(தொகுப்பு_மௌலவீ_அல்ஹாஜ்_A_அப்துர்_றஊப்_மிஸ்பாஹீ_பஹ்ஜீ)
முன் வாழ்ந்த சமூகத்திற்கு பல்வேறு சோதனைகளும், தண்டனைகளும் வழங்கப் பட்டதற்கான காரணம் அவர்கள் இறைவனுக்கும், தீர்க்க தரிசிகளுக்கும் வழிப்படாமலும், வேதங்களின் அறிவுரைகளின் படி செயல் படாமலிருந்ததுமேயாகும். குற்றம் செய்தவனைத் தண்டிப்பது அநீதியாகாது. இறைவன் எவருக்கும் அநீதி செய்வதில்லை. இது இறை வாக்கு. لَاتَبْدِيْلَ لِكَلِمَاتِ الله இறைவனின் பேச்சில் மாற்றமில்லை. إنّه لَايُخْلِفُ الْمِيْعَادَ இறைவன் தனது வாக்கிற்கு மாறு செய்ய மாட்டான்.
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَزِيدَ الوَاسِطِيُّ، عَنْ المُسْتَلِمِ بْنِ سَعِيدٍ، عَنْ رُمَيْحٍ الجُذَامِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا اتُّخِذَ الفَيْءُ دُوَلًا، وَالأَمَانَةُ مَغْنَمًا، وَالزَّكَاةُ مَغْرَمًا، وَتُعُلِّمَ لِغَيْرِ الدِّينِ، وَأَطَاعَ الرَّجُلُ امْرَأَتَهُ، وَعَقَّ أُمَّهُ، وَأَدْنَى صَدِيقَهُ، وَأَقْصَى أَبَاهُ، وَظَهَرَتِ الأَصْوَاتُ فِي المَسَاجِدِ، وَسَادَ القَبِيلَةَ فَاسِقُهُمْ، وَكَانَ زَعِيمُ القَوْمِ أَرْذَلَهُمْ، وَأُكْرِمَ الرَّجُلُ مَخَافَةَ شَرِّهِ، وَظَهَرَتِ القَيْنَاتُ وَالمَعَازِفُ، وَشُرِبَتِ الخُمُورُ، وَلَعَنَ آخِرُ هَذِهِ الأُمَّةِ أَوَّلَهَا، فَلْيَرْتَقِبُوا عِنْدَ ذَلِكَ رِيحًا حَمْرَاءَ، وَزَلْزَلَةً وَخَسْفًا وَمَسْخًا وَقَذْفًا وَآيَاتٍ تَتَابَعُ كَنِظَامٍ بَالٍ قُطِعَ سِلْكُهُ فَتَتَابَعَ»
(ஹதீது – நபீ மொழி)
பின்வரும் 15 விடயங்கள் உலகில் நடக்குமாயின் – மக்கள் அவற்றைச் செய்தார்களாயின் பின்வரும் ஐந்து பயங்கர நிகழ்வுகளையும், இன்னும் பல அத்தாட்சிகளையும், அவர்கள் எதிர்பார்க்க வேண்டும். அந்த அத்தாட்சிகள் பல மணிகள் கோர்க்கப்பட்ட ஒரு நூலை அறுத்து விட்டால் அதிலுள்ள மணிகள் யாவும் ஒன்றன் பின் ஒன்றாக சரிந்து – தொடர்ந்து விழுவது போல் அவை தொடர்ந்து விழும். வரும்.
ஒன்று: செல்வந்தர்கள் – “சகாத்” நிதி வழங்கத் தகுதியுள்ளோர் – அதற்குரியவர்களுக்கு அதை வழங்காதிருத்தல், பொது நிதி சிலரின் சொந்த நிதி போல் கையாளப்படுதல். இவற்றில் நாட்டுக்கென்றும், நாட்டுமக்களுக்கென்றும் வெளிநாடுகளிலுள்ள தனி நபர்களால், அல்லது அமைப்புக்களால் நமது நாட்டவர்களில் தனி நபர்களிடம் அல்லது அமைப்புக்களிடம் ஒப்படைக்கும் நிதி அவர்களின் சொந்த நிதியாக கையாளப்படுதலும் அடங்கும்.
இது ஓர் அடையாளம். அல்லது ஒரு காரணம். இது இன்று உலகில் வாழும் மக்களிடம் காணப்படுவது மறுக்க முடியாத, கசப்பான ஓர் உண்மையாகும். “சகாத்” நிதியை பதுக்கி வைத்திருப்பவர்களை விட பொது நிதிகளை தமது சொந்த நிதி போல் கையாள்பவர்களே அதிகம் உள்ளனர்.
இரண்டு – அமானிதம் – நம்பிக்கைக்காக ஒருவரிடம் கொடுக்கப்பட்ட பணம், அல்லது பொருள் அவரின் சொந்தப் பணம் போல் அல்லது சொந்தப் பொருள் போல் கையாளப்படுதல். இதுவும் ஒரு காரணம். இது இன்று சிலரின் நடைமுறையில் இருந்து வருகிறது. இதை எழுதும் போது நகைக் கடைக்காரர் சிலரின் தோற்றமும், புடைவைக் கடைக்காரர் சிலரின் தோற்றமும் என் கண்முன் தோன்றி மறைந்தன.
மூன்று – “ஸகாத்” எட்டுக் கூட்டத்தினருக்கு பங்கிட்டுக் கொடுக்க வேண்டிய ஒரு செல்வந்தனின் பணம் அவர்களுக்கு கொடுக்கப் படாமல் அவனிடம் தேங்கி அவன் அவர்களுக்கு கடன் காரனாதல். இவ்வாறு கடன்காரர்களான பல கோடீஸ்வரர்கள் கௌரவப் பிரமுககர்களாக நாட்டில் நடமாடுகிறார்கள். இவர்கள் கடனாளிகளான கோடீஸ்வரர்களாவர்.
நான்கு – தீன் – மார்க்கத்தைக் கருவாகக் கொண்டு – இலட்சியமாகக் கொண்டு மார்க்கக் கல்வி கற்காமல் வேறு காரணங்களுக்காக அது கற்றுக் கொள்ளப் படுதல். பகல் வேஷம் போட்டு அப்பாவிகளை ஏமாற்றுதல், வழிகேடர்கள் ஸுன்னத் ஜமாஅத் கொள்கைவாதிகளை மடக்குதல் முதலானவற்றைக் குறிப்பிடலாம்.
ஐந்து – கணவன் தனது மனைவிக்கு வழிப்படுதல். அதாவது கணவன் மார்க்கத்திற்கு முரணான விடயங்கள் உள்ளிட்ட எல்லா விடயங்களிலும் தனது மனைவிக்கு வழிப்பட்டு நடத்தல். அதாவது குடும்பத்தில் பெண்ணாட்சி நடத்தல். கணவன் மழையில் நனைந்த பூனை போல் வாய்மூடிக் கிடத்தல்.
ஆறு – ஒருவன் தனது தாயை வேதனை செய்தல். அடித்தல், ஏசுதல், கவனிக்காமலிருத்தல், மனைவிக்குப் பயந்து தாயை வெறுத்தல் போன்று.
ஏழு – ஒருவன் தனது நண்பனை நெருக்கமாக்கிக் கொள்ளுதல். ஒருவன் தனது நண்பனுக்கு பெற்றோர், மற்றோரை விட முக்கியத்துவம் கொடுத்தல் போன்றும், ஒருவன் தனது மனைவியுடன் உறங்காமல் நண்பனுடன் உறங்குவது போன்றுமாகும்.
எட்டு – ஒருவன் தனது தந்தையை தூரப்படுத்தல். ஒருவன் தனது தந்தை தற்கால நாகரீகத்திற்கேற்றவாறு வாழாமல் தாடி, தலைப்பாகை, நிண்ட ஜுப்பா அணிபவராயிருந்தால் அவரை அவரின் மகன் தற்கால நாகரீக நண்பர்களிடம் அறிமுகம் செய்ய வெட்கப் படுவது போன்று.
ஒன்பது – பள்ளிவாயல்களில் சத்தங்கள் வெளியாதல். அதாவது பள்ளிவாயல்களுக்குரிய ஒழுக்கம் பேணப் படாமல் சத்தமிட்டுப் பேசுதல். நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து தர்க்கித்துக் கொள்ளுதல். விஷேட நாட்களில் மார்க்கட் போல் சத்தமிடுதல்.
பத்து – ஒரு கூட்டத்தின் தலைவனாக அவர்களில் கெட்டவன் இருத்தல். விபச்சாரியாக, வட்டிக்காரனாக, ஊழல் பேர்வழியாக, சைட் அடிப்பவராக இருத்தல் போன்று.
பதினொன்று – ஒரு கூட்டத்தின்; தலைவனாக அவர்களில் கீழ்மட்டத்திலுள்ள ஒருவன் இருத்தல். இதில் விபரமுண்டு. இங்கு எழுத வாய்ப்பில்லை. உதாரணமாக கீழ்த் தரமான பண்பாடுள்ளவனாக இருத்தல்.
பன்னிரண்டு – ஒருவன் தீமையைப் பயந்து அவன் கண்ணியம் செய்யப்படுதல். சண்டியன், மினிமறுவா, அடியாள், கூலிப்படை ஆகியோர் கண்ணியம் செய்யப்படுதல் போன்று, அதாவது ஊரின் தலைவராக, பள்ளிவாயலின் தலைவராக, ஒரு பௌண்டேஷனின் பொருளாளராக நியமிக்கப் படுதல் போன்று.
பதின் மூன்று – ஆபாசப் பாடகிகளும், விலக்கப்பட்ட இசைக்கருவிகளும் வெளியாதல். பாவிக்கப் படுதல். இதில் விபரமுண்டு. இங்கு விபரமாகக் கூற இடமில்லை.
பதினான்கு – மதுபானம் – போதைப் பொருட்கள் பாவித்தல். இதில் விபரமுண்டு. திரவமான போதைப் பொருள் ஒரு சொட்டாயினும் அது விலக்கப்பட்டதே! விபரம் தேவையானோர் என்னுடன், அல்லது சட்டக்கலை மேதைகளுடன் தொடர்பு கொள்ளுமாறுகேட்டுக் கொள்கிறேன்.
பதினைந்து – பின்னோர்கள் முன்னோர்களை சபித்தல். வஹ்ஹாபிகள், மற்றும் வழி தவறிய கொள்கையுடையோர் தமது கொள்கையை ஏற்றுக் கொள்ளாத முன்னோர்களான அவ்லியாஉகளையும், இமாம்களையும் ஏசுதல் போன்று.
உலகில் மேற்கண்ட பதினைந்து விடயங்கள் நடைபெற்றால் பின்வரும் ஐந்து அபாயங்களை எதிர் கொள்ள நேரிடும்.
ஒன்று – சிவப்புக் காற்று அதாவது நெருப்புக் காற்று.
இரண்டு – நிலநடுக்கம்.
மூன்று – பூகம்பம்.
நான்கு – உருமாற்றம்.
ஐந்து – கல் மழை.
மற்றும் தொடராக வரும் இன்னும் பல நிகழ்வுகள்.
அறிவிப்பு – அபூ ஹுறைறா
ஆதாரம் – துர்முதீ
ஹதீது எண் – 2211