திரை செய்தான் என்பது பொருள். எதற்காக இப்படியொரு பொய்யைச் சேர்த்தீர்கள்? படுத்திருந்தான் என்றுதான் நான் பேசியிருக்கின்றேனேயன்றி நீங்கள் எழுதியுள்ளவாறு நான் பேசியதே கிடையாது. இறைவன் நித்திரை செய்தான் என்று நான் பேசியதாக பத்வா வழங்கியுள்ள உங்களிடம் அதற்கு ஆதாரம் இருக்கின்றதா? பகிரங்கமாகச் சொல்லமுடியுமா? நீங்கள் உலமாக்களாயிருந்துங் கூட நான் பேசாத ஒன்றைப் பேசியதாக எழுதியுள்ளீர்களே! இது நியாயமா? இதை இறைவன் ஏற்றுக் கொள்வானா? நான் பேசியது போல் “படுத்திருந்தான்” என்ற சொல்லை வைத்து எனக்கு முர்தத் என்று பட்டம் வழங்குவதற்கு இடமில்லாததால் (நிரபராதியைக் குற்றவாளியாக்குவதற்கு) அதற்கேற்றவாறு ஒரு சொல்லைத் தேடியெடுத்து பத்வா வழங்கியிருப்பது நீங்கள் செய்த பாரிய குற்றமாகும். படுத்திருந்தான் என்ற சொல்லுக்கும், நித்திரை செய்தான் என்ற சொல்லுக்குமிடையில் உள்ள வித்தியாசம் தெரியாத உலமாக்களாக நீங்கள் இருப்பது மிகவும் வேதனைக்குரியதாகும்.
♦மூன்றாவது
எனது பேச்சுப் பிழையென்பதற்கு உங்களின் ஊடுருவல் 6ம் பக்கத்தில் “கவாயிதுல் அகாயித், அகாயித் நஸபீ” போன்ற நூல்களிலிருந்தும். 28ம், 29ம் பக்கத்தில் அத் துஹ்பதுல் முர்ஸலா, அல் – புதூஹாதுல் மக்கிய்யஹ் போன்ற நூல்களிலிருந்தும் ஆதாரங்கள் காட்டியுள்ளீர்கள். அவ்வாதாரங்களை எதற்காக காட்டியுள்ளீ்ர்கள் என்பது புரியவில்லை. அந்தக் கிதாபுகளில் கூறப்பட்டிருப்பது என்ன? அந்தக் கிதாபுகளில் ஹுலூல் இத்திஹாத் என்பது தவறான கொள்கை என்று விபரிக்கப்பட்டுள்ளது. கிதாபுகளில் கூறப்பட்டதை நானும் ஏற்றுக் கொள்கின்றேன். அதை மறுக்கவில்லை. ஹுலூல் இத்திஹாத் என்பது சரியான கொள்கையென்று எந்தக் கூட்டத்திலாவது நான் பேசியிருக்கின்றேனா? அதற்கு உங்களால் பகிரங்கமாக ஆதாரம் காட்ட முடியுமா?
மேற் கூறப்பட்ட கொள்கை சரியானதென்று நான் பேசியிருந்தாலல்லவா எனது பேச்சுப் பிழையென்பதற்கு அந்த நூல்களிலிருந்து ஆதாரம் காட்ட வேண்டும். ஹுலூல் இத்ஹாத் என்பது தவறான கொள்கை என்பதுதான் எனது கொள்கையும். அந்தக் கொள்கை பிழையானதென்று பல கூட்டங்களில் பகிரங்கமாகக் கூறியிருக்கின்றேன். எனது கருத்து என்னவென்று சரியாகப் புரிந்து கொள்ளாமல்தான் பத்வா வழங்கியிருக்கின்றீர்கள். ஹுலூல் என்றால் இறைவன் ஒரு பொருளில் வந்து இறங்குதலையும், இத்திஹாத் என்றால் இறைவன் ஒரு பொருளுடன் கலந்து ஒன்றித்து விடுதலையும் குறிக்கும். இவ்விரு கொள்கையும் இஸ்லாத்துக்கு முரணானவையேயாகும். நான் இக் கொள்கை சரியென்று பேசியதே இல்லை! அவ்வாறு நான் பேசியதாக உங்களால் ஆதாரம் காட்ட முடியுமா? பகிரங்கமாகச் சொல்லத் தயாரா? ஏன் மார்க்கத்தை குழப்பியடிக்கிறீர்கள்? ஏன் புரட்டிப் பேசுகிறீர்கள்? பொய்யும், புரட்டும் உங்களுக்கு கைதேர்ந்த கலையாகிவிட்டதா? பொய்க்காரணம் காட்டி உண்மை முஸ்லிம்களை காபிர்கள் என்று பத்வா வழங்குவதற்கு உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது? எந்தச் சட்டம் இடமளிக்கின்றது? என்னையும், எனது கருத்தைச் சரிகண்டவர்களையும் காபிர்களாக்க வேண்டுமென்பது. உங்கள் நோக்கம் போலும். அதனால்தான் எங்களுக்கு காபிர்கள் என்று பத்வா வழங்குவதற்கு ஆதாரங்கள் இல்லாததினால் இப்படியொரு குறுக்கு வழியைக் கையாண்டிருக்கிறீர்கள்.
♦நான்காவது
உங்களுடைய ஊடுருவல் 12ம் பக்கம் முதல் ஊடுருவல் முடியும் வரை “அத்தலாயில்” (ஆதாரங்கள்) என்ற தலைப்பில் குர்ஆனில் இருந்து இரண்டு ஆயத்துக்களையும், அபூதாவூத் என்ற நூலிலிருந்து ஒரு ஹதீதையும், கெய்ரோ ஹஸன் அல்பன்னா எழுதிய அகாயித் என்ற நூலில் இருந்தும், இமாம் சுயூதி (றஹ்) அவர்கள் எழுதிய அல்ஜாமிஉஸ்ஸஈர் என்ற நூலில் இருந்து தொகுத்து ஒரு ஹதீதையும் எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் காட்டியுள்ள ஆயத்துக்களோ எனது பேச்சுப் பிழை, என்பதற்குரிய ஆதாரங்களல்ல. நீங்கள் உலமாக்களாலாக இருந்தும் கூட கண்மூடித்தனமாக பத்வா வழங்கியிருப்பது கவலைக்குரியதே. எனது பேச்சு பிழை என்பதற்கு நீங்கள் காட்டியுள்ள ஆயத்துக்களில் ஒன்று “அவனுக்கு ஒப்பானது ஒன்றுமில்லை. அவன் நன்கு கேட்பவன் முற்றும் அறிந்தவன்” எனது பேச்சு பிழை என்பதற்கு இதில் என்ன ஆதாரமிருக்கிறது. பாமரன் கூட இப்படியொரு ஆதாரம் காட்டமாட்டான். கூறப்பட்ட ஆயத்துடைய கருத்துக்கு மாறாக “அல்லாஹ்வுக்கு ஒப்பானது உலகில் உண்டு என்று சொல்லியிருக்கிறேனா? அவ்வாறு நான் சொன்னாலல்லவா அவ்வாயத்தை ஆதாரமாகக் காட்ட வேண்டும். அவ்வாறு நான் கூறியதாக பகிரங்கமாக உங்களால் ஆதாரம் காட்ட முடியுமா? நிரூபிக்க இயலுமா? எனது பேச்சு பிழை என்பதற்கு நீங்கள் ஆதாரமாகக் காட்டியுள்ள இவ்வாயத்து பொருத்தமற்றதென்பதும், என்னை முர்தத்தாக்க வேண்டுமென்பதற்காக அல்லது எனது பேச்சுடைய கருத்தை விளங்கிக் கொள்ளாததினால் காட்டியுள்ள ஆதாரமென்பதும் தெளிவாகிவிட்டது. நான் பேசியது ஒன்றிருக்க நீங்கள் வேறொன்றுக்கு பத்வா வழங்கிவிட்டு என்னையும், எனது கருத்தைச் சரி கண்டவர்களையும் முர்தத் என்று கூறியிருப்பது விந்தையிலும் விந்தையாகவுள்ளது.
♦ஐந்தாவது
எனது பேச்சு பிழையென்பதற்கு நீங்கள் ஆதாரமாகக் காட்டியுள்ள இரண்டு ஹதீத்களில் ஒன்று “மனிதர்கள் கேள்வி எழுப்பிக் கொண்டே வந்து, அல்லாஹ் சிருஷ்டிகளைப் படைத்தான். அப்படியானால் அல்லாஹ்வை யார் படைத்தான் என்றும் கேட்கக் கூடும்” என்ற தொடரான ஹதீதை குறிப்பிட்டுள்ளீர்கள். உலமாக்களே! ஏன் இந்த ஹதீதை ஆதாரமாக எழுதினீர்கள்? அல்லாஹ்வை யார் படைத்தான் என்று எந்த இடத்திலாவது நான் கேள்வி எழுப்பியிருக்கிறேனா? அவ்வாறு கேள்வி எழுப்பியதாக பகிரங்கமாக உங்களால் ஆதாரம் காட்ட முடியுமா? அப்படி கேள்வி எழுப்பியிருந்தாலல்லவா அந்த ஹதீதை ஆதாரமாகக் காட்ட வேண்டும். எனது பேச்சுப்பிழை என்பதற்கும், இந்த ஹதீதுக்கும் என்ன தொடர்பும், பொருத்தமும் இருக்கிறது? அறபு வசனங்களை எழுதி பாமரர்களை ஏமாற்றலாம். ஆனால் உலமாக்களை ஏமாற்ற முடியாது. அது உங்களின் பகற்கனவு.
இரண்டாவது ஆதாரமாக நீங்கள் காட்டியுள்ள ஹதீத் “அல்லாஹ்வின் படைப்புக்களில் நீங்கள் சிந்தனை செய்யுங்கள். அல்லாஹ்வில் சிந்தனை செய்யாதீர்கள்” உலமாக்களே! ஏன்? எதற்காக? இந்த ஹதீதை ஆதாரமாகக் காட்டினீர்கள்? அல்லாஹ்வின் படைப்புக்களைப் பற்றி சிந்தனை செய்யாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி சிந்தனை செய்யுங்கள் என்று எந்த இடத்திலாவது நான் பேசியிருக்கிறேனா? அவ்வாறு பேசியதாக பகிரங்கமாக உங்களால் ஆதாரம் காட்ட முடியுமா? நான் பேசியது ஒன்றிருக்க வேறொன்றுக்கு ஆதாரம் காட்டுகிறீர்களே! உங்களின் அறியாமையை என்னவென்று சொல்வது!
♦ஆறாவது
உங்களுடைய “ஊடுருவல்” தமிழ்ப் பகுதி 26ம் பக்கத்தில் இப்னு ஹஜர் ஹைதமீ அவர்கள் தங்களது “அல் – பத்தாவல் ஹதீஸஹ்” எனும் நூலில் பின்வருமாறு கூறுகிறார்கள் என்று எழுதியிருந்தீர்கள். இமாம் இப்னு ஹஜர் ஹைதமீ (றஹ்) அவர்கள், நீங்கள் குறிப்பிட்ட பெயருடைய நூலை எழுதியிருக்கிறார்களா? அப்படியானால் ஹிஜ்ரி எத்தனையாம் ஆண்டில் எழுதினார்கள்? அந்த நூல் எந்த நாட்டில் எந்த அச்சகத்தில் அச்சிடப்பட்டது? இதன் விபரத்தை பகிரங்கமாக உங்களால் அறிவிக்க முடியுமா? குறித்த இமாமவர்கள் நீங்கள் குறிப்பிட்ட பெயரில் ஒரு கிதாபு கூட எழுதியதாக வரலாறே இல்லை. ஏன் இப்படியொரு பொய்யை எழுதினீர்கள்? காரணம் என்ன?
♦ஏழாவது
“உங்கள் ஊடுருவல்” அறபுப் பகுதி பக்கம் 27, நாலாம் வரியில் “நஹ்னு கவ்முன் யஹ்றுமுன்னளறு பீகுதுபினா” என்ற அறபு வசனத்துக்கு தமிழ்ப் பகுதி 28ம் பக்கம் “அல்லாஹ் அருளிய எமது வேத நூலில் ஞானம் பேசுவதைத் தடை செய்யும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நாம்” என்று பொய்யான அர்த்தம் செய்துள்ளீர்களே! அந்த அறபு வசனத்துக்கு இந்தப் பொருளை எந்தத் தொட்டியிலிருந்து பொறுக்கி எடுத்தீர்கள்? அறபு நாட்டில் வாழும் காட்டறபி கூட இப்படிப் பொருள் எழுதமாட்டான். அந்த வசனத்துக்கு நீங்கள் எழுதியுள்ள பொருள் சரிதான் என்று கூறுவதானால் பகிரங்கமாகச் சொல்லுங்கள் பார்க்கலாம்? சாதாரண அறபு வசனத்தைக் கூடச் சரியாக மொழி பெயர்க்கத் தெரிந்து கொள்ளாத நீங்கள் ஞானக் கருத்துக்களை எப்படி ஆராய்ந்தீர்களோ “அல்லாஹுஅஃலம்” அல்லாஹ்தான் அறிவான்.
♦எட்டாவது
உங்களுடைய ஊடுருவலில் பல சட்ட நூல்களை ஆதாரமாகக் காட்டியுள்ளீர்கள். இன்ன நூலில் வருகிறது என்று எழுதியிருக்கிறீர்களேயன்றி நீங்கள் குறிப்பிடுகின்ற ஆதாரம் எந்தப் பக்கத்தில் வருகின்றதென்பதைக் குறிப்பிடவில்லை. உங்கள் ஊடுருவல் அறபுப் பகுதி 14ம் பக்கத்தில் கிதாபுல் அகாயித், ஜாமிஉஸ்ஸஈர் ஆகிய நூல்களில் வருகிறது என்றும் 15ம் பக்கத்தில் தப்ஸீர்களிலும், ஹதீத்களிலும், சட்ட நூல்களிலும், ஞான நூல்களிலும் வருகிறதென்றும், 16ம் பக்கத்தில் ஷர்ஹுல் முஹத்தப் என்னும் நூலில் வருகிதென்றும், 19ம் பக்கத்தில் ஹாஷியதுல் பாஜுரியில் வருகின்றதென்றும், அல்-பதாவல் ஹதீதிய்யாவில் வருகிறதென்றும், இன்ஸானுல் உயூன் என்ற நூலில் வருகிறதென்றும் எழுதியிருக்கிறீர்களே தவிர நீங்கள் குறிப்பிட்ட கிதாபுகளில் பக்கங்களைக் குறிப்பிடவில்லை. ஏன் பக்கங்களை குறிப்பிடவில்லை? உங்களிடம் இருக்கின்ற நூல்களில் பக்கங்கள் இல்லையா? அல்லது சூறாவளியினால் பக்கங்கள் அழிந்து விட்டதா? அல்லது பக்கங்களைக் குறிப்பிடப் பயந்து விட்டீர்களா? உங்களுக்கு நடந்தது என்ன? இன்ன கிதாபில், இன்ன பக்கத்தில், இன்ன ஆதாரம் இருக்கின்றதென்றல்லவா பத்வா எழுத வேண்டும். அவ்வாறு எழுதினால்தானே அந்தக் கிதாபில் அந்தப் பக்கத்தை அறிஞர்கள் பார்க்க முடியும். சுமார் ஆயிரம் பக்கங்களைக் கொண்ட ஒரு கிதாபின் பெயரை மட்டும் குறித்துப் பக்கத்தை குறிப்பிடவில்லையானால் நீங்கள் கூறுகின்ற ஆதாரம் குறித்த கிதாபில் இருக்கிறதா? அல்லது பொய்யை எழுதியிருக்கிறீர்களா? என்பதை தெரிந்து கொள்ள விரும்பும் ஒருவர் அவ்வாயிரம் பக்கங்களையும் பார்க்க வேண்டி ஏற்படுமே! அதற்கிடையில் அவரின் வாழ்நாள் முடிந்து விடும். அதோடு உங்களுடய ஆதாரம் சரியானதா? பிழையானதா? என்பதைக் காணமுடியாத நிலையும் ஏற்பட்டு விடும். பக்கங்களைக் குறிப்பிடுவதற்கு சோம்பல் ஏற்பட்டதா? இதற்குரிய காரணத்தைப் பகிரங்கமாகச் சொல்லமுடியுமா?
♦ஒன்பதாவது
உங்களுடைய “ஊடுருவல்” அறபுப் பகுதி 27ம் பக்கம் மூன்றாம் வரி தொடக்கம் 12வரி முடியுமட்டும் இப்னு அறபி (றழியல்லாஹு அன்ஹு ) சொன்னதாக தன்பீஹுல் கபீ என்ற நூலில் இமாம் சுயூதி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் என்று எழுதியிருக்கிறீர்கள். 3ம் வரி தொடக்கம் 12ம் வரி முடியுமட்டும் நீங்கள் எழுதியுள்ள அறபு வசனங்கள் மேற்குறித்த கிதாபில் இல்லை. மொத்தம் எட்டு வரியில் நீங்கள் எழுதியுள்ள அறபு வசனங்கள் யாருடையது? உங்களுடையதா? அல்லது இமாம் சுயூதி (றஹ்) அவர்களுடையதா? அது சுயூதி (றஹ்) அவர்களுடைய வசனம் என்று நீங்கள் சொன்னால் அந்த வசனம் இடம் பெற்ற கிதாபுடைய பெயரென்ன? எந்தப்பக்கம்? அது ஹிஜ்ரி எத்தனையாம் ஆண்டு எந்த அச்சகத்தில் அச்சிடப்பட்டது? இதற்கான வபரத்தை பகிரங்கமாக உங்களால் அறிவிக்க முடியுமா?
♦பத்தாவது
உங்களுடைய “ஊடுருவல்” அறபுப் பகுதி 28ம் பக்கம் மூன்றாம் வரிமுதல் எட்டாம் வரி முடியும் மட்டும் “துஹ்பதுல் முர்ஸலா” என்ற நூலிலிருந்து ஆதாரம் எழுதியிருக்கிறீர்கள். இந்நூலிலிருந்து நீங்கள் ஆதாரம் காட்டியதிலிருந்து அதை பத்வாக்குரிய நூலாக ஏற்றுக் கொண்டுள்ளீர்கள் என்பது தெளிவாகிவிட்டது. நீங்கள் ஆதாரமாகக்காட்டியுள்ள “துஹ்துல் முர்ஸலா” என்ற நூலாசிரியர் எழுதிய வசனங்களில் முந்திய வசனத்தை இருட்டடிப்புச் செய்து விட்டு பிந்திய வசனத்தை மட்டும் எழுதியிருக்கிறீர்கள். ஏன் இப்படிச் செய்தீர்கள்? “துஹ்பதுல் முர்ஸலா” என்ற நூலிலிருந்து நீங்கள் எழுதிய வாசகத்துக்கு முன்னுள்ள (நீங்கள் இருட்டடிப்புச் செய்த) அறபு வாசகத்தையும், அதன் மொழி பெயர்ப்பையும் இங்கே தருகிறேன்.
إعلموا أنّ ذلك الوُجودَ ليس له شَكْلٌ ولا حَدٌّ ولا حَصْرٌ، ومع هذا ظَهَرَ وتجلّى بالشكل والحَدِّ ولم يتغَيَّر عمّا كان من عدم الشكل وعدم الحدّ، بل هو الآن كما كان عليه،
“நீங்கள் அறிந்து கொள்ளுங்கள், அந்த வுஜுதாகிறது (ஹக்தஆலாவாகிறவன்) அவனுக்கு உருவமில்லை, எல்லையில்லை, கட்டுப்பாடு இல்லை. ஆயினுமவன் அவ்வாறிருப்பதுடன், உருவத்திலும், எல்லையிலும், வெளியாகியுள்ளான். இவ்வாறு வெளியானலுங் கூட முன்னிருந்த நிலைகளான உருவமின்மை, எல்லையின்மை என்ற நிலையிலிருந்து அவன் மாறுபடவில்லை. அவன் இப்பொழுதும் முன்னிருந்தவாறுதான் இருக்கின்றான்.
உலமாக்களே! நீங்கள் ஆதாரங்காட்டிய அதே கிதாபில் இருந்து நீங்கள் இருட்டடிப்புச் செய்த இவ்வசனங்கள் எனது பேச்சுக்குச் சாதகமாக இருப்பதனால் தான் அவற்றை விட்டீர்கள் என்பது நன்கு தெளிவாகிவிட்டது. அவர் அந்நூலில் “தன்ஸீஹ்” அரூப நிலை, “தஷ்பீஹ்” ரூப நிலை ஆகிய இரு நிலைகள் பற்றி விளக்கியுள்ளார். அவ்வாறிருந்துங் கூட அரூப நிலை சம்பந்தமாக எழுதிய வசனங்களை மட்டும் நீங்கள் குறிப்பிட்டு விட்டு, ரூப நிலை சம்பந்தமான வசனங்களை விட்டதேன். உள்ளதை உள்ளபடியே எழுதாமல் ஊடுருவல் செய்ததேன்?
இறுதியாக! உலமாக்களே? உண்மையான வஹ்ததுல் வுஜுதையும், மெய்ஞானக் கருத்தையும் கலிமாவின் விபரங்களையும் கூறிய எனக்கும், எனது கூற்றைச் சரிகண்ட பல்லாயிரம் முஸ்லீம்களுக்கும் முர்தத்துகள் (காபிர்கள்) என்று பத்வா வழங்கி விட்டு நிம்மதியோடு இருப்பதற்கு கனவு காண்கிறீர்களா? நீங்கள் மனிதர்களிடம் எதையாவது கூறிச் சமாளித்துக் கொள்ளலாம். ஆனால் என்றாவது ஒரு நாள் அல்லாஹ்வின் தீர்ப்பு உங்களுக்குக் கிடைப்பது நிச்சயமே. அது மட்டுமல்ல பல்லாயிரம் முஸ்லீம்களை காபிர்கள் என்று சொன்னதற்குரிய தண்டனை இவ்வுலகிலேயே உங்களுக்குக் கிடைத்துவிடும். அதற்கு முன் தௌபாச் செய்து உண்மை முஸ்லிம்களாகுங்கள். அவசரப்பட்டு “முர்தத்” என்று பத்வாக் கொடுத்து விட்டோமென நீங்கள் வருந்துவது ஓரளவு பாமரர்களுக்கும் புரிந்து வருகிறது. உங்களுடைய மனச்சாட்சியேனும் உங்களை உறுத்தாமலிருக்காதல்லவா? இதன் பிறகாவது எனது பேச்சின் கருத்துக்களையும், ஆதாரங்களையும் தெரிந்து கொள்ள நீங்கள் நினைத்தால் நீங்கள் கொடுத்த பத்வாவைப் பகிரங்கமாக வாபஸ் பெற்றுவிட்டு சர்வதேச ரீதியாகவும், சர்வ கலாசாலை மட்டத்திலும் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண ஏற்பாடு செய்யுங்கள். மூளைசாலிகளாலும், முக்தி பெற்ற ஞானவான்களாலும் ஆராயப்பட வேண்டிய பிரச்சினையை செல்லாக் காசுகள் ஐந்தாறு பேர் சேர்ந்து முடிவெடுக்க நினைக்கக் கூடாது. நீங்கள் (ஹக்கை) சத்தியத்தை மறைக்க நினைக்காதீர்கள். அவ்வாறு நினைத்தால் கடைசி வரை தோல்வியையும், இறை சோதனையையுமே காண்பீர்கள். அவசரத்தால் ஏற்பட்ட தவறை உணர்ந்து, வருந்தி அதற்காக அல்லாஹ்விடம் தௌபாச் செய்து புது மனிதர்களாகவில்லையானால் இறைவனின் பயங்கர சோதனைதான் உங்கள் தவறை உங்களுக்கு உணர்த்தும். அது தான் உங்களுக்கு நல்ல பாடத்தையும் கற்பிக்கும். என்னையும் எனது கருத்தைச் சரிகண்டவர்களையும் சமுதாயத்திலிருந்து ஒதுக்கும் நோக்கத்துடன் கல்முனையில் நீங்கள் நடத்திய கூட்டத்தில் கல்லடியும், பொலிசாரின் குண்டாந்தடிப் பிராயோகமும் நடந்ததும், கொழும்பிலிருந்து வந்த உலமாக்கள் இரவோடிரவாகக் கம்பி நீட்டியதும் உங்களுக்கு நினைவிருக்கிறதா?
உலமாக்களே!
இதற்குமுன் வெளிவந்த துண்டுப் பிரசுரங்களில் ஒன்றுக்காவது நீங்கள் பதில் கூறாமல் மௌனமாயிருக்கிறீர்களே! ஏன் பதில் கொடுப்பதற்கு உங்களுக்குப் பயமா? அல்லது அதற்குத் தைரியமில்லையா? அகில இலங்கை உலமா சபை பதில் கொடுக்காது போனாலும் எனக்கும், எனது கருத்தைச் சரிகண்டவர்களுக்கும் “முர்தத்” என்று பட்டம் வழங்கி மகிழ்வதற்காக அல்லும் பகலும் அயராதுழைத்த காத்தான்குடி உலமாக்களான நீங்களாவது இப்பிரசுரத்துக்கு தக்க பதிலைத் தாருங்கள். அல்லது கலிமாச் சொல்லி இஸ்லாமாகிவிட்டு விளக்கம் பெற வாருங்கள். அல்லாஹ் உங்களுடைய உள்ளத்தில் “ஹிதாயத்” நல்வழியெனும் வித்தையிட்டு, உங்களுக்கு மெய்ஞானச் சுரங்க வாசலைத் திறந்து தருவானாக! ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
அன்புப் பொதுமக்களே!
இப்பிரசுரத்தின் மூலம், உலமாக்கள் வழங்கிய பத்வா நூலிலுள்ள பொய்யையும், தவறையும் உங்களுக்கு விளங்கப்படுத்துவதுதான் எனது நோக்கமேயன்றி அவர்களை அவமதிப்பதோ அல்லது அவர்களுக்கு விளங்கப்படுத்துவதோ அல்ல. ஏனெனில் உலமாக்கள் வேண்டுமென்றே அவ்வாறு பத்வா எழுதியிருப்பதால் அவர்களுக்கு விளங்கவைப்பதில் என்னபலனிருக்கிறது. மேலும் நான் பேசியது ஒன்றிருக்க அவர்கள் வேறொன்றுக்கு பத்வா எழுதியிருப்பதால் அவர்களுடைய பத்வாவுக்கு மறுப்பு எழுதுவதிலும் என்ன பிரயோசனமிருக்கிறது? பொது மக்களான நீங்கள் நடுநிலையிலிருந்து இப்பிரசுரத்தை ஆராய்ந்து பாருங்கள். இது மார்க்கப் பிரச்சினையாதலால் உங்களுக்கிடையிலுள்ள சொந்த குரோதங்களையும், அரசியல் கட்சி பாகுபாட்டையும் மறந்து “இக்லாசுடன்” கலப்பற்ற எண்ணத்துடன் படித்துப் பாருங்கள்.
நான் பேசிய கருத்துக்கள் (உலமாக்களின் எண்ணப்படி) இஸ்லாத்துக்கு முரணானவையாக இருந்தால் எனது கருத்துக்களுக்குரிய ஆதாரங்களையும், விபரங்களையும் என்னிடம் கேட்டு விசாரித்தறிந்த பின்புதான் அவர்கள் பத்வா வழங்கியிருக்க வேண்டும். இதுதான் இஸ்லாம் கூறும் வழி. நான் இந்தக் கருத்துக்களைப் பேசிவிட்டு இந்த நாட்டிலில்லாது ஒழித்தோடியிருந்தால் அல்லது, விளக்கம் சொல்வதற்கும், ஆதாரங்கள் காட்டுவதற்கும் நான் மறுத்திருந்தால் அவர்களின் விருப்பத்தின்படி பத்வா வழங்கியிருக்கலாம்.
அவசரத்தால் பத்வா வழங்கிய உலமாக்கள் இன்று தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அஹ்மத் என்றொருவன், இன்னொருவனிடம் உனது பெயரென்னவென்று கேட்டானாம். அதற்கவன் இரு சொற்கலால் இணைந்த தனது பெயரின் முதற் சொல்லான அல்லாஹ் என்பதை கூறி இரண்டாம் சொல்லைக் கூறுவதற்கிடையில் அவனுக்கு இருமல் ஏற்பட்டதாம். பெயரைக் கேட்ட அஹ்மத் என்பவன் வியப்படைந்தவனாக, அவனது இருமல் முடியும் வரை நின்று முழுப் பெயரையும் தெரிந்து கொள்ளாமல் உலமா சபையிடம் ஓடிச் சென்று “ஒருவன் தன்னை அல்லாஹ் என்று சொல்கிறான். இதற்கு என்ன பத்வா? என்று கேட்டானாம். அதற்கு அவசரம் பிடித்த உலமாக்கள் அவனைக் கூப்பிட்டு விசாரிக்காமல் “அவ்வாறு சொன்னவன் காபிராவான்” என்று பத்வா வழங்கினார்களாம். பெயர் சொன்னவன் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தானாம். நீதிபதி அவனை விசாரித்த போது தான், அவனுடைய பெயர் “அல்லாஹ் பிச்சை” என்பது தெரிய வந்ததாம். அவசரப்பட்டதினாலும், விசாரிக்காமல் தீர்ப்பு வழங்கியதினாலும் ஏற்பட்ட தவறையுணர்ந்த உலமாக்கள் தௌபாச் செய்து இஸ்லாத்தில் இணைந்தார்களாம். அவசரத்தின் விளைவு இவ்வாறுதான் முடியும்.
வஆகிறு தஃவானா அனில் ஹம்துலில்லாஹி றப்பில் ஆலமீன்.
இவ்வண்ணம்
காதிமுல் கவ்மி
ஆரிபுபில்லாஹ் – மௌலவீ – அல்ஹாஜ் ஏ. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ
(தலைவர் – அகில இலங்கை ஸுபிஸ உலமா சபை)